இதயம் ஒரு இயற்கையான பம்பிங் ஸ்டேஷன். இரண்டு வெவ்வேறு பணிகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்வதால்தான் மனிதன் உயிர் வாழ முடிகிறது.
இரத்தக் குழாய்களில் ஒரு சுற்று ஓட்டத்தை முடித்து கார்பன்-டை-ஆக்ஸைடை சுமந்து அசுத்த ரத்தமாக வருவதை சுத்தம் செய்ய நுரையீரலுக்கு அனுப்புவது ஒரு பணி.
நுரையீரலில் கார்பன் டை ஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தைப் பெற்று அதை உடல் முழுவதும் செலுத்துவது 2-ஆவது பணி.
இந்த இருபணிகளை மனிதன் உயிரோடு இருக்கும் வரை குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட அழுத்தத்தில் வேலை செய்யும்போது இதயத்துக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
இப்பணிகளை கூடுதல் வேகத்தோடு, கூடுதல் அழுத்தத்தோடு செய்யும்போது இதயத்துக்கு ஓய்வு இல்லாமல் போவதால் பழுதடைந்து செயலிழந்து போகிறது
அதனுடைய பணிகளில் அசுத்த ரத்தத்தை ஒரு பக்கமும், நல்ல ரத்தத்தை ஒருபக்கமும் உள்வாங்கும்போது இதயம் விரிவடைகிறது.
நல்ல ரத்தத்தை உறுப்புகளுக்கு அனுப்புவதையும், அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்புவதையும் செய்யும்போது இதயம் சுருங்குகிறது.
இப்படி இதயம் சுருங்கி விரிவதைத்தான் இதயத் துடிப்பு என்கிறார்கள். இதயம் சுருங்குவது சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது
இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தம் டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.
இந்த இரு ரத்த அழுத்த நிலைகளை கணக்கிட்டே ரத்த அழுத்தம் அதிகம் இருக்கிறது அல்லது குறைவாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கணக்கிடுகிறார்கள்.
ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களுக்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 120 ஆகவும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 80-ஆகவும் இருக்கும்.
மருத்துவர்கள் இந்த இரு ரத்த அழுத்தத்தை கணக்கிட்டுதான் 120/80 mm/hg என குறிப்பிடுகிறார்கள்
100 முதல் 140 வரை/70 முதல் 90 வரையிலான ரத்த அழுத்தம் சரியான நிலை (Normal) 141 முதல் 159 வரை/91 முதல் 99 வரை இளநிலை (Mild)
160 முதல் 179 வரை/100 முதல் 109 வரை மிதநிலை (Moderate) 180 முதல் 199 வரை/110 முதல் 129 வரை மிகுநிலை (Severe) 200க்கு மேல்/130க்கு மேல் கொடியநிலை (Malignant)
உலக சுகாதார நிறுவனம் ஒருவருக்கு 120/70mm முதல் 140/90 வரை உள்ள ரத்த அழுத்தத்தை சரியான நிலை (Normal) என வரையறை செய்திருக்கிறது.
சிஸ்டாலிக் அழுத்தம் 115-க்கு மேல் இருந்து, டயஸ்டாலிக் அழுத்தம் 50-க்கும் குறைவாக இருந்தால் அதை குறைந்த ரத்த அழுத்தம் என்கிறார்கள்.
40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக குடும்ப மருத்துவரை அணுகி உங்கள் ரத்த அழுத்தத்தை அறிந்துகொள்வது அவசியம்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்வதும் உண்டு.
நிறைய தண்ணீர் குடிப்பது, சிறு தானியங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து உண்பது போன்றவைகளால் குறைந்த ரத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.