குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 16) அறம் செய்ய விரும்பு என்பதை வலியுறுத்தும் திருக்குறள் பாடல் வரிகளுக்கானவையாக இடம் பெற்றிருக்கிறது.
உள்ளடக்கம்
அறம் செய்ய விரும்பு
ஜினாலய அறநிகழ்வில் “அறத்தின் மாண்பு” என்னும் தலைப்பில் தர்ம நாதர் பேசத் தொடங்கினார்.
துறவறத்திற்கு ஒரே வழி அறமே. அதற்காக அனைத்துப் பொருள்களையும் தியாகம் செய்தல் வேண்டும். எதுவரை அனைத்தையும் துறக்க முடியவில்லையோ அதுவரை சிறுசிறு அளவிலாவது அறத்தை மேற்கொள்ள வேண்டும்.
பல வகை வியாபாரம், தொழில் போன்றவற்றால் செல்வம் சேர்க்க நாம் முனைகிறோம். அது போன்றே பல வகைப் பயிற்சி மூலம் நல்வினையாகிய பயனைத் தரும் அறத்தைச் செய்தல் வேண்டும்.
அறத்தில் ஆர்வம்
ஒருவர் அறம் செய்தலில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். அறத்தின் சேர்க்கை ஒன்பது வழிகளில் வருகின்றது.
மனதால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். மொழியால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். உடலால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். இந்த 9 வழிகளில் அறத்தை நாம் கடைப்பிடிக்கலாம்.
எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறிது, பெரிது எனப் பாராமல் செய்தல் வேண்டும்.
சிறந்த செல்வம் அறமே
அறத்தைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறில்லை. அந்த அறத்தையே செய்யாது தவிர்ப்பவர்க்கு கேடே வந்தடையும்.
தந்திரம், மருந்து, மா தெய்வம் முதலியன உயிர்கட்கு பாதுகாப்பு இல்லையென உணர்தல் வேண்டும்.
முண்ட கௌசிகன் கதை
அறத்தின் மேன்மையை உணர்ந்த முண்ட கெளசிகன் என்பவனின் வரலாற்றைக் கூறுகிறேன் – கேளுங்கள்.
வசுதாரை என்ற நகரில் சன்னியாசி ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் சொற்போரில் தோல்வியுற்றதால் மக்கள் அவனை ஏளனமாக பேசத் தொடங்கினார்கள்.
இதனால் மக்கள் மீது கோபம் கொண்டவனாக மாறினான். கடைசி வரை மக்களை வெறுத்து வந்த அவன் ஒரு நாள் இறந்து போனான்.
அந்த நகரில் முண்ட கெளசிகன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனின் மனைவி மனோரமை என்பவள். இருவருக்கும் நிறையச் செல்வங்கள் இருந்தன.
ஆனாலும் அவனுக்கு அறத்தின் மீது நாட்டம் ஏற்படவில்லை. சேர்த்த செல்வத்தை பாதுகாக்க தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினார்கள்.
இருவரும் தங்களின் குலதெய்வமானப் பிடாரியை வேண்டிக் கொண்டார்கள். தங்கள் செல்வதற்கு வாரிசாக ஒருவனை எங்களுக்கு தாருங்கள் என்பதுதான் அவர்களின் வேண்டுதல்.
ஒரு நாள் அவர்களின் வேண்டுதல் பலித்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிடாரியின் அருள் காரணமாக அக்குழந்தை பிறந்ததை உணர்ந்தனர்.
அக்குழந்தை வளர்ந்து குமரனாக மாறினான். அவனுக்கு திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.
ராட்சசன்
இந்த சூழலில், அந்த நகரில் சொற்போரில் தோற்று மக்களால் ஏளமானமாக பேசப்பட்டவன் ராட்சசனாக மறுபிறவி எடுத்து வந்தான்.
தன்னை தூற்றிய மக்களை துன்புறுத்தினான். அவர்கள் அனைவரையும் கொல்வதற்கும் தயாரானான்.
இதனால் மக்கள் ஒன்றுகூடி அவனை சந்தித்து முறையிட்டார்கள். எங்கள் எல்லோரையும துன்புறுத்துவதை கைவிடு.
நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை நகரில் உள்ள வீடுகளில் இருந்து ஒருவனை தேர்வு செய்து உன்னிடம் அனுப்புகிறோம். அவனை நீ கொன்று பழி தீர்த்துக்கொள் என்று சொல்கிறார்கள்.
அது ராட்சசனுக்கு சரியெனப்பட்டது. அதன்படி மக்கள் ஆண்டுக்கு ஒருவன் நகரில் உள்ள வீடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு ராட்சசனுக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.
இம்முறை முண்ட கௌசிகன் தன்னுடைய மகனை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களிடம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து மகனை அனுப்புவதாகச் சொல்கிறான்.
முறையான வரிசைப்படி, நீங்கள்தான் இம்முறை உங்கள் மகனை அந்த ராட்சசனிடம் அனுப்ப வேண்டும் என்று மக்கள் சொல்லிவிட்டார்கள்.
வேறு வழித் தெரியாமல் தன் மகனை காக்க குல தெய்வமான பிடாரியிடம் சென்று முண்ட கௌசிகன் முறையிட்டான்.
இதனால் பிடாரி உன்னுடைய மகனை குகைக்கு ஒளிந்து கொள்ளச் சொல் என்று கூறி ராட்சசனை போருக்கு அழைத்தது. அதில் ராட்சசன் கொல்லப்பட்டான்.
ராட்சசன் இறந்ததை அடுத்து முண்ட கெளசிகன் குகையில் மறைந்திருக்கும் மகனை அழைக்கச் செல்கிறான்.
அறமே துணை
அங்கு தன் மகனை காணாமல் தவித்தான். அப்போது அவனுடைய மகனை அங்கிருந்த மலைப் பாம்பு விழுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
தன் மகனை இழந்த முண்ட கௌசிகன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டான்.
தன்னுடைய செல்வத்தை அறத்துக்காக செலவிட்டான்.
இதைத்தான் திருவள்ளுவர்,
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
. (குறள்-32)
ஒருவனுக்கு அறமே நன்மையைத் தருவதாகும். அதை மயக்கத்தால் மறந்து விடுபவர்க்கு கேடே விளையும். அதனால் அறம் செய்ய விரும்பு என்று இந்த குறள் மூலம் விளக்குகிறார்.
பிறவி எனும் அறையில் நாம் குருடர் போல, வெளியே வர முடியாமல் சுற்றி சுற்றி வருகின்றோம். அந்த அறையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி அறமே என்பதை உணருங்கள். அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்றார் தர்ம நாதர்.
திருக்குறள் கதை – அஞ்ச வேண்டிய நட்பு
சிகரெட் பழக்கம் – கணவரிடம் கோபப்பட்ட மனைவி
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.