About RR

ஆர்ஆர் என அழைக்கப்படும் ஆர்.ராமலிங்கம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வந்தவர். களத்தில் செய்தி சேகரிப்பாளராகவும், தலைமை நிருபராகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒருசில மாவட்டங்கள் அடங்கிய பதிப்பின் பொறுப்பாளர், ஆசிரியர் குழுவில் முதன்மை உதவி ஆசிரியர் பொறுப்புகளையும் வகித்தவர்.

சென்னையில் மழை: போக்குவரத்து சீர்குலைவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை

வங்கக் கடலில் நகரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 17-ஆம் தேதி காலை நேரத்தில் காற்றத்தழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது.

சென்னையில் மழை

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இரு நாள்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்ற தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்வதால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

வாகனப் போக்குவரத்து சீர்குலைவு

சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து பல இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப் பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து சீர்குலைந்திருக்கிறது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் ஏற்கெனவே குண்டும், குழியுமாக இருக்கும் சூழலில், மழை நீர் தேங்கி எங்கு பள்ளம் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடதிசை நோக்கி நகர்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்தார்.
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விரைவு ரயில்கள் ரத்து

கனமழையை அடுத்து சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி விரைவு ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று பாலக்காடு, மேட்டுப்பாளையம், கோவை ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும். பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதை அடுத்து ஜோலார்பேட்டை, ஆலப்புழா விரைவு ரயில்கள் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

களத்தில் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டிய பணிகளை துரிதப்படுத்தினார்.
பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரி கரையோரத்திலும் அவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் பெய்து வரும் மழை நிலவரம், நிவாரணப் பணிகள், பேரிடர் மீட்புக் குழுக்கள் விவரம், மழைக்கால மருத்துவ முகாம்கள், மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடந்த ஆண்டு தந்த அச்சம்

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த மழையில் சென்னை மாநகரம் மிதந்தது. இதனால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தார்கள்.
மழைநீர் வடிகால் பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. இதனால் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம். கனத்த மழை பெய்த நிலையில், செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறக்கப்பட்டதால் வெள்ளக்காடாக சென்னை காட்சி அளித்தது.

இந்த நிலையில், சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்த தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக கடந்த ஆண்டில் பெய்த மழையில் தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தன. வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் உள்ள குடியிருப்புகளின் தரைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் மூழ்கின.

இதனால் கடந்த ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் ஓரமாக கார்களை நிறுத்தி வைத்தது சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அதாவது சுமார் 6 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை கடலை சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகியவற்றின் மூலமும், பக்கிங்ஹாம் கால்வாய் மூலமாகவும்தான் கடலை சென்றடைய முடியும்.

கடந்த ஆண்டைப் போல் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், 17-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையை கடப்பதால், நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

நல்லோர் சிறுகதை திருக்குறள்

சென்னை அருகே கடற்கரை திருக்கோயில்

திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?


சென்னை: திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் பிரசாதம் லட்டு. இதை திருப்பதி லட்டு என்று எல்லோரும் பக்தியோடு அழைப்பது வழக்கம்.

அந்த லட்டை இனி பக்தர்கள் நம்பிக்கையுடன் வாங்கி சாப்பிடலாமா? என்ற கேள்வி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களிடம் எழுவது இயற்கை.

இதற்கு காரணம், திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்த தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.

தேவஸ்தானம் சொல்வதென்ன?

பக்தர்களின் சந்தேகத்திற்கான பதிலை தற்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலராக பொறுப்பேற்றிருக்கும் செயல் அலுவலர் ஜே. சியாமள ராவ் தெரிவித்திருக்கிறார்.

அவர் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது இதுதான்.

வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுதி செய்யும்.

புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

தேவஸ்தானத்துக்கு 5 ஒப்பந்ததாரர்கள் நெய் விநியோகம் செய்து வந்தனர். அவர்கள் கிலோ நெய் விலையை மிகவும் குறைத்து தருவதை பார்க்கும்போது அவை தூய நெய்யை வழங்குவதற்கான சாத்தியமானதாக தெரியவில்லை.

அதனால் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதும் நெய் மாதிரிகள் எடுக்கப்பட்டு வெளி ஆய்வகங்களுக்கு தர பரிசோதனைக்கு அனுப்பியது.

அதில் ஒரு விநியோகஸ்தர் அனுப்பிய 4 டேங்கர்கள் நெய் தரமற்றவை என்பது ஆய்வில் தெரியவந்தது.

அந்த ஆய்வின்படி, சோயா பீன்ஸ், சூரியகாந்தி, பனை கர்னல் கொழுப்பு அல்லது பன்றிக்கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது..

தரமற்ற நெய் விநியோகம் செய்த தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர தீர்வாக நவீன தர பரிசோதனை கருவிகள் விரைவில் இங்கேயே நிறுவப்படும்.

லட்டு தயாரிக்கும் மூலப் பொருள்களின் தரத்தை உறுதி செய்து, லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை காக்க தேவஸ்தானம் முழு கவனம் செலுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அவரது வாக்குறுதியின்படி, தற்போதைய நிலையில், கலப்படமற்ற தரமான நெய்யினால் தற்போது திருப்பதி லட்டு தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதனால், திருப்பதி சென்று லட்டு பிரசாதம் வாங்கும் பக்தர்கள் எந்த தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.

திருப்பதி கோயில் பிரசாத வரலாறு

13-14-ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பல்வேறு உணவு வகைகள் வழங்கி வந்திருக்கிறார்கள்.

இரண்டாம் தேவராயர் காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கான மூல உணவுப் பொருள்கள் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

அதையடுத்து அப்பம், வடை, உள்ளிட்ட பல உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எந்த போக்குவரத்து வசதியும் இல்லாத அந்த காலத்தில் பக்தர்களுக்கு இந்த உணவுதான் அவர்களை பசியாற வைத்தது.

கி.பி.1445-ஆம் ஆண்டு வாக்கில் வழங்கப்பட்டு வந்த உணவு வகைகள் விரைவில் கெட்டு விடுவதை அறிந்த கோயில் நிர்வாகம், அப்பத்துடன், கய்யம் என்ற நீண்டநேரம் கெடாத இனிப்பு வகையை வழங்கத் தொடங்கியது.

அடுத்து வடை, அதிரசம், மனோகரம் என்ற இனிப்பு போன்றவையும் பிரசாதமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பிரசாதங்களை அக்காலத்தில் திருப்பொங்கம் என்று அழைத்தார்கள்.

1715-ஆம் ஆண்டில் ஏழுமலையான் பக்தர் ஒருவர் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து பெருமாளுக்கு கொண்டந்தா என்ற 1000 பெரிய லட்டுகளை படைத்தார்.

இவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதை எல்லோரும் விரும்பி சாப்பிட்டதை கோயில் நிர்வாகம் அறிந்து, 1803-ஆம் ஆண்டு முதல் இனிப்பு பூந்தியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கத் தொடங்கியது.

அத்துடன் பிரசாதங்களை விற்பனை செய்யும் முடிவும் எடுக்கப்பட்டு ஸ்ரீவாரி பிரசாத விற்பனைக் கூடம் திருமலையில் தொடங்கப்பட்டது.

1932-இல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் என்ற பெயரில் ஒரு தனி நிர்வாகம் நிறுவப்பட்டு, அதன் பராமரிப்பில் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது.

சுவையான திருப்பதி லட்டு பிரசாதம்

காஞ்சிபுரம் பூதேரி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணம் அய்யங்கார் ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டி தன் குடும்பத்துடன் திருமலைக்கு சென்றார்.

அவர் அங்கேயே தங்கி, பெருமாளுக்குத் தேவையான அன்றாட பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

1940-இல் அவர் தயாரித்த சிறிய லட்டு பிரசாதம் தேவஸ்தானம் கல்யாண உற்சவத்தின்போது, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அந்த லட்டின் அலாதி சுவை பக்தர்களை ஈர்த்தது.

இதையடுத்து 1943-ஆம் ஆண்டு முதல் சனிக்கிழமைதோறும் ஏழுமலையான் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு சிறிய அளவிலான லட்டு பிரசாதமாக வழங்குவது வழக்கமானது.

லட்டு தயாரிப்பு திட்டமும், குழுவும்

கல்யாண அய்யங்கார் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழு லட்டு தயாரிப்புக்காக அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பெயர் மிராசி.

பக்தர்களுக்கு நாள்தோறும் பெருமளவில் லட்டு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இந்த லட்டு தயாரிப்புக்கு விகிதாச்சார அடிப்படையில் பொருள்களை சேர்க்கும் திட்டத்தை கல்யாணம் அய்யங்கார் உருவாக்கினார்.

விகிதாசாரப்படி லட்டு மூலப்பொருள்கள்

இந்த லட்டுவை தயாரிக்க 51 பொருள்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 5100 லட்டுகள் பிடிப்பதற்கு படி என்ற முறையை கொண்டு வந்தார்கள்.

அதன்படி, 185 கிலோ பசும் நெய், 200 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரிப் பருப்பு, 17.5 கிலோ உலர்ந்த திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் என இந்த விகிதாசாரம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மூலப் பொருள்களின் எடை 852.50 கிலோ. இதையே படி என்கிறார்கள்

லட்டு தயாரிப்பு கூடம்

இந்த லட்டு பிரசாதம் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னை வகுளா தேவியின் நேரடி பார்வையில் பொட்டு என அழைக்கப்படும் மடப்பள்ளி அறையில் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டார்கள்.

இங்கு தன் மகனுக்கு தயாரிக்கப்படும் பிரசாதங்களை தாயார் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம்.

நாளடைவில் லட்டு விற்பனை லட்சக்கணக்கை எட்டியதால், ஆலயத்தின் உள்ளே மட்டுமின்றி வெளியிலும் லட்டு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1995-ஆம் ஆண்டு இறுதி வரையிலும் லட்டு தயாரிப்பு மிராசிகள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1996-ஆம் ஆண்டில் இந்த நடைமுறை மாற்றப்பட்டது. திருப்பதி தேவஸ்தானமே லட்டு தயாரிப்புப் பணியை மேற்கொள்ளத் தொடங்கியது.

இப்போது லட்டு தயாரிப்பு கூடம் ஒரு நாளைக்கு 8 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. 200 சமையலர்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை பொட்டு கார்மீகலு என்று அழைக்கிறார்கள்.

பிரசாதமாக 3 வகை லட்டுகள் தயாரிப்பு

இப்போது திருமலையில் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்த லட்டு என 3 விதமாக லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது பக்தர்களுக்கு இலவசமாகவும், விற்பனை வழியாகவும் வழங்கப்படுவதுதான் புரோக்தம் லட்டு அல்லது புரோகிதம் லட்டு என்கிறார்கள். இதன் எடை 175 கிராம்.

ஆஸ்தான லட்டு முக்கிய விழாக் காலங்களில் மட்டும் தயாரிக்கப்படும். இது முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த லட்டின் எடை 750 கிராம். இதில் அதிகமாக முந்திரி, பாதாம், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்க்கிறார்கள்.

கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக தயாரிக்கப்படுவதுதான் கல்யாண உற்சவ லட்டு. இதன் எடை 750 கிராம்.

புவிசார் குறியீடு

திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் திருப்பதி லட்டு பெயரில் வேறு யாரும் தயாரிக்க முடியாது.

கோயிலுக்கு தற்போது வழக்கமான நாள்களில் 75 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள். விசேஷ காலங்களில் இதன் எண்ணிக்கை இரு மடங்காக உயர்கிறது.

இதனால் நாள்தோறும் ஸ்ரீவாரி பிரசாத கூடத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையாகின்றன.

திருப்பதி லட்டு பிரசாதத்தை இடைத் தரகர்கள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது திருப்பதி தேவஸ்தானத்துக்கு தெரியவந்தது.

அதையடுத்து ஆதார் அட்டையை காண்பித்த பிறகே லட்டு பிரசாதத்தை பெறக் கூடிய நிபந்தனை சமீபகாலமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வில் தரமற்ற நெய்

இப்படி பாரம்பரியமான வரலாற்றைக் கொண்ட லட்டு தயாரிப்பில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரால் ஆந்திர மாநில அரசியலில் புயல் வீசுகிறது.

லட்டு தயாரிப்பு பொருள்கள் அனைத்தும் ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுகின்றன. இது தேவஸ்தானத்துக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள்.

ந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தரமற்றது என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து கோயில் அதிகாரிகள், பொட்டு பணியாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, நந்தினி நெய் வழங்குவதற்காக கர்நாடக பால் கூட்டமைப்புடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது..

இதன்படி இவ்வாண்டில் மட்டும் அது 350 டன் நெய்யை ரூ.470 விலைக்கு கொள்முதல் செய்யவுள்ளது.

முதல்வர் பேச்சால் ஏற்பட்ட பரபரப்பு

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது சுத்தமான நெய் மூலம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் அதன் தரம் மேம்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தரமற்ற நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் சோதனை செய்ததற்கான ஆவணத்தை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்னம் வெங்கட ரமணா ரெ்டி செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.

அந்த ஆவணத்தின்படி, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணை உள்ளிட்டவை திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகள் கருத்து

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அரசியல் ஆதாயத்துக்கான முயற்சியாக திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை கேள்விக்குறியாக்கியிருப்பதாக அக்கட்சி கூறியுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, இது மிகவும் தீவிரமாக பிரச்னை. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியது.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் கோயிலை வைத்து மோசமான அரசியல் செய்வதாகவும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

திருப்பதி லட்டு தரத்தில் கவனம்

இதைத் தொடர்ந்து அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் சியாமள ராவ், புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுதி செய்யும். தரமற்ற நெய்யை விநியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

சிக்கலில் சிக்கிய தமிழ்நாட்டு நிறுவனம்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு தரமற்ற நெய் விநியோகம் செய்ததாக ஆய்வு மூலம் சுட்டிக் காட்டப்பட்டு, கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது தமிழ்நாடு, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. “கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே நாங்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை நெய் அனுப்பினோம். தற்போது நெய் அனுப்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

தேவஸ்தானத்துக்கு நெய் அனுப்பும் முன் தரக்கட்டுப்பாட்டுத் துறை மூலம் ஆய்வு செய்திருக்கிறோம்.

இந்த பிரச்னை குறித்து தேவஸ்தானத்தில் இருந்து கேள்வி எழுப்பியபோதே, எங்கள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளையும் அனுப்பியிருக்கிறோம்.
இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தரத்தை நிரூபிக்க சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

ஹேமா கமிட்டி அறிக்கையும் உயர்நீதிமன்றத்தின் கேள்வியும்

திருமலை லட்டு பிரசாதமும் அதன் வரலாறும் – விடியோ தகவல்

ஹேமா கமிட்டி அறிக்கை: அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை கேரள உயர்நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

அத்துடன் கேரள அரசின் செயலற்ற தன்மையையும் விமர்சித்திருக்கிறது.

திரைப்படத் துறை

மலையாள திரையுலகை பேசுபொருளாக ஹேமா கமிட்டி தற்போது மாற்றியிருக்கிறது. இந்த விஷயத்தை பார்ப்பதற்கு முன்பு இந்தியாவில் திரைப்படங்கள் வருகை குறித்த ஒரு சிறிய கண்ணோட்டத்தை தெரிந்துகொள்ளலாம்.

19-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் அகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியர் கண்டுபிடித்ததுதான் இன்றைக்கு நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கு முன்னோடியான நகரும் படம்.

அவர்கள் கண்டுபிடித்த நகரும் படம் அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் அதுவும் சென்னையில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் “சினிமாஸ்கோப்” என்ற பெயரில் ஆங்கிலேயரான எட்வர்டு என்பவர் மக்களுக்கு திரையிட்டு காட்டி அதிசயத்தில் ஆழ்த்தினார்.

தென்னிந்தியாவில் திரைப்படங்கள்

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அப்போதைய மவுண்ட் தெருவில் (தற்போதைய அண்ணா சாலை) வார்விக் மேஜர் என்பவர் திரையரங்கை கட்டினார்.

இந்த திரையரங்கு மின்மயமாக ஜொலித்ததை அடுத்து அந்த காலத்தில் இதை எலக்ட்ரிக் திரையங்கு என்று மக்கள் அழைத்து வந்தார்கள்.

சினிமாவை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்த பலர் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார்கள். அதைத் தொடர்ந்து சினிமாத் துறையில் முக்கிய இடத்தை சென்னை வகித்தது.

சென்னை சினிமாத் துறையில் வளர்ந்தபோது, மலையாள சினிமாவும் அதனுடன் கைக்கோர்த்து வளர்ந்து வந்தது.

மலையாளத் திரைப்படங்கள்

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் கூட மலையாளத் திரைப்பட தயாரிப்புகள் சுறுசுறுப்படையவில்லை.

அதன் பிறகே மலையாளத் திரைப்படத் துறை சுறுசுறுப்படைந்தது. எண்ணற்ற தரமான படங்களை கொடுக்கத் தொடங்கியது.

1960-களில் குறிப்பிடத்தக்க அளவில் நல்ல படங்கள் பல உருவாகின. 1965-இல் வெளியான செம்மீன் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.

1970-களில் கேரளாவில் ஃபிலிம் சொசைட்டி இயக்கம் பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டது. அதைத் தொடர்ந்து மலையாள திரைப்பட உலகம் திரைப்பட ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

அது முதல் இன்று வரை எண்ணற்ற சமூகம், காதல், சோசலிச கருத்துக்கள், நகைச் சுவை கலந்த திரைப்படங்களும், சிறந்த நாவல்களை தழுவிய திரைப்படங்களும் உருவாகத் தொடங்கின.

மலையாள திரைப்பட உலகில் கோலோச்சிய பிரபல திரை நட்சத்திரங்கள் பல மொழிகளிலும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

சிக்கலில் சிக்கிய மலையாளத் திரைப்படத் துறை

2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவரை காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு பிரபல நடிகர் ஒருவர் ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், பிரபல நடிகர்களை நிர்வாகிகளாகக் கொண்ட “அம்மா” என்று சுருக்கமாக அழைக்கப்படும் ASSOCIATION OF MALAYALAM MOVIE ARTIST – பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர் திலீப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த மலையாள நடிகைகள் பலர் அம்மா சங்கத்தில் இருந்து வெளியேறி 2017 மே மாதத்தில் மலையாள நடிகைகள், பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்ட புதிய சங்கத்தை உருவாக்கினார்கள்.

இந்த சங்கத்துக்கு WOMEN IN CINEMA COLLECTIVE என பெயரிடப்பட்டது. இச்சங்கம் பத்திரிகையாளர்களை சந்தித்து திரைத்துறை பெண்கள் பிரச்னைகளுக்காக அரசு ஒரு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து அந்த சங்கத்தினர், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, திரையுலகில் பணிச்சூழல் குறித்த ஆய்வை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

ஹேமா கமிட்டி

இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. ஹெமா தலைமையில் நடிகை டி. சாரதா மற்றும் ஓய்வு பெற்ற முதன்மை செயலர் வல்சலகுமாரி ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு திரைத் துறை பணிச்சூழல் குறித்து பல்வேறு திரைப்படத் துறையைச் சேர்ந்த நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டு தகவல்களை திரட்டியது.

நடிகர், நடிகையர் மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என இந்த கமிட்டி திரைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள பலரையும் சந்தித்து உரையாடியது.

பாலியல் அத்துமீறல் தொடர்பான பல ஆதாரங்கள், விடியோக்கள், வாட்ஸ்அப் குறுந்தகவல்கள், ஆடியோக்கள் வடிவத்தில் திரட்டப்பட்டன.

இறுதியாக, ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையை 2019-ஆம் ஆண்டு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை 290 பக்கங்களை உடையதாக இருந்திருக்கிறது. ஆனால் அதன் விவரங்கள் எதுவும் அரசால் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

இதற்கு பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உள்ளிட்ட பலர் மீது புகார்கள் இருப்பதால் அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், 5 பத்திரிகையாளர்களின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தை எடுத்தனர். இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் வெளியிடப்பட்ட அறிக்கை முழுமையானதாக இல்லை. தனிநபர்களின் உரிமை பாதிக்காமல் இருக்கும் வரையில், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக சொல்லப்பட்ட அல்லது சீண்டிய நபர்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பது தொடர்பான பக்கங்கள் நீக்கப்பட்டு மீதமுள்ள 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை மட்டுமே வெளியானது.

சங்கேத வார்த்தைகள்

அந்த அறிக்கையின்படி, adjustment அல்லது compromise என்ற வார்த்தைகள் திரைத்துறையில் நுழைந்த அல்லது இருக்கும் பெண்களிடம் திரைத் துறை தொடர்புடைய ஆண்கள் பலரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் பொருள் மறைமுகமாக, நாங்கள் அழைக்கும்போது, அதுவும் எப்போது வேண்டுமானாலும் பாலியல் உறவுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்திருப்பது அறிக்கை மூலம் தெரியவந்தது.

பணியிடத்தில் வரம்பு மீறுவது, பணியையொட்டி தங்குமிடத்தில் இருக்கும்போது வரம்பு மீறுவது, உடன் பயணத்தின்போது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது, வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்புவது, படங்கள் அனுப்புவது, தங்குமிடங்களில் அத்துமீறி நுழைவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்கள் திரைத் துறையில் நுழையும் பெண்கள் தொடர்ந்து சந்திப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

மாஃபியாக்கள் கையில் திரைத் துறை?

மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாஃபியாக்களின் கையில் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன் நடிக்க பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலை உள்ளது. கிறார்கள். நெருக்கமான, முத்தக் காட்சிகள் பலமுறை காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்த மாஃபியா கும்பலின் ஆதிக்கம் பாலியல் புகார் விசாரணை குழுக்களிலும் இருக்கும். அது உண்மையை வெளிப்படுத்துவோரை இயங்கவிடாமல் தடை செய்துவிடும்.

அவர்களை விசாரிக்க புகார் குழு அமைப்பது காரணமாக, பெண்களின் துன்பம் அதிகரிக்குமே தவிர அது தீர்வாக அமையாது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

திரைத்துறை, ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் கடடுப்பாட்டில்தான் உள்ளது. இவர்கள் அதிக செல்வத்தையும், புகழையும் பெற்றவர்களாக இருப்பவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் அறிக்கை சொல்லியிருக்கிறது.

திரைத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் ஆண்கள், சினிமா வாய்ப்பை கோரி நுழையும் பெண்களிடம், சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதும், அதற்கு அவர்கள் உடன்படாவிட்டால் திரைத்துறை வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

தீவிர மனித உரிமை மீறல்

ஹேமா கமிட்டியின் விசாரணையின்போது, பெண்கள் பலரும், படப்பிடிப்பு தளங்களில் துணி மாற்றுவதற்கு தனி அறை இல்லாமலும், கழிவறை கூட இல்லாமல் அவதிப்படுவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதை தீவிரமான மனித உரிமை மீறல் என ஹேமா கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை நடந்தவையாக இருக்கின்றன.

இந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதும் மலையாள நடிகர் சங்கத் தலைவராக தற்போது இருந்து வந்த மோகன்லால் பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் பலரும் ராஜினாமா செய்தார்கள்.

பிரபல நடிகர்கள் கருத்து

அதைத் தொடர்ந்து மோகன்லால், நிருபர்களை சந்தித்தபோது, ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு ஒட்டுமொத்த திரைத்துறையும் பதில் கூறவேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் கேரள நடிகர் சங்கமான அம்மா மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக மலையாள சினிமாவில் கோலோச்சி வரும் மம்முட்டியும் ஹேமா கமிட்டி குறித்து கருத்து தெரிவித்தார்.

ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்ற அவர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

அத்துடன் அவர் மலையாள திரைத் துறையில் அதிகாரக் குழு என்று எதுவும் இல்லை என்ற தன்னுடைய கருத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர்கள் மீது வழக்குப் பதிவு

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில், பலரும் பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அத்துடன் நடிகை ஒருவர் இயக்குநரும், நடிகருமான சித்திக் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் சில நடிகர்கள், அரசியல்வாதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தலையிட்ட கேரள உயர்நீதிமன்றம்

ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்க அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசு ஹேமா கமிட்டி அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தது.

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான வழக்குகளை கேரள உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ஏ. முகமது முஸ்டாக் தலைமையிலான புதிய சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ். சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி விசாரணை நடத்தியது.

குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு அமைத்திருக்கிறது என்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இதன்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், அரசு ஏன் மவுனம் காக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

நான்கு ஆண்டுகளாக நீங்கள் ஹேமா கமிட்டி அறிக்கையின் மீது சும்மா இருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

திரையுலகில் மட்டுமின்றி சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் அவசரம் காட்டக் கூடாது. முதல் தகவல் அறிக்கை தேவையா என்பதை அறிக்கையை ஆய்வு செய்த பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது.

பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர, ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவித்துள்ள ஊதிய சமநிலை, பணியிடத்தில் அடிப்படை வசதிகள் இன்மை போன்ற விஷயங்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவை கேட்டுக் கொண்டது.

சிறப்பு புலனாய்வுக் குழு விரிவான பிரமாணப் பத்திரத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணையில் அனைவரின் தனியுரிமையை கவனத்தில் கொள்ள வேண்டும். செய்தியாளர் சந்திப்பு எதையும் சிறப்பு புலனாய்வுக்குழு நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

.

சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரம்

அரசியலில் நடிகர் விஜய் எம்ஜிஆரா? சிவாஜியா?

மகாவிஷ்ணு விவகாரத்தின் பின்னணி என்ன?

சென்னை: பள்ளிக் கல்வித் துறை “மகாவிஷ்ணு விவகாரம்” “விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி” சர்ச்சைகளால் இப்போது சிக்கித் தவிக்கிறது.

சமீபகாலமாக பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?

அந்த அமைச்சருக்கு தெரியாமல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு என்ன காரணம்?

இதுபோன்ற சந்தேகத்தை பொதுவெளியில் மக்கள் பேசும் அளவுக்கு இன்றைய “திராவிட மாடல்” அரசு மாறியிருக்கிறது.

விநாயகரை வம்புக்கிழுத்த சுற்றறிக்கை

அண்மையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில் விநாயகர் சதுர்த்தியின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல் திருச்சி,புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்பியதாக சொல்லப்பட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது தொடர்பாக, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாம்.

ஆனால், இது மறைமுகமாக, அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக பலரும் கருத்துக் கூறி களத்தில் இறங்கினார்கள்.

இதனால் இது சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதப் பொருளாக மாறிப்போனது.

இதையடுத்து தமிழக அரசு விழித்துக் கொண்டு, விநாயகர் சதுர்த்தி தொடர்பான உறுதிமொழி ஏற்கும் சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தது.

அத்துடன் அரசுத் தரப்பில் ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டது. இது அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால் சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்து இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சித்தது.

மகாவிஷ்ணு விவகாரம்

கொழுந்து விட்டு எரிந்த விநாயகர் சதுர்த்தி பிரச்னை கொஞ்சம் தணிந்தது. ஆனால், ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பிரச்னையால் மீண்டும் சிக்கியது பள்ளிக் கல்வித் துறை.

கடந்த மாதம் 28-ஆம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மகாவிஷ்ணு என்பவர் உரையாற்றியிருக்கிறார்.

அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி ஒன்றிலும் மகாவிஷ்ணு பேச அழைக்கப்பட்டிருக்கிறார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு ஆளானது.

என்ன பேசினார்? ஏன் எதிர்ப்பு?

இந்த இரு பள்ளிகளிலும் மகாவிஷ்ணு பேசிய பேச்சு விடியோக்களாக சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு கட்டத்தில் வைரலாக பரவிய இந்த விடியோவை பகிர்ந்து, அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதித்தது யார்? என்ற கேள்வியை பலரும் எழுப்பினார்கள்.

சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளியில் அவர் பேசும்போது, மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ, புண்ணியங்களால் இப்பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது பேச்சுக்கு அதே பள்ளியைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளி கே. ஷங்கர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அப்படி கேள்வி எழுப்பிய அந்த ஆசிரியரைப் பார்த்து, “உங்களுடைய பெயர் என்ன? அரசுப் பள்ளியில் ஆன்மிகம் பேசக் கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது? உங்களுடைய முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் பெரிய அறிவு பெற்றவரா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாவ புண்ணியங்களைப் பற்றி பேசாமல் ஒருவனுக்கு எப்படி வாழ்வியலை போதிக்க முடியும். நீங்கள் (ஆசிரியர்கள்) சொல்லித் தந்தீர்களா? பாவம், புண்ணியத்தைப் பற்றி புருஷன் சொல்லிக் கொடுக்க முடியுமா? பொண்ணாட்டி சொல்லிக் கொடுக்க முடியுமா? யார் சொல்லிக் கொடுக்க முடியும்?

ஆசிரியர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என்னை அழைத்துவிட்டு உங்களுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்றால் என்னை ஏன் அழைத்தீர்கள்?. இவ்வளவு நாள் உங்களால் போதிக்க முடியாத கல்வியை போதிப்பதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றெல்லாம் மாணவர்கள் மத்தியில் அந்த ஆசிரியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அமைச்சரின் சமாதானம்

சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதுவும் வாய்த் திறக்கவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அசோக் நகர் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்ப, பல்வேறு ஊடகங்களுக்கும் காத்திருந்தன. அப்போது மாணவர் அமைப்பினர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 2, 3 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு உறுதி உறுதி அளித்து சமாதானம் செய்தார்.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா. தமிழரசி வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே. சண்முகசுந்தரமும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால், மகாவிஷ்ணுவை அரசுப் பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து பேச வைக்கும் முடிவை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக எடுத்துவிட முடியுமா? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழும்பியது.

புரியாத புதிர்!

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்றி எதையும் ஆசிரியர்கள் செய்ய முடியாது.

ஒருவேளை, மாணவர்களிடையே ஒருவர் பேசுவதற்கு தகுதியானவர் என சில நேரங்களில் பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்தால், அதற்கான முழு பொறுப்பை தலைமை ஆசிரியர்தான் ஏற்க வேண்டும்.

அந்த வகையில்தான் இந்த தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்களா? என்று தெரியவில்லை.

ஆனால், மகாவிஷ்ணு பார்வை குறைபாடுடைய ஆசிரியரிடம் குரலை உயர்த்திப் பேசும்போது, “என்னை பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியை விட நீங்கள் பெரியவரா?” என்று வெளிப்படையாக சொன்னதற்கு விடை இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஒருவேளை இது அந்த மகாவிஷ்ணுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்குமோ என்னமோ!

கைது செய்யப்பட்ட மகா

மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, சைதாப்பேட்டை, அசோக் நகர் காவல் நிலையங்களில் புகாரும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் தன்னுடைய புகார் மனுவில், மகாவிஷ்ணு மீது வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப் பிரிவு 72 (அ) படியின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா சென்றிருப்பது தெரியவந்தது. அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

யார் இந்த மகாவிஷ்ணு

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு, மாணவப் பருவத்திலேயே மேடைப் பேச்சில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த அவர் சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அதில் அவரது முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் யோகா, சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்.

மக்களிடம் விழிப்புணர்வு இருக்கு… ஆனால்…

அரசுப் பள்ளியில் சொற்பொழிவு ஆற்றுபவர்கள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய கருத்துக்களைத்தான் போதிக்க வேண்டுமே தவிர, மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

இந்த நிலையில், இப்படிப்பட்டவர்களை கண்டிப்பதும், தண்டிப்பதும் அவசியமானதுதான்.

மாணவர்களிடம் எதை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்களை பேச அழைத்தவர்கள் அதைவிட அதிக தண்டனைக்குரியவர்கள்.

திராவிட மாடல் அரசு என்று பொது மேடைகளில் பேசி கைத் தட்டு பெற்றால் மட்டும் போதாது. மக்கள் எவ்வளவு விழிப்போடு இருக்கிறார்களோ, அதைவிட அதிக விழிப்போடு ஒரு அரசு செயல்பட வேண்டும் என்பதில் தான் திராவிட மாடல் அரசின் வெற்றி் அடங்கியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மதரீதியான சொற்பொழிவு நடத்தலாமா?

இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 28-ஆவது பிரிவு – கல்வி நிறுவனங்களில் மத பிரசாரம் தொடர்பான சில வரையறைகளை வகுத்திருக்கிறது.
முழுமையாக அரசு நிதியால் பராமரிக்கப்படும் எந்த கல்வி நிறுவனத்திலும் மத போதனைகளை வழங்க முடியாது. அதனால் அரசுப் பள்ளிகளில் மதரீதியான ஆன்மிக சொற்பொழிவு, மத பிரசாரம் செய்ய முடியாது.

தனியார் பள்ளிகள் சிலவற்றில் மதரீதியான சொற்பொழிவு நடத்துகிறார்களே அது எப்படி?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 28-ஆவது பிரிவின்படி, முழுவதும் அரசு நிதியால் பராமரிக்கப்படாத தனியார் அல்லது அரசு உதவி பெறும் மதநிறுவனம் சார்ந்த கல்விக் கூடங்களில், மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே நடத்த முடியும்.
ஒருவேளை பெற்றோர், பாதுகாவலர் சம்மதம் இன்றி நடத்தப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு சட்டரீதியான பிரச்னைகள் எழலாம்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்:தமிழக ஆசிரியர்கள் நிலைப்பாடு என்ன?

ஹேமா கமிட்டி அறிக்கையால் சிக்கித் தவிக்கும் கேரள திரையுலகம்

பூண்டு பயன்கள்: உடல் நலன் சார்ந்த அரியத் தகவல்கள்

மனித வாழ்வுக்கு பூண்டு பயன்கள் எண்ணற்றவையாக அமைந்திருக்கிறது.. அதனால் நாம் அடிக்கடி உணவில் இதை சேர்த்துக் கொள்வது நல்லது.

பண்டைய காலத்திலேயே பூண்டின் மகத்துவம் அறிந்து அதை முக்கிய பயிராக பயிரிட்டு வந்திருக்கிறார்கள்.

பூண்டு உற்பத்தியில் சீனா முதலிடம்

பூண்டில் 450 வகைகள் உள்ளன. பூண்டின் மருத்துவ குணத்தை பண்டைய மக்கள் அறிந்து அதை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பூண்டு ஆசிய கண்டத்தில் தோன்றியதாக இருந்தாலும், அதனுடைய பெயர் ஆங்கிலோ-சாக்சன் பேச்சு மொழியில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

தற்போது உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றிருக்கிறது.

மருத்துவத்தில் பூண்டு பயன்கள்

மனித உடலில் அளவுக்கு அதிகமான கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றலை பூண்டு பெற்றிருக்கிறது. அத்துடன் தோல் பிரச்னைகளையும் அது நீக்கக் கூடியது.

அதேபோல் இதய நோயை எதிர்த்து போராடுவதில் பூண்டில் உள்ள சில அமிலங்கள் முக்கியத்துவம் புெற்றிருக்கின்றன.

குறைந்த கலோரிகள் ஆனால் ஊட்டச்சத்து மிகுந்தது பூண்டு.

தமிழகத்தில் பூண்டு எங்கு விளைகிறது?

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகள், நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பூண்டு விளைவிக்கப்படுகிறது.

பூண்டு செடி எவ்வளவு உயரம் வளரும்?

பூண்டு செடி பச்சை நிறத்துடன் கூடிய தண்டு, இலை வேர், கிழங்கு என்ற அமைப்பைக் கொண்டது. இது சுமார் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் வளரக் கூடியது.

பூண்டு செடியின் ஆயுள் காலம் எவ்வளவு?

பூண்டு செடிகளில் பல வகைகள் உண்டு. ஓராண்டு தாவரம், ஈராண்டு தாவரம், பல்லாண்டுகள் நீடித்து வாழும் தாவர வகைகள் உண்டு.

பூண்டை எங்கு சாகுபடி செய்யலாம்?

இது ஒரு பருவகால பயிர். கடல் மட்டத்தில் இருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயரமுள்ள இடங்களில் நிலவும் சீதோஷ்ண நிலையில் நன்கு வளரக் கூடியது.
பூண்டின் வளர்ச்சிக்கு குளிர்ச்சியான ஈரப்பதமுடைய வெப்பநிலை உதவுகிறது.

குழந்தைகள் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதால் வரும் பாதிப்பு என்ன?

உடல் நலத்தில் பூண்டு பயன்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸ் காணுங்கள்.

புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியர்களுக்கு பலன் தருமா, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலைப்பாடு என்ன?

சென்னை: யுபிஎஸ் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (unified pension scheme) என்ற தேசிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.

டிவி சோமநாதன் கமிட்டி பரிந்துரைகளை ஏற்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போதைய மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

இந்த புதிய திட்டத்தில், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு நிலையான பங்களிப்புகளை செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த நிதியில் இருந்தே ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சேவைக் காலத்தை கணக்கிட்டும் ஓய்வூதியம் மாறுபடுகிறது.

அத்துடன் கடைசி மாத ஊதியம், சராசரி ஊதியம் ஆகியனவும் கூட ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தை நிர்ணயிக்கின்றன.

என்ன கணக்கீடு?

ஒரு ஊழி்யர் மத்திய அரசுப் பணியில் 30 ஆண்டுகள் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் கடைசி மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் பெறுகிறார் எனில் அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும்.

இது தவிர அகவிலைப்படியும் கிடைக்கும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் இரண்டிலுமே அகவிலைப்படி இணைகிறது. அதனால் பணவீக்கம் அதிகரிக்கும்போது அகவிலைப்படியும் உயரும்.

இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தோருக்கு 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.

ஓய்வூதியரின் மரணத்துக்கு பிறகு அவரது வாழ்க்கை துணைக்கு 60 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும்.

என்பிஎஸ் (New Pension scheme) திட்டத்துடன் உள்ள வேறுபாடுகள்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் மாத ஊதியத்தில் 10 சதவீத பங்களிப்பையும், நிர்வாகம் 14 சதவீதம் பங்களிப்பையும் அளிப்பது நடைமுறையில் உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் ஊதியத்தில் 10 சதவீதமும், நிர்வாகத்தின் சார்பில் 18.5 சதவீதமும் பங்களிப்பாக அமைகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் முதலீடு செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு இல்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு முதலீடு திட்டமாக இருக்கிறது. இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடு சந்தையுடன் இணைக்கப்படுகிறது.

அதன் காரணமாக, நிலையான ஓய்வூதியத்துக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் வழி வகுக்கவில்லை.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறைந்தபட்ச ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அத்துடன் அகவிலைப்படியாக கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மொத்த நிதியில் 60 சதவீதம் வரை ஓய்வுபெறும்போது ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு எந்த வருமான வரியும் கிடையாது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்கு ஒரு மொத்தத் தொகை வழங்கப்படும். இது ஒவ்வொரு 6 மாதமும் நிறைவடைந்த சேவைக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 1/10 விகிதத்தில் இது கணக்கிடப்படும்.

ஓபிஎஸ் (Old Pension scheme) திட்டத்துடன் உள்ள வேறுபாடு

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அகவிலைப் படி மூலம் நேரடியாக விலைவாசி உயர்வுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது. அதேபோல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணவீக்கத்தை சமாளிக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பொதுவாக ஊழியர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதமும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் அகவிலைப்படியையும் பயனாளிகள் பெற்று வருகின்றனர். இத்திட்ட பயனாளிகள் பணிக்காலத்தில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் ஓய்வூதிய நிதிக்கு நிலையான பங்களிப்புகளை செய்ய வேண்டியுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை காலம் நிறைவு செய்தவர்களுக்கே ஓய்வூதியம் கிடைக்கும்.

புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலை என்ன?

தமிழ் நாடு அரசு 2003-இல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த பிறகு, சிபிஎஸ் என அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தற்போது மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அதை தமிழ் நாடு அரசு அமல்படுத்த முன் வருமானால், தமிழ் நாடு அரசு ஊழியர்களின் முடிவு எதுவாக இருக்கும்?.

இந்தக் கேள்வி தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினருமான செ.நா. ஜனார்த்தனிடம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்க மாட்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று திரவிட மாடல் அரசான திமுக கடந்த தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்தது.

அத்துடன், ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்திருக்கிறார் என்றார் செ.நா.ஜனார்த்தனன்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் எப்படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது?

பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியரிடமிருந்து பங்களிப்பு இல்லாதது மற்றும் மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் 1972 இப்போது 2021 இன் படி உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக அது இருக்கிறது.

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை எவ்வளவு?

சுமார் 7.13 லட்சம் பேர் தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழகத்தில் பலனடைவோர் எண்ணிக்கை எவ்வளவு?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தற்போது சுமார் 3.15 லட்சம் பேர் பலனடைந்து வருகிறார்கள்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் விரும்பாதது ஏன்?

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்களின் 10% பங்களிப்பும், அரசு பங்களிப்பு 14 சதவீதமும் இருக்கிறது. இத்திட்டத்தில் ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ஓய்வு பெறும் நாளில் திருப்பி தரப்படுகிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தாலும், திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்ப வழங்கப்பட மாட்டாது.
இதற்கு மாற்றாக, 10% ஊழியர் ஊதியத்தை, அதாவது, பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை அரசு வழங்குகிறது.
இதனால் ஓய்வுபெறும் நாளில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்தத் தொகை திருப்பித் தரும் நிலை இல்லாததால் இதை அரசு ஊழியர்கள் ஏற்க விரும்பவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் விரும்புவது ஏன்?

பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய திட்டத்திற்காக எந்த தொகையும் பிடித்தம் செய்யவில்லை. மாறாக பொது வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்பட்டு அவை வட்டியுடன் ஓய்வு பெறும் நாளில் முழுவதும் திரும்ப வழங்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் கட்அவுட் சிறுகதை

ஹிண்டன்பர்க்-அதானி-செபி பற்றிய சிறுகதை விளக்கம்

கிருஷ்ண ஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி

கிருஷ்ணாவதாரம் விஷ்ணு பகவானின் 8-ஆவது அவதாரமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தென்னிந்தியாவில் இதை கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கிறார்கள். வடமாநிலங்களில் இதை கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்.

கோகுலாஷ்டமி விரதம்

இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து கிருஷ்ண பகவானை வழிபட்டால், வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் நினைத்த காரியங்கள் கைக்கூடும்.

ஐதீகம்

இந்த நாளில் பசுவுக்கு உணவளித்தால் நம் குடும்பம் அனைத்து நன்மைகளையும் பெற்று பெருவாழ்வு வாழும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பசுவுக்கு வெல்லம் தருவதால் பித்ரு தோஷம் விடுபடும் என்பதும் ஐதீகம்.

முன்னோர்களின் ஆசியும் பசுவின் வழியாக நமக்கு கிடைக்கும்.
நாம் இதுவரை சந்தித்து வந்த கஷ்டங்கள் நீங்கி சுபவாழ்வு வாழ்வோம்.

மகிழ்ச்சியும், அமைதியும் வீட்டில் தாண்டவமாடும் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

வடஇந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி

ராச லீலா அல்லது தகி அண்டி (தயிர்க் கலசம்) என்ற பெயரில் வட இந்தியாவில் இந்த விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

ராச லீலா என்பது கிருஷ்ணரின் இளமைக்கால வாழ்க்கையையும், கோகுலத்தில் அவர் இளம்பெண்களுடன் நடத்திய காதல் விளையாட்டுகளையும் இந்த ராச லீலா சித்தரிக்கிறது.

மகாராஷ்டிரத்தில் தகி அண்டி பிரபலம். அங்கு மிக உயரத்தில் தொங்க விடப்படும் வெண்ணைத் தாழியை சிறுவர்கள் கூம்புகளாக மற்ற சிறுவர்களை அமைத்து அவர்கள் மீது ஏறி அந்த வெண்ணைத் தாழியை உடைப்பது உண்டு.

இப்படி வெண்ணைத் தாழியை உடைத்தவர்கள் அப்பகுதி செல்வந்தர்கள் பரிசுப் பொருள்களை வழங்குவார்கள்.

கேரளாவில்

கேரளாவில் குருவாயூர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரள்வார்கள்.

தமிழகத்தில்

தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி மாலை நேரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கண்ணன் சிறு பிள்ளையாக வீடுகளுக்கு வருவதாக ஐதீகம் என்பதால், வீடுதோறும் சிறு பாதங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கோலமிட்டு வைத்திருப்பார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பாடல்களைப் பாடி, குழந்தைகளை கிருஷ்ணர், ராதை அலங்காரங்களை செய்து, அவர்களுக்கு முறுக்கு, சீடை உள்ளிட்ட பலகாரங்கள் வழங்குவது உண்டு.

ஏன் கிருஷ்ணனை கொண்டாடுகிறோம்?

ஸ்ரீகிருஷ்ணர் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் என்பதால்தான் அவரை இன்றளவும் கொண்டாடி மகிழ்கிறோம்.

அவரை கண்ணா, முகுந்தா என்று பல பெயர்களில் பக்தர்கள் அழைப்பதுண்டு.

கண்ணைப் போல் காப்பவன் கண்ணன் என்றும், வாழ்வதற்கு இடம் தந்து, முக்தி தரும் அவன்தான் முகுந்தன் என்றும் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ண அவதாரம்

மதுரா நகரில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக பிறந்தவர்தான் கிருஷ்ணர். கிருஷ்ணர் பிறந்தது சிறைச் சாலையில்தான்.

சிறையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதாவால் வளர்க்கப்பட்டார்.

தனது தாய் மாமன் கம்சனை கொன்று கிருஷ்ணர் துவாரகையை ஆட்சிப் புரியத் தொடங்கினார்.

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து போர்க்களத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாகவும் இருந்தவர்தான் கண்ணன்.

உலகின் பொக்கிஷ பூமி எது தெரியுமா?

பாரதப் போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக அவர் இருந்ததால்தான் அவரை பக்தர்கள் பார்த்தசாரதி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்த அறிவுரைகள் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை என்று அழைக்கப்படுகிறது.

கண்ணால் காண்பதெல்லாம் பொய்

கம்சன் ஏன் கிருஷ்ணனை கொல்ல விரும்பினான்?

கம்சனின் சகோதரி தேவகியை யாதவகுலத் தலைவர் வசுதேவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும். புதுமணத் தம்பதியரை கம்சன் தன்னுடைய தேரில் அமர்த்துகிறான். அதைத் தொடர்ந்து அவனே அந்த தேரை ஓட்டுகிறான்.

அப்போது வானில் ஒரு அசரீரி ஒலிக்கிறது. ஓ. கம்சனே… உன் சகோதரி திருமணம் முடிந்துவிட்டது. நீ மகிழ்ச்சியாக இப்போது இருக்கிறாய். அவளுக்கு நீ தேரோட்டியாய் வலம் வருகிறாய்.

ஆனால் உன்னுடைய சகோதரிக்கு பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை உன்னை வதம் செய்யப் போகிறது. அதுதான் உன்னுடைய முடிவு என்று சொன்னது.

இதைக் கேட்ட கம்சனுக்கு ஆத்திரம் வந்தது. உடனே தன்னுடைய வாளை உருவி தன்னுடைய சகோதரியை கொல்லத் துணிந்தான் கம்சன்.

இதைக் கண்ட மணமகன் வசுதேவர், கம்சனே ஆத்திரப்படாதே… அவளை வாழ்வதற்கு அனுமதி. அவளுடைய எட்டாவது குழந்தைத்தானே உன்னை கொல்லப் போகிறது.

அதுபோன்று ஒரு குழந்தை பிறப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் உன்னிடமே கொடுத்து விடுகிறேன்.

நீ அந்த சிசுக்களை அழித்துவிடு. தயவுசெய்து எங்களுடைய திருமண வாழ்வை கலைத்துவிடாதே என்று கெஞ்சினார்.

வசுதேவரின் கோரிக்கை கம்சனுக்கு நியாயமானதாகப் பட்டது. அதனால் அவர்கள் இருவரையும் வீட்டுக் காவலில் வைத்து சிறைப்படுத்தினான்.

கொடுங்கோலன் கம்சன்

முதல் குழந்தை பிறந்ததும், கம்சன் அதை கொல்லத் துணிந்தான். அப்போது தம்பதியார் எட்டாவது குழந்தைதானே கொல்லும். இந்த குழந்தை என்ன செய்தது… பாவம்… விட்டுவிடு என்று கெஞ்சினார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கையை கம்சன் ஏற்காமல் கொன்றான். இப்படி 6 குழந்தைகள் வரிசையாக கொல்லப்பட்டன.

கம்சனின் அரசு கொடுங்கோல் அரசாக இருந்தது. மக்கள் எல்லோருமே வேதனைக்குள்ளானார்கள். கம்சன் எப்போது அழிவான் என்று மக்கள் இறைவனை வேண்டினார்கள்.

7-ஆவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆசை தம்பதிக்கு ஏற்பட்டது. அதனால் வசுதேவர் அந்த குழந்தையை இரவில் கடத்திச் சென்று தன்னுடைய மற்றொரு மனைவி ரோகிணியிடம் ஒப்படைத்தார்.

அந்த குழந்தைக்கு பதில் உயிரற்ற ஒரு குழந்தையை கம்சனிடம் ஒப்படைத்தார். அப்படி ரோகிணியிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைதான் பலராமன்.

எட்டாவது குழந்தை பிறக்கும் நேரத்தில் கம்சன் நிதானத்தை இழந்தான். தம்பதியரை சிறையில் அடைத்தான்.

இருவரையும் சங்கிலியால் பிணைத்து வைத்தான். சிறைக்குள் யாரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அவனுடைய நம்பிக்கைக்குரிய பணிப்பெண், பூதனை என்ற பெயர் கொண்டவள் மட்டுமே தேவகியை கவனித்துக் கொண்டாள்.

எட்டாவது குழந்தையாக அவதரித்த கண்ணன்

8-ஆவது குழந்தை பிறந்ததும், அக்குழந்தையை உடனடியாக தன்னிடம் ஒப்படைக்க அவளுக்கு கம்சன் கட்டளையிட்டிருந்தான். அதனால் அவள் கண்ணும் கருத்துமாக தேவகியை கவனித்து வந்தாள்.

பிரசவ காலம் நெருங்கியிருந்து. அப்போது பூதனை தன்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் அவசரமாக செல்ல வேண்டியிருந்தது.

வீட்டை அவள் அடைந்தபோது, பெருமழை பெய்தது. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

சிறையில் பலத்த இடியோசைக்கு இடையே 8-ஆவது குழந்தையான கண்ணன் பிறந்தான். அவன் பிறந்தபோது சிறைக் கதவுகள் தானாக திறந்துகொண்டன. எல்லா காவலர்களும் மயக்கமடைந்தனர்.

தம்பதியர் கைகளிலும், கால்களிலும் பூட்டப்பட்ட சங்கிலிகள் அறுந்தன.

இது தெய்வச் செயல் என்பதை உணர்ந்த வசுதேவர், அந்த சிசுவோடு யமுனை ஆற்றை கடந்தார். அப்போது யசோதா மயங்கிய நிலையில் பெண் குழந்தையை பிரசவித்திருந்தாள். அக்குழந்தையை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரை அவளிடம் கிடத்திவிட்டு அந்த பெண் குழந்தையுடன் சிறைக்கு வந்தடைந்தார் வசுதேவர்.

வீட்டிலிருந்து திரும்பிய பூசனை வசுதேவர் கையில் குழந்தை இருப்பதைக் கண்டாள். உடனடியாக கம்சனுக்கு தகவல் தெரிவித்தாள்.

அந் பெண் சிசுவை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டபோது, அக்குழந்தை அவன் கைகளில் இருந்து நழுவி கீழே விழுந்து பறந்து சென்றது.

சிறையல் கண்ணன் பிறந்த நாளைத்தான் இன்றைக்கு பக்தர்கள் கோகுலாஷ்டமி என அழைத்து கொண்டாடுகிறார்கள்.

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

சென்னை: பங்களாதேஷ் நாட்டின் பிரதமரை தங்களுடைய போராட்டங்கள் மூலம் அகற்றி அந்த நாட்டுக்கு இடைக்கால அரசை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பினர்

15 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய சர்வாதிகார ரீதியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டவர் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா. அவர் ஒரு இடஒதுக்கீடு விவகாரம் மாணவர்களிடையே போராட்டமாக மாறி, தன்னுடைய பதவியை இழக்கச் செய்துவிடும் என கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரு நாட்டில் ஒரு தனி நபரின் சர்வாதிகாரமும், வேலைவாய்ப்பு பிரச்னையும் தலைத்தூக்கினால் இளைய சமுதாயம் விழித்துக் கொண்டு அந்த நாட்டின் தலைமையை மாற்றக் கூடிய வல்லமை படைத்தது என்று பங்களாதேஷில் நடந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் என அழைக்கப்படும் வங்க தேசம் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டது.
நாடு விடுதலை அடைவதற்கு முன் ஏற்பட்ட வங்காளப் பிரிவினையின்போது இதனுடைய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்தியா விடுதலை அடைந்தபோது, பாகிஸ்தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் உருவெடுத்தது.
கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முழு சுதந்திரத்தை விரும்பியவர்களாக இருந்த நிலையில், அவர்கள் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள்.

ராணுவ ஆட்சி

இந்த நிலையில், 1970-இல் அந்த நாட்டின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பிரதமராக இருந்தவர் முஜ்புர் ரஹ்மான். தற்போதைய நாட்டை விட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனாவின் தந்தை.
அவர் உள்பட அவரது குடும்பத்தினர் பெரும்பாலோர் அப்போது கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் பங்களாதேஷ் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்கள்.

மீண்டும் மக்களாட்சி

1971-ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் துணையால், வங்காளதேசம் தனி நாடாக மலர்ந்தது. அரசியல் களத்தில் ஏற்பட்ட மாறுதலால் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. பேச்சுரிமை மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1991-ஆம் ஆண்டு அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்தது.
சுமார் 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாக, உலகின் 8-ஆவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக பங்காளாதேஷ் உள்ளது.
வங்க தேசம் உருவானப் பிறகு இந்தியாவின் வங்கதேச எல்லையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக மாறின.
இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து வந்த முஜ்புர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா 1981-இல் வங்கதேசத்துக்கு திரும்பி ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிற அரசியல் கட்சிகளுடன் கைக்கோர்த்து மக்கள் எழுச்சியை உருவாக்கினார்.
அவர் 1996-இல் முதன்முறையாக பங்களாதேஷில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். மீண்டும் ஹசீனா 2009-இல் நடந்த தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். ஆனால், அவர் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.

வங்க தேசத்தின் தற்போதைய நிலை

ஷேக் ஹசீனா, தன்னுடைய ஆட்சியில், நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு வங்கதேசம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கத் தொடங்கியது. வேலையின்மை அதிகரித்து வந்தது.
அவரது ஆட்சியில் சர்வாதிகாரப் போக்கு கடந்த சில ஆண்டுகளாக தலைதூக்கியது. அவரும், அவரது கட்சியினரும் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலுக்கு பயன்படுத்தினார்கள்.
குடிமக்களுக்கு அடிப்படை வாக்குரிமை மறுக்கப்படும் நிலை சில நேரங்களில் உருவானது. அவருடைய சர்வாதாரப் போக்கு இளம் தலைமுறையினரிடையே அதிருப்தி ஏற்பட வைத்தது.

ஹசீனாவின் ஆத்திரமூட்டிய பேச்சு

அண்மையில் ஷேக் ஹசீனா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பங்களாதேஷ் நாட்டின் ஒதுக்கீடு சீர்திருத்த முறையைப் பற்றி பேசினார்.
அப்போது அவர் அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பீடு செய்து பேசினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்கிறார்கள். அப்படியெனில், பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்களுக்கு ஒதுக்கீடு தர வேண்டுமோ என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

மாணவர்களின் போராட்டம்

ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பாக பங்களாதேஷ் நாட்டின் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷேக் ஹசீனா பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹசீனாவின் கருத்துக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
காவல்துறை, உயரடுக்கு பாதுகாப்பு படையினர், ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் படைகள் என எல்லாமும் மாணவர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்டன.
அத்துடன் ஹசீனாவுக்கு எதிராக போராடியவர்களை இச்சந்தர்ப்பத்தின் ஹசீனாவின் ஆதரவு மாணவர் பிரிவு தாக்குதல் நடத்தியது.
இதனால் நாடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. 3 நாள்களில் பங்களாதேஷ் நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.

மக்கள் எழுச்சியாக மாறிய போராட்டம்

ஒரு கட்டத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டாக்காவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் இறங்கினார்கள்.
இனி நாங்கள் தோட்டாக்களுக்கு அஞ்சப் போவதில்லை என்ற அவர்களின் முழக்கம் மக்கள் எழுச்சியாக உருவெடுத்தது.
இதனால் வேறு வழியின்றி ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என பங்களாதேஷ் ராணுவம் அழுத்தம் கொடுத்தது.
ஒரு கட்டத்தில் பிரதமரின் இல்லத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிடத் தொடங்கியது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ராணுவம் தலையிட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி ஷேக் ஹசீனாவுக்கு 45 நிமிடம் கால அவகாசத்தை ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான் விதித்தார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகி ஹசீனா

ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தன்னை பிரதமர் பதவியில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவர் வேறு எந்த நாட்டுக்கு செல்வார் என்று தெரியவில்லை.
இதுவரை வேறு எந்த நாடும் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் சொல்லவில்லை.

அழுத்தம் கொடுத்த மாணவர்கள்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அதிபர் முகமது ஷகாபுதீன் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
வங்கதேச பாராளுமன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்தார். உடனடியாக இடைக்கால அரசை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, வங்கதேச போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மாணவர்கள், மீண்டும் ராணுவத்தின் தலைமையிலான ஆட்சியை ஏற்க மறுத்தார்கள்.
பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியலில் மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் முக்கியம் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினார்கள்.

முகமது யூனுஸ் தலைமையில் நிர்வாகம்

அதிபர் முகமது ஷஹாபுதீன், ராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இடைக்கால அரசின் தலைவராக 84 வயதான முகம்மது யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் யூனுஸுடன் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களான நஹித் இஸ்லாம், ஆசிஃப் முகமத் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் கடந்து வந்த வரலாறு

யார் இந்த முகமது யூனுஸ்

வங்கத்தேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றிருக்கும் முகமது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் ஏழைகளின் வங்கியாளர் என்றும் அழைக்கப்படுகிறார்.
வங்க தேசத்தின் குறுகிய கால கடன் பயன்பாட்டின் முன்னோடியாக விளங்குகிறார். அவர் 1983-இல் தொடங்கிய கிராமின் வங்கி மூலம் வங்கதேச ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்.
அவரது கிராமின் வங்கி ஏழை மக்கள் சிறுதொழில்கள் நடத்துவதற்கான குறுகிய கால கடன்களையும் நீண்டகால கடன்களையும் வழங்கியது.
அவரது செயல்பாட்டை பாராட்டி, 2006-ஆம் ஆண்டில் முகமது யூனுஸ் மற்றும் கிராமின் வங்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வங்க தேசத்தில் எழுப்பப்பட்டதும் உண்டு. அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு வயதைக் கடந்து கிராமின் வங்கியில் பணிபுரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2011-ல் வங்கதேச அரசியல்வாதிகள் மீது அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்பட்டது.
தொழிலாளர் சட்டங்களை அவர் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 6 மாத சிறைத் தண்டனையும் கூட அவருக்கு வழங்கப்பட்டது.

மாணவர் இயக்கம் நம்பிக்கை

முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால அரசை சிறப்பாக வழிநடத்துவார் என புரட்சியில் ஈடுபட்ட மாணவர் இயக்கம் நம்புகிறது.
வங்கதேச மக்களைப் பொறுத்தவரை, நாட்டில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். உடனடியாக சட்டம் ஒழுங்கை பராமரிக்க தொடங்க வேண்டும். நாட்டின் வேலையின்மை பிரச்னைக்கும், பொருளாதார தேக்க நிலைக்கும் முடிவு காண வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இது சர்வாதிகாரத்துக்கு எச்சரிக்கை

வங்க தேசத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒரு விஷயத்தை நாட்டை ஆள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் மறைமுகமாக விடுத்திருக்கிறது.
நாட்டில் தனிநபர் சர்வாதிகார போக்கும், மக்களுக்கு எதிரான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும் அரசுகளையும் எதிர்ப்பதற்கு இன்றைய இளைய தலைமுறை தயாராகி விட்டதை உலகுக்கு பறைசாற்றியிருக்கிறது.

கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து மீட்க முடியுமா?

ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு

சென்னை: இப்போது நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம் 2700 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு என்ற தொன்மையை உடையது என்பதை பலரும் அறியாமல் இருக்கலாம்.
இந்த பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் எதற்காக தொடங்கப்பட்டன. எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. ஏன் இடைக்காலத்தில் தடை செய்யப்பட்டது. இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகள் பெற்றிருக்கும் மாற்றங்கள் என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

ஒலிம்பியா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள்

ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு 776 ஆண்டுக்கு முன்பு கிரேக்க நாட்டில் ஒலிம்பியா என்ற இடத்தில் முதன்முதலில் மாபெரும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடத்தப்பட்டன.
அப்போது இப்போட்டிகள் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே நடந்தது. இப்போட்டிகளை கிரேக்க கடவுளர்களான சீயஸ் (zeus) , ஹேரா (Hera) ஆகியோரை வழிபடும் வகையில் ஒரு அர்ப்பணிப்பு விழாவாக நடத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் போர்க் கலைகளில் பயன்படுத்திய ஒருசில பயிற்சிகளையும், அன்றாடம் பொழுதுபோக்கு மற்றும் வீரத்தை நிரூபிக்கும் வகையிலான விளையாட்டுகளையும் தொகுத்து இப்போட்டிகள் நடத்தப்பட்டன என்பதை வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஹீரோ பட்டம்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு நகரில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒலிம்பியா நகரில் கூடுவார்கள்.
போட்டிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆன கிரீடம் போட்டி நடத்துவோரால் அணிவிக்கப்படும்.
இந்த கிரீடத்தை அணிந்த வீரர்கள் தங்கள் நகருக்கு ஊர்வலமாக செல்வார்கள். அங்கு காத்திருக்கும் மக்கள் அவரை நகரின் ஹீரோவாக வரவேற்பார்கள்.

பெண்களுக்கு தடை

கிரேக்க நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக இருந்தது. திருமணமான பெண்கள், போட்டிகளில் பங்கேற்கவோ, பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை.
போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான பணிப் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.

பெண்களுக்கு தனிப் போட்டி

பெண்களுக்காக தனியாக ஹேரயா என்ற போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக அந்தக் காலத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.
கிரேக்க கடவுள் சீயஸ் மனைவியான ஹேரா பெயரில்தான் இப்போட்டிகள் ஹேரயா என அழைக்கப்பட்டு வந்தன.
மல்யுத்தம், ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல், எடை மிகுந்த கல்லை தூக்கி எரிதல், நீண்ட தூரம் ஓடும் மராத்தான் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் அக்காலத்தில் இடம்பெற்றிருந்ததும் வரலாற்று ஆவணங்களில் இருந்து தெரிகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஒரு நாள் போட்டியாக இருந்து வந்த இப்போட்டிகள் பின்னாளில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வழக்கமாக மாறியது.
அத்துடன் அக்காலத்தில் இப்போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கின் எல்லா போட்டிகளும் ஒலிம்பியா நகரில் உள்ள மாபெரும் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.
40 ஆயிரம் பேர் அமரக் கூடிய மாபெரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒலிம்பியாவில் இருந்ததற்கான ஆதாரங்களும், சிதைவுகளும் கிடைத்திருக்கின்றன.

அமைதி, சமாதானம்

இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்போது எந்த வன்முறையும், போரும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக போட்டியாளர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள்.
ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியா நகரில் இருந்து ஸ்போன்டோஃபோராய் என்று அழைக்கப்படும் ஈலிஸ் நகர் குடிமக்கள் ஆலிவ் இலைகளுடன் கிரீடம் அணிந்து ஒரு மாத காலம் கிரேக்கநாடு முழுவதும் சுற்றி வருவார்கள்.
அவர்கள் ஒலிம்பியா நகரில் புறப்பட்டதும், கிரேக்க நாடு முழுவதும் அமைதி, சமாதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாடு.
அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்கள் எவரும் எந்த பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அப்படி ஏதேனும் வன்முறை, கலகம் ஏற்பட்டால், அது கிரேக்க கடவுள் சீயஸை நிந்திப்பதாக அர்த்தம் என்பதால் எல்லோரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தார்கள்.

அத்லெட்ஸ்

கிரேக்க ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் ஆத்லோஸ் என்று அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் அந்த வார்த்தையை பயன்படுத்தி ஆங்கிலத்தில் அத்லெட்ஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
போட்டிகளில் பங்கேற்பவர்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதும் ஒரு விதி. நாட்டின் போர்ப் படை தளபதியும், பாலிம்னிஸ்டர் என்று அழைக்கப்படும் ஆடு மேய்ப்பவரும் எதிரெதிரில் போட்டி களத்தில் இறங்குவார்கள்.
இப்படி எல்லோரையும் சமமாக விளையாட்டில் பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில், ரோட்ஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்த டயாகுராஸ் என்பவரும், பாசிடோனிட அரசர் அமின்டாஸின் மகன் ஒருவரும் கூட கலந்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பேரரசர் அலெக்சாண்டரும், டெமாக்ரைட்டர்ஸ் என்ற தத்துவ ஆசிரியர் ஒருவரும் கூட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டிருப்பதை வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

தடை விதிப்பு

ஏசு பிறந்த பிறகு அதாவது கி.பி. 393-இல் இந்த விளையாட்டுப் போட்டிகளை மதநம்பிக்கை அற்றவர்களின் கலாசாரம் என்று சொல்லி கிரேக்க அரசன் தியோடோசியஸ் தடை செய்தான்.
போட்டிகள் தொடங்கி 1169 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்தன.
போட்டிகள் நடத்தப்பட்டு வந்த ஒலிம்பியா நகர் கேட்பாரின்றி தனது பொலிவை இழந்தது. போட்டிகள் நடத்த பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் காலத்தால் சிதைந்து போயின.

மீண்டும் உயிர் பெற்ற ஒலிம்பிக்

1766-ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் கர்டியஸ் என்பவர் ஒலிம்பியா நகரை உயிர்ப்பித்தார். அதனால் இன்றைக்கு முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக இது மாறியிருக்கிறது.
அத்துடன், ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட பழைமையான மைதானத்தில் சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆய்வுக் கட்டடம் எழும்பியது.
1894-இல் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை பியரி டி. கூபர்டின் என்பவர் மேற்கொண்டு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினார்.
அதனால் இவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார். இவர்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர்.

ஒலிம்பிக் கொடி

நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ஆம் ஆண்டில் முதன்முதலில் ஏதென்ஸ் நகரில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 280 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். இப்போட்டிகளை 60 ஆயிரம் பேர் பார்த்தார்கள்.
ஒலிம்பிக் கொடி 6 வண்ணங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. வெள்ளை நிறத்தை பின்புலமாகக் கொண்ட இந்த கொடியில், ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்.
இந்த வளையங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 5 கண்டங்களைக் குறிக்கின்றன.

பெண்களும் பங்கேற்ற முதல் போட்டி

1900-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களும் முதன்முதலில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது நடத்தப்பட்ட போட்டிகளில் 997 வீரர்களில் 22 பெண்கள் இடம் பெற்றிருந்தார்கள்.
1924-ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அறிமுகமானது. இதனால் ஏற்கெனவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த போட்டி கோடைக்கால ஒலிம்பிக் போட்டி என பெயர் மாற்றம் பெற்றது.
1992-ஆம் ஆண்டு வரை கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன.
பிறகு குளிர்காலப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், கோடைக்கால போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தும் வழக்கம் ஏற்பட்டது.
அதன்படி 2 ஆண்டுகள் இடைவெளியில் இப்போட்டிகள் மாறிமாறி நடத்தப்பட்டு வருகின்றன.

போட்டிகள் தடைப்பட்ட ஆண்டுகள்

கடந்த காலங்களில் 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை.
அதேபோல், 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜப்பானில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று உலகம் முழுவதையும அச்சுறுத்தியதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அப்போட்டிகள் 2021-இல் டோக்கியோவில் நடத்தப்பட்டன.
ஒலி்ம்பிக் போட்டி தொடக்க நாளில கோலாகலமாக நடத்தப்படும் விழா முதன்முதலில் 1908 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

ஒலிம்பிக் தீபம்

ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ஆம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்றப்பட்டது.
இந்த ஒலிம்பிக் தீபம் போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் ஏற்றப்படுவது வழக்கத்தில் உள்ளது,
அதைத் தொடர்ந்து அந்த தீபம் ஒரு டார்ச் ரிலே மூலம் பல நாடுகளில் பல்வேறு சாதனைப் படைத்த வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு இறுதியாக ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நேரத்தில் விழா மைதானத்தில் உள்ள ஒலிம்பிக் தீப மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்படுகிறது.

உலக ஒலிம்பிக் தினம்

ஆண்டுதோறும் நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்ட ஜூன் 23-ஆம் தேதியை உலக ஒலிம்பிக் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.
தடகளம், கூடைப்பந்து, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், ஃபிகர் ஸ்கேட்டிங், ஃபென்சிங், கால்பந்து, ஸ்கேட்போர்டிங், டென்னிஸ், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. போட்டியில் ஒரு நாட்டின் வீரர் வெற்றி பெறும்போது அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

ஒலிம்பிக்கில் இந்தியா

1900-ஆவது ஆண்டில் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது. உலகின் 26 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
அப்போது, இந்தியா இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்று உலக நாடுகளை வியக்க வைத்தது. காரணம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் கொல்கத்தாவை சேர்ந்த நார்மன் பிரிட்சார்டு என்பவர் மட்டுமே பங்கேற்றிருந்தார்.
அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், 200 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
1904, 1908, 1912-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை. அதன பிறகு நடந்த போடடிகளில் இந்தியா பஙகேற்றது. ஆனாலும் பதக்கம் எதுவும் பெறவில்லை.
1928-ஆம் ஆண்டில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை பெற்று அசத்தியது.

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட காரணம் என்ன?

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள்

இவ்வாண்டு பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10500 வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்முறை ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.
இம்முறை முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா ஒரு மைதானத்துக்குள் நடத்தப்படவில்லை. பாரிஸின் சென் நதியில் நடத்தப்பட்டது.
சுமார் 200 தேசிய பிரதிநிதிகளின் அணிவகுப்பு படகுகளில் நடந்தது. தொடக்க அணிவகுப்பு கி.மீட்டர் வரை சென் நதியை கடந்தை 3 லட்சம் மக்களை மகிழ்வித்தது.
இநத ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 32 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 329 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 5,804 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
உக்ரைன் போரில் பங்கேற்றுல்லதால் ரஷ்யாவும், பெலாரஸ் நாடும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாபா வங்காவின் கணிப்பு சொல்வதென்ன? ஒரு நிமிட விடியோ

வயநாடு நிலச்சரிவு: காரணம் என்ன?

சென்னை: நாட்டில் நடந்த இயற்கை பேரழிவுகளில் மிக மோசமானதாக வயநாடு நிலச்சரிவு பேசப்படுகிறது இந்த நிலச்சரிவின்போது ஏராளமானவர்கள் மண்ணில் உயிரோடு புதையுண்டது கேரள மாநிலத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

நிலச்சரிவு

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக் கிராமங்களில் தொடர் மழையை அடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து பயங்கர நிலச் சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் ஏராளமானவர்கள் புதையுண்டு போனார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
மண்ணில் புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்து மத்திய படைகளுடன் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 6 நாள் மீட்புப் பணியில் இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

150-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐயும் கடக்கும் என்று அரசு நிர்வாகம் கணித்திருக்கிறது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க பல்வேறு தரப்பிலும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு இதை தேசிய பேரிடராக அறிவித்திருக்கிறது.

இயற்கையில் கேரள மாநிலம்

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி நீண்டு அமைந்திருக்கும் மாநிலம். இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதியும், புவியியல் ரீதியாக நிலச்சரிவை சந்திக்கும் அபாயமிக்க பகுதியாக உள்ளது.
கேரள மாநிலத்துக்கு அதிக மழையை தருவதும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைதான். அரபிக் கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றை நீண்டு வளர்ந்திருக்கக் கூடிய இந்த மலைத் தொடர் தடுத்து நிறுத்தி கேரள மாநிலத்துக்கு மழையை அளிக்கிறது.
உலகின் பல்லுயிர் வளம் நிறைந்த எட்டு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக இருக்கிறது.

தொடக்கமும் முடிவும்

இந்த மலைத்தொடர் மகாராஷ்டிரா, குஜராத் எல்லையில் உள்ள தபி ஆற்றுக்கு தெற்கே தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக நீண்டு வளர்ந்து கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.
மராட்டிய மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் இந்த மலைத் தொடரை சாயத்ரி மலைத் தொடர் என்று அழைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நீலகிரி மலைத் தொடர், ஆனைமலைத் தொடர் என்று அழைக்கிறார்கள். கேரளாவில் மலபார், அகத்திய மலை என்று அழைக்கிறார்கள்.

ஆறுகள் பிறக்குமிடம்

இந்த மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1,600 கி.மீட்டர், சராசரியாக இதன் உயரம் 900 மீட்டர்கள் வரை இருக்கிறது.
இந்த மலைத் தொடர் நாட்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது.
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிறுவாணி, பவானி, நொய்யல் நதிகள் இந்த மலைத் தொடரில்தான் பிறக்கின்றன.
பெரிதும், சிறிதுமான பல ஆறுகள் மலைத் தொடரில் உருவாகி மேற்கு நோக்கி பாய்ந்து கேரள மாநிலத்தை வளமாக்கி அரபிக் கடலில் கலக்கிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள்

இந்த மலைத் தொடரில் வயநாடு மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் 3 கிராமங்கள்தான் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச் சரிவால் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன.
இதே பகுதிகளில் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளிலும் நிலச் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அப்போது இத்தகைய பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இம்முறை ஏற்பட்ட நிலச்சரிவின்போது யாரும் சுதாரிக்க வாய்ப்பில்லாமல் இரவு நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது.

தொன்மையான மலைப் பகுதி

வயநாடு மலைகளில் புதிய கற்கால நாகரிகச் சான்றுகள் காணப்படும் இடமாக இருக்கின்றன. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிந்தைய கற்கால ஓவியக் கோடுகள் பாறைகளில் காணப்படுகின்றன.
அதனால் இந்த மலைப் பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாகவே பழங்குடியின மக்கள் வசித்து வந்திருப்பதும் உறுதியாகிறது.
இயற்கையில் இப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை மிருதுவானது. இதனால் மலைப் பகுதிகளில் பல இடங்களில் இறுக்கமின்றி தளர்வாகவே காட்சி தருகின்றன.
இருப்பினும் இங்கு இயற்கையில் வளரும் நீண்டு உயர்ந்து வளரும் மரங்கள் மிக ஆழமாக வேர்களை ஊன்றி அந்த தளர்வான மண்ணை இறுக்கமாக பிடித்துக் கொள்வதால் நிலச்சரிவு கடந்த தலைமுறை வரை தடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

கட்டடங்கள் அதிகரிப்பு

இந்த பகுதிகளில் காலப்போக்கில் கடந்த ஒரு தலைமுறையாக கட்டுமானங்கள், வீடுகள், கடைகள் என அதிகரித்து வந்திருக்கின்றன.
அத்துடன் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை செய்யும் நிலையில் மரங்களை அகற்றம் செய்தல், நீர்வழிப் பாதையை மாற்றி அமைத்தல் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
போதைக்குறைக்கு பல பயிர் சாகுபடி முறை கைவிடப்பட்டு, ஒற்றை பயிர் சாகுபடி முறை மலைப் பகுதிகளில் புகுத்தப்பட்டிருக்கிறது.

200-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் பதிவு

வயநாடு மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலகத்தின் பதிவுகள் தரும் தகவல் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது.
2018 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையிலான காலத்தில் மட்டும் 200 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்திருப்பவை.
மக்கள் நடமாட்டம் இல்லாத, மலை உச்சிப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் இதில் கணக்கில் கொள்ளவில்லை.

பெருத்த மழை பாதிப்பு

வயநாடு இயற்கையாகவே ஈரப்பதம் நிறைந்த குளுமையான சூழலை கொண்டது. இதனால் எப்போதுமே நிலம் ஈரப்பதமாகவே இருக்கும். இதனால் ஏற்கெனவே மிருதுவாக இருக்கக் கூடிய மண்ணும் பாறைகளுடன் இறுகியிருக்காமல் தளர்வாக காணப்படும் நிலை உண்டு.
இப்படிப்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் பெய்யக்கூடிய மழை ஒரு சில மணி நேரங்களில் பெய்யும்போது, மண்ணின் தளர்ச்சியால் மிக வேகமாக அவை மழைநீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மண்ணின் இறுக்கமோ, மரங்களின் பிடிமானமோ இல்லாத பாறைகளும் இந்த மழையில் உருண்டோடி நிலச்சரிவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலச்சரிவின் பாதிப்பு

வழக்கமாக ஏற்படும் நிலச்சரிவை காட்டிலும் இம்முறை ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு சில கிலோ மீட்டர் வரை சரிவானப் பகுதிகளை நோக்கி நீண்டிருக்கிறது. இதை DEBRIS FLOW TYPE நிலச்சரிவு என்று சொல்கிறார்கள்.
இதனால்தான் ஒருசில நிமிடங்களில் பெருவெள்ளத்துடன் ஏற்பட்ட நிலச்சரிவு ஏராளமான வீடுகளையும், கட்டடங்களையும் மூடியிருக்கிறது. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கட்டடங்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பேராசிரியர் மாதவ் காட்கில் குழு ஆய்வு

மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அப்படி கண்டறியப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிவதற்காக, மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010-ஆம் ஆண்டில் நியமித்தது.
இக்குழுவினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதையும் ஓராண்டுக்கு மேல் ஆய்வு செய்தனர்.

அறிக்கை வெளியீடு

அதைத் தொடர்ந்து அக்குழு ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த குழுவின் அறிக்கையை 2012 மே மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டது.
இது அறிக்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக டாக்டர் கத்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழ்ந்த 41 சதவீதப் பகுதிகளில் 37 சதவீதப் பகுதி இயற்கை பேரிடர்களில் பாதிக்கும் அபாயம் உடையதாக வரையறை செய்யப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பேரிடர் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புதிய குவாரிகளுக்கு தடை செய்ய வேண்டும். கட்டுமானங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
புதிய விவசாயப் பகுதிகளை விஸ்தரிக்கக் கூடாது. புதிய குடியிருப்புகளைக் கட்ட கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யக் கூடாது.
மண் அரிப்புக்கு காரணமாக இருக்கும் ஒற்றை பயிர் சாகுபடி முறையை கைவிட வேண்டும்.
காட்டு நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது, நதிகளின் போக்கை திசை திருப்புவது கூடாது. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்கு மலைத் தொடரில அனுமதிக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

கண்டுகொள்ளாத மாநிலங்கள்

பழங்குடியின மக்களை காடுகளில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மூலம் காடுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைகள் அளிக்கப்பட்டு 13 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் கேரள மாநிலமும், கர்நாடக மாநிலமும் அவற்றை ஏற்கவில்லை.

நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது ஏன்

ஒருசில பகுதிகள் மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல என்று அறிவிக்கப்படும் நிலையில், காலம் காலமாக ஒரு இடத்தில் வசித்து வரும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து போகும். இதனால் அவர்களுக்கு அரசு நிர்வாகம் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் வேறொரு இடத்தில் செய்து தர வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.
இதனால் இந்த நடைமுறையை எந்த அரசு நிர்வாகமும் செய்ய முன்வரவில்லை.
வளர்ச்சித் திட்டங்கள்
மக்கள் வசிப்பிடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசு நிர்வாகத்துக்கு இருக்கிறது. இந்த சூழலில் ஒருசில விதிமுறைகளை பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

தேவை எதிர்கால செயல் திட்டங்கள்

தற்போது நடந்திருக்கும் பேரிடரை மனதில் கொண்டு, மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஆபத்து நிறைந்த பகுதிகளில், மிக நெருக்கமாக, ஆழ்ந்து வேரூன்றக் கூடிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இதை சாயில் பயோ இன்ஜினியரிங் என்று அழைக்கிறார்கள்.
மலைப் பகுதிகளில் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அந்த நீரை உடனுக்குள் குழாய்கள் வழியாக நிலப் பகுதிக்கு வெளியேற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களில் குவாரிகள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.
ஒற்றை சாகுபடி முறையை கைவிட்டு, நிலச்சரிவு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலான பயிர் மேலாண்மையை செய்யத் தொடங்க வேண்டும்.
மலைச் சரிவால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அகலமான தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும்.
சாலை மேம்பாட்டுப் பணிகளில் மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களை தவிர்க்க வேண்டும். ஆய்வுக் குழு பரிந்துரைகளில் 70 சதவீதமாவது கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களால் நிறைவேற்றப்பட்டாலே மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

வயநாடு நிலச்சரிவுக்கான காரணம் – விடியோ செய்தி