சிறிய தவறு கற்றுத் தந்த பாடம் என்ற இந்த சிறுகதை பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், பள்ளிக் குழந்தைகளும் படிக்க வேண்டிய ஒன்று.
உள்ளடக்கம்
கீதாவிடம் காணப்பட்ட பழக்கம்
கீதா படிப்பில் ஆர்வமுடைய சிறுமி. அவளுடைய பெற்றோரும் அவளிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அவளுடைய தாயார் அதிக செல்லம் கொடுப்பதும் உண்டு.
இப்படிப்பட்ட அந்த சிறுமியிடம், ஒரு தவறான பழக்கம் தொற்றிக் கொண்டிருந்தது. அவள் பள்ளியில் பயிலும் சக தோழிகளின் புதிய பென்சில்கள், ரப்பர் போன்றவற்றை அவர்களுக்கு தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்து விடுவாள். இது தவறு என்பதை அவள் உணரவில்லை.
ஒரு நாள் அம்மாவுக்கு, அலுவலகத்தில் பரிசாகத் தந்திருந்த வெள்ளிப் பேனாவை பார்த்துவிட்டாள். அம்மா… இன்னைக்கு ஒரு நாள் அந்த பேனாவை எடுத்துச் சென்று வருகிறேனே என்று கேட்டாள்.
அது விலை உயர்ந்தது என்பதோடு, தன்னுடைய பணியை பாராட்டு தரப்பட்ட பரிசு மகளே… எடுத்துச் சென்றுவிட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் சரியா.. என்று அம்மா பீடிகை போட்டு அந்த பேனாவை கீதாவிடம் கொடுத்தாள்.
பள்ளியில் தோழிகளிடம் அந்த பேனாவை காட்டி, மிக விலை உயர்ந்த பேனா இது. என் அம்மாவுக்கு பரிசாக கிடைத்தது என்று பெருமையாக சொல்லி காண்பித்துவிட்டு புத்தகப் பையில் பத்திரப்படுத்தி வைத்தாள்.
அவள் வீட்டுக்கு வந்ததும் பேனாவை அம்மாவிடம் கொடுக்க மறந்துபோனாள். அம்மாவுக்கும் மறுநாள் காலை கீதா பள்ளிக்கு புறப்படும்போதுதான் தன்னுடைய மகளிடம் வெள்ளிப் பேனாவை கொடுத்தது ஞாபகம் வந்தது.
உடனை அவளிடம் நேற்று நான் கொடுத்த பேனாவை கொடு என்றாள் அம்மா. இதோம்மா… என்று புத்தகப் பையில் கையை விட்ட அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதிர்ச்சியில் கீதா
புத்தகப் பையில் உள்ள புத்தகங்கள், பேனா, பென்சில் எல்லாவற்றையும் கொட்டி தேடினாள் கீதா. ஏமாற்றமே மிஞ்சியது.
மகள் பள்ளிக்கு போவது கெட்டுப் போய்விடும் என்பதால், சரி… வீட்டில் வைத்திருக்காயா என்று பார்க்கிறேன். எந்த பொருளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும் பழக்கமே இல்லை. முதலில் நீ பள்ளிக்கு புறப்பட்டு போ என்று கோபமாக சொன்னாள் அம்மா.
எப்போதும் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் அவள், அம்மா திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டாள்.
அம்மா வீட்டில் கீதா பயன்படுத்திய மேஜை டிராயரை திறந்து அதில் பேனா இருக்கிறதா என்று தேடியபோது, விதவிதமான புதிய பென்சில்கள், ரப்பர்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மகள் தவறு செய்திருக்கிறாள் என்பதை அம்மா உணர்ந்தாள்.
மாலையில் வீடு திரும்பிய கீதாவிடம், அந்த பென்சில்கள், ரப்பர்களை காட்டினாள். இதெல்லாம் நான் வாங்கித் தந்தவையாக தெரியவில்லை. நீ ஏதோ தவறு செய்திருக்கிறாய் என்றாள் அம்மா.
அம்மாவின் கோபப் பார்வையை பார்த்த கீதா, தயக்கத்தோடு, இவையெல்லாம் என் தோழிகளுடையது. சும்மா ஒரு ஜாலிக்காக… அவர்களுக்கு தெரியாமல் நான் எடுத்து வந்தவை என்றாள்.
அம்மாவின் அறிவுரை
மகள் ஒருபுறம் தவறு செய்திருக்கிறாள் என்பதோடு மற்றொருபுறம் உண்மையை மறைக்காமல் சொன்னாளே என்ற காரணத்தால், அவளுக்கு ஆத்திரப்படாமல் அறிவுரை வழங்கினாள்.
கீதா உனக்கு அன்பான அப்பாவும், அம்மாவும் இருக்கிறோம். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வாங்கித் தருகிறோம்.
ஆனால் நீ ஜாலிக்காக ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இது மன்னிக்கக் கூடிய விஷயம் அல்ல. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன்னுடைய எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.
தோழியின் கதையை சொன்ன அம்மா
உனக்கு நான் நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன் கேள். என்னுடைய பள்ளித் தோழி ஒருத்திக்கு இதேபோன்ற பழக்கம் இருந்தது.
பல நேரங்களில் அப்படி திருடிய பொருளை என்னிடம் கொண்டு வந்து காட்சி, சில தோழிகளின் பெயர்களைச் சொல்லி சுட்டுட்டு வந்துட்டேன் என்பாள். அப்போது அவளை கண்டிப்பேன்.
நாங்கள் கல்லூரிகளில் சேர்ந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனோம். அங்கே ஒரு அழகான விலை மதிப்புமிக்க ஹேர் கிளிப்பை பார்த்திருக்கிறாள்.
அதை அவள் அதை எடுத்து ஆடைக்குள் மறைத்துக் கொண்டாள். இது எனக்குத் தெரியாது. இருவரும் நாங்கள் வாங்கிய பொருள்களை பில் செய்தோம்.
அப்போது பெண் ஊழியர் ஒருவர், என் தோழியை கொஞ்சம் வருமாறு அழைத்து தனி அறைக்கு சென்றார். இதைக் கண்ட எனக்கு ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர முடிந்தது.
சில நிமிடங்களில் நானும் அந்த இடத்துக்கு சென்றபோது அந்த பெண் ஊழியர் என் தோழியை அட்வைஸ் செய்வதையும், அவள் அவமானம் தாளாமல் அழுதுகொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.
அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ளவர்கள் நாகரீகமாக நடந்துகொண்டதால் அவர் திருட்டு பழிக்கு ஆளாகி பொதுவெளியில் அவமானப்படுதில் இருந்து தப்பித்தாள்.
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டா உன் வாழ்க்கை வீணா போயிடும். திருட்டு பழிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற நிலை என் மகளுக்கு வரவேண்டுமா? என்று கேள்வியை எழுப்பினாள் அம்மா.
திரும்பக் கிடைத்த வெள்ளிப் பேனா
தவறை உணர்ந்து அழுத கீதா, இனிமேல் தவறு செய்ய மாட்டேன் அம்மா என்று மன்னிப்பு கேட்டாள்.
நாளைக்கே நீ, இந்த பொருள்களை உரிய தோழிகளிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு வர வேண்டும் சரியா? என்றாள் அம்மா.
சரி என்று தலையாட்டிய கீதா, மறுநாள் அம்மா சொன்னபடி, தோழிகளிடம் தான் எடுத்த பென்சில்கள், ரப்பர்களை கொடுத்து மன்னிப்பு கேட்டாள்.
தோழிகளில் ஒருத்தி அப்போது கீதாவிடம் வந்து, நானும் தவறு செய்துவிட்டேன் கீதா. என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது புத்தகப் பையில் வைத்திருந்த வெள்ளப் பேனாவை கீதாவிடம் தந்தாள்.
காணாமல் போன விலை உயர்ந்த அம்மாவின் பொருள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி கீதாவுக்கு.
பள்ளி விட்டதும், ஓடோடி வந்து அம்மாவிடம், அந்த வெள்ளிப் பேனாவை நீட்டி, பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னாள் கீதா.