புல்வாமா தாக்குதல்: அதிர்வலை ஏற்படுத்தி முன்னாள் ஆளுநர்

82 / 100


சென்னை: புல்வாமா தாக்குதல் விஷயத்தில் உளவுத்துறை தோல்வியடைந்தது. அத்துடன் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது. இதுகுறித்து எதுவும் பேசக்கூடாது என பிரதமர் வற்புறுத்தினார். இப்படி ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் பரபரப்பான குற்றச்சாட்டை ஒரு ஊடக பேட்டியில் கூறியுள்ளார்.

2019-இல் நடந்தது என்ன?

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொலையுண்டனர்.

2019 பிப்ரவரி 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் இது நடந்தது. இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. 1989-க்கு பிறகு நடந்த மிகப் பெரிய தாக்குதலாக ஊடகங்கள் இதை விவரித்தன. இச்சம்பவத்தில் இரு தமிழக வீரர்களும் கொலையுண்டனர்.

சத்யபால் ஏற்படுத்திய அதிர்வு:


இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் தற்போதைய பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேச அந்தஸ்துக்குக் குறைக்கப்படுவதற்கு முன்பு அதன் கடைசி ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக்.

பிப்ரவரி 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின்போது உள்துறை அமைச்சகத்தின் மீது அவர் கேள்வி எழுப்பினார்.

நேர்க்காணலில் தகவல்:


இந்த நிலையில், ஒரு பரந்த நேர்காணலில், புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கான்வாய் மீதான தாக்குதலுக்கு காரணம் உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மை என்று கூறியுள்ளார்.
அப்போது ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரிடம் சிஆர்பிஎஃப் தனது ஜவான்களை ஏற்றிச் செல்ல விமானம் கேட்டபோது மறுக்கப்பட்டது.

வீரர்களை சாலை மார்க்கமாக செல்ல ஆணையிடப்பட்டது. வீரர்கள் செல்லும் பாதையின் பாதுகாப்பை திறம்பட செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமாக, இத்தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி தன்னை அழைத்தார். அப்போது, அவரிடம் இந்த குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் இதுபற்றி யாரிடமும் கூறாமல் அமைதியாக இருக்க பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். இவ்வாறு தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மீது பழியை சுமத்தி, அரசுக்கும், பாஜகவுக்கும் தேர்தல் ஆதாயம் பெறுவதே நோக்கம் என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன் என்று கூறி பெரிய அதிர்ச்சியை தந்துள்ளார்.
புல்வாமா சம்பவத்தில் வெடிமருந்துகளை ஏற்றி வந்த கார் பாகிஸ்தானில் இருந்து வந்தது. அது ஜம்மு-காஷ்மீர் சாலைகள், கிராமங்களில் 10 முதல் 15 நாள்கள் சுற்றித் திரிந்துள்ளது.

இந்த விஷயத்தில் உளவுத்துறைக்கு தோல்வி ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர், பாகிஸ்தானுக்குள் சென்ற இந்திய விமானப்படை அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்ததாக கூறியது.

இதனால் பிரதமர் மோடியின் பிம்பம் நாடு முழுவதும் பெரிதாக பரபரப்பட்டது. அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றியை பெற்றது என்பதும் முக்கியமான விஷயமாகும்.

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply