Site icon Mithiran News

தமிழக அரசு நடத்திய கண் துடைப்பு நாடகம்

கண் துடைப்பு நாடகம் ஏன்


சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவை அடுத்து சட்டப் பேரவையில் கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையில் தமிழக அரசு நடத்திய கண் துடைப்பு நாடகமாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.

சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளில் இந்த தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 சட்ட மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களால் ஒன்றும் கள்ளச் சாராய சந்தை ஒன்றும் மறைந்துவிடாது என்பதுதான் மக்களின் கருத்தாக இருக்கிறது.

கள்ளச் சாராயம் காய்வது குற்றம். ஆனால் அதற்கு அதிகப்பட்ச தண்டனையை அரசு தன்னுடைய திருத்த மசோதாவில் கொண்டு வந்திருக்க வேண்டும்.
கள்ளச் சாராய சாவுக்கு அதிகப்படியான தண்டனை என்பதுதான் இப்போதைய அரசின் சட்டத் திருத்தம் சொல்கிறது. இது கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் இனி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

அதை விஷச் சாராயமாக மாற்றி விடக் கூடாது என்று மட்டுமே எச்சரிக்கை தரும் சட்டமாகவே மாறியிருக்கிறது.

தமிழக அரசு புதிய மசோதா என்ன சொல்கிறது?

கள்ளச்சாராயம் அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.10 லட்சத்துக்கும் குறைவில்லாத அபராதத் தொகை விதிக்கப்படும்.
இதற்கு முன்பு இச்சட்டத்தில் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
புதிய மசோதா, மரணம் ஏற்படாத பிற நிகழ்வுகளில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதாகும்.
இதற்கு முன்பு சட்டத்தில், 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மதுவிலக்கு சட்டத்தை ஏய்ப்பவர்களுக்கு

அதேபோல், இப்போது சாராயமாக மாற்ற முயற்சிப்பது, மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்ற வகையில் சாராயத்தை மாற்ற அல்லது மாற்ற முயற்சிப்பதற்கு தண்டனையாக 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இத்தகைய குற்றத்தை செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
மதுவிலக்கு சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஏய்க்கவோ, செல்லாதபடி செய்வதற்கு உடன்படுவோருக்கு ஓராண்டுக்கு குறையாத மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரத்துக்கு குறையாமல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத் திருத்தத்தால் ஒன்றும் மாறிவிடாது

தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் கள்ளச் சாராய பேர்வழிகளை பயமுறுத்துமா என்றால் நிச்சயமாக பயமுறுத்தாது.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து அவர்கள் எப்போதும் போல சுதந்திரமாக பவனி வருவார்கள்.

விஷச் சாராய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் அவ்வளவுதான்.

இது தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி விவாகரத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளவே பயன்படும். நடைமுறையில் இந்த சட்டத்தால் எந்த பயனும் இருக்க வாய்ப்பில்லை.

டாஸ்மாக் கடைகள் தரும் பாதிப்புகள்

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் அதிகரிப்பார்கள். இதனால் விஷச்சாராய சாவுகளும் தொடரும் என்று வாதிடுவோர் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உண்மையில் தமிழக அரசு மதுப்பானக் கடைகளை மூடினால்தான், கள்ளச் சாராயத்தை முழுமையான அளவில் காவல்துறையால் ஒடுக்க முடியும். இதை ஏனோ அரசு உணர மறுக்கிறது.

பழியை தொடர்ந்து சுமக்கும் கருணாநிதி

தமிழ்நாட்டில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப் பழக்கத்துக்கு ஆளாகியிருப்பதற்கு யார் காரணம் என்று யாரிடமாவது கேட்டால் முதலில் வருவது மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் பெயர்தான்.
முதல்வராக இருந்த மு. கருணாநிதி தமிழகத்தில் ஏராளமான மக்களுக்கு பயன்படும் பல புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தியவர். இதை மறுப்பதற்கில்லை.
ஆனால் ஆயிரம் நன்மைகளை அவர் செய்திருந்தாலும், சமுதாயத்தை பாழ்படுத்தும் மதுவிலக்கை விலக்கிக் கொண்ட ஒரு விஷயம் எல்லா நலத்திட்டங்களையும் மறைத்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இதை இன்றைய ஆளும் திமுக அரசு உணர வேண்டும். குறிப்பாக மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் பெயரை அடிக்கடி பொதுவெளியில் உச்சரிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உணரத் தொடங்க வேண்டும்.

விதண்டாவாதம்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் மட்டும் கள்ளச் சாராயம் ஒழிந்து விடுமா? மது அருந்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்து விட முடியுமா?

அண்டை மாநிலங்களில் குறிப்பாக புதுச்சேரிக்கு சென்று மது அருந்த மாட்டார்களா? என்ற கேள்விகளை பலர் மதுக்கடைக்கு ஆதரவாக எழுப்புவதற்கு காரணம் அவர்களின் சுயநலம்தான்.

அரசு தப்புக் கணக்கு

தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கக் கூடிய ரூ.50 ஆயிரம் கோடியை இழப்பதற்கு தமிழக அரசு தயங்குகிறது. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறது.
இதனால்தான் கண்துடைப்பாக ஆண்டுக்கு 500 மதுபானக் கடைகள் மூடப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது முந்தைய அதிமுக ஆட்சியிலும் காட்டப்பட்ட கண்துடைப்பு கணக்குதான்.

வருவாய் அதிகரிப்பு

ஆனால் மறுபக்கம் மனமகிழ் மன்றங்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின்போது மதுபானம் பரிமாறலாம், தானியங்கி மதுபான விற்பனை இயந்திர வசதி போன்றவற்றின் மூலம் வருவாயை பெருக்குவதற்கே அரசு சிந்திக்கிறது.
ஆண்டுக்கு 500 கடைகள் என சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைக்கப்படுவதாக கணக்குக் காட்டப்பட்டாலும், டாஸ்மாக் மதுபான விற்பனையால் தமிழக அரசு பெறும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடப்பாண்டில் மதுபானங்கள் மூலம் 50 ஆயிரம் கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு செய்தாலும், மதுவால் ஏராளமான குடும்பங்கள் வறுமை நிலையில் இருந்து மீள முடியவில்லை.

பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து அரசின் உதவியை நாடி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆய்வில் தகவல்

போதாக்குறைக்கு தமிழகத்தில் ஆண்டுதோறும் விதவை பெண்களின் எண்ணிக்கை இந்த மதுவால் அதிகரித்து வருவதும் ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தில் சமீபத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு நடத்தி சில புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சென்செஸ் அடிப்படையில், தமிழகத்தில் விதவைப் பெண்களின் எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது.

அதிர்ச்சித் தகவல்

இது தமிழகத்தில் உள்ள மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 10.7 சதவீதமாக இருக்கிறது. அத்துடன் தேசிய சராசரி விதவையர் சதவீதத்தைக் காட்டிலும், தமிழகத்தில் 3.4 சதவீதம் பெண்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தலா ஒரு மாவட்டத்துக்கு 30 விதவைப் பெண்கள் வீதம் அண்மையில் சந்தித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தங்கள் கணவரின் இறப்புக்கு மது, கஞ்சா, போதைப் பொருள்கள், விபத்து, தற்கொலை, கொரோனா தொற்று ஆகிய 9 காரணங்களில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் கணவர் குடிப் பழக்கம் காரணமாக இறந்துவிட்டதாக கூறியதுதான் அதிர்ச்சியான தகவல்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் வயது வந்தோரில் 31 சதவீதத்தினர் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இதன் சதவீதம் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.
அதேபோல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவப் பருவத்திலேயே இளம் வயதினரிடையே மது பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதற்கு காரணம் இந்த டாஸ்மாக் கடைகள்தான்.

இப்படி ஒரு அரசாங்கம் இன்றைக்கும் நிர்வாகத்தை நடத்துவதற்கான வருவாயை மதுபான விற்பனை மூலம் பெறுவது ஒரு தலைகுனிவைத் தரும் விஷயம்.

மதுவிலக்கை எப்படி அமல்படுத்தலாம்?

உண்மையாகவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் தற்போதைய அரசுக்கு இருக்குமானால் மாற்று வழிகள் நிச்சயமாக கிடைக்கும்.

உடனடியாக மாற்று வகையில் தமிழகத்தின் நிலைமையை உயர்த்துவதற்கான வேறு நடைமுறைகளை பின்பற்ற யோசிக்க வேண்டும்.
இதை தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டியதில்லை. ஓராண்டுகாலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்

முதலில் கடைகளில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை இல்லை. ஆனால் பொது இடத்தில் குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் புகைப் பிடிக்கும் மெல்ல குறைந்து வருவது ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
இதே நடைமுறையை மதுபான விஷயத்திலும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கலாம். இதற்கு ஓராண்டு காலத்துக்கு மட்டும் மதுபான விற்பனை செய்வது என முடிவு செயயலாம். இந்த ஓராண்டு காலத்தில் பார்களிலோ, பொது இடங்களிலோ, தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களிலோ மதுபானங்களை குடிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
இதை இப்போதைய பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

கடுமையான நடவடிக்கை தேவை

அரசின் உத்தரவை மீறுவோரையும், அப்படி உத்தரவு மீறப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அத்துடன் கள்ளச் சாராய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதையும், கண்காணிப்பதையும் இதே அளவுக்கு தீவிரப்படுத்த வேண்டும். ஓராண்டு இறுதியில் மதுவிலக்கை அமல்படுத்தலாம்.
இத்தகைய கட்டுப்பாடுகளால் மது பழக்கம் உடையவர்கள் வீட்டில் மட்டுமே அருந்தும் இக்கட்டான நிலை ஏற்படும். வீட்டில் உள்ளவர்கள் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இதனால் குடிபழக்கம் உடையவர்கள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டு வரும் வாய்ப்பு ஏற்படும்.

வருவாய்க்கு மாற்று வழி என்ன?

ஓராண்டு நிறைவில் மதுபானக் கடைகளை மூடும் முடிவுக்கு அரசு வரும் அதே நேரத்தில் மாற்று வழிகளில் மதுபானக் கடைகளால் கிடைக்கும் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எப்படி ஈடுகட்டலாம் என்பதை பலதரப்பிலும் ஆலோசிக்க வேண்டும்.
ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்பது பழமொழி. அதனால் நிச்சயமாக மாற்று வழிகளில் தமிழக நல்ல முறையில் இழப்பை சீர்செய்ய முடியும்.

அதற்கான வழிகளை அனுபவமிக்க அதிகாரிகளும், பொருளாதார வல்லுநர்களும் அரசுக்கு சொல்வதற்கு தயங்க மாட்டார்கள்.
அவர்களின் யோசனைகளில் மக்களை பாதிக்காத அதே நேரத்தில் தமிழக அரசின் வருவாய்க்கு பெரும் பின்னடைவு ஏற்படாத சில வருவாய் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர் பணி

இதை ஒரு உதாரணத்துக்காக சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் இயங்குவதாக அரசு சொல்கிறது.
டாஸ்மாக் நிர்வாகம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தற்போது டாஸ்மாக் நிறுவனத்தில் தற்போது 36 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் இருப்பது போல் நடுத்தர வருவாய் பிரிவினர் விரும்பும் சூப்பர் மார்க்கெட் திட்டத்தை அரசே ஏற்று நடத்தலாம்.
இன்றைக்கு நகர்புறங்களிலும், பெருநகரங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாகி நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினரின் மாத ஊதியத்தில் 4-இல் ஒரு பகுதியை பெறுகின்றன.
மாதம்தோறும் ஒரு குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் முதல் ஆடம்பர பொருள்கள் வரையிலான செலவுகள் நடுத்தரக் குடும்பங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை செலவிடுகிறார்கள்.

வணிக ரீதியில் நடுத்தர மக்களை கவரலாம்

நுகர்பொருள் விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம். இதனால் தரமான பொருள்கள் கிடைக்காமலும், நியாயமான விலைக்கு கிடைக்காமலும் பல நேரங்களில் நடுத்தர மக்கள் சிரமப்படுகிறார்கள்.
அவர்களின் நுகர்வு கலாச்சாரத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்வதால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். டாஸ்மாக் கடைகள் மூடுவதால் 36 ஆயிரம் ஊழியர்களுக்கும் பணியை வழங்க முடியும்.

இடைத்தரகர்கள் காணாமல் போவர்

அத்துடன் தரமான பொருள்களை மக்கள் பெரும் நிலை ஏற்படும்போது அரசின் மீது ஒரு நல்ல அபிப்ராயமும், அபிமானமும் கூட ஏற்படும்.
பெரும் தொழிலதிபர்கள் மட்டும் களத்தில் உள்ள இந்த சூப்பர் மார்க்கெட் விற்பனை சந்தையை தமிழக அரசு ஏற்று நடத்துவதில் ஒன்றும் சிரமம் இருக்காது.
தரமான பொருள்களை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் பெற முடிவதால், இடைத்தரகர்கள் அடிப்பட்டு போவார்கள். அரசு ஒரு லாப நோக்கமுடைய விலையை நிர்ணயித்து அதை மக்களுக்கு வழங்குவதும் பாராட்டுக்குரிய விஷயமாகவே பார்க்கப்படும்.

நினைத்தால் சாதிக்கலாம்

இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டுமா, இதை செய்ய முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை. காரணம் ஏற்கெனவே கைவசம் உள்ள துறைகளின் மூலம் எல்லாவற்றையும் சாத்தியமாக்க முடியும்.
இது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. இதுபோன்று ஒருசில நல்ல விஷயங்களை அரசாங்கம் வருவாய் ஈட்டுவதற்காக வணிகரீதியாக யோசிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்
மதுவிலக்கை நீக்கி தமிழகத்தை பாழ்படுத்தி விட்டார் என்ற அவப்பெயரை மறைந்த முதல்வர் மு. கருணாநிதி இனியும் சுமக்காமல் இருக்க, அவரது மகனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரும் தேர்தலுக்குள் முயற்சிக்க வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் எப்படி?

Exit mobile version