கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்!

வெ நாராயணமூர்த்தி

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை?

நாம் நேரடியாகப் பார்ப்பது, நம் கண்ணுக்குத் தெரிவது எப்படி பொய்யாக
முடியும்? நாம் நேரடியாகக் கேட்பது எப்படி பொய்யாக முடியும்? இதில்
‘நேரடி’ என்பது என்ன? பொய் என்பது ஏன்? எப்படி ‘தீர’ விசாரிப்பது?
அது மட்டும் எப்படி மெய்யாக முடியும்?

கண்ணால் காண்பதும் பொய் – மூதுரைக்குப் பின்னால் பல விஷயங்கள் புதைந்துள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உள்ளடக்கம்

இந்த்ரியங்களும் அனுபவங்களும்

சில அடிப்படை விஷயங்களைப் பார்போம். நாம் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது, தொடு உணர்வுகள் ஆகிய இந்த ஐந்து அனுபவங்களையும் எப்படிப் பெறுகிறோம்?

உடலில் உள்ள இந்த்ரியங்களைப் பயன்படுத்தி மனதால் உணர்கிறோம். அதாவது, கண்,
காது, மூக்கு, நாக்கு மற்றும் சருமம் வழியாக நம் முன்னே தெரியும் உலகை அறியும் அனுபவங்களைப் பெறுகிறோம்.

இதை ‘ப்ரத்யக்க்ஷ ஞானம்’ என்று வகைப் படுத்துகிறது உபநிஷத்துகள். ஸம்ஸ்க்ருத மொழியில் ‘அக்க்ஷ’ என்றால் ‘கண்’ என்று பொருள். உபநிஷதங்கள் பொதுவாக எல்லா இந்த்ரியங்களையுமே ‘அக்க்ஷ’ என்று வகைப்படுத்துகிறது.

அதாவது வெளி உலகிலிருந்து இந்த்ரீயங்கள் வழியாக உள்வாங்கும் அனைத்து அனுபவங்களையும் ‘ப்ரதி அக்க்ஷ ஞானம்- ப்ரத்யக்க்ஷ ஞானம்’ என்று விளக்கமளிக்கிறது.

தவறான புரிதல்

நம்மில் பெரும்பாலோர் இந்த அனுபவத்தையே ‘நேரடி அனுபவம்’ என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். இதில் என்ன தவறு?

ஏனென்றால் இத்தகைய அனுபவங்களை நாம் இந்த்ரியங்கள் வழியாகவே
பெறுகிறோம். இந்த்ரியங்கள் இல்லாவிட்டால் இந்த அனுபவங்கள் கிடைக்காது அல்லவா?

அனுபவிப்பவருக்கும், அனுபவிக்கப்படும் பொருளுக்கும் இடையே செயல்படும் கருவிகளாக இந்த இந்த்ரியங்கள், ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறது.

ஆகவே இவை பிரதிபலிக்கும் அனுபவங்கள் நம்முடைய நேரடி அனுபவங்களாக இருக்க முடியாது.

அனுமானங்கள்

சில நேரங்களில் இந்த இந்த்ரியங்களைப் பயன்படுத்த முடியாதபோது, சில விஷயங்களை அனுமானங்களால் மறைமுகமாக அறிகிறோம். எப்படி?

நம் இந்த்ரியங்களின் உணர்வு எல்லைகளுக்கு அப்பால் உள்ள விஷயங்களை, நாம் அறிய முடியாத, அல்லது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்களை நாம் நம்முடைய இந்த்ரியங்களைப் பயன்படுத்தி அறியமுடியாதபோது, புத்தியைப் பயன்படுத்தி அனுமானிக்கிறோம். அதாவது மறைமுகமாக அறிந்துகொள்கிறோம்.

உதாரணமாக, தூரத்தில் புகை தெரிகிறது என்றால் அங்கே நெருப்பும் இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஏற்கனவே பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்கிறோம்.

நெருப்பை நாம் காணமுடியாமல் போனாலும், புகையின் அடிப்படையில், நாம் காணமுடியாத நெருப்பை நாம் அங்கே இருப்பதாக அனுமானிக்கிறோம்.

சில நேரங்களில் ப்ரத்யக்க்ஷமாக அறியமுடியாத அனுபவங்களை மற்றவர் சொல்லக் கேட்டு அறிகிறோம், அல்லது புத்தகங்களைப் படித்து அறிகிறோம்.

நேரில் பார்க்க முடியாவிட்டாலும் படங்களைப் பார்த்து அறிகிறோம். இதை உபநிஷத்துகள் ‘பரோக்க்ஷ ஞானம்’ (அதாவது ‘பர அக்க்ஷ’ இந்த்ரியங்களின் உணர்வு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) என்று வகைப்படுத்துகின்றன.

சொல்லப் போனால் பெரும்பாலான அனுபவங்கள் நமக்கு பரோக்க்ஷமாகவே கிடைக்கின்றன. இந்த வகையான அனுபவங்களும் நேரடியாகக் கிடைப்பவை அல்ல.

விசித்திரமான மூன்றாவது அனுபவம்

இந்த இரண்டு வகையான அனுபவங்கள் அல்லாது மூன்றாவதாக இன்னொரு அனுபவம் இருக்கிறது. இது இந்த்ரியங்களை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ அல்லது புத்தியைப் பயன்படுத்திப் பெறக்கூடிய அனுபவம் அல்ல.

இது மிகவும் வித்தியாசமானது. விசித்திரமானது. அலாதியானது. இயல்பானதும் கூட. இது நம் அன்றாட வாழ்க்கையில் நித்தமும் அனுபவிக்கிறோம்.

ஆனால் பெரும்பாலும் இதைப்பற்றி நாம் யோசிப்பதும் இல்லை, கூர்ந்து கவனிப்பதும் இல்லை. அதனால் இந்த அனுபவம் நமக்கு புரியாததாக இருக்கிறது.

இந்த அனுபவத்தை ‘அபரோக்க்ஷ ஞானம்’ என்று வர்ணிக்கிறது உபநிஷதம். இந்த்ரியங்களையோ, அனுமானங்களையோ பயன்படுத்தாமல், அதாவது இடையே எந்த ஊடக (இந்த்ரியங்களின்) உதவியும் இல்லாமல் நேரடியாக அறிவது, உணர்வது.

உதாரணமாக நமக்கு மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் நேரடியாகவே உணர்கிறோம். அதற்கு எந்த இந்த்ரியங்களின் உதவியும் தேவை இல்லை.

மனதில் ஏற்படும் சோகம், துக்கம், மகிழ்ச்சி, ஞாபகம் போன்ற உணர்வுகளை நேரடியாகவே உணர்கிறோம். அனுபவங்களின் அடிப்படை ‘வாழும் தன்மை’ இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இந்த அனைத்து அனுபவங்களையும் உணர்தலுக்கு அடிப்படையான நம் ‘உணரும் தன்மை’, அல்லது ‘வாழும் தன்மை’ (‘நான்’ இருக்கிறேன் என்பதை எப்போதும் நம்மால் உணரமுடிகிறது).

இதற்கு இந்த்ரியங்களோ, அல்லது மறைமுக அனுபவமோ தேவை இல்லை அல்லவா? இது நேரடி அனுபவம்.

நம்முடைய ‘நான் வாழ்கிறேன், நான் இருக்கிறேன்- என்கிற தன்மை’, இதை உணரும் தன்மையே மற்ற எல்லா அனுபவங்களுக்கும் அடிப்படை. இந்த்ரியங்கள் எப்படி உலக அனுபவங்களை நமக்கு உணர்த்துகின்றன? இதுதான் விந்தை. தெய்வீக விளையாட்டு.

ஆனால், இந்த்ரியங்களின் உதவியின்றி, நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நேரடியாகவே நாம் எப்படி உணரமுடிகிறது ? இது அதை விடப் பெரிய விந்தை.

அனாஹத குரல்

நமக்குள்ளே சதா கேட்கின்ற ‘அனாஹத’ குரல், இதைப் பற்றி நாம் யோசித்தது உண்டா? இரண்டு பொருள்கள் மோதிக்கொள்ளும்போது செயற்கையாக ஏற்படுவது ‘ஹத’- சப்தம்.

எந்தப் பொருளும் மோதாமல் இயற்கையாக ஏற்படுவது அனாஹத சப்தம். இந்தச் சப்தம், இந்தக் குரல் எங்கே, எப்படி உருவாகிறது? இந்த்ர்யங்களின் உதவியின்றி இதை
எப்படி உணர்கிறோம்? உணர வைப்பது யார்? இதுவல்லவோ அதிசயம்!

குறுகிய வட்டம்

இந்த்ரியங்கள் கொண்ட உடல், உள்ளம் ஆகியவையின் கலவையை ‘நான்’ என்று சொந்தம் கொண்டாடும் மனிதன், அனுபவங்களை உணரக்கூடிய மிகச் சிறிய எல்லைகளோடு வரையறுக்கபட்டவன் தான் என்றும், இந்தப் பரந்த உலகில் தான் ஒரு சிறு துறும்பு என்கிற கற்பனை சிறுமையில் திளைக்கிறான்.

தான் சிறிது காலம் வாழ்த்து மடியப் போகிறவன். இந்த உடலும் உள்ளமும் நோய்களாலும், கர்ம வினைகளாலும் அழியப் போகிறது. அதை தடுக்கமுடியாது.

ஆகவே இந்த அழிவிலிருந்து மீள வழியில்லை, ஆகவே வாழும் வரை எல்லா சுகங்களையும் அனுபவித்து மடிவோம் என்ற சிந்தனையோடு சம்சார வாழ்க்கையில் அல்லல் படுபவர்கள் நம்மை போன்ற சராசரி மனிதர்கள்..

உணர்வுகளை உணர வைப்பது யார்?

அபரோக்ஷ உணர்வுகளை ‘உணர்வது’ ஒருபக்கம் இருக்க, இந்த உணர்வுகளை உணர வைப்பது யார்? இந்தக் கேள்விக்கு உபநிஷதங்கள் அருமையாக ஒரு விளக்கத்தைத் தருகின்றன.

ப்ரத்யக்ஷ, பரோக்ஷ மற்றும் அபரோக்ஷ அனுபவங்களை நமக்கு புரியவைப்பது யார்? எந்த ஒரு அனுபவமும் எப்படி ஏற்படுகிறது? என்கிற கேள்விக்கு அளிக்கப்பட்ட
பதில் இதுதான்:

ஒரு அனுபவம் ஏற்பட மூன்று விஷயங்கள் தேவை. அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்பவர், இரண்டுக்கும் இடையே அந்த தெய்வீக உணர்வு,

அனுபவிக்கப்படும் பொருளும் அனுபவிப்பவரும் வெவ்வேறாக இருக்கும்போது மட்டுமே அனுபவம் ஏற்படுகிறது. இந்த உலகம் அனுபவிக்கப்படும் பொருள். இதற்கு இடை-ஊடகமாக உதவுவது உடல் (இந்த்ரியங்கள்), மனம், புத்தி போன்றவை.

அப்படியானால் அனுபவிப்பவர் யார்? இதைப் புரிந்துகொள்வதில்தான் நாம் தவறு செய்கிறோம்.

ஞான யோகம்

உதவி செய்யும் இடை-ஊடகங்களையே அனுபவிப்பவராக ஏற்றுக்கொண்டு அதனால் ஏற்படும் சங்கடங்களுக்கும் இந்த ஊடகங்களின் கலவையான உடலும், உள்ளமும்தான் காரணம் என்று ஏற்றுக்கொண்டு நிவாரணம் தேடுகிறோம்.

அனுபவங்களின் இந்த அடிப்படை உணர்வுகளை சதா வெளிச்சம் போட்டு காட்டுவது
ஸ்வப்ரகாஸமாக ஒளிர்ந்துகொண்டிருப்பது ‘ஆத்மன்’.

இது ஊடகம் அல்ல, கருவியும் அல்ல. இது தெய்வீகம். நம் உண்மை ஸ்வரூபம். நம்
உண்மை இயல்பும் இதுவே. இதுவே ‘நாம்’.

இதை வேறு எந்த கருவியாலும் உணரமுடியாது, ஆழ்ந்த விசாரணை வழியாக மட்டுமே
அறியமுடியும். இதுவே ஞான யோகம்.

‘ப்ரதி போத விதிதம் மதம், அம்ருதத்வமஹி விந்ததே’ ஒவ்வொரு அனுபவத்தின் பின்னணியிலும் இந்த தெய்வீக சக்தி வெளிப்படுகிறது.

இந்த விந்தையை உணர்ந்தவனுக்கு பிறப்பு, இறப்பே இல்லை என்கிறது உபநிஷத்து.
ஆனால் நாமோ, நம் அடிப்படையான இந்த தெய்வீகத் தன்மையை உணராமல், தெய்வீக அனுபவத்தை வெளியில், இந்த உலகில் தேடி அலைகிறோம்!

தெய்வீகத் தன்மை

இந்தத் சூட்சுமான தெய்வீகத் தன்மை, நமக்கு நேரடியாகவே புலப்படுகிறது. இதை யாரைக் கேட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தெய்வீகத்தன்மை இல்லையென்றால் எந்த வகையான அனுபவமும் சாத்யமில்லை. பிரத்யக்க்ஷமோ பரோக்க்ஷமோ அல்லது அபரோக்க்ஷ அனுபவமோ இவை அனைத்திற்கும் அடிப்படையானது இந்த தெய்வீகத் தன்மை.

இதை உணர்ந்து, தெளிந்து, ஸம்சார சிறையிலிருந்து விடுதலை பெறுவதே மானிடப் பிறப்பின் பயன். இதையே வேதங்கள் ‘மோக்ஷம்’, என்று வர்ணிக்கின்றன.

அதாவது, இறந்த பிறகு வேறு எங்கோ கிடைப்பது அல்ல இது. ‘வாழும் நிலையிலேயே சோகம், துக்கம், ஸம்ஸார பந்தம் முதலான அனைத்து பிணைப்புகளிலிருந்தும் விடுதலை’.

இதை ‘அத்யந்தக துக்க நிவர்த்தி, பரமானந்தப் ப்ராப்தி’ என்று வேதங்கள்
வருணிக்கின்றன. இதுவே சத்சித் ஆனந்த நிலை.

ஆனாலும் நம்மோடு இணைந்து, நமக்கு அனைத்தையும் உணர்த்தும் இந்த தெய்வீகத்
தன்மையை பற்றி நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை.

பத்து நண்பர்கள் கதை

இந்த நேரடி அனுபவத்தை புரிந்துகொள்ள உதவி செய்யும், நமக்குத் தெரிந்த ஒரு பிரபலமான பழைய கதையை மீண்டும் அலசிப் பார்ப்போம்.

பத்து நண்பர்கள் ஒரு பயணத்தை மேற்கொண்டனர். வழியில் நீர் புரண்டோடும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அனைவரும் மிகவும் கவனத்துடன் ஆற்றை நீந்திக் கடந்துவிட்டனர்.

சந்தேகம்

மறுகரையை அடைந்ததும், பத்து நண்பர்களும் பத்திரமாக சேர்ந்து
விட்டனாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதை உறுதி செய்துக் கொள்ள,
வரிசையாக நின்று அவர்களை எண்ணத் தொடங்கினர்.

முதலில் எண்ணிக்கையை மேற்கொண்டவர், அவரை விடுத்து மற்றவர்களை
எண்ணிக்கையில் கொண்டு, ஒன்பது நண்பர்களே ஆற்றைக் கடந்துள்ளதாக அறிவித்தார்.

இப்படி ஒவ்வொருவராக இதே தவறைச் செய்து ஒன்பது பேர் மட்டுமே இருப்பதாக அனுமானித்துக் கொண்டு பத்தாவது நபர் ஆற்றில் அடித்துக்கொண்டு போய்விட்டார் என்று முடிவு செய்தனர். இது ஒரு வகையில் கண்ணால் காண்பது பொய் அல்லவா?

சோகம்


‘அந்த பத்தாவது நண்பரின் குடும்பத்தாருக்கு என்ன பதில் சொல்வோம்’
என்று பயத்தில் சிக்கி சோகத்தில் மூழ்கி அழத்தொடங்கினர்.

அப்போது அந்த வழியே வந்த முதியவர் ஒருவர் இந்த இளைஞர்கள் அழுவதைக்
கண்டு என்னவென்று விசாரித்தார்.

தாங்கள் பத்து நண்பர்கள் இந்த ஆற்றைக் கடந்ததாகவும் ஒரு நண்பர் நீரில் அடித்துச் சென்று விட்டதாகவும் சொல்லி மேலும் அழுதனர்.

உண்மை அளித்த ஆறுதல்

முதியவருக்குப் பார்த்ததுமே புரிந்தது. பத்து நண்பர்களும் அங்கே இருந்தனர். உண்மையில் பத்து பேர் அங்கே இருந்தும் இவர்களுக்கு அறியாமையால் இது தெரியவில்லையே!

‘கவலைப்பட வேண்டாம். பத்தாவது நண்பர் இங்கேயேதான் இருக்கிறார். நான் உங்களுக்குக் காட்டுகிறேன்’ என்று ஆறுதல் கூறினார்.

மகிழ்ச்சி

நண்பர்களுக்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. முதியவர் அனைவரையும்
வரிசையில் நிற்கவைத்து ஒரு இளைஞனை அழைத்து எண்ணச்
சொன்னார்.

அவன் முன்பு செய்தது போல ஒன்பது பேரை எண்ணி முடித்தான். கண்ணால் காண்பதும் பொய் என்பதை அவன் உணரவில்லை. முதியவர் அந்த எண்ணிக்கை மேற்கொண்டவனின் கையை அவனை நோக்கி மடக்கி நீதான் அந்த பத்தாவது நண்பன் என்றார்.

‘அட என்ன ஆச்சர்யம், இவ்வளவு நேரம் எனக்குப் புலப்படாத நான் அல்லவா அந்த பத்தாவது நண்பன்’ என்று உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தான்.

இப்படியாக அனைத்து நண்பர்களும் தங்கள் பத்தாவது நண்பன் எங்கும் காணாமல் போகவில்லை. தங்களுடனேயே இருக்கிறான். அது எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படாத தாங்கள்தான் தற்காலிகமாக காணாமல் போனோம் என்கிற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சியுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

கண்ணால் காண்பதும் பொய்?

இந்தக் கதையைக் கூர்ந்து கவனித்தால் கண்ணால் காண்பதும் பொய் என்பது உள்பட பல விஷயங்கள் நமக்குப் புலப்படுகின்றன. பத்து நண்பர்களும் தங்கள் கண்கள் வழியாகப் பார்த்தும், அவர்களுக்குள்ளே உயிருடன் இருந்த பத்தாவது நபரை ஏன்
தெரிந்துகொள்ள முடியவில்லை?

அவர்கள் எண்ணிக்கையை மேற்கொண்டு முயன்றபோதும் பத்தாவது நபர் கிடைக்கவில்லை. நேரில் இருந்தும் அந்த பத்தாவது நபர் மற்றவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. அப்படியெனில் கண்ணால் காண்பதும் பொய் என்பது சரியாக இருக்குமோ?

முதியவர் அந்தப் பத்தாவது நபர் அங்கேயே இருக்கிறார் என்று சொன்னபோது, அந்த நபரை அடையாளம் காணும் வரை, கேட்டதும் பொய்யாகவல்லவா பட்டது?

உண்மை புலப்படாத வரை, பார்த்ததும் கேட்டதும் பொய்யாகிவிடவில்லையா? ஆனால் முதியவர் சொல்லிய விசாரணை வழியாக, தன்னை விடுத்து மற்றவர்களை மட்டுமே எண்ணிக்கையில் சேர்த்த தவறை அந்த இளைஞர்கள் உணர்ந்தபோது,
பத்தாவது நண்பன் புலப்பட்டதோடு அல்லாமல் அவன் உயிரோடுதான்
இருக்கிறான், தங்கள் முன்னேயே இருக்கிறான், அவன் உண்மையுமாகி விட்டான் என்கிற நிதர்சனம் தெரிந்தது.

விசாரணை வழி காட்டியது

அதுகாறும் மூடி மறைந்திருந்த இந்த ‘உணர்தல் அனுபவம்’ எப்படி வெளிப்பட்டது? எப்படி சாத்தியமாகியது?

இது இந்தியங்களைச் சார்ந்ததோ அல்லது அனுமானங்களைச் சார்ந்ததோ இருக்கவில்லை அல்லது, முதியவர் சொல்கிறார் என்றால் அதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உணர்ந்த அனுபவமோ அல்ல இது.

அந்த இளைஞர்களே, தங்கள் தவறை (எண்ணிக்கையில் தங்களை சேர்க்காமல்
விட்டதை) உணர்ந்து தங்கள் அறியாமையிலிருந்து மீண்டபோது, காணாமல் போன அந்த பத்தாவது நண்பன் புலப்பட்டான்.

இங்கே இந்த்ரியங்களோ அல்லது அனுமானங்களோ உதவி செய்யவில்லை. இந்த
இரண்டு வகை அனுபவ எல்லைகளைத் தாண்டி அபரோக்க்ஷ ஞானம் வழியாகத்தான் உண்மை தெரிந்தது. இது அவர்கள் மேற்கொண்ட விசாரணை வழியாக மட்டுமே கிடைத்தது.

அனுபவங்கள் ஒரு தோற்றமே

இந்தக் கதையில் மேலும் சில உண்மைகள் தெரிகின்றன. முதியவர் சொல்லும்வரை, பத்தாவது நபர் அங்கேயே இருந்தும் மற்றவர்களுக்கு ஏன் புலப்படவில்லை?

ஏனென்றால் இப்படித்தான் நாம் நம் உண்மையான இயல்பைத் தெரிந்துகொள்ளாமல், ‘பிரத்யக்க்ஷ மற்றும் பரோக்க்ஷ அனுபவங்களே நிதர்சனமானவை, நிஜமானவை’ என்று
ஏற்றுக் கொண்டு நம்மை பழக்கிக் கொண்டு விட்டோம்.

இந்த அறியாமையிலிருந்து நம்மை மீளச் செய்வதே வேதங்களின் நோக்கம். இந்த மூன்று வகையான அனுபவங்களையும் நமக்கு உணர்த்தும் அந்த தெய்வீக சக்தியே உண்மையில் “நாம்” என்பதை உணரும்போது இந்த அனுபவங்கள் அனைத்தும் ஒரு தோற்றம் என்று புரிகிறது.

ஆத்மன் ஒன்றே உண்மை, நிரந்த்ரம்

இந்த அனுபவங்களை நமக்கு உணர்த்தும் சக்தியே ‘ஆத்மன்’ அல்லது ‘ப்ரம்மன்’ என்று உபநிஷத்துக்கள் வர்ணிக்கின்றன.

உருவமில்லாத, அருவமான இயல்புடன், அனைத்து அனுபவங்களுக்கும் சாட்சியாக
இருக்கும் ஆத்மனுக்குள்ளே தோன்றுவதுதான் இந்த உடல், உள்ளம், உலகம் எல்லாம். ஆத்மன் ஒன்றே நிரந்தரம், மற்ற அனைத்தும் தோன்றி மறைபவை.

ஆத்ம ஸ்வரூபமே நம் உண்மை இயல்பு

அதனால்தான் அனுபவங்கள் அனைத்தும் ஆத்மனுக்குள் தோன்றும் தோற்றங்கள், அவை நிரந்தரமானவை அல்ல என்றனர் நம் முன்னோர்கள்.

புத்தியைப் பயன்படுத்தி இந்த அனுபவங்கள் வாயிலாக விசாரணை மேற்கொள்ளும்போது, நம் அறியாமை விலகுகிறது.

அப்போது அனைத்து அனுபவங்களையும் நமக்கு உணர்த்தும் ஸ்வப்ரகாசமாக சதா ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆத்ம ஸ்வரூபமேதான் நம் உண்மை இயல்பு என்பது புரியும்.

அப்போது நம் அனுபவங்கள் அனைத்தும் நிஜம் அல்ல என்கிற உண்மை புரியும். உடல் உள்ளம் சேர்ந்த கலவையே தோற்றமாகும்போது அவைகளால் உணரப்படும்
அனுபவங்களும் தோற்றங்களாகும் அல்லவா?

ஆன்மீகப் பயணம்

அறியாமை அகலும்போது உண்மை என்று நினைத்து ‘நாம்’ மேற்கொள்ளும் அனைத்து சோகங்கள், துக்கங்கள், கஷ்டங்கள், கவலைகள் எல்லாம் மறைந்து போகாதா?

இந்த உலகமும், வாழ்க்கையும் தோற்றங்கள் என்று ஏற்றுக்கொள்ளும்போது, ஒரு திரைபடத்தை ரசிப்பதுபோல ரசித்து சந்தோஷமாக இருப்பதே ஆன்மீகப் பயணம்.

ப்ரஹதாரண்யக உபநிஷத் இதை அழகாகக் குறிப்பிடுகிறது. ‘ஆத்மானம் சேத்விஜானியாத், அயம் அஸ்மி இதி புருஷஹ கிம் இச்சன் கஸ்ய காமய, சரீரம் அனு ஸஞ்ஜ்வரேத்’

இதுநாள் வரை இந்த உடலே ‘தான்’, உள்ளமே ‘தான்’, அல்லது இரண்டும் சேர்ந்த கலவையேதான் ‘தான்’ என்று கற்பனை செய்துக் கொண்டவன்.

அதனால் இந்த உடல் உள்ளம் கலந்த கலவை வழியே அனுபவிக்கும் அனைத்து அனுபவங்களுக்கும் தானேதான் பொறுப்பு என்று அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் மானிடன்.

எப்போது தான் உடல், உள்ள சேர்ந்த கலவை அல்ல, அதையும் தாண்டி இந்த அனுபவங்களுக்கும் அடிப்படையான, சதா ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆத்மன் என்பதை
உணரும்போது, யாருக்காக இந்த உலக அனுபவங்களையோ அல்லது அனைத்து வகையான இச்சைகளையோ நாடி அதன் வழியாக சரீரம் தரும் துக்கம் என்கிற ஜ்வரத்தை அனுபவிக்கப் போகிறான்? என்று உண்மையின் தன்மையை விளக்குகிறது இந்த உபநிஷத்து.

இதுதான் நாம் தேடி அலையும் ‘உண்மை’. நாமேதான் அந்த உண்மை! இது ஒன்றேதான் நிதர்சனம்.

மற்றவை எல்லாம் இந்த உண்மையில் தோன்றி மறையும் தோற்றங்கள். ரிக் வேதம் இதையே ‘ஏகம் ஸத்’ என்கிறது. இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தவே உருவாகி உள்ளது சென்னப்பமலையும் அங்கே அருவமாக ஐக்யம் கொண்டுள்ள ப்ரம்மகுருவும்.

உபநிஷத்துக்கள் என்றால் என்ன?

பல நூற்றாண்டுகளாக ஆன்மிக வழிகாட்டுதல்களை மனிதனுக்கு அளித்து இயற்கையின் மீதான அவனுடைய வெற்றியை உறுதிப்படுத்தி பாதுகாப்பவைத்தான் உபநிஷத்துக்கள்.
இவை ரிஷிகளால் வெறும் தத்துவ ஆராய்ச்சிகளில் கிடைத்தவை அல்ல. மாறாக உள்ளுணர்வில் ஆழ்ந்த இறை வழிபாட்டின் மூலம் பெற்றவை.

உபநிஷத்துக்களின் தாக்கம் இந்தியா தவிர வேறு நாடுகளில் உண்டா?

உண்டு. ஜப்பான், சீனா, கொரியா, மத்திய ஆசிய நாடுகள் பலவற்றிலும் உபநிஷத்துக்களின் தாக்கம் அந்தந்த நாடுகளின் சமய, சமுதாய வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன.

உபநிஷத்துக்களுக்கு உயர்ந்த இடத்தை எந்த சமயம் கொடுத்திருக்கிறது?

உபநிஷத்துக்களுக்கு எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தை அளித்திருப்பது இந்து சமய பாரம்பரியமே.

உபநிஷதம் என்பது பொருள் என்ன?

ஸத் என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது உபநிஷத். ஸத் பல பொருள்களைக் கொண்டது. தளர்த்துதல், செல்லுதல், அழித்தல், என நிலையற்ற சம்சார வாழ்க்கையில் இருந்து நம்மை தளர்த்தி, தெய்வீக ஞானமாகிய உபநிடதம், நம்முடைய உண்மை இயல்பை மறைக்கும் அறியாமையை அழித்து இறைவன் என்ற பரம்பொருளை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இந்த ஞானத்தை கற்றுத் தரும் நூல்களும், சாஸ்திரங்களும்தான் உபநிஷத்துக்கள் என்று நாம் அழைக்கிறோம்.

தில்லி மதுபான முறைகேடு வழக்கு ஏன்?

ஏழை சிறுவனும் நேர்மை தந்த பரிசும்

எது நிஜம்? படமா! திரையா!

வெ நாராயணமூர்த்தி

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நம் அன்றாட
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்கள். இதில் எது நிஜம் (what is reality)

சினிமா படம்

சினிமா படக் காட்சியையே பார்த்திராத ஒரு சிறுவனுக்கு, அந்த அனுபவத்தைக் காட்ட
விரும்பினார் அவனுடைய தாத்தா.

அருகில் இருக்கும் திரை அரங்கத்துக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றார். அங்கே சென்றபோது படக் காட்சி தொடங்கியிருந்தது.

மஹாபாரதக் கதை. ப்ரம்மாண்டமான திரையில் கிருஷ்ணனும் அர்ஜுனனும்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அருகில் பெரிய சேனைகள் போருக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. சிறுவன் தன் வாழ்நாளில் இதை முதல் முறையாகக் காண்கிறான். அதைப் பார்த்து அசந்து போகிறான்.

‘தாத்தா, கிருஷ்ணனும் அர்ஜுனனும் எங்கிருந்து வந்து பேசுகிறார்கள்? அவர்கள்
இங்கேயே இருக்கிறார்களா? அவர்களை நேரடியாகப் பார்ப்பது போலவே
தெரிகிறதே?’ என்று கேட்டான் சிறுவன்.

‘இல்லையடா குழந்தை, இது படக்காட்சி. நீ பார்க்கும் மஹாபாரதக் கதை உனக்கு எதிரே தெரியும் இந்தப் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகிறது.’ என்று ஒரு சிறிய விளக்கம் தந்தார் தாத்தா.

கண்ணுக்குத் தெரியாத திரை

சிறுவனுக்கு புரியவில்லை. ‘திரையா? எங்கே இருக்கிறது நீங்கள் சொல்லும் திரை?
இங்கே நான் பார்ப்பது அனைத்தும் நிஜ மனிதர்களாக அல்லவா தெரிகிறார்கள்?’
என்றான் அவன்.

‘நீ பார்க்கும் மனித பிம்பங்களுக்கு பின்னால் தெரிவதுதான் திரை. இன்னும்
சொல்லப்போனால் இந்த திரையில்தான் நீ பார்க்கும் படங்கள் பிம்பங்களாகப்
பிரதிபலிக்கப்படுகின்றன’ என்றார் தாத்தா.

‘நீங்கள் சொல்லும் அந்தத் திரை எங்கே இருக்கிறது? என்னால் பார்க்க
முடியவில்லையே?

ஒரே வேளை அது கிருஷ்ணனுக்கு பின்னால் இருக்கிறதா? அங்கே அர்ஜுனன் அல்லவா நிற்கிறான்? அவனா திரை? என்றான் சிறுவன்.

‘இல்லை இன்னும் பின்னால் பார்’ என்றார் தாத்தா. ‘அப்படியென்றால் அந்த குதிரை,
யானை சேனைகளா திரை?’. இல்லை இன்னும் பின்னால்’. நீலமாகத் தெரியும்

வானமா?’ இல்லை இன்னும் பின்னால்’, என்று தாத்தா சொல்ல இந்த விளக்கம்
தொடர்ந்தது.

தெரிந்தது திரை

சிறுவனுக்கோ புரியவில்லை. ‘எனக்கு நீங்கள் சொல்லும் திரை தெரியவில்லையே
தாத்தா’ என்று சங்கடப்பட்டான் சிறுவன். ‘கொஞ்சம் பொறு’ என்று சமாதானப்
படுத்தினார் தாத்தா.

சிறிது நேரத்தில் படக்காட்சி நின்றது. இடைவேளை நேரம். அருகில்
அமர்ந்திருந்தவர்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர். அரங்கத்தில் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கின.

அப்போதுதான் முதல் முறையாக தன் முன்னே அந்த வெள்ளைத் திரையைக்
கண்டான் சிறுவன்.

‘அட, நான் இதுவரை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

இவ்வளவு நேரம் புலப்படாத இந்தத் திரை இப்போது எங்கே இருந்து வந்தது?’ என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான்.

இடைவேளை முடிந்து மீண்டும் படக்காட்சி தொடங்கியது. கதை தொடர்ந்தது.
மனிதர்கள் வந்தார்கள், கடவுளர்கள் வந்தார்கள், பேசினார்கள், பாடினார்கள்,
அழுதார்கள், சிரித்தார்கள், மாபெரும் போர் நடந்தது.

ஆனால் சிறுவனுக்கோ கதை மேல், உருவங்கள் மேல் முன்பிருந்த நாட்டம்,
ஸ்வாரஸ்யம் இப்போது இல்லை. வேறுபாடு தெரிந்தது.

எது நிஜம்?

சிறுவன் புத்திசாலி. தன் கேள்விகளை நிறுத்திவிட்டான். கதையையும் மறந்தான். தெரியும் உருவங்களை மறந்தான். அவைகளை விலக்கி, இந்த பிம்பங்களுக்கு பின்னே, காட்சிகளுக்கு பின்னே மறைந்திருக்கும் திரையை ஆராயத் தொடங்கினான்.

காட்சி தெரியும்போது திரை மறைந்து விடுகிறது. அது கண்ணுக்குத் தெரிவதில்லை, காட்சிகள் மறைந்தவுடன் திரை மட்டுமே நமக்குத் தெரிகிறது.

திரை இல்லாவிட்டால் இந்தக் காட்சிகளே இல்லை, தத்ரூபமாகத் தெரியும் இந்த மனிதர்களும், கடவுளர்களும் நமக்கு தெரியமாட்டார்கள்.

‘ஆக, நான் காண்பது திரையின் மேல் பிரதிபலிக்கும் பிம்பங்களின்
மாயாஜாலம். தற்போது எது நிஜம்?

நிஜத்தில் நடக்காத சம்பவங்களை, இப்போது நடப்பதுபோல் தத்ரூபமாக காட்டுகிறது இந்தத் திரை. இதுதான் நிஜமோ?

ரூபங்கள் வெறும் மாய தோற்றங்கள், காட்சி முடிந்தவுடன் அனைத்தும்
மறைகின்றன. எது நிஜம்? இதுதான் நிஜம் என்று உணர்ந்தான். தெளிவு பிறந்தது. இந்த
உண்மையை உணரவைத்த தன் தாத்தாவுக்கு நன்றி சொன்னான்.

எது நிஜம்? ரொம்ப அழகான கதை. எதற்கு என்னிடம் சொன்னீர்கள்? என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் நண்பர்.

நாமும் சினிமா திரையும்

ஐயா, அந்தச் சிறுவனும், திரை அரங்கமும், திரையும் நம்மோடு சம்பந்தப்பட்டவை என்றதும் நண்பருக்கு இப்போது ஆச்சரியம் ஏற்பட்டது.

படக்காட்சியை திரையில் பார்ப்பதைப் போல நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள இந்த
உலகையும் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். தொடர்ந்து காட்சிகள் நடைபெறுகின்றன. பகல் காட்சி, இரவுக் காட்சி என்று மாறி மாறி வருகின்றன.

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நம் அன்றாட
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்கள். இந்த மூன்று விதமான
அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரைதான் உண்மையான ‘நாம்’.

திரைக்கும் அதில் ஒளிரும் பிம்பங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம் உடல்
புலன்கள் திரையில் தெரியும் உருவங்களையெல்லாம் பார்க்கின்றனவே தவிர
திரையைப் பார்ப்பதில்லை.

திரைக்கும் அதில் காணும் பிம்பங்களுக்கும் வேறுபாடு தெரியும்போது நிஜத்துக்கும் தோற்றங்களுக்கும் வித்தியாசம் புரிகிறது.

ஒளிரும் பிம்பங்களைத்தான் நம் புலன்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று
நவீன விஞ்ஞானம் நம்மை மேலும் குழப்புகிறது. ஆனால் இதுவல்ல உண்மை
என்கின்றன வேதங்கள்.

என்ன சொல்கிறீர்? என்று அதிர்ச்சியுடன் கேட்டார் நண்பர். ஆமாம். கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்.

இது எப்படி சாத்தியம்?

வெளிச்சமே இல்லாத ஒரு இடத்தில், அதாவது செயற்கையாக ஒளியோ அல்லது ஒலியோ புகாத இடத்திலும் நம்மால் ‘நம்மை’ நாம் இருப்பதை
உணரமுடிகிறது. இது எப்படி சாத்தியம்? கடஉபநிஷதம் இந்த ஸ்லோகத்தின் வழியாக இதை விளக்குகிறது:

நதத்ர சூர்யோ பாதி
நசந்த்ர தாரகம்
ந இமஹ வித்யதோ பாந்தி
குட அயம் அக்னிஹி
தமேவ (தம ஏவ) பாந்தம்
அனுபாதி சர்வம்

தஸ்ய பாஸ
சர்வமிதம் விபாதி

நம் புலன்கள் வழியாக நாம் உணரும் அனைந்து உணர்வுகளுக்கும் ஒளி தருவதுதான்
ஆத்மன். இது தெய்வீக சக்தி. உண்மையான ‘நாம்’.

ஆனால் நாமோ இந்த உடல், உள்ளம், புத்தி, அஹம்காரம் கலந்த கலவைதாம் நாம் என்று தவறாக கற்பனை செய்துகொண்டு அறியாமையில் வாழ்கிறோம்.

வெளியே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் ஸூர்யன் எப்படி இருளைப் போக்கி
பொருள்களை அடையாளம் காட்டுகிறானோ, அதுபோல சதா
ஒளிர்ந்து கொண்டிருக்கும் நம் ஆத்மன் வெளியில் காணும் பொருள்களுக்கு ஒளி தந்து
நம் மனத்திரையில் பிம்பமாக உணர்த்துகிறது என்கிறது வேதங்கள்.

நாம் யார்?

வெளியில் இருந்து வரும் ஒளி நமக்கு பொருள்களைக் காட்டுவதில்லை. நம் ஸ்வயம் ஜோதிதான் வெளிஉலகத்துக்கே ஒளி தந்து, இன்னும் சொல்லப்போனால் நமக்கு வெளியில் தெரியும் ஸூர்யனையே அடையாளம் காட்டுகிறது!

நம் திரையில் தோன்றும் தோற்றங்களே இந்த உலகம் (இந்த உடலையும் சேர்த்து). நம்
ஆத்மஜோதி ஒளிர்ந்து உணர்த்தாவிட்டால் எந்தப் பொருள் உணர்வும் நமக்கு
இருக்காது. உண்மையில் நாமே நாம் காணும் இந்த உலகிற்கெல்லாம் ஒளிதரும்
ஸூர்யன்.

இங்கே யோசித்துப் பாருங்கள். அன்றாட வாழ்க்கையில், திரை அரங்கமும் நாமே,
திரையும் நாமே. திரையில் ஒளிரும் பிம்பங்களைக் கண்டு, அவையே நிஜம் என்று
தவறாக ஏற்றுக்கொண்டு அசந்து போகிறோம். பிம்பங்களுக்கு ஏற்படும் தொல்லைகள்
அனைத்தும் நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம்.

இந்த மறைந்திருக்கும் திரையை நம்மால் உணரமுடிவதில்லை. அந்தச் சிறுவன்
தேடியது போல நம்மில் பெரும்பாலோர் திரையைத் தேடுவதில்லை.

திரையைக் காணமுடியாத நாம் வெளிஉலகம் காட்டும் திரைப்படம் ஒன்றே நிஜம் என்று எண்ணி படக்காட்சியில் வரும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளோடு உறவாடி,
உண்மையில்லாத பிம்பங்களோடு ஒன்றிப் போகிறோம்.

அவைகளே உண்மை, அவை நம்முடையவை என்று சந்தோஷப்படுகிறோம் அல்லது வருத்தப்படுகிறோம்.

மனிதப் பிறவியின் நோக்கம்

நம் முன் தெரியும் திரைக் காட்சிகளையும், கதா பாத்திரங்களையும் விட்டு விலகி,
உண்மையான திரையே நாம்தான் என்ற தெளிவு வரும்போது மூன்று நிலை அனுபவங்களின் வெளிப்பாடுகளான துக்கம், சோகம், சந்தோஷம், இஷ்டங்கள், கஷ்டங்கள் ஆகியவையெல்லாம் நம்மை விட்டு விலகி நிற்கின்றன.

அவை வெறும் தோற்றங்களே, அவை நிரந்தரமற்றவை, நம்மோடு
தொடர்பில்லாதவை என்று புரிகிறது.

உடனே தோற்றங்களைச் சேர்ந்த அனைத்தும் (நல்லவை, கெட்டவை) மறைகின்றன. தோற்றங்களை விட்டு விலகி நாம் உண்மையான தெய்வீக நிலையை உணர்வதுதான் மனிதப் பிறவியின் நோக்கம்.

இதுதான் உண்மையான விடுதலை. பற்றட்ட நிலை. ஆழ்ந்த அமைதி, பேரானந்தம்,
சாந்தம். ‘வாழும்போதே மோக்ஷம், முக்தி’ என்று வருணிக்கின்றன வேதங்கள்.

இந்த விளக்கம், தெளிவு அனைத்தும் சாதாரணமாக அனைவருக்கும் கிடைப்பதில்லை.
எப்படி அந்த சிறுவனுக்கு அவனுடைய தாத்தா தெளிய வைத்தாரோ அதேபோல
தாத்தா எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

நமக்குள் ஆத்மலிங்கமாக மறைந்திருக்கும் இந்த திரை உண்மையை ஒளிர்வித்து காட்டுவதே ஜோதிர்லிங்கம். 13-ஆவது ஜோர்லிங்கமான ஸ்ரீ ஸூர்யநந்தீஸ்வரர் திருக்கோவிலும் இந்த ஆத்ம தத்துவத்தைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனாலும் இந்த தேவ ரகசியத்தை பல பேரால் உணரமுடிவதில்லை.

காயத்ரி மந்திரத்தின் ரகசியம்

கூகுளுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

வெ நாராயணமூர்த்தி 

மிகப் பழைமையானவை என்றாலும் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும். ஒழுக்கநெறி பண்புகள் இன்றைய நவீன வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது.

செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில், இன்றைய இளைய தலைமுறையை பாதுகாப்பது எதுவாக இருக்கும் என்பது பலரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று.

இதைத்தான் என்னிடம் ஒரு இளம் நண்பர், வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார்.

இது நான் மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார் அவர். 

இளையத் தலைமுறை கேள்விக்கு என்ன பதில்

முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள்.

அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளி நகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு.

துரதிஷ்டம்

உலகத்துக்கே ஆன்மீக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில், வேகத்தையும், சுயநலத்தையும் பொருளாதார உயர்வை மட்டுமே மையமாகக் கொண்ட போக்கு காணப்படுகிறது.

தனிமனித-சமுதாய தர்ம ஒழுக்கநெறிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் இந்த நவீன வாழ்வியல் மாய தத்துவத்தை, நம்  இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டம்.

இந்த நிலைக்கு நாம் அனைவரும் ஒருவகையில் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையான ஆன்மீகக் கல்வியையும், வாழ்வியல் பண்புகளையும் அவைகளுக்குள்ள நெறிமுறை மேம்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர தவறிவிட்டோம்.

பெற்றோர்கள் என்ற வகையில் நாமும் தெரிந்து கொள்ளும் வாய்பை இழந்து விட்டோம்.
இப்போதாவது இந்தத் தவறை உணர்ந்து இந்த நிலைமையை சரி செய்ய முயல்வது நாம் அனைவரின் சமுதாயக் கடமையாகும்.

தெரிந்துகொள்வோம்

முதலில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். வேதங்கள் சூத்திரங்களாலும், கவிநயம் கொண்ட பாடல்களாலும், செய்யுள் நடைகளாலும் ஆனவை.

காலங்களைக் கடந்தது. இந்த உலகைப் படைத்த பரம்பொருள் அருளியது. தனிமனித, சமுதாய வாழ்வியல் தத்துவக் களஞ்சியம் இவை. வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் அற்புதமானவை.

எப்போது அருளினார்? உயிரினங்கள் தோன்றியபோது! 

அது எப்போது? விவரிக்கமுடியாத ஒரு காலத்தில்! மனிதன் யோசிக்கத்தொடங்கும் முன்!! பல ‘யுகங்களுக்கு’ முன்னால் என்று சொல்லலாம்.

காலப்போக்கில் பல அழிந்தன

அக்காலத்தில் வந்த ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் வேதங்களை உணர்ந்து, உள்வாங்கி அவைகளுக்கு விளக்கம் அளிக்க எளிய நடையில் பாசுரங்களை (உபநிஷத்துக்கள்) எழுதினர்.

அவைகளில் ஒரு பகுதி  குருகுல (குரு-சிஷ்ய பாரம்பரிய) வழியில் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இன்றும் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது.

பெரும்பாலானவை பாதுகாக்கப்பட முடியவில்லை. காலப்போக்கில் அழிந்துபோனது. 

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

வேதங்களின் சாராம்சம் வேதாந்தம். இது என்ன? நாம் அனைவரும் தெய்வத்தால்
படைக்கப்பட்டவர்கள். தெய்வீகமானவர்கள்.

‘நம் வாழ்வின் பயனே இந்த தெய்வீகத்தை உணர்வதுதான்’. அதே போல மற்ற உயிர்களில் உள்ள அதே தெய்வீகத்தையும் உணர்வது.

நம்மை உணர்ந்தால், உலகையும் அதன் பின்னணி உண்மையையும் உணரலாம். நம்மைப் படைத்த பரமனை உணரலாம். பிறவிப் பயனை அடையலாம். இந்த உன்னத நிலையை உணர்வதற்கான வழிமுறைகளைத்தான் வேதாந்தம் சொல்கிறது. இதுதான் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

மூன்று நிலைகள் எவை?

நம் ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த உலகை தெரிந்து கொள்ளும் வழி ஆரம்ப நிலை (பிரதிக்க்ஷை அனுபவம்).

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நம் புத்தியைப் பயன்படுத்தி சில அனுபவங்களைப் பகுத்தறிவது அடுத்த நிலை (பரோக்க்ஷ அனுபவம்).

இந்த இரண்டு அனுபவ நிலைகளும் இல்லாமல், இந்த இரண்டு நிலைகளையும் தாண்டி சில அனுபவங்களை (ஐம்புலன்களையும், புத்தியையும் பயன்படுத்தாமல்) நேரடியாக உணர்வது மூன்றாம் நிலை (அபரோக்க்ஷ அனுபவம்).

இந்த மூன்று நிலைகளும் நம்மையும், நம்மை சுற்றி நடக்கும் இந்த உலகைப் பற்றியும் அதையும் கடந்து நம் எல்லோரையும் இயக்கும் மஹா சக்தியை உணரக்கூடிய வழிகள் என்று வேதாந்தம் கூறுகிறது.

தேடலுக்கான சில வழிகள் எவை?

அத்வைதம், விசிஷ்ட அத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று சித்தாந்த வழிமுறைகளில்
உணரலாம் என்பது பிற்காலத்தில் வேதங்களுக்கு விளக்கம் அளித்த குருமார்கள் சொன்னார்கள்.

ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் ஆகியோரது கருத்து. இதைத்தான் உண்மையான ஆன்மிகம் என்று வகைப்படுத்தினாலும் இது நம்மையும் நம்மைப் படைத்தவனையும் தேடும்  உண்மையான ‘தேடல்’.

தவம், பக்தி, மந்த்ரங்கள், ஜபம், யோகம், யாகம், ஹோமம், பூஜைகள், குரு சேவை
போன்றவை இந்தத் தேடலுக்கான சில வழிகள்.  ஆனால் இது எளிதல்ல. இங்கேதான் பிரச்னை தொடங்குகிறது.

உலகை அடையாளம் காட்டுவது எது?

நாம் பார்க்கும், உணரும் இந்த உடல் வெறும் தசையாலும், எலும்பாலும், ரத்தாலும் மட்டுமே ஆனது அல்ல.

இதற்குள்ளே இன்னும் நான்கு கூடுகள் (கோஷங்கள்) உள்ளன. இந்த உடல்
‘அன்னமய கோஷம்’. உணவால் ஆனது.

அடுத்த அடுக்குகளாக உடலை இயக்கக்கூடிய ப்ராணமய கோஷம், எண்ணங்களையும் உணர்வுகளைக் கொண்ட ‘மனோமய கோஷம்’, தேவை-தேவை இல்லாதவைகளை முடிவு செய்யும் (புத்தி) ‘விஞ்ஞானமய  கோஷம்’. இவைகளுக்கும் உள்ளே ஆதியாக, அமைதியும் ஆனந்தமும் தாண்டவமாடும் ‘ஆனந்தமய கோஷம்’.

இந்த ஐந்து கூடுகளையும் விட்டு விலகி, இவைகளின் நடவடிக்கைகளை ஒளிர்வித்து, இந்த ஐந்து கோஷங்களின் வழியாக உலக அனுபவங்களை அடையாளம் காட்டுவது சதா ஸ்வயப்பிரகாசமாக  ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆத்மன்.

நொடியில் உணர எது தேவை?

இதுவே களங்கமில்லாத, அழிவில்லாத, நம் உண்மையான சொரூபம்-பரப்ரம்மம். இது வேதங்கள் சொல்வது. இந்த உன்னத நிலையை உணர, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்து உணர்பவர்களும் உள்ளனர்.

ஒரு ப்ரம்ம குருவின் உதவியுடன் ஒரே நொடியுள் உணர்ந்தவர்களும் உள்ளனர். பரப்ரம்ம சொரூபத்தை உணர வேதாந்தம் பல நெறிமுறைகளை, ஒழுக்கப் பண்புகளை, வாழ்வியல் தத்துவங்களை பட்டியல் போட்டு காட்டுகிறது. இதுதான் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

அவைகளில் முற்றும் உணர்ந்த ஒரு குருவின் துணையோடு இந்த ஆன்மீகத் தேடலை மேற்கொள்வதே எளிமையான வழி.

சாத்தியமானதா?

யோசித்துப் பாருங்கள். நாமே வேத சாராம்ஸங்களை கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு உணர்ந்து தெளிவடைவது என்பது இந்தப் பிறப்பில் சாத்தியமா என்று கூட நமக்குத் தெரியாது. 
இப்படி கஷ்டப்பட்டு எதற்கு உணரவேண்டும்? நமக்குள் மறைந்து இருக்கும் இறைநிலையை
உணருவதால் என்ன பயன்? இத்தகைய வேத நெறிமுறைகள் எளிமையானவை அல்ல. நம் மேல்
நம்மைப் படைத்தவனுக்கு அக்கறை இருந்தால், இந்த உணர்வை அவரே தரட்டுமே? நாம் ஏன்
தேடிப்போகவேண்டும்?

மேலும் தற்போது இவைகளை கற்றுத்தரவோ யாரும் இல்லை, கற்றுக்கொள்ளும் பக்குவமும்  நேரமும்  நமக்கு இல்லை.

அதையும் தாண்டி, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் இவை எப்படி பயனளிக்கும் என்பதுதான் இப்போதுள்ள இளையதலைமுறையின் கேள்வி.

எது நிலைத்தடுமாற வைக்கிறது?

 ஏன் அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்? எதார்த்தம் என்று நினைத்து குதர்க்கவாதிகளாகி
தங்களை கெடுத்துக்கொண்டு வருகின்றனர்.

காரணம் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இன்றைய ‘கல்வி’ அவர்களை நிலை தடுமாற வைத்துள்ளது.

இயல்பான தார்மீக சிந்தனைகள் திசை திருப்பப்பட்டு, தாங்கள் யார் என்று
தெரிந்துகொள்ளவோ தங்களுக்குள் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதோ அவர்களுக்கு
அவசியம் இல்லை என்று அவர்களை நினைக்கத் தூண்டுகிறது.

இந்த நவீனக் கல்வியும் தவறான தொழில்நுட்பத் தகவல் சாதனங்களும் அவர்களுக்கு வேகத்தையும், சுயநலத்தையும், பொருளீட்டுவதை மட்டுமே சொல்லித் தருகிறது.

இதற்காக மட்டுமே அவர்களைத் தயார் செய்கிறது. அவர்களில் புதைந்துள்ள தெய்வீகச் சிந்தனைகளை, அஹிம்சை தத்துவங்களை சிதைக்கிறது.

அல்ப சந்தோஷம்

இதற்கு ஒத்தாசையாக இங்கே நிலவும் அரசியல் அமைப்புகள் இந்த நிலைமையை மேலும்
சீரழிக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடை, உடை, பாவனைகளையும், கலாசார கண்ணியங்களையும் மறந்து விட்டனர்.

தங்களின் இயல்பான தார்மீகச் சிந்தனைகளையும் துறந்து தங்களை ஹிம்ஸித்துக் கொள்வதோடு மற்றவர்களை ஹிம்ஸிப்பதிலும் தவறில்லை என்று போக்கில் வளர்கின்றனர்.

இவர்கள் தங்களை முட்டாள்களாகவும், முரடர்களாகவும் வளர்த்துக் கொள்கின்றனர். இதில் வறட்டு கௌரவத்தையும், அந்தஸ்தையும், சுயமரியாதையையும் கலந்துக் கொண்டு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.

அதர்ம பண்புகள் போதிப்பு

தெளிவான ஆன்மிக சிந்தனைக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் நிலை தவறி, முன்னோர்கள் விட்டுச்சென்ற தார்மீக வாழ்க்கை நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத கோழைகளாக வலம் வருகின்றனர்.

இந்த நவீன கல்வி முறை, காலம் காலமாக கட்டிக் காத்துவந்த சமுதாய, கலாசார  தார்மீக
நெறிமுறைகளில் இருந்து விலக்கி, ஒரு செயற்கையான, அதர்ம பண்புகளை போதிக்கிறது.

மாறி வரும் குடும்ப சூழல், சமுதாய மாற்றங்கள், இலக்கை அடைய எதையும் செய்யலாம் என்ற மேலைநாட்டு கலாசார தத்துவங்கள் அவர்களைத் தவறான வழியில் செல்லத் தூண்டுகிறது.

தார்மீக சிந்தனைகள் இழப்பு

குழம்பி நிற்கும் அவர்களைத் தங்கள் கலாசாரத்தையே, தங்கள் இயல்பான நற்குணங்களையே, பண்புகளையே மறக்கச் செய்தவிட்டன.

தங்களையும், இந்த சமூகத்தையுமே  எதிர்க்கும் அசட்டு தைரியத்தையும், வரட்டு ஆணவத்தையும் தந்து அவர்களை சுயநலப் பேதைகளாக்கியுள்ளது.

அவர்கள் தன்னம்பிக்கையையும், தார்மீக சிந்தைகளையும் இழந்து, உண்மையை
ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

கோவில்களிலும் தெய்வ நம்பிக்கையையும் தவிர்த்து தங்களுக்குள்ளேயே அல்லல் படுகின்றனர். இந்த நிலை அவர்களை தங்களையும் தங்களைச் சுற்றி உள்ள அனைத்தையுமே சந்தேகிக்க வைக்கிறது.

ஆன்மிகம் தேவையில்லாததா?

சுயநலமே பிரதானமாகி மற்றவர் நலன் அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றாக ஆக்கிவிட்டது.

காலங்காலமாக கட்டிக் காத்த குடும்ப உறவுமுறை கலாசாரம் அவர்களுக்கு மரியாதை இல்லாத சுமையாகிவிட்டது.

ஆன்மீகத்தை விட்டும் தங்களை விட்டுமே  வெகு தூரம் விலகிப் போய்விட்ட
இவர்கள் ‘ஆன்மிகம் என்பது தமக்குச் சம்பந்தமில்லாதது, தேவையில்லாதது, இந்தக்
காலத்துக்குப் பொருந்தாதது’ என்ற முடிவுக்கு வருவதற்கு இதுதான் காரணம்.

வாழ்வியல் பண்புகள்

அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.

ஆணித்தரமான ஆன்மிகம் கலந்த நன்னெறி போதனைகளைகளை எளிமையாக்கிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். உண்மையான வாழ்வியல் பண்புகளோடும் ஒழுக்க நெறிமுறைகளால் மட்டுமே  அவர்களால் தங்களையும், இயல்பு நிலையான தெய்வீகத்தையும் உணர முடியும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

தெய்வீகத்தை உணரலாம்

அப்போதுதான் அவர்கள் அனைத்து உயிர்களிடமும் தெய்வீகத்தை உணர முடியும்.

தன்னுள் இருப்பவனே அனைத்து உயிர்களிலும் இருக்கிறான் என்று உணர்வு வரும்போது அனைவரும் ‘தானே’ என்றல்லவா  நினைக்க முடியும்?

இங்கே எப்படி ஏற்றத் தாழ்வு வரும்? சுயநலம் எங்கிருந்து வரும்? மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கவோ அதில் ஈடுபடவோ எப்படி இயலும்?

இதுவல்லவோ உண்மையான சமத்துவம்? மனிதநேயம்? இதுவல்லவோ  உண்மையான உயர்நிலை வாழ்வியல்?

மனிதகுல வழிகாட்டிகள்

வேதங்களில் சொல்லியுள்ள தார்மீக வழி முறைகளையும், உண்மையான மனித
கலாசாரத்தையும், ஒன்பது வகையான ஒழுக்கப் பண்புகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

அமைதியையும் ஆனந்தத்தையும், எண்ண ஸ்வதந்த்ரத்தையும் பெற வாய்ப்பு பெறலாம் என்ற கருத்தை அவர்கள் உணரச் செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி.

 ‘வேதங்கள் காலத்தைக் கடந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் மனிதகுல வழிகாட்டிகள்.
நவீன காலத்துக்கும் ஏற்ற உண்மையான வாழ்க்கைத் தத்துவங்களை வேதங்களால் மட்டுமே தர முடியும்’ என்ற கருத்து அவர்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும்.

நல்வழி தத்துவம்

‘நாம் ஒழுக்கப் பாதையில் செல்லும்போது மட்டுமே நமக்கு பாதுகாப்பும், நிம்மதியும், குறையற்ற மன நிறைவும், ஆரோக்யமும் ஐஸ்வரியமும், அமைதியும் உண்மையான ஆனந்தமும், ஸ்வதந்த்ரமும் கிடைக்கிறது.

இந்த நிலை மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். ‘என் ஒழுக்கப்
பாதை மற்றவர்களையும் நல்வழிப் படுத்தும்’ என்ற தத்துவம் அவர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும்.

‘இந்த உலகத்துக்கு தேவையானது தன்னையும் தெய்வத்தையும் புரிந்துகொள்ளும் ஆன்மிக வழி.
அது ஒன்றுதான் உண்மையான செல்வத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும்,
பாதுகாப்பையும், வளர்ச்சியையும் தனி மனிதனுக்கு மட்டுமல்லாது உலக சமுதாயத்துக்குமே அளிக்கவல்லது.

இது ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம்’  என்ற மகத்தான உண்மையை உணரவைக்க வேண்டும்.

அவித்ய காம கர்ம’ என்பது தவறான கல்வி, விவேகமில்லாத இச்சைகளிலும் கர்ம வினைகளிலும் அவர்களை மேலும் சிக்க வைக்கும் என்ற உண்மையை
அவர்கள் உணரச்செய்ய வேண்டும். 
தாங்களாகவே அழிவைத் தேடி தங்கள் வாழ்க்கையை வேகமாக கரைத்துக்கொண்டு வரும் இந்த இளைய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் உண்மையான ஆன்மீகச் சொரூபத்தை உணரச் செய்வது நம் பொறுப்பு.

ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்

இன்றிலிருந்து நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தைகளிடம் இக்கருத்துகளை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். கோவில்கள், புண்ணியஸ்தலங்கள், குரு ஆசிரமங்கள் போன்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஒவ்வொரு வாய்ப்பையும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குருவருளின் முக்கியத்துவத்தையும் வேத சாஸ்திர நற்பண்புகளை பற்றியும் தொடர்ந்து அவர்களைக் கேட்கச் செய்ய வேண்டும்.

வேத சாஸ்திரங்கள் அருளியுள்ள ஆன்மிகம் மட்டுமே அவர்களைச் செம்மை படுத்தக்கூடிய ஒரு அருமருந்து.

இதனால் மட்டுமே தனிமனித ஒழுக்கமும், சமுதாய அமைதியும் வளர்ச்சியும் கிடைக்கும். குற்றங்கள் இல்லாமல் போகும்.  உண்மையான பேரானந்தத்தை இன்றைக்கும் என்றைக்கும் அனைவரும் உணர முடியும்.

ஆத்ம போதனை

இதற்கு முதலில் நம்மை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் புதைந்துள்ள பரப்ரம்ம சொரூபத்தை உணரவேண்டும்.

அதன் பலனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் குறிப்பாக இளையவர்கள் தெரிந்து கொள்ள ஒரு பெரிய இயக்கத்தைத் துவங்க வேண்டும்.

அதன் வழியாக ஆன்மிக கலாசாரத்தின் மஹிமையை, அதில் பெறப்படும் பரவாசத்தை, பாதுகாப்பை, நிம்மதியை, ஆழ்ந்த அமைதி நிலையை, ஆத்ம போதனையை, ஸம்ஸார சக்கரத்திலிருந்து பெறப்போகும் விடுதலையை உணரச் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களை இந்த நவீன மாய சித்தாந்தங்களிலிருந்து காப்பது கடினம். இந்த
இளைஞர்களின்  உதவியோடுதான் அடுத்தப் பல தலைமுறைகள் பண்பட வாய்ப்புள்ளது! இந்த தேசம் முன்னேற வாய்ப்புள்ளது!

தான் கேட்ட விஷயங்களை அசை போடும் வகையில் இளம் நண்பர் ஆழந்த யோசனையில் மூழ்கிவிட்டார்.

வாழ்க்கை பாடத்தில் நாம் எதைக் கற்றோம்!

வாழ்க்கை பாடம்: நாம் எதைத் தேடுகிறோம்

வெ நாராயணமூர்த்தி 

நாம் வாழ்நாள் முழுதும் எதைத் தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நாம் இப்போது அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் (life lesson) இது.

வசதியான வாழ்க்கை

வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம், நல்ல ஆரோக்கியம், நல்ல உறவுகள்.

சில நேரங்களில் வளமான சமுதாயம், உலக அமைதி இத்யாதி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றில் சில பொதுநலத் தேவை, சில தனிமனிதத்
தேவைகள்.
ஆனால் நம் தேவைகளை உற்று நோக்கும்போது அடிப்படையில் நாம் தேடி அலைவதெல்லாம் நிலையான சுகம், திருப்தி, மன நிறைவு. இவைகளையே ‘சந்தோஷம்’ என்று பெயரிடுகிறோம்.
பட்டியலில் கண்ட கனவுகளை அடைந்தால் நமக்கு நிரந்தர சந்தோஷம் கிடைக்கும் என்ற நப்பாசை.

பிறப்பின் இயல்பு

சந்தோஷத்தை அடைவதற்காக பல விதமான தடங்கல்களை, கஷ்டங்களை,
சோகங்களைச் சந்தித்தாலும் சந்தோஷத்தை தேடுவதை மட்டும் நிறுத்துவதில்லை.
ஏன் சந்தோஷத்தை தேடி அலைகிறோம்? ஏனென்றால் துக்கங்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மாற்று மருந்தாக, நிவர்த்தியாக சந்தோஷத்தைத் தேடுகிறோம். இதுதான் நம் பிறப்பின் அடிப்படை இயல்பு. 

ஆனால் இந்த சந்தோஷத் தேடலில் எவ்வளவு பேர் வெற்றி அடைய முடிகிறது? உலகிலேயே அதிகமாக உழைத்து பணம் சம்பாதித்த செல்வந்தர்களாலோ, அதீத கல்வி, அதி உயர்ந்த பதவியால் புகழ் பெற்றவர்களோ, அதிக மனைவிகள், குழந்தைகளைக் கொண்டவர்கள் கூட அவர்கள் சந்தோஷமாக இருப்பதாகவோ அல்லது தங்கள் சந்தோஷத் தேடல் முடிந்து விட்டதாகவோ உறுதியாக சொல்லமுடியவில்லையே. ஏன்?

இதற்கு நாம் சரியான வாழ்க்கை பாடம் எது என்பதை அறியாமல் போனதுதான் காரணம். விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்தாலும்,  காலம்காலமாக மனிதன் தான் அனுபவிக்கும் துக்கங்களை களைய முடியவில்லை,

இதுதான் ஆனந்தம்

நிலையான சந்தோஷத்தையும் அடைய முடியவில்லை. ஆனாலும் இந்தத் தேடலை விடவும் முடிவதில்லை! ஏன் தெரியுமா?
நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது. நாம் நிரந்தரமற்ற அற்ப சந்தோஷம் அல்ல.
நிரந்தரமான பேரானந்தம் என்கிறது வேதாந்தம். வேட்கைகளிலிருந்து விடுதலை பெறுவது. நிலையான உண்மையை, ஆத்மனை உணர்வது. அதிலேயே திளைத்து இருப்பது. இதுதான் ஆனந்தம்.

நாம் சந்தோஷம் என்று எதை உண்மையில் நாடுகிறோம்?


‘விஷய இந்த்ரீய சங் யோகா’ என்று விளக்கம் அளிக்கிறது யோக சாஸ்த்ரம். நம் புலன்களும் நாம் இச்சைபடும் பொருள்களும் இணையும் போது உணரும் சுகத்தை சந்தோஷம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

இத்தகைய சுகத்தை ‘காம, காஞ்சன’ என்ற இரண்டு பாதைகளில் தேடுகிறோம் என்று நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

‘காம’ என்பது இச்சை, பிரேமை, சுகம், கேளிக்கை, மோகம், ஆசை. ‘காஞ்சன’ என்பது செல்வம், குடும்பம், பதவி, அந்தஸ்து, புகழ், மரியாதை இத்யாதிகள்.
காம காஞ்சன பாதையில் மிக எளிதில் நமக்கு சந்தோஷம் கிடைப்பதாக எண்ணி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இந்த வேட்கை போதையாக மாறுகிறது.

தாகமும், தேடலும்

இந்த இரண்டு பாதைகளும் நிச்சயமாக நம்மைத் தவறான இடத்துக்கு அழைத்து செல்வது மட்டுமல்லாது மேலும் பல இச்சைகளைத் தூண்டுகின்றன.

தாகம் அதிகமாகிறது. தேடல் தீவிரமாகிறது. சிக்கல்களும் அதிகமாகிறது. நம் வாழ்க்கை அனுபவங்களே இதற்கு ஆதாரம்.  
இந்த வழிகளில் நம் எதிர்பார்ப்பு நிறைவேறுவதாகத் தெரிவதில்லை என்பதை வெகுவிரைவில் உணர்கிறோம். நாம் சேர்த்த அத்தனை செல்வங்களும், அனுபவித்த சுகங்களும் நிலையற்றவை. இதுவும் வாழ்க்கை பாடம் சொல்லித் தருவதுதான்.

சந்தோஷ தாகத்தை தீர்க்கமுடியாதவை, நமக்கு பயன்படாதவை என்பதை காலம் கடந்தாவது நம்மில் ஒரு சிலர் புரிந்துகொள்கிறோம்.

மிஞ்சி நிற்பது என்னவோ ஏமாற்றம், சோகம், துக்கம், ரோகம், அமைதியின்மை, ஆதங்கம், பயம், பாதுகாப்பின்மை. இவைகளிலிருந்து விடுதலை பெற மீண்டும் விடை தேடி அலைகிறோம். 

சுழலும் சக்கரம்

அதில் மேலும் தவறுகளை செய்கிறோம், இன்னும் பெரிய பிரச்சனைகளில் சிக்குகிறோம். இந்தச் சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. சரி, சந்தோஷமோ, ஆனந்தமோ எவ்வளவு இருந்தால் திருப்தி? இதுவும் பலருக்கு வாழ்க்கை பாடம்தான்.

தங்கள் அறியாமையால் மனிதர்கள் தேடி அலையும் உலக சந்தோஷத்துக்கும், தேடி உணரவேண்டிய உண்மையான ஆனந்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தைதீரீய உபநிஷத்து அழகாக படம் பிடித்து காட்டுகிறது.
இளம் வயது, அழகான தோற்றம், பலம் பொருந்திய உடல்வாகு, மிக உயர்ந்த கல்வி, சர்வகலா ஞானம், ஆசையான குடும்பம், அளவுக்கு மீறிய செல்வம், மிகப் பெரிய பதவி, அதிகாரம், சமுதாய அந்தஸ்து, புகழ் ஆகியவை கொண்டு ஒரு இளைஞன் அனுபவிக்கும் சந்தோஷத்தை எண்ணிப் பாருங்கள்.

சந்தோஷத்தின் அளவீடு

இதை நமக்குத் தெரியாத, இதுவரை உணராத ஆனந்தத்தின் ஒரு அளவீடு என்று வைத்துக் கொள்வோம். 
இதைப் போல நூறு மடங்கு சந்தோஷத்தை மனுஷ கந்தர்வ லோகத்தில் (சில மானுடர்கள் தங்களின் நல்ல கர்ம உபாசனைகளின் பலன்களை அனுபவிக்க கந்தர்வளாகி இந்த லோகத்துக்கு செல்கின்றனர்) வாழ்பவர்களால் அனுபவிக்க முடியும்.

அதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவ கந்தர்வ லோகத்தில் வாழ்பவர்கள் அனுபவிக்கமுடியும்.

இதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை பித்ரு லோகத்தில் (நம் முன்னோர்கள் வாழும் லோகம்) வாழ்பவர்கள் அனுபவிக்க முடியும்.

நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை இதைவிட கர்ம தேவ லோகத்தில் (வேததர்ம கர்மங்களில் சிறந்தவர்கள் இங்கே செல்கின்றனர்) வாழ்பவர்கள் அனுபவிக்க முடியும்.

அதையும்விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் மந்த்ரிகளால்
(வசுக்கள், ருத்ரர்கள், அதித்யர்கள்) அனுபவிக்க முடியும்.

இதையும்விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் தலைவன் இந்திரனால் அனுபவிக்கமுடியும்.

இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு சந்தோஷத்தை தேவகுருவான ப்ருஹஸ்பதியால் அனுபவிக்கமுடியும்.

இவை எல்லாவற்றையும் விட நூறுமடங்கு சந்தோஷத்தை ஸ்ருஷ்டிகளின் தலைவனான ப்ரஜாபதியால் அனுபவிக்க முடியும்.

அப்பப்பா… இத்தனையும் தாண்டிய நூறு மடங்கு சந்தோஷத்தை சிருஷ்டி செய்யும் பிரம்மதேவனால் அனுபவிக்க முடியும். இதுவும் ஒரு வாழ்க்கை பாடம் தான்.

பிரம்மானந்தம்

ஆக, அனைத்து வகையான, மிக உயர்ந்த ஆனந்தங்களின் அளவிடக்கூடிய அளவீடு இது. ஆனால், இவையெல்லாவற்றையும் காட்டிலும், பல மடங்கு அளவிடமுடியாத பிரம்மானந்தமே.

பேரானந்தமேதான் நம் உண்மை சொரூபமான ஆத்மன் என்று நமக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது வேதங்கள். இதுதான் நமக்கு உண்மையான வாழ்க்கை பாடம்.

எது நிஜம்

இந்தப் பேரானந்த கடலே நாமாக இருக்கும்போது, இதை உணராமல் ஒரு
சிறு துளி அளவுக்கு நம் உடல், மனம், எண்ணம் அணுகும் உலக சந்தோஷத்தைப் பெரிதாக
நினைத்து அதில் நாட்டம் கொண்டு, அவைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கையை வீணடித்து வருகிறோம் என்றும் நம்மை பார்த்து வேதனைப்படுகின்றன வேதங்கள்.

இரவில் ஓடும் நீரில் காணும் சந்திர பிம்பத்தை நிஜவிளக்கு என்று எண்ணி அதைத் துரத்தி விளையாடும் மீன்கள்போல, நாமும் சந்தோஷங்களை நிஜம் என்று கற்பனை செய்துக் கொண்டு துரத்திக்கொண்டே இருக்கிறோம். அலுப்பில்லாமல்! இது பலரும் சந்திக்கும் வாழ்க்கை பாடம்.

நம்ப வைக்கும் உலகம்

வேதாந்தம் நம் தவறை சுட்டிக் காட்டுவதோடு நிற்கவில்லை. இதற்கான தீர்வையும்,
வழிமுறைகளையும் சொல்கிறது.

அடிப்படையில் நாம் மிகப் பெரிய தவறை தொடர்ந்து செய்து வருகிறோம். இது நம் உண்மை இயல்பைப் பற்றி நாம் தவறாக எண்ணிக்கொண்டிருப்பது.
இந்தப் பொருள் என்னுடையது, அது என்னுடையது, இந்த உடல் என்னுடையது என்று  நம்
இளம் வயதிலிருந்தே நம் மனதில் இந்த நிலைப்பாடு ஆரம்பிக்கிறது.

இந்த உடல், உள்ளம், எண்ணம், புத்தி சேர்ந்த சிறிய மனித உருவமே ‘நாம்’ என்று நினைத்துக் கொண்டு இந்த உலகை அணுகுகிறோம்.

இதற்கு முக்கிய காரணம் நம் புலன்கள் அனைத்தும் வெளி உலகை நோக்கிப்
பாயும் தன்மை கொண்டவை. அதனால் நம் உலகம் வெளியே என்று நம்மை நம்ப வைக்கின்றன. இதுவும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடம் தான்.

இன்னொரு உலகம் உண்டு

நமக்குள்ளே இன்னொரு உலகம், நம் உண்மையான உலகம் இருக்கிறது என்பதை நாம்
ஒருபோதும் யோசிப்பதில்லை. பழகியப் போக்கை விட்டு, நம் உண்மையான இயல்பு என்ன என்பதை ஆராய முயல்வதில்லை.

நாம் உண்மையில் யார்? நமக்கும் நாம் பார்க்கும் இந்த உலகிற்கும் என்ன தொடர்பு? இந்த அடிப்படையான, உண்மையான இயல்பை உணர்வதற்கான உள்நோக்கிப் பயணித்து நம்மைப் பற்றிய உண்மையை உணருவதே ‘ஆத்மஞானம்’. இந்த வாழ்கை பாடம் பலருக்கு புரிவதில்லை.

இந்த உயர்நிலை ஞானத்தைப் பெற நமக்கு துணை புரிகிறது வேதாந்தம்.  இது மிகப் பெரிய ரகசியம், நம் உண்மை இயல்பு நமக்குள் புதைந்து கிடக்கும் தேவரகசியம்.
உண்மையில் இந்த ரகசியத்தின் விடையைத் தேடித்தான், இதைத்தான் தேடுகிறோம் என்றுகூட தெரியாமல், சந்தோஷம் என்றோ அல்லது துக்கத்துக்கான நிவாரணமாகவோ தேடிக் கொண்டிருக்கிறோம்.
தெரிந்துகொண்டு விடை தேடுவது வேதாந்தம். தெரியாமல் தேடிக்கொண்டிருப்பது ஸம்சாரம்.
கரடுமுரடான நம் வாழ்க்கைப் பயணம். ஒரு சிலரால் மட்டுமே இந்த ரகசியத்துக்கான விடையை அறிய முடிகிறது. இதுதான் வாழ்க்கை பாடம் என்பதின் முதல்படி.

ஆனந்த ஸ்வரூபம்

அவர்கள் ஞானிகளாகி பெரும்பாலும் மனித சமுதாயத்தை விட்டு விலகிச்
சென்று விடுகின்றனர்.  நம் அடிப்படை இயல்பே ஆனந்த ஸ்வரூபம்தான் என்று வேதாந்தம் ஆணித்தரமாகக் கூறுகிறது.
அளவிடமுடியாத, எல்லையேயில்லாத, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வான, நிலையான, அனைத்தையும் கடந்த பேரானந்த ஸ்வரூபம்தான் உண்மையான ‘நாம்’. 

ஆத்மன். சத் சித் ஆனந்தம். தெய்வீகம். இது ஒன்றே இந்த உலகில் உண்மையானது, நிலையானது.

நம் உடல் புலன்கள் வழியாக நாம் அனுபவிக்கும் இந்த உலகம் (நம் உடலும் சேர்த்து) அவ்வப்போது தோன்றி மறையும் வெறும் தோற்றமே. கண்களால் பார்க்கும் இந்த உலகம் கண்களை மூடிக்கொண்டால் காணாமல் போகிறது. 

திரையில் பார்க்கும் உருவங்கள்

ஒரு சினிமா பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். திரையில் நாம் பார்க்கும் உருவங்கள் அனைத்தும் நிஜமாகவேத் தோன்றுகிறது. அவைகளை வெறும் ஒளிபிம்பங்கள் என்று எண்ணுவதில்லை.

பிம்பங்களே உண்மையான மனிதர்கள் என்று அவர்களை நாமாகவே பார்க்கிறோம். அவர்கள் சிரித்தால் சிரிக்கிறோம், அழுதால் அழுகிறோம், அடித்தால்
கைதட்டுகிறோம். காட்சி முடிந்ததும் எல்லாம் மறைந்துபோகிறது.

திரை ஒன்றே நிஜமாக நிற்கிறது. காட்சி தெரியும்போது திரை தெரிவதில்லை, திரையை உணரும்போது காட்சி வெறும் பிம்பங்களே என்ற உண்மை புரிகிறது.

பிம்பங்கள் திரையைச் சார்ந்தே உள்ளன. ஆனால் பிம்பங்களால் திரைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது போல நாம் காணும் இந்த உலகம் நம் மனத்திரையில் தெரியும் அனுபவ பிம்பங்கள்.

எது ஆன்மிகம்

ஆனால் நம் புலன்கள் இந்த அனுபவத் தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினைத்து, அவைகளிலேயே நாட்டம் கொள்கிறது. 
தூக்கத்தில் நம் மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் எப்படி விழிப்பு ஏற்பட்டதும் காணாமல் போகிறதோ அதுபோல விழித்திருக்கும் நிலையிலும் நாம் காணும் தோற்றங்கள், தூங்கும்போது காணாமல் போகிறது. நம் அனுபவங்களில் மறைந்துள்ள இந்த சூட்சும உண்மையை உணரும் தன்மையை வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம்.

ஒரு அன்னப்பட்சி எப்படி பாலையும் நீரையும் பிரித்து பாலைமட்டும் பருகிறதோ அதுபோல நாம் நம் புலன்கள் வழியாகப் பெரும் அனைத்து அனுபவங்களையும் பகுத்து, திரை வேறு, பிம்பங்கள் வேறு என்ற உண்மையை உணருவதே வேதாந்தம் சொல்லும் வழி. இதுதான் நம்மை வழிப்படுத்தும் வாழ்க்கை பாடம்.

அறியாமை

இது உலகைத் துறப்பதல்ல. வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதல்ல. உலகம் நம் திரையில் நாம் காணும் காட்சி. நமக்கும் காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காட்சி பிம்பங்களோடு ஒன்றிப்போகாமல், வெறுமனே கேளிக்கை தரும் காட்சியாகவே 
ரசிக்கப்படும்போது அவை நம்மை பாதிப்பதில்லை.
இதனால் என்ன பலன்? தற்போது நம்முடைய அறியாமையால், கற்பனையால், தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினத்துக்கொண்டு, புலன்கள் வழியாக இந்த உடல் அனுபவிக்கும் அனைத்து சுக துக்கங்களையும் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம்.
கடோபநிஷத்து இந்த உடலை ஒரு ரதமாகவும், உண்மையான நாம் (ஆத்மன்) அதில் பயணிக்கும் ஒரு பயணி என்றும் வருணிக்கிறது. இது நாம் அறிந்துகொள்ள வாழ்க்கை பாடம்.

ஆத்மனை உணராதபோது பயணியும் ரதமும் ஒன்றே என்று எண்ணி, ரதம் சந்திக்கும் சுக, துக்க அனுபவங்கள் அனைத்தும் பயணியுடையது என்று ஏற்றுக்கொண்டு கலங்குகிறோம்.

குழப்பம் ஏன்

ரதம் வேறு, பயணிக்கும் உண்மையான நாம் வேறு என்று உணரும்போது, ஒரு பெரிய பாரம் நம்மை விட்டு விலகுகிறது. 
சுகங்களும் துக்கங்களும் இந்த உலகப் பாதையில் ரதம் சந்திக்கும் பிரச்சனைகள். அவைகளைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது என்று சொல்ல வரவில்லை.

நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பழுது அடைந்துவிட்டால் அதை சரி செய்கிறோம். எதற்காக? அவை நமக்கு உதவி செய்யும் கருவிகள். பாராமரிப்பு, சீர் செய்யாவிட்டால் நமக்கு தேவையான சமயத்தில் உபயோகப்படாமல் போகலாம்.

அதற்காக இந்த கருவிகளே நாம்தான் என்று எப்போதாவது நாம் ஏற்றுக்கொள்கிறோமா?

ஆனால் நாம் பயன்படுத்தும் உடல், உள்ளம், எண்ணக் கலவையான இந்தக் கருவியை
மாத்திரம்தான் குழப்பத்துடன் அணுகுகிறோம். சில நேரங்களில் என்னுடைய உடல் என்கிறோம், இதற்கு காரணம் உண்மையான வாழ்க்கை பாடம் நமக்கு புரிவதில்லை.

சில நேரங்களில் இந்த உடலே நான்தான் என்கிறோம். இந்த அடிப்படைக் குழப்பம் தீரும்போது, கருவி எது, எஜமானன் யார் வித்தியாசம் தெரியும்.

கருவியின் பிரச்னைகளை எஜமானன் ஏன் ஏற்றுக் கொண்டு அவதியுற வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். 
இந்தத் தெளிவே அனைத்து துக்கங்களிலிருந்தும், சந்தோஷங்களிலிருந்தும்  நம்மை விலகி நிற்கச் செய்யும். இந்த அறியாமையிலிருந்து விடுதலை அடையும்போது, பரப்ரம்ம ஸ்வரூபமான, சதா ப்ரம்மானந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வப் பிறவியே நாம் என்பதை உணரமுடியும்.

எது ஆனந்தம்

பிறப்பு, இறப்பை அனுபவிப்பது உடல். ஆனால் ஆத்மனுக்கு அழிவே இல்லை. இந்த நிலையை வேதாந்தம் ‘மோட்சம்’, ‘ஜீவன் முக்தி’ என்கிறது. வாழும்போதே புலன் அனுபவ தொல்லைகளிலிருந்து விடுதலை. ஜென்ம ஸாபல்யம்.
அடிப்படையில் மனித உருவில், அருவமாக சஞ்சரிக்கும் தெய்வீகப் பிறவிகள் நாம். ஆனால் நாமோ சாதாரண மனிதர்களாக நம்மை கற்பனை செய்துகொண்டு, தெய்வீகத்தை வெளியே தேடி அலைகிறோம் என்கிற நம் தவறு புரியும். இது நாம் உணரும் வாழ்க்கை பாடம்.

இந்த தெய்வீக நிலையை சதா உணர்வதே ஆனந்தம். பேரானந்தம். முடிவு இல்லாதது (அனந்தம்). பரந்து விரிந்தது. எல்லையில்லாதது.  இந்த பேரானந்தத்தை சதா உணர்ந்து அதிலேயே திளைக்கும் திவ்யநிலையே, சத் சித் ஆனந்த நிலை. இந்த வாழ்க்கை பாடம் பலருக்கு கிட்டுவதில்லை.

பேரானந்த நிலை

இதுவே அனந்த நிலை, ‘கோடி’ நிலை. ‘தத் த்வம் அஸி’ (எதைத் தேடுகிறாயோ நீயே அது) என்ற வேத உண்மையை பிரகடனப்படுத்தும் நிலை. அற்ப சந்தோஷங்களை தேடி அல்லல்படுவதை விடுத்து உண்மையான எல்லையில்லாத ஆனந்தத்தை உணர்ந்து இறப்பை வெல்வதே நம் பிறப்பின் காரணமாக இருக்க வேண்டும். 
சந்தோஷத்தை தேடுவதை விட்டு விலகி, தெய்வீக நிலையான பேரானந்தத்தை உணருவதற்கான உண்மையான வாழ்க்கை பாடம் தொடர்பான பயிற்சிகளை அளிக்க முன் காலத்தில் ரிஷிகள், குருமார்கள் இருந்தனர்.

ஆஸ்ரமங்கள், குருகுலங்கள், வேத வித்யாலயங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை மறைந்துவிட்டன.
தற்போது சொல்லிதரவும் குருமார்கள் இல்லை. கற்றுக்கொள்ளவும் நமக்கு ஆர்வமோ நேரமோ இல்லை. ஆனால் ஸாஸ்த்ரங்களும், வேதஞானமும் என்றும் நிலைத்து நிற்பவை. காலத்தால் அழிவதில்லை.

உண்மையுடன், நம்பிக்கையுடன், பக்தி ஸ்ரத்தையுடன், முனைப்புடன் இந்தத்
தேடலில் முயல்வோருக்கு ஒரு ப்ரம்ம குருவின் அடையாளமும், அவரை அடையும் வழியும் கிடைக்கும் என்று நம் ஸாத்ரங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

இதை உணர்ந்து முனைப்புடன் தேடுவோருக்கு நிச்சயமாக மனிதப் பிறவிக்கான வாழ்க்கை பாடம் கிடைக்கும்.

குரங்கணி முத்துமாலை அம்மன்: பாவ விமோசனம் தரும் அன்னை

செந்தூர் திருமாலன்

அந்த பாவங்களைப் போக்கி அவர்களுக்கு பாவ விமோசனம் தரும் ஆற்றல்மிக்க அன்னையாக குரங்கணி முத்துமாலை அம்மன் விளங்குகிறாள்.
“பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமே” என்கிறார் பட்டினத்தார். அதாவது ஒருவர் இந்தப் பிறவியில் செய்த புண்ணியங்களும் பாவங்களும் அவரது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்ந்துவரும் என்பதுதான் இதன் பொருள்.
ஒருவர் தெரிந்தோ,தெரியாமலோ பாவங்கள் செய்திருந்தால் அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.


முத்துமாலை அம்மன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதா தேவியை ராவணன் சிறைப் பிடித்து சென்றான்.
அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானர சேனையை அணிவகுத்து நிற்க செய்த இடம் குரங்கணியாகும்.
குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் குரங்கணி என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.


முத்து மாலையை வீசிய சீதாதேவி


ராவணன் சீதாதேவியை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றபோது சீதாதேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி கீழே வீசினாள்.
அப்படி வீசப்பட்ட முத்துமாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலையில் இருந்து ஜோதியாக ஒளி வீசியது.
அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் முத்துமாரியின் ஒளி வீச்சைக் காணமுடியாமல் கண்கள்கூசின.


சீதை வழிபாடு


அருகில் கிடந்த மண்சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர்மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தத் தொடங்கினார்கள்.
முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதாதேவி தங்கியிருப்பதாக நினைத்து அதற்காக முத்துமாரியம்மன் என்று பெயரிட்டனர்.
செவிவழி செய்தியாக காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் இச்சம்பவம் அம்மனின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


அம்மனை நம்பாத அதிகாரி


குரங்கணி பகுதியை நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார்.
அதற்கு கோவிலின் சுற்றுச்சூழல் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச் சுவரை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அந்த ஊரைச் சேர்ந்த 4 சகோதரர்கள் வம்சாவழியினர் தடுத்தனர்.


அம்மன் அசரரீ


அப்போது அந்த அதிகாரி இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால் நான் அம்மன் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறேன்.
அதற்கு அம்மன் பதிலளிக்குமா என ஆணவத்துடன் கேட்கிறார். அதற்கு வம்சாவழியினர் நிச்சயம் அம்பாள் பதிலளிப்பாள் என்றனர்.
அதையும்தான் பார்ப்போமே என்று கூறியபடியேஅந்த அதிகாரி முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன் என்று மூன்று முறை அழைத்தார்.
அப்போது கோவில் கருவறையின் உள்ளே இருந்து என்ன? என்ற சத்தம் இடி முழக்கம் போல் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்ட அதிகாரி அதிர்ச்சியில் உறைந்து போய் மயங்கி கீழே விழுந்தார். அவர் பயணித்து வந்த குதிரையும் கீழே சாய்ந்தது.


மன்னிப்பு கேட்ட அதிகாரி


உடனே கூடியிருந்தவர்கள் பயபக்தியுடன் அம்மனை வணங்கி, தாயே! தவறை பொறுத்தருள வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அம்மன் தீர்த்தத்தை எடுத்து அதிகாரி மீதும், குதிரை மீதும் தெளித்தனர். சிறிது நேரத்தில் சுய உணர்வு வரப் பெற்று அதிகாரி எழுந்தார். குதிரையும் எழுந்தது.
ஆத்தாளின் பரிபூரண கருணையை உணர்ந்த அந்த அதிகாரி நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து அம்மனை வணங்கி தாயே! “நான் தெரியாமல் செய்த குற்றத்தை பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
பின்னர் கோயிலை இடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு இரண்டு மண் குதிரைகளை செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்தக் குதிரைகளை இன்றும் கோவிலில் உள்ள பெரிய சுவாமி சன்னதியில் காணலாம்.


கோயிலில் பூஜைகள்


பழங்காலத்தில் திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை நடந்து வந்தது.
அப்போது அம்மனுடைய மண்ஓட்டு திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது.
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவுகூரும் வண்ணம் இவ்வாறு முன்னோர்கள் தீபதூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தார்களாம்.


புத்துயிர் பெற்ற கோயில்


1957-ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மனின் முத்துமாலையை மூடியிருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு கல்லினால் திருமேனி சிலா சாசனம் செய்யப்பட்டது .
அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு குடமுழுக்கு அபிஷேகம், மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல் இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முத்துமாலை அம்மன் சன்னதியின் இடது புறமும், வலதுபுறமும், பரிவாரமூர்த்திகளின் சன்னதிகள் புடைசூழ அமைந்திருக்கின்றன.
இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.


ராமன் தேடிய சீதை


சீதாதேவியை காணாமல் இராமரும் லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் சீதாதேவியை கடத்தி சென்றான் எனக் கூறியது. அனுமனுடன் வானரப் படைகள் சீதா தேவியை தேடிச் சென்றபோது ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது.
அனுமன் அதன் அருகே சென்றுபார்த்தபோது அது சீதை தூக்கி எறிந்த முத்துமாலை என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால், இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.


தனித் தனி சன்னதிகள்


முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகள், பார்வதி அம்மன், பிரம்மசக்தி மாரியம்மன், சந்தனமாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனிதனி சன்னதிகள் உள்ளன .
மேலும் விநாயகர் காசிநாதர் விசாலாட்சி நவக்கிரகங்கள் அருள் பாலிக்க, மூலவர் முத்து மாரியம்ன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.


திருவிழாக்கள்


குரங்கணி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனித் திருவிழா, தைத்திரு மாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு.
கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
அப்போது முத்துமாரி அம்மனுக்கு தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனித் திருவிழாவிற்கு 15 நாள்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும்.
முத்துமாலை அம்மன் சன்னதியின் தென்புறம் முப்புடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவாரமூர்த்தங்களுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும்.
அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும். இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

நோன்போ நோன்பு


ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும். அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு சென்று 15-ஆம் நாள் அம்மன்கொடை”நோன்போ நோன்பு” என கூறிக்கொண்டு செல்வார்.
அந்த 15 நாட்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவுக்கு 8 நாள்கள் முன்பாக ஆண்கள் பெரியசாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர்.


அம்மன் திருநடை திறப்பு


பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன் திங்கள்கிழமை மாலையில் அம்மன் தங்க ரதத்தில் அலங்கார ஆபரணங்களுடன் எடுத்துச் சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும்.
அம்மனுக்கு மகாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர் சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, தாயர்களுடன் அம்மன் கோட்டை வலம் வந்து வீதி உலா வருவார்.
ஆனித் திருவிழா முடிந்து எட்டாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்து அருள்வர்.


மாட்டு வண்டி கட்டிக்கிட்டு…!


ஆனி திருவிழாவில் பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, ஆடுவெட்டிபொங்கல் இட்டு வழிபாடு செய்வர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படுவதும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதையும் இங்கே பார்க்கலாம்.


ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி!


குரங்கணி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னதி உள்ளது . இந்த சன்னதி அமைய தனி காரணமுண்டு.
கோவில் பூசாரி மற்றும் இவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றி, கேரளாவில் இருந்து எனது காவல்வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலைவடிவில் மிதந்து வருகிறான்.
அவனை வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலதுபுறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திருவுருவை அமைத்து வையுங்கள் என அருளினர்.
அம்மன் அருளாணைப்படி, தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.


வியாதியை குணப்படுத்தும் சாம்பார் சாதம்!


குரங்கணி குரங்கணி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை கோயில் வீடு என்று அழைப்பர் இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள்.
பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு கோவில் வளாகத்தில் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருப்பார்கள். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார்.
அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து அதை பனைமர ஓலைகளில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல்நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம்.
இந்த சாம்பார் சாதத்தை பெறுவதற்காக எப்போதும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.


உடல் உறுப்புகள் நேர்த்திக் கடன்!


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கை,கால் போன்ற மனித உடல் உறுப்புகளை மரக்கட்டையால் செய்து கோயிலில் நேர்த்திக்கடனாக செலுத்துவது விசேஷம்.
வாத நோயினால் கைகால் முடக்கப்பட்டு படுக்கையாக இருப்பவர்கள் நோய் குணமாக வேண்டி அவர்களுடைய உறவினர்கள் அம்மனிடம் வேண்டிக் கொள்வார்கள்.
நோய் குணமானதும் கை, கால், பாதம்,போன்ற உடல் உறுப்புகளை மரக்கட்டையால் செய்து அதை கோவிலுக்கு வந்து காணிக்கையாகசெலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.
அதன்படி நோய் குணமானதும் கோயிலுக்கு வந்து செலுத்துவார்கள். அவ்வாறு நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் மரக்கட்டையால் ஆன உடல் உறுப்புகள் கோயில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.


தரிசன நேரம்!


இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.


வழியும்- தூரமும்


தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி முத்துமாரியம்மன் கோயில்.
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள தென் திருப்பேரை என்ற ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றாலும் கோவிலை அடையலாம்.