அர்த்தமுள்ள வாழ்க்கை இதுதான்!

82 / 100

நம்மில் பலரும் வாழ்க்கை என்பது என்ன என்பதைத் தெரியாமலேயே, காழ்ப்புணர்வு, போட்டி, பொறாமை, வஞ்சம் தீர்த்தல் என வாழ்நாளை வீணடிப்பதோடு, நம் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தவறிவிடுகிறோம் என்பதைத் தான் இந்த அர்த்தமுள்ள வாழ்க்கை இதுதான் கதை சொல்கிறது.

யோகேஷும் அவனது குடும்பமும்

ஒரு ஊரில் கார் டிரைவராக இருந்து வந்தவன் யோகேஷ். அவனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் அவனுடைய நடவடிக்கைகள் பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றுவிட்டாள்.

அதனால் தன்னுடைய 10 வயது மகன் சித்தார்த்துடன், யோகேஷ் வசிக்கத் தொடங்கினான். அவனுடைய வயதான தந்தை தாண்டவன், அவனுடைய பராமரிப்பில் இருந்து வந்தார். தாயார் அவனுடைய சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.

தாண்டவனும், அவரது மனைவியும் ஏழ்மையில் இருந்தபோது யோகேஷ் பிறந்தான். அதனால் படிப்பில் ஆர்வம் செலுத்திய யோகேஷை தாண்டவனால் உயர்கல்வி படிக்க வைக்க முடியாமல் போனது.

போதைக்குறைக்கு அவனுடைய தாயாருக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த போதிய வருவாய் இல்லாமல் போனதால் அவளும் இறந்துபோனாள்.

இதனால் தந்தை தாண்டவன் மீது யோகேஷ் மிகுந்த கோபம் கொண்டிருந்தான். தந்தையிடம் அவன் எப்போதும் பேசுவதில்லை. மற்றவர்கள் நம்மை குறைக் கூடாது என்பதற்காக வயதான தந்தையை தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தான்.

கார் டிரைவராக தன்னுடைய வாழ்க்கையின் அடித்தளத்தை அமைக்க முயற்சித்த அவனை ஒரு கல்லூரி படிப்பை முடித்த பெண் விரும்பி திருமணம் செய்துகொண்டாள். அவர்களின் ஒரே மகன்தான் சித்தார்த்.

குடிபழக்கத்தில் சிக்கிய யோகேஷ்

நண்பர்கள் சேர்க்கை காரணமாக அவனுக்கு குடிபழக்கம் தொற்றிக்கொண்டது. பலமுறை கண்டித்து பார்த்த மனைவி ஒரு கட்டத்தில் அவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள்.

மனைவி பிரிந்து சென்ற பிறகு தன்னுடைய ஒரே மகனை நல்லவிதமாக படிக்க வைக்க யோகேஷ் விரும்பினான். அதனால் அவனுடைய படிப்பில் யோகேஷ் கவனம் செலுத்தினான்.

மனைவி அவனுடன் இருக்கும் வரை அவனுடைய தந்தை தாண்டவனை நல்ல முறையில் கவனித்து வந்தாள். ஆனால் அவள் பிரிவுக்கு பிறகு தந்தையை அவன் கண்டுகொள்ளவில்லை.

தந்தையிடம் கோபம்

ஒரு நாள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இரவில் இருமிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய உறக்கம் கெட்டுப்போனதால், ஆத்திரமடைந்த யோகேஷ், இனி வீட்டுக்குள் இருக்க வேண்டாம். திண்ணையில்தான் இனி உறங்க வேண்டும் என்று கடுமையாக சொல்லிவிட்டான்.

இதனால் அவனுடைய தந்தை தாண்டவனும் அவனிடம் எதுவும் பேசாமல் திண்ணைவாசியாக மாறிப் போனார். அவருக்கு 2 வேளை உணவு மட்டுமே யோகேஷ் அளித்து வந்தான். அதற்காக ஒரு பீங்கான் தட்டை அந்த திண்ணையில் வைத்திருந்தான்.

காலையில் அவன் தன்னுடைய மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தந்தைக்கு அந்த தட்டில் உணவை வைத்து விட்டு வேலைக்கு புறப்பட்டுச் செல்வான்.

மாலையில் தன்னுடைய பணிக்கிடையே மகனை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு மீண்டும் கார் சவாரிக்கு செல்வதையும் வழக்கத்தில் வைத்திருந்தான்.

யோகேஷ், தன்னுடைய மகனை தன்னுடைய தந்தையிடம் பேசக் கூடாது என்றும் கட்டளையிட்டிருந்தான்.

ஆனால் யோகேஷ் வீட்டில் இல்லாத மாலை நேரத்தில் தன்னுடைய தாத்தா தாண்டவனுடன், பேசி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சித்தார்த்.

உடைந்துபோன பீங்கான் தட்டு

தாத்தாவிடம் ஒரு நாள் பேரன் பேசிக்கொண்டிருந்தபோது, “உன்னுடன் ஏன் அப்பா பேசுவதில்லை. திண்ணையில் உட்கார வைத்திருக்கிறது. தனித் தட்டில் சாப்பாடு போடுகிறது” என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினான்.

நான் மிகுந்த வறுமை நிலையில் இருந்ததால், உன் தந்தை விரும்பிய படிப்பை என்னால் படிக்க வைக்க முடியவில்லை. உன் பாட்டியையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. காரணம் எனக்கு படிப்பறிவு இல்லை.

உன் தந்தை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, தன்னுடைய சொந்த உழைப்பில் இப்போது முன்னேறி வருகிறான்.

தான் படிக்க முடியாத படிப்பை தன் படிக்க வேண்டும் என்ற விருப்பம்தான் உன் மீது அவன் காட்டும் அதிக அக்கறை. அதை நன்றாக பயன்படுத்தி உயர்ந்த படிப்பு படித்து அவனுடைய கனவை நனவாக்கு என்று சொன்னார்.

சரி… தாத்தா… அப்பா வரும் நேரமாகிவிட்டது என்று அவசரமாக எழுந்த சிறுவன், தாத்தா சாப்பிடுவதற்காக வைத்திருந்த பீங்கான் தட்டின் மீது கால் பட்டு திண்ணையில் இருந்து கீழே விழுந்து உடைந்துவிட்டது.

இதைக் கண்ட சிறுவன் தாத்தா பதறிப்போய்… தாத்தா… தட்டு உடைந்து போய்விட்டதே… அப்பா வந்து கேட்டால் என்ன சொல்வது? என்று கேட்டான்.

கவலைப்படாதே. நீ உள்ளே போ.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி சிதறிப்போன பீங்கான் துண்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

தூக்கமின்றி தவித்த சிறுவன்

அப்போது வீட்டுக்கு வந்த யோகேஷ், அவரை தாண்டி கோபமாக உள்ளே சென்றான். அன்று இரவு அவருக்கு அவன் சாப்பாடு அளிக்கவில்லை.

இதைக் கண்ட சிறுவன், அப்பாவிடம், ஏன் இன்றைக்கு தாத்தாவுக்கு சாப்பாடு வைக்கவில்லை? அவர் பசியாக இருப்பாரே? என்று கேட்டான்.

தன்னுடைய சாப்பாடு தட்டைக் கூட பொறுப்பாக வைத்திருக்க தெரியாத அவருக்கு இதுதான் தண்டனை.

இன்றைய இரவுக்கு அவருக்கு சாப்பாடு கிடையாது. நாளைக்கு அவருக்கு வேறு ஒரு தட்டு வாங்கி வந்த பிறகுதான் சாப்பாடு என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டான்.

தான் தட்டை தட்டிவிட்டதால் உடைந்து போனதை, அப்பாவிடம் சொல்ல முடியாத நிலை ஒருபுறம், தாத்தாவோ என்னுடைய தவறால் இரவு சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பசியால் துடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதே என்ற வேதனை ஒருபுறம் என சிறுவன் சித்தார்த்துக்கு தூக்கம் வராமல் நீண்டநேரம் படுக்கையில் புரண்டு படுத்தப்படியே இருந்தான்.

யோகேஷ், தன்னுடைய மகன் உறங்காமல் தவிப்பதைப் பார்த்து என்னடா… ஆச்சு பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்னையா? என்று கேட்டான்.

அதெல்லாம் இல்லை அப்பா.. என்று கண் மூடியபடியே பதில் அளித்த அவன் சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.

காலையில் எழுந்த அவன், தன்னுடைய தந்தைக்கு, அவர் செய்யும் தவறை உணர்த்த வேண்டும் என்ற முடிவை எடுத்தான்.

தந்தைக்கு தவறை புரிய வைத்த சிறுவன்

மறுநாள் காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட அவன், தந்தை யோகேஷ் அவ்வப்போது தரும் சில்லரை காசுகளை சேர்த்து வைக்கும் மண் உண்டியலை உடைத்து அதில் இருந்த காசுகளை எடுத்துக் கொண்டு சென்றான்.

தந்தையிடம் மாலையில் நானே என் நண்பனோடு வீடு திரும்பிவிடுவேன். அதனால் இன்று மாலை என்னை அழைக்க வர வேண்டாம் என்றும் சொல்லிச் சென்றான் சித்தார்த்.

மாலையில் வீடு திரும்பிய சித்தார்த், வரும் வழியில் பாத்திரக் கடை ஒன்றில் இரண்டு அலுமினியத் தட்டுக்களை வாங்கி எடுத்து வந்தான். அதை தன் தந்தை கண்ணில் படும்படி மேஜையில் வைத்தான்.

இரவு வழக்கம்போல் வீடு திரும்பிய யோகேஷ், மேஜையில் இரண்டு புதிய அலுமினியத் தட்டுக்களைப் பார்த்துவிட்டு, இது யார் கொடுத்தது? என்று கேட்டான்.

சித்தார்த் இப்போது பேசத் தொடங்கினான். தாத்தாவின் பீங்கான் தட்டு கீழே விழுந்து உடைந்து போய்விட்டது அல்லவா? அதனால்தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த காசுகளை கொடுத்து இந்த தட்டுகளை வாங்கி வந்தேன் அப்பா என்றான்.

சரி… ஒரு அலுமினியத் தட்டு போதாதா? எதற்கு இரண்டு தட்டுக்கள் என்றான் யோகேஷ்.

அப்பா… இன்னொரு தட்டு உனக்காக வாங்கியது. அதை நீ பத்திரமாக எடுத்து வைத்துக்கொள் என்றான் சிறுவன் எந்த சலனமும் இல்லாமல்.

என்னடா பேசறே… எனக்கும், உனக்கும்தான் எவர்சில்வர் தட்டுக்கள் இருக்கிறதே… பிறகு எதற்கு இந்த தட்டு என்றான் யோகேஷ்.

அப்பா… இப்போது நீ சம்பாதிக்கிறாய். அதனால் எவர்சில்வர் தட்டில் சாப்பிடுகிறாய்.

நான் உன்னைப் போல் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கியதும், வயதான உன்னை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது நீ தாத்தாவை கவனித்துக்கொள்வதுபோல் நானும் திண்ணையில் இடம் தந்து, சாப்பாடு போட்டு கவனித்துக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த தட்டு என்றான் சிறுவன்.

மகனின் பதிலைக் கேட்டு உறைந்து போனான் யோகேஷ். மகனை கட்டித் தழுவி அதுநாள் தான் அடக்கி வைத்திருந்த அழுகையை கட்டவிழ்த்து விட்டான் யோகேஷ். இதுநாள் வரை ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்ததை உணர்ந்தான்.

மன்னிப்பு கேட்ட யோகேஷ்

சித்தார்த் நீ சிறியவனாக இருந்தாலும், என் தந்தையை எப்படி நடத்த வேண்டும் என்று தெரியாமல் நான் செய்த தவறை இந்த அலுமினியத் தட்டின் மூலம் புரிய வைத்துவிட்டாய்.

முதல் காலையில் சாப்பிட்ட தந்தை மறுநாள் இரவு வரை அவருக்கு சாப்பாடு போடாமல் இருந்தபோதும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட யோகேஷுக்கு பெரிய தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்தல் ஏற்பட்டது.

தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் கால்களைப் பிடித்து என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்று அழுத அவனை, விழித்துக்கொண்ட தந்தை வாரி அணைத்துக் கொண்டபோதுதான் அந்த பாசத்தின் ஆழம் அவனுக்கு புரிந்தது.

தொடங்கியது அர்த்தமுள்ள வாழ்க்கை

தந்தைக்கு வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த அறையை சுத்தம் செய்து அவருக்கு ஒதுக்கியதோடு, அவருடைய உடல் நலனிலும், உணவு விஷயத்திலும் அக்கறைக் காட்டத் தொடங்கினான் யோகேஷ்.

அவனுடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. தன்னுடைய குடிபழக்கத்தை கைவிட்டான். தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தான்.

இப்போதெல்லாம், மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும்போது, சித்தார்த், தன்னுடைய தாத்தாவுடனும், அம்மாவுடனும் பேசியும், சிரித்தும், விளையாடியும் மகிழ்ந்து வீட்டையை கலகலப்பாக்குவதே பார்த்து மனதுக்குள் சந்தோஷப்படுவது யோகேஷுக்கு வழக்கமானதாகி விட்டது.

ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கையை இதுநாள் வரை வாழ்ந்திருக்கிறோமே… அதை நம் மகன் அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றியிருக்கிறானே என்று மனதுக்குள் நினைத்து சித்தார்த்தை இறுகக் கட்டிப்பிடித்து உச்சந்தலையில் முத்தமிடுவதும் யோகேஷுக்கு வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது.

மன்னிக்கும் குணமே சிறந்தது!

சோற்றுக்கு இத்தனை பேரா?

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply