கலைஞர் நூற்றாண்டு பூங்கா. இந்த பெயர் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் அதிகம் தேடப்படும் பெயராக மாறியிருக்கிறது. அப்படி என்ன இந்த பூங்காவில் இருக்கிறது? அதைத் தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
உள்ளடக்கம்
தோட்டக்கலைத் துறையின் காட்சியகம், 500 மீட்டர் தூரத்துக்கான சிப்லைன், நீர்வீழ்ச்சியின் நடனக் காட்சி, செயற்கை அருவி, பறவைகள் இல்லம், பாரம்பரிய காய்கறி தோட்டம்.
நாம் இதுவரை பார்த்திராத அழகிய வண்ண மலர்கள், செடிகள் அடங்கிய 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைந்த கண்ணாடி தோட்டம், சிறார்களுக்கான விளையாட்டு சாதனங்கள்.
12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மட்டும் ஏறி பார்த்து பரவசமடையும் மர வீடு என பல அம்சங்கள் இந்த பூங்காவில் இடம்பெற்றிருப்பதுதான் இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா மீது பலரும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு காரணம்.
வரவேற்கும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா கல்வெட்டுகள்
பூங்காவுக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்பது மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவம் பொதித்த கல்வெட்டுகள்தான்.
அதைத் தொடர்ந்து நாம் பூங்காவுக்குள் நுழையும்போதே சில்லென்ற உணர்வு நமக்கு வந்துவிடுகிறது.
சிறிதுதூரம் அழகிய நடைபாதையில் நடந்து சென்றதும் நம் கண்ணுக்கு தெரிவது பனிப்பாதை என்ற பெயர் பலகை. 120 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிற இந்த பாதையில் பனித்துகள்களாய் நீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.
இதற்குள் நாமும் சென்று வர வேண்டும் என்ற உணர்வு சிறியவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் வரும்தான்.
ஆர்க்கிட் குடில்
அதையடுத்து ஆர்க்கிட் குடில் நம்மை வரவேற்கிறது. இதில் ஏராளமான ஆர்க்கிடேசி வகையைச் சேர்ந்த ஒரு மலர் தாவரங்கள் நம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கண்ணாடி பூங்கா
அதைத் தொடர்ந்து கண்ணாடி பூங்கா. இது 10 ஆயிரம் சதுரடியில் இரு தளங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.
இங்கு இருக்கும் தாவரங்கள் எல்லோமே கண்ணுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி தேடித்தேடி பிடித்து இந்த தோட்டத்தை அலங்கரித்திருக்கிறார்கள். இந்த மாளிகை குளிர்சாதன வசதியுடையதாக இருக்கிறது.
அடுத்து வருவது பறவைகள் இல்லம். இதற்குள் செல்வதற்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். பறவைகள் இல்லத்தில் குருவி இனங்கள், கிளிகள், பஞ்சவர்ணக் கிளி உள்ளிட்டவை இயற்கையான சூழலில் வளர்கின்றன.
பார்வையாளர்கள் இவற்றுக்கு வழங்குவதற்கான தானியங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை நாம் பறவைகளுக்கு இட்டு மகிழலாம்.
ஒருசில பறவைகள் உரிமையோடு பார்வையாளர்களின் கைகளில் அமர்ந்து தானியங்களை கொத்தித் தின்பதும் உண்டு.
பூங்காவில் 23 வளைவுகளைக் கொண்ட அலங்கார பசுமை குகை இருக்கிறது. இவற்றில் நின்று படம் எடுத்துக் கொள்வோர் பெரும்பாலும் இளைஞர்கள்தான்.
இரு பெரிய மரங்களில் அழகிய மர வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மட்டுமே ஏறி பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா சென்னையில் எங்கிருக்கிறது?
இந்த பூங்கா சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிறிது தொலைவில் கத்தீட்ரல் சாலையில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
சுமார் 46 கோடி செலவில் பூங்கா பார்வையாளர்களுக்கான பல்வேறு வசதிகளுடன் கூடிய பூங்காவாக அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த எதிரே உள்ள செம்மொழி பூங்காவில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைந்திருக்கும் தற்போதைய இடம் ஏற்கெனவே அக்ரி ஹார்டிகல்சர் சொசைட்டி என்ற தனியாரிடம் இருந்து வந்தது.
அரசுக்கு சொந்தமான சுமார் 1000 கோடி மதிப்பிலான இந்த இடத்தை தமிழக அரசு மீட்டு தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையிடம் ஒப்படைத்திருக்கிறது.
இணையதளத்தில் முன்பதிவு
இணையதளத்தின் வாயிலாக நுழைவு கட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச் சீட்டினை பெறலாம்.
இணையதள முகவரி https://tnhorticulture.in க்யூஆர் கோடு வழியாகவும் நுழைவுச் சீட்டை பெற வசதி செய்யப்பட்டிருக்கிறது
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் செய்வதற்கு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு – ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/-.
பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- வசூலிக்கப்படுகிறது. சிறியவர்களுக்கு – ரூ.75/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு – ரூ.50/- கட்டணம் செலுத்த வேண்டும்.
கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- செலுத்த வேண்டும்.
குழந்தைகள் விளையாடும் சாதனங்களில் ஒரு விளையாட்டுக்கு ரூ.50/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100/-, ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுக் கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லத்தக்கது.
பூங்காவில் சிற்றுண்டி சாலையும் இருக்கிறது. பார்வையாளர்களுக்கான ஒப்பனை அறையும் உள்ளது.
குடந்தை ஐராவதீஸ்வரர் கோயில் கலை பொக்கிஷம்
தஞ்சை பெரிய கோயில் – மறைக்கப்பட்ட உண்மைகள்
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நேரம் என்ன?
பூங்கா நாள்தோறும் காலை 10 முதல் 8 மணி வரை பார்வை நேரமாக இருக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைந்திருக்கும் இடம்
இப்பூங்கா சென்னை அண்ணா சாலையில் இருந்து சிறிது தொலைவில் கத்தீட்ரல் சாலையில் அமைந்திருக்கிறது. எதிரில் செம்மொழி பூங்கா அமைந்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?
பூங்காவுக்கான நுழைவு கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை ஆன்லைனில் சென்று செலுத்த முடியும். இதனுடைய இணையதள முகவரி KCP-TN Horticulture – https://tnhorticulture.in
பூங்காவை எந்த நேரத்தில் பார்வையிடலாம்?
பூங்காவில் இசை நீரூற்று காட்சியை காண விரும்புபவர்கள் மாலை 4 மணியளவில் செல்வது நல்லது. பூங்காவை சுற்றி பார்த்து விட்டு இசை நீரூற்று காட்சியை காண்பதற்கான நேரம் சரியாக இருக்கும்.
பூங்காவை இரவு 8 மணிக்கு பார்வையிட செல்ல முடியுமா?
பூங்காவுக்குள் 8 மணிக்கு மேல் அனுமதிப்பதில்லை. ஆனால் இரவு 8 மணிக்கு செல்பவர்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் பார்க்க நேரம் கிடைக்காது. அதனால் மாலை 6 மணிக்குள் செல்வதே நல்லது.