கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்!

83 / 100

வெ நாராயணமூர்த்தி

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை?

நாம் நேரடியாகப் பார்ப்பது, நம் கண்ணுக்குத் தெரிவது எப்படி பொய்யாக
முடியும்? நாம் நேரடியாகக் கேட்பது எப்படி பொய்யாக முடியும்? இதில்
‘நேரடி’ என்பது என்ன? பொய் என்பது ஏன்? எப்படி ‘தீர’ விசாரிப்பது?
அது மட்டும் எப்படி மெய்யாக முடியும்?

கண்ணால் காண்பதும் பொய் – மூதுரைக்குப் பின்னால் பல விஷயங்கள் புதைந்துள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உள்ளடக்கம்

இந்த்ரியங்களும் அனுபவங்களும்

சில அடிப்படை விஷயங்களைப் பார்போம். நாம் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது, தொடு உணர்வுகள் ஆகிய இந்த ஐந்து அனுபவங்களையும் எப்படிப் பெறுகிறோம்?

உடலில் உள்ள இந்த்ரியங்களைப் பயன்படுத்தி மனதால் உணர்கிறோம். அதாவது, கண்,
காது, மூக்கு, நாக்கு மற்றும் சருமம் வழியாக நம் முன்னே தெரியும் உலகை அறியும் அனுபவங்களைப் பெறுகிறோம்.

இதை ‘ப்ரத்யக்க்ஷ ஞானம்’ என்று வகைப் படுத்துகிறது உபநிஷத்துகள். ஸம்ஸ்க்ருத மொழியில் ‘அக்க்ஷ’ என்றால் ‘கண்’ என்று பொருள். உபநிஷதங்கள் பொதுவாக எல்லா இந்த்ரியங்களையுமே ‘அக்க்ஷ’ என்று வகைப்படுத்துகிறது.

அதாவது வெளி உலகிலிருந்து இந்த்ரீயங்கள் வழியாக உள்வாங்கும் அனைத்து அனுபவங்களையும் ‘ப்ரதி அக்க்ஷ ஞானம்- ப்ரத்யக்க்ஷ ஞானம்’ என்று விளக்கமளிக்கிறது.

தவறான புரிதல்

நம்மில் பெரும்பாலோர் இந்த அனுபவத்தையே ‘நேரடி அனுபவம்’ என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். இதில் என்ன தவறு?

ஏனென்றால் இத்தகைய அனுபவங்களை நாம் இந்த்ரியங்கள் வழியாகவே
பெறுகிறோம். இந்த்ரியங்கள் இல்லாவிட்டால் இந்த அனுபவங்கள் கிடைக்காது அல்லவா?

அனுபவிப்பவருக்கும், அனுபவிக்கப்படும் பொருளுக்கும் இடையே செயல்படும் கருவிகளாக இந்த இந்த்ரியங்கள், ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறது.

ஆகவே இவை பிரதிபலிக்கும் அனுபவங்கள் நம்முடைய நேரடி அனுபவங்களாக இருக்க முடியாது.

அனுமானங்கள்

சில நேரங்களில் இந்த இந்த்ரியங்களைப் பயன்படுத்த முடியாதபோது, சில விஷயங்களை அனுமானங்களால் மறைமுகமாக அறிகிறோம். எப்படி?

நம் இந்த்ரியங்களின் உணர்வு எல்லைகளுக்கு அப்பால் உள்ள விஷயங்களை, நாம் அறிய முடியாத, அல்லது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்களை நாம் நம்முடைய இந்த்ரியங்களைப் பயன்படுத்தி அறியமுடியாதபோது, புத்தியைப் பயன்படுத்தி அனுமானிக்கிறோம். அதாவது மறைமுகமாக அறிந்துகொள்கிறோம்.

உதாரணமாக, தூரத்தில் புகை தெரிகிறது என்றால் அங்கே நெருப்பும் இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஏற்கனவே பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்கிறோம்.

நெருப்பை நாம் காணமுடியாமல் போனாலும், புகையின் அடிப்படையில், நாம் காணமுடியாத நெருப்பை நாம் அங்கே இருப்பதாக அனுமானிக்கிறோம்.

சில நேரங்களில் ப்ரத்யக்க்ஷமாக அறியமுடியாத அனுபவங்களை மற்றவர் சொல்லக் கேட்டு அறிகிறோம், அல்லது புத்தகங்களைப் படித்து அறிகிறோம்.

நேரில் பார்க்க முடியாவிட்டாலும் படங்களைப் பார்த்து அறிகிறோம். இதை உபநிஷத்துகள் ‘பரோக்க்ஷ ஞானம்’ (அதாவது ‘பர அக்க்ஷ’ இந்த்ரியங்களின் உணர்வு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) என்று வகைப்படுத்துகின்றன.

சொல்லப் போனால் பெரும்பாலான அனுபவங்கள் நமக்கு பரோக்க்ஷமாகவே கிடைக்கின்றன. இந்த வகையான அனுபவங்களும் நேரடியாகக் கிடைப்பவை அல்ல.

விசித்திரமான மூன்றாவது அனுபவம்

இந்த இரண்டு வகையான அனுபவங்கள் அல்லாது மூன்றாவதாக இன்னொரு அனுபவம் இருக்கிறது. இது இந்த்ரியங்களை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ அல்லது புத்தியைப் பயன்படுத்திப் பெறக்கூடிய அனுபவம் அல்ல.

இது மிகவும் வித்தியாசமானது. விசித்திரமானது. அலாதியானது. இயல்பானதும் கூட. இது நம் அன்றாட வாழ்க்கையில் நித்தமும் அனுபவிக்கிறோம்.

ஆனால் பெரும்பாலும் இதைப்பற்றி நாம் யோசிப்பதும் இல்லை, கூர்ந்து கவனிப்பதும் இல்லை. அதனால் இந்த அனுபவம் நமக்கு புரியாததாக இருக்கிறது.

இந்த அனுபவத்தை ‘அபரோக்க்ஷ ஞானம்’ என்று வர்ணிக்கிறது உபநிஷதம். இந்த்ரியங்களையோ, அனுமானங்களையோ பயன்படுத்தாமல், அதாவது இடையே எந்த ஊடக (இந்த்ரியங்களின்) உதவியும் இல்லாமல் நேரடியாக அறிவது, உணர்வது.

உதாரணமாக நமக்கு மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் நேரடியாகவே உணர்கிறோம். அதற்கு எந்த இந்த்ரியங்களின் உதவியும் தேவை இல்லை.

மனதில் ஏற்படும் சோகம், துக்கம், மகிழ்ச்சி, ஞாபகம் போன்ற உணர்வுகளை நேரடியாகவே உணர்கிறோம். அனுபவங்களின் அடிப்படை ‘வாழும் தன்மை’ இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இந்த அனைத்து அனுபவங்களையும் உணர்தலுக்கு அடிப்படையான நம் ‘உணரும் தன்மை’, அல்லது ‘வாழும் தன்மை’ (‘நான்’ இருக்கிறேன் என்பதை எப்போதும் நம்மால் உணரமுடிகிறது).

இதற்கு இந்த்ரியங்களோ, அல்லது மறைமுக அனுபவமோ தேவை இல்லை அல்லவா? இது நேரடி அனுபவம்.

நம்முடைய ‘நான் வாழ்கிறேன், நான் இருக்கிறேன்- என்கிற தன்மை’, இதை உணரும் தன்மையே மற்ற எல்லா அனுபவங்களுக்கும் அடிப்படை. இந்த்ரியங்கள் எப்படி உலக அனுபவங்களை நமக்கு உணர்த்துகின்றன? இதுதான் விந்தை. தெய்வீக விளையாட்டு.

ஆனால், இந்த்ரியங்களின் உதவியின்றி, நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நேரடியாகவே நாம் எப்படி உணரமுடிகிறது ? இது அதை விடப் பெரிய விந்தை.

அனாஹத குரல்

நமக்குள்ளே சதா கேட்கின்ற ‘அனாஹத’ குரல், இதைப் பற்றி நாம் யோசித்தது உண்டா? இரண்டு பொருள்கள் மோதிக்கொள்ளும்போது செயற்கையாக ஏற்படுவது ‘ஹத’- சப்தம்.

எந்தப் பொருளும் மோதாமல் இயற்கையாக ஏற்படுவது அனாஹத சப்தம். இந்தச் சப்தம், இந்தக் குரல் எங்கே, எப்படி உருவாகிறது? இந்த்ர்யங்களின் உதவியின்றி இதை
எப்படி உணர்கிறோம்? உணர வைப்பது யார்? இதுவல்லவோ அதிசயம்!

குறுகிய வட்டம்

இந்த்ரியங்கள் கொண்ட உடல், உள்ளம் ஆகியவையின் கலவையை ‘நான்’ என்று சொந்தம் கொண்டாடும் மனிதன், அனுபவங்களை உணரக்கூடிய மிகச் சிறிய எல்லைகளோடு வரையறுக்கபட்டவன் தான் என்றும், இந்தப் பரந்த உலகில் தான் ஒரு சிறு துறும்பு என்கிற கற்பனை சிறுமையில் திளைக்கிறான்.

தான் சிறிது காலம் வாழ்த்து மடியப் போகிறவன். இந்த உடலும் உள்ளமும் நோய்களாலும், கர்ம வினைகளாலும் அழியப் போகிறது. அதை தடுக்கமுடியாது.

ஆகவே இந்த அழிவிலிருந்து மீள வழியில்லை, ஆகவே வாழும் வரை எல்லா சுகங்களையும் அனுபவித்து மடிவோம் என்ற சிந்தனையோடு சம்சார வாழ்க்கையில் அல்லல் படுபவர்கள் நம்மை போன்ற சராசரி மனிதர்கள்..

உணர்வுகளை உணர வைப்பது யார்?

அபரோக்ஷ உணர்வுகளை ‘உணர்வது’ ஒருபக்கம் இருக்க, இந்த உணர்வுகளை உணர வைப்பது யார்? இந்தக் கேள்விக்கு உபநிஷதங்கள் அருமையாக ஒரு விளக்கத்தைத் தருகின்றன.

ப்ரத்யக்ஷ, பரோக்ஷ மற்றும் அபரோக்ஷ அனுபவங்களை நமக்கு புரியவைப்பது யார்? எந்த ஒரு அனுபவமும் எப்படி ஏற்படுகிறது? என்கிற கேள்விக்கு அளிக்கப்பட்ட
பதில் இதுதான்:

ஒரு அனுபவம் ஏற்பட மூன்று விஷயங்கள் தேவை. அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்பவர், இரண்டுக்கும் இடையே அந்த தெய்வீக உணர்வு,

அனுபவிக்கப்படும் பொருளும் அனுபவிப்பவரும் வெவ்வேறாக இருக்கும்போது மட்டுமே அனுபவம் ஏற்படுகிறது. இந்த உலகம் அனுபவிக்கப்படும் பொருள். இதற்கு இடை-ஊடகமாக உதவுவது உடல் (இந்த்ரியங்கள்), மனம், புத்தி போன்றவை.

அப்படியானால் அனுபவிப்பவர் யார்? இதைப் புரிந்துகொள்வதில்தான் நாம் தவறு செய்கிறோம்.

ஞான யோகம்

உதவி செய்யும் இடை-ஊடகங்களையே அனுபவிப்பவராக ஏற்றுக்கொண்டு அதனால் ஏற்படும் சங்கடங்களுக்கும் இந்த ஊடகங்களின் கலவையான உடலும், உள்ளமும்தான் காரணம் என்று ஏற்றுக்கொண்டு நிவாரணம் தேடுகிறோம்.

அனுபவங்களின் இந்த அடிப்படை உணர்வுகளை சதா வெளிச்சம் போட்டு காட்டுவது
ஸ்வப்ரகாஸமாக ஒளிர்ந்துகொண்டிருப்பது ‘ஆத்மன்’.

இது ஊடகம் அல்ல, கருவியும் அல்ல. இது தெய்வீகம். நம் உண்மை ஸ்வரூபம். நம்
உண்மை இயல்பும் இதுவே. இதுவே ‘நாம்’.

இதை வேறு எந்த கருவியாலும் உணரமுடியாது, ஆழ்ந்த விசாரணை வழியாக மட்டுமே
அறியமுடியும். இதுவே ஞான யோகம்.

‘ப்ரதி போத விதிதம் மதம், அம்ருதத்வமஹி விந்ததே’ ஒவ்வொரு அனுபவத்தின் பின்னணியிலும் இந்த தெய்வீக சக்தி வெளிப்படுகிறது.

இந்த விந்தையை உணர்ந்தவனுக்கு பிறப்பு, இறப்பே இல்லை என்கிறது உபநிஷத்து.
ஆனால் நாமோ, நம் அடிப்படையான இந்த தெய்வீகத் தன்மையை உணராமல், தெய்வீக அனுபவத்தை வெளியில், இந்த உலகில் தேடி அலைகிறோம்!

தெய்வீகத் தன்மை

இந்தத் சூட்சுமான தெய்வீகத் தன்மை, நமக்கு நேரடியாகவே புலப்படுகிறது. இதை யாரைக் கேட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தெய்வீகத்தன்மை இல்லையென்றால் எந்த வகையான அனுபவமும் சாத்யமில்லை. பிரத்யக்க்ஷமோ பரோக்க்ஷமோ அல்லது அபரோக்க்ஷ அனுபவமோ இவை அனைத்திற்கும் அடிப்படையானது இந்த தெய்வீகத் தன்மை.

இதை உணர்ந்து, தெளிந்து, ஸம்சார சிறையிலிருந்து விடுதலை பெறுவதே மானிடப் பிறப்பின் பயன். இதையே வேதங்கள் ‘மோக்ஷம்’, என்று வர்ணிக்கின்றன.

அதாவது, இறந்த பிறகு வேறு எங்கோ கிடைப்பது அல்ல இது. ‘வாழும் நிலையிலேயே சோகம், துக்கம், ஸம்ஸார பந்தம் முதலான அனைத்து பிணைப்புகளிலிருந்தும் விடுதலை’.

இதை ‘அத்யந்தக துக்க நிவர்த்தி, பரமானந்தப் ப்ராப்தி’ என்று வேதங்கள்
வருணிக்கின்றன. இதுவே சத்சித் ஆனந்த நிலை.

ஆனாலும் நம்மோடு இணைந்து, நமக்கு அனைத்தையும் உணர்த்தும் இந்த தெய்வீகத்
தன்மையை பற்றி நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை.

பத்து நண்பர்கள் கதை

இந்த நேரடி அனுபவத்தை புரிந்துகொள்ள உதவி செய்யும், நமக்குத் தெரிந்த ஒரு பிரபலமான பழைய கதையை மீண்டும் அலசிப் பார்ப்போம்.

பத்து நண்பர்கள் ஒரு பயணத்தை மேற்கொண்டனர். வழியில் நீர் புரண்டோடும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அனைவரும் மிகவும் கவனத்துடன் ஆற்றை நீந்திக் கடந்துவிட்டனர்.

சந்தேகம்

மறுகரையை அடைந்ததும், பத்து நண்பர்களும் பத்திரமாக சேர்ந்து
விட்டனாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதை உறுதி செய்துக் கொள்ள,
வரிசையாக நின்று அவர்களை எண்ணத் தொடங்கினர்.

முதலில் எண்ணிக்கையை மேற்கொண்டவர், அவரை விடுத்து மற்றவர்களை
எண்ணிக்கையில் கொண்டு, ஒன்பது நண்பர்களே ஆற்றைக் கடந்துள்ளதாக அறிவித்தார்.

இப்படி ஒவ்வொருவராக இதே தவறைச் செய்து ஒன்பது பேர் மட்டுமே இருப்பதாக அனுமானித்துக் கொண்டு பத்தாவது நபர் ஆற்றில் அடித்துக்கொண்டு போய்விட்டார் என்று முடிவு செய்தனர். இது ஒரு வகையில் கண்ணால் காண்பது பொய் அல்லவா?

சோகம்


‘அந்த பத்தாவது நண்பரின் குடும்பத்தாருக்கு என்ன பதில் சொல்வோம்’
என்று பயத்தில் சிக்கி சோகத்தில் மூழ்கி அழத்தொடங்கினர்.

அப்போது அந்த வழியே வந்த முதியவர் ஒருவர் இந்த இளைஞர்கள் அழுவதைக்
கண்டு என்னவென்று விசாரித்தார்.

தாங்கள் பத்து நண்பர்கள் இந்த ஆற்றைக் கடந்ததாகவும் ஒரு நண்பர் நீரில் அடித்துச் சென்று விட்டதாகவும் சொல்லி மேலும் அழுதனர்.

உண்மை அளித்த ஆறுதல்

முதியவருக்குப் பார்த்ததுமே புரிந்தது. பத்து நண்பர்களும் அங்கே இருந்தனர். உண்மையில் பத்து பேர் அங்கே இருந்தும் இவர்களுக்கு அறியாமையால் இது தெரியவில்லையே!

‘கவலைப்பட வேண்டாம். பத்தாவது நண்பர் இங்கேயேதான் இருக்கிறார். நான் உங்களுக்குக் காட்டுகிறேன்’ என்று ஆறுதல் கூறினார்.

மகிழ்ச்சி

நண்பர்களுக்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. முதியவர் அனைவரையும்
வரிசையில் நிற்கவைத்து ஒரு இளைஞனை அழைத்து எண்ணச்
சொன்னார்.

அவன் முன்பு செய்தது போல ஒன்பது பேரை எண்ணி முடித்தான். கண்ணால் காண்பதும் பொய் என்பதை அவன் உணரவில்லை. முதியவர் அந்த எண்ணிக்கை மேற்கொண்டவனின் கையை அவனை நோக்கி மடக்கி நீதான் அந்த பத்தாவது நண்பன் என்றார்.

‘அட என்ன ஆச்சர்யம், இவ்வளவு நேரம் எனக்குப் புலப்படாத நான் அல்லவா அந்த பத்தாவது நண்பன்’ என்று உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தான்.

இப்படியாக அனைத்து நண்பர்களும் தங்கள் பத்தாவது நண்பன் எங்கும் காணாமல் போகவில்லை. தங்களுடனேயே இருக்கிறான். அது எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படாத தாங்கள்தான் தற்காலிகமாக காணாமல் போனோம் என்கிற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சியுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

கண்ணால் காண்பதும் பொய்?

இந்தக் கதையைக் கூர்ந்து கவனித்தால் கண்ணால் காண்பதும் பொய் என்பது உள்பட பல விஷயங்கள் நமக்குப் புலப்படுகின்றன. பத்து நண்பர்களும் தங்கள் கண்கள் வழியாகப் பார்த்தும், அவர்களுக்குள்ளே உயிருடன் இருந்த பத்தாவது நபரை ஏன்
தெரிந்துகொள்ள முடியவில்லை?

அவர்கள் எண்ணிக்கையை மேற்கொண்டு முயன்றபோதும் பத்தாவது நபர் கிடைக்கவில்லை. நேரில் இருந்தும் அந்த பத்தாவது நபர் மற்றவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. அப்படியெனில் கண்ணால் காண்பதும் பொய் என்பது சரியாக இருக்குமோ?

முதியவர் அந்தப் பத்தாவது நபர் அங்கேயே இருக்கிறார் என்று சொன்னபோது, அந்த நபரை அடையாளம் காணும் வரை, கேட்டதும் பொய்யாகவல்லவா பட்டது?

உண்மை புலப்படாத வரை, பார்த்ததும் கேட்டதும் பொய்யாகிவிடவில்லையா? ஆனால் முதியவர் சொல்லிய விசாரணை வழியாக, தன்னை விடுத்து மற்றவர்களை மட்டுமே எண்ணிக்கையில் சேர்த்த தவறை அந்த இளைஞர்கள் உணர்ந்தபோது,
பத்தாவது நண்பன் புலப்பட்டதோடு அல்லாமல் அவன் உயிரோடுதான்
இருக்கிறான், தங்கள் முன்னேயே இருக்கிறான், அவன் உண்மையுமாகி விட்டான் என்கிற நிதர்சனம் தெரிந்தது.

விசாரணை வழி காட்டியது

அதுகாறும் மூடி மறைந்திருந்த இந்த ‘உணர்தல் அனுபவம்’ எப்படி வெளிப்பட்டது? எப்படி சாத்தியமாகியது?

இது இந்தியங்களைச் சார்ந்ததோ அல்லது அனுமானங்களைச் சார்ந்ததோ இருக்கவில்லை அல்லது, முதியவர் சொல்கிறார் என்றால் அதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உணர்ந்த அனுபவமோ அல்ல இது.

அந்த இளைஞர்களே, தங்கள் தவறை (எண்ணிக்கையில் தங்களை சேர்க்காமல்
விட்டதை) உணர்ந்து தங்கள் அறியாமையிலிருந்து மீண்டபோது, காணாமல் போன அந்த பத்தாவது நண்பன் புலப்பட்டான்.

இங்கே இந்த்ரியங்களோ அல்லது அனுமானங்களோ உதவி செய்யவில்லை. இந்த
இரண்டு வகை அனுபவ எல்லைகளைத் தாண்டி அபரோக்க்ஷ ஞானம் வழியாகத்தான் உண்மை தெரிந்தது. இது அவர்கள் மேற்கொண்ட விசாரணை வழியாக மட்டுமே கிடைத்தது.

அனுபவங்கள் ஒரு தோற்றமே

இந்தக் கதையில் மேலும் சில உண்மைகள் தெரிகின்றன. முதியவர் சொல்லும்வரை, பத்தாவது நபர் அங்கேயே இருந்தும் மற்றவர்களுக்கு ஏன் புலப்படவில்லை?

ஏனென்றால் இப்படித்தான் நாம் நம் உண்மையான இயல்பைத் தெரிந்துகொள்ளாமல், ‘பிரத்யக்க்ஷ மற்றும் பரோக்க்ஷ அனுபவங்களே நிதர்சனமானவை, நிஜமானவை’ என்று
ஏற்றுக் கொண்டு நம்மை பழக்கிக் கொண்டு விட்டோம்.

இந்த அறியாமையிலிருந்து நம்மை மீளச் செய்வதே வேதங்களின் நோக்கம். இந்த மூன்று வகையான அனுபவங்களையும் நமக்கு உணர்த்தும் அந்த தெய்வீக சக்தியே உண்மையில் “நாம்” என்பதை உணரும்போது இந்த அனுபவங்கள் அனைத்தும் ஒரு தோற்றம் என்று புரிகிறது.

ஆத்மன் ஒன்றே உண்மை, நிரந்த்ரம்

இந்த அனுபவங்களை நமக்கு உணர்த்தும் சக்தியே ‘ஆத்மன்’ அல்லது ‘ப்ரம்மன்’ என்று உபநிஷத்துக்கள் வர்ணிக்கின்றன.

உருவமில்லாத, அருவமான இயல்புடன், அனைத்து அனுபவங்களுக்கும் சாட்சியாக
இருக்கும் ஆத்மனுக்குள்ளே தோன்றுவதுதான் இந்த உடல், உள்ளம், உலகம் எல்லாம். ஆத்மன் ஒன்றே நிரந்தரம், மற்ற அனைத்தும் தோன்றி மறைபவை.

ஆத்ம ஸ்வரூபமே நம் உண்மை இயல்பு

அதனால்தான் அனுபவங்கள் அனைத்தும் ஆத்மனுக்குள் தோன்றும் தோற்றங்கள், அவை நிரந்தரமானவை அல்ல என்றனர் நம் முன்னோர்கள்.

புத்தியைப் பயன்படுத்தி இந்த அனுபவங்கள் வாயிலாக விசாரணை மேற்கொள்ளும்போது, நம் அறியாமை விலகுகிறது.

அப்போது அனைத்து அனுபவங்களையும் நமக்கு உணர்த்தும் ஸ்வப்ரகாசமாக சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆத்ம ஸ்வரூபமேதான் நம் உண்மை இயல்பு என்பது புரியும்.

அப்போது நம் அனுபவங்கள் அனைத்தும் நிஜம் அல்ல என்கிற உண்மை புரியும். உடல் உள்ளம் சேர்ந்த கலவையே தோற்றமாகும்போது அவைகளால் உணரப்படும்
அனுபவங்களும் தோற்றங்களாகும் அல்லவா?

ஆன்மீகப் பயணம்

அறியாமை அகலும்போது உண்மை என்று நினைத்து ‘நாம்’ மேற்கொள்ளும் அனைத்து சோகங்கள், துக்கங்கள், கஷ்டங்கள், கவலைகள் எல்லாம் மறைந்து போகாதா?

இந்த உலகமும், வாழ்க்கையும் தோற்றங்கள் என்று ஏற்றுக்கொள்ளும்போது, ஒரு திரைபடத்தை ரசிப்பதுபோல ரசித்து சந்தோஷமாக இருப்பதே ஆன்மீகப் பயணம்.

ப்ரஹதாரண்யக உபநிஷத் இதை அழகாகக் குறிப்பிடுகிறது. ‘ஆத்மானம் சேத்விஜானியாத், அயம் அஸ்மி இதி புருஷஹ கிம் இச்சன் கஸ்ய காமய, சரீரம் அனு ஸஞ்ஜ்வரேத்’

இதுநாள் வரை இந்த உடலே ‘தான்’, உள்ளமே ‘தான்’, அல்லது இரண்டும் சேர்ந்த கலவையேதான் ‘தான்’ என்று கற்பனை செய்துக் கொண்டவன்.

அதனால் இந்த உடல் உள்ளம் கலந்த கலவை வழியே அனுபவிக்கும் அனைத்து அனுபவங்களுக்கும் தானேதான் பொறுப்பு என்று அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் மானிடன்.

எப்போது தான் உடல், உள்ள சேர்ந்த கலவை அல்ல, அதையும் தாண்டி இந்த அனுபவங்களுக்கும் அடிப்படையான, சதா ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆத்மன் என்பதை
உணரும்போது, யாருக்காக இந்த உலக அனுபவங்களையோ அல்லது அனைத்து வகையான இச்சைகளையோ நாடி அதன் வழியாக சரீரம் தரும் துக்கம் என்கிற ஜ்வரத்தை அனுபவிக்கப் போகிறான்? என்று உண்மையின் தன்மையை விளக்குகிறது இந்த உபநிஷத்து.

இதுதான் நாம் தேடி அலையும் ‘உண்மை’. நாமேதான் அந்த உண்மை! இது ஒன்றேதான் நிதர்சனம்.

மற்றவை எல்லாம் இந்த உண்மையில் தோன்றி மறையும் தோற்றங்கள். ரிக் வேதம் இதையே ‘ஏகம் ஸத்’ என்கிறது. இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தவே உருவாகி உள்ளது சென்னப்பமலையும் அங்கே அருவமாக ஐக்யம் கொண்டுள்ள ப்ரம்மகுருவும்.

உபநிஷத்துக்கள் என்றால் என்ன?

பல நூற்றாண்டுகளாக ஆன்மிக வழிகாட்டுதல்களை மனிதனுக்கு அளித்து இயற்கையின் மீதான அவனுடைய வெற்றியை உறுதிப்படுத்தி பாதுகாப்பவைத்தான் உபநிஷத்துக்கள்.
இவை ரிஷிகளால் வெறும் தத்துவ ஆராய்ச்சிகளில் கிடைத்தவை அல்ல. மாறாக உள்ளுணர்வில் ஆழ்ந்த இறை வழிபாட்டின் மூலம் பெற்றவை.

உபநிஷத்துக்களின் தாக்கம் இந்தியா தவிர வேறு நாடுகளில் உண்டா?

உண்டு. ஜப்பான், சீனா, கொரியா, மத்திய ஆசிய நாடுகள் பலவற்றிலும் உபநிஷத்துக்களின் தாக்கம் அந்தந்த நாடுகளின் சமய, சமுதாய வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன.

உபநிஷத்துக்களுக்கு உயர்ந்த இடத்தை எந்த சமயம் கொடுத்திருக்கிறது?

உபநிஷத்துக்களுக்கு எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தை அளித்திருப்பது இந்து சமய பாரம்பரியமே.

உபநிஷதம் என்பது பொருள் என்ன?

ஸத் என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது உபநிஷத். ஸத் பல பொருள்களைக் கொண்டது. தளர்த்துதல், செல்லுதல், அழித்தல், என நிலையற்ற சம்சார வாழ்க்கையில் இருந்து நம்மை தளர்த்தி, தெய்வீக ஞானமாகிய உபநிடதம், நம்முடைய உண்மை இயல்பை மறைக்கும் அறியாமையை அழித்து இறைவன் என்ற பரம்பொருளை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இந்த ஞானத்தை கற்றுத் தரும் நூல்களும், சாஸ்திரங்களும்தான் உபநிஷத்துக்கள் என்று நாம் அழைக்கிறோம்.

தில்லி மதுபான முறைகேடு வழக்கு ஏன்?

ஏழை சிறுவனும் நேர்மை தந்த பரிசும்

83 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply