தமிழ் மொழி: தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக தமிழ்நாடு அரசு?

81 / 100

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வியை ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்புவதை மக்கள் உற்று பார்க்கிறார்கள்.

தமிழக அரசின் ஒருசில மெத்தன நடவடிக்கைகள் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இது வேதனைக்குரிய விஷயம்.

கட்டாயமாக்கப்பட்ட பஞ்சாப் மொழிப் பாடம்

ஆந்திர மாநிலத்தைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பல்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பஞ்சாப் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் அரச-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், அதாவது சிபிஎஸ்இ பாடத் திட்டம், இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐசிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் வகையில் 2008-ஆம் ஆண்டில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

சுற்றறிக்கை சொல்வது என்ன?

இந்த நிலையில் அந்த சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
அதில் 2008-ஆம் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பஞ்சாபி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது. இதனை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலங்கானா நடவடிக்கை

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோல் தெலுங்கு மொழிப் பாடத்தை தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மொழி பெருமை மட்டும் பேசும் தமிழ்நாடு

இரு மொழிக் கொள்கைக்காக மத்திய அரசோடு மோதும் திமுக அரசு, தமிழை வளர்ப்போம் என்று மார்தட்டி வரும் திமுக அரசு இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

தமிழ்

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

அவர், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தாய்மொழி பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இப்போதைய நிலை

தமிழ்நாட்டில், 2006 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் 2015-16 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. எனினும், சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும், இதுவரை அந்தச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

உண்மையில், அனைத்துப் பள்ளிகளிலும் 2015-16-ஆம் ஆண்டிலேயே இதை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.

இடையில் தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தை நாடியதால் இச்சட்டம் அமலுக்கு வராமல் இருந்தது.

உச்சநீதிமன்றம் கருத்து

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உள்ளூர் மொழியை கற்றுக் கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

அதே நேரத்தில் உள்ளூர் மொழியை கற்பிக்க தனியார் பள்ளிகள் மறுப்பது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்திருக்கிறது.

இருப்பினும், பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதமே இருப்பதால், அதற்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க இயலாது என்பதால், தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாகவும், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை மாதம் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தமிழக அரசின் மெத்தனம்

அதைத் தொடர்ந்து 2023 ஜூலையில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருக்குமானால், 2023-24-ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கட்டாயப் பாடமாகியிருக்கும்.

ஆனால் இதுவரை அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கக் கூடிய விஷயமாகவே இருக்கிறது.

தனியார் பள்ளிகளுக்கு சாதகம்

அத்துடன் 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில் சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழை கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை. அதற்கு பதில் தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதும் என்பதுதான்.

இதன் மூலம் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்படுவது உறுதியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதாவது திமுக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு வரும் திமுக அரசு துணை போகுமானால், அதன் எதிர்காலத்துக்கே பாதகமாகக் கூட அமையலாம். இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் என்ன மாற்றம்?

இளநீர் பருவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

81 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply