மன்னிப்பு என்றைக்கும் எதிரியால் மறக்க முடியாதது திருக்குறள் கதை

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 37) நமக்கு துன்பம் தருபவரையும் மன்னித்து அவர்களை வெட்கப்படச் செய்யும் குணம் சிறந்தது என்பது குறித்த மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை, திருக்குறள் விளக்கம் இடம்பெறுகிறது.

பழிவாங்க துடித்த ஆனந்தன்

வழக்கம்போல தாத்தா வாசலில் அமர்ந்திருக்க, ஆனந்தன் மிக வேகமாக தாத்தாவிடம் வந்தான்.

தாத்தா… நான் சைக்கிளில் சென்றபோது, ஒருவன் வேண்டுமென்றே குறுக்கே வந்து என்னை கீழே விழச் செய்துவிட்டான்.

இதனால் எனக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டு விட்டது. பதிலுக்கு ஒரு நாள் அவன் சாலையில் சைக்கிளை ஓட்டி வரும்போது நான் அவனை கீழே தள்ளி விட்டால்தான் என் ஆத்திரம் அடங்கும் என்று புலம்பினான்.

ஆனந்தா… முதலில் நீ உள்ளே போய் காயம் அடைந்த பகுதியை சுத்தம் செய்து மருந்து தடவு. அதற்கு பிறகு என்னிடம் வா… நான் ஒரு கதை சொல்கிறேன். அந்த கதையை கேட்ட பிறகு உன்னை கீழே தள்ளிவிட்டவனை என்ன செய்யலாம் என்று முடிவு என்றார் தாத்தா.

சரி என்று உள்ளே சென்ற ஆனந்தன், சிறிது நேரம் கழித்து திண்ணையில் வந்து அமர்ந்தான்.

தாத்தா… சொல்லுங்கள். அந்த கதையை என்றான்.

துறவியும் துன்பமும்

துறவி ஒருவர் சரயு நதியைக் கடப்பதற்காக படகு ஏதாவது தென்படுகிறதா என்று கரையோரத்தில் நடந்து சென்றார்.

நீிண்ட தூரம் நடந்த அவர் மாலை நேரம் இருட்டத் தொடங்கியதால், இன்று இரவுக்குள் நாம் சரயு நதியை கடக்கும் வாய்ப்பு இழந்துவிடுமோ என நினைத்தபடியே நடந்தார்.

இறைவா.. இன்று இரவு சரயு நதியைக் கடந்து அயோத்தியில் ராமர் ஜலசமாதி அடைந்த குப்தர் படித்துறையை அடைய வேண்டும் என்று எண்ணுகிறேன். நீதான் அருள் புரிய வேண்டும் என வேண்டினார் துறவி.

என்ன ஆச்சரியம். அவருடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறியது. அவரின் கண்ணெதிரே ஒரு படகு கரையோரத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது.

மாலை நேரம் முடிந்து இருள் சூழத் தொடங்கிவிட்டதால், கடைசி படகு சவாரி அது என்பதால் எண்ணிக்கைக்கு மேல் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இரு படகோட்டிகள் படகை துடிப்பு போட்டு நகர்த்த தயாராகினர். இதைக் கண்ட துறவி, அவர்களை நோக்கி இருகரம் கூப்பி, என்னையும் இந்த படகில் ஏற்றிக் கொண்டால் நான் எண்ணிய கடமையை நிறைவேற்ற முடியும் என்று அந்த படகோட்டிகளிடம் கூறினார்.

அந்த துறவியின் தீர்க்கமான பார்வையைக் கண்டு பக்தி உணர்வோடு கைக்கூப்பி வாருங்கள்… அழைத்துச் செல்கிறோம் என்று படகை திரும்பவும் கரையோரம் நிறுத்தினார்கள்.

படகில் இருந்தவர்களோ, இப்போதே அதிகப்படியானவர்கள் படகில் இருக்கிறோம். இதில் அந்த துறவியையும் ஏற்றுவது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதை இரு படகோட்டிகளும் பொருட்படுத்தாமல், துறவியை அமர வைத்துக்கொண்டு படகை எதிர்கரை நோக்கி புறப்பட்டார்கள்.

துறவி மிகக் குறுகிய இடத்தில் அமர்ந்து கை, கால்களை நீட்ட முடியாமல் தவித்தார். இருந்தாலும் படகில் இருந்தவர்கள் அவருக்கு இடம் தரக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்ததால், அந்த குறுகிய இடத்தில் முடங்கியவாறு பயணிக்க வேண்டியிருந்தது.

ஆற்றி நீர் அப்போதே மிகவும் குளிர்ந்து போயிருந்தது. அப்போது படகில் இருந்த சிலர் வேண்டுமென்றே துறவியின் மீது அந்த தண்ணீர் பட வேண்டும் என்ற நோக்கத்தில் கையால் வாரி இறைத்தார்கள்.

தன் மீது குளிர்ந்த நீர் பட்டதால் அவருக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. காரணம் அதற்கு அவர் பல காலமாக பழகியவர் என்பதால் அதை பொருட்படுத்தாமல் பயணத்தை தொடர்ந்தார்.

படகோட்டிகள் எவ்வளவோ கண்டித்தும் பலனில்லை. ஒரு கட்டத்தில் பலரும் தண்ணீரை வாரி அடித்ததால் படகுக்குள் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. அதுவரை அசைந்தாடி எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் சென்ற படகு ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது.

படகு கவிழ்ந்தால் இந்த துறவியால்தான் கவிழும். அவருடைய அதிக பாரத்தை தாங்காமல்தான் படகு தள்ளாடுகிறது. அவர் சாவதோடு நம்மையும் சாக வைத்துவிடுவார் போலிருக்கு என்று கூக்குரலிட்டார்கள்.

அப்போது, ஒரு அசரீரி வானில் இருந்து கேட்டது. துறவி உங்கள் படகில் வருவதால்தான் அது கவிழாமல் இருக்கிறது. அவர் இந்த படகில் ஏறாமல் இருந்தால் இந்த படகை கவிழ்த்து உங்கள் எல்லோர் உயிரையும் பாசக் கயிற்றால் கட்டி எமலோகம் இழுத்துச் சென்றிருப்பேன். தப்பிவிட்டீர்கள் என்றது அசரரீ.

இதைக் கேட்ட பயணிகள் எல்லோரும் மிரண்டு போய் அமைதியாக அமர்ந்து விட்டார்கள். துறவியோ கண்களை மூடிய தியான நிலையிலேயே பயணித்ததால், அவர் காதுகளில் அசரீரி விழவில்லை.

கரையை நெருங்கியபோது அந்த துறவிக்கு புறவுலக நினைவு வந்தது. அவருக்கு இடம் தராமல் நெருக்கடி கொடுத்தவர்கள் அவரை விட்டு தள்ளி பயபக்தியோடு அவரை பார்த்து கும்பிட்டபடி இருந்தார்கள். துறவிக்கு ஒன்றும் புரியவில்லை.

படகில் இருந்து முதலில் இறங்குவதற்கு எல்லோரும் வழிவிட்டார்கள். அவர் இறங்கி படகோட்டியிடம் நன்றி சொல்லி புறப்பட்டார்.

அதற்குள் படகில் வந்தவர்கள் எல்லோரும் விழுந்தடித்து ஓடி வந்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள்.

அவர் சிரித்தபடியே, நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். இறைவன் உங்களை காப்பாற்றுவார். தீர்க்காயுள் பவ. என்று சொல்லி ஆசிர்வதித்து விடைப் பெற்றார் என்று சொல்லி முடித்தார் தாத்தா.

சரி.. இந்த கதையில் இருந்து நீ என்ன தெரிந்துகொண்டாய் என்று தாத்தா இப்போது கேள்வி எழுப்பினார்.

மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை சொல்லும் கருத்து

தாத்தா… அடிப்பட்டதால் ஏற்பட்ட காயத்தால் அவனை பழி வாங்குவேன் என்று சொல்லிவிட்டேன். அவன் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்பதை இந்த கதை மூலம் புரிந்துகொண்டேன் என்றான் ஆனந்தன்.

இந்த கதையையொட்டிய ஒரு திருக்குறள் இருக்கிறது அதையும் சொல்லி விடுகிறேன்.

இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்

(குறள் 314)

தீமை செய்தவர்களை நாம் பதிலுக்கு தண்டிப்பது தவறு. அவர்களுக்கு தீமைக்கு பதில் நன்மை செய்து, தன் தவறை உணர்ந்து வெட்கமடையச் செய்ய வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

திருக்குறள் கதை வழியில், உன்னை கீழே தள்ளிவிட்டவனுக்கு நன்மை செய்து அவனை வெட்கபடச் செய்ய வேண்டும் என்றார் தாத்தா.

நிச்சயமாக தாத்தா.. உங்களுடைய திருக்குறள் கதை என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றான் ஆனந்தன்.

எமலோகத்தில் அரசியல்வாதி ஆத்மா

நல்லோர் திருக்குறள் – கதையும் விளக்கமும்

பிற உயிர்களிடத்தில் அன்பு திருக்குறள் கதை 36

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 36) பிற உயிர்களை துன்புறுத்துவது சரியா? என்பதை விளக்கும் கதையும், திருக்குறள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

தாத்தாவும் ஆனந்தனும்

ஆனந்தன் மாலையில் வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தா ஏதோ ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

ஆனந்தனுக்கு அந்த பாடல் வரிகள் காதில் விழவில்லை. அதனால் தாத்தா… என்ன பாட்டு பாடுறீங்க என்று கேட்டான்.

இதைக் கேட்ட தாத்தா, நீயும் கேளு இந்த பாட்டை… என்று சொல்லிவிட்டு உரக்க பாடத் தொடங்கினார்.

“உயிர்களிடத்து அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என அவர் பாடத் தொடங்கிய அவர். இடையில் நிறுத்திவிட்டு, இது யார் பாடிய பாட்டு சொல்லு என்று கேள்வியை எழுப்பினார்.

தாத்தா! இது மகா கவி பாரதியின் பாடல் வரிகள். சரியா.. என்றான் ஆனந்தன்.

ஆமாம்.. பாரதி பாடிய பாடல் வரிகள்தான் இவை. ஆனால் இன்றைய சிறுவர்கள் இதனுடைய பொருள் உணராது பிற உயிர்களுக்கு துன்பம் தருகிறார்கள்.

சற்று முன்பு சாலையில் இரு சிறுவர்கள் ஒன்றும் அறியாத ஓணானைப் பிடித்து அதன் வாலில் நூலை கட்டி சாலையில் இழுத்துக் கொண்டு போனார்கள்.

இதைப் பார்த்துவிட்டு… என்னப்பா.. இப்படி செய்யலாமா என்று கேட்டேன். ஆனால் அந்த சிறுவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த ஓணானை இம்சைப்படுத்திக்கொண்டே சென்றது என்னை பாதித்தது.

அதனால்தான் இந்த பாட்டை நான் இப்ப பாடினேன் என்று விளக்கம் கொடுத்தார் தாத்தா.

சிறுவர்களை தேடிச் சென்ற ஆனந்தன்

இதைக் கேட்ட ஆனந்தன், தாத்தா உடனே அவர்களை சந்தித்து இதை புரிய வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு தாத்தாவின் பதிலுக்கு காத்திருக்காமல் அந்த சிறுவர்கள் சென்ற வழியில் ஓடிப்போனான்.

அந்த தெருவை தாண்டியதும் அருகில் ஒரு வயல் பகுதி இருந்தது. அந்த இடத்தில் தாத்தா சொன்ன அந்த சிறுவர்கள் நிற்பதைப் பார்த்தான்.

ஆனந்தன் எல்லோரிடமும் சகஜமாக பேசும் பழக்கமுடையவன். இதனால் அவனை கண்டதும், அந்த சிறுவர்கள், என்ன அண்ணா… இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என்றார்கள்.

நீங்கள் இருவரும் ஓணானை இம்சை செய்வதை அறிந்துதான் ஓடி வந்தேன். அப்படி செய்வது பாவம் என்பதை சொல்லத்தான் ஓடி வந்தேன். அதை ஒன்றும் செய்யாதீர்கள், என்றான் ஆனந்தன்.

ஆனந்தா! உனக்குத் தெரியாது, “ஓணான் எங்களைப் பார்த்து ஏளனமாக தலையாட்டி சிரித்தது என்றார்கள் இருவரும்.

ஓணானின் இயல்பே இருபுறமும் தலையை அசைத்து வாயை திறந்து மூடுவதுதான். இதை நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டு அதை கஷ்டப்படுத்துகிறீர்கள். அதை விட்டு விடுங்கள் என்றான் ஆனந்தன்.

வாங்க… இரண்டு பேரும். தாத்தா நமக்கு அருமையான கதை சொல்ல காத்திருக்கிறார் என்று சொல்லி ஓணானை விடுவிடுத்து தாத்தாவிடம் அழைத்து வந்தான் ஆனந்தன்.

தாத்தாவிடம் வந்து நின்ற சிறுவர்கள்

இருவரையும் பார்த்த தாத்தா… ஓணானை விடுவித்து விட்டீர்களா என்று கேட்டார். தாத்தா… தெரியாமல் தவறு செய்துவிட்டோம். ஆனந்தன் ஓடி வந்து சொன்னதும், அதை விடுவித்து விட்டோம்.

தாத்தா எங்களுக்கு கதை ஒன்று சொல்லுங்களேன் என்றார்கள் சிறுவர்கள்.

கதை சொல்வதற்கு முன்பு அறங்களுள் ஒன்று கொல்லாமை. அது பற்றிய திருக்குறள் சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா.

கொல்லாமை என்றால் என்ன தாத்தா என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்போது தாத்தா பதில் சொல்லத் தொடங்கினார்.

பிற உயிர்களிடத்தில் அன்பு

ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான உயிர்களை மறந்தும் கொல்லுதல் பாவம் அதுதான் கொல்லாமை. அது மட்டுமின்றி அவைகளை துன்புறுத்துவதும் தவறு. அறங்களுள் சிறந்தது கொல்லாமைதான்.

இதைத்தான் திருக்குறள்,

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.

(குறள் – 324)

என்னும் பாடல் மூலம் நமக்கு அறிவுரை வழங்குகிறது.

அதாவது, நல்ல நெறி என்று அறவோரால் சொல்லப்படுவது என்னவெனில், எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே சிறந்த நெறி என்பதுதான் இதன் பொருள்.

முனிவரும் பாம்பும்

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். ஏதோ தன்னருகே ஒரு சத்தம் கேட்டதை உணர்ந்த அவர், லேசாக கண் திறந்து பார்த்தார்.

தன் எதிரே உடல் முழுவதும் காயங்களோடு ஒரு பாம்பு அவர் அருகே நெளிந்தபடி இருந்தது.

அந்த பாம்பு அவருக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டது. அதனால் அதனிடம் முனிவர் பேசத் தொடங்கினார்.

உன் உடம்பெல்லாம் காயமாக இருக்கிறதே. என்ன நடந்தது என்று கேட்டார்.

உங்களிடம் ஒரு நாள் வந்து உபதேசம் கேட்டேன். அப்போது நீங்கள் நீ யாருக்கும் தீங்கு செய்யாதே என்று அறிவுறுத்தினீர்கள்.

அதை கேட்டு நானும் இனி யாரையும் தீண்டி காயப்படுத்துவதில்லை என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் உணவுத் தேடி புற்றில் இருந்து புறப்பட்டு சென்றேன். அப்போது என்னை கண்ட என்னை கல்லால் அடிக்கத் தொடங்கினார்கள். உயிர் பிழைக்க ஆசைப்பட்டு உங்களிடம் ஓடி வந்திருக்கிறேன் என்றது பாம்பு.

உன்னுடைய விஷம் மற்றவர்களை கொல்லக் கூடியது. அதனால் நீ யாருக்கும் தீங்கு செய்யாதே என்று உபதேசம் செய்தேன். ஆனால் உன்னுடைய அச்சுறுத்தும் சுபாவமான சீறும் குணத்தை விட்டுவிடச் சொல்லவில்லை. அதை நீ உன் தற்காப்புக்கு பயன்படுத்துவது ஒன்றும் தவறில்லை.

இனி யாராவது உன்னை துன்புறுத்த வந்தால், சீறி அவர்களை அச்சுறுத்து. ஆனால் அவர்களை கடித்துவிடாதே. உன் துன்பங்கள் நீங்கும். உன் காயங்கள் விரைவில் ஆறும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார் அந்த முனிவர்.

மீண்டும் ஒரு நாள் பாம்பு இரை தேட புறப்பட்டுச் சென்றபோது, அதே சிறுவர்கள் அதை பார்த்துவிட்டார்கள்.

உடனே அவர்கள் கற்களை வீச முயற்சித்தபோது, அவர்களை நோக்கி சீறி பாய்ந்தது அந்த பாம்பு. உயிர் பிழைத்தோம் என அந்த சிறுவர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள்.

பாம்பும் பிறருக்கு தீங்கு செய்யாமல் தன்னுடைய ஆயுளை நல்ல முறையில் கழித்தது என்று கதை சொல்லி முடித்தார் தாத்தா.

சிறுவர்கள் இப்போது தங்கள் தவறுக்கு தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டதோடு, இனி எந்த உயிருக்கும் நாங்கள் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதி சொல்லி விடை பெற்றார்கள்.

பிற உயிர்களிடத்தில் அன்பு திருக்குறள் சொல்வதென்ன?

பிறரை தீண்டினால் இறந்துவிடுவார்கள் என்ற அளவுக்கு விஷமுடைய பாம்பு கூட இனி யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று தீர்க்கமாக முடிவு எடுக்க முடிந்திருக்கிறது.

ஆனால் சிந்திக்க திறன் பெற்ற ஆறறிவு மனிதர்கள் நாம் பிற உயிர்களுக்கு தீங்கு செய்வது தவறு. அவையும் இந்த பூவுலகில் வாழ இறைவனால் படைக்கப்பட்டவை. பிற உயிரினங்களை துன்புறுத்துவது நெறி அல்ல என்பதை உணர்த்துகிறது.

தெய்வம் எப்போது துணை நிற்கும்-திருக்குறள் கதை 35

தமிழகத்தில் எத்தனை பேசுவோர் இருக்காங்க தெரியுமா?

தெய்வம் எப்போது துணை நிற்கும்? – திருக்குறள் கதை 35

குறளமுதக் கதைகள் வரிசையில் ஒருவருக்கு தெய்வம் எப்போது துணை நிற்கும்? என்ற கேள்விக்கு விடைத் தரும் சிறு கதையும், திருக்குறள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 35

காலை நேரம். அன்றைய நாளிதழ்களை படித்துவிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து சாலையில் போவோரையும், தூரத்தில் மரத்தில் அமர்ந்து தனது இனிய குரலை எழுப்பிக் கொண்டிருந்த குயிலின் குரலையும் ரசித்தபடியே அமர்ந்திருந்த தர்ம நாதரைத் தேடி விமலை வந்தார்.

தர்ம நாதர் விமலையைக் கண்டதும், வாம்மா… எப்படி இருக்கிறாய். பார்த்து வெகு நாளாகிவிட்டதே? எங்கே என் நண்பர் வரவில்லையா? என்று கேட்டார்.

காலை நேரத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. அவர் திரும்ப வீட்டுக்கு வெயிலில் போக முடியாது என்பதால் வரவில்லை என்றாள் விமலை.

அண்ணா… ஒரு சந்தேகம். நமக்கு தெய்வம் உதவி செய்யுமா? என்று கேட்டார்.

இதைக் கேட்டதும், தர்ம நாதர் வாய்விட்டு சிரித்தார். நல்ல கேள்வி கேட்டாயம்மா… இதற்கு ஒரு கதையுடன்தான் உனக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

திண்ணையில் உட்கார்… அந்த கதையை கேட்டுவிட்டு போ என்றார் தர்ம நாதர்.

ஏழ்மையில் ஆடு மேய்ப்பவன்

வறுமையில் வாடிய ஒருவனுக்கு தெய்வம் துணை நின்ற கதைதான் இது. அவனுடைய பெயர் கோவிந்தன். சிம்மபுரம் என்ற ஊரில் வசித்து வந்தான்.

ஒரு நாள் அவன் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். அப்போது அவன் சமாதி குப்தர் என்ற முனிவரைக் கண்டான்.

அவரை கண்ட அவனுக்கு அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவர் அருகே சென்று வணங்கினான்.

முனிவரிடம் ஆசிர்வாதம்

முனிவரே… பிறந்தது முதல் ஏழ்மையில் நான் வாடுகிறேன். என்னுடைய ஏழ்மையை போக்க ஏதேனும் ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவனுடைய கேள்வியை கேட்ட அவர் மௌனமாக புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து உனக்கு தர்மலாபம் உண்டாகட்டும். செல்வமும், சொல் வலிமையும், தோள் வலிமையும் உண்டாகட்டும்.

அவற்றால் கொடை உள்ளம் கொண்டு நீ அனைவரையும் காப்பாறுக.

நீ தர்மம் செய்வதை பழகிக் கொள். தர்மம் செய்வதை எக்காரணம் கொண்டும் நிறுத்திக் கொள்ளாதே என்று ஆசிர்வதித்தார்.

நீ சமண ஆகம நூல்களில் ஒன்றாக விளங்கும் பக்தா மர சுலோகங்கள் 31, 32 ஆகியவற்றை தொடர்ந்து படித்து வருக. அதனால் உனக்கு புண்ணிய பலன் கிட்டும் என்று சொல்லி அனுப்பினார்.

அன்னையின் அருள்

முனிவரின் வாக்கை பின்பற்றத் தொடங்கினான் கோபாலன். அவன் தொடர்ந்து ரிஷபநாத பகவானை பூஜித்து வந்தான்.

அவனுடைய விடா முயற்சியையும், சிரத்தையையும் கண்ட சக்ரேஸ்வரி அம்மன், அவன் முன்னே தோன்றினாள்.

கோபாலனே… உன் பக்தியை மெச்சினோம். நீ விரைவில் இந்நாட்டின் அரசனாவாய். தர்ம காரியங்களை செய்து மென்மேலும் நற்பதவிகளை அடைவாய் என்று ஆசிர்வதித்து மறைந்தாள்.

கோபாலன் தன்னுடைய நித்திய கடமைகளை தவறாமல் செய்து வந்தான்.

மாலை சூட்டிய பட்டத்து யானை

ஒரு நாள் அந்த நாட்டின் அரசன் திடீரென இறந்து போனான். அவனுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதை அறிந்து அண்டை நாட்டு மன்னன் போர் புரிய படைகளோடு புறப்பட்டான். இக்கட்டான நிலையில் அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்.

தெய்வத்தின் முன் திருவுளச் சீட்டு குலுக்கி போட்டனர். பட்டத்து யானை மூலம் ஒரு தகுதியானவனை நாட்டு அரசனாக தேர்வு செய்யுமாறு தெய்வக் கட்டளை வந்தது.

அதன்படி, பட்டத்து யானையிடம் மலர் மாலையை கொடுத்து நகரை வலம் வரச் செய்தார்கள்.

அந்த நேரத்தில் கோபாலன் எந்த சிந்தனையும் அற்று ரிஷபர் படிமைக்கு பூஜை செய்துக்கொண்டிருந்தான்.

இதைக் கண்ட பட்டத்து யானை அவனுடைய கழுத்தில் மாலையை போட்டது. அதையடுத்து அமைச்சர்களும், மக்களும் அவனை வரவேற்று அரியாசனத்தில் அமர வைத்தார்கள்.

பக்தி சொற்பொழில் ஒரு தகவல்

படை திரண்டு வந்த அண்டை நாட்டு அரசனை தன்னுடைய விவேகத்தால் சாதுர்யமாக படைகளை நடத்தி வெற்றி கண்டான் கோபாலன்.

எல்லாம் ஏதோ ஒரு மாயாஜாலம் போல் நடந்தது. இது கோபாலனுக்கு மட்டும் நடக்கும் மாயாஜாலம் அல்ல.

இந்த பூமியில் எவன் ஒருவன் பலன்களை எதிர்பாராது, தர்ம காரியங்களில் ஈடுபடுகிறானோ, அவனையே தெய்வம் ராஜ பதவியில் அமர வைக்கும்.

திருக்குறளும், அதன் விளக்கமும்

குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்

(குறள்- 1023)

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்யும் ஒருவனின் செயலுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு (சொல் வழக்கில் – கச்சைக் கொண்டு) உதவ முன்வந்து நிற்கும் என்பதுதான் இதன் பொருள் என்றார் தர்மநாதர்.

அண்ணா, இன்றைக்கு ஒரு நல்ல சிந்தனையைத் தூண்டும் கதையையும், குறளையும் கேட்கும் வாய்ப்பு உங்களை சந்தித்ததால் கிடைத்தது. மகிழ்ச்சி.

நானும் இறைவனின் துணை நாடி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று சொல்லி விடை பெற்றாள் விமலை.

திருக்குறள் கதைகள் 34 – எது வலிமை?

பக்தி சொற்பொழிவில் இடம்பெற்ற தகவல் பலகை (நகைச்சுவை)

கேள்வியும் பதிலும்

திருக்குறள் ஆசிரியரின் சிறப்பு பெயர்கள் எவை?

குந்தக் குந்தர், தேவர், நாயனார், தெய்வப் புலவர், செந்நாப்போதகர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி

திருக்குறள் எத்தனை அதிகாரங்களை உடையது

133 அதிகாரங்களைக் கொண்டது திருக்குறள்

ஒரு அதிகாரத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன?

ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டிருக்கிறது.

எத்தனை குறட்பாக்களைக் கொண்டது?

1330 குறட்பாக்களைக் கொண்டது திருக்குறள்.

எத்தனை மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது?

120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

திருக்குறளை முதலில் அச்சில் பதிப்பித்தவர் யார்?

கி.பி.1812-ஆம் ஆண்டில் தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர், மரத்தால் ஆன அச்சு எழுத்துக்களைக் கொண்டு திருக்குறளையும், நாலடியாரையும் அச்சு நூலாக வெளியிட்டார்.

எது வலிமை? – திருக்குறள் கதை 34 சொல்வதென்ன?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 34) எது வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான விளக்க சிறுகதையையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.

அரசனும், கிளிகளும்

ஒரு நாட்டை ஆண்ட அரசன் காட்டுக்கு குதிரையில் பயணமானார். அவரை மரம் ஒன்றில் அமர்ந்திருந்த கிளி ஒன்று பார்த்தது.

உடனே அது அடி, உதை, பிடி, கொள்ளையடி என்று கத்தியது. இது அரசனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அவர் அந்த ஆச்சரியம் அடங்குவதற்குள் மற்றொரு மரத்தில் இருந்த கிளி வாங்க… வாங்க.. என்று அழைத்தது.

அரசனுக்கு அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. இரு கிளிகளையும் யாரோ பேசுவதற்கு பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

அரண்மனைக்கு திரும்பி வந்த அரசன், தன்னுடைய அமைச்சரை அழைத்து இந்த அதிசயத்தைச் சொன்னார்.

அமைச்சரின் விளக்கம்

இதைக் கேட்ட அமைச்சர் சொன்னார். ஒரு கிளியை வளர்த்தவர்கள் தீயவர்கள். அதுவும் கொள்ளையர்கள். அவர்கள் என்ன பேசுகினார்களோ… அதையே அது பின்பற்றி பேசியது.

மற்றொரு கிளியோ, நல்லவர்களின் வளர்ப்பாக இருந்திருந்திருக்கிறது. அந்த கிளியை வளர்த்தவர்கள் உபசரிப்பு எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதனால் இரு கிளிகளும் வெவ்வேறு வார்த்தைகளை பேசியதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.

இது கிளிகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். ஒருவன் நல்லவர்களோடு சேர்ந்து பழகினால்,அவனுக்கு நல்ல எண்ணங்களும், நல்ல வார்த்தைகளுமே வெளிப்படும்.

ஒருவன் தீயவர்களோடு பழகினால், தீய குணங்கள் தொற்றிக் கொள்வதோடு, மற்றவர்களை மிரட்டும் வார்த்தைகளையும், காயப்படுத்தும் வார்த்தைகளையுமே பேசும் குணம் ஏற்பட்டுவிடும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை .

(குறள்- 444)

எது வலிமை?

தம்மினும் அறிவில் சிறந்த பெரியவர்களை தனது சுற்றமாகச் சேர்த்துக் கொண்டு அவர் வழி நடத்தலே ஒருவரின் வலிமைகளில் எல்லோவற்றிலும் சிறந்த வலிமை என்கிறார் குந்த குந்தர் என்றார் அமைச்சர்.

திருக்குறள் கதைகள் 33 – உள்ளத்தால் உயர்வு

கடலுக்கு அடியில் ஆக்சிஜன் உற்பத்தி எப்படி

உள்ளத்தனையது உயர்வு! – திருக்குறள் கதை 33

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 33) உள்ளத்தனையது உயர்வு என்ற தலைப்பிலான சிறுகதையும், அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்கும் திருக்குறளும் இடம்பெறுகிறது.

உள்ளடக்கம்

கோகுலும் ராகுலும்

கோகுல்… என்று கூப்பிட்டவாரே ராகுல் வந்தான்.

அவனது குரலைக் கேட்டதும், உள்ளே வா ராகுல் என்று வரவேற்றான் கோகுல்.

கோகுல்… இன்றைக்கு உன் பள்ளிக்கு தொடக்கக் கல்வி அலுவலர் வந்தாராமே? என்றான் ராகுல்.

ஆமாம். உனக்கும் அது தெரிஞ்சு போச்சா? என்றான் கோகுல்.

சரி… அவர் உங்களிடமெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்திருப்பாரே… எப்படி சமாளித்தீர்கள் என்றான் ராகுல்.

இப்போது பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினான் கோகுல்.

முதலில் அவர் வாசித்தல் திறனை சோதித்தார். அதில் நாங்கள் எல்லோரும் திறமையாக படித்து பாராட்டை பெற்றோம்.

ஆனால்… அவர் ஒரு கேள்வி கேட்ட எங்களையெல்லாம் திணறச் செய்தார்.

தாமரை செடியின் உயரம் என்ன?

தாமரை பூ பூக்கும் செடியின் உயரம் என்ன என்பதுதான் அந்த கேள்வி.

நாங்கள் எல்லோருமே இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் கொஞ்சம் தடுமாறினோம்.

என்னுடைய நண்பன் ஒருவன். தாமரைச் செடியின் உயரம் இரண்டரை அடி என்று கூறினான்.

ஆனால் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றொரு எதிர் கேள்வி கேட்டு மடக்கினார்.

தாமரைச் செடி 4 அடி உயரம் வளராதா என்பதுதான் அந்தக் கேள்வி. இதனால் எல்லா மாணவர்களும் வாய்விட்டு சிரித்தார்கள்.

இப்போது எனக்கு பாட்டி ஒரு நாள் தாமரையைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தொடக்கக் கல்வி அலுவலரை பார்த்து, அய்யா… தாமரைச் செடியின் உயரத்தை நான் சொல்லட்டுமா… என்றேன்.

எங்கே சொல் பார்க்கலாம். நீ சரியாக சொல்லிவிட்டால், உனக்கு ஒரு பேனா பரிசு தருகிறேன் என்றார் அவர்.

பதிலுக்கு கிடைத்த பரிசு

அய்யா… தாமரைச் செடிக்கு என்று தனி உயரம் கிடையாது. நீர் நிலைகளில் வளரும் தாமரைச் செடியில் உள்ள தாமரை எப்போதும் நீரின் மேலே மிதந்தபடித்தான் இருக்கும்.

அதனால் குளத்தில் எவ்வளவு ஆழத்திற்கு நீர் இருக்கிறதோ அதுதான் அந்த தாமரைச் செடியின் உயரமாகவும் இருக்கும்.

நீர் குறைவாக இருக்கும்போது உயரம் குறைவாகவும், நீர் அதிகரிக்கும்போது அதன் உயரமம் அதிகமாகவும் ஆகும்.

தாமரையின் இயற்கை குணம் அது எப்போது தண்ணீர் மீது மிதப்பதுதான் என்று சொன்னேன்.

என்னுடைய விரிவான பதிலை கேட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சபாஷ்… சரியான பதில். இந்தா.. என்று கூறி பேனாவை பரிசளித்தார்.

அத்துடன் அவர் இந்த பதிலைக் கேட்டதும் உள்ளத்தனையது உயர்வு என்று முடியும் திருக்குறள் ஒன்றையும், உள்ளத்தனையது உயர்வு என்றால் என்ற விளக்கத்தையும் சொன்னார் என்றார் கோகுல்.

எந்த திருக்குறளை சொன்னார் என்று கேட்டான் ராகுல்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு

(குறள் – 595)

உள்ளத்தனையது உயர்வு

நீர்நிலைகளில் உள்ள தண்ணீரின் அளவே அதில் மலர்ந்திருக்கும் தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வு என்பது அவர் மனதில் கொண்டிருக்கும் ஊக்கத்தின் அளவே இருக்கும். உள்ளத்தனையது உயர்வு என்பதுதான் அந்த திருக்குறளின் விளக்கம் என்றான் கோகுல்.

அருமை… அருமை என்று சொன்ன நண்பன், உள்ளத்தனையது உயர்வு என்பது நம்முடைய எண்ணங்களைப் பொறுத்துதான் நாம் வாழ்க்கையில் உயர முடியும் என்பது சரியானதுதான்.

உள்ளத்தனையது உயர்வு என்பதற்கான சரியான பாடலை அந்த அலுவலர் சொன்னதும் சரியே. நாமும் வாழ்க்கையில் உள்ளத்தால் உயர்வு என்பதை கடைப்பிடிப்போம் நண்பா.. என்றான் அவன்.

நாவடக்கம் தரும் நற்செய்தி – திருக்குறள் கதை

குழந்தைகள் தொலைகாட்சியை நீண்ட நேரம் பார்த்தால் என்ன பாதிப்பு வரும்?

கேள்வியும் பதிலும்

திருக்குறளில் உள்ள மூன்று பால்களில் எத்தனை எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன.
அதன்படி 133 அதிகாரங்களில் 1330 குறள் வெண்பாக்களால் கட்டமைக்கப்பட்டதுதான் திருக்குறள்.

திருக்குறளில் பயன்படுத்தாத இரு சொற்கள் எவை?

தமிழ், கடவுள்

முதன் முதலில் திருக்குறள் புத்தகமாக அச்சிடப்பட்ட ஆண்டு என்ன?

1812-ஆம் ஆண்டில் முதன் முதலில் திருக்குறள் புத்தகமாக வெளிவந்தது.

திருக்குறளுக்கு முதலில் இட்ட பெயர் என்ன?

முப்பால்

ஒவ்வொரு திருக்குறளும் எப்படி அமைந்திருக்கிறது?

இரண்டு அடிகளில் 7 சீர்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. முதல் அடியில் 4 சீர்களும், இரண்டாவது அடியில் 3 சீர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஒரே திருக்குறளில் 6 முறை வந்துள்ள ஒரு சொல் எது?

பற்று.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

திருக்குறளில் எத்தனை சொற்கள் உள்ளன

திருக்குறளில் 14 ஆயிரம் சொற்கள் உள்ளன.

திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

42,194 எழுத்துக்கள் திருக்குறளில் உள்ளன.

தமிழ் எழுத்துக்கள் 247-இல் எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை?

திருக்குறளில் மொத்தமுள்ள தமிழ் எழுத்துக்களில் 210 எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 37 எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறளில் பயன்படுத்தாத எண் எது?

திருக்குறளில் 9 என்ற எண் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறளின் சிறப்புக்கும், பெருமைக்கும் துணை நிற்பது எது?

திருவள்ளுவமாலை.

திருவள்ளுவர் இருமுறை பதிவு செய்திருக்கும் அதிகாரம் என்ன?

குறிப்பறிதல்

திருக்குறளில் பயன்படுத்தாத உயிர் எழுத்து எது?

திருக்குறளில் இடம்பெற்ற இரு மரங்களின் பெயர்கள் என்ன?

பனை, மூங்கில்

இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் யார்?

வீரமாமுனிவர்

திருக்குறளை உரையின்றி அச்சுப்பணி செய்தவர் யார்?

ஞானப்பிரகாசர்.

திருக்குறள் எந்த மதத்தைப் பற்றி பேசுகிறது?

திருக்குறள் குறிப்பிட்ட மதம், கடவுளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை.

உலகின் மிக உயரமான சிலை திருவள்ளுவருக்கு எங்கே வைக்கப்பட்டிருக்கிறது?

கன்னியாகுமரியில். இந்த சிலை கடலில் விவேகானந்தர் பாறைக்கு அருகே 133 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவர் ஆண்டு எப்போது முதல் கணக்கிடப்படுகிறது?

திருவள்ளுவரின் காலம் கி.மு.31. இதையே தொடக்க ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

திருவள்ளுவரின் சொந்த ஊர், பெற்றோர் பற்றிய தகவல் உண்டா?

திருவள்ளுவரின் ஊர் எது என்பது ஆதாரங்களுடன் எதையும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவருடைய பெற்றோர் குறித்த தகவலும் கிடைக்கவில்லை.

திருக்குறள் எப்போது எழுதப்பட்டது?

காலத்தால் அழியாத பண்டைய தமிழ் ஞானத்தின் தொகுப்பாக கருதப்படுகிறது.
தமிழ் மரபின் வாயிலாகவும், கடைச்சங்கத்தின் கடைசி நூலாகவும் இதை அறிஞர்கள் கருதுகிறார்கள்.

நாவடக்கம் திருக்குறள் கதை 32

குறளமுதக் கதைகள் வரிசையில் நாவடக்கம் திருக்குறள் கதை 32 நாவடக்கம் இல்லாவிட்டால் நம்முடைய தகுதியை இழந்து மற்றவர்களிடத்தில் தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை வலியுறுத்துகிறது.

மன்னனின் ஆணை

ஒரு நாட்டை ஆண்ட அரசன் நாவடக்கம் இல்லாதவனாக இருந்தான். அவன் ஒரு நாள் இரத்தினத்தை சுத்தம் செய்யும் முறையை அறிய ஆசைப்பட்டான்.

உடனடியாக அவன் ஒரு உத்தரவை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து இரத்தின வியாபாரிகளும் அரசவைக்கு உடனடியாக வர வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

அரசவையில் கூடிய வியாபாரிகளை பார்த்த, அரசன் நான் உடனடியாக இரத்தினங்களை சுத்தம் செய்யும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும். அதை நீங்கள் இப்போதை கற்றுத் தர வேண்டும் என்றான்.

இரத்தின வியாபாரிகள் எல்லோரும் தயங்கினார்கள். அமைச்சர் அவர்களை நெருங்கி ஏன் தயங்குகிறீர்கள் என்று மெல்ல கேட்டார்.

அதை உடனடியாக கற்றுத் தருவது இயலாதது. அதை எப்படி அரசரிடம் தெரிவிப்பது என்பதால் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்தனர்.

அமைச்சர் இதை அரசனிடம் சொன்னால் கோபப்படுவான் என்பதால் அவர் அவர்களின் தயக்கத்தின் காரணத்தைச் சொல்லாமல் பேசாமல் நின்றுவிட்டார்.

எல்லோருடைய மவுனத்தையும் மீண்டும் அரசன் களைத்தான். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அரச தண்டனைக்கான நேரம் நெருங்கிவிட்டதாக அர்த்தம்.

சொல்லித் தர தவறினால் எல்லோரையும் சிரச்சேதம் செய்ய உத்தரவிட நேரிடும் என கடுமையாக எச்சரித்தான்.

அவசரப்பட்ட அரசன்

இரத்தின வியாபாரிகள் வயதான ஒருவர் நான் இப்போதே சொல்லித் தருகிறேன் அரசே… ஆனால் ஒரு நிபந்தனை என்றான்.

எந்த நிபந்தனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் சொல்லும் என்றான் அரசன்.

நான் கற்றுத் தருவதற்கு குருதட்சணை தர வேண்டும் என்றார் அந்த பெரியவர். அப்போதும் அரசன், கஜானா அதிகாரியை கூப்பிட்டு, இவர் என்ன தட்சணை கேட்கிறாரோ அதைக் கொடு என உத்தரவிட்டான்.

இந்த குருதட்சணை செல்வம் அல்ல. உங்களின் ஆற்றல். நீங்கள் எப்படி ஒரு நாட்டை அரசாட்சி செய்கிறீர்கள் என்பதை இப்போதே கற்றுக் கொடுத்தால், நான் இரத்தினங்களை சுத்தம் செய்வதைக் கற்றுத் தருகிறேன் என்றார் பெரியவர்.

அரசனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. பெரியவரே.. நான் எப்படி உடனே கற்றுத் தர முடியும். அதற்கு பல ஆண்டுகள் என்னோடு நீங்கள் இருந்தாக வேண்டும் என்றான் கோபமாக.

அரசனின் பதிலைக் கேட்ட முதியவர் சொன்னார், கோபப்படாதீர்கள். எப்படி ஒரு நாட்டை எப்படி அரசாட்சி செய்வது என்பதை உடனே கற்றுத் தர இயலாதோ, அது மாதிரிதான் இரத்தினத்தை சுத்தம் செய்யும் முறையை ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியாது.

அதற்கு பல ஆண்டுகள் இரத்தின வியாபாரிகளுடன் இருந்து கற்க வேண்டியிருக்கும் என்றார் முதியவர்.

திருக்குறள் சொல்லும் கருத்து

இதைக் கேட்ட அரசன் தன்னுடைய தவறை உணர்ந்து தலைகுனிந்தான். அமைச்சரை அருகில் அழைத்து அனைவரையும் கௌரவித்து அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு, இரத்தின வியாபாரிகளிடம் மன்னிப்பு கேட்டான்.

இந்தக் கதை போன்று நாம் எதை காக்காவிடிலும், நாவையாவது காக்க வேண்டும் என்கிறது திருக்குறள்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

(குறள் – 127)

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவர் சொன்ன சொல்லே அவரின் துன்பத்துக்கு காரணமாகிவிடும் என்பதுதான் அதன் பொருள்.

தேரான் தெளிவும் திருக்குறள் கதை

இந்தோனேஷியால் பழைமையான குகை சித்திரம்

இருவேறு உலகத்து: திருக்குறள் கதை 30

குறளமுதக் கதைகள் வரிசையில் திருக்குறள் கதை 30 இருவேறு உலகத்து என்று தொடங்கும் திருக்குறளுக்கான கதையும், விளக்கத்தையும் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல இன்றைக்கும் தாத்தாவை அழைத்தபடியே ஆனந்தன் உள்ளே நுழைந்தான்.

இருவேறு நிலைகள் ஏன்?

ஈஸி சேரில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தர்ம நாதர், அவனுடைய குரலைக் கேட்டு என்னப்பா… என்று சொல்லி நிமிர்ந்தார்.

தாத்தா… நான் என் நண்பன் சுரேஷ் வீட்டுக்குப் போனேன். அவனுடைய வீடு குடிசையாக இருந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்து நண்பன் ரமேஷ் வீட்டுக்கு போனேன். அவனுடைய வீடு மிகப் பெரிதாக அழகான கட்டடமாக இருந்தது.

குடிசையில் வாழுும் சுரேஷ் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான். ரமேஷ் படிப்பில் கடைசி இடத்தில் இருக்கிறான். வீட்டுக்கும் படிப்புக்கும் ஏதாவது தொடர்பு உண்டா தாத்தா என்று கேட்டான் ஆனந்தன்.

குறிக்கோளும், எண்ணங்களும்

இதை உனக்கு ஒரு கதை மூலம் தெளிவுபடுத்துகிறேன். அருகில் உட்கார் என்றார் தாத்தா.

ஆறு மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு மாமரத்தடிக்கு சென்றார்கள். அவர்கள் போனது பழம் சாப்பிட. 6 பேருக்கும் தான்தான் அதிக பழங்களை சாப்பிட வேண்டும் என்பது ஆசை.

பழங்கள் மரத்தில் உயரத்தில் இருந்தது. அதனால் முதலாமவன் மரத்தில் ஏறி பறித்தால் சரிபட்டு வராது. பேசாமல் மரத்தை வேரோடு சாய்ப்பதுதான் நல்லது என முடிவு செய்து அந்த முயற்சியில் ஈடுபட்டான்.

இரண்டாவது ஆளோ மரத்தை வேரோடு பிடுங்குவது இப்போதைக்கு நடக்காத காரியம் அடிமரத்தை வெட்டினால் சாய்ந்துவிடும் என அதை வெட்ட தயாரானான்.

மூன்றாவது நபரோ பெரிய மரமாக இருக்கு. இவர்கள் இருவரும் எப்போது வெட்டி முடிப்பது. பேசாமல் பழங்கள் அதிகம் இருக்கும் கிளையை மட்டும் ஏறி வெட்டுவோம் என முடிவு செய்து அவன் கிளையை வெட்டத் தொடங்கினான்.

நான்காவது நபர் மரத்தில் ஏறி கைக்கு எட்டிய பழுத்த பழங்கள் மற்றும் பழக்காத காய்களை பறிக்கத் தொடங்கினான்.

5-ஆவது நபரோ மரத்தில் ஏறி பழுத்த பழங்களை மட்டும் பறித்தான். 6-ஆவது நபர் கீழே விழுந்த பழங்களை பொறுக்கத் தொடங்கினான்.

இவர்களின் எண்ணமும் குறிக்கோளும் பழம் சாப்பிடுவதுதான். ஆனால் அவர்களுடைய செயலில் மாற்றம் இருக்கிறது.

முதலாவது நபருக்கு பேராசை. மரத்தோடு பிடுங்கி அதிகப் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை.

ஆறாவது நபரில் ஆசை மிகக் குறைவு. மரத்தில் இருந்து கீழே விழும் பழங்கள் போதும் என்கிற குறைந்த ஆசை.

இவர்களுடைய குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும், அவர்களுடைய எண்ணங்களில் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது.

முதல் மனிதனோ தன்னுடைய குறிக்கோளை அடைய கொடூரமான முறையில் மரத்தை சாய்ப்பது. ஆறாவது மனிதனோ தன்னுடைய குறிக்கோளை அடைய மரத்திற்கு எந்த தீங்கும் இன்றி கீழே விழும் பழங்கள் போதும் என்ற எண்ணம்.

குந்த குந்தர் கூறுவது என்ன?

இந்த எண்ணங்கள்தான் ஒருவருடைய வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன. அந்த எண்ணங்களால் ஏற்படும் வினைகள் நம்முடைய இன்ப, துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றன. இதைத்தான் வினைப்பயன் என்கிறார்கள்.

இதைத் தான் குந்த குந்தர் தன்னுடைய திருக்குறள் பாடல் வரிகள் மூலம் நமக்கு சொல்கிறார்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு

(குறள் – 374)


உலக வாழ்க்கையானது இரு வேறு இயல்பைக் கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர். மற்றவரோ நுண்ணறிவும், ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்று வாழ்கின்றனர் என்கிறார்.

அறிவுடையவர் வறியவராகவும், அறிவிலாதோர் செல்வமுடையவராகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் செய்த முன் வினைப் பயனே என்கிறார் குறலாசான்.

ஆனந்தா… இப்போது உன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டதா என்றார் தாத்தா.

கொல்லாமை – திருக்குறள் கதை

மனைவி பதிலில் அதிர்ந்த கணவர்

கொல்லாமை திருக்குறள் கதை 29

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதை 29 கொல்லாமை சிறப்பு குறித்து விளக்குகிறது அத்துடன் அது தொடர்பான திருக்குறள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

துறவறம் ஏன்? எதற்கு

தாத்தா… என்று அழைத்தவாறு உள்ளே வந்தாள் குணவதி. அவளது குரலைக் கேட்ட விமலை, என்ன… திடீரென்று தாத்தாவைத் தேடுகிறாய்? என்றாள்.

பாட்டி… எனக்கு ஒரு சந்தேகம். தீர்த்தங்கரர்கள் துறவறம் ஏற்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்று வினவினாள்.

இருக்கு… ஒவ்வொரு தீர்த்தங்கரரும் காரணத்தோடு துறவறம் ஏற்றிருக்கிறார்கள்.

முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் நீலாஞ்சனை என்னும் பெண் நடனமாடியதைக் கண்டு வந்தார்.

அப்போது அந்தப் பெண் திடீரென மயங்கி வீழ்ந்து இறந்து போனாள். இதைக் கண்ட ரிஷபர் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்து துறவறம் ஏற்றார்.

ரிஷபநாதரின் வரலாற்றைக் கேட்டறிந்த பார்சுவரும் துறவறம் ஏற்றார். மகாவீரர் சாரண முனிவர்களின் மூலமாக முற்பவ வாழ்வைக் கேட்டு துறவேற்றார்.

இப்படி ஒவ்வொரு தீர்த்தங்கரரும் துறவரம் ஏற்க ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்றாள் பாட்டி.

திருக்குறள் சொல்வது என்ன?

ஓ… அப்படியா என்று பதில் சொன்ன குணவதியைப் பார்த்து, சரி… இப்போது ஏன் திடீரென தீர்த்தங்கரர்களின் துறவறம் பற்றி நீ கேட்கிறாய் என்றாள் பாட்டி.

பாட்டி… நான்

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை

(குறள்-325)

என்ற திருக்குறளை படித்தேன்.

அதனுடைய பொருள் என்ன சொல் பார்க்கலாம் என்றாள் பாட்டி.

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்று தெய்வப்புலவர் கூறியுள்ளார். சரியா பாட்டி என்றாள் குணவதி.

சரி. இப்போ இந்த குறளை நீ மனதில் வைத்துக் கொள்வதற்கு நேமிநாதரின் கதையை சொல்கிறேன் கேள் என்று பாட்டி சொல்லத் தொடங்கினாள்.

நேமிநாதர்

நேமிநாதர் ஜைன மதத்தின் 22-ஆவது தீர்த்தங்கரர். இவர் வட இந்திய நகரமான சௌரிபுராவில் அரி குலத்திலகன் காசிப கோத்திரத்து அரசன் சமுத்திர விஜயனுக்கும், அவனுடைய மனைவி சிவதேவிக்கும் மகனாக பிறந்தவர்.

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவ் கிருஷ்ணன். இவர் நேமிநாதரின் வளர்ச்சியைக் கண்டு வெறுப்புற்றார்.

அதனால் நேமிநாதருக்கு திருமணம் செய்விப்பதுதான் நல்லது என்று அவர் முடிவு செய்கிறார்.

உக்கிரசேனனின் மகளான இராசமதி என்ற பெண்ணை நேமிநாதருக்கு மணம் முடிக்க ஏற்பாடாகிறது.

நேமிநாதருக்கு திருமணம் நடந்துவிட்டால், தனக்கு சமமான புகழை பெற்றுவிடுவாரே என்று வாசுதேவ் கிருஷ்ணன் எண்ணினார்.

இதனால், நேமிநாதருக்கு இல்லறத்திலும், பொருள்கள் மீதும் வாழ்வில் குற்றமற்ற, பற்றற்ற நிலையை உருவாக்கவும் திட்டமிட்டார்.

அத்துடன் நேமிநாதரின் நாடாளும் எண்ணத்தை கைவிடச் செய்ய வேண்டும் என்றும் விரும்பினார்.

துறவரம் பூண்ட நேமிநாதர்

நேமிநாதரின் திருமண நாள் நெருங்கியது. இந்த சூழலில், வாசுதேவ் கிருஷ்ணன் ஏற்பாட்டின்படி, திருமண விருந்துக்காக காட்டு விலங்குகளைக் கூட்டம் கூட்டமாக கொல்வதற்காக காவலர்கள் மூலம் பிணைத்து அவற்றை துன்புறச் செய்தார்.

அவற்றின் அபாயக் குரலைக் கேட்ட நேமிநாதர் யானை மீது ஏறி அந்த திசையை நோக்கிச் சென்றார்.

தன்னுடைய திருமண வாழ்க்கை பந்தத்துக்காக காட்டு விலங்குகளைக் கொள்வதா?நமக்கு இந்த ராஜபோக வாழ்க்கை தேவைதானா? என தன்னுள் கேள்வியை எழுப்பினார்.

விலங்குகளை துன்புறுத்துவதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்ட அவர், தன்னுடைய திருமணத்தையும், ராஜ வாழ்க்கையையும் துறந்து துறவறம் ஏற்றார்.

கொல்லாமை

உலகத் துன்பங்களுக்கு அஞ்சித் துறவு கொண்ட அனைவரிலும் கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே மிகச் சிறந்தவர் என்பது இப்போது புரிகிறதா என்றாள் பாட்டி.

சிறந்த பண்புகள் மேலானவை – திருக்குறள் கதை 28

உணவை விஷமாக்கும் நிறமியூட்டி

தீயோர் நட்பு: திருக்குறள் கதைகள் 27

குறளமுதக் கதைகள் வரிசையில் தீயோர் நட்பு தவிர்ப்பது தொடர்பான திருக்குறள் விளக்கமும், கதையும் இந்த திருக்குறள் கதை 27-இல் இடம்பெறுகிறது.

தேர்வு கூடம்

ஆனந்தனுக்கு அன்று தேர்வு. அவன் தன்னுடைய நண்பன் வருணோடு தேர்வறைக்குள் நுழைந்தான். அப்போது ஆசிரியர் வினாத் தாளுடன் தேர்வு அறைக்குள் வந்தார்.

எல்லோருக்கும் விடை எழுதுவதற்கான தாள்களை விநியோகித்தார். தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 5 நிமிடம் இருந்தது.

அப்போது அவர், மாணவர்களே, இப்போது வினாத்தாளை உங்களுக்கு விநியோகிக்கப் போகிறேன்.

வினாக்களுக்கான விடைகளை கவனமாக எழுதுங்கள். அதே நேரத்தில் விடை தெரியாத நிலையில், மற்றவர்களை பார்த்து எழுதுவதற்கு முயற்சிக்கக் கூடாது.

நீங்கள் யாரேனும் சிறு குறிப்புகளை உங்கள் ஆடைகளில் மறைத்து எடுத்து வந்திருந்தாள். அதை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

தேர்வு நேரம் தொடங்கியது. எல்லா மாணவர்களும் வினாத் தாளை படித்து விடை எழுதத் தொடங்கினார்கள்.

காப்பியடித்த நண்பன்

மாணவர்களை சிறிதுநேரம் கண்காணித்துக் கொண்டிருந்த அவருக்கு தேர்வறை வாசலில் தேநீர் கொடுக்க பள்ளி ஊழியர் காத்திருந்தார். அவர் அதை வாங்கச் சென்றார்.

ஆனந்தனும், அவனது நண்பன் வருணும் அருகருகே இருந்த மேஜைகளின் முன்பு அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் தேநீர் குடிக்கச் சென்றதைக் கண்ட வருண், ஆனந்தனிடம் அவன் எழுதிய விடைத்தாளை கேட்டான்.

ஆனந்தன் நண்பனின் தொடர் வற்புறுத்தலால் வேறு வழியின்றி தான் எழுதிய விடைத் தாளை தந்தான்.

அதை வாங்கிய அருண், ஆனந்தனின் விடைத் தாளை அப்படியே காப்பியடித்தான். தேர்வறையை மீண்டும் கண்காணிக்கத் தொடங்கிய ஆசிரியர் ஆனந்தன் முகத்தில் ஒரு பதட்டத்தை பார்த்தார்.

தலைகுனிவை சந்தித்த ஆனந்தன்

அருகில் இருந்த மேஜையில் வருண் எதையோ பார்த்து காப்பியடிப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ஆசிரியர் மற்றொரு விடைத்தாளை பார்த்து எழுவதைக் கண்டு அதை அவனிடம் இருந்து பறித்தார்.

அந்த கையெழுத்து ஆனந்தனுடையது என்பதை அறிந்த ஆசிரியர், இருவரின் விடைத் தாள்களையும் பெற்றுக் கொண்டு தேர்வு அறையை விட்டு வெளியேறச் சொன்னார்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்த ஆனந்தன் செய்வதறியாது கண்ணீர் விட்டான். தன்னால் வருண் பாதிக்கப்பட்டதை உணராமல், தான் மாட்டிக் கொண்டதை மட்டுமே சொல்லி புலம்பினான்.

வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்த தர்மர், ஆனந்தன் மிக சோகமாக வீட்டை நோக்கி வருவதைக் கண்டார்.

அவனை அருகே அழைத்து தேர்வு சரியாக எழுதவில்லையா என்று கேட்டார். அவன் அழுதபடியே நடந்ததைச் சொன்னான்.

ஆனந்தா, உன் நண்பனாக இருப்பவன் வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சை கேட்காதவன். படிப்பில் கவனம் செலுத்தாதவன். அவனோடு நட்பு வைத்தது உன் தவறு. இப்போது வருத்தப்பட்டு என்ன பயன் என்று கூறினார்.

திருக்குறள் விளக்கம்

திருவள்ளுவர் ஒரு திருக்குறளில் தீய நட்பு குறித்து கூறியிருக்கிறார். அதைக் கேள்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

(குறள் – 792)

அதாவது நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். இறுதியில் சாதலுக்கும் அதுவே காரணமாகி விடும்.

இதனால் இனிமேலாவது நண்பராக ஒருவரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்த பிறகே நட்பு கொள்ள வேண்டும். புரிகிறதா…

நல்ல வேளையாக இது அரையாண்டு தேர்வு. இதனால் உன்னுடைய எதிர்காலம் பாதிக்காது.

நான் உன் ஆசிரியரை சந்தித்து நடந்தவற்றை கூறி, ஆனந்தன் இனி தவறு செய்ய மாட்டான் எனறு கோரிக்கை விடுத்து வரும் தேர்வுகளை எழுத வைக்கிறேன் கவலைப் படாதே.

அடுத்த தேர்வில் கவனம் செலுத்தி படி என்றார் தாத்தா.

தீயோர் நட்பு

தீயோர் நட்பு நமக்கு எப்போதும் தீமையைத்தான் தரும். நல்லவர் நட்பு மட்டுமே நமக்கு நன்மை தரும். நாம் பழகும் ஒருவர் தீய பண்புடையவர் எனத் தெரியவந்தால் அவரிடம் இருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறது.

திருக்குறள் கதைகள் 27 உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு மறக்கமாமல் ஷேர் செய்யுங்கள்.

தன் குறை நீக்கு – திருக்குறள் கதை

தொலைத் தொடர்பில் நாசா புதிய கண்டுபிடிப்பு

பொறுத்தல் குறள் கதை!: தீங்கிழைப்பவனுக்கும் நல்லது செய்

குறளமுதக் கதைகள் வரிசையில் தனக்கு தீங்கு செய்தவனைத் தண்டிக்காமல் பொறுத்தல் என்பதை விளக்கும் பொறுத்தல் குறள் கதை இடம்பெறுகிறது.

துறவம் பூண்ட அமைச்சர்

முன்னொரு காலத்தில் சுரமியம் என்னும் நாட்டை அரவிந்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவனிடம் அந்தணர் குலத்தைச் சேர்ந்த விசுவபூதி என்பவன் அமைச்சனாக இருந்தான்.

அவனுக்கு கமடன், மருபூதி என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். இருவரும் குணத்தால் வேறுபட்டிருந்தார்கள்.

புதல்வர்களுக்கு வசுந்தரி, வருணை என்ற பெயருடைய பெண்களை மணம் முடித்து வைத்தான் அமைச்சன்.

ஒரு நாள் விசுவபூதி தன் தலை முடியில் வெண்மையைக் கண்டான். அதனால் வாழ்வில் வெறுப்புற்றான். துறவரம் போவது என முடிவு செய்தான்.

அமைச்சரான இளைய மகன்

அதனால் தன்னுடைய இளைய மகன் மருபூதியை அழைத்தான். அவனை அரசனிடம் அழைத்துச் சென்று என் மகன் உங்களின் அமைச்சனாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

அரசருக்கும் அமைச்சரின் முடிவை ஏற்று மருபூதியை அமைச்சனாக்கினார்.

அரசரும், நாட்டு மக்களும் விரும்பியவாறு நல்ல அமைச்சனாக மருபூதி திகழ்ந்தான்.

அப்போது, வச்சிர வீரியன் என்னும் மன்னன் தன்னோடு போர் புரிய வருகிறாயா என்று சுரமியம் நாட்டின் மன்னன் அரவிந்தனுக்கு சவால் விடுத்து தூது விட்டான்.

அவனுடைய சவாலை ஏற்று போருக்கு தயாரானான். தன்னுடைய அமைச்சர் மருபூதியோடு படைப் பலத்தோடு போருக்கு புறப்பட்டுச் சென்றான்.

மூத்த மகனின் மோகம்

போருக்கு செல்வதற்கு முன்பு மருபூதியின் மூத்த சகோதரன் கமடனை வரவழைத்து தான் நாடு திரும்பும் வரை கவனமாக நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றான்.

ஆனால் கமடன் அரசர் கொடுத்த பொறுப்பை முறையை கவனிக்கத் தவறினான். போதாக்குறைக்கு தனது தம்பி மனைவி மீது மோகம் கொண்டான்.

அவளை தன்னுடைய மனைவியாகவும் ஆக்கிக் கொண்டான். இதையெல்லாம் மக்கள் தட்டிக் கேட்க முடியாமல் தவித்தார்கள்.

போருக்கு சென்ற அரவிந்தன், சவால் விட்டு அழைத்த அரசன் வச்சிர வீரியனை தோற்கடித்து வெற்றி வாகை சூடி உற்சாகமாக நாடு திரும்பினான்.

இளைய மகனின் மன்னிப்பு

நாட்டில் என்ன நடந்தது என்பதை விசாரித்தபோது, கமடனின் இழிச் செயல் தெரிந்து அதிர்ச்சியுற்றான்.

கமடன் செய்த தவறுக்கான தண்டனையை அமைச்சர் மருபூதி வழங்குவார் என்று நாட்டு மக்களிடம் மன்னர் தெரிவித்தார்.

மருபூதி தன்னுடைய மனைவியை அபகரித்த சகோதரனுக்கு மரண தண்டனை விதிப்பான் என்று அரசர் எதிர்பார்த்தார். நாட்டு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மருபூதி, நான் இநத நாட்டின் அமைச்சர் என்ற முறையில் இதற்கு முந்தைய காலங்களில் இத்தகைய தவறுகளை செய்தவர்களுக்கான தண்டனையை வழங்க அரசரை கேட்டுக் கொள்கிறேன்.

மருபூதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவன் இந்த நாட்டின் குடிமகன். அதனால் அரசர் வழக்கமாக விதிக்கும் தண்டனையே தன்னுடைய விருப்பமும் என்று அமைதியாக தெரிவித்தான்.

இதையடுத்து கமடனையும், அவனின் மோக வலையில் விழுந்த மருபூதி மனைவியையும் நாடு கடத்தும் வழக்கமான தண்டனையை மன்னர் அறிவித்தார்.

பொறுத்தல் குறள் கதைக்கான குறட்பா

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று

(குறள் – 152)

தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க. அந்த தீமையை மனத்துள் வைத்துக் கொள்ளாமல் மறத்தலே பொறுத்தலையும் விட நன்று என்று கூறியுள்ளார்.

இதன்படி, நமக்கு தீங்கு செய்வதவருக்கும் கூட நன்மை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது பொறுத்தல் குறள் கதை.

திருக்குறள் கதைகள் 25 – சொல்லாற்றல் வலிது

கணவரிடம் யோசனை கேட்ட மனைவி