சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் வல்லக்கோட்டை முருகன் கோவில்.
வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு, புராணக் கதைகள், மூலவரின் சிறப்பு உள்ளிட்ட விவரங்களை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.
உள்ளடக்கம்
வல்லக்கோட்டை முருகன் கோவில் தூரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் அறிந்த பெயர் வல்லக்கோட்டை முருகன் கோவில்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லக்கோட்டையில் இக்கோயில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து 37 கி.மீட்டர் தூரத்திலும், காஞ்சிபுரத்தில் இருந்து 33 கி.மீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்திருக்கிறது.
பழைமையான கோயில்
வல்லக்கோட்டை முருகன் கோவில் 1,200 ஆண்டுகள் பழைமையானது. இங்குள்ள மூலவர் முருகப்பெருமானின் உயரம் 7 அடி.
நாட்டில் கருவறைகளில் உள்ள முருகன் திருவுருவச் சிலைகளில் இதுவே அதிக உயரம் உடையது.
சுப்பிரமணிய சுவாமியுடன் வள்ளி, தெய்வானை திருவுருவச் சிலைகளும் அமைந்திருக்கின்றன.
மூலவருக்கு எதிரே இரட்டை மயில்கள் வீற்றிருக்கும் அற்புதம் வேறு எங்கும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி.
தேவி கருமாரி அம்மன் சந்நிதி
சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கும் கருவறை மற்றும் மகா மண்டபத்தை ஒட்டிய திருக்கோயில் சுற்றில் விஜய கணபதி, உற்சவமூர்த்திகளாய் வள்ளி, தெய்வாணை சமேத சுப்பிரமணியர், சண்முகர், தேவி கருமாரி அம்மன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.
கோயிலில் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் திருமேனிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
தல விருட்சம்
வல்லக்கோட்டை முருகன் கோவில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. அரச மரம் ஒன்றும் உள்ளது. இக்கோயில் மூலவருக்கு எதிரே கொடி மரத்தில் இருந்து சற்று தூரத்தில் வஜ்ஜிர தீர்த்தம் என்ற பெரிய குளம் ஒன்றும் இருக்கிறது.
புராணக் கதைகள்
வல்லக்கோட்டை முருகன் கோயில் வரலாறு தொடர்பான புராணக் கதைகள் சில உலா வருகின்றன. இவற்றில் முக்கியமானது மன்னன் பகீரதன் கதை.
இலஞ்சி என்ற தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை மன்னன் பகீரதன் ஆண்டு வருகிறான். அவனை காண்பதற்காக நாரதர் வருகிறார்.
பல தேசங்களை வென்ற ஆணவத்தில் மிதந்த மன்னன் பகீரதன் நாரதரை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறான். இதனால் நாரதர் அருகில் இருந்த வனப்பகுதிக்கு செல்கிறார்.
அங்கு கோரன் என்ற அரக்கனை சந்திக்கிறார். அவன் பல மன்னர்களை வென்று வெற்றிக்களிப்பில் இருப்பதை காண்கிறார். அவனால் பகீரதன் ஆணவத்தை அடக்க முடியும் என்று முடிவு செய்கிறார்.
இதனால் அவர், கோரனை பார்த்து, பலரை வெற்றி கண்ட நீ, இலஞ்சி நாட்டை வெற்றி பெற்றால்தான் உன்னுடைய திக் விஜயம் நிறைவு பெறும் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட கோரன், உடனடியாக இலஞ்சி நாட்டின் மீது படையெடுத்து செல்கிறான். கோரனின் போர் வியூகத்தில் பகீரதன் தோற்று போகிறான்.
துர்வாசரை சந்தித்த பகீரதன்
நாட்டை இழந்த பகீரதன் காட்டுக்கு கடத்தப்படுகிறான். அங்கு அவன் நாரதரை சந்திக்கிறான். அவரை பார்த்ததும் காலில் விழுந்து தனக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறான்.
துர்வாச முனிவரை நீ சந்தித்தால் உன் நாட்டை மீட்க வழிகாட்டுவார். அவர் சொல்வதை கேட்டு செயல்படு என்று சொல்லி நாரதர் மறைகிறார்.
அந்த வனப் பகுதியில் பல நாட்களில் சிரமப்பட்டு தேடி துர்வாச முனிவரை பகீரதன். சந்திக்கிறான்.
அவனுடைய விருப்பத்தை அறிந்த துர்வாசர், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, இங்கு பாதிரி மரத்தடியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை நீ வழிபட்டால் உன் குறைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவாய் என்று கூறுகிறார்.
கோயில் கட்டிய பகீரதன்
அவரது சொல்படி பாதிரி மரத்தடியில் வீற்றிருந்த முருகனை வழிபடுகிறான். முருகனுக்கு அருகில் வள்ளி, தெய்வானை திருவுருவங்களை பிரதிஷ்டை செய்து பிரம்மாண்ட கோயிலை கட்டுகிறான். அவனுடைய வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றி வைக்கிறார்.
மீண்டும் அவன் இலஞ்சி நாட்டை எல்லா வளமும் பெற்று ஆளத் தொடங்குகிறான். அந்த திருக்கோயில்தான் நாம் இன்றைக்கு தரிசிக்கும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இந்திரன் வழிபட்ட தலம்
இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம், வளமும் நலமும் பெற முருகப்பெருமானை வழிப்படுவதற்கு சிறந்த தலம் எது என்று கேட்கிறான்.
பூலோகத்தில் வல்லக்கோட்டையில் அமைந்திருக்கும் சுப்பிரமணியரை வழிபடு. உனக்கு எல்லா வளமும் கிடைக்கும் என்கிறார்.
இதைக் கேட்ட இந்திரன் பூலோகத்துக்கு வந்து வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணியரை வழிபடுகிறான்.
தன்னுடைய வஜ்ஜிராயுதம் மூலம் அப்பகுதியில் ஒரு குளத்தை உருவாக்குகிறான். அதில் இருந்து தீர்த்தத்தை எடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறான்.
இந்திரனின் கோரிக்கையை ஏற்று இஷ்டசித்திகள் பலவற்றையும் முருகப்பெருமான் அருளுகிறார். அந்த திருக்குளம்தான் இப்போது காணப்படும் வஜ்ஜிர தீர்த்த குளம்,
அசுரனை வதம் செய்த முருகன்
முன்னொரு காலத்தில், வல்லன் என்ற அசுரன் அப்பகுதியில் கோட்டை அமைத்துக்கொண்டு ஆட்சி புரிகிறான். அவனால் மக்கள் துன்புறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமியிடம் சென்று தங்கள் குறையைச் சொல்லி முறையிடுகிறார்கள்.
மக்களின் துன்பங்களை நீக்குவதற்காக, முருகப்பெருமான் வல்லனை வதம் செய்கிறார். அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை சுப்பிரமணியர் என அழைக்கப்படலானார்.
அருணகிரிநாதரின் வல்லக்கோட்டை திருப்புகழ்
14-ஆம் நூற்றாண்டில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்களை வலம் வந்து திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருப்போரூருக்கு வந்தார்.
அங்கு முருகப்பெருமானை தரிசித்துவிட்டு, மறுநாள் திருத்தணிக்கு செல்ல மனதில் எண்ணி படுத்துறங்கினார்.
அவரது கனவில் வந்த முருகன், வல்லக்கோட்டையை மறந்தனையோ அருணாகிரி என சொல்ல, திடுக்கிட்டு எழுந்த அருணகிரிநாதர் உடனடியாக வல்லக்கோட்டைக்கு புறப்பட்டார்.
கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்த அவர், வல்லக்கோட்டை முருகனின் தலப் பெருமைகளை 7 பதிகங்கள் பாடி மகிழ்ந்தார்.
அந்த வகையில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டுமே 7 திருப்புகழ் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.
பக்தர்கள் நம்பிக்கை
வல்லக்கோட்டை முருகனை வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் கூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருமணத் தடை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறுகிறது என்பதால் திருமணத் தடை இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.
இக்கோயிலில் திருமணம் செய்தால், அந்த மணக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ சுப்பிரமணிய சுவாமி அருள்புரிகிறார். அதனால் இக்கோயிலில் சுபமுகூர்த்த காலங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலை சுற்றிலும் பல திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன.
கோயில் திருவிழாக்கள்
வல்லக்கோட்டையை சேர்ந்த சைவ, வைணவ பக்தர்கள் ஒன்றுகூடி வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு திருவிழா நடத்துவது சிறப்பு.
கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் முத்தங்கி சேவையை காண ஏராளமான பக்தர்கள் திரள்வது வழக்கமாக இருக்கிறது. கோயிலில் தை பூச விழா மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.
7 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், நன்மைகளும் பெறலாம் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அழுத்தமான நம்பிக்கை.
இதனால் இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை விரதம் இருந்து தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகம்.
கோயில் நடை நாள்தோறும் காலை 6 முதல் 1 மணி வரையிலும், மாலையில் 4.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.