குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதை 29 கொல்லாமை சிறப்பு குறித்து விளக்குகிறது அத்துடன் அது தொடர்பான திருக்குறள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.
உள்ளடக்கம்
துறவறம் ஏன்? எதற்கு
தாத்தா… என்று அழைத்தவாறு உள்ளே வந்தாள் குணவதி. அவளது குரலைக் கேட்ட விமலை, என்ன… திடீரென்று தாத்தாவைத் தேடுகிறாய்? என்றாள்.
பாட்டி… எனக்கு ஒரு சந்தேகம். தீர்த்தங்கரர்கள் துறவறம் ஏற்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்று வினவினாள்.
இருக்கு… ஒவ்வொரு தீர்த்தங்கரரும் காரணத்தோடு துறவறம் ஏற்றிருக்கிறார்கள்.
முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் நீலாஞ்சனை என்னும் பெண் நடனமாடியதைக் கண்டு வந்தார்.
அப்போது அந்தப் பெண் திடீரென மயங்கி வீழ்ந்து இறந்து போனாள். இதைக் கண்ட ரிஷபர் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்து துறவறம் ஏற்றார்.
ரிஷபநாதரின் வரலாற்றைக் கேட்டறிந்த பார்சுவரும் துறவறம் ஏற்றார். மகாவீரர் சாரண முனிவர்களின் மூலமாக முற்பவ வாழ்வைக் கேட்டு துறவேற்றார்.
இப்படி ஒவ்வொரு தீர்த்தங்கரரும் துறவரம் ஏற்க ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்றாள் பாட்டி.
திருக்குறள் சொல்வது என்ன?
ஓ… அப்படியா என்று பதில் சொன்ன குணவதியைப் பார்த்து, சரி… இப்போது ஏன் திடீரென தீர்த்தங்கரர்களின் துறவறம் பற்றி நீ கேட்கிறாய் என்றாள் பாட்டி.
பாட்டி… நான்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
(குறள்-325)
என்ற திருக்குறளை படித்தேன்.
அதனுடைய பொருள் என்ன சொல் பார்க்கலாம் என்றாள் பாட்டி.
கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்று தெய்வப்புலவர் கூறியுள்ளார். சரியா பாட்டி என்றாள் குணவதி.
சரி. இப்போ இந்த குறளை நீ மனதில் வைத்துக் கொள்வதற்கு நேமிநாதரின் கதையை சொல்கிறேன் கேள் என்று பாட்டி சொல்லத் தொடங்கினாள்.
நேமிநாதர்
நேமிநாதர் ஜைன மதத்தின் 22-ஆவது தீர்த்தங்கரர். இவர் வட இந்திய நகரமான சௌரிபுராவில் அரி குலத்திலகன் காசிப கோத்திரத்து அரசன் சமுத்திர விஜயனுக்கும், அவனுடைய மனைவி சிவதேவிக்கும் மகனாக பிறந்தவர்.
இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவ் கிருஷ்ணன். இவர் நேமிநாதரின் வளர்ச்சியைக் கண்டு வெறுப்புற்றார்.
அதனால் நேமிநாதருக்கு திருமணம் செய்விப்பதுதான் நல்லது என்று அவர் முடிவு செய்கிறார்.
உக்கிரசேனனின் மகளான இராசமதி என்ற பெண்ணை நேமிநாதருக்கு மணம் முடிக்க ஏற்பாடாகிறது.
நேமிநாதருக்கு திருமணம் நடந்துவிட்டால், தனக்கு சமமான புகழை பெற்றுவிடுவாரே என்று வாசுதேவ் கிருஷ்ணன் எண்ணினார்.
இதனால், நேமிநாதருக்கு இல்லறத்திலும், பொருள்கள் மீதும் வாழ்வில் குற்றமற்ற, பற்றற்ற நிலையை உருவாக்கவும் திட்டமிட்டார்.
அத்துடன் நேமிநாதரின் நாடாளும் எண்ணத்தை கைவிடச் செய்ய வேண்டும் என்றும் விரும்பினார்.
துறவரம் பூண்ட நேமிநாதர்
நேமிநாதரின் திருமண நாள் நெருங்கியது. இந்த சூழலில், வாசுதேவ் கிருஷ்ணன் ஏற்பாட்டின்படி, திருமண விருந்துக்காக காட்டு விலங்குகளைக் கூட்டம் கூட்டமாக கொல்வதற்காக காவலர்கள் மூலம் பிணைத்து அவற்றை துன்புறச் செய்தார்.
அவற்றின் அபாயக் குரலைக் கேட்ட நேமிநாதர் யானை மீது ஏறி அந்த திசையை நோக்கிச் சென்றார்.
தன்னுடைய திருமண வாழ்க்கை பந்தத்துக்காக காட்டு விலங்குகளைக் கொள்வதா?நமக்கு இந்த ராஜபோக வாழ்க்கை தேவைதானா? என தன்னுள் கேள்வியை எழுப்பினார்.
விலங்குகளை துன்புறுத்துவதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்ட அவர், தன்னுடைய திருமணத்தையும், ராஜ வாழ்க்கையையும் துறந்து துறவறம் ஏற்றார்.
கொல்லாமை
உலகத் துன்பங்களுக்கு அஞ்சித் துறவு கொண்ட அனைவரிலும் கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே மிகச் சிறந்தவர் என்பது இப்போது புரிகிறதா என்றாள் பாட்டி.
சிறந்த பண்புகள் மேலானவை – திருக்குறள் கதை 28
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.