Site icon Mithiran News

நிதி ஆயோக் கூட்டத்தை புறப்பணிப்பது சரியா?

NITI aayog புறக்கணிபபு சரியா

சென்னை: மத்திய பட்ஜெட்டில் முழுமையாக ஒருசில மாநிலங்களுக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், தமிழ்நாடு முதல்வர் உள்பட ஒருசில மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

வழக்கத்துக்கு மாறான பட்ஜெட்

ஒன்றிய பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக ஆண்டுதோறும் மக்களவையில் வாசிப்பது வழக்கம்.

மாநிலங்கள்தோறும் ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பாரபட்சமின்றி பல்வேறு வகையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் மத்திய பட்ஜெட் போடப்படுகிறது.

இதனால், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களையும், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
இதனால் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு சிறப்பு திட்டத்தின் பலனையாவது பெறுவது வாடிக்கை.
ஆனால் இந்த முறை ஒரு சில மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளன.

பாஜக கூட்டணி ஆட்சி அல்லாத பிற மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாகவும், சில மாநிலங்களுக்கு முழுமையாக சிறப்பு திட்டங்கள் புறக்கணிப்பு என்ற ரீதியில்தான் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள்

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்துமே பாஜக கூட்டணிகள் ஆட்சியி்ல் இல்லாத மாநிலங்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, வழக்கமாக தமிழில் ஓரிரு வார்த்தைகளையாவது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இடம்பெறச் செய்வதுண்டு. ஆனால் இந்த முறை அந்த ஒரு வார்த்தையும் கூட இடம்பெறவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த ஆதரவை மக்கள் தரவில்லை என்ற கோபத்தை பட்ஜெட் மூலம் பாஜக வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தோல்வியில் முடிந்த பாஜக முயற்சி

போதாக்குறைக்கு காங்கிரஸ் கட்சியை அடுத்து திமுகவை மத்திய அரசு பரம எதிரியாக கருதுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் வேரூன்றும் முயற்சியில் பாஜக இறக்கி விடப்பட்டிருக்கிறது.

மற்றொரு புறம் மாநில அரசுக்கு எவ்வகையிலும் ஒத்துழைப்பு தர மாட்டேன் என அடம் பிடிக்கும் ஆளுநரின் நடவடிக்கையால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலில், பாஜக தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.
இந்த நிலையில் தமிழ்நாட்டை ஆளும் திமுகவை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழ் மக்களின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திடும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றே அரசியல் விமர்சகர்கள் குறை கூறுகிறார்கள்.
ஆனால் இதையும் ஆதரித்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களே மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவதும், தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் திமுகவுக்கு மக்கள் அளித்த வாக்குதான் என்றும் கூட பேசுவதையும் பார்க்க முடிகிறது.

வெறுப்பின் உச்சம்

மக்களவையில் பட்ஜெட் உரையை 84 நிமிடங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.

அதில் மிக கவனமாக தமிழ் இலக்கிய வரிகள் இடம் பெறாமலும், தமிழ்நாடு என்ற வார்த்தைக் கூட இடம்பெறாமலும் பார்த்துக் கொண்டால் என்பதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு எப்போது பிரதமர் வந்தாலும், பிற மத்திய அமைச்சர்கள் வந்தாலும், தமிழில் ஓரிரு வார்த்தைகளை பேசி மக்களை மயக்குவது உண்டு.

தொடக்கத்தில் வணக்கம் தமிழ்நாடு என்பார்கள். முடிக்கும்போது நன்றி என்பார்கள். இது கடந்த தேர்தல் வரை நீடித்த ஒரு போக்கு.
இப்போது தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற முடியாது என்ற நிலையை மக்கள் உணர்த்தியுள்ளதால் ஏற்பட்ட வெறுப்புணர்வு பட்ஜெட்டில் பிரதிபலித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள்.

கசந்துபோன தமிழ் மேற்கோள்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019-20-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையின்போது, புறநானூற்று பாடல் வரிகளை படித்தார்.

“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே” என்று தொடங்கும் புறநானூற்று பாடல் வரிகளை வாசித்தார். அந்த பாடல், சங்க காலப் புலவர் பிசிராந்தையார் பாடியதாகும்.
அதேபோல் 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், “பூமி திருத்தி உண்” என்ற ஆத்திச்சூடி பாடலை குறிப்பிட்டார்.
2021-22-ஆம் ஆண்டு பட்ஜெட் உரை வாசிப்பின்போது, “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப” என்ற திருக்குறள் வரிகளை படித்தார்.
இம்முறை தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் மட்டுமல்ல. தமிழ் வார்த்தைகளைக் கூட உச்சரிக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு பட்ஜெட்டை வாசித்து முடித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

மறைமுக மிரட்டல்

நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால்தான் இனி உங்களுக்கு திட்டங்களை ஒதுக்குவோம். இல்லாவிட்டால், யார் எங்களுக்கு ஓட்டு போடுகிறார்களோ, அவர்களுக்கு திட்டங்களை அறிவிப்போம் என்ற மறைமுக மிரட்டலாகவே இதை அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.
பாஜக கூட்டணி ஆட்சி யார் தயவால் நீடிக்கிறதோ அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை இந்த பட்ஜெட்டில் செய்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
இதன் மூலம் பிகார் மாநிலத்துக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் பெரும் பலன் கிடைத்திருக்கிறது.

இந்த மாநிலங்கள் ஏன் அதிக நிதி ஒதுக்கீடு செய்தீர்கள் என்று யாரும் எதிர்க்கவில்லை. எங்கள் மாநில வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை என்றுதான் புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலுவை திட்டங்கள்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழ்நாட்டுக்கு புதிய விரைவுச் சாலை திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விரைவு சாலைகளுக்கான நிதி பகிர்வும் அறிவிக்கப்படவில்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைகளில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலும் ஒன்று.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவித்திருககும் ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பதற்காக நிதி ஒதுக்கீடு, தாம்பரம்-செங்கல்பட்டு மேம்பால சாலைக்கான திட்ட ஒப்புதல் போன்றவையும் இந்த பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆக, நாட்டின் ஒட்டுமொத்த மாநிலங்களை உள்ளடக்கிய பட்ஜெட் என்ற நிலையில் இருந்து தற்போதைய பட்ஜெட் மாறியிருக்கிறது. அரசியல் நோக்கத்துடன் கூடிய பட்ஜெட்டாக மாறியிருக்கிறது.

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

இந்த நிலையில்தான், தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள்.

இவர்கள் தவிர கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

நிதி ஆயோக் புறப்பணிப்பு சரியானதுதானா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுந்திருக்கிறது.

வெண்சாமரம் வீசுவது நகைப்புக்குரியது

ஆனால் ஒருசில எதிர்க்கட்சியினர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க வேண்டும். தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தால்தான் நிதியை பெற முடியும் என்று யோசனை சொல்கிறார்களே தவிர, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்தது சரியா என்பதற்கான கேள்விக்கு பதில் சொல்ல தயாராக இல்லை.

கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தின் சார்பாக பிரதமரையும், அமைச்சர்களையும் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் எல்லாம் என்னவாயிற்று என்பதற்கான பதிலையும் கூட குறை கூறுபவர்கள் சொல்ல மாட்டார்கள்.

யார் நாட்டை ஆள்வது, அதிகாரத்தை யார் கைப்பற்றுவது, நமக்கு அதில் என்ன பலன் கிடைக்கும் என்கிற போட்டியில், நாம் வசிக்கும் மண்ணின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஒரு அரசு புறக்கணிப்பதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு ஆதரவாக பேசி, வெண்சாமரம் வீசுபவர்களின் செயல்கள் நகைப்புக்குரியதாகவே தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் அரசியல் எல்லைகளைக் கடந்து தமிழ் மண்ணில் வாழும் மக்களுக்கான நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வோடு ஒட்டுமொத்த தமிழகமும் விழித்தெழுந்து குரல் கொடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும்.

தற்போதைய நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு சரியானதுதான் என்பதே பலருடைய கருத்தாக அமைந்திருக்கிறது.

ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

Exit mobile version