நேர்மையே சிறந்த கொள்கை: திருக்குறள் கதை 11

83 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 11) கள்வருக்குத் தள்ளும் என்று தொடங்கும் திருக்குறளுக்கான விளக்க கதையாக நேர்மையே சிறந்த கொள்கை கதை இடம்பெறுகிறது.

தாத்தாவிடம் எப்போதும் கதை கேட்டு பழக்கப்பட்ட ஆனந்தன், அவரிடம் ஓடி வந்து இன்னைக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்றான்.

அவரும், அவனுடைய ஆர்வத்துக்கு தடை விதிக்காமல் நேர்மை என்ற பண்பை கடைப்பிடிப்பதால் வரும் நன்மை பற்றிய நேர்மையே சிறந்த கொள்கை கதை ஒன்றை சொல்கிறேன் கேள் என்றார்.

சிம்மசேனன் ஆட்சியில்

சிம்மபுரம் என்ற நாட்டை சிம்மசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய அமைச்சரின் பெயர் சத்திய கோடன்.

ஒரு நாள் சத்திய கோடனை ஒரு வணிகன் சந்தித்தான்.

அந்த வணிகனின் பெயர் பத்திரமித்திரன். அவன் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் பதியப்பட்ட ரத்தினச் சொப்பு ஒன்றை வைத்திருந்தான்.

அவர் கடல் வாணிபத்துக்காக செல்ல வேண்டியிருந்தது. வருவதற்கு பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என்பதால், அந்த ரத்தின சொப்பை பாதுகாப்பான இடத்தில் வைக்க விரும்பினான்.

விலை உயர்ந்த பொருள்களை அக்காலத்தில் அரசாங்க கஜானாவில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம்.

அந்த வகையில் அரசாங்க கஜாவில் தன்னுடைய ரத்தின சொப்பை ஒப்படைத்துவிட்டு கடல் வாணிபத்துக்கு புறப்படலாம் என முடிவு செய்தான்.

அமைச்சரை சந்தித்த வணிகன்

அரண்மனைக்கு சென்ற அவன், அமைச்சர் சத்திய கோடனை சந்தித்து அனைத்து விவரங்களையும் சொல்லி பத்திரமாக கஜானாவில் இருக்கட்டும்.

நான் திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றான்.

சில மாதங்கள் கழித்து நாடு திரும்பிய அவன் அரண்மனைக்கு சென்று அமைச்சரை சந்தித்தான்.

அமைச்சரோ, நீ யார்? என்று பத்திரமித்திரனை அடையாளம் தெரியாதவன் போல் கேட்டான்.

நான்தான் ரத்தின சொப்பை உங்களிடம் கொடுத்து அரசாங்க கஜானாவில் பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு கடல் கடந்து சென்று திரும்பிய வணிகன் என்றான் பத்திர மித்திரன்.

இதைக் கேட்ட அமைச்சர், நீ யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கையில், நீ எப்படி ரத்தின சொப்பை என்னிடம் தந்திருக்க முடியும். மரியாதையாக இங்கிருந்து போய் விடு.

இல்லையெனில் என் அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் தள்ள வேண்டியிருக்கும் என மிரட்டினான்.

பெரும் மதிப்புடைய ரத்தினங்களை இழந்த வருத்தத்தில் அவன் பிரம்மை பிடித்தவனாக தெருக்களில் அலையத் தொடங்கினான்.

உதவி புரிந்த அரசி

ஒரு நாள் அரசி, யார் இந்த சித்த சுவாதீனம் இல்லாதவர் என அருகில் இருப்பவர்களை அவர் விசாரித்தார்.

அப்போது, அவன் ஒரு வணிகன், ரத்தின சொப்பையை அமைச்சரிடம் கொடுத்துவிட்டு கடல் வாணிகத்துக்கு சென்றிருக்கிறார்.

திரும்பி வந்து கேட்டபோது அமைச்சர் அப்படி எதுவும் என்னிடம் தரவில்லை என்று சொல்லி மிரட்டி அனுப்பியது முதல் இப்படி சித்தசுவாதீனம் இன்றி தெருக்களில் அலைகிறார் என்றார்கள் ஒருசிலர்.

பத்திர மித்திரன் நிலையை எண்ணி வருந்திய அரசி ராமதத்தை, அரசனிடம் சென்று தான் கண்ட, கேட்ட விஷயத்தை சொல்கிறாள்.

சத்திய கோடனை நாம் சோதித்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நான் சூதாட்டத்தில் வல்லவள் என்பது நீங்கள் அறிந்ததே.

அதனால் மன்னர் அனுமதியோடு சத்திய கோடனை சூதாட்டத்துக்கு அழைக்கிறேன் என்றாள் அரசி.

மன்னரும் ஒப்புக்கொண்டார். அரசி ஒரு நாள் விளையாட்டாக, அமைச்சர் சத்திய கோடனை சூதாட்டத்துக்கு அழைத்தாள்.

அரசியை தன்னை சூதாட்டத்துக்கு அழைக்கிறாள் என்ற பெருமிதத்தோடு கலந்துகொண்டான்.

சூதாட்டத்தில் சத்திய கோடன் அனைத்தையும் இழக்கிறான். இறுதியாக அவனிடம் இருந்த அமைச்சருக்கான முத்திரை மோதிரத்தை வைத்து விளையாட அழைக்கிறாள்.

அந்த ஆட்டத்திலும் அவன் தோல்வியை தழுவுகிறான். அந்த மோதிரத்தை தன்னுடைய பணிப்பெண்ணிடம் கொடுத்து இதை கருவூலத் தலைவரிடம் காட்டி, கஜானாவில் உள்ள ரத்தின சொப்பை பெற்றுவரக் கூறுகிறாள்.

கஜானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ரத்தின சொப்பை அரசனிடம் ஒப்படைத்தாள் அரசி ராமதத்தை.

கடவுள் தந்த வரம் – ஒரு நிமிட விடியோ

அரசன் அந்த ரத்தின சொப்புக்குள் தன்னுடைய விலை உயர்ந்த ரத்தினக் கற்களையும் போட்டு வணிகனை அழைத்து கொடுத்தான்.

அதை வாங்கி பார்த்த வணிகன், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சொப்பு என்னுடையதுதான். ஆனால் அதற்குள் இருக்கும் ரத்தினக் கற்கள் என்னுடையவை அல்ல என்று சொல்லி வாங்க மறுத்தான். அவனுடைய நேர்மை அரசனுக்கு வியப்பை அளித்தது.

நேர்மையே சிறந்த கொள்கை கதை கருத்து

பத்திரமித்திரனின் நேர்மையை உணர்ந்த அரசனும், அரசியும் அவனை பாராட்டினர். அமைச்சனாக இருந்த சத்தியகோடன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டான். நேர்மையே சிறந்த கொள்கை என்பதன் உதாரணமாக திகழ்ந்த பத்திர மித்திரன் கௌரவிக்கப்பட்டான். நாடு கடத்தப்பட்ட சத்தியகோடன் தன் தவறை உணர்ந்து வருந்தினான்.

சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே நேர்மையே சிறந்த கொள்கை கதையின் சுருக்கம்.

இதைத்தான் திருவள்ளுவர் இப்படி சொல்கிறார்

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

(குறள் 290)

திருட்டுத் தொழிலை செய்பவர்களுக்கு உயிர் நிற்பதற்கு இடமாகிய உடல் தண்டனையால் துன்புறும்போது, உயிரும் துன்புற்று நலிவடையும்.

ஆனால், திருட்டில் இருந்து விலகி நிற்பர்வர்க்கு தேவருலகம் தவறாது கிடைக்கும் என்கிறது வள்ளுவரின் பாடல்.

நான் சொன்ன நேர்மையே சிறந்த கொள்கை கதை எப்படியிருந்தது என்று கேட்டார் தாத்தா.

எணணித்துணிக கருமம் -திருக்குறள் கதை

83 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply