வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம்

வெ நாராயணமூர்த்தி

நாம் யார்? நம்மைப் படைத்தவன் யார்? நம்முடைய உண்மை இயல்பு என்பது என்ன?
நம் கண் எதிரே நாம் காணும் உலகம் என்பது என்ன? வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம் என்பது என்ன? உபநிஷத்துகள் உணர்த்தும் வாழ்க்கை நெறிமுறைகள் என்ன? என்று இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றை தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் கேட்காத நபர்கள் வெகு குறைவு.

ப்ருகு உணர்ந்த உண்மை

முன்னொரு காலத்தில் ப்ருகு என்கிற மாணவனும் இந்தக் கேள்விகளைக் கேட்டதோடு அல்லாமல் கேள்விகளுக்கான பதிலையும் முனைப்புடன் தேடினான்.

கேள்விகளையும் பதிலையும் முழுமையாக உணர்ந்து தெளிந்தபோது, இந்த உலகமே அவனை அறிந்தது.

குருகுல கல்வியில் தேர்ச்சி பெற்று, இத்தகைய அடிப்படை கேள்விகளுக்கு விடை
தேடி அலைந்தபோது, தன் தந்தையும் குருவான வருணமுனியை அணுகி தனக்கு
உதவி செய்ய வேண்டினான்.

ஆர்வமுடன் ஆன்மீகத் தேடலை மேற்கொண்டுள்ள தன் மகனுக்கு (சீடனுக்கு) முதலில் மனித உடல், உள்ளம், எண்ணம், புத்தி ஆகியவைகளுக்கு அடிப்படையாக விளங்கும் ‘ஐந்து கோச விவேக’ தத்வ நிலைகளை விளக்கினார் குரு. (கோசம் என்பது கூடு).

ஐந்து கோசங்கள்

“ஐந்து புலன்கள் அடங்கிய உடல் அன்னத்தால் ஆனது. இது அன்னமயக்கோசம்.
அதை அடுத்து, உடலை இயக்கும் சூட்சும சக்தியான ப்ராணமயக்கோசம்.

உடல், புலன்கள் வழியாக ஏற்படும் தெய்வீகம் சார்ந்த அனுபவ உணர்வுகளை உணர்த்துவது மனோமயக்கோசம்.

எண்ணங்களைத் தெளிவு செய்வது விக்ஞாயமயகோசம். இந்த நான்கு கோசங்களின் அனுபவங்களின் பின்னணியில் இருப்பது ஆனந்தமயக்கோசம்.

இந்தக் கோசங்கள் ஒன்றுடன் ஒன்று இயல்பாகவே பின்னிப் பிணைந்து
இயங்குகின்றன. இது தெய்வீகக் கலவை.

நாம் பார்க்கக் கூடிய அன்னமயக்கோசத்தைத் தவிர மற்ற கோசங்கள் சூட்சுமமானவை-பார்க்கமுடியாது, ஆனால் உணரமுடிகிறது.

இந்த ஐந்து கோசங்களின் துணையோடுதான் நாம் காணும் உலக, கற்பனை
அனுபவங்களைப் பெறுகிறோம்.

பரப்ரம்மம்

புலன்களான கண், காது, மனசு, வார்த்தைகள், உணவு மற்றும் ப்ராணன் ஆகியவை நீ
கேட்ட உண்மையை உணர்ந்து கொள்வதற்கு உதவி செய்யும் கருவிகள்.

இந்தக் கருவிகள் அனைத்தும் நீ அறிய விரும்பும் பரப்ரம்மத்திலிருந்து உருவானவை.
அதிலேயே கரைந்து மீண்டும் உருவாகுபவை.

எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை
காக்கப்படுகின்றனவோ, முடிவில் எதைச் சென்று அடைந்து மீண்டும்
தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம். இதுவே நீ தேடும் தெய்வீகம்.

இந்த தெய்வீகம் என்பதை அடைய கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். முனைப்புடன், நம்பிக்கையுடன் தேடினால் நீ தேடும் தெய்வீகம் உன்னிடம் வரும்.

இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் உன் தேடலை மேற்கொள்” என்று அறிவுரை வழங்கி ஆசீர்வதித்தார் வருணமுனி.

ப்ருகுவின் தவம்

வேத கல்வி பயின்ற ப்ருகு தெய்வீகம் என்பதன் மகத்துவ த்தை அறிய தன் குருவின் அறிவுரையை ஏற்றுத் தவம் புரியத் தொடங்கினான். முதலில் அன்னமயக்கோசத்தில் தொடங்கினான்.

உடல் கருவிகள் அனைத்தும் செயல்பட அன்னம் (உணவு) தேவை அல்லவா? உணவிலிருந்துதான் அனைத்து உயிர்களும் பிறக்கின்றன.

உணவாலே வளர்கின்றன, உணவாலே மடிகின்றன. மீண்டும் உணவாலே பிறக்கின்றன. அந்த வகையில் உணவே தான் தேடும் பரப்ரம்மம் என்ற முடிவுக்கு வந்தான்.

உடனே தன் குருவிடம் சென்று தான் உணர்ந்ததை எடுத்துரைத்தான். ‘நல்லது ப்ருகு, மேலும் முயன்று பார்’ என்று மீண்டும் தொடர்ந்து தவம் செய்ய சொல்லியனுப்பினார்.

முயற்சி மீண்டும் முயற்சி

ப்ருகு யோசித்தான். தன் பதில் சரியல்ல என்பதை குரு சூசகமாக சொல்லியுள்ளார். தெய்வீகம் என்ற பாதையை அடைவதற்கு தன் தவத்தை மேலும் தொடர்ந்தான்.

முனைப்புடன் தவம் செய்ய உதவுவது எண்ணங்கள் அல்லவா? அப்படிப்பார்த்தால் எண்ணங்களேதான் எல்லாம்.
அனைத்தும் எண்ணங்களாலேயே தோன்றி, வளர்ந்து, மறைந்து, மீண்டும்
தோன்றுகின்றன. ஆகவே இதுதான் பரப்ரம்மம்.

உடனே தான் உணர்ந்ததை தன் குருவிடம் விவரித்தான். குருவோ புன்னகைத்தார். மீண்டும் தவம் செய்யப் பணித்தார்.

ப்ருகுவும் தவத்தைத் தொடர்ந்தான். இந்த முறை ப்ராண சக்திதான் பரப்ரம்மமாக
இருக்க வேண்டும் என்று உணர்ந்தான். ஏனென்றால் ப்ராண சக்திதான் உயிர்களை
உருவாக்குகிறது.

ப்ராண சக்திதான் உயிர்களை காக்கிறது. ப்ராணசக்தி இல்லையென்றால் உயிர் வாழ முடியாது. ஆகவே ப்ராணசக்திதான் பரப்ரம்மம் என்ற முடிவுக்கு வந்தான்.

இதை தன் குருவிடமும் தெரிவித்தான். ப்ருகுவின் முனைப்பையும் முயற்சியையும் கண்ட குரு அவனை மீண்டும் தவம் செய்ய அனுப்பினார். மாணவன் ப்ருகு தன் முயற்சியை விடவில்லை.

பரப்ரம்மம் என்னவாக இருக்கும்?

பரப்ரம்மம் என்பது என்னவாக இருக்கும்? இந்த கேள்விக்கு எது விடை அளிக்கும்? கேள்வியையும் பதிலையும், அனைத்தையும் உணர வைப்பது ஞானம் அல்லவா?

ஒரு வேளை ஞானம்தான் பரப்ரம்மமா? ப்ருகு தன் குருவிடம் தான் உணர்ந்ததைக் கூறினான். மாணவனின் முன்னேற்றத்தை கவனித்த குரு, மேலும் தவத்தை தொடரச் சொன்னார்.

ப்ருகு சிறிதும் சோர்வடையவில்லை. தன் முயற்சியிலிருந்து தளரவில்லை. மாறாக தன்
ஆர்வம் அதிகமாவதை உணர்ந்தான்.

இந்த முறை இன்னும் முனைப்புடன், நம்பிக்கையுடன் ஆழமாக தவத்தில் இறங்கினான். தான் இதுவரை உணராத ஒன்று என்னவாக இருக்கும்?

தன்னை மறந்து, இந்த உலகை மறந்து, முழுமையாக தவத்தில் மூழ்கினான்.

விலகியது இருள்

இருள் விலகியது. இந்த முறை, தன்னையும், தன்னை சுற்றியுள்ள உலகையும்
அனைத்தையும் தானாகவே, தன்னுள்ளே உணரமுடிந்தது.

தன்னை உணர்ந்தபோது தமையனையும் உணர முடிந்தது. அனைத்து அனுபவங்களையும் உணரவைப்பது ‘உள்ளுணர்வு’.

இது இல்லாமல் எந்த அனுபவமும் இல்ல. இந்த உள்ளுணர்வை உணர்த்துவது ஆத்மன். இதுதான் தன் உண்மை இயல்பு. ஆத்மனில்தான் அனைத்தும் தோன்றுகின்றன,

வாழ்கின்றன, மறைகின்றன. இந்த உண்மை சொரூபமே பரப்ரம்மம் என்ற உண்மையை உணர்ந்தான். அவனுள் இனம் புரியாத ஒரு ஆனந்தத்தை உணர்ந்தான்.

சத் சித் ஆனந்தம்

சத் சித் ஆனந்த நிலையே பரப்ரம்மம். இந்த ஆனந்த நிலையே அனைத்து உயிர்களின் உண்மை சொரூபம். உயிர்கள் ஆனந்தமாக உருவாகின்றன.

ஆனந்தத்தை உணர வாழ்கின்றன, ஆனந்தமாக மடிகின்றன, மீண்டும் ஆனந்தமாக உருவாகின்றன என்ற உண்மை விளங்கியது.

இந்த உண்மையை தன் குருவிடம் விவரித்தபோது, அவர் அவனை ஆரத்
தழுவிக்கொண்டார். ‘ப்ருகு நீ உண்மையை புரிந்துகொண்டது மட்டுமல்லாமல்,
உணர்ந்து கொண்டது உன்னை உயர்த்திவிட்டது.

ப்ரம்மத்தை உணர்ந்தவன் ப்ரம்மஞானி. ‘ப்ரம்ம விதாப்நோதி பரம்’. ப்ரம்மத்தை உணர்ந்தவன் மிக உயர்ந்த நிலையை, ப்ரம்ம நிலையை அடைகிறான். ப்ரம்மத்தோடு ஒன்றிப் போகிறான்.

உபநிஷத்துகள் – ப்ரம்மம் பரமானந்தம்

‘சத்யம், ஞானம், அனந்தம் ப்ரம்ம’. ப்ரம்மம் பரமானந்தம். அது ஒன்றே உண்மை
(சத்யம்).

அனைத்தையும் உணர்ந்தது (ஞானம்), அது ஒன்றே எல்லை இல்லாதது- கோடி (அனந்தம்). இதுதான் இந்த உலகின் மிக உயர்ந்த கல்வி.
வேதங்கள் இதை

வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம், ஆதித்யவர்ணம் தமசஸ்து பாரே, தாமேவ
விதித்வா அதி ம்ருத்யோமேதி, நான்ய பந்தா வித்யதே அயனாய’

என்று வர்ணிக்கின்றன.

அதாவது, சூரியனைப் போல ஸ்வப்ரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆத்மன்தான்
தன் சுயரூபம் என்று உணர்பவனுக்கு இறப்பில்லை.

இதை விட மிக உயர்ந்த கல்வி இந்த உலகில் வேறு இல்லை. இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு பிறப்பு-இறப்பு எதுவும் இல்லை.

இன்பம்- துன்பம் எதுவும் இல்லை. சதா ஆனந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வீக நிலையை அடைகிறான். சர்வ சாந்த நிலை. அனைத்தையும் கடந்த நிலை.

வாழும்போதே முக்தி. ப்ரம்மானந்த நிலை. இந்த நிலையை நீ அடைந்து விட்டாய்’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

ஆன்மிக பயணம்

இந்த உரையாடல் தைத்ரீய உபநிஷத்தில், ப்ருகுவல்லி என்கிற அத்தியாயத்தில்
காணப்படுகிறது. இது யாரால் எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது
தெரியாது.

பரப்ரம்மத்தை உணர தேவைப்படும் நிலைகளை, வழிமுறைகளை,
பயிற்சிகளை, நிதர்சனமாக எடுத்துரைக்கும், கற்றுத்தரும் சாதனமாக இந்த
உரையாடலை நாம் பார்க்க வேண்டும்.

அறியாமையில் தவித்த ஒரு சிறுவன், ப்ரம்ம ஞானத்தை உணர மேற்கொண்ட ஆன்மீகப் பயணம் இது. சாதாரணமாக, நாமும் நம்மை உடல், உள்ளம் கொண்ட கலவையோடு இணைத்துக் கொண்டு அறியாமையில் உழன்று வருகிறோம்.

உண்மையில் நாம் தெய்வீகப் பிறவிகள் என்பதை மறந்து ‘சம்சாரம்’ என்கிற சிக்கல்களில் கிக்குன்று அல்லல்படுகிறோம்.

காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி

சிவன் கோயிலில் பழங்கால நெல் சேமிப்பு கிடங்கு-ஒரு நிமிட விடியோ

ப்ருகு சம்ஹித

முதலில் கண்ணுக்குப் புலப்படும் உடலிலிருந்து தொடங்கி, புலப்படாத
சூட்சும கோசங்களைக் கடந்து அனுபவ ரீதியாக ப்ரம்மத்தை உணர மாணவன் ப்ருகு
மேற்கொண்ட ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தவம், இவைகளின் பலனாக
அவன் உண்மையை உணர்ந்த விதம் ஆகியவை நமக்கு ஒரு பெரும் வழிகாட்டியாக
அமைந்துள்ளது.

தன்னை உணர்ந்த ப்ருகுவை இந்த வையகமே உணர்ந்து பாராட்டுகிறது. சரித்திரம் படைத்த ப்ருகு பிற்காலத்தில் சப்த ரிஷிகளில் ஒருவராக உயர்ந்து பல நூல்களை, குறிப்பாக ‘ப்ருகு சம்ஹித’ என்கிற ஜோதிஷ நூலை மனிதகுல உயர்வுக்கு அளித்துச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு

சென்னை: இப்போது நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம் 2700 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு என்ற தொன்மையை உடையது என்பதை பலரும் அறியாமல் இருக்கலாம்.
இந்த பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் எதற்காக தொடங்கப்பட்டன. எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. ஏன் இடைக்காலத்தில் தடை செய்யப்பட்டது. இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகள் பெற்றிருக்கும் மாற்றங்கள் என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

ஒலிம்பியா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள்

ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு 776 ஆண்டுக்கு முன்பு கிரேக்க நாட்டில் ஒலிம்பியா என்ற இடத்தில் முதன்முதலில் மாபெரும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடத்தப்பட்டன.
அப்போது இப்போட்டிகள் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே நடந்தது. இப்போட்டிகளை கிரேக்க கடவுளர்களான சீயஸ் (zeus) , ஹேரா (Hera) ஆகியோரை வழிபடும் வகையில் ஒரு அர்ப்பணிப்பு விழாவாக நடத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் போர்க் கலைகளில் பயன்படுத்திய ஒருசில பயிற்சிகளையும், அன்றாடம் பொழுதுபோக்கு மற்றும் வீரத்தை நிரூபிக்கும் வகையிலான விளையாட்டுகளையும் தொகுத்து இப்போட்டிகள் நடத்தப்பட்டன என்பதை வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஹீரோ பட்டம்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு நகரில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒலிம்பியா நகரில் கூடுவார்கள்.
போட்டிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆன கிரீடம் போட்டி நடத்துவோரால் அணிவிக்கப்படும்.
இந்த கிரீடத்தை அணிந்த வீரர்கள் தங்கள் நகருக்கு ஊர்வலமாக செல்வார்கள். அங்கு காத்திருக்கும் மக்கள் அவரை நகரின் ஹீரோவாக வரவேற்பார்கள்.

பெண்களுக்கு தடை

கிரேக்க நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக இருந்தது. திருமணமான பெண்கள், போட்டிகளில் பங்கேற்கவோ, பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை.
போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான பணிப் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.

பெண்களுக்கு தனிப் போட்டி

பெண்களுக்காக தனியாக ஹேரயா என்ற போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக அந்தக் காலத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.
கிரேக்க கடவுள் சீயஸ் மனைவியான ஹேரா பெயரில்தான் இப்போட்டிகள் ஹேரயா என அழைக்கப்பட்டு வந்தன.
மல்யுத்தம், ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல், எடை மிகுந்த கல்லை தூக்கி எரிதல், நீண்ட தூரம் ஓடும் மராத்தான் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் அக்காலத்தில் இடம்பெற்றிருந்ததும் வரலாற்று ஆவணங்களில் இருந்து தெரிகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஒரு நாள் போட்டியாக இருந்து வந்த இப்போட்டிகள் பின்னாளில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வழக்கமாக மாறியது.
அத்துடன் அக்காலத்தில் இப்போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கின் எல்லா போட்டிகளும் ஒலிம்பியா நகரில் உள்ள மாபெரும் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.
40 ஆயிரம் பேர் அமரக் கூடிய மாபெரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒலிம்பியாவில் இருந்ததற்கான ஆதாரங்களும், சிதைவுகளும் கிடைத்திருக்கின்றன.

அமைதி, சமாதானம்

இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்போது எந்த வன்முறையும், போரும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக போட்டியாளர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள்.
ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியா நகரில் இருந்து ஸ்போன்டோஃபோராய் என்று அழைக்கப்படும் ஈலிஸ் நகர் குடிமக்கள் ஆலிவ் இலைகளுடன் கிரீடம் அணிந்து ஒரு மாத காலம் கிரேக்கநாடு முழுவதும் சுற்றி வருவார்கள்.
அவர்கள் ஒலிம்பியா நகரில் புறப்பட்டதும், கிரேக்க நாடு முழுவதும் அமைதி, சமாதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாடு.
அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்கள் எவரும் எந்த பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அப்படி ஏதேனும் வன்முறை, கலகம் ஏற்பட்டால், அது கிரேக்க கடவுள் சீயஸை நிந்திப்பதாக அர்த்தம் என்பதால் எல்லோரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தார்கள்.

அத்லெட்ஸ்

கிரேக்க ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் ஆத்லோஸ் என்று அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் அந்த வார்த்தையை பயன்படுத்தி ஆங்கிலத்தில் அத்லெட்ஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
போட்டிகளில் பங்கேற்பவர்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதும் ஒரு விதி. நாட்டின் போர்ப் படை தளபதியும், பாலிம்னிஸ்டர் என்று அழைக்கப்படும் ஆடு மேய்ப்பவரும் எதிரெதிரில் போட்டி களத்தில் இறங்குவார்கள்.
இப்படி எல்லோரையும் சமமாக விளையாட்டில் பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில், ரோட்ஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்த டயாகுராஸ் என்பவரும், பாசிடோனிட அரசர் அமின்டாஸின் மகன் ஒருவரும் கூட கலந்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பேரரசர் அலெக்சாண்டரும், டெமாக்ரைட்டர்ஸ் என்ற தத்துவ ஆசிரியர் ஒருவரும் கூட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டிருப்பதை வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

தடை விதிப்பு

ஏசு பிறந்த பிறகு அதாவது கி.பி. 393-இல் இந்த விளையாட்டுப் போட்டிகளை மதநம்பிக்கை அற்றவர்களின் கலாசாரம் என்று சொல்லி கிரேக்க அரசன் தியோடோசியஸ் தடை செய்தான்.
போட்டிகள் தொடங்கி 1169 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்தன.
போட்டிகள் நடத்தப்பட்டு வந்த ஒலிம்பியா நகர் கேட்பாரின்றி தனது பொலிவை இழந்தது. போட்டிகள் நடத்த பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் காலத்தால் சிதைந்து போயின.

மீண்டும் உயிர் பெற்ற ஒலிம்பிக்

1766-ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் கர்டியஸ் என்பவர் ஒலிம்பியா நகரை உயிர்ப்பித்தார். அதனால் இன்றைக்கு முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக இது மாறியிருக்கிறது.
அத்துடன், ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட பழைமையான மைதானத்தில் சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆய்வுக் கட்டடம் எழும்பியது.
1894-இல் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை பியரி டி. கூபர்டின் என்பவர் மேற்கொண்டு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினார்.
அதனால் இவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார். இவர்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர்.

ஒலிம்பிக் கொடி

நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ஆம் ஆண்டில் முதன்முதலில் ஏதென்ஸ் நகரில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 280 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். இப்போட்டிகளை 60 ஆயிரம் பேர் பார்த்தார்கள்.
ஒலிம்பிக் கொடி 6 வண்ணங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. வெள்ளை நிறத்தை பின்புலமாகக் கொண்ட இந்த கொடியில், ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்.
இந்த வளையங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 5 கண்டங்களைக் குறிக்கின்றன.

பெண்களும் பங்கேற்ற முதல் போட்டி

1900-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களும் முதன்முதலில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது நடத்தப்பட்ட போட்டிகளில் 997 வீரர்களில் 22 பெண்கள் இடம் பெற்றிருந்தார்கள்.
1924-ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அறிமுகமானது. இதனால் ஏற்கெனவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த போட்டி கோடைக்கால ஒலிம்பிக் போட்டி என பெயர் மாற்றம் பெற்றது.
1992-ஆம் ஆண்டு வரை கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன.
பிறகு குளிர்காலப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், கோடைக்கால போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தும் வழக்கம் ஏற்பட்டது.
அதன்படி 2 ஆண்டுகள் இடைவெளியில் இப்போட்டிகள் மாறிமாறி நடத்தப்பட்டு வருகின்றன.

போட்டிகள் தடைப்பட்ட ஆண்டுகள்

கடந்த காலங்களில் 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை.
அதேபோல், 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜப்பானில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா தொற்று உலகம் முழுவதையும அச்சுறுத்தியதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அப்போட்டிகள் 2021-இல் டோக்கியோவில் நடத்தப்பட்டன.
ஒலி்ம்பிக் போட்டி தொடக்க நாளில கோலாகலமாக நடத்தப்படும் விழா முதன்முதலில் 1908 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

ஒலிம்பிக் தீபம்

ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ஆம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்றப்பட்டது.
இந்த ஒலிம்பிக் தீபம் போட்டி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் ஏற்றப்படுவது வழக்கத்தில் உள்ளது,
அதைத் தொடர்ந்து அந்த தீபம் ஒரு டார்ச் ரிலே மூலம் பல நாடுகளில் பல்வேறு சாதனைப் படைத்த வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு இறுதியாக ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நேரத்தில் விழா மைதானத்தில் உள்ள ஒலிம்பிக் தீப மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்படுகிறது.

உலக ஒலிம்பிக் தினம்

ஆண்டுதோறும் நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்ட ஜூன் 23-ஆம் தேதியை உலக ஒலிம்பிக் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.
தடகளம், கூடைப்பந்து, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், ஃபிகர் ஸ்கேட்டிங், ஃபென்சிங், கால்பந்து, ஸ்கேட்போர்டிங், டென்னிஸ், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. போட்டியில் ஒரு நாட்டின் வீரர் வெற்றி பெறும்போது அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

ஒலிம்பிக்கில் இந்தியா

1900-ஆவது ஆண்டில் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது. உலகின் 26 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
அப்போது, இந்தியா இரு வெள்ளிப் பதக்கங்களை பெற்று உலக நாடுகளை வியக்க வைத்தது. காரணம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் கொல்கத்தாவை சேர்ந்த நார்மன் பிரிட்சார்டு என்பவர் மட்டுமே பங்கேற்றிருந்தார்.
அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், 200 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
1904, 1908, 1912-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை. அதன பிறகு நடந்த போடடிகளில் இந்தியா பஙகேற்றது. ஆனாலும் பதக்கம் எதுவும் பெறவில்லை.
1928-ஆம் ஆண்டில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை பெற்று அசத்தியது.

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட காரணம் என்ன?

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள்

இவ்வாண்டு பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10500 வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்முறை ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.
இம்முறை முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா ஒரு மைதானத்துக்குள் நடத்தப்படவில்லை. பாரிஸின் சென் நதியில் நடத்தப்பட்டது.
சுமார் 200 தேசிய பிரதிநிதிகளின் அணிவகுப்பு படகுகளில் நடந்தது. தொடக்க அணிவகுப்பு கி.மீட்டர் வரை சென் நதியை கடந்தை 3 லட்சம் மக்களை மகிழ்வித்தது.
இநத ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 32 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 329 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 5,804 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
உக்ரைன் போரில் பங்கேற்றுல்லதால் ரஷ்யாவும், பெலாரஸ் நாடும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாபா வங்காவின் கணிப்பு சொல்வதென்ன? ஒரு நிமிட விடியோ

நட்பின் இலக்கணம்: திருக்குறள் கதைகள் 20

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 20) நட்பின் இலக்கணம் குறித்த சிறுகதையும், குறளும் இடம்பெறுகிறது.

தர்மலரும் விமலரும்

தர்மரும், விமலரும் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ஆனந்தன் தன் நண்பன் அருணுடன் வந்தான்.

என்ன ஆனந்தா என்றார் தர்மர். நாங்கள் நல்ல நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக உங்களின் கருத்தை சொல்லுங்களேன் என்றான் ஆனந்தன்.

ஆனந்தா முதலில் நட்பின் அடிப்படையை புரிந்துகொள்.

நட்பின் இலக்கணம்

நட்பின் அடிப்படை எதுவெனில், மற்றவர்களுக்கு மனம் தளராமல் உதவி செய்வது. அதாவது முடிந்த அளவுக்கு மற்றவருக்கு உதவி புரிதல் வேண்டும்.

அப்படி தான் பெற்ற உதவியை நினைத்து பார்க்கும் ஒருவன், நட்பின் பெருமை உணர்ந்து அந்த நட்பில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.

அத்துடன் அவன் ஆபத்து காலங்களில், தான் எப்படியாகினும் பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்கிறான்.

திருவள்ளுவர் சொல்லும் நட்பின் இலக்கணம்

ஒருவனுடைய ஆடை அவனின் உடலில் இருந்து நழுவும்போது, எப்படி அவனுடைய கரங்கள் செயல்பட்டு உதவுகிறதோ அதுபோல நண்பனுக்கு துன்பம் நேரிடும்போது அதை களைவதற்கு உதவி புரிய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

(குறள்-788)

இத்தகைய நட்பின் சிறப்பை உணர்த்த ஒரு சிறுகதையும் சொல்கிறேன் கேள்.

ஒரு காட்டில் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியும், கண் பார்வையற்ற திறனாளியும் சென்று கொண்டிருந்தார்கள்

அப்போது திடீரென காட்டில் தீப்பற்றிக் கொண்டது. கால் ஊனமுற்றவர் எதிரே என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.

கண் பார்வையற்றவருக்கு எதிரில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதனால் கால் ஊனமுற்றவர் எதிரே காடு தீப்பற்றி எரிவதை கண் பார்வையற்ற தன் நண்பருக்கு சொல்கிறார்.

ஊனமுற்றவரால் ஓட முடியாது. கண் பார்வையற்றவரால் எதிரில் உள்ள பொருள்களை பார்க்க முடியாது. இப்போது இருவருமே காட்டுத் தீ பரவிய இடத்தில் சிக்கிக் கொண்டார்கள்.

கால் ஊனமுற்ற நண்பர் சொன்னார். நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் மட்டுமே இந்த காட்டுத் தீயில் இருந்து தப்பிச் செல்ல முடியும்.

அதனால் நான் சொல்வதை கேட்பீர்களா என்று கண் பார்வை அற்றவரிடம் கேட்டார் கால் ஊனமுற்றவர்.

நீங்கள் சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்றார் கண் பார்வையற்றவர்.

உடனே என்னை உங்கள் முதுகில் தூக்கிக் கொள்ளுங்கள். நான் வழி காட்டுகிறேன். காட்டுத் தீயில் இருந்து தப்பிவிடலாம் என்றார் ஊனமுற்றவர்.

இருவரும் சமயோஜிதமாக ஒருவருக்கொருவர் உதவி அந்த காட்டுத் தீயில் இருந்து தப்பி வெளியேறினார்கள்.

யாரிடம் யாசிக்கக் கூடாது – திருக்குறள் கதை 19

துன்பம் வரும்போது நட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். இப்போது புரிகிறதா நட்பின் பயன் என்றார் தர்மர்.

தாத்தா இப்போது எங்களுடைய கட்டுரைக்கான தலைப்பு கிடைத்து விட்டது. நாங்கள் இப்போது தயாரிக்க செல்கிறோம் என்று நண்பனுடன் விடைப் பெற்றுச் சென்றான் ஆனந்தன்.

இந்திய வளர்ப்புக்கு ஏற்ற நாய்கள்

இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 19) இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது என்பதை விளக்கும் சிறுகதையும், அதற்கான குறள் விளக்கத்தையும் கொண்டிருக்கிறது.

இரத்தல் என்பதே இழிநிலை

உலகில் தனம் (செல்வம்), தானியம் முதலியவைகள் இல்லாதவர்கள், தன் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்க பிறரிடம் யாசிக்க (பிச்சை )வேண்டியுள்ளது.
பொருளைப் பெற்றவர்கள், அடுத்தவர்களின் ஏழ்மையைக் கண்டு இரக்கம் கொள்வது என்பது அபூர்வமானச் செயலாகவும் இருக்கிறது.
எவன் பொருளைப் பெற விரும்புகின்றானோ அவன் தாழ்ந்தவனாகிறான். எவன் பொருளைக் கொடுப்பவனோ அவன் உயர்ந்தவனாகிறான். எனவே இரத்தல் என்பது எப்போதும் இழிநிலைக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இல்லாதவன் யாரிடம் யாசிக்கக் கூடாது என்பதை திருக்குறள் வலியுறுத்துகிறது.

ஒரு தந்தை மகன் கதை

ஒரு ஊரில் பெரிய வணிகர் இருந்தார்.அவர் நியாயமான முறையில் வணிகம் செய்து வந்தார். அத்துடன் அவருக்கு வணிகத்தில் கிடைக்கும் பெரும் பங்கு செல்வத்தை தானத்திற்கும், தர்மத்திற்கும் செலவிட்டு வந்தார்.
அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனும் தன்னைப் போல் பெரிய வணிகனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்த வணிகர்.
அவர் நினைத்ததுபோலவே பெரிய வணிகனாக அவனுடைய மகன் உருவெடுத்தான். அவனுக்கு திருமணமும் நடந்தேறியது.
ஒரு நாள் அவனுடைய மனைவி, கணவரை பார்த்து உங்கள் தந்தை வணிகத்தில் கிடைக்கும் பெரும் பகுதியை தானத்துக்கும், தர்மத்துக்கும் செலவிடுகிறார்.
இப்படியே போனால் நாம் ஒரு காலத்தில் பிச்சை எடுக்க வேண்டியதுதான். அதனால் அவரை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுங்கள் என்று கூறுகிறாள்.
மனைவி பேச்சை கேட்ட அவன், தந்தையை தான, தர்மம் செய்வதைத் தடுத்து பார்த்தான். முடியாமல் போகவே சொத்துக்களை எல்லாம் பிடிங்கிக் கொண்டு தந்தையை விரட்டிவிட்டான்.

யாரிடம் யாசிக்கக் கூடாது?

பெரும் வணிகராக இருந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவரிடம் பொருளுதவி பெற்றவர்கள் அன்பு காட்டி ஆதரிக்க முன்வந்தார்கள். அதை அந்த வணிகர் மறுத்துவிட்டு, தன்னால் முடிந்த உழைப்பை செலுத்தி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.
தந்தையை விரட்டிவிட்ட மகன் வீட்டைத் தேடி, யார் வந்து கேட்டாலும், இப்போது என்னிடம் உங்களுக்கு கொடுப்பதற்கான வசதி என்னிடம் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவான்.
ஒரு நாள் வயது முதிர்ந்த ஒருவர் பசி தாளாது அந்த வணிகனின் இல்லத்தின் வாயிலில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அந்த வணிகனின் தந்தை, அவரை பார்த்து ஏன் இந்த வீட்டு வாசலில் நிற்கிறீர்கள் என்று கேட்டார்.
நான் ஆதரவற்றவன். பசி தாளாது இந்த வணிகரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் என்றார் அந்த முதியவர்.


இதைக் கேட்ட வணிகனின் தந்தை, என்னுடன் வாருங்கள். என்னிடம் இருக்கும் உணவை தருகிறேன். நீங்கள் இந்த வீட்டு வாயிலில் நிற்க வேண்டாம்.
இந்த இல்லம் முழுவதும் செல்வம் நிறைந்திருந்தாலும், அங்கு வசிப்பவர்கள் மனம் வெறுமையாய் இருக்கிறது. அதனால் அவர்களும் நம்மைப் போல் யாசிப்பவர்கள்தான் என்று சொல்லி அந்த முதியவரை தன் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
இதைத்தான் திருவள்ளுவர்


இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

(குறள் – 1067)


என்று தன் பாடலில் கூறுகிறார்.


தன்னுடைய கையில் உள்ளதை மறைத்து இல்லை என்பவர்களிடம் போய் யாசிக்க வேண்டாம் என்று யாசிப்போரிடமெல்லாம் கையேந்தி யாசிக்கிறேன் என்கிறார் திருவள்ளுவர்.

சிறந்த தானம் எது?-திருக்குறள் கதை 18

எச்சரிக்கை ஏகாம்பரம் ஒரு நிமிட விடியோ

தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை

சிறிய தவறு கற்றுத் தந்த பாடம் என்ற இந்த சிறுகதை பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், பள்ளிக் குழந்தைகளும் படிக்க வேண்டிய ஒன்று.

கீதாவிடம் காணப்பட்ட பழக்கம்

கீதா படிப்பில் ஆர்வமுடைய சிறுமி. அவளுடைய பெற்றோரும் அவளிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அவளுடைய தாயார் அதிக செல்லம் கொடுப்பதும் உண்டு.

இப்படிப்பட்ட அந்த சிறுமியிடம், ஒரு தவறான பழக்கம் தொற்றிக் கொண்டிருந்தது. அவள் பள்ளியில் பயிலும் சக தோழிகளின் புதிய பென்சில்கள், ரப்பர் போன்றவற்றை அவர்களுக்கு தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்து விடுவாள். இது தவறு என்பதை அவள் உணரவில்லை.

ஒரு நாள் அம்மாவுக்கு, அலுவலகத்தில் பரிசாகத் தந்திருந்த வெள்ளிப் பேனாவை பார்த்துவிட்டாள். அம்மா… இன்னைக்கு ஒரு நாள் அந்த பேனாவை எடுத்துச் சென்று வருகிறேனே என்று கேட்டாள்.

அது விலை உயர்ந்தது என்பதோடு, தன்னுடைய பணியை பாராட்டு தரப்பட்ட பரிசு மகளே… எடுத்துச் சென்றுவிட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் சரியா.. என்று அம்மா பீடிகை போட்டு அந்த பேனாவை கீதாவிடம் கொடுத்தாள்.

பள்ளியில் தோழிகளிடம் அந்த பேனாவை காட்டி, மிக விலை உயர்ந்த பேனா இது. என் அம்மாவுக்கு பரிசாக கிடைத்தது என்று பெருமையாக சொல்லி காண்பித்துவிட்டு புத்தகப் பையில் பத்திரப்படுத்தி வைத்தாள்.

அவள் வீட்டுக்கு வந்ததும் பேனாவை அம்மாவிடம் கொடுக்க மறந்துபோனாள். அம்மாவுக்கும் மறுநாள் காலை கீதா பள்ளிக்கு புறப்படும்போதுதான் தன்னுடைய மகளிடம் வெள்ளிப் பேனாவை கொடுத்தது ஞாபகம் வந்தது.

உடனை அவளிடம் நேற்று நான் கொடுத்த பேனாவை கொடு என்றாள் அம்மா. இதோம்மா… என்று புத்தகப் பையில் கையை விட்ட அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதிர்ச்சியில் கீதா

புத்தகப் பையில் உள்ள புத்தகங்கள், பேனா, பென்சில் எல்லாவற்றையும் கொட்டி தேடினாள் கீதா. ஏமாற்றமே மிஞ்சியது.

மகள் பள்ளிக்கு போவது கெட்டுப் போய்விடும் என்பதால், சரி… வீட்டில் வைத்திருக்காயா என்று பார்க்கிறேன். எந்த பொருளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும் பழக்கமே இல்லை. முதலில் நீ பள்ளிக்கு புறப்பட்டு போ என்று கோபமாக சொன்னாள் அம்மா.

எப்போதும் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் அவள், அம்மா திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டாள்.

அம்மா வீட்டில் கீதா பயன்படுத்திய மேஜை டிராயரை திறந்து அதில் பேனா இருக்கிறதா என்று தேடியபோது, விதவிதமான புதிய பென்சில்கள், ரப்பர்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மகள் தவறு செய்திருக்கிறாள் என்பதை அம்மா உணர்ந்தாள்.

மாலையில் வீடு திரும்பிய கீதாவிடம், அந்த பென்சில்கள், ரப்பர்களை காட்டினாள். இதெல்லாம் நான் வாங்கித் தந்தவையாக தெரியவில்லை. நீ ஏதோ தவறு செய்திருக்கிறாய் என்றாள் அம்மா.

அம்மாவின் கோபப் பார்வையை பார்த்த கீதா, தயக்கத்தோடு, இவையெல்லாம் என் தோழிகளுடையது. சும்மா ஒரு ஜாலிக்காக… அவர்களுக்கு தெரியாமல் நான் எடுத்து வந்தவை என்றாள்.

அம்மாவின் அறிவுரை

மகள் ஒருபுறம் தவறு செய்திருக்கிறாள் என்பதோடு மற்றொருபுறம் உண்மையை மறைக்காமல் சொன்னாளே என்ற காரணத்தால், அவளுக்கு ஆத்திரப்படாமல் அறிவுரை வழங்கினாள்.

கீதா உனக்கு அன்பான அப்பாவும், அம்மாவும் இருக்கிறோம். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வாங்கித் தருகிறோம்.

ஆனால் நீ ஜாலிக்காக ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இது மன்னிக்கக் கூடிய விஷயம் அல்ல. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன்னுடைய எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.

தோழியின் கதையை சொன்ன அம்மா

உனக்கு நான் நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன் கேள். என்னுடைய பள்ளித் தோழி ஒருத்திக்கு இதேபோன்ற பழக்கம் இருந்தது.

பல நேரங்களில் அப்படி திருடிய பொருளை என்னிடம் கொண்டு வந்து காட்சி, சில தோழிகளின் பெயர்களைச் சொல்லி சுட்டுட்டு வந்துட்டேன் என்பாள். அப்போது அவளை கண்டிப்பேன்.

நாங்கள் கல்லூரிகளில் சேர்ந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனோம். அங்கே ஒரு அழகான விலை மதிப்புமிக்க ஹேர் கிளிப்பை பார்த்திருக்கிறாள்.

அதை அவள் அதை எடுத்து ஆடைக்குள் மறைத்துக் கொண்டாள். இது எனக்குத் தெரியாது. இருவரும் நாங்கள் வாங்கிய பொருள்களை பில் செய்தோம்.

அப்போது பெண் ஊழியர் ஒருவர், என் தோழியை கொஞ்சம் வருமாறு அழைத்து தனி அறைக்கு சென்றார். இதைக் கண்ட எனக்கு ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர முடிந்தது.

சில நிமிடங்களில் நானும் அந்த இடத்துக்கு சென்றபோது அந்த பெண் ஊழியர் என் தோழியை அட்வைஸ் செய்வதையும், அவள் அவமானம் தாளாமல் அழுதுகொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ளவர்கள் நாகரீகமாக நடந்துகொண்டதால் அவர் திருட்டு பழிக்கு ஆளாகி பொதுவெளியில் அவமானப்படுதில் இருந்து தப்பித்தாள்.

பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டா உன் வாழ்க்கை வீணா போயிடும். திருட்டு பழிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற நிலை என் மகளுக்கு வரவேண்டுமா? என்று கேள்வியை எழுப்பினாள் அம்மா.

திரும்பக் கிடைத்த வெள்ளிப் பேனா

தவறை உணர்ந்து அழுத கீதா, இனிமேல் தவறு செய்ய மாட்டேன் அம்மா என்று மன்னிப்பு கேட்டாள்.

நாளைக்கே நீ, இந்த பொருள்களை உரிய தோழிகளிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு வர வேண்டும் சரியா? என்றாள் அம்மா.

சரி என்று தலையாட்டிய கீதா, மறுநாள் அம்மா சொன்னபடி, தோழிகளிடம் தான் எடுத்த பென்சில்கள், ரப்பர்களை கொடுத்து மன்னிப்பு கேட்டாள்.

தோழிகளில் ஒருத்தி அப்போது கீதாவிடம் வந்து, நானும் தவறு செய்துவிட்டேன் கீதா. என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது புத்தகப் பையில் வைத்திருந்த வெள்ளப் பேனாவை கீதாவிடம் தந்தாள்.

காணாமல் போன விலை உயர்ந்த அம்மாவின் பொருள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி கீதாவுக்கு.

பள்ளி விட்டதும், ஓடோடி வந்து அம்மாவிடம், அந்த வெள்ளிப் பேனாவை நீட்டி, பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னாள் கீதா.

துறவரம் பூண்ட வட்டிக் கடை வைத்தி

வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் செடிகளை வளர்க்கலாமே

வயநாடு நிலச்சரிவு: காரணம் என்ன?

சென்னை: நாட்டில் நடந்த இயற்கை பேரழிவுகளில் மிக மோசமானதாக வயநாடு நிலச்சரிவு பேசப்படுகிறது இந்த நிலச்சரிவின்போது ஏராளமானவர்கள் மண்ணில் உயிரோடு புதையுண்டது கேரள மாநிலத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

நிலச்சரிவு

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக் கிராமங்களில் தொடர் மழையை அடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து பயங்கர நிலச் சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் ஏராளமானவர்கள் புதையுண்டு போனார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
மண்ணில் புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்து மத்திய படைகளுடன் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 6 நாள் மீட்புப் பணியில் இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

150-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐயும் கடக்கும் என்று அரசு நிர்வாகம் கணித்திருக்கிறது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க பல்வேறு தரப்பிலும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு இதை தேசிய பேரிடராக அறிவித்திருக்கிறது.

இயற்கையில் கேரள மாநிலம்

கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி நீண்டு அமைந்திருக்கும் மாநிலம். இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதியும், புவியியல் ரீதியாக நிலச்சரிவை சந்திக்கும் அபாயமிக்க பகுதியாக உள்ளது.
கேரள மாநிலத்துக்கு அதிக மழையை தருவதும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைதான். அரபிக் கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றை நீண்டு வளர்ந்திருக்கக் கூடிய இந்த மலைத் தொடர் தடுத்து நிறுத்தி கேரள மாநிலத்துக்கு மழையை அளிக்கிறது.
உலகின் பல்லுயிர் வளம் நிறைந்த எட்டு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக இருக்கிறது.

தொடக்கமும் முடிவும்

இந்த மலைத்தொடர் மகாராஷ்டிரா, குஜராத் எல்லையில் உள்ள தபி ஆற்றுக்கு தெற்கே தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக நீண்டு வளர்ந்து கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.
மராட்டிய மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் இந்த மலைத் தொடரை சாயத்ரி மலைத் தொடர் என்று அழைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நீலகிரி மலைத் தொடர், ஆனைமலைத் தொடர் என்று அழைக்கிறார்கள். கேரளாவில் மலபார், அகத்திய மலை என்று அழைக்கிறார்கள்.

ஆறுகள் பிறக்குமிடம்

இந்த மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1,600 கி.மீட்டர், சராசரியாக இதன் உயரம் 900 மீட்டர்கள் வரை இருக்கிறது.
இந்த மலைத் தொடர் நாட்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது.
கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிறுவாணி, பவானி, நொய்யல் நதிகள் இந்த மலைத் தொடரில்தான் பிறக்கின்றன.
பெரிதும், சிறிதுமான பல ஆறுகள் மலைத் தொடரில் உருவாகி மேற்கு நோக்கி பாய்ந்து கேரள மாநிலத்தை வளமாக்கி அரபிக் கடலில் கலக்கிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள்

இந்த மலைத் தொடரில் வயநாடு மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் 3 கிராமங்கள்தான் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச் சரிவால் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றன.
இதே பகுதிகளில் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளிலும் நிலச் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அப்போது இத்தகைய பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இம்முறை ஏற்பட்ட நிலச்சரிவின்போது யாரும் சுதாரிக்க வாய்ப்பில்லாமல் இரவு நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது.

தொன்மையான மலைப் பகுதி

வயநாடு மலைகளில் புதிய கற்கால நாகரிகச் சான்றுகள் காணப்படும் இடமாக இருக்கின்றன. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிந்தைய கற்கால ஓவியக் கோடுகள் பாறைகளில் காணப்படுகின்றன.
அதனால் இந்த மலைப் பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாகவே பழங்குடியின மக்கள் வசித்து வந்திருப்பதும் உறுதியாகிறது.
இயற்கையில் இப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை மிருதுவானது. இதனால் மலைப் பகுதிகளில் பல இடங்களில் இறுக்கமின்றி தளர்வாகவே காட்சி தருகின்றன.
இருப்பினும் இங்கு இயற்கையில் வளரும் நீண்டு உயர்ந்து வளரும் மரங்கள் மிக ஆழமாக வேர்களை ஊன்றி அந்த தளர்வான மண்ணை இறுக்கமாக பிடித்துக் கொள்வதால் நிலச்சரிவு கடந்த தலைமுறை வரை தடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

கட்டடங்கள் அதிகரிப்பு

இந்த பகுதிகளில் காலப்போக்கில் கடந்த ஒரு தலைமுறையாக கட்டுமானங்கள், வீடுகள், கடைகள் என அதிகரித்து வந்திருக்கின்றன.
அத்துடன் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை செய்யும் நிலையில் மரங்களை அகற்றம் செய்தல், நீர்வழிப் பாதையை மாற்றி அமைத்தல் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
போதைக்குறைக்கு பல பயிர் சாகுபடி முறை கைவிடப்பட்டு, ஒற்றை பயிர் சாகுபடி முறை மலைப் பகுதிகளில் புகுத்தப்பட்டிருக்கிறது.

200-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் பதிவு

வயநாடு மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலகத்தின் பதிவுகள் தரும் தகவல் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது.
2018 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையிலான காலத்தில் மட்டும் 200 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்திருப்பவை.
மக்கள் நடமாட்டம் இல்லாத, மலை உச்சிப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் இதில் கணக்கில் கொள்ளவில்லை.

பெருத்த மழை பாதிப்பு

வயநாடு இயற்கையாகவே ஈரப்பதம் நிறைந்த குளுமையான சூழலை கொண்டது. இதனால் எப்போதுமே நிலம் ஈரப்பதமாகவே இருக்கும். இதனால் ஏற்கெனவே மிருதுவாக இருக்கக் கூடிய மண்ணும் பாறைகளுடன் இறுகியிருக்காமல் தளர்வாக காணப்படும் நிலை உண்டு.
இப்படிப்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் பெய்யக்கூடிய மழை ஒரு சில மணி நேரங்களில் பெய்யும்போது, மண்ணின் தளர்ச்சியால் மிக வேகமாக அவை மழைநீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மண்ணின் இறுக்கமோ, மரங்களின் பிடிமானமோ இல்லாத பாறைகளும் இந்த மழையில் உருண்டோடி நிலச்சரிவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலச்சரிவின் பாதிப்பு

வழக்கமாக ஏற்படும் நிலச்சரிவை காட்டிலும் இம்முறை ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு சில கிலோ மீட்டர் வரை சரிவானப் பகுதிகளை நோக்கி நீண்டிருக்கிறது. இதை DEBRIS FLOW TYPE நிலச்சரிவு என்று சொல்கிறார்கள்.
இதனால்தான் ஒருசில நிமிடங்களில் பெருவெள்ளத்துடன் ஏற்பட்ட நிலச்சரிவு ஏராளமான வீடுகளையும், கட்டடங்களையும் மூடியிருக்கிறது. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கட்டடங்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பேராசிரியர் மாதவ் காட்கில் குழு ஆய்வு

மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அப்படி கண்டறியப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிவதற்காக, மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010-ஆம் ஆண்டில் நியமித்தது.
இக்குழுவினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதையும் ஓராண்டுக்கு மேல் ஆய்வு செய்தனர்.

அறிக்கை வெளியீடு

அதைத் தொடர்ந்து அக்குழு ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த குழுவின் அறிக்கையை 2012 மே மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டது.
இது அறிக்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக டாக்டர் கத்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழ்ந்த 41 சதவீதப் பகுதிகளில் 37 சதவீதப் பகுதி இயற்கை பேரிடர்களில் பாதிக்கும் அபாயம் உடையதாக வரையறை செய்யப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பேரிடர் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புதிய குவாரிகளுக்கு தடை செய்ய வேண்டும். கட்டுமானங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
புதிய விவசாயப் பகுதிகளை விஸ்தரிக்கக் கூடாது. புதிய குடியிருப்புகளைக் கட்ட கூடாது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யக் கூடாது.
மண் அரிப்புக்கு காரணமாக இருக்கும் ஒற்றை பயிர் சாகுபடி முறையை கைவிட வேண்டும்.
காட்டு நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது, நதிகளின் போக்கை திசை திருப்புவது கூடாது. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்கு மலைத் தொடரில அனுமதிக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

கண்டுகொள்ளாத மாநிலங்கள்

பழங்குடியின மக்களை காடுகளில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மூலம் காடுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைகள் அளிக்கப்பட்டு 13 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் கேரள மாநிலமும், கர்நாடக மாநிலமும் அவற்றை ஏற்கவில்லை.

நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது ஏன்

ஒருசில பகுதிகள் மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல என்று அறிவிக்கப்படும் நிலையில், காலம் காலமாக ஒரு இடத்தில் வசித்து வரும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து போகும். இதனால் அவர்களுக்கு அரசு நிர்வாகம் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் வேறொரு இடத்தில் செய்து தர வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.
இதனால் இந்த நடைமுறையை எந்த அரசு நிர்வாகமும் செய்ய முன்வரவில்லை.
வளர்ச்சித் திட்டங்கள்
மக்கள் வசிப்பிடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசு நிர்வாகத்துக்கு இருக்கிறது. இந்த சூழலில் ஒருசில விதிமுறைகளை பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

தேவை எதிர்கால செயல் திட்டங்கள்

தற்போது நடந்திருக்கும் பேரிடரை மனதில் கொண்டு, மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஆபத்து நிறைந்த பகுதிகளில், மிக நெருக்கமாக, ஆழ்ந்து வேரூன்றக் கூடிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இதை சாயில் பயோ இன்ஜினியரிங் என்று அழைக்கிறார்கள்.
மலைப் பகுதிகளில் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அந்த நீரை உடனுக்குள் குழாய்கள் வழியாக நிலப் பகுதிக்கு வெளியேற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களில் குவாரிகள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.
ஒற்றை சாகுபடி முறையை கைவிட்டு, நிலச்சரிவு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலான பயிர் மேலாண்மையை செய்யத் தொடங்க வேண்டும்.
மலைச் சரிவால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அகலமான தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும்.
சாலை மேம்பாட்டுப் பணிகளில் மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களை தவிர்க்க வேண்டும். ஆய்வுக் குழு பரிந்துரைகளில் 70 சதவீதமாவது கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களால் நிறைவேற்றப்பட்டாலே மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

வயநாடு நிலச்சரிவுக்கான காரணம் – விடியோ செய்தி

தானத்தில் சிறந்தது எது? – திருக்குறள் கதைகள் 18

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 18) தானத்தில் சிறந்தது எது? என்பது குறித்த விளக்கக் கதையும், அதற்கான திருக்குறளையும் கொண்டிருக்கிறது.

தானத்தில் சிறந்தது எது?

ஒருவனின் புகழ் பார்சுவரும், விமலரும் தர்மரிடம் கர்ணனின் நிலைத்தப் புகழுக்குக் காரணம் தானமா? தர்மமா? அல்லது தானத்தில் சிறந்தது எது எனக் கேட்டனர்.
தர்மர் பேசலானார்,

கர்ணனுடைய புகழுக்குக் காரணம் தானம்தான். ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இடைவிடாமல் கர்ணனின் தானத்தை பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தார்.
இதனால் அர்ஜுனனுக்கு கோபம் வந்துவிட்டது. கர்ணனை விட தர்ம ராஜனே சிறந்தவர் என்று சொன்னான்.

மாறுவேடத்தில் கிருஷ்ணர்

அர்ஜுனனுக்கு தானத்தின் சிறப்பையும், கர்ணனின் கொடையையும் அறியச் செய்ய விரும்பிய கிருஷ்ணர், ஒரு நாள் என்னோடு நீயும் வா என்று அழைத்தார்.
இருவரும் அந்தணர் வேடம் பூண்டு தர்மரின் அரண்மனைக்குச் சென்றனர். கிருஷ்ணர் தர்ம ராஜனிடம் எங்களுக்கு 40 கிலோ சந்தன மரம் வேண்டும் என்று கேட்டார்.
வேலையாட்கள் மூலம் தேடி எடுத்து வரச் செய்தார். அவர்கள் தொடர் மழை பெய்து வருவதால் காய்ந்த மரக்கட்டைகள் கிடைக்கவில்லை என்றனர்.


கிருஷ்ணரிடம் தர்மர் தனக்கு இரண்டு கிலோவுக்கு மேல் சந்தனக்கட்டை கிடைக்கவில்லை. வேறு ஏதேனும் பொருள் வேண்டுமெனில் கேட்டால் தருகிறேன் என்றார்.
கிருஷ்ணரோ எமக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அர்ஜுனனோடு புறப்பட்டார்.

கர்ணன் அரண்மனையில்

இருவரும் கர்ணனின் அரண்மனைக்கு மாறு வேடத்தில் சென்றனர். அந்தணர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர் தர்ம ராஜனிடம் கேட்டது போலவே கர்ணனிடமும் சந்தனக் கட்டையை கேட்டார்.
கர்ணன் உடனே அருகில் இருக்கும் ஆசனத்தைக் காட்டி அமர்க என்றான்.
அவனுக்கும் 40 கிலோ அளவுக்கு நன்கு காய்ந்த சந்தனக் கட்டைகள் அப்போது கிடைக்கவில்லை. உடனே அந்த அரண்மனையை அலங்கரித்த கதவுகள், தூண்களை சிதைத்து அந்த அந்தணர் கேட்ட சந்தனக் கட்டைகளை எடைக் குறையாமல் கொடுத்தான்.
அப்போது கர்ணனைப் பார்த்த அந்த அந்தணர், “காய்ந்த மரக்கட்டைளுக்காகவா இவ்வளவு விலை மிகுந்த பொருட்களை அழித்தீர்கள்?” எனக் கேட்டார்.

வாழ்த்திய கிருஷ்ணர்

கர்ணன், அவரிடம் கைகளைக் கூப்பி வணங்கி இன்று நன்றாக மழை பொழிகிறது. இதனால் நீங்கள் கேட்கும் காய்ந்த மரக்கட்டைகள் கிடைக்காது.
“காய்ந்த சந்தன மரக்கட்டைகளை தேடி அலைந்தால் அதிக நேரமாகிவிடும். அதற்காக உங்களை காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படும். தூண்கள், கட்டில்கள் ஆகியவற்றை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். அதனால் அவற்றை அழித்தேன்”, என்றான்.
அது மட்டுமல்ல, “என்னிடம் வந்து கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்பதை தரவில்லையென்றால் அவர்கள் அடையும் துன்பம் என் இதயத்தை விட்டு நீங்காது” என்றான்.
கர்ணனை, இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறி விடைப் பெற்று திரும்பினார்.

கேள்வி கேட்ட கிருஷ்ணர்

அர்ஜுனனை நோக்கி, இப்போது சொல் தானத்தில் சிறந்தவன் தர்ம ராஜனா? கர்ணனா? என்று கேள்வி எழுப்பினார் கிருஷ்ணர்.
அர்ஜுனன் மௌனம் காத்தான்.
தர்ம ராஜனிடமும் இந்தப் பொருள்கள் இருந்தன. ஆனால் தானத்துக்காக எதையும் அழிக்க விரும்பவில்லை. அத்துடன் அதற்கான மனமும் வரவில்லை.
கர்ணனோ, தானத்துக்கு முன்பு விலை உயர்ந்த பொருள்கள் இந்த உலகில் இல்லை என்பது அவனுடைய முடிவு. அதனால் விலை மதிக்கத்தக்க பொருள்களை அழித்து விறகாகத் தர முன் வந்தான். அதனால் தான் கர்ணனைப் புகழ்ந்தேன் என்றார்.
இதைத்தான் திருவள்ளுவர்,

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

(குறள் – 232)


தன்னலமற்ற மனப்பான்மையோடு பொருளை அறவழியில் தருவோருக்கு நிலைத்தப் புகழ் உண்டாகும் என்பதுதான் இதன் பொருள்.
அதாவது, உலகத்தார் புகழ்ந்து பேசுவன எல்லாம் இரப்பார்க்கு ஒன்று தருபவர் மேல் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறுகிறார்.

தானத்தில் சிறந்தது எது? என்பதை இன்றைக்கும் கர்ணனுடைய புகழ் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது என்றர் தர்மர்.

அறத்தில் சிறந்தது எது – திருக்குறள் கதை

எச்சரிக்கை ஏகாம்பரம்

அஞ்ச வேண்டிய நட்பு எது? திருக்குறள் கதை 17

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 17) அஞ்ச வேண்டிய நட்பு எது என்பதை உணர்த்தும் சிறுகதையும், வாள்போல் பகைவரை.. என்ற தொடங்கும் குறட்பா விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

தாத்தாவும் பேரனும்

தாத்தா எப்போதும்போல் பேரனை அழைத்தார்.

ஆனந்தா… ஆனந்தா..

ஏன் கூப்பிட்டீங்க தாத்தா? என்ற படியே ஆனந்தன் அவர் அருகே வந்தான்.

ஆனந்தா.. தினமும் ஒரு திருக்குறள் கதை கேட்பாயல்லவா… நான் இன்றைக்கு நீ கேட்பதற்கு முன்பே ஒரு கதையை சொல்லத்தான் அழைத்தேன். இன்றைக்கு அஞ்ச வேண்டிய நட்பு எது என்பதை உனக்கு சொல்கிறேன் என்றார்.

பகைவர் யார் தெரியுமா?

முதலில் இந்த திருக்குறளையும் அதன் அர்த்தத்தையும் பார்க்கலாம். சரிதானே… என்றார் தாத்தா.

சரி… சொல்லுங்க என்றான் ஆனந்தன்.

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு

(குறள் – 882)

வாள் இருக்கிறதில்லையா…

ஆமாம்… அந்தக் காலத்தில் சண்டைக்கு பயன்பட்டது வாள். இப்போது நீண்ட கத்தியாக வைத்துக் கொள்ளலாம் சரியா… தாத்தா..

ஆமாம்.

வெளியில் தெரியும் ஆபத்தான ஆயுதம். அதேபோல் நமக்கு தெரிந்த ஆபத்தான பகைவர்களைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.

ஆனால் அன்பு காட்டுவதாக நம் உறவுகள் போல் உட்பகை கொண்டிருப்பவர்களின் நட்பு நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

சீவக சிந்தாமணியில் ஒரு கதை

சமண இலக்கியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வரும் சச்சந்தன், கட்டியங்காரனே இதற்குச் சான்று.

ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தை ஆண்டு வந்தவன்தான் சச்சந்தன்.
அவனுடைய வீரத்தைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்கள் அவனோடு போரிடுவதைத் தவிர்த்தார்கள்.

சில காலம் சென்ற பிறகு, நாட்டை ஆளும் பொறுப்பில் அக்கறையின்றி அரசியுடன் காலம் கழித்து வந்தான்.

அவனுடைய அமைச்சர்களுள் ஒருவனான கட்டியங்காரன் அரசனிடம் நல்லவன்போல் நடித்து நெருங்கிய நட்பை வைத்திருந்தான்.

இந்த நிலையில், தனக்காக சில காலம் அரசப் பொறுப்பை கவனித்துக் கொள்ள அந்த கட்டியங்காரனை நியமித்தான்.

கட்டியங்காரன் இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி, சச்சந்தனைக் கொன்று தானே அரசனாவது என முடிவுக்கு வந்தான்.

அதனால் அவன் சச்சந்தனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினான். திடீரென ஒரு நாள் அரண்மனையை அவன் படையுடன் சூழ்ந்தான். தனித்து விடப்பட்ட சச்சந்தன் அவனோடு போரிட்டு மாண்டான்.

இப்போது புரிகிறதா? அண்டை நாட்டு மன்னனைக் கண்டு அஞ்சாமல் ஆட்சி புரிந்த ஒருவன், தன்னுடைய விசுவாசமான அமைச்சர்களில் ஒருவனாக நடித்த ஒருவனை நம்பி ஆட்சியை ஒப்படைத்து கடைசியில் அவனால் வீழ்த்தப்பட்டதை என்றார் தாத்தா.

தாத்தா… புரிந்துவிட்டது. நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று.

போய் வருகிறேன் தாத்தா என்று வெளியில் காற்றென பறந்தான் ஆனந்தன்.

அறம் செய்ய விரும்பு – திருக்குறள் கதை 17

தம்பதியின் காமெடி கதை

ஞான அக்னி அழிக்கும் காமாக்னி

வெ நாராயணமூர்த்தி

காமாக்னியை அழிக்கும் ஞான அக்னி என்பது உங்களுக்கு புதுமையாக இருக்கிறதல்லவா.. வாருங்கள் இது என்னவென்று பார்க்கலாம்.

ஒரு அக்னியை இன்னொரு அக்னியால்தான் அழிக்க முடியுமா? முடியும்!

ஆம் நண்பர்களே, ஒரு அக்னியைக் கொண்டுதான் இன்னொரு அக்னியை
அழிக்க முடியும். வேதங்கள் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கின்றன!

அக்னிக்கு ஏன் முக்கியத்துவம்?

பண்டைய காலத்தில், மனித வாழ்க்கையில் நெருப்புக்கு மிகுந்த
முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

நெருப்பை குறிக்க பல சொற்றொடர்கள் இருந்து வந்துள்ளதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்த காலத்தில், நெருப்பை அதன் பயன்பாட்டின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்ப அக்னி, தகன, ஜ்வாலன, சப்தார்சி, பாவக, ஜாதேவேதஸ், ஹுடாசன, வாஹினி போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

ரிக் வேதம், அக்னியை ‘ஓம் அக்னிம்லே புரோஹிதம்’ என்று வர்ணிக்கிறது.
‘யக்ஞத்தை நடத்தும் புருஷர்களுக்கு ஹிதமாக இருக்கும் அக்னியே. உனக்கு அளிக்கப்படும் யக்ஞ வஸ்துக்களை இவர்கள் சார்பாக பரமனிடம் கொண்டு சேர்’, என்பதுதான் இதன் பொருள்.

ஸ்ரீமத் பகவத் கீதையில்

ஸ்ரீமத்பகவத் கீதையில் நெருப்புக்கு என்று தனி மரியாதை தரப்படுகிறது.
அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானாக்னி என்று வருணிக்கப்படுகிறது.

இச்சைகளால் உருவாகும் காமாக்னி நம் ஐம்புலன்களால் உருவாவது.

ஆசை, மோகம், ஏக்கம், சிற்றின்பதாகம் போன்றவைகளை உள்ளடக்கியது.  அந்த ‘காமாக்னி’யை அழிக்கவல்ல ஒரே மாற்று ஞானாக்னி என்று கீதை உபதேசிக்கிறது.

ஐம்புலன்களின் வேட்கைகளுக்கு பலியாகும் நபர்களுக்கு காமாக்னி
கொழுந்துவிட்டு எரிக்கிறது.

இதை சாதாரணமாக அணைக்கவோ, தணிக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்:

எளிதில் அணைக்க முடியாத அக்னி

ஆவ்ருதம் ஞானமேதென, ஞானினோ நித்யவாரீன

காம ரூபெய கௌண்டேய, துஷ்பூரே அனலேனச

‘காமம் என்கிற அணைக்கமுடியாத, தணிக்கமுடியாத இச்சைகளால் உன்னுடைய உண்மையான ஞானம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

உனக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்த காமாக்னிதான் உன் முதல் எதிரி’ என்பது இந்தப் பாடலின் பொருள்.

காம ரூபமாக கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை ‘அனலம்’ என்கிறது இந்த
ஸ்லோகம்.

அலம் என்றால் ‘போதும்’. அனலம் என்றால் போதாது. எப்போதும்
தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக தனக்கு வேண்டிய எரிபொருள்
(இச்சைகள்) தேடி அலையும் விசித்திரமான நெருப்புதான் இந்த காமாக்னி.

தணிக்கமுடியாத தாகம் கொண்ட கொடூர அக்னி என்பதைதான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படி எச்சரிக்கிறார்.

வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம்

கொக்கின் சொர்க்கம் எது?

காமாக்னி குணம்

‘அனலம்’ என்கிற இந்த வார்த்தை ‘தணியாத, தணிக்க வழிவிடாத நெருப்பை’
வர்ணிக்கும் ஒரு அழகான சொல். கொழுந்து அணைந்தாலும், தன்னுள் எப்போதும்
தணலை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நெருப்பு இது.

எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்துகொண்டு மீண்டும் எரியக் கூடிய வகையில் எரிபொருளான இச்சைகளை தூண்டி, தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காமாக்னி இது.

நம்முடைய இச்சைகளைப் பற்றி இதை விடக் கடுமையாக எடுத்துச் சொல்ல முடியாது.

எவ்வளவு முறை புலன்வழி இச்சைகளைப் பூர்த்தி செய்துக் கொண்டாலும் மேலும் மேலும் தொடர்ந்து நம்மை இச்சைபடத் தூண்டும் தன்மை கொண்டது காமாக்னி.

ஒருபோதும் திருப்தி தராதது. பழைய இச்சைகள் தீரும் முன்னரே புதிய இச்சைகளை வரிசையில் தயார் நிலையில் நிற்க வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது.

அறுசுவை உணவை உண்டு பசி என்கிற இச்சையை தற்காலிகமாக தீர்த்துக்
கொண்டாலும், இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் பசி தலை தூக்கி நம்மை உணவை
தேடச் சொல்கிறது அல்லவா?

அதைப் போலத்தான் அனைத்து வகையான இச்சைகளும். ஒரு முறை ஓரளவு தீர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பல வகையான இச்சைகளை நாடும் எண்ணங்களை தூண்டச் செய்கிறது.

மிகப் பெரிய சவால்

எவ்வளவு முயன்றாலும் காமாக்னியை தற்காலிகமாகவே நாம் திருப்திப்படுத்த
முடிகிறது. அதன் தழல் அடுத்த இச்சைகளைக் கொண்டு தூண்டப்பட்டு மீண்டும் கொழுந்து விட்டு எரியக் காத்திருக்கிறது.

இந்த காமாக்னிக்கு எரிபொருள் தந்து அந்த குறிப்பிட்ட இச்சையை தற்காலிகமாகப் அவ்வப்போது பூர்த்தி செய்துக் கொண்டாலும் இதிலிருந்து விடுதலை பெறுவதே பெரும்பாடு. இது நம் வாழ்கையின் மிகப் பெரிய சவால்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சில அத்தியாவசிய
தேவைகளைப் பூர்த்தி செய்யும் இச்சைகள் வேறு, தற்காலிக சந்தோஷத்துக்காக
ஏற்படுத்திக் கொள்ளும் இச்சைகள் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முக்கியமில்லாத இச்சைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் பெரிய பிரச்னை ஒன்றும்
ஏற்படுவதில்லை.

ஆனால் முக்கியம் என்று கருதி அது பூர்த்தி செய்யாமல் போகும்போது காமாக்னியில் மறைந்திருக்கும் தழல் உயிர் கொண்டு அந்த இச்சையை மேலும் தூண்டுகிறது. அந்த நேரத்தில் அந்த இச்சைக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம்.

இந்த அடிமைத்தனத்திலிருந்து எப்படி மீள்வது?

இந்த காமாக்னியை எப்படி அழிப்பது?

சரி, முழுமையாக அழித்துவிடலாம் என்று அதிகமாக பல்வேறு இச்சைகளை எரிபொருளாக அளித்தாலும் தீக்கொழுந்து அதிகமாகி, சிறிது நேரத்தில் அடங்கினாலும், அடித்தளத்தில் சதா விழித்துக்கொண்டிருக்கும் தழல் அடங்குவதில்லையே!

இச்சைகளில் அதிக நாட்டம் இருக்கும் நபர்களுக்கு இந்த நிலை பெரும் பாடாக
அமைவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

வேதாந்தம் என்ன சொல்கிறது?

இத்தகைய நபர்களுக்கு முக்கியம் என்பதற்கும், சந்தோஷத்துக்கும் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறது.

தொடர்ந்து அனுபவிக்கும் இச்சைகள் முக்கியமாக இல்லாவிட்டாலும் சிறிது காலத்தில்
முக்கியமாகி’ விடுகிறது. இதுவே நாளடைவில் பழக்காமாகி சதா இச்சைகளை
தொடர்ந்து நாடுகின்றனர் இவர்கள்.

இதைத்தான் ‘போதை’ என்கிறோம். திருப்தி செய்ய முடிவதில்லை. அதை தவிர்க்கவும் முடிவதில்லை.

ஆக, காமாக்னியை அழிக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் காம இச்சைகளுக்கு அடிப்படைக் காரணிகளை இனம் கண்டுகொள்ள
வேண்டும்.

அனைத்து இச்சைகளுக்கு ஆதி காரணம் ‘நம்முடைய அடிப்படை இயல்பை தெரிந்துகொள்ளாத அறியாமை’ என்று ஆணித்தரமாக கூறுகிறது வேதாந்தம்.

ஏன் நிறைவு இல்லை?

நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த உடல், மனம், எண்ணங்கள் கொண்ட
கலவை அல்ல நாம்.

இவைகள் அனைத்தையும் உயிர்விக்கும், ஒளிர்விக்கும் நம் அடிப்படை ஸ்வரூபமான தெய்வீகத்தை அடையாளம் கண்டு உணர்வதுதான் நம் வாழ்க்கைத் தத்துவம் என்பது அனைத்து வேதங்களின் சாராம்ஸம்.

முழு நிறைவும், அமைதியும், ஆனந்தமும் கலந்த ஒரு அதிசயக் கலவையை நாம்
சதா தேடி அலைகிறோம்.

இந்த நிலையை உணரும் வரை நமக்குள் நிறைவு இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இந்த நிறைவில்லா நிலையை பூர்த்தி செய்துகொள்ளவே நாம் மேலும் வேண்டும் என்று தேடுகிறோம்.

அமைதி இல்லை என்று நினைக்கும்போது, ‘குறைந்தபட்சம் இச்சைகளையாவது பூர்த்தி செய்துக் கொண்டால் மட்டுமே ஒரு வகை அமைதி, ஆனந்தம்’ என்ற நிலைக்கு நாம்
தள்ளப்படுகிறோம்.

உண்மை சொரூபம் எது?

நம்முடைய இந்தத் தவறான அணுகுமுறைக்குக் காரணம் என்ன?

நிறைவும், அமைதியும் ஆனந்தமும் வெளி உலகில் இருப்பதாக தவறாக
நினைக்கிறோம்.

அதனால் அவைகளை நம் உடல் மனம் எண்ணங்கள் கொண்ட கலவை வழியாக வெளியே தேடுகிறோம்.

உண்மையில் இவை அனைத்தும் கலந்த தெய்வீகக் கலவையே நம் உண்மை சொரூபம் என்பதை உணராமல்!

ஆன்மீகத்தை, தெய்வீகத்தை தேடி அலையும் சாதாரண மனிதப் பிறவிகள் நாம்
என்று நினைத்துக் கொண்டு அதை வெளியில் தேடுகிறோம்.

உண்மையில் தெய்வீக பிறவிகளான நாம் மனித உருவில் நம் உண்மை சொரூபத்தை உணர முடியாமல் காமாக்னிக்கு இரையாகி தொடர்ந்து சிக்கல்களில் சிக்குண்டுத் தவிக்கிறோம்!

ஞானாக்னி

இச்சை என்கிற காமாக்னி, மாயை வடிவில் நம் உண்மை சொரூபத்தை
மறைத்துள்ளது என்கிறது வேதாந்தம்.

நம் உண்மையான சொரூபத்தை புரிந்துகொள்ளும்போது, இந்த மெய்ஞானம், ஞானாக்னியாக உத்பவித்து காம அக்னியை அழிக்கிறது.

தெய்வீக ஜோதியான இந்த ஞான அக்னி, காமாக்னியில் எரிந்துகொண்டிருக்கும் எரிபொருளை முழுமையாக எரித்து அழித்து விடுகிறது. அப்போது காமத் தழலுக்கு இடமே இல்லாமல் போகிறது.

ஆத்ம ஜோதி

காமாக்னி அழியும்போது, மாயை விலகுகிறது. நமக்குள்ளே மறைந்து
இருக்கும் முழு நிறைவு, பூர்ண அமைதி, எல்லையில்லா ஆனந்தம் (சத் சித் ஆனந்தம்)
ஆகிய மூன்றும் கலந்த கலவையே நாம் என்கிற உண்மை நிலையை உணரமுடிகிறது.
இதுவே ஆத்ம ஞானம்.

‘அந்தர்ஜோதிஹி பஹிர்ஜோதிஹி, பிரத்யக்ஷஜோதிஹி பராபரஹ
ஜோதிர்ஜோதிஹி, ஸ்வயம்ஜோதிஹி, ஆத்மஜோதிஹி ஷிவோஸ்யஹம்’


‘ஸ்வயம்ஜோதியாக, ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியாக விளங்கும் ஆத்மஜோதி, நம்
உள்ளே மறைந்திருக்கும் ஜோதியை உத்பவிக்கச் செய்து, அந்த ஞான ஜோதியை
உலகெலாம் பரவச்செய்து பராபரத்துடன் ஒன்றசெய்யும் சிவம் நான்’ என்று ஞான அக்னியைப்பற்றி, ஸ்ரீசங்கரர் தான் எழுதிய ‘பிரம்ம ஞானாவளி’ என்கிற நூலில்
வர்ணித்துள்ளார்.

ப்ரம்ம ஞானஜோதி

நண்பர்களே, இந்த ஞானத் தழலை பரம்பொருளிடம் வரமாகப் பெற்ற
ரிஷிகளும், ஞானிகளும், மஹாசித்தர்களும், இந்த மானுடம் உய்ய, தங்கள் தீட்சை
வழியாக ஞான அக்னியை தங்களிடம் ஆசீர்வாதம் பெரும் ஒவ்வொரிடமும்
உத்பவிக்கின்றனர்.

இதைத்தான் நம் புராணங்கள் சொல்லுகின்றன. இந்த தெய்வீக பரிமாற்றத்தை
அனுபவிக்கும் வெகு சிலரே இதை உணர்கின்றனர்.

இந்த ஞானாக்னிதான் ‘ப்ரம்ம ஞானஜோதி’. 

அனைத்துக்கும் ஆதியான ப்ரம்ம ஸ்வரூபம் என்பதை உணர்தல். இதுவே பிறவிப் பயன். வாழ்வின் மிக உயர்ந்த நிலை.

தைதீரிய உபநிஷத் குறிப்பிடும் ‘ப்ரம்மவித்’, இதுவே ஆத்மஞானக் கல்வி. இதை வரமாகப் பெறுபவன் அடைவதற்கரிய உயர்நிலையை அடைகிறான். (‘ப்ரம்மவித் அப்நோதி பரம்’).

ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான ப்ரம்மகுருவால் மட்டுமே இத்தகைய
வரத்தை அருளமுடியும். அவரால் மட்டுமே ப்ரம்மஜோதியை உத்பவிக்க முடியும்.

இந்த உண்மைத் தத்துவத்தை விளக்கவே, இந்த உலகின் 13-ஆவது ஜோதிர்லிங்கம்
தமிழ்நாட்டில் சென்னப்பமலையில் உத்பவித்துள்ளது.

காமாக்னியை அழித்து ஞானாக்னியை உணரத் துடிக்கும் அனைவருக்கும் அங்கே அருவநிலையில் ஐக்கியம் கொண்டுள்ள ப்ரம்மகுரு ஒரு கிடைப்பதற்கரிய ஞானப் பொக்கிஷம்.

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா

செந்தூர் திருமாலன்

ஆடிப் பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. ஆடிப் பெருக்கு விழாவை திருமணத் தடை நீக்கும் விழாவாக பெண்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆடிப் பெருக்கை தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது இந்த ஆடி மாதம் என்பதால்தான்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் ஒன்றான ‘ஆடி’ அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. இம்மாதத்தில்தான் உமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தார் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

இதனால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமித்தியரேகைக்கு வடக்கில் சூரீயன் பயணம் செய்கிறார்.

அடுத்து அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்தியரேகைக்கு தெற்கில் தொடங்குகிறார். இக்காலம் தட்சிணாயன புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது.

ஆடி தபசு

இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில்தான். அதை நினைவுகூரும் விதத்தில் ‘ஆடி தபசு’ நிகழ்ச்சி நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதிதேவி புன்னை வனத்தில் தவம் இருந்தார்.

அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணுவும் ஆடி மாத பௌர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர்.

அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன்கோவில். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணம் செய்து கொண்டார்.

அம்பிகை தவம் இருந்து பலனை அடைந்ததால் மக்கள இங்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றி நலம் பெறுகின்றனர்.

பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான் ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்கட்டும் என்று வரம் கொடுத்தார்.

காற்றும் மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியம்மனும், மழையை மாரியம்மனும கட்டுப்படுத்துவதாக ஐதீகம்.

இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடத்தப்படுகிறது.

திருமணத் தடை நீங்க

திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு நல்ல வரண் அமைய வேண்டி கோயிலுக்கு சென்று கூழ் வார்த்து வழிபட்டு வருகின்றனர்.

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சள் பூசிக்குளி’ என்பது பழமொழி.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து அரைத்த மஞ்சளை பூசி குளிப்பதால் சுமங்கலி பெண்களின் மாங்கல்யம் பலம்பெறும் என்பது நம்பிக்கை.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் ‘ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக எம்மை வாழவைக்க வேண்டும் அம்மா சுமங்கலியாக'” என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவியரசர் கண்ணதாசன்.

ஆடிப் பெருக்கு

ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி காவிரித் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரிக்கரையில் இருமருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காவிரியை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்’ நடந்தாய் வாழி காவிரி’ எனக்கூறி வாழ்த்துவார்.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரி பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்துக் கொண்டு கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள்.

கணவனை சென்றடையும் காவிரிக்கு மங்கலப் பொருட்களான மஞ்சள், பனைஓலையால் செய்யப்பட்ட காதோலை , கருகுமணி மாலை , வளையல் , அரிசி, வெல்லம் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

புதுமணத் தம்பதியர்

புதுமணத் தம்பதியர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள்.

பிறகு அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள்.

அதைத் தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சந்நதிகளுக்கு சென்று வழிபடுவார்கள்.

மாங்கல்ய பூஜை

பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலிகயிறு (மஞசள் சரடு) அணிந்து கொள்வார்கள். சிறுவர்கள் சிறிய அளவிலான மரச் சப்பரம் செய்து இழுத்துச் செல்வார்கள்.

திருச்சி, திருவையாறு, ஒகேனக்கல், மேட்டூர், பவானி, கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம், நாகபஞ்சமி பண்டிகைகள் இந்த மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது

ஆடி மாதத்தில் கிராம புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் சுடலை மாடன், அய்யனாரப்பன் , மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூசைகளும், விழாக்களும் விமர்சையாக எடுக்கப்பட்டு வருகிறது.

முளைப்பாரி திருவிழா, நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுபாட்டு கச்சேரி என்று விழா அமர்க்களப்படும். இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா?


திருமணம் ,புதுமனை புகுவிழா போன்ற சுபயகாரியங்கள் செய்ய ஆடி மாதம் ஏற்றதல்ல என்று கூறப்படுவதுண்டு.

ஆடி மாதத்தில் திருமணமான பெண்கள் கருத்தரித்தால் பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும்.

அப்போது வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்தனர் .

அதேபோல் ஆடி மாதம் புதுமண தம்பதியினரை பிரித்து வைக்கிறார்கள்.

ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். அதனால் கிரகப்பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.

கூழ்வார்க்கும் திருவிழா


தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரிய அர்ஜுனனின் மகன்கள் கொன்று விடுகிறார்கள்.

இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையை பெய்து தீயை அணைக்கிறார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன.

வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்து கொள்கிறார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதன் காரணமாக, அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டபோது, மக்கள் அவருக்கு பச்சரிசி, வெள்ளம், இளநீரை உணவாக அளிக்கிறார்கள்.

இதைக் கொண்டு ரேணுகா தேவி கூழ் தயாரித்து உணவருந்துகிறார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவி முன்பு தோன்றி வரம் தருகிறார்.

உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று ஆசி வழங்குகிறார். .

இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பெண்கள் புதிய தாலிச் சரடை கட்டிக் கொள்வது ஏன்?

ஆடிப்பெருக்கின்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். காவிரி ஆற்றை பெண்கள் கங்காதேவியாக நினைத்து வணங்குவர்.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல தங்கள் குடும்பமும் அனைத்து நன்மைகளையும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டி பெண்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்கிறார்கள்.

முன்னதாக பெண்கள், மஞ்சள், குங்குமம், கலப்பரிசி, வெல்லம், அரிசி, தேங்காய் பழம், தாலிசரடு ஆகியவற்றை வைத்து பூஜை செய்கிறார்கள்.

பின்னர் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய தாலிசரடை கட்டிக் கொள்கிறார்கள்.

புதுமணத் தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரிகரைக்குச் சென்று அங்கு அரசு வேப்ப மரத்தை சுற்றி வலம் வந்து மஞ்சள் நூலை கட்டுகிறார்கள்.

இதற்கு காரணம் அரச மரமும் வேப்ப மரமும் சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்ச ராஜன் என்றும், வேப்பமரத்தை விருட்சராணி என்றும் அழைக்கப்படுகிறது.

சக்தி ரூபமாக திகழும் வேப்பமரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலைக் கட்டுகிறார்கள் இவ்வாறு செய்தால் திருமணத் தடையால் மணமாகாத பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும், விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்பதும், திருமணமான பெண்களுக்கு சந்தான லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

உப்பு அதிகமானால் ஆபத்து

பல் டாக்டரின் ஆஃபர்

அறம் செய்ய விரும்பு: திருக்குறள் கதை 16

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 16) அறம் செய்ய விரும்பு என்பதை வலியுறுத்தும் திருக்குறள் பாடல் வரிகளுக்கானவையாக இடம் பெற்றிருக்கிறது.

அறம் செய்ய விரும்பு

ஜினாலய அறநிகழ்வில் “அறத்தின் மாண்பு” என்னும் தலைப்பில் தர்ம நாதர் பேசத் தொடங்கினார்.

துறவறத்திற்கு ஒரே வழி அறமே. அதற்காக அனைத்துப் பொருள்களையும் தியாகம் செய்தல் வேண்டும். எதுவரை அனைத்தையும் துறக்க முடியவில்லையோ அதுவரை சிறுசிறு அளவிலாவது அறத்தை மேற்கொள்ள வேண்டும்.

பல வகை வியாபாரம், தொழில் போன்றவற்றால் செல்வம் சேர்க்க நாம் முனைகிறோம். அது போன்றே பல வகைப் பயிற்சி மூலம் நல்வினையாகிய பயனைத் தரும் அறத்தைச் செய்தல் வேண்டும்.

அறத்தில் ஆர்வம்

ஒருவர் அறம் செய்தலில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். அறத்தின் சேர்க்கை ஒன்பது வழிகளில் வருகின்றது.

மனதால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். மொழியால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். உடலால் செய்தல், செய்வித்தல், உடன் படுதல். இந்த 9 வழிகளில் அறத்தை நாம் கடைப்பிடிக்கலாம்.

எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறிது, பெரிது எனப் பாராமல் செய்தல் வேண்டும்.

சிறந்த செல்வம் அறமே

அறத்தைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறில்லை. அந்த அறத்தையே செய்யாது தவிர்ப்பவர்க்கு கேடே வந்தடையும்.

தந்திரம், மருந்து, மா தெய்வம் முதலியன உயிர்கட்கு பாதுகாப்பு இல்லையென உணர்தல் வேண்டும்.

முண்ட கௌசிகன் கதை

அறத்தின் மேன்மையை உணர்ந்த முண்ட கெளசிகன் என்பவனின் வரலாற்றைக் கூறுகிறேன் – கேளுங்கள்.

வசுதாரை என்ற நகரில் சன்னியாசி ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் சொற்போரில் தோல்வியுற்றதால் மக்கள் அவனை ஏளனமாக பேசத் தொடங்கினார்கள்.

இதனால் மக்கள் மீது கோபம் கொண்டவனாக மாறினான். கடைசி வரை மக்களை வெறுத்து வந்த அவன் ஒரு நாள் இறந்து போனான்.

அந்த நகரில் முண்ட கெளசிகன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனின் மனைவி மனோரமை என்பவள். இருவருக்கும் நிறையச் செல்வங்கள் இருந்தன.

ஆனாலும் அவனுக்கு அறத்தின் மீது நாட்டம் ஏற்படவில்லை. சேர்த்த செல்வத்தை பாதுகாக்க தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினார்கள்.

இருவரும் தங்களின் குலதெய்வமானப் பிடாரியை வேண்டிக் கொண்டார்கள். தங்கள் செல்வதற்கு வாரிசாக ஒருவனை எங்களுக்கு தாருங்கள் என்பதுதான் அவர்களின் வேண்டுதல்.

ஒரு நாள் அவர்களின் வேண்டுதல் பலித்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிடாரியின் அருள் காரணமாக அக்குழந்தை பிறந்ததை உணர்ந்தனர்.

அக்குழந்தை வளர்ந்து குமரனாக மாறினான். அவனுக்கு திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.

ராட்சசன்

இந்த சூழலில், அந்த நகரில் சொற்போரில் தோற்று மக்களால் ஏளமானமாக பேசப்பட்டவன் ராட்சசனாக மறுபிறவி எடுத்து வந்தான்.

தன்னை தூற்றிய மக்களை துன்புறுத்தினான். அவர்கள் அனைவரையும் கொல்வதற்கும் தயாரானான்.

இதனால் மக்கள் ஒன்றுகூடி அவனை சந்தித்து முறையிட்டார்கள். எங்கள் எல்லோரையும துன்புறுத்துவதை கைவிடு.

நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை நகரில் உள்ள வீடுகளில் இருந்து ஒருவனை தேர்வு செய்து உன்னிடம் அனுப்புகிறோம். அவனை நீ கொன்று பழி தீர்த்துக்கொள் என்று சொல்கிறார்கள்.

அது ராட்சசனுக்கு சரியெனப்பட்டது. அதன்படி மக்கள் ஆண்டுக்கு ஒருவன் நகரில் உள்ள வீடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு ராட்சசனுக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.

இம்முறை முண்ட கௌசிகன் தன்னுடைய மகனை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களிடம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து மகனை அனுப்புவதாகச் சொல்கிறான்.

முறையான வரிசைப்படி, நீங்கள்தான் இம்முறை உங்கள் மகனை அந்த ராட்சசனிடம் அனுப்ப வேண்டும் என்று மக்கள் சொல்லிவிட்டார்கள்.

வேறு வழித் தெரியாமல் தன் மகனை காக்க குல தெய்வமான பிடாரியிடம் சென்று முண்ட கௌசிகன் முறையிட்டான்.

இதனால் பிடாரி உன்னுடைய மகனை குகைக்கு ஒளிந்து கொள்ளச் சொல் என்று கூறி ராட்சசனை போருக்கு அழைத்தது. அதில் ராட்சசன் கொல்லப்பட்டான்.

ராட்சசன் இறந்ததை அடுத்து முண்ட கெளசிகன் குகையில் மறைந்திருக்கும் மகனை அழைக்கச் செல்கிறான்.

அறமே துணை

அங்கு தன் மகனை காணாமல் தவித்தான். அப்போது அவனுடைய மகனை அங்கிருந்த மலைப் பாம்பு விழுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

தன் மகனை இழந்த முண்ட கௌசிகன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டான்.

தன்னுடைய செல்வத்தை அறத்துக்காக செலவிட்டான்.

இதைத்தான் திருவள்ளுவர்,

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

. (குறள்-32)

ஒருவனுக்கு அறமே நன்மையைத் தருவதாகும். அதை மயக்கத்தால் மறந்து விடுபவர்க்கு கேடே விளையும். அதனால் அறம் செய்ய விரும்பு என்று இந்த குறள் மூலம் விளக்குகிறார்.

பிறவி எனும் அறையில் நாம் குருடர் போல, வெளியே வர முடியாமல் சுற்றி சுற்றி வருகின்றோம். அந்த அறையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி அறமே என்பதை உணருங்கள். அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்றார் தர்ம நாதர்.

திருக்குறள் கதை – அஞ்ச வேண்டிய நட்பு

சிகரெட் பழக்கம் – கணவரிடம் கோபப்பட்ட மனைவி

அறத்தில் எது சிறந்தது? திருக்குறள் கதைகள் 15

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 15) அறத்தில் எது சிறந்தது என்பதை விளக்கும் கதை இடம்பெறுகிறது.

“உயிர்களிடத்து அன்பு வேணும், தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என்று பாரதி பாடலைப் பாடியவாறு வந்தான் ஆனந்தன்.

என்ன ஆனந்தா… ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போல தெரிகிறதே… உன் வாயில் இருந்து பாரதியின் பாடல் வருகிறதே என்றார் தர்மநாதர்.

அறத்தில் எது சிறந்தது?

தாத்தா எனக்கு ஒரு சந்தேகம். அறத்தில் சிறந்தது எது? என்று கேட்டான்.

“ஆனந்தா, எந்த ஒரு மனிதனும் ஆசைகளை அடக்க உணவுகளைக் குறைத்து நல்லறங்களை மேற்கொள்ள வேண்டும். தாம் செய்த பாவங்களிலிருந்து விடுபட விரதங்களை மேற்கொள்ள வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளோடு நடந்து கொள்ளுதல் கூட ஒரு அறம்தான்” என்றார் தர்மநாதர்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர், இதற்காகவே “அருளுடைமை என்னும் அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார்.

அன்பு என்பது சுற்றத்தார், நண்பர் என்னும் குறுகிய வட்டத்தோடு நின்று விடும். ஆனால், அருளோ பரந்து பட்டது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் ஒப்ப நோக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் ஆசான்.

இல்லறத்தார்க்கு அன்பு இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால் துறவு நிலையை அடைய விரும்புவோருக்கு அருள் உள்ளமும் வேண்டும். அறத்தில் எது சிறந்தது என்பதற்கு ஒரு கதையையும் சொல்கிறேன்.

இளவரசியின் விருப்பம்

அபயமதி என்ற பெயருடைய இளவரசி ஒருத்தி தன்னுடை முற்பிறப்பைப் பற்றி அறிய விரும்பினாள்.

அதற்காக அமிர்தமதி என்னும் ஆச்சாரியரை சந்தித்தாள். அவர், “பெண்ணே நீ சென்ற பிறப்பில் சம்பா நகரத்தில் பறவைகளைப் பிடித்து விற்று வாழும் கருட வேகன் என்பவனின் மனைவியாய் இருந்திருக்கிறாய். அப்போது உன் பெயர் கோமதி.

நீ ஒரு நாள் அவ்வூருக்கு வந்திருந்த சமாதி குப்தர் என்னும் முனிவரைக் கண்டு வணங்கினாய்.

அவர் புலால் உண்பது, மது அருந்துவது, பொய், கொலை, களவு செய்தல் ஆகியவைகளை மறந்தும் செய்யாதே என்று உன்னிடம் சொன்னார்.

அத்துடன் அவர் ஐந்து வகையான உதும்பரம் பழங்களை உண்ணுதல் தவறு என்றும் உபதேசித்தார். அன்று முதல் அவருடைய அருளுரைகளைக் கேட்டு நடந்து வந்தாய்.

ஒரு நாள் உன் கணவன் பறவைகளைப் பிடித்து கூட்டில் அடைத்தான். அதனைக் கண்டு அந்த உயிர்களிடத்தில் கருணை காட்டி விடுவித்தாய்.

வெளியில் சென்றிருந்த கணவன் இல்லத்திற்கு வந்தவுடன் பறவைகள் இல்லாததைக் கண்டு அதிர்ந்தான்.

இக்கூட்டைத் திறந்து விட்டது யார்? எனக் கேட்டான். அருளுள்ளம் கொண்ட நீ , நான் தான் திறந்து விட்டேன் என்றாய்.

உடனடியாக அவன் இந்த வீட்டில் இனி உனக்கு இடம் கிடையாது. உடனே வெளியேறு என துரத்தினான்.

கணவனால் கைவிடப்பட்ட நீ, அபலையாய் உறவினர் ஒருவர் வீட்டில் சென்று தங்கினாய். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் தாத்தரி வாகனனும், அரசி சீமதியும் உலா வந்தனர்.

அப்போது அவர்களைக் கண்ட நீ, அந்த அரசியின் வயிற்றில் பிறக்க வேண்டும் என நினைத்தாய். நீ அப்பிறப்பில் இறந்ததும், அரசி சீமதி வயிற்றில் சென்று தங்கினாய்.

துறவறம் பூண்ட இளவரசி

அப்போது அரசிக்கு எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அரசி தன் எண்ணத்தை மன்னனிடம் கூறினாள்.

மன்னனும் நகரில் யாரும் எவ்வுயிரையும் கொல்லக் கூடாது என உத்தரவிட்டான். அனைத்து உயிர்களுக்கும் அடைக்கலம் (அபயம்) தரும் எண்ணத்தை நீ ஊட்டியதால் உனக்கு அபயமதி எனப் பெயரிட்டனர் என்றார் முனிவர்.

தன்னுடைய முற்பிறவியை அறிந்த அவள், துறவறம் ஏற்று, அறநெறி நினைவுகளோடு வாழ்ந்து உயிர் நீத்த அடுத்த பிறவியில் அமித காந்தன் என்னும் தேவனாகப் பிறந்தாள்.

திருவள்ளுவர் சொல்வது என்ன?

மன்னுயிர்களை தன் உயிர் போல் நினைத்து பரிவு காட்டும் அருளாளனுக்குத் தன் உயிர் அஞ்சத்தக்க தீவினை எதுவும் இல்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை

(குறள்-244)

உலக உயிர்களின் துன்பங்களைப் போக்கும் அருளாளன் நல்லனவற்றையே எண்ணி அவற்றையே செய்வான். ஆதலால் அவனுக்கு நல்வினைப்பயனே உண்டாகும். தீவினை ஒரு போதும் பற்றாது என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

அறத்தில் எது சிறந்தது? என்று கேட்டாயே ஆனந்தா… இப்போது தெரிந்துகொண்டாயா அன்பின் மகத்துவத்தை என்றார் தர்ம நாதர்.

கோபம் வந்தால் – திருக்குறள் கதை

குட்டை பாவாடையால் ஆபத்து – காமெடி

ஒரு நிருபரின் டைரி பேசுகிறது – அரிசி கிடங்கு விவகாரம்

ஆர். ராமலிங்கம்

பொன்முடி கைது சம்பவத்தை (தொடர் 1) அடுத்து நிருபர்களுக்கும் இப்படியும் ஒரு சிக்கல் ஏற்படும் என்பதை உணர வைத்த அரிசி கிடங்கு விவகாரம் குறித்து ஒரு நிருபரின் டைரி பேசுகிறது (தொடர் 2) விவரிக்கிறது.

முதல் பக்க செய்தி

1998 காலக் கட்டத்திலேயே, நான் வீட்டில் இருந்தே செய்திகளை அனுப்புவதற்காக கணினி, ஸ்கேனர், மோடம், தொலைபேசி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பத்திரிகை நிர்வாகம் செய்து கொடுத்திருந்தது.

நான் பொன்முடி கைதான தகவலை செய்தியாக, புகைப்படத்தோடு சென்னைக்கு கணினி வழியாக அனுப்பினேன்.

மறுநாள் காலை (புதன்கிழமை) தினமணியின் முதல் பக்கத்தில் பாட்டம் ஸ்ப்ரெட்டாக, பொன்முடி அரிசி கிடங்கினுள் சென்றதையும், அங்கு அவர் ஆய்வு செய்யும் படத்துடன் அரிசி கிடங்கு விவகாரம் தொடர்பான விரிவான செய்தி வெளிவந்தது.

இதேபோல் ஓரிரு பிரபல நாளிதழ்களிலும் விழுப்புரம் அரிசிக் கிடங்கு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பொன்முடி கைதான நிலையில், அவருடன் விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கிற்கு சென்ற சில திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள்.

கருணாநிதி கேள்வியும் ஜெயலலிதா நடவடிக்கையும்

பொன்முடி கைதானதும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மறுநாள் ஒரு கேள்வியை எழுப்பி அறிக்கை வெளியிட்டார்.

“அதிமுக அரசு ஆட்சியேற்றது முதல் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து கைது செய்து வருகிறது. இப்போது பொன்முடியை கைது செய்திருக்கிறார்கள்.

மேலாளரிடம் அனுமதி பெற்றே பொன்முடி விழுப்புரம் அரிசி கிடங்கினுள் சென்றார். பொன்முடியுடன் பத்திரிகையாளர்களும் சென்றார்களே அவர்கள் செய்ததும் அத்துமீறல்தானா?” என்பதுதான் அந்த கேள்வி.

ஒரு வாதத்துக்காக இக்கேள்வியை கருணாநிதி முன்வைத்த நிலையில், உடனடியாக அரிசி கிடங்கினுள் சென்ற நிருபர்களையும் கைது செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக புதன்கிழமை மாலை தகவல் பரவியது.

இது எனக்கு உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நான் எனது சொந்த ஊரை விட்டு மனைவி, 6 வயது பெண் குழந்தையுடன் தனியாக விழுப்புரத்தில் வசித்து வந்தேன்.

அரிசி கிடங்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திடீரென நம்மை கைது செய்துவிட்டால், மனைவியும், குழந்தையும் தனியாக இருப்பார்களே. அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பதா, இங்கேயே இருக்க வைப்பதா போன்ற கேள்விகள் எழுந்தன.

இருந்தாலும், வீட்டின் உரிமையாளர் ஒரு கல்லூரி பேராசிரியர். அவரது மனைவி, அக்கம், பக்கத்தில் வசிக்கும் கல்லூரி பேராசிரியர் குடும்பத்தினர், கிராம நிர்வாக அலுவலர் குடும்பம் என எல்லோரும் எங்களுடன் அப்போது நெருங்கி பழகுபவர்களாக இருந்ததால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை மனதின் ஓரத்தில் கொஞ்சம் இருந்தது.

துணை நின்ற ஆசிரியர்

மாலை 5 மணியளவில், சென்னையில் இருந்து என்னுடைய போற்றுதலுக்குரிய மறைந்த பத்திரிகை ஆசிரியர், ஆர்.எம்.டி. சம்பந்தம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

“யப்பா… அங்க என்னப்பா செய்தி…”

“அரிசி கிடங்குக்குள் போன நிருபர்களையும் அந்த அம்மா கைது செய்யப் போறதா சொல்றாங்களே தெரியுமா”ன்னு கேட்டார்.

அவர் கேட்டு முடிப்பதற்குள், மளமளவென எனக்குத் தெரிந்த விஷயங்களை படபடப்போடு அவரிடம் சொல்லி முடித்தேன்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவர், “நான் பதட்டத்தில் இருப்பதை புரிந்துகொண்டு, நீ ஒரு பத்திரிகை நிறுவனத்தில் நிருபர்பா… தனி ஆள் இல்ல.. தைரியா இரு.. நாங்கள் இருக்கிறோம். சும்மா ஒரு மிரட்டலுக்காகத்தான் நிருபர்களை கைது செய்வாங்க.. நாங்க பார்த்துக் கொள்கிறோம். உன் மனைவியிடமும் சொல்லி வை” என்றார் ஆசிரியர்.

அத்தோடு அவர் விடவில்லை. “எங்கே உன் மனைவிகிட்டே போனை கொடு” என்றார். போனை அவளிடம் கொடுத்தபோது, அவள் பயத்தில்… சார்… என்றாள்.

“பயப்படாதேம்மா… சென்னையில் இருந்து ஒரு நிருபரை விழுப்புரத்துக்கு கிளம்பி வரச் சொல்லியிருக்கேன். அவர் ராமலிங்கத்தை பார்த்துக்குவார்.. தைரியமா இரு..” என்று சொல்லிவிட்டு “போனை அவரிடம் கொடு” என்றார்.

என்னிடமும் திரும்பவும்.. ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி தைரியமூட்டிய அவர், விழுப்புரத்துக்கு சென்னையில் இருந்து ஒரு நிருபரை அனுப்பியிருக்கிறேன். அவர் வரும் வரை அங்கே என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் எனக்கு தகவல் சொல்லு.. ” என்று சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தார்.

அதுவரை கொஞ்சம் பதற்றமாக இருந்த நான் சகஜநிலைக்கு திரும்பி, எனது சக பத்திரிகை நிருபர்களில் ஒருவரான செங்குட்டுவனிடம் செல்போனில் தகவலை பரிமாறினேன் (அப்போது செல்போன் பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் இருந்தாலும் கூட ஒருசில நிருபர்கள் செல்போன்களை பயன்படுத்த தொடங்கியிருந்தோம்.)

அத்துடன் தினத்தந்தியில் அப்போது பணிபுரிந்த மூத்த நிருபர் சாமி விஜயனையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து எனது பணிகளை செய்யத் தொடங்கினேன்.

மாலை 5.30 மணியளவில் சன் டி.வி. நிருபரை போலீஸார் தேடுகிறார்கள் என்ற தகவல் எனக்கும், சக நிருபர்களுக்கும் கிடைத்தது.

உளவுத் துறை தகவல்

உளவுத் துறையை சேர்ந்த ஒருவர் என்னோடு எப்போதும் தொடர்பில் இருப்பது உண்டு. அவரிடமும் நான் உடனடியாக தொடர்புகொண்டு செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இப்போதைக்கு சன் டிவி சுரேஷ் மட்டும்தான் காவல்துறை இலக்கு. அதனால் நீங்கள் பதட்டமடைய வேண்டாம். மற்ற நிருபர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்று நினைக்கிறேன் என பட்டும் படாமல் பேசினார்.

சன் டிவி நிருபர் சுரேஷ் சில நிமிடங்களில் ஒரு புதிய எண்ணில் இருந்து தொடர்புகொண்டார். அவரும் கைது நடவடிக்கை செய்தியால் அச்சத்தில் இருந்ததை பேச்சில் இருந்து உணர முடிந்தது.

சார்.. என்னை கைது செய்யப்போறதா பேசிக்கிறாங்க… எங்க வீட்டில் பயப்படுறாங்க.. அதனால நான் வீட்டில் இருந்து புறப்பட்டு வேறொரு இடத்தில் இருக்கிறேன். அலுவலகத்திற்கும் நான் தகவல் சொல்லிவிட்டேன். ஏதாவது தகவல் கிடைத்தால் என்னை இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் என்றார்.

நான் சென்னையில் இருந்து எனது ஆசிரியர் தொடர்புகொண்டதையும், இந்த விஷயத்தில் உங்கள் நிர்வாகம் மட்டுமல்ல எல்லா பத்திரிகை நிர்வாகங்களும் ஆதரவாக இருக்கும். அதனால் பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்

சுரேஷைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு இல்லாததால், அவரை எப்படியாவது தேடி பிடித்துவிட தீவிரம் காட்டினார்கள்.

அப்போது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராதாகிருஷ்ணன். பத்திரிகையாளர்களுடன் அவர் நெருங்கி பழகக் கூடியவராக இருந்தார். (அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று இதே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியேற்றவர்).

ராதாகிருஷ்ணன்

மாலை 6 மணியளவில் சுரேஷ் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அவரை நேரில் சந்தித்தார். படு கேஷுவலாக வாங்க நாம பேசிக் கொண்டே நடப்போம் என்று சொன்ன அவரின் பேச்சை சுரேஷால் தட்ட முடியவில்லை.

ஜீப்பை முன்னே செல்லவிட்டு, சுரேஷுடன் நடந்தபடியே காவல் துறையின் நிலைமையை விளக்கினார். சுரேஷும் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜீப்பில் ஏறி அமர சில நிமிடங்களில் காவல் நிலையத்துக்கு ஜீப் சென்றடைந்தது.

அடுத்த சில நிமிடங்களில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ராமலிங்கம்… அரிசி குடோனுக்கு போன எல்லா நிருபர்களையுமே ஸ்டேஷனுக்கு 8 மணிக்கு வரச் சொல்லியிருக்கேன். நீங்களும் வந்துடுங்க.. நாம அங்க பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

அதற்குள், சென்னையில் இருந்து எங்கள் பத்திரிகை அலுவலகம் அனுப்பிய மூத்த நிருபர் கோலப்பன் என் வீட்டுக்கு வந்தடைந்தார். அவரிடம் நடந்த விவரங்களை தெரியப்படுத்தினேன்.

இன்ஸ்பெக்டர் சொன்ன தகவல்

இரவு 8 மணிக்கு காவல் நிலையம் சென்றபோது இன்ஸ்பெக்டர் எல்லோரையும் தன்னுடைய மேஜைக்கு முன்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமரச் சொன்னார்.

உடனடியாக இருக்கையில் அமராமல், சன் டிவி நிருபர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொன்னோம்.

இன்ஸ்பெக்டர் முன்பு சென்று நிருபர்களுக்கே உரிய கேள்விகளை அவரிடம் வைத்தபோது, அவர் சிரித்தபடியே.. முதலில் நீங்கள் எல்லோரும் உட்காருங்கள். பேசலாம் என அமைதிப்படுத்தினார்.

“இப்போதைக்கு சுரேஷை மட்டும் விசாரிக்க வேண்டும் என்று டிஎஸ்பி சொல்லியிருக்கிறார். அதனால் சுரேஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறோம்” என்று சொன்னார் ராதாகிருஷ்ணன்.

“அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்கள் தொடர்பான பேச்சு இப்போதைக்கு எழவில்லை. ஒரு வேளை விசாரணை நடத்த வேண்டிய சூழல் வந்தால், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அதற்காகத்தான் உங்களை வரச் சொன்னேன். இப்போதைக்கு நீங்கள் போகலாம்” என்றார்.

அதற்குள் விழுப்புரத்தில் உள்ள அனைத்து பத்திரிகை தோழர்களும் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.

காவல் நிலையம் முன் போராட்டம்

எல்லோரும் ஒன்றிணைந்து சன் டிவி நிருபரை காவல் நிலையத்தில் வைத்திருப்பதைக் கண்டித்து காவல் நிலைய வாயிலில் நின்று அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினோம்.

மேற்கு காவல் நிலையம் விழுப்புரம் 4 முனை சந்திப்பின் ஒரு பகுதியில் அமைந்திருந்ததால், நிருபர்களின் போராட்டம் 4 வழிகளிலும சென்ற பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும், பேருந்துகளில் சென்றவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

நிலைமை மோசமடைவதே அறிந்த, டிஎஸ்பி கிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு வந்து சுரேஷை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார்.

இதனால் நாங்கள் எல்லோரும் டிஎஸ்பி ஜீப்பை மறித்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினோம்,. ஒரு கட்டம் வரை சமாதானமாக பேசிய போலீஸார், வலுக்கட்டாயமாக அங்கிருந்து எங்களை அகற்றி ஜீப்புக்கு வழி விட்டார்கள்.

இதை சன் டி.வி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் சில நிமிடங்களில் ஒளிபரப்பவே, மாநிலத்தில் ஒருசில இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் எங்களுக்கு கிடைத்தது.

ஒரு நிருபரின் டைரி பேசுகிறது – தொடர் 1

தேர்தல் பத்திரம் மூலம் எந்தக் கட்சி எவ்வளவு பெற்றது?

எதிர்பார்க்காத மறுநாள் போராட்டம்

இரவு 11 மணியை நெருங்கிவிட்டது. சன் டி.வி. நிருபரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்வதாக தகவல் வந்தது. அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்பது புரியாமல் அவரவர் வீடுகளுக்கு நள்ளிரவில் திரும்பினோம்.

மறுநாள் ஒரு மிகப் பெரிய போராட்டத்தை சென்னையில் பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக எடுப்பார்கள் என்பதை அப்போது நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் மிகப் பெரிதாக உருவெடுத்தது எப்படி?

(தொடரும்)

தன் குறை நீக்கு: திருக்குறள் கதைகள் 14

குறளமுதக் கதைகள் வரிசையில் திருக்குறள் கதைகள் 14, மாற்றாரிடம் குறை காண்பதை விட தன் குறையை நீக்குவதே சிறந்தது என்ற கருத்தை மையப்படுத்தி அமைந்திருக்கிறது.

குறை காணும் மனிதன்

பெரும்பாலும் மனிதன் தன் குறைகளைக் காண்கிறானோ? இல்லையோ? மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடித்து பட்டியல் போடுவதில் அதிக கவனம் செலுத்துவான்.

செல்வம் மிகுந்தவன் அடுத்தவன் செல்வம் சேர்க்க முனைந்தால், அவனிடம் அதிகம் செல்வம் சேர்க்காதே.. தவறு என்று சொல்வான். ஆனால் தான் அதிக செல்வம் சேர்ப்பதை தவறு என்பதை உணர மாட்டான்.

எஜமானனும், வேலைக்காரனும்

ஒரு எஜமானன் தன்னுடைய வீட்டை விதவிதமான பொருள்களால் அழகுபடுத்தி வைத்திருந்தான். அவன் நடந்து செல்லும் பாதையில் ஒரு அழகிய கண்ணாடி ஜாடியை அழகுக்காக வைத்திருந்தான்.

ஒரு நாள் அவன் நடந்து செல்லும்போது அந்த கண்ணாடி ஜாடி மீது கால் பட்டு கீழே விழுந்து அதன் அடிபாகம் சேதமடைந்தது.

இதைக் கண்ட அவன், ஆத்திரத்தால் கூச்சல் இட்டான். வேலைக்காரனை கூப்பிட்டான். கண்ணாடி ஜாடி எப்போதும் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து இருந்திருக்கிறது.

அதனால்தான் என் கால் பட்டு கீழே விழுந்துவிட்டது. நீ துடைக்கும்போது அதை நகர்த்தி வைத்திருக்கிறாய். ஒரு வேளையையும் ஒழுங்காக நீ செய்வதே இல்லை என்று கடிந்து கொண்டான்.

தான் பார்த்து நடந்திருந்தால் அந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து சேதம் அடைந்திருக்காது என்பதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

பிடிவாதமாக அடுத்தவர் மீது பழிபோடும் எண்ணமே அவனிடம் மேலோங்கி இருந்தது.

மீண்டும் சேதமடைந்த ஜாடி

ஒரு நாள் வேலைக்காரனை எஜமானன் கூப்பிட்டான். ஏதோ வேலை செய்துகொண்டிருந்த அவன், அப்படியே போட்டுவிட்டு எஜமானனை நோக்கி ஓடி வந்தான்.

ஏற்கெனவே அடிபாகம் சேதமடைந்திருந்ததால், அந்த ஜாடி லேசான அதிர்வு ஏற்பட்டாலே கீழே விழும் நிலையில் இருந்தது.

வேலைக்காரன் ஓடி வந்ததால் ஏற்பட்ட அதிர்வில் மீண்டும் அது கீழே விழுந்து மேலும் சேதமடைந்தது.

இப்போது எஜமானன் என்ன சொன்னான் தெரியுமா?

ஏண்டா நாயே… கண்ணை புறடியிலா வைத்திருக்கிறாய். ஆகாயத்தில் பறந்து வருவதுபோல் வருகிறாய். கீழே பார்த்து நடந்து வரக் கூடாது?

இப்போது அந்த விலை உயர்ந்த ஜாடியின் மூலை உடைந்து அதன் அழகே கெட்டுவிட்டது. இந்த மாத சம்பளத்தில் அந்த ஜாடிக்குரிய தொகையை பிடித்துக் கொண்டுதான் மீதித் தொகையைத் தருவேன் என கண்டிப்புடன் சொன்னான் எஜமானன்.

இப்படிப்பட்டவர்கள், எப்போதுமே பிறர் குற்றங்களை கண்டுபிடித்து குறை கூறுபவர்களாகவே இருப்பர். தன்னுடைய குறைகளை எண்ணிப் பார்க்க மாட்டார்கள்.

Annapoorani film issue

தன் குறையை உணர்ந்த அலெக்சாண்டர்

ஒரு முறை மாவீரன் அலெக்ஸாண்டரின் முன் கொள்ளைக்காரன் ஒருவனை அவனது காவலர்கள் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அவன் செய்த குற்றங்களைக் கேட்டான் அலெக்ஸாண்டர். அந்த கொள்ளைக்காரன் செய்த குற்றங்களை கணக்கில் கொண்டு தூக்குத் தண்டனை அளிக்கலாம் என அவனுடைய மந்திரி ஆலோசனை தெரிவித்தான்.

அப்போது, குற்றவாளியை நோக்கிய அலெக்ஸாண்டர், “நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? என்று கேட்டான்.

குடிமக்களை பாதிக்கும் குற்றங்களை செய்த நான் தண்டனைக்குரியவனே. நீங்கள் கொடுக்கும் தண்டனை எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதை சொல்லலாமா என்று அனுமதி கேட்டான்.

அலெக்சாண்டரும் அவனை சொல்ல அனுமதித்தான்.

உண்மையில், நீங்கள் செய்யும் வேலையை வேறு விதமாக நான் செய்தேன். நான் சிறிய அளவில் 4 அல்லது 5 வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பேன். நீங்களோ வேறொரு நாட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பீர்கள். இரண்டிலும் பாதிக்கப்படுவது மக்களே.

என்னை கொள்ளைக்காரன் என முத்திரையிட்டு தண்டனை வழங்கும் நிலையில், உங்களை பெரிய கொள்ளைக்காரன் என்று தானே மக்கள் நினைப்பார்கள்? என்று கேள்வியை எழுப்பினான்.

இதைக் கேட்ட அலெக்சாண்டருக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் சற்று யோசனையில் ஆழ்ந்தான். தன்னுடைய குற்றங்களை எண்ணிப் பார்த்து தான் செய்ததும் தவறு என்பதை அலெக்சாண்டர் உணர்ந்தான்.

திருக்குறள் சொல்லும் கருத்து

மந்திரி சொன்னது போல், அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதை கைவிட்ட மன்னன், சில மாதகாலம் சிறைத் தண்டனை அளித்து அவன் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தரலாம் என்று சபையில் அறிவித்தான்.

நாம் பிறர் குற்றங்களை பெரிதுபடுத்தி பார்ப்பதை கைவிட்டு, தன் குற்றங்களைக் களைவதே சிறப்பு என்பதைத்தான் இக்கதை உணர்த்துகிறது.

இதைத்தான் திருவள்ளுவர்,

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு

(குறள்- 436)

பாடல் மூலம் சொல்கிறார்.

அதாவது – தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கிக் கொண்டு, அதன் பின் பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டி, அவற்றை நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதுதான் அதன் பொருள்.

திருக்குறள் கதை மகாபாரதம் அர்ஜுனன் திறமை

மகாபாரதம் அர்ஜுனன்: திருக்குறள் கதை 13

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதைகள் 13 – மகாபாரம் அர்ஜுனன் தன் திறமையைக் காட்டியதையும், அதையொட்டிய திருக்குறள் விளக்கத்தையும் பெற்றிருக்கிறது.

ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் திருக்குறள் பாடல் ஒன்றின் விளக்கத்தை பார்க்கலாமா என்று கேட்டார்.

அய்யா… திருக்குறள் பாடல் விளக்கத்தை ஒரு கதையோடு சொன்னால் எங்கள் மனதில் பதியும் என்றான் ஒரு மாணவன்.

சரி… சொல்கிறேன் என கதை சொல்ல ஆரம்பித்தார் ஆசிரியர்.

அர்ஜுனன் திறமை

ஒரு நாள் துரோணர் தன் மாணவர்களின் புத்திக் கூர்மையைச் சோதிக்க நினைத்தார்.

அவர்களிடம் அருகில் உள்ள மரக்கிளையில் உள்ள பறவையைப் பாருங்கள். அதன் வலது கண்ணை மட்டும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு செய்பவரே வில்லாற்றலில் சிறந்தவர் எனக் கூறுவேன் என்றார்.

எவரும் முன் வரவில்லை. இச்செயலை அருச்சுனன் மட்டுமே முடிப்பான் எனவும் கருதினார்.

அவர் எண்ணியவாறே அருச்சுனன் பறவை அமர்ந்திருந்த மரத்தின் கீழே வந்து நின்றான்.

அவன் வில்லை நாணேற்றினான். இடக்கையில் பிடித்தவாறு வலக்கையால் இடத் தோளை ஓசையெழும்படித் தட்டினான்.

அவ்வோசையைக் கேட்ட பறவைத் திரும்பி பார்த்தது. அதன் உயிருக்கு ஊறு நேரா வண்ணம் வலக்கண்ணை மட்டும் குறிப் பார்த்து அம்பினால் எய்தான்.

நொடியில் பறவையின் சிறிய விழி கீழே வீழ்ந்தது. பறவையும் அவ்விடத்தை விட்டு அகன்றது. துரோணரும், மற்றவர்களும் அருச்சுனனின் திறமையை பாராட்டினார்கள்.

திருக்குறள் விளக்கம் என்ன?

இதைத் தான் குந்த குந்தர், இந்தத் தொழிலை இவன் வெற்றிகரமாக முடிப்பான் என்று கருதி அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.

இதற்கான திருவள்ளுவரின் குறட்பா வரிகள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்


(குறள்_517)

இச்செயலை இன்ன ஆயுதப் பலத்தாலும், பொருள் பலத்தாலும் முடிக்கக் கூடும் என்று எண்ணி அச்செயலை அவனிடம் விடுக என்கிறார் வள்ளுவர் என்றார் ஆசிரியர்.

அய்யா… ஒருவனிடம் உள்ள திறனை சோதிக்க ஒன்றும் அறியா பறவையின் கண்ணை பறிப்பது குற்றமாகாதா.. இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டான் ஒரு மாணவன்.

இதற்கான விளக்கத்தை மற்றொரு நாளில் சொல்கிறேன் என்றார் ஆசிரியர்.