முயன்றால் முடியும்!: திருக்குறள் கதைகள் 24

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 24) அதிர்ஷ்டத்தை நம்புவதை விட உழைப்பையும், விடா முயற்சியையும் மேற்கொண்டால் வெற்றி என்னும் அதிர்ஷ்ட மாலை நம் கழுத்தில் விழும் என்பதை எடுத்துரைக்கும் முயன்றால் முடியும் கதையையும், குறளையும் உடையது.

விதியை நொந்துகொண்ட ரகு

ரகு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அது அவ்வாறே நடக்கும் என நினைத்தான். ஆனால், ஏன் அப்படி நடக்கிறது என்று அவர் சிந்திக்கவில்லை.

ரகு இப்போது தலையெழுத்தைப் பற்றி யோசிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தன்னுடைய நேரத்தை அதிகம் வீணாக்கி விட்டான்.

ஒரு சில தவறுகளால் தான் நினைத்த ஒரு காரியத்தில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அவன் இப்போது தன்னை துரதிர்ஷ்டசாலி என நினைக்கத் தொடங்கியிருந்தன்.

நண்பனின் ஆறுதல்

ரகு ஆழ்ந்த கவலையில் இருப்பதைக் கண்ட அவனது நண்பன் சேகர் அவனருகே அமர்ந்து என்னடா… யோசனையில் இருக்கே… அப்படின்னு கேட்டான்.

ரகு மிகுநத வேதனையோடு, நான் எந்த வேலையை செய்தாலும் அது வெற்றி அடைவதே இல்லை. அந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டமில்லாதவனாக இருக்கேன்டா… என்றான்.

சோம்பேறித்தனமும், சில தவறுகளும்தான் உன்னுடைய தோல்விகளுக்கு காரணம் என்பதை நீ கொஞ்சம் கூட யோசிக்காமல், அதிர்ஷ்டத்தின் மீது நீ பழி போடுவதைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

முயன்றால் முடியும்

நீ முதலில் உன்னிடம் இப்போது ஏற்பட்டிருக்கிற தாழ்வு மனப்பான்மையை அகற்று. உன் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறது என்பதை பட்டியல் இடு.

தோல்வியின் விளிம்பில் இருந்தவர்கள் பலரும், அவர்களின் விடா முயற்சியினால் வெற்றி கண்டதை நினைத்துப் பார்.

முயற்சிகளை தொடராமல், சும்மா இருந்துவிட்டு அதிர்ஷ்டத்தை நினைத்து பார்ப்பது முட்டாள்தனம்.

நம்பிக்கையோடு நீ எடுத்த முயற்சியில் வெற்றி பெற தொடர்ந்து அடியெடுத்து வை. நிச்சயமாக நீ நினைத்தது நிறைவேறும். முயன்றால் சாதிக்க முடியும் என்று ஆறுதலையும், நம்பிக்கையையும் ஊட்டினான் சேகர்.

ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். திருவள்ளுவர் ஒரு குறட்பா மூலம் சொல்லி இருப்பதையும் உன்னிடம் நினைப்படுத்த வேண்டும்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டுன்றுங் களிறு

(குறள் – 597)

யானையானது போர்க் களத்தில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும்.

அதுபோல ஊக்கமுடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்தாலும் மனம் தளராமல் தம்பெருமையை நிலை நிறுத்தப் பாடுபடுவார்கள் என்று சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்.

உன்னை யானை போல் பலம் பொருந்தியவனாக நினைத்துக் கொண்டு விடா முயற்சியையும், திறமையையும் உன் பாதையில் செலுத்து வெற்றி மாலை தானாக உன் கழுத்தை தேடி வரும் என்றான் சேகர்.

சேகரின் அறிவுரையை கேட்ட ரகுவுக்கு ஒரு புதுத்தெம்பு வந்தது. நிச்சயமாக நான் நினைத்த காரியத்தை செய்து முடித்து வாழ்கையில் வெற்றியாளனாக வருவேன்டா சேகர் என்று அவனை கட்டிப் பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தான் ரகு.

திருக்குறள் கதை 23 – நம்மை அழிக்கும் கோபம்

மகனை திட்டும்போது அம்பானியை வம்புக்கு இழுத்த அப்பா

அறம் செய்ய விரும்பு: திருக்குறள் கதை 16

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 16) அறம் செய்ய விரும்பு என்பதை வலியுறுத்தும் திருக்குறள் பாடல் வரிகளுக்கானவையாக இடம் பெற்றிருக்கிறது.

அறம் செய்ய விரும்பு

ஜினாலய அறநிகழ்வில் “அறத்தின் மாண்பு” என்னும் தலைப்பில் தர்ம நாதர் பேசத் தொடங்கினார்.

துறவறத்திற்கு ஒரே வழி அறமே. அதற்காக அனைத்துப் பொருள்களையும் தியாகம் செய்தல் வேண்டும். எதுவரை அனைத்தையும் துறக்க முடியவில்லையோ அதுவரை சிறுசிறு அளவிலாவது அறத்தை மேற்கொள்ள வேண்டும்.

பல வகை வியாபாரம், தொழில் போன்றவற்றால் செல்வம் சேர்க்க நாம் முனைகிறோம். அது போன்றே பல வகைப் பயிற்சி மூலம் நல்வினையாகிய பயனைத் தரும் அறத்தைச் செய்தல் வேண்டும்.

அறத்தில் ஆர்வம்

ஒருவர் அறம் செய்தலில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். அறத்தின் சேர்க்கை ஒன்பது வழிகளில் வருகின்றது.

மனதால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். மொழியால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். உடலால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். இந்த 9 வழிகளில் அறத்தை நாம் கடைப்பிடிக்கலாம்.

எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறிது, பெரிது எனப் பாராமல் செய்தல் வேண்டும்.

சிறந்த செல்வம் அறமே

அறத்தைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறில்லை. அந்த அறத்தையே செய்யாது தவிர்ப்பவர்க்கு கேடே வந்தடையும்.

தந்திரம், மருந்து, மா தெய்வம் முதலியன உயிர்கட்கு பாதுகாப்பு இல்லையென உணர்தல் வேண்டும்.

முண்ட கௌசிகன் கதை

அறத்தின் மேன்மையை உணர்ந்த முண்ட கெளசிகன் என்பவனின் வரலாற்றைக் கூறுகிறேன் – கேளுங்கள்.

வசுதாரை என்ற நகரில் சன்னியாசி ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் சொற்போரில் தோல்வியுற்றதால் மக்கள் அவனை ஏளனமாக பேசத் தொடங்கினார்கள்.

இதனால் மக்கள் மீது கோபம் கொண்டவனாக மாறினான். கடைசி வரை மக்களை வெறுத்து வந்த அவன் ஒரு நாள் இறந்து போனான்.

அந்த நகரில் முண்ட கெளசிகன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனின் மனைவி மனோரமை என்பவள். இருவருக்கும் நிறையச் செல்வங்கள் இருந்தன.

ஆனாலும் அவனுக்கு அறத்தின் மீது நாட்டம் ஏற்படவில்லை. சேர்த்த செல்வத்தை பாதுகாக்க தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினார்கள்.

இருவரும் தங்களின் குலதெய்வமானப் பிடாரியை வேண்டிக் கொண்டார்கள். தங்கள் செல்வதற்கு வாரிசாக ஒருவனை எங்களுக்கு தாருங்கள் என்பதுதான் அவர்களின் வேண்டுதல்.

ஒரு நாள் அவர்களின் வேண்டுதல் பலித்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிடாரியின் அருள் காரணமாக அக்குழந்தை பிறந்ததை உணர்ந்தனர்.

அக்குழந்தை வளர்ந்து குமரனாக மாறினான். அவனுக்கு திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.

ராட்சசன்

இந்த சூழலில், அந்த நகரில் சொற்போரில் தோற்று மக்களால் ஏளமானமாக பேசப்பட்டவன் ராட்சசனாக மறுபிறவி எடுத்து வந்தான்.

தன்னை தூற்றிய மக்களை துன்புறுத்தினான். அவர்கள் அனைவரையும் கொல்வதற்கும் தயாரானான்.

இதனால் மக்கள் ஒன்றுகூடி அவனை சந்தித்து முறையிட்டார்கள். எங்கள் எல்லோரையும துன்புறுத்துவதை கைவிடு.

நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை நகரில் உள்ள வீடுகளில் இருந்து ஒருவனை தேர்வு செய்து உன்னிடம் அனுப்புகிறோம். அவனை நீ கொன்று பழி தீர்த்துக்கொள் என்று சொல்கிறார்கள்.

அது ராட்சசனுக்கு சரியெனப்பட்டது. அதன்படி மக்கள் ஆண்டுக்கு ஒருவன் நகரில் உள்ள வீடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு ராட்சசனுக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.

இம்முறை முண்ட கௌசிகன் தன்னுடைய மகனை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களிடம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து மகனை அனுப்புவதாகச் சொல்கிறான்.

முறையான வரிசைப்படி, நீங்கள்தான் இம்முறை உங்கள் மகனை அந்த ராட்சசனிடம் அனுப்ப வேண்டும் என்று மக்கள் சொல்லிவிட்டார்கள்.

வேறு வழித் தெரியாமல் தன் மகனை காக்க குல தெய்வமான பிடாரியிடம் சென்று முண்ட கௌசிகன் முறையிட்டான்.

இதனால் பிடாரி உன்னுடைய மகனை குகைக்கு ஒளிந்து கொள்ளச் சொல் என்று கூறி ராட்சசனை போருக்கு அழைத்தது. அதில் ராட்சசன் கொல்லப்பட்டான்.

ராட்சசன் இறந்ததை அடுத்து முண்ட கெளசிகன் குகையில் மறைந்திருக்கும் மகனை அழைக்கச் செல்கிறான்.

அறமே துணை

அங்கு தன் மகனை காணாமல் தவித்தான். அப்போது அவனுடைய மகனை அங்கிருந்த மலைப் பாம்பு விழுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

தன் மகனை இழந்த முண்ட கௌசிகன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டான்.

தன்னுடைய செல்வத்தை அறத்துக்காக செலவிட்டான்.

இதைத்தான் திருவள்ளுவர்,

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

. (குறள்-32)

ஒருவனுக்கு அறமே நன்மையைத் தருவதாகும். அதை மயக்கத்தால் மறந்து விடுபவர்க்கு கேடே விளையும். அதனால் அறம் செய்ய விரும்பு என்று இந்த குறள் மூலம் விளக்குகிறார்.

பிறவி எனும் அறையில் நாம் குருடர் போல, வெளியே வர முடியாமல் சுற்றி சுற்றி வருகின்றோம். அந்த அறையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி அறமே என்பதை உணருங்கள். அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்றார் தர்ம நாதர்.

திருக்குறள் கதை – அஞ்ச வேண்டிய நட்பு

சிகரெட் பழக்கம் – கணவரிடம் கோபப்பட்ட மனைவி

அறத்தில் எது சிறந்தது? திருக்குறள் கதைகள் 15

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 15) அறத்தில் எது சிறந்தது என்பதை விளக்கும் கதை இடம்பெறுகிறது.

“உயிர்களிடத்து அன்பு வேணும், தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என்று பாரதி பாடலைப் பாடியவாறு வந்தான் ஆனந்தன்.

என்ன ஆனந்தா… ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போல தெரிகிறதே… உன் வாயில் இருந்து பாரதியின் பாடல் வருகிறதே என்றார் தர்மநாதர்.

அறத்தில் எது சிறந்தது?

தாத்தா எனக்கு ஒரு சந்தேகம். அறத்தில் சிறந்தது எது? என்று கேட்டான்.

“ஆனந்தா, எந்த ஒரு மனிதனும் ஆசைகளை அடக்க உணவுகளைக் குறைத்து நல்லறங்களை மேற்கொள்ள வேண்டும். தாம் செய்த பாவங்களிலிருந்து விடுபட விரதங்களை மேற்கொள்ள வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளோடு நடந்து கொள்ளுதல் கூட ஒரு அறம்தான்” என்றார் தர்மநாதர்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர், இதற்காகவே “அருளுடைமை என்னும் அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார்.

அன்பு என்பது சுற்றத்தார், நண்பர் என்னும் குறுகிய வட்டத்தோடு நின்று விடும். ஆனால், அருளோ பரந்து பட்டது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் ஒப்ப நோக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் ஆசான்.

இல்லறத்தார்க்கு அன்பு இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால் துறவு நிலையை அடைய விரும்புவோருக்கு அருள் உள்ளமும் வேண்டும். அறத்தில் எது சிறந்தது என்பதற்கு ஒரு கதையையும் சொல்கிறேன்.

இளவரசியின் விருப்பம்

அபயமதி என்ற பெயருடைய இளவரசி ஒருத்தி தன்னுடை முற்பிறப்பைப் பற்றி அறிய விரும்பினாள்.

அதற்காக அமிர்தமதி என்னும் ஆச்சாரியரை சந்தித்தாள். அவர், “பெண்ணே நீ சென்ற பிறப்பில் சம்பா நகரத்தில் பறவைகளைப் பிடித்து விற்று வாழும் கருட வேகன் என்பவனின் மனைவியாய் இருந்திருக்கிறாய். அப்போது உன் பெயர் கோமதி.

நீ ஒரு நாள் அவ்வூருக்கு வந்திருந்த சமாதி குப்தர் என்னும் முனிவரைக் கண்டு வணங்கினாய்.

அவர் புலால் உண்பது, மது அருந்துவது, பொய், கொலை, களவு செய்தல் ஆகியவைகளை மறந்தும் செய்யாதே என்று உன்னிடம் சொன்னார்.

அத்துடன் அவர் ஐந்து வகையான உதும்பரம் பழங்களை உண்ணுதல் தவறு என்றும் உபதேசித்தார். அன்று முதல் அவருடைய அருளுரைகளைக் கேட்டு நடந்து வந்தாய்.

ஒரு நாள் உன் கணவன் பறவைகளைப் பிடித்து கூட்டில் அடைத்தான். அதனைக் கண்டு அந்த உயிர்களிடத்தில் கருணை காட்டி விடுவித்தாய்.

வெளியில் சென்றிருந்த கணவன் இல்லத்திற்கு வந்தவுடன் பறவைகள் இல்லாததைக் கண்டு அதிர்ந்தான்.

இக்கூட்டைத் திறந்து விட்டது யார்? எனக் கேட்டான். அருளுள்ளம் கொண்ட நீ , நான் தான் திறந்து விட்டேன் என்றாய்.

உடனடியாக அவன் இந்த வீட்டில் இனி உனக்கு இடம் கிடையாது. உடனே வெளியேறு என துரத்தினான்.

கணவனால் கைவிடப்பட்ட நீ, அபலையாய் உறவினர் ஒருவர் வீட்டில் சென்று தங்கினாய். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் தாத்தரி வாகனனும், அரசி சீமதியும் உலா வந்தனர்.

அப்போது அவர்களைக் கண்ட நீ, அந்த அரசியின் வயிற்றில் பிறக்க வேண்டும் என நினைத்தாய். நீ அப்பிறப்பில் இறந்ததும், அரசி சீமதி வயிற்றில் சென்று தங்கினாய்.

துறவறம் பூண்ட இளவரசி

அப்போது அரசிக்கு எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அரசி தன் எண்ணத்தை மன்னனிடம் கூறினாள்.

மன்னனும் நகரில் யாரும் எவ்வுயிரையும் கொல்லக் கூடாது என உத்தரவிட்டான். அனைத்து உயிர்களுக்கும் அடைக்கலம் (அபயம்) தரும் எண்ணத்தை நீ ஊட்டியதால் உனக்கு அபயமதி எனப் பெயரிட்டனர் என்றார் முனிவர்.

தன்னுடைய முற்பிறவியை அறிந்த அவள், துறவறம் ஏற்று, அறநெறி நினைவுகளோடு வாழ்ந்து உயிர் நீத்த அடுத்த பிறவியில் அமித காந்தன் என்னும் தேவனாகப் பிறந்தாள்.

திருவள்ளுவர் சொல்வது என்ன?

மன்னுயிர்களை தன் உயிர் போல் நினைத்து பரிவு காட்டும் அருளாளனுக்குத் தன் உயிர் அஞ்சத்தக்க தீவினை எதுவும் இல்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை

(குறள்-244)

உலக உயிர்களின் துன்பங்களைப் போக்கும் அருளாளன் நல்லனவற்றையே எண்ணி அவற்றையே செய்வான். ஆதலால் அவனுக்கு நல்வினைப்பயனே உண்டாகும். தீவினை ஒரு போதும் பற்றாது என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

அறத்தில் எது சிறந்தது? என்று கேட்டாயே ஆனந்தா… இப்போது தெரிந்துகொண்டாயா அன்பின் மகத்துவத்தை என்றார் தர்ம நாதர்.

கோபம் வந்தால் – திருக்குறள் கதை

குட்டை பாவாடையால் ஆபத்து – காமெடி