Site icon Mithiran News

எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10

திருக்குறள் கதை 10

குறளமுதக் கதைகள் வரிசையில் இடம்பெறும் திருக்குறள் கதைகள் 10-இல் எண்ணித் துணிக கருமம் என்ற திருக்குறளுக்கான கதையும், குறளுக்கான விளக்கமும் இடம்பெறுகிறது.

எண்ணித் துணிக கருமம்

தர்ம நாதரை அவரது நண்பர்களான விமலரும் ,பார்சுவரும் சந்திக்கச் சென்றார்கள்.

தர்மர் அவர்களை வரவேற்றார்.

மூவருமாக உரையாடத் தொடங்கினார்கள்.

பார்சுவர், தர்மரே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு ஆராய்ந்து அந்தச் செயலைச் செய்ய வேண்டும் அல்லவா? என்றார்.

ஆமாம், அதில் என்ன தங்களுக்கு சந்தேகம்? எனக் கேட்டவர், “எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் அச்செயலை நன்கு ஆராய வேண்டும். .அவ்வாறு தொடங்கியச் செயலைப் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பது கூட குற்றமாகும்”.

இதைத்தான் தெய்வப் புலவரான திருவள்ளுவர் அழகாக ஒரு குறட்பாவில் எடுத்துரைத்துள்ளார் .

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

(குறள் – 467)

பத்ம புராணம்

பத்ம புராணத்தில் ஒரு காட்சி வருகிறது. அனு மஹானின் தந்தை பவணஞ் சயன். அவன் போருக்குப் புறப்பட்டுப் போகிறான். செல்லும்போது மானஸரோவர் ஏரியின் அருகே தங்குகிறான்.

அன்று அந்த நீர் நிலையின் கரையில் சக்ரவாகப் பெண் பறவை தன் இணையான ஆண் பறவையை நினைத்து வருந்துவதைப் பார்க்கிறான்.

அதனால் தன் மனைவியின் நினைவு அவனுக்கு வந்துவிட்டது. திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தமையால் அவளைக் காணவும் விழைந்தான்.

தன் நண்பனிடம், “போருக்குச் செல்லும்போது மனைவியின் நினைவு வருதல் தவறே. மேலும் போருக்குச் செல்லாமல் திரும்புவதும் தவறு என்பதையும் உணர்ந்துள்ளேன்” என்றான்.

என்ன செய்வது? இன்றிரவே அவளைக் கண்டு திரும்பி விடுவேன் என்று கூறுகிறான் .

அவன் நண்பனும் பவணஞ்சயனின் மனைவியான அஞ்சனாதேவி இருக்கும் மாளிகை வரை அழைத்துச் செல்கிறான். பணிப் பெண் மூலமாக சந்திக்க வைக்கின்றான்.

பவணஞ்சயனும் அஞ்சனாவின் அறையில் தங்குகிறான்.

இப்போது புரிகிறதா? போருக்குச் செல்ல நினைத்தவனுக்கு சம்சாரத்தின் நினைவு வரலாமா?

குறட்பா விளக்கம்

இதனைத் தான் ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றமாகும் என்கிறார். இதனையே இக் குறட்பா தெளிவுபடுத்துகிறது என்றார்.

தர்மரே! அருமையான குறள் கூறி விளங்க வைத்தீர்கள் என்று சொல்லி நண்பர்கள் விடை பெற்று சென்றார்கள்.

Exit mobile version