சென்னை: பொதுவுடமைக் கொள்கையுடன் இணைந்து செயல்படுவதாக சொல்லும் தமிழக அரசு நினைத்தால் பெட்ரோல் விலை உயர்வு நடுத்தர, பாமர மக்களை பாதிக்காமல் செய்ய முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது. பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த நிலையில், மாநில அரசு ரூ.3 விலையை குறைத்திருக்கிறது.
ஒரு நல்ல மாநில அரசு மக்களை பாதிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை காண்பது அவசியமாகிறது.
உள்ளடக்கம்
விலை நிர்ணயம் செய்வது எப்படி?
பெட்ரோல், டீசல் விலை, கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று.
கச்சா எண்ணெயை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை சுத்திகரிப்பு செய்து உப பொருள்களான பெட்ரோல், டீசல், தார் போன்றவற்றை பெறுகிறார்கள்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு, அதை உப பொருள்களாக பிரித்தெடுக்கும் செலவு ஆகியவற்றை சேர்த்து பெட்ரோல், டீசல் அடிப்படை விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மதிப்புக் கூட்டு வரி
அதைத் தொடர்ந்து கலால் வரி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. அடுத்து டீலர் கமிஷன் உள்பட மாநில அரசு சார்பில் மதிப்புக் கூட்டு வரியான வாட் விதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநில அரசும் வெவ்வேறு வரி விதிப்பு முறைகளை பின்பற்றுகின்றன. தமிழகத்தில் பெட்ரோலின் அடிப்படை விலையின் மீது 13 சதவீதம் வாட் வரியும், கூடுதலாக ரூ.11.52 வரியும் வசூலிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் தமிழக அரசு விதித்த வரி ரூ.15.67 ஆகும். தமிழக அரசு அதன் மீதான வரி சதவீதத்தில் எந்த மாற்றமும் செய்யாத நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழக அரசின் வரியை ரூ.3 குறைத்து உத்தரவிட்டார்.
இந்த விலைக்குறைப்பினால் தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு ரூ.1,050 கோடி ஆகும்.
தற்போது தமிழக அரசு மீது விதிக்கும் வரி லிட்டருக்கு ரூ.22.54 ஆக உள்ளது. மாநில அரசின் இந்த வரியையே இன்னும் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என ஒன்றிய அரசு மாநிலங்களின் மீது பழிபோட்டு வருகிறது.
ஒரு லிட்டரில் எவ்வளவு வரி யாருக்கு?
உதாரணமாக, ரூ.110-க்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் அடிப்படை விலை – ரூ. 54, மத்திய அரசின் வரி- ரூ.28, மாநில அரசின் வரி- ரூ.23, டீலர் கமிஷன்- ரூ. 5, ஆக மொத்தம் பெட்ரோல் 1 லிட்டர் 110 ரூபாய்.
வருவாய் யாருக்கு அதிகரிப்பு
வரி விதிப்பு அடிப்படையில் பார்த்தால், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி 9 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது.
கிட்டத்தட்ட 78 சதவீதத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. ஆனால் 12 சதவீதமாக இருந்த செஸ் வரி 32.9 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டு பின்னர் 27.9 சதவீதம் என்ற அளவுக்கு சற்று குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வருவாய் அடிப்படையில், ஒன்றிய அரசுக்கு 2014-ஆம் ஆண்டில் கிடைத்த வருவாயை விட 165 சதவீதம் அதிகமாக கடந்த ஆண்டு கிடைத்துள்ளது என்பதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஒன்றிய அரசுக்கு செஸ் வரி மூலம் கிடைத்த இந்த அதிக வருவாயை, மாநில அரசுகளுக்கு பிரித்தளிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் மாநிலங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை.
அதனால்தான் செஸ் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு மாநில அரசுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாங்கள் வரி விதிப்பை குறைத்துள்ளோம். ஆனால் செஸ் வரியை ஒன்றிய அரசு அதிகமாக உயர்த்தி வருவாய் ஈட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு என்ன செய்யலாம்?
இந்த சூழலில்தான், தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் கொண்டு வந்தால், அது பாமர, நடுத்தர மக்களை பாதிக்காமல் இருக்கச் செய்ய முடியும்.
இதற்கான சாத்தியம் உள்ளதா என்றால் இன்றைய கணினி தொழில்நுட்பத்தில் சாத்தியமில்லாததது எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பங்குகளில் ஒரு லிட்டர், 2 லிட்டர் வரைதான் சராசரியாக ஏழைகள் பெட்ரோல் போடுகின்றனர்.
இப்படி செய்யலாமே?
இன்றைய சூழலில் கார்களில் செல்வோர் தங்களுடைய வாகனங்களுக்கு சராசரியாக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வரை பெட்ரோல், டீசல் மற்றும் பராமரிப்புக்கு செலவிடக் கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பர். அவர்களை நடுத்தர வர்க்கத்தினராக கருத்தில்கொள்ள முடியாது.
நடுத்தர வர்க்கத்தினர் பலரும் இன்றைக்கு தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு வாடகைக் கார்களையே பயன்படுத்துகின்றனர்.
ஆடம்பரத்துக்காக கார்களை வைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் பலரும், அத்திப்பூத்ததுபோல் தங்கள் கார்களைப் பயன்படுத்தும்போதுதான் 2 லிட்டருக்கு மேல் பெட்ரோலோ, டீசலோ போடுவது வாடிக்கையாக உள்ளது.
நித்தம் கார்களை பயன்படுத்துவோரை இன்றைய பொருளாதார சூழலில் நடுத்தர வர்க்கத்தினராக சமூக அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் மட்டுமே தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவோருக்கு மாநில அரசு, மாநில அரசின் வாட் வரியை மிகவும் குறைத்து ஸ்டேண்ட்ட் ரேட் எனப்படும் நிரந்தரமான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கலாம்.
நடுத்தர மக்களுக்காக
2 லிட்டருக்கு மேல் பங்குகளில் போடுவோருக்கு அதிகபட்ச வாட் வரியை மின்வாரியம் போன்று பல அடுக்குகளாக அதிக எண்ணிக்கையிலான லிட்டருக்கு ஏற்ப விலை உயர்த்தி நிர்ணயிக்கலாம்.
இதனால் மாநில அரசு வருவாய் இழப்பை தவிர்க்க முடிவதோடு, ஏழைகள், நடுத்தர மக்களுக்கு அவற்றின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.
பங்குகளில் இன்றைக்கு காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய சூழலில், ஒருவரே பலமுறை பங்குகளில் காத்திருந்து இரண்டு, இரண்டு லிட்டராக போடும் சூழல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
இத்தகைய செயல்பாட்டில் சிலர் ஈடுபடலாம். அதேபோல் பெட்ரோல் வங்கிகளிலும் முறைகேடுகள் செய்ய முடியும் என்று வாதிடுவோர் நம்மிடையே இருக்கக் கூடும். அந்த சந்தேக நிலையையும் தொழிலநுட்பம் மூலம் தவிர்க்க முடியும்.
இன்றைய பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கால்குலேட்டர், அளவு காட்டும் கருவிகளில் ஒருசில மாற்றங்களை இன்றைய தொழில்நுட்ப வல்லுநர்களால் எளிதாக ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக, பெட்ரோல் பங்குகளில், வாகனத்துக்கு பெட்ரோல் போடும்முன்பு கார், டூ வீலர், சரக்கு வாகனம் என கூடுதல் பட்டன்களை அழுத்தும் ஒரு மாறுதலை செய்ய வேண்டும்.
தொழில்நுட்பம் இருக்கு
ஒரே வாகனத்துக்கு இரண்டு இரண்டு லிட்டராக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் நிரப்பும் வாய்ப்பை தவிர்ப்பதற்காக வாகன ஸ்கேனிங் முறையும் பயன்படுத்த முடியும்.
இதையும் மீறி தவறி பெட்ரோல் நிலையங்களில் தவறுகள் நடைபெறாமல் தவிர்க்க, 2 லிட்டருக்கு மேல் பெட்ரோலோ, டீசலோ போடும்போது அதற்கான கூடுதல் கமிஷனை டீலருக்கு நிர்ணயிக்கலாம்.
இதுதவிர விஞ்ஞானரீதியான முறைகேடுகள் எப்படியெல்லாம் நடைபெறும் என்பதை ஆராய, முன்கூட்டியே ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்கலாம்.
அதில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பெட்ரோல் நிலைய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை இடம்பெறச் செய்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று, பாதுகாப்பு முறைகளை பலப்படுத்தலாம்.
ஆற்றல்மிக்க அதிகாரிகள்
இன்றைய அரசு அதிகாரிகள், அரசு ஒரு அடி பாய்ந்தால், அதிகாரிகள் 8 அடி பாயக்கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பது ஆறுதலான விஷயம்.
அதனால் அவர்கள் முயன்றால் இத்திட்டத்தை சிறப்பாக வெற்றியடையச் செய்ய முடியும்.
அத்துடன், டீசல் பயன்படுத்தும் சரக்கு வாகனங்களுக்கும், பயணப் பேருந்துகளுக்கும் ஒரு விலையை நிர்ணயிக்க முடியும் என்று தொழில்நுட்ப ரீதியான சிந்தனையைக் கொண்டோர் கூறுகின்றனர்.
இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் ஏழைகள் பயன்பெறுவதோடு, இழப்பை தவிர்க்க வசதி படைத்தவர்களிடம் கூடுதல் வரியை விதித்து பெறவும் முடியும்.
மார்த்தட்டிக் கொள்ளலாம்
இது ஏழைகளின் அரசு என தமிழக அரசு மார்தட்டிக் கொள்ள முடிவதோடு, அதை எதிர்காலத்தில், ஏழைகள் அரசாக தன்னை ஏற்கெனவே பிரகடனப்படுத்திக்கொண்டு வரும் ஒன்றிய அரசும், இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா, பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து, செய்வீர்களா? செய்வீர்களா? என்று உரத்த குரல் எழுப்புவதுண்டு. அதேபோன்றதொரு குரல், இன்றைக்கு மாநில அரசை நோக்கி மக்களால் எழுப்பப்படுவதை இந்த அரசு உணர வேண்டும்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.