வயநாடு நிலச்சரிவு: காரணம் என்ன?

85 / 100

சென்னை: நாட்டில் நடந்த இயற்கை பேரழிவுகளில் மிக மோசமானதாக வயநாடு நிலச்சரிவு பேசப்படுகிறது இந்த நிலச்சரிவின்போது ஏராளமானவர்கள் மண்ணில் உயிரோடு புதையுண்டது கேரள மாநிலத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

நிலச்சரிவு

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக் கிராமங்களில் தொடர் மழையை அடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து பயங்கர நிலச் சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் ஏராளமானவர்கள் புதையுண்டு போனார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
மண்ணில் புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்து மத்திய படைகளுடன் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 6 நாள் மீட்புப் பணியில் இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

150-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐயும் கடக்கும் என்று அரசு நிர்வாகம் கணித்திருக்கிறது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க பல்வேறு தரப்பிலும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு இதை தேசிய பேரிடராக அறிவித்திருக்கிறது.

இயற்கையில் கேரள மாநிலம்

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி நீண்டு அமைந்திருக்கும் மாநிலம். இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதியும், புவியியல் ரீதியாக நிலச்சரிவை சந்திக்கும் அபாயமிக்க பகுதியாக உள்ளது.
கேரள மாநிலத்துக்கு அதிக மழையை தருவதும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைதான். அரபிக் கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றை நீண்டு வளர்ந்திருக்கக் கூடிய இந்த மலைத் தொடர் தடுத்து நிறுத்தி கேரள மாநிலத்துக்கு மழையை அளிக்கிறது.
உலகின் பல்லுயிர் வளம் நிறைந்த எட்டு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக இருக்கிறது.

தொடக்கமும் முடிவும்

இந்த மலைத்தொடர் மகாராஷ்டிரா, குஜராத் எல்லையில் உள்ள தபி ஆற்றுக்கு தெற்கே தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக நீண்டு வளர்ந்து கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.
மராட்டிய மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் இந்த மலைத் தொடரை சாயத்ரி மலைத் தொடர் என்று அழைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நீலகிரி மலைத் தொடர், ஆனைமலைத் தொடர் என்று அழைக்கிறார்கள். கேரளாவில் மலபார், அகத்திய மலை என்று அழைக்கிறார்கள்.

ஆறுகள் பிறக்குமிடம்

இந்த மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1,600 கி.மீட்டர், சராசரியாக இதன் உயரம் 900 மீட்டர்கள் வரை இருக்கிறது.
இந்த மலைத் தொடர் நாட்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது.
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிறுவாணி, பவானி, நொய்யல் நதிகள் இந்த மலைத் தொடரில்தான் பிறக்கின்றன.
பெரிதும், சிறிதுமான பல ஆறுகள் மலைத் தொடரில் உருவாகி மேற்கு நோக்கி பாய்ந்து கேரள மாநிலத்தை வளமாக்கி அரபிக் கடலில் கலக்கிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள்

இந்த மலைத் தொடரில் வயநாடு மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் 3 கிராமங்கள்தான் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச் சரிவால் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன.
இதே பகுதிகளில் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளிலும் நிலச் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அப்போது இத்தகைய பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இம்முறை ஏற்பட்ட நிலச்சரிவின்போது யாரும் சுதாரிக்க வாய்ப்பில்லாமல் இரவு நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது.

தொன்மையான மலைப் பகுதி

வயநாடு மலைகளில் புதிய கற்கால நாகரிகச் சான்றுகள் காணப்படும் இடமாக இருக்கின்றன. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிந்தைய கற்கால ஓவியக் கோடுகள் பாறைகளில் காணப்படுகின்றன.
அதனால் இந்த மலைப் பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாகவே பழங்குடியின மக்கள் வசித்து வந்திருப்பதும் உறுதியாகிறது.
இயற்கையில் இப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை மிருதுவானது. இதனால் மலைப் பகுதிகளில் பல இடங்களில் இறுக்கமின்றி தளர்வாகவே காட்சி தருகின்றன.
இருப்பினும் இங்கு இயற்கையில் வளரும் நீண்டு உயர்ந்து வளரும் மரங்கள் மிக ஆழமாக வேர்களை ஊன்றி அந்த தளர்வான மண்ணை இறுக்கமாக பிடித்துக் கொள்வதால் நிலச்சரிவு கடந்த தலைமுறை வரை தடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

கட்டடங்கள் அதிகரிப்பு

இந்த பகுதிகளில் காலப்போக்கில் கடந்த ஒரு தலைமுறையாக கட்டுமானங்கள், வீடுகள், கடைகள் என அதிகரித்து வந்திருக்கின்றன.
அத்துடன் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை செய்யும் நிலையில் மரங்களை அகற்றம் செய்தல், நீர்வழிப் பாதையை மாற்றி அமைத்தல் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
போதைக்குறைக்கு பல பயிர் சாகுபடி முறை கைவிடப்பட்டு, ஒற்றை பயிர் சாகுபடி முறை மலைப் பகுதிகளில் புகுத்தப்பட்டிருக்கிறது.

200-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் பதிவு

வயநாடு மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலகத்தின் பதிவுகள் தரும் தகவல் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது.
2018 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையிலான காலத்தில் மட்டும் 200 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்திருப்பவை.
மக்கள் நடமாட்டம் இல்லாத, மலை உச்சிப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் இதில் கணக்கில் கொள்ளவில்லை.

பெருத்த மழை பாதிப்பு

வயநாடு இயற்கையாகவே ஈரப்பதம் நிறைந்த குளுமையான சூழலை கொண்டது. இதனால் எப்போதுமே நிலம் ஈரப்பதமாகவே இருக்கும். இதனால் ஏற்கெனவே மிருதுவாக இருக்கக் கூடிய மண்ணும் பாறைகளுடன் இறுகியிருக்காமல் தளர்வாக காணப்படும் நிலை உண்டு.
இப்படிப்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் பெய்யக்கூடிய மழை ஒரு சில மணி நேரங்களில் பெய்யும்போது, மண்ணின் தளர்ச்சியால் மிக வேகமாக அவை மழைநீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மண்ணின் இறுக்கமோ, மரங்களின் பிடிமானமோ இல்லாத பாறைகளும் இந்த மழையில் உருண்டோடி நிலச்சரிவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலச்சரிவின் பாதிப்பு

வழக்கமாக ஏற்படும் நிலச்சரிவை காட்டிலும் இம்முறை ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு சில கிலோ மீட்டர் வரை சரிவானப் பகுதிகளை நோக்கி நீண்டிருக்கிறது. இதை DEBRIS FLOW TYPE நிலச்சரிவு என்று சொல்கிறார்கள்.
இதனால்தான் ஒருசில நிமிடங்களில் பெருவெள்ளத்துடன் ஏற்பட்ட நிலச்சரிவு ஏராளமான வீடுகளையும், கட்டடங்களையும் மூடியிருக்கிறது. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கட்டடங்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பேராசிரியர் மாதவ் காட்கில் குழு ஆய்வு

மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அப்படி கண்டறியப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிவதற்காக, மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010-ஆம் ஆண்டில் நியமித்தது.
இக்குழுவினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதையும் ஓராண்டுக்கு மேல் ஆய்வு செய்தனர்.

அறிக்கை வெளியீடு

அதைத் தொடர்ந்து அக்குழு ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த குழுவின் அறிக்கையை 2012 மே மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டது.
இது அறிக்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக டாக்டர் கத்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழ்ந்த 41 சதவீதப் பகுதிகளில் 37 சதவீதப் பகுதி இயற்கை பேரிடர்களில் பாதிக்கும் அபாயம் உடையதாக வரையறை செய்யப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பேரிடர் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புதிய குவாரிகளுக்கு தடை செய்ய வேண்டும். கட்டுமானங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
புதிய விவசாயப் பகுதிகளை விஸ்தரிக்கக் கூடாது. புதிய குடியிருப்புகளைக் கட்ட கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யக் கூடாது.
மண் அரிப்புக்கு காரணமாக இருக்கும் ஒற்றை பயிர் சாகுபடி முறையை கைவிட வேண்டும்.
காட்டு நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது, நதிகளின் போக்கை திசை திருப்புவது கூடாது. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்கு மலைத் தொடரில அனுமதிக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

கண்டுகொள்ளாத மாநிலங்கள்

பழங்குடியின மக்களை காடுகளில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மூலம் காடுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைகள் அளிக்கப்பட்டு 13 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் கேரள மாநிலமும், கர்நாடக மாநிலமும் அவற்றை ஏற்கவில்லை.

நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது ஏன்

ஒருசில பகுதிகள் மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல என்று அறிவிக்கப்படும் நிலையில், காலம் காலமாக ஒரு இடத்தில் வசித்து வரும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து போகும். இதனால் அவர்களுக்கு அரசு நிர்வாகம் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் வேறொரு இடத்தில் செய்து தர வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.
இதனால் இந்த நடைமுறையை எந்த அரசு நிர்வாகமும் செய்ய முன்வரவில்லை.
வளர்ச்சித் திட்டங்கள்
மக்கள் வசிப்பிடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசு நிர்வாகத்துக்கு இருக்கிறது. இந்த சூழலில் ஒருசில விதிமுறைகளை பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

தேவை எதிர்கால செயல் திட்டங்கள்

தற்போது நடந்திருக்கும் பேரிடரை மனதில் கொண்டு, மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஆபத்து நிறைந்த பகுதிகளில், மிக நெருக்கமாக, ஆழ்ந்து வேரூன்றக் கூடிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இதை சாயில் பயோ இன்ஜினியரிங் என்று அழைக்கிறார்கள்.
மலைப் பகுதிகளில் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அந்த நீரை உடனுக்குள் குழாய்கள் வழியாக நிலப் பகுதிக்கு வெளியேற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களில் குவாரிகள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.
ஒற்றை சாகுபடி முறையை கைவிட்டு, நிலச்சரிவு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலான பயிர் மேலாண்மையை செய்யத் தொடங்க வேண்டும்.
மலைச் சரிவால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அகலமான தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும்.
சாலை மேம்பாட்டுப் பணிகளில் மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களை தவிர்க்க வேண்டும். ஆய்வுக் குழு பரிந்துரைகளில் 70 சதவீதமாவது கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களால் நிறைவேற்றப்பட்டாலே மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

வயநாடு நிலச்சரிவுக்கான காரணம் – விடியோ செய்தி

85 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

This entry was posted in Mithiran News, இந்தியா and tagged , , , by RR. Bookmark the permalink.

About RR

ஆர்ஆர் என அழைக்கப்படும் ஆர்.ராமலிங்கம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வந்தவர். களத்தில் செய்தி சேகரிப்பாளராகவும், தலைமை நிருபராகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒருசில மாவட்டங்கள் அடங்கிய பதிப்பின் பொறுப்பாளர், ஆசிரியர் குழுவில் முதன்மை உதவி ஆசிரியர் பொறுப்புகளையும் வகித்தவர்.

Leave a ReplyCancel reply