குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 19) இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது என்பதை விளக்கும் சிறுகதையும், அதற்கான குறள் விளக்கத்தையும் கொண்டிருக்கிறது.
உள்ளடக்கம்
இரத்தல் என்பதே இழிநிலை
உலகில் தனம் (செல்வம்), தானியம் முதலியவைகள் இல்லாதவர்கள், தன் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்க பிறரிடம் யாசிக்க (பிச்சை )வேண்டியுள்ளது.
பொருளைப் பெற்றவர்கள், அடுத்தவர்களின் ஏழ்மையைக் கண்டு இரக்கம் கொள்வது என்பது அபூர்வமானச் செயலாகவும் இருக்கிறது.
எவன் பொருளைப் பெற விரும்புகின்றானோ அவன் தாழ்ந்தவனாகிறான். எவன் பொருளைக் கொடுப்பவனோ அவன் உயர்ந்தவனாகிறான். எனவே இரத்தல் என்பது எப்போதும் இழிநிலைக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இல்லாதவன் யாரிடம் யாசிக்கக் கூடாது என்பதை திருக்குறள் வலியுறுத்துகிறது.
ஒரு தந்தை மகன் கதை
ஒரு ஊரில் பெரிய வணிகர் இருந்தார்.அவர் நியாயமான முறையில் வணிகம் செய்து வந்தார். அத்துடன் அவருக்கு வணிகத்தில் கிடைக்கும் பெரும் பங்கு செல்வத்தை தானத்திற்கும், தர்மத்திற்கும் செலவிட்டு வந்தார்.
அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனும் தன்னைப் போல் பெரிய வணிகனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்த வணிகர்.
அவர் நினைத்ததுபோலவே பெரிய வணிகனாக அவனுடைய மகன் உருவெடுத்தான். அவனுக்கு திருமணமும் நடந்தேறியது.
ஒரு நாள் அவனுடைய மனைவி, கணவரை பார்த்து உங்கள் தந்தை வணிகத்தில் கிடைக்கும் பெரும் பகுதியை தானத்துக்கும், தர்மத்துக்கும் செலவிடுகிறார்.
இப்படியே போனால் நாம் ஒரு காலத்தில் பிச்சை எடுக்க வேண்டியதுதான். அதனால் அவரை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுங்கள் என்று கூறுகிறாள்.
மனைவி பேச்சை கேட்ட அவன், தந்தையை தான, தர்மம் செய்வதைத் தடுத்து பார்த்தான். முடியாமல் போகவே சொத்துக்களை எல்லாம் பிடிங்கிக் கொண்டு தந்தையை விரட்டிவிட்டான்.
யாரிடம் யாசிக்கக் கூடாது?
பெரும் வணிகராக இருந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவரிடம் பொருளுதவி பெற்றவர்கள் அன்பு காட்டி ஆதரிக்க முன்வந்தார்கள். அதை அந்த வணிகர் மறுத்துவிட்டு, தன்னால் முடிந்த உழைப்பை செலுத்தி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.
தந்தையை விரட்டிவிட்ட மகன் வீட்டைத் தேடி, யார் வந்து கேட்டாலும், இப்போது என்னிடம் உங்களுக்கு கொடுப்பதற்கான வசதி என்னிடம் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவான்.
ஒரு நாள் வயது முதிர்ந்த ஒருவர் பசி தாளாது அந்த வணிகனின் இல்லத்தின் வாயிலில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அந்த வணிகனின் தந்தை, அவரை பார்த்து ஏன் இந்த வீட்டு வாசலில் நிற்கிறீர்கள் என்று கேட்டார்.
நான் ஆதரவற்றவன். பசி தாளாது இந்த வணிகரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் என்றார் அந்த முதியவர்.
இதைக் கேட்ட வணிகனின் தந்தை, என்னுடன் வாருங்கள். என்னிடம் இருக்கும் உணவை தருகிறேன். நீங்கள் இந்த வீட்டு வாயிலில் நிற்க வேண்டாம்.
இந்த இல்லம் முழுவதும் செல்வம் நிறைந்திருந்தாலும், அங்கு வசிப்பவர்கள் மனம் வெறுமையாய் இருக்கிறது. அதனால் அவர்களும் நம்மைப் போல் யாசிப்பவர்கள்தான் என்று சொல்லி அந்த முதியவரை தன் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
இதைத்தான் திருவள்ளுவர்
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
(குறள் – 1067)
என்று தன் பாடலில் கூறுகிறார்.
தன்னுடைய கையில் உள்ளதை மறைத்து இல்லை என்பவர்களிடம் போய் யாசிக்க வேண்டாம் என்று யாசிப்போரிடமெல்லாம் கையேந்தி யாசிக்கிறேன் என்கிறார் திருவள்ளுவர்.