தமிழிசை சௌந்தரராஜன் – அண்ணாமலை பஞ்சாயத்து முடிந்தது!

சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்துக்கு ஸ்வீட் பாக்ஸுடன் சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்று சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பாஜகவில் சலசலப்பு

தமிழக பாஜகவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் சலசலப்பு ஏற்பட்டது. இது வழக்கமாக எல்லா கட்சிகளிலும் காணப்படும் பலவீனம்தான். அது பாஜகவிலும் தோன்றியது.

தேர்தலில் தமிழிசை சௌந்திரராஜன் தோல்வியை சந்தித்தப் பிறகு ஊடகங்களிடம் அவர் பேசும்போது ஒருசில கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினார்.

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு சரியான கூட்டணி அமைக்காமல் போனதுதான். ஒருவேளை பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் பல இடங்களை தமிழகத்தில் கைப்பற்றியிருக்கும் என்று கூறினார்.

இது மறைமுகமாக அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்பதாக சூசகமாக அவர் தெரிவித்தது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அத்துடன், தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பேட்டியில், எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தபோது சிலரை கட்சிக்குள் அனுமதிக்கவில்லை.

அதாவது சமூக விரோத ரௌடிகள் போல் இருப்பவர்களை கட்சிக்குள் விடவில்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. கட்சியில் இப்போது ரௌடிகள் சேர்ந்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
இதனால் அண்ணாமலை தரப்புக்கும், தமிழிசை சௌந்தரராஜன் தரப்புக்கும் சமூகவலைதளங்களில் மோதல் போக்கு நீடித்தது.

இனி கண்ட இடத்தில் பேட்டி இல்லை-அண்ணாமலை

இந்த நிலையில் திடீரென தில்லிக்கு சென்ற அண்ணாமலை திரும்பி கோவைக்கு வந்தார். அப்போது நி்ருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, நான் இனி செய்தியாளர்களை கோவை அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன். கட்சியில் எல்லாவற்றையும் முறைப்படுத்தவுள்ளோம்.
இனி தலைவர்கள் யாரும் பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதுமெல்லாம் பேட்டி கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்.

அமித் ஷா என்ன சொன்னார்?

இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்பாராத ஷாக்கை அமித் ஷா கொடுத்தார்.
அங்கே மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை அழைத்த அமித் ஷா, அவரிடம் ஏதோ கைகளை அசைத்து காரசாரமாக பேசினார். இது அனைத்து ஊடகங்களிலும் பல யூகங்களுடன் செய்திகளாக வெளி வந்தன.
அந்த அளவுக்கு, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமித்ஷா சைகைகள், முகபாவங்கள் எல்லோருக்குமே புரிய வைத்தது.
தமிழிசை சௌந்தரராஜனை அருகில் அழைத்த அமித் ஷா, கட்சி விவகாரங்களை வெளிப்படையாக பேசக் கூடாது. தற்போதைய தலைமையை ஏன் விமர்சித்தீர்கள் என அவர் கேட்டிருக்கலாம்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தோல்விக்கான பொதுவான காரணங்களையே தான் பேசியதாகவும், இதில் யாரையும் தவறாக பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கலாம்.

யூகச் செய்திகள் என்ன சொல்கின்றன

அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த அமித்ஷா, முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் பேசாதீர்கள். கட்சித் தலைமை இருக்கும்போது நீங்கள் ஏன் பேட்டி அளிக்கிறீர்கள். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும்.
இனி நீங்கள் உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக் கூடாது என்று அவர் கண்டித்திருக்கலாம். அதற்கு சரி என்று தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துவிட்டு நகர்ந்திருக்கலாம் என்ற யூக செய்திகள் பரவின.
அத்துடன், பதவி ஏற்பு விழாவை அடுத்து சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை பத்திரிகையாளர்கள் அணுகியபோது, பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றதும் இந்த தகவலை ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தியது.
இந்த நிலையில், அமித்ஷா கட்சி ரீதியாக சில அறிவுறுத்தல்களைத்தான் தன்னிடம் கூறியதாக தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து ஊடகங்களின் யூகங்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு ஆசிர்வாதம்

அண்ணாமலை மேலிடத்தின் ஆசிர்வாதத்துடன் தமிழக பாஜக தலைவராக வந்தவர். அவர் மீது கடந்த காலங்களில் அவர் மீது புகார் தெரிவிக்கப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர்.

கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்களும் ஏராளம். பொதுவாக அண்ணாமலையைப் பற்றி யார் புகார் தெரிவித்தாலும், அதை மேலிடத்தில் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

யார் புகார் தெரிவித்தார்களோ அவர்களே அதிக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது தமிழிசை சௌந்தரராஜன் சேர்ந்திருக்கிறார்.
ஊடகங்கள் பல்வேறு யூகங்களை அடுக்கி வந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலை சென்று பார்த்து வந்தார்.

அத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமித் ஷா எல்லோரையும் குடும்ப உறுப்பினர்களாக நினைப்பவர்.

அவர் அன்பாகத்தான் கட்சியினரிடம் பேசுபவர். அவர் அன்போடும், அரவணைப்போடும்தான் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசியிருக்கிறார். இதில் மற்றவர்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை.
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உழைப்பு பாஜகவுக்கு என்றைக்கும் தேவைப்படுகிறது என்று சொல்லி கட்சியின் உள்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை.

தமிழ்நாடு பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் எவை?

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2024 ஒருசில முக்கிய அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் 2024 வாசிப்பு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (தமிழ்நாடு பட்ஜெட் 2024) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை வாசித்தார்.

சுமார் 2.07 நிமிடங்கள் உரையாற்றிய அவருடைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்கள், துறைவாரியாக நிதிஒதுக்கீடுகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு பட்ஜெட் 2024 – முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
2) பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
3) `மருத்துவத் துறைக்கு ரூ.20 ஆயிரத்து 198 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

  1. தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
  2. 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும்
  3. தமிழ்ப் புதல்வன் என்ற புதியத் திட்டத்துக்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவியருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
  4. ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு
  5. 45 பாலிடெக்னிக்குகள், தொழில்துறை 4.0 தரத்துக்கு உயர்த்தப்படும்.
  6. புதிதாக 10 இடங்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  7. 1, 000 புதிய வகுப்பறைகள், 15 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் கட்ட ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதுப்பெண் திட்டம்

உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலித்தனவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும்.

  1. அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கப்படும்.
  2. காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக 600 கோடி ஒதுக்கீடு.ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  3. 7.5 சதவீத உள்ஒதுக்கீாடு மூலம் 10 ஆயித்துக்கும் மேற்பட்ட மருத்துவம், தொழில் படிப்பு படிக்கும் நிலையில், அவர்களுக்கான கல்வி, உணவு உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களுக்காக ரூ.511 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  4. புதுமைப் பெண் திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
  5. அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக் கழங்கரளில் படிக்க முற்பட்டால் அவர்களுக்கான உதவித் தொகை திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்

மகளிர் திட்டங்கள்

1. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

2. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.

3. 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

4. பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டையிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும்

5. 10 ஆயிரம் புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.

6. ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்

வேலைவாய்ப்பு

  1. சென்னை, கோவை, மதுரையில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
    கோவையில் 20 லட்சம் சதுரடியில் 1100 கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
  2. மத்திய அரசுப் பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  3. இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப் பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  4. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா 20 லட்சம் சதுரடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.
  5. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்.
  6. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

கட்டமைப்பு திட்டங்கள்

சாலைகள் மேம்பாடு திட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் சாலைப் பணிகளுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியும், புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.1,289 கோடியும், சிங்காரச் சென்னை திட்டத்துக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2024-25 நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் மினி பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும்.

ரோப்கார் வசதி

திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதிகள் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் வழித் தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு முனையம் வரை நீட்டிக்க விரிவாக்கத் திட்ட அறிக்கை ரூ.4625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டிருக்கிறது.
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டத்துக்கு 10 கோடி ஒதுக்கீடு
தாமிரபரணி, வைகை, நொய்யல் நதிகள் புனரமைக்க திட்டம் அறிமும் செய்யப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.

தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்

தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் முதல்கட்டமாக 5 லட்சம் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படுவர் என அரசு தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் கணிப்பின்படி, தமிழகத்தில் 2.2 சதவீத மக்கள் பன்முக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலையில், அவர்களில் 5 லட்சம் பேருக்கு உதவி புரியும் திட்டமாக இந்த தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் குடும்பங்கள் இன்னும் குடிசைகளில் வாழ்வது கணக்கெடுப்பில் தெரிய வந்ததை அடுத்து குடிசை இல்லா தமிழ்நாடு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2024 பார்வை

சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதோடு, மேலும் சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் நெருங்கக் கூடிய நேரத்தில் கவர்ச்சிகரமான திட்ட அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் இந்த பட்ஜெட்டில் அப்படி எந்த கவர்ச்சிகரமான திட்டங்களும் இடம்பெறவில்லை.
பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை ரூ.1.08 லட்சம் கோடியாக உயரும். மானிய செலவுகள் ரூ.1.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மானியம் குறைகிறது

பணவீக்கம் தேசிய சராசரியை விட குறைந்திருக்கிறது. மூலதனச் செலவு அதாவது கட்டமைப்பு செலவுகள் இம்முறை ரூ.47 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.42,532 கோடியாக இருந்தது.
நிதி பற்றாக்குறை 3.5 சதவீத்துக்குள் இருக்க வேண்டும் என்று நிதி பொறுப்புடைமை சட்டம், நிதிக்குழு சொல்கிறது. அந்த வரம்புக்குள் தமிழ்நாடு அரசின் நிதிபற்றாக்குறை இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
சொந்த வரி வருவாய் வணிகவரித்துறை வருவாய் 15 சதவீதம் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அத்துறை மூலம் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் வரி வருவாயின் நிதி பகிர்வு 6.64 சதவீதத்தில் இருந்து தற்போது 4.08 சதவீதமாக குறைந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் மானியத் தொகையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

பணிபுரியும் வேலை நேரம் அதிகரிப்பு மசோதா தேவையா?

ஆர். ராமலிங்கம்

சென்னை: 12 மணி நேரம் பணிபுரியும் வேலை நேரம் தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்காக மாற்றப்பட்டு அனுமதிக்கும் சட்டத் திருத்தம் தொழிலாளர் முகங்களை சுழிக்க வைத்துள்ளது.

தொழிலாளர்களுக்கான அரசு, ஆதரவற்றோருக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு என்ற விளம்பரப்படுத்திக்கொண்டு வரும் திமுக அரசுதான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஒட்டுமொத்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பையும் சந்திக்க காத்திருக்கிறது.

திமுகவுக்கு முதல் சறுக்கல் இதுவாகத்தான் இருக்கும்:

தமிழ்நாடு அரசு அதன் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 12 மணி வேலை நேரம் சட்ட மசோதாவை இயற்றியிருக்கிறது. தனிப்பெரும்பான்மை அந்த கட்சிக்கு இருக்கிறது என்ற ஒரு காரணத்தால் வேண்டுமானால் இந்த வேலை நேரம் அதிகரிப்பு சட்ட மசோதா நிறைவேறியிருக்கலாம்.

ஆனால் மளிகைக் கடைகள், டீக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், துணிக் கடைகள், பத்திரிகை, ஊடகங்களில் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்ப்பவர்கள். இந்த அரசை நம்பி வாக்களித்தவர்கள் இதைக் கண்டு பதறிப்போயிருக்கிறார்கள்.

இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியாமல் போனதைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

தொழிலாளர் புருவங்கள் உயருகின்றன

சிறுவயதில் ஒரு கதை,-நாம் எல்லோருமே அந்த கதையைப் படித்திருக்க வாய்ப்புண்டு. நுனி மரத்தில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டும் அந்த கதைதான். அதுபோலத்தான் திமுக அரசுக்கு இது ஒரு சறுக்கு மரம்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் வேலை நேரம் சட்டத் திருத்தம் கூட்டணிக் கட்சிகளை மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் புருவங்களையே உயர்த்தச் செய்திருக்கிறது.

திமுகவில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களை ஒரு தொழிலாளி ஸ்தானத்தில் இருந்து இந்த சட்ட மசோதாவை பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

அவர்கள் எல்லோருமே இன்றைக்கு முதலாளிகள் மனோபாவத்துக்கு வந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சட்டங்கள் இருந்தும் ஏற்கெனவே உழைப்புச் சுரண்டல்தான்

ஏற்கெனவே 8 மணி நேர வேலை என்ற கடுமையான விதிகள் இருந்தபோதே தொழிலாளர் நலத்துறையின் சந்து, பொந்துகளில் முதலாளிகள் நுழைந்து 12 மணி வேலை நேரத்துக்கும் மேலாக பல இடங்களில் வேலை வாங்கி வருகிறார்கள்.

இத்தகைய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக 12 மணி வேலை நேரம் சட்டம் தேவைதானா என்பதை தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் கூடவா யோசித்திருக்க வாய்ப்பில்லை.

சூப்பர் மார்க்கெட்டுகள், துணிக் கடைகள், ஹோட்டல்கள் என எண்ணிலடங்கா தொழில்களை நடத்திவருவோரால், பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு இன்றைய சட்டங்கள் எதுவுமே கைக்கொடுக்கவில்லை.

இந்த விஷயம் ல்லாம் தொடர்புடைய துறை அமைச்சருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறதா என்றும் தெரியவில்லை.

பெயரளவில் தகவல் பலகை

12 மணி வேலை நேரம் தாண்டிய வேலையையும், குறைந்த ஊதியம் தந்துவிட்டு அதிக ஊதியம் கொடுத்ததாக சம்பளப் பதிவேடு. அத்துடன் வருகைப் பதிவேட்டில் 8 மணி நேரம், விடுமுறைகள் அளிப்பதாக போலிப் பதிவு.

அது மட்டுமின்றி ஒருசில விதிகள் தொடர்பாக பெயரளவில் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும் தகவல் பலகை. இவைதான் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் செய்துவரும் ஃபார்மாலிட்டீஸ்.

இதையெல்லாம் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் இன்றைய அமைச்சர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் அறியாதவர்களா என்ன?

ஊழல் மலிந்த துறை

ஊழல் மலிந்த துறைகளில் ஒன்று தொழிலாளர் நலத்துறை என்பதையும், அதில் பணிபுரிவோர் சட்ட விதிகளைக் காரணம் காட்டி வணிகர்களை தவணை முறை சந்தாதாரர்களாக்கியுள்ளதையும் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அறியாதவை அல்ல.

இத்துறையில் பணிபுரியும் அலுவலர்களில் சிலர் சொல்வதுண்டு. நான் காந்தியாக, காமராஜராக இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் சுற்றியுள்ளவர்கள் என்னை இருக்க விட மாட்டேன் என்கிறார்கள் என்று.

இதையும் கூட அறிந்துகொள்ளாத அப்பாவிகளாக இன்றைய அமைச்சர்கள் இருக்கிறார்கள். பாவம்.!

வேதனைக்குரியது

இன்றைய பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் ஒன்றிலாவது பணியாற்றும் ஊழியர்கள் சட்டரீதியாக வேலை வாங்கப்படுகிறார்களா என்று இவர்கள் பார்த்திருக்கிறார்களா?

அல்லது அத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியாவது கேள்வி எழுப்பியிருக்கிறாரா? என்றால் இல்லை.

ஆட்சியாளர்களும் சரி, அலுவலர்களும் சரி தங்கள் பதவியையும், சுகத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே உன்னதக் குறிக்கோளாடு பணியாற்றுவதுதான் வேதனைக்குரியது.

கடந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கொத்து கொத்தாக பத்திரிகையாளர்கள் வேலை இழந்தார்கள் என்பதையும் கூட இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்துகொள்ளவில்லை.

பத்திரிகை, ஊடகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலோர் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். நிரந்தரப் பணியாளர்கள் என்ற பெயரில் ஒரு சிலரை மட்டுமே இவை பணியில் அமர்த்திக் கொள்கின்றன.

குரல்வளை நசுக்கப்படுகிறது

போதாக்குறைக்கு பத்திரிகையாளர் ஓய்வூதியம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் எல்லாமே நிரந்தர ஊழியர்களுக்கு சாதகமாகவே இருப்பதை ஆட்சியாளர்களே அறிந்த ஒன்று. ஏனெனில் அவர்களிலும் பலர் பத்திரிகை, ஊடகங்கள் நடத்துவதால் இது தெரியாத விஷயமும் அல்ல.

தொழிலாளர் சங்கங்கங்கள் நீண்ட போராட்டம் நடத்திய பிறகே ஒருசிலவற்றில் வெற்றி காண முடிந்துள்ளது. எங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் பலமாக இல்லையோ அங்கெல்லாம் தொழிலாளர்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் திமுக அரசு, தொழிலாளர்கள் நலனுக்கு எதிராக ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்து அதற்கு நியாயம் கற்பிப்பது முட்டாள்தனமானதாகவே தோன்றுகிறது.

கூரை ஏறி கோழிப்பிடிக்க தெரியாதவர்கள்


தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்யும் தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால் வேலை நாட்கள் குறையும் என்றும், தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் எனவும் அமைச்சர்கள் கூறுவது, ” கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு” சொன்ன கதையாக இருக்கிறது.

வேதனைச் சிரிப்பு கேட்கவில்லையா?

1948 ஆண்டு சட்டப் பிரிவுகள் 51, 52, 54, 56, 59 பிரிவுகளில் சிலவற்றில் இருந்தோ அல்லது அனைத்திலும் இருந்தோ விலக்கு அளிக்க இந்த வேலை நேரம் சட்டத் திருத்தம் வழி செய்கிறது. பிரிவு 51 தொழிலாளர்களின் வேலை நேரத்தை வரையறுக்கிறது.

எந்த ஒரு பணியாளரும் எந்த ஒரு வாரத்திலும் 48 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. பிரிவு 52 வார விடுமுறையை வரையறுக்கிறது. அதாவது ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதை இது வலியுறுத்துகிறது.
இந்த நெகிழ்வுத் தன்மை மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.

உழைப்புச் சுரண்டல்

மின்னணுவியல் துறை, தோல் பொருள்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்பு தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வேலைபார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதைக் கேட்டால் வேதனையோடு தொழிலாளர்கள் கேலிச் சிரிப்பைத்தான் உதிர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே இதுபோன்ற நிறுவனங்களில் 12 மணி நேர வேலையில்தான் தொழிலாளர்கள் இருக்க்கிறார்கள்.

அரசு அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்கள் ஆய்வுக்கு போகும்போது அங்குள்ள தொழிலாளர்கள் வேண்டுமானால் 8 மணி நேர வேலை பார்ப்பதாக சொல்லலாம். உண்மையில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

எங்கெல்லாம் தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கிறதோ அங்கேதான் உழைப்புச் சுரண்டல் சற்று குறைந்துள்ளது என்பது கூட இன்றைய தமிழக முதல்வருக்கு தெரியாதது வேதனை அளிக்கிறது.

சட்டப் பிரிவுகள் என்ன சொல்கின்றன?

54-ஆவது பிரிவு எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்கிறது.
56-ஆவது பிரிவு இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும் கூட ஒரு நாளில் பத்தரை மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்கக் கூடாது என்கிறது.
59-ஆவது பிரிவு ஒரு தொழிலாளர் ஒரு நாளில் 9 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இரட்டிப்பு ஊதியம் தர வேண்டும் என்கிறது.
இந்த 5 பிரிவுகளுமே தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த பிரிவுகளாகும். இந்த விதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விளக்கு அளிக்கவே புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

திமுக அரசுக்கு சரிவை ஏற்படுத்தும் சட்டம்:

இந்த சட்ட மசோதாவை முதல்வர் கொண்டு வந்து நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கும், அவரது நிர்வாகத்துக்கும் கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா? என அரசன் கேட்க… ஆமாம் அரசரே மாதம் மும்மாரி பொழிகிறது! என அமைச்சர்கள் சொல்வதை நம்பிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த முகத்தோடு மே தின வாழ்த்துக்களை தொழிலாளர்களுக்கு சொல்லப் போகிறாரோ? தெரியவில்லை.

ஆன்லைன் சூதாட்டம் தடை: தமிழக ஆளுநர் ஒப்புதல்

சென்னை: ஒருவழியாக தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவுக்கு ((online gambling ban) ஒப்புதல் அளித்துவிட்டார்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு தடையாக உள்ள சில விஷயங்களுக்காக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார்.

ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200 தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்துக்கள் அவருக்கு எதிராக திசை மாறியது.
இதை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டது. சட்டப் பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா காலதாமதத்துக்கு முடிவு தேடி தந்தது.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

ஆளுநர் ஆர்.என். ரவி, குடிமைப் பணி தேர்வை சந்திக்கவுள்ள மாணவர்களிடையே சமீபத்தில் பேசினார். அப்போது மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அது அவருக்கு எதிராக அமைந்தது.

ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று அவர் பேசினார். இது அவருக்கு எதிரான அம்பாக மாறியது.

இதனால் சட்டமன்ற பேரவை விதிகள் 92/7 மற்றும் 287 ஆகியன தளர்த்தப்பட்டு, ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தலைகளை எண்ணும் வாக்கெடுப்பு நடத்தப்படடு சட்டமன்ற பேரவை விதிகள் தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

ஏற்கெனவே இத்தகைய நடைமுறையை 2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பாடு உள்ளது. சட்டசபை மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்ய வேண்டும்

ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும். இவை அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த தனித் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, ஆளுநர் ரவி மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.11.30 கோடி ஆளுநரின் சொந்த கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிதியை அரசுக்கு தெரியாமல் செலவிட்டுள்ளனர். பெட்டி செலவுக்கு இவ்வளவு நிதியா என்று கேள்வியை எழுப்பினார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி,சில மணி நேரங்களில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இது உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம்

“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புடைய அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை. அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம். அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை. அல்லது ரூ.5 லட்சம் அபராதம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

10 லட்சம் அபராதம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இல்லாவிடில், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கலாம்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தவறு செய்தால் தண்டனை உண்டு. ஓர் ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. அத்துடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு : மாநில அரசு குறைக்க முடியும்

சென்னை:  பொதுவுடமைக் கொள்கையுடன் இணைந்து செயல்படுவதாக சொல்லும் தமிழக அரசு நினைத்தால் பெட்ரோல் விலை உயர்வு நடுத்தர, பாமர மக்களை பாதிக்காமல் செய்ய முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது. பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த நிலையில், மாநில அரசு ரூ.3 விலையை குறைத்திருக்கிறது.

ஒரு நல்ல மாநில அரசு மக்களை பாதிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை காண்பது அவசியமாகிறது.

விலை நிர்ணயம் செய்வது எப்படி?

பெட்ரோல், டீசல் விலை,  கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று. 

கச்சா எண்ணெயை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை சுத்திகரிப்பு செய்து உப பொருள்களான பெட்ரோல், டீசல், தார் போன்றவற்றை பெறுகிறார்கள்.

கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு, அதை உப பொருள்களாக பிரித்தெடுக்கும் செலவு ஆகியவற்றை சேர்த்து பெட்ரோல், டீசல் அடிப்படை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மதிப்புக் கூட்டு வரி

அதைத் தொடர்ந்து கலால் வரி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. அடுத்து டீலர் கமிஷன் உள்பட மாநில அரசு சார்பில் மதிப்புக் கூட்டு வரியான வாட் விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநில அரசும் வெவ்வேறு வரி விதிப்பு முறைகளை பின்பற்றுகின்றன. தமிழகத்தில் பெட்ரோலின் அடிப்படை விலையின் மீது 13 சதவீதம் வாட் வரியும், கூடுதலாக ரூ.11.52 வரியும் வசூலிக்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் தமிழக அரசு விதித்த வரி ரூ.15.67 ஆகும். தமிழக அரசு அதன் மீதான வரி சதவீதத்தில் எந்த மாற்றமும் செய்யாத நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழக அரசின் வரியை ரூ.3 குறைத்து உத்தரவிட்டார்.

இந்த விலைக்குறைப்பினால் தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு ரூ.1,050 கோடி ஆகும்.

தற்போது தமிழக அரசு மீது விதிக்கும் வரி லிட்டருக்கு ரூ.22.54 ஆக உள்ளது. மாநில அரசின் இந்த வரியையே இன்னும் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என ஒன்றிய அரசு மாநிலங்களின் மீது பழிபோட்டு வருகிறது.

ஒரு லிட்டரில் எவ்வளவு வரி யாருக்கு?

உதாரணமாக, ரூ.110-க்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் அடிப்படை விலை – ரூ. 54, மத்திய அரசின் வரி- ரூ.28, மாநில அரசின் வரி- ரூ.23, டீலர் கமிஷன்- ரூ. 5, ஆக மொத்தம் பெட்ரோல் 1 லிட்டர் 110 ரூபாய்.

வருவாய் யாருக்கு அதிகரிப்பு

வரி விதிப்பு அடிப்படையில் பார்த்தால், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி 9 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட 78 சதவீதத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. ஆனால் 12 சதவீதமாக இருந்த செஸ் வரி 32.9 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டு பின்னர் 27.9 சதவீதம் என்ற அளவுக்கு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வருவாய் அடிப்படையில், ஒன்றிய அரசுக்கு 2014-ஆம் ஆண்டில் கிடைத்த வருவாயை விட 165 சதவீதம் அதிகமாக கடந்த ஆண்டு கிடைத்துள்ளது என்பதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஒன்றிய அரசுக்கு செஸ் வரி மூலம் கிடைத்த இந்த அதிக வருவாயை, மாநில அரசுகளுக்கு பிரித்தளிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் மாநிலங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை.

அதனால்தான் செஸ் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு மாநில அரசுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாங்கள் வரி விதிப்பை குறைத்துள்ளோம். ஆனால் செஸ் வரியை ஒன்றிய அரசு அதிகமாக உயர்த்தி வருவாய் ஈட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு என்ன செய்யலாம்?

இந்த சூழலில்தான், தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் கொண்டு வந்தால், அது பாமர, நடுத்தர மக்களை பாதிக்காமல் இருக்கச் செய்ய முடியும்.

இதற்கான சாத்தியம் உள்ளதா என்றால் இன்றைய கணினி தொழில்நுட்பத்தில் சாத்தியமில்லாததது எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பங்குகளில் ஒரு லிட்டர், 2 லிட்டர் வரைதான் சராசரியாக ஏழைகள் பெட்ரோல் போடுகின்றனர்.

இப்படி செய்யலாமே?

இன்றைய சூழலில் கார்களில் செல்வோர் தங்களுடைய வாகனங்களுக்கு சராசரியாக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வரை பெட்ரோல், டீசல் மற்றும் பராமரிப்புக்கு செலவிடக் கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பர். அவர்களை நடுத்தர வர்க்கத்தினராக கருத்தில்கொள்ள முடியாது.

நடுத்தர வர்க்கத்தினர் பலரும் இன்றைக்கு தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு வாடகைக் கார்களையே பயன்படுத்துகின்றனர்.

ஆடம்பரத்துக்காக கார்களை வைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் பலரும், அத்திப்பூத்ததுபோல் தங்கள் கார்களைப் பயன்படுத்தும்போதுதான் 2 லிட்டருக்கு மேல் பெட்ரோலோ, டீசலோ போடுவது வாடிக்கையாக உள்ளது.

நித்தம் கார்களை பயன்படுத்துவோரை இன்றைய பொருளாதார சூழலில் நடுத்தர வர்க்கத்தினராக சமூக அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் மட்டுமே தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவோருக்கு மாநில அரசு, மாநில அரசின் வாட் வரியை மிகவும் குறைத்து ஸ்டேண்ட்ட் ரேட் எனப்படும் நிரந்தரமான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கலாம்.

நடுத்தர மக்களுக்காக

2 லிட்டருக்கு மேல் பங்குகளில் போடுவோருக்கு அதிகபட்ச வாட் வரியை மின்வாரியம் போன்று பல அடுக்குகளாக அதிக எண்ணிக்கையிலான லிட்டருக்கு ஏற்ப விலை உயர்த்தி நிர்ணயிக்கலாம்.

இதனால் மாநில அரசு வருவாய் இழப்பை தவிர்க்க முடிவதோடு, ஏழைகள், நடுத்தர மக்களுக்கு அவற்றின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

பங்குகளில் இன்றைக்கு காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய சூழலில், ஒருவரே பலமுறை பங்குகளில் காத்திருந்து இரண்டு, இரண்டு லிட்டராக போடும் சூழல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

இத்தகைய செயல்பாட்டில் சிலர் ஈடுபடலாம். அதேபோல் பெட்ரோல் வங்கிகளிலும் முறைகேடுகள் செய்ய முடியும் என்று வாதிடுவோர் நம்மிடையே இருக்கக் கூடும். அந்த சந்தேக நிலையையும் தொழிலநுட்பம் மூலம் தவிர்க்க முடியும்.

இன்றைய பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கால்குலேட்டர், அளவு காட்டும் கருவிகளில் ஒருசில மாற்றங்களை இன்றைய தொழில்நுட்ப வல்லுநர்களால் எளிதாக ஏற்படுத்த முடியும்.

குறிப்பாக, பெட்ரோல் பங்குகளில், வாகனத்துக்கு பெட்ரோல் போடும்முன்பு கார், டூ வீலர், சரக்கு வாகனம் என கூடுதல் பட்டன்களை அழுத்தும் ஒரு மாறுதலை செய்ய வேண்டும்.

தொழில்நுட்பம் இருக்கு

ஒரே வாகனத்துக்கு இரண்டு இரண்டு லிட்டராக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் நிரப்பும் வாய்ப்பை தவிர்ப்பதற்காக வாகன ஸ்கேனிங் முறையும் பயன்படுத்த முடியும்.

இதையும் மீறி தவறி பெட்ரோல் நிலையங்களில் தவறுகள் நடைபெறாமல் தவிர்க்க, 2 லிட்டருக்கு மேல் பெட்ரோலோ, டீசலோ போடும்போது அதற்கான கூடுதல் கமிஷனை டீலருக்கு நிர்ணயிக்கலாம்.

இதுதவிர விஞ்ஞானரீதியான முறைகேடுகள் எப்படியெல்லாம் நடைபெறும் என்பதை ஆராய, முன்கூட்டியே ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்கலாம்.

அதில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பெட்ரோல் நிலைய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை இடம்பெறச் செய்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று, பாதுகாப்பு முறைகளை பலப்படுத்தலாம்.

ஆற்றல்மிக்க அதிகாரிகள்

இன்றைய அரசு அதிகாரிகள், அரசு ஒரு அடி பாய்ந்தால், அதிகாரிகள் 8 அடி பாயக்கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பது ஆறுதலான விஷயம்.

அதனால் அவர்கள் முயன்றால் இத்திட்டத்தை சிறப்பாக வெற்றியடையச் செய்ய முடியும்.

அத்துடன், டீசல் பயன்படுத்தும் சரக்கு வாகனங்களுக்கும், பயணப் பேருந்துகளுக்கும் ஒரு விலையை நிர்ணயிக்க முடியும் என்று தொழில்நுட்ப ரீதியான சிந்தனையைக் கொண்டோர் கூறுகின்றனர்.

இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் ஏழைகள் பயன்பெறுவதோடு, இழப்பை தவிர்க்க வசதி படைத்தவர்களிடம் கூடுதல் வரியை விதித்து பெறவும் முடியும்.

மார்த்தட்டிக் கொள்ளலாம்

இது ஏழைகளின் அரசு என தமிழக அரசு மார்தட்டிக் கொள்ள முடிவதோடு, அதை எதிர்காலத்தில், ஏழைகள் அரசாக தன்னை ஏற்கெனவே பிரகடனப்படுத்திக்கொண்டு வரும் ஒன்றிய அரசும், இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய வாய்ப்பும் ஏற்படும்.

மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா, பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து, செய்வீர்களா? செய்வீர்களா? என்று உரத்த குரல் எழுப்புவதுண்டு. அதேபோன்றதொரு குரல், இன்றைக்கு மாநில அரசை நோக்கி மக்களால் எழுப்பப்படுவதை இந்த அரசு உணர வேண்டும்.

திமுக வாக்குறுதிகள் 202 நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் தேர்தல் நேர திமுக வாக்குறுதிகள் 202 நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க. ஸ்டாலின் வெளியிட்ட விடியோ

முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பது:

மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால்தான் நான் முதல்வர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன்.

நீங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்கும் நான் இன்று கோட்டையில் உட்கார அடித்தளமாக அமைந்துள்ளது. நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டோம். அப்போது, கருணாநிதி பாணியில் சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்றேன்.

ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 மாதங்கள் கடந்துள்ளன. இந்த 4 மாதங்களில் திமுக வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை செய்துள்ளோம்.

தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகளை அளித்தோம். மே 7-இல் பதவியேற்ற சில மணி நேரங்களில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

ஆவின் விலை குறைக்கப்படும்

2 கோடியே 9 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீட திட்டத்தில் அரசு ஏற்பு ஆகிய 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. உழவர்கள் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க, முதன்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கப்படுகிறது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

பத்திரிக்கையாளர்கள், 8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு எதிராக போடப்பட்ட 5,570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

சட்டப் பேரவையில் தீர்மானம்

3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது என 4 மாத சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.

கண்ணால் காண்பதும் பொய் – நேரடி அனுபவம்

எம்ஜிஆர், கருணாநிதி எப்படி சாதிக்க முடிந்தது?

தமிழ்நாடு சட்டப் பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் 2021

ஆர். ராமலிங்கம்

சென்னை: கடந்த 2021 ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 13 வரை நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை (Tn assembly) முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் பல சுவாரஸ்மான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது.

இக்கூட்டத் தொடர் திமுகவின் தேர்தல் நேர வாக்குறுதிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளைத் தாங்கியதாக அமைந்தது எனலாம்.

தமிழ்நாடு சட்டப் பேரவை முதல் கூட்டம்

முத்தாய்ப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டுவரப்பட்டபோது, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்த அதிமுக பெயரளவில் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியது.

திமுக தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கான விலக்கை சட்டரீதியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அதன் படிப்படியான நகர்வு வெளிப்படுத்துகிறது.

நீட் தேர்வு விலக்கு சட்டப் போராட்டத்தில் திமுக ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமைந்துவிடும்.

அந்த பயம் அதிமுகவிடம் இருப்பது தமிழ்நாடு சட்டப் பேரவை நிகழ்வுகளிலும், வெளியில் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் நன்றாகவே வெளிப்பட்டது.

அதிமுக உள்ளூர நினைப்பது திமுக நீட் தேர்வு விவகாரத்தில் எவ்வகையிலும் சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.

ஆனாலும் மக்கள் பெரும்பாலோரின் விருப்பத்துக்கு எதிராக நடந்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதால் அதிமுக பெயரளவில் மசோதாவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது எனலாம்.

சோதனைக் காலம்

சட்டப் பேரவை கூட்டத் தொடங்கியது முதலே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சோதனைகாலம் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது.

வெள்ளை அறிக்கை தொடங்கி, கொடநாடு கொலை விவகாரம் வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பதற்றமான செயல்பாடுகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ரசித்து வருவது அவரது முகக் கவசத்தையும் தாண்டி  வெளிப்படையாகத் தெரிந்தது.

எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கில் பதற்றமாக இருப்பது கட்சிக்காரர்களுக்கே அவர் மீதான ஒரு மரியாதையை கொஞ்சம் குறைக்கத்தான் செய்தது.

எதற்கும் அஞ்சாத சிங்கமாய் திகழ்ந்த ஜெயலலிதா இருந்த இடத்தை பிடித்துவிட்டதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது தற்போதைய பேச்சுகள், பேட்டிகள், குறைந்தபட்சம் 100 நாள்களாக ஒரு புதிய அரசுக்கு காலஅவகாசம் கொடுத்து விமர்சிக்க வேண்டும். அந்த அரசியல் நாகரிகத்தை அவர் புறம்தள்ளியதற்கு காரணம் கொடநாடு விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றமே என்கிறார்கள் அதிமுகவினர்.

திமுகவின் செயல்பாடு

திமுகவின் தற்போதைய செயல்பாடுகள், ஏற்கெனவே திமுகவை விமர்சித்து வந்த நடுநிலை சிந்தனையாளர்களிடையே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொண்ட பதற்றத்தை, ஓ. பன்னீர்செல்வத்தை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது.

அவரது நிதானமான பேச்சு, திமுக கொண்டு வந்த ஒருசில நல்ல முயற்சிகளுக்கு பாராட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலம் பார்க்க முடிந்தது.

கூட்டத் தொடங்கியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான பதில்கள் வரை அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதங்கள் ஆரோக்கியமான சட்டப் பேரவை நகர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்ப தன் மீதான புகழுரையைக் குறைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் அதை ஒருசில சட்டப் பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் கண்டுகொள்ளாமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.

உதயநிதிக்கு முக்கியத்துவம்

சட்டப் பேரவையில் புதிய உறுப்பினராக வந்துள்ள முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட, கொடுக்கப்படும் முக்கியத்துவம், புகழுரைகள் திருவாளர் பொதுஜனங்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கருணாநிதி நினைவிடம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது,  பாஜக, பாமக ஆகியன வரவேற்றன. 

ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், ஒருபடி மேலே போய், “என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் பராசக்தி பட வசனப்புத்தகம் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரததில் நாங்கள் எடுத்துப் பார்த்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்று ஒரு போடு போட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, இப்படி அவர் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாகும்.

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின்

YOU MAY ALSO LIKE THIS VIDEO

நல்லோர் திருக்குறள் – கதையும் விளக்கமும்