சென்னை: தமிழ் சினிமா உலகில் 28 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இந்தியன் திரைப்படம் இன்னமும் பலரது கண்களில் இருந்து அகலவில்லை. இப்போது அதன் இரண்டாம் பாகம் இந்தியன் 2 வெளிவந்திருக்கிறது.
உள்ளடக்கம்
இந்தியன் முதல் பாகம்
ஒரு திரைப்படத்தில் பிரம்மாண்டத்தையும், தொழில்நுட்பத்தையும், திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும் புகுத்தி வெற்றிகரமாக வெளிவந்த படம் தான் இந்தியன்.
அந்த படத்தில் இளைஞராக இருந்த கமலஹாசன் ஒரு 70 வயதுடையவராக நடித்து காட்சிகளில் அசத்தியதையும் அப்போது ரசிக்க முடிந்த ஒன்று.
சமூகத்தில் புரையோடிப் போன ஊழலையும், லஞ்சத்தையும் சட்டத்தாலும், கட்டுப்பாடுகளாலும் போக்க முடியாத நிலையை உணர்ந்த சேனாபதி என்கிற இந்தியன் தாத்தா, தான் பயின்ற வர்மக் கலையை பயன்படுத்தி ஊழல்வாதிகளைத் தேடிச் சென்று கொல்கிறார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் தன்னுடைய மகன் டிரைவிங் லைசென்ஸுக்கு லஞ்சம் பெறுவதை அறிந்து, பாசத்தை மூட்டைக் கட்டி வைத்து அவனையும் கொல்கிறார்.
காவல்துறை கண்களில் இருந்து தப்பிச் செல்லும் அவர், ஒவ்வொரு முறையும் ஒரு ஊழல்வாதியை கொன்றதை அடுத்து நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் எல்லோரும் லஞ்சம் வாங்க அச்சப்படத் தொடங்கிறார்கள் என்ற கருத்தை அந்த இந்தியன் படம் சொன்னது.
இந்தியன் 2
இந்தியன் 2-விலும் அதே மையக் கருதான் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் 28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊழல், லஞ்சத்தைக் காட்டிலும் பல மடங்கு இப்போது நிஜ வாழ்க்கையில் பெருகி இருக்கிறது. அதனால் அதே கருவை வைத்து இந்தியன் 2 திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமூக அவலங்கள்
அரசாங்க வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு நேர்மையாக வேலை செய்ய மறுக்கிறார்கள்.
நல்ல உயர் பதவிகளில் இருப்பவர்கள் லஞ்சம் பெறாமல் அன்றாடம் வீடு திரும்புவதில்லை.
பேருந்துகளின் நெடுந்தூர பயணங்களில், சுகாதாரமற்ற உணவு தயாரிக்கும் ஓட்டல்களில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அதனால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இ-சேவை மையங்கள் பொதுமக்கள் வசதிக்காக நிறுவப்பட்டாலும், அதிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதற்கு ஒரு பெண்ணே லஞ்சம் பெறுகிறார்.
குப்பைகளை லாரிகளில் அள்ளிச் செல்லும் துப்புரவு ஊழியர்கள் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி விழுவதை கண்டு கொள்வதில்லை.
மக்கள் போக்குவரத்து உள்ள சாலைகளில் சிறுநீர் கழிக்கப்பட்டு குளம்போல் தேங்கி நிற்கிறது.
குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அந்த சிறுநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இவையெல்லாம் இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சிகள்.
தோல்வியில் முடியும் விழிப்புணர்வு
சமூக அவலங்களை தட்டிக் கேட்கும் மனமுடைய சித்ரா அரவிந்தன் (நடிகர் சித்தார்த்) தன்னுடைய சக நண்பர்களோடு இணைந்து “பார்க்கிங் டாக்ஸ்” என்ற பெயரில் ஒரு யுடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கிறார். ஆனால், நேர்மையை விரும்பாதவர்களும், லஞ்சம், ஊழலுக்கு அடிமையானவர்களும் இவர்களின் முயற்சிகளை தோல்வியுற செய்கிறார்கள்.
இதனால் அடுத்தக் கட்டமாக என்ன செய்வது என்று தடுமாறும் அவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் ஊழலில் ஈடுபட்டவர்களை கொலை செய்து, நாட்டில் லஞ்சம் வாங்குபவர்களை அச்சப்பட வைத்த சேனாபதி என்ற இந்தியன் தாத்தா ஞாபகம் வருகிறது.
ComebackIndian ஹேஷ்டேக்
அவர் வந்தால்தான் இந்த சமூக அவலங்களுக்கு முடிவு கட்ட முடியும் என்று முடிவு செய்து, #comebackIndian என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்குகிறார்கள்.
தைவான் நாட்டில் வர்மக் கலையை கற்றுத் தரும் இந்தியன் தாத்தா ( கமலஹாசன் ) மீண்டும் இந்தியாவில் ஊழல், லஞ்சம் தலைதூக்கியிருப்பதை அறிகிறார்.
ஊழல் செய்துவிட்டு அந்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களுடன் பதுங்கி வசித்தும் பணக்காரரை தேடிப்பிடித்து கொல்கிறார். அடுத்து அவர் இந்தியாவுக்கு புறப்பட்டு வருகிறார்.
களையெடுப்பு அட்வைஸ்
சமூகவலைதளம் மூலம் மக்களை தொடர்புகொள்ளும் இந்தியன் தாத்தா, ஊழலையும், லஞ்சத்தையும் களையெடுக்கும் வேலையை நம் வீடுகளில் இருந்து தொடங்குவோம் என 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
அவரது ஆலோசனையை ஏற்று பல இளைஞர்கள் தங்கள் வீடுகளில் இருப்பவர்களை கண்காணித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள்.
இந்தியன் தாத்தாவும் லஞ்சம், ஊழலில் சிக்கி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியவர்களை வர்மக் கலை மூலம் வதம் செய்கிறார்.
சித்ரா அரவிந்தன் உள்ளிட்ட நண்பர்களும் இந்தியன் தாத்தாவின் அறிவுரையை ஏற்று லஞ்சம் வாங்கும் தங்களுடைய பெற்றோரையும், உறவினர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள்.
இந்தியன் 2 தாத்தாவுக்கு எதிராக
சட்டத்தின் முன் தன்னுடைய தந்தையை நிறுத்தியதால், தன்னுடைய தாய் அவமானத்துள்ளாகி தாய் தற்கொலை செய்துகொண்டதை சித்ரா அரவிந்தனால் ஜீரணிக்க முடியவில்லை.
குடும்பத்தினர் அனைவரும் அவனை ஒதுக்கி வைக்கிறார்கள். தாய்க்கு கொள்ளி வைக்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
குடும்ப உறவுகளோடு பாசத்தோடு பழகிய அவனுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு காரணம் இந்தியன் தாத்தாதான் என்று நினைக்கிறான்.
GobackIndian ஹேஷ்டேக்
அவனை சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த இந்தியன் தாத்தாவை அவமதிக்கிறான். GobackIndian என்ற ஹேஷ்டேக்கை அவனும் அவனது நண்பர்களும் டிரெண்டாக்குகிறார்கள்.
லஞ்சவாதிகளை காட்டிக் கொடுத்ததால் குடும்ப உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட ஊழல்வாதிகள், காவல்துறை என எல்லோரும் இந்தியன் தாத்தாவை விரட்டிச் செல்கிறார்கள்.
இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதியை பிடிக்க முயன்று முடியாமல் போன காவல்துறை அதிகாரியின் மகன் இப்போது உயர் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்.
அந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். அவர் தந்தையின் ஆசை நிறைவேற்ற இந்தியன் தாத்தாவைப் பிடிக்க பெரும் படையுடன் விரட்டுகிறார்.
பல சாகசங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியன் தாத்தா தலைமறைவாகிறார். இதுதான் இந்தியன் 2 திரைப்படம்.
படத்தில் என்ன குறைபாடு?
28 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக இருந்த கமல்ஹாசன் வயதானவராக நடித்ததை ரசிக்க முடிந்தது. ஆனால் வயதான நிலையில், அதே வயதான தோற்றத்தில் இளைஞரைப் போல சண்டையிடுவது, ஒற்றை சக்கர வாகனத்தில் பறப்பது போன்றவற்றை ஜீரணிக்க முடியவில்லை.
கமல்ஹாசனின் நடிப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் அவரது முழுமையான நடிப்பை இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2-வில் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.
சொதப்பல் கிளைமாக்ஸ்
கதையின் கரு நன்றாக இருந்தாலும், கடைசியில், குடும்பத்தில் இருப்பவர்களை காட்டிக் கொடுத்தால், கடைசியில் பாதிப்பு நமக்குத்தான் என்று இளைஞர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்வது போல் படத்தை ஏன் படத்தை இயக்குநர் ஷங்கர் முடித்தார் என்றுதான் தெரியவில்லை.
இன்றைய இளம்தலைமுறைக்கு லஞ்சத்தைத் தட்டிக் கேட்க தூண்டும் வகையில் அமையாமல், அதைத் தட்டிக் கேட்டால் குடும்ப உறவுகளை இழந்து நிற்க வேண்டியிருக்கும் என்று எச்சரிப்பது கதையின் மூலக் கருவையே சிதைக்கிறது.
இதற்கு மாறாக வேறு ஒரு முடிவை கிளைமாக்ஸுக்கு அவர் தேர்வு செய்திருந்தால் அது திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கும், இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்தை சொல்வதில் வெற்றியும் அடைந்திருக்கலாம்.
ஆனால், படத்தை பார்ப்பவர்கள் இந்தியன் 3-ஆம் பாகம் எப்படி அமையப் போகிறது என்பதை ஆவலோடு காத்திருக்கும் நிலையை படத்தின் கடைசியில் காட்டப்படும் டிரெய்லர் ஏற்படுத்துகிறது.
யாருக்கு பிடிக்கும் – பிடிக்காது
லஞ்சம், ஊழலை ஆதரிக்கும் குணமுடையவர்களும், லஞ்சத்தில் திளைப்பவர்களும், அவர்களின் வாரிசுகளும் இந்தத் திரைப்படத்தை ரசித்து பார்க்க மாட்டார்கள்.
லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், லஞ்சத்துக்கு எதிரான மனநிலைக் கொண்ட இளைஞர்களும், நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சமும், ஊழலும் தடையாக இருக்கிறது என்று வேதனைப்படுபவர்களும் நிச்சயமாக படத்தை முழுமையாக ரசித்து பார்ப்பார்கள்.
பிரம்மாண்ட காட்சிகள்
இதை ஒரு பொழுதுபோக்கு படமாக நினைத்து பார்ப்பவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள். அந்த அளவுக்கு பிரம்மாண்டத்துக்கு பஞ்சமில்லை.
அரண்மனை போல் தங்கத்தால் இழைத்த மாளிகையின் உள்புற தோற்றம், பூஜ்ய நிலையில் மிதக்கும் தொழில்நுட்ப அரங்கு, வைரம் பதித்த ஆமைகள், தண்ணீர் மீது நடனம், மறைந்து போன நடிகர்கள் விவேக், மலையாள நடிகர் நெடுமுடி வேணு போன்றவர்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் காட்டப்பட்டிருப்பதும் ரசிக்கும்படியாக உள்ளது.
இதை பரவாயில்லை. பாடல்கள் மோசமில்லை. இயக்குநர் ஷங்கர் கதையில்தான் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.
நாட்டின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, இந்த ஊழலும், லஞ்சமும் எப்ப நாட்டில் இருந்து விடைப்பெற போகிறதோ என்று ஆதங்கத்தோடு வெளிவருபவர்களையும் காண முடிகிறது.