murugan koil kumbakonam

குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!

84 / 100 SEO Score

கும்பகோணம் என்றாலே காஞ்சிபுரத்தைப் போல ஒரு புகழ்பெற்ற கோயில் நகரம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இங்குள்ள முருகன் கோயில் தரிசனத்தில் வைணவ ஆலயங்களில் மட்டுமே சாற்றப்படக் கூடிய சடாரி பக்தர்களுக்கு சாற்றப்படுவது விசேஷம்.

சடாரி என்றால் என்ன?

சடாரி என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட ஒரு கிரீடமாகும். இதை சடகோபம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த கிரீடத்தின் மேல்புறத்தில் திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சடாரி வைணவ திருக்கோயில்கள் அனைத்திலுமே இருக்கும்.

இறைவனை நாம் தரிசித்த பிறகு நம் தலையில் அதை வைப்பது உண்டு. இது இறைவனின் திருப்பாதங்களை நம் சிரசின் மேல் வைத்து ஆசிபெறுவதற்கு சமமாக கருதப்படுகிறது..

வைணவர்கள் இந்த திருப்பாதத்தை தலையில் வைக்கும்போது பக்தி மேலிட இறைவனை வணங்கி நிற்பதுண்டு.

சடாரிக்கு ஏன் அப்பெயர் வந்தது?

சடகோபன் என்பவர் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக பக்தி மார்க்கத்தில் அறியப்படும் ஒரு துறவி.
வைணவர்கள் நம்மாழ்வாரே திருமாலின் திருவடியாக இருப்பதாகவும் நம்புகிறார்கள். அதன் இந்த சடாரியை சடகோபம் என்றும் நம்மாழ்வார் பெயரில் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில்
ஒரு முறை வைகுண்டத்தில் மகா விஷ்ணு சயனம் கொள்ள சென்றார். அன்றைக்கு அவர் வழக்கத்துக்கு மாறாக தன்னுடைய பாதுகைகளை அகற்றாமலேயே ஆதிசேஷன் மீது சயனம் மேற்கொண்டார்.
அந்த நேரத்தில் முனிவர்கள் தன்னை பார்க்க காத்திருக்கும் தகவலை அறிந்த பகவான், ஆதிசேஷன் தலையிலேயே பாதுகைகளை மறந்து வைத்து விட்டு அவர்களை பார்க்கச் சென்றார்.
அவர் அந்த இடத்தை விட்டு சென்றதும், ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின.

பாதுகையை தூற்றிய திருமுடி, சங்கு, சக்கரம்

பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். பகவானின் கரங்களை அலங்கரிக்கும் சங்கும், சக்கரமும் கூட தகுதியானவை.

ஆனால் பகவானின் பாதங்களை சுமக்கும் நீ எப்படி ஆதிசேஷன் தலையில் இருக்க முடியும்? என்று திருமுடி தூற்றியது.
ஒருகட்டத்தில் அவர்கள் மூவரின் தூற்றலையும் தாளாது ஆதிசேஷன் தலையில் இருந்து பாதுகைகள் நழுவி விழுந்தன.
இறைவன் திரும்பி வந்தபோது, பாதுகை நிலைகுலைந்து போயிருப்பதைப் பார்த்த பகவான், கர்வத்தால் உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அறிவேன்.
எனது பார்வையில் இந்த அண்டத்தில் இருப்பவை அனைத்தும் ஒன்றே. இதை அறியாதவர்களாக சங்கும், சக்கரமும், திருமுடியும் இருப்பதையும் உணர்வேன்.
அதற்கான தண்டனையை பின்னாளில் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று சொல்லி பாதுகையை சமாதானம் செய்தார்.

ராமாவதாரத்தில் பாதுகை

இறைவனின் இந்த சாபம் காரணமாகவே, திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும், சக்கரமும் பரத, சத்ருக்னனாக பிறந்தன. ஆதிசேஷன் இலக்குவணனாக பிறந்தது. அந்த பிறவியிலும் பாதுகை ராமனை தாங்கி நின்றது.
தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற மரவுரி தரித்து ஸ்ரீராமன் வனவாசம் புறப்படுகிறார்.
அண்ணலுக்கு பணி செய்வதே என் கடன் என்று சீதையும் உடன் புறப்படுகிறாள். அண்ணனுக்கு பணி செய்வதை தன் கடமையாக கருதிய லட்சுமணனும் உடன் செல்கிறான்.
தம்மை நாடி வருவோரின் பாவங்களைத் தீர்க்கும் கங்கை நதியின் கரையை அடைந்த ராமனை வரவேற்க குகன், தன்னுடைய பரிவாரங்களுடன் காத்திருக்கிறான்.
என்றுமே மனதில் சஞ்சலம் புகாத ராமனின் மனதில் ஏதோ குழப்பம் ஏற்படுகிறது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படி சமாளிப்பது என்பதுதான் அவனுடைய குழப்பத்துக்கு காரணம்.

அந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது பரதனின் வரவும், கண்ணீர் மல்க அண்ணனின் காலைப் பிடித்து தொழுத நிலையும்தான்.

பாதுகைக்கு கிடைத்த மரியாதை

தன்னுடைய தாயின் சதியால், காட்டுக்கு ராமன் வந்த நிலையில், அயோத்தியை ஆள தனக்கு என்றைக்கும் உரிமை இல்லை.
தமையனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. எனவே நான் அரியாசனம் ஏற்க விரும்பவில்லை என்று அவனும் ராமன் சென்ற காட்டுப் பகுதிக்கு வருகிறான்.
எண்ணில் கோடி ராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ என்று கம்பன் வரிகள் கம்ப ராமாயணத்தில் பார்க்க முடிகிறது.
ராமபிரான் நாடு திரும்பி அயோத்தி சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறான். ஆனால் பரதனின் வேண்டுகோளை ஏற்பது பொருத்தமன்று. அப்படி ஏற்றால், தந்தையின் வாக்கை காப்பாற்ற முடியாது என்பதை பரதனுக்கு புரிய வைக்கிறான்.

குழப்பம் தீர்ந்தது

அதேநேரம் பரதனும் நாடு திரும்ப விரும்பவில்லை. சிக்கலான இந்த நிலையில்தான் ராமன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
அதற்கு ஒரு தீர்வும் கிடைத்தது. பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்தி கிராமத்துக்கு வந்தான்.
ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் பாதுகைகளை வைத்து பட்டாபிஷேகம் செய்தான். ராமனுக்காக அவனின் சேவகனாக அயோத்தியை ஆட்சிபுரியத் தொடங்கினான்.
ஸ்ரீவைகுண்டத்தில், பாதுகைகளை இழிவுபடுத்திய சங்கு, சக்கரம் ராமனின் பிறப்பில் தம் தலையில் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதுவே பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு காரணமாக அமைந்தது.

குடந்தை முருகன் கோயிலில் சடாரி

கும்பகோணம் மகாமக குளத்தில் மகாமக தீர்த்தவாரி நடைபெறுவதை ஆன்மிக பக்தர்கள் அறிந்த ஒன்று.
அருள்மிகு ஸ்ரீசோமகலாம்பிகை சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் முருகன் சந்நிதிக்கு ஒரு சிறப்பு உண்டு.
வைணவக் கோயில்களில் மட்டுமே பக்தர்கள் தலையில் வைக்கப்படும் சடாரி முருகன் சந்நிதியில் வைக்கப்படுவதுதான் இங்கு விசேஷம்.

இதை உள்ளூர் பக்தர்கள் தவிர மற்றவர்கள் அறிந்திருப்பது மிகக் குறைவே. முருகன் சந்நிதியில் மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த சடாரி பக்தர்களுக்கு வைக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே முருகன் கோயில் ஒன்றில் சடாரி வைக்கப்படுவது இங்கு மட்டுமே. வேறு எந்த முருகன் கோயில்களிலும் இப்படி சவாரி வைக்கப்படுவதில்லை.

மேலும் சில சிவன் கோயில்கள்

இதேபோன்று சடாரி வைக்கப்படும் சிவன் கோயில் தமிழகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு நல்லூர் ஆலயங்களில் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலத்தில், காளஹஸ்தி திருக்கோயில், சுருட்டப்பள்ளி கோயில் ஆகியவற்றில் சடாரி சாற்றப்படுகிறது.
எல்லா திருக்கோயில்களிலும் விஷ்ணு பகவானின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியே வைக்கப்படுகிறது. ஆனால், வானமாமலை திருத்தலத்தில் மட்டும் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சடாரியின் தத்துவம்

ஸ்ரீவைகுண்டத்தில் பகவானின் பாதுகை அவமானப்படுத்தப்பட்டது. அதனால் ராமாவதாரத்தில் அந்த பாதுகை மன்னரின் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது. இதை நினைவுபடுத்தவே பெருமாள் கோயில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது.
இறைவன் முன் அனைவரும் சமம். அவருடைய சந்நிதியில் பணக்காரன், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகளைக் காட்டக் கூடாது என்ற தத்துவத்தையே இந்த சடாரி போதிக்கிறது.

வியாத கீதை சொல்லும் தத்துவம் என்ன?

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்

84 / 100 SEO Score

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply