ஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம்

குடந்தை ப. சரவணன்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் செல்ல வேண்டும்.

இந்த மண்ணுலகம் உள்ள வரை எல்லோருடைய நெஞ்சில் நிலைத்திருக்கும் வண்ணம் கலைகளுக்கு உயிரூட்டியவன் இரண்டாம் ராஜராஜ சோழன்.
அவனுடைய ஆட்சிக் காலம் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த காலம் என்றுகூட சொல்லலாம்.
இவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஐராவதீஸ்வரர் கோயில் கலைகளின் பொக்கிஷமாக உருவெடுத்தது.
உள்ளூரில் அல்லது தமிழகத்தில் இருக்கும் நமக்குத்தான் நம்முடைய கோயில்களின் கலைநுட்பங்களை ரசிப்பதற்கு நேரமோ அதற்கான ஆர்வமோ இல்லை.
ஆனால், இந்த கோயிலில் உள்ள சிற்பங்களின் கலை வடிவத்தைக் காண இன்றைக்கும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வருவதை நாம் நேரில் காணலாம்.

தாள ஓசை தரும் படிகள்

இந்த ஆலய நுழைவாயில் பகுதியில் நந்தி தேவர் மண்டபத்துக்கு அருகே அமைந்திருக்கும் பலி பீடத்தில் ஏறுவதற்கு 10 படிக்கட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு படிக்கட்டுகளாக மட்டுமல்ல, தாள ஓசைகளைகளை தருபவைகளாகவும் இருக்கின்றன.
ஆமாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
இந்த படிகளில் ஒரு கல்லால் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு படியிலும் ஒரு தாள ஓசை நம் காதில் தேனாய் பாய்கிறது.


அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்

ஆலய கொடி மரத்துக்கு அருகே கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். காணக் கிடைக்காத அரிய சிற்பம்.
சூரிய பிரபையுடன் சிவன் ,விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வங்களின் சிரசுகளுடன் கூடிய எட்டு கரங்களுடன் அமைந்திருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

1. கைலாய மலையைத் தூக்கிச் செல்லும் ராவணன், 2. தேவாதி தேவர்கள் மற்றும் உயிரினங்கள் பரமனை நோக்கி வேண்டுதல், 3. ஈசன் தனது திருப்பாத பெருவிரலால் கைலாயத்தை அழுத்தும் காட்சி 4. தான் செய்த தவறை உணர்ந்து அடைக்கலம் வேண்டி வணங்கும் இராவணேஸ்வரன். ( படங்கள் ப. சரவணன்)


மெருகூட்டும் மெருகூட்டிய சிலைகள்

ஐராவதீஸ்வரர் கோயில் ராஜகம்பீர மண்டபத்தில் செப்புச் சிலைகளோ என வியக்கும் வண்ணம் கல்லால் ஆன அதிகார நந்தி, கண்ணப்பர், யோக சரஸ்வதி, மகாலட்சுமி, கங்காதேவி என தெய்வத் திருமேனிகள் மற்றொரு பொக்கிஷம்.
ஐராவதீஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் ஒரு அங்குலம் அளவே உடைய நர்த்தன விநாயகர், அம்மையப்பன், வேழம் (யானை), சிம்மம். தட்சிணாமூர்த்தி, பூதகணங்கள், கஜசம்ஹாரமூர்த்தி ஆகிய சிற்பங்களைக் காண கலைக் கண்கள் கோடி வேண்டும்.

குடந்தை முருகன் கோயிலில் சடாரி

ஈசனின் சிற்பங்கள்

பரம்பொருளான ஈசனின் திருவிளையாடல்களை விளக்கும் ஒரு அடி அளவே உடைய சிற்பங்களுக்கும் பஞ்சமில்லை.

மகிஷனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தினி, ராமாயண காவியக் காட்சிகள் காணக் கிடைக்காதவை.
கிருஷ்ணன் மட்டும் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்த நம் கண்கள், இங்கு சிவபெருமானும் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்து மயங்கும்.
ஆடு, மாடு, யானை, சிங்கம், பன்றி ஆகிய 5 வகையான மிருகங்களின் உடல் பாகங்களைத் தாங்கிய எட்டு யாளித் தூண்களுடன் தேர் போன்று வடிவில் அமைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபமும், அதை இழுத்துச் செல்லும் யானைகள், குதிரைகளின் அற்புத சிற்பங்களும் உங்களை வியக்க வைக்கும்.
திருக்கோயிலின் திருச்சுற்றில் அமைந்திருக்கும் 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாற்றுச் சிற்பங்கள், தென்திசை நோக்கி உள்ள உதயாதி சரபர் பகவானை நரசிம்மர், தேவாதிதேவர்கள், பக்த பிரகலாதன் வணங்கும் சிற்பம் ஆகியவையும் காணத்தக்கவை.

வியப்புக்குரிய சிற்பங்கள்

ஒரே கல்லில் அமைந்த, ஒருமுக தோற்றத்தில் இரு மிருகங்களின் உடல் உருவங்கள் அமைந்திருக்கும் குஞ்சாரக் காளை (யானை மற்றும் காளை) சிற்பமும் நம்மை வியக்க வைக்கும்.
வடக்கு பிரகார திருசுற்று திருமாளிகை பத்தி மண்டபத்தில் மிக நுட்பமாக செதுக்கிய சாளரங்கள், ஆண்,, பெண் முகங்களைத் தாங்கிய யாளி சிற்பங்கள் பார்க்க வேண்டியவை.
சிவ ஆகமங்களை பின்பற்றி நெறியுடன் வாழ்ந்த தேவார பாடல்கள் பாடும் நூற்றியெட்டு பிடாரர்களின் திருஉருவங்களையும் இங்கே சிலைகளாக காணலாம்.
இன்றைக்கு ஒரு கோயிலுக்கு நீண்ட குழல் விளக்கு வாங்கித் தந்தாலும் கூட, அந்த குழல் விளக்கு பட்டையில் அன்பளிப்பாளரின் முகம் தவிர வாழ்க்கை குறிப்பையே பறைசாற்றும் விளம்பரத்தை பார்த்து சலிக்கும் நமக்கு ஒரு வியப்பு காத்திருக்கிறது.
ஆமாம்… பரதநாட்டியக் கலையின் 108 கர்ணங்களைப் படம் பிடித்து காட்டும் நடன மங்கையரின் உயிரோட்டமான புடைப்பு சிற்பங்கள் அந்த சிற்பக் கலைஞனின் கைவண்ணத்தை மட்டுமே நமக்கு காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வியக்காமல் என்ன செய்வது?

யுனெஸ்கோ அங்கீகாரம்

மேற்கட்டி கூரை விதானத்தில் அமைந்துள்ள சதுரம், செவ்வகம், வட்டம் என பல்வேறு வடிவமைப்புகளில் கற்றளி புடைப்பு சிற்பங்கள் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டிருப்பதும் ஐராவதீஸ்வரர் கோயில் சிறப்புகளில் ஒன்று.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஐராவதீஸ்வரர் கோயில் சிற்பங்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது.
மிகவும் பழைமையான , மிக நுட்பமான, சிற்பங்கள் பல தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஐராவதீஸ்வரர் கோயில் நிர்வாகம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த திருக்கோயில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் இந்த திருக்கோயில் காலை 7 முதல் பிற்பகல் 12-30 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.
படித்தவர்கள் பார்க்கத் தவறாதீர்கள். பார்த்தவர்கள் இதன் பெருமையை மற்றவர்களுக்குச் சொல்லத் தவறாதீர்கள்.

தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி திருக்கோயில் தரிசனம்

ஐராவதீஸ்வரர் திருக்கோயில் எங்கிருக்கிறது?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் அமைந்திருக்கும் தாராசுரம் என்ற ஊரில் Airavatheeswarar temple அமைந்திருக்கிறது.

இந்தக் கோயில் எத்தனை ஆண்டுகள் பழைமையானது?

ஐராவதீஸ்வரர் திருக்கோயில் (Airavatheeswarar temple) 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இத்திருக்கோயில் பற்றி ஏதேனும் விரிவான ஆய்வு நூல்கள் உண்டா?

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் – Airavatheeswarar temple (இராசராசேச்சரம்) என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியண் எழுதியிருக்கிறார்.

குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!

கும்பகோணம் என்றாலே காஞ்சிபுரத்தைப் போல ஒரு புகழ்பெற்ற கோயில் நகரம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இங்குள்ள முருகன் கோயில் தரிசனத்தில் வைணவ ஆலயங்களில் மட்டுமே சாற்றப்படக் கூடிய சடாரி பக்தர்களுக்கு சாற்றப்படுவது விசேஷம்.

சடாரி என்றால் என்ன?

சடாரி என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட ஒரு கிரீடமாகும். இதை சடகோபம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த கிரீடத்தின் மேல்புறத்தில் திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சடாரி வைணவ திருக்கோயில்கள் அனைத்திலுமே இருக்கும்.

இறைவனை நாம் தரிசித்த பிறகு நம் தலையில் அதை வைப்பது உண்டு. இது இறைவனின் திருப்பாதங்களை நம் சிரசின் மேல் வைத்து ஆசிபெறுவதற்கு சமமாக கருதப்படுகிறது..

வைணவர்கள் இந்த திருப்பாதத்தை தலையில் வைக்கும்போது பக்தி மேலிட இறைவனை வணங்கி நிற்பதுண்டு.

சடாரிக்கு ஏன் அப்பெயர் வந்தது?

சடகோபன் என்பவர் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக பக்தி மார்க்கத்தில் அறியப்படும் ஒரு துறவி.
வைணவர்கள் நம்மாழ்வாரே திருமாலின் திருவடியாக இருப்பதாகவும் நம்புகிறார்கள். அதன் இந்த சடாரியை சடகோபம் என்றும் நம்மாழ்வார் பெயரில் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில்
ஒரு முறை வைகுண்டத்தில் மகா விஷ்ணு சயனம் கொள்ள சென்றார். அன்றைக்கு அவர் வழக்கத்துக்கு மாறாக தன்னுடைய பாதுகைகளை அகற்றாமலேயே ஆதிசேஷன் மீது சயனம் மேற்கொண்டார்.
அந்த நேரத்தில் முனிவர்கள் தன்னை பார்க்க காத்திருக்கும் தகவலை அறிந்த பகவான், ஆதிசேஷன் தலையிலேயே பாதுகைகளை மறந்து வைத்து விட்டு அவர்களை பார்க்கச் சென்றார்.
அவர் அந்த இடத்தை விட்டு சென்றதும், ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின.

பாதுகையை தூற்றிய திருமுடி, சங்கு, சக்கரம்

பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். பகவானின் கரங்களை அலங்கரிக்கும் சங்கும், சக்கரமும் கூட தகுதியானவை.

ஆனால் பகவானின் பாதங்களை சுமக்கும் நீ எப்படி ஆதிசேஷன் தலையில் இருக்க முடியும்? என்று திருமுடி தூற்றியது.
ஒருகட்டத்தில் அவர்கள் மூவரின் தூற்றலையும் தாளாது ஆதிசேஷன் தலையில் இருந்து பாதுகைகள் நழுவி விழுந்தன.
இறைவன் திரும்பி வந்தபோது, பாதுகை நிலைகுலைந்து போயிருப்பதைப் பார்த்த பகவான், கர்வத்தால் உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அறிவேன்.
எனது பார்வையில் இந்த அண்டத்தில் இருப்பவை அனைத்தும் ஒன்றே. இதை அறியாதவர்களாக சங்கும், சக்கரமும், திருமுடியும் இருப்பதையும் உணர்வேன்.
அதற்கான தண்டனையை பின்னாளில் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று சொல்லி பாதுகையை சமாதானம் செய்தார்.

ராமாவதாரத்தில் பாதுகை

இறைவனின் இந்த சாபம் காரணமாகவே, திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும், சக்கரமும் பரத, சத்ருக்னனாக பிறந்தன. ஆதிசேஷன் இலக்குவணனாக பிறந்தது. அந்த பிறவியிலும் பாதுகை ராமனை தாங்கி நின்றது.
தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற மரவுரி தரித்து ஸ்ரீராமன் வனவாசம் புறப்படுகிறார்.
அண்ணலுக்கு பணி செய்வதே என் கடன் என்று சீதையும் உடன் புறப்படுகிறாள். அண்ணனுக்கு பணி செய்வதை தன் கடமையாக கருதிய லட்சுமணனும் உடன் செல்கிறான்.
தம்மை நாடி வருவோரின் பாவங்களைத் தீர்க்கும் கங்கை நதியின் கரையை அடைந்த ராமனை வரவேற்க குகன், தன்னுடைய பரிவாரங்களுடன் காத்திருக்கிறான்.
என்றுமே மனதில் சஞ்சலம் புகாத ராமனின் மனதில் ஏதோ குழப்பம் ஏற்படுகிறது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படி சமாளிப்பது என்பதுதான் அவனுடைய குழப்பத்துக்கு காரணம்.

அந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது பரதனின் வரவும், கண்ணீர் மல்க அண்ணனின் காலைப் பிடித்து தொழுத நிலையும்தான்.

பாதுகைக்கு கிடைத்த மரியாதை

தன்னுடைய தாயின் சதியால், காட்டுக்கு ராமன் வந்த நிலையில், அயோத்தியை ஆள தனக்கு என்றைக்கும் உரிமை இல்லை.
தமையனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. எனவே நான் அரியாசனம் ஏற்க விரும்பவில்லை என்று அவனும் ராமன் சென்ற காட்டுப் பகுதிக்கு வருகிறான்.
எண்ணில் கோடி ராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ என்று கம்பன் வரிகள் கம்ப ராமாயணத்தில் பார்க்க முடிகிறது.
ராமபிரான் நாடு திரும்பி அயோத்தி சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறான். ஆனால் பரதனின் வேண்டுகோளை ஏற்பது பொருத்தமன்று. அப்படி ஏற்றால், தந்தையின் வாக்கை காப்பாற்ற முடியாது என்பதை பரதனுக்கு புரிய வைக்கிறான்.

குழப்பம் தீர்ந்தது

அதேநேரம் பரதனும் நாடு திரும்ப விரும்பவில்லை. சிக்கலான இந்த நிலையில்தான் ராமன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
அதற்கு ஒரு தீர்வும் கிடைத்தது. பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்தி கிராமத்துக்கு வந்தான்.
ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் பாதுகைகளை வைத்து பட்டாபிஷேகம் செய்தான். ராமனுக்காக அவனின் சேவகனாக அயோத்தியை ஆட்சிபுரியத் தொடங்கினான்.
ஸ்ரீவைகுண்டத்தில், பாதுகைகளை இழிவுபடுத்திய சங்கு, சக்கரம் ராமனின் பிறப்பில் தம் தலையில் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதுவே பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு காரணமாக அமைந்தது.

குடந்தை முருகன் கோயிலில் சடாரி

கும்பகோணம் மகாமக குளத்தில் மகாமக தீர்த்தவாரி நடைபெறுவதை ஆன்மிக பக்தர்கள் அறிந்த ஒன்று.
அருள்மிகு ஸ்ரீசோமகலாம்பிகை சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் முருகன் சந்நிதிக்கு ஒரு சிறப்பு உண்டு.
வைணவக் கோயில்களில் மட்டுமே பக்தர்கள் தலையில் வைக்கப்படும் சடாரி முருகன் சந்நிதியில் வைக்கப்படுவதுதான் இங்கு விசேஷம்.

இதை உள்ளூர் பக்தர்கள் தவிர மற்றவர்கள் அறிந்திருப்பது மிகக் குறைவே. முருகன் சந்நிதியில் மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த சடாரி பக்தர்களுக்கு வைக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே முருகன் கோயில் ஒன்றில் சடாரி வைக்கப்படுவது இங்கு மட்டுமே. வேறு எந்த முருகன் கோயில்களிலும் இப்படி சவாரி வைக்கப்படுவதில்லை.

மேலும் சில சிவன் கோயில்கள்

இதேபோன்று சடாரி வைக்கப்படும் சிவன் கோயில் தமிழகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு நல்லூர் ஆலயங்களில் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலத்தில், காளஹஸ்தி திருக்கோயில், சுருட்டப்பள்ளி கோயில் ஆகியவற்றில் சடாரி சாற்றப்படுகிறது.
எல்லா திருக்கோயில்களிலும் விஷ்ணு பகவானின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியே வைக்கப்படுகிறது. ஆனால், வானமாமலை திருத்தலத்தில் மட்டும் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சடாரியின் தத்துவம்

ஸ்ரீவைகுண்டத்தில் பகவானின் பாதுகை அவமானப்படுத்தப்பட்டது. அதனால் ராமாவதாரத்தில் அந்த பாதுகை மன்னரின் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது. இதை நினைவுபடுத்தவே பெருமாள் கோயில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது.
இறைவன் முன் அனைவரும் சமம். அவருடைய சந்நிதியில் பணக்காரன், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகளைக் காட்டக் கூடாது என்ற தத்துவத்தையே இந்த சடாரி போதிக்கிறது.

வியாத கீதை சொல்லும் தத்துவம் என்ன?

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்

பொய் பேசுதல் திருக்குறள் கதை 12

குறளமுதக் கதைகள் வரிசையில் – பொய் பேசுதல் திருக்குறள் கதை 12 என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க” என்ற குறள் விளக்கமாகவும் இது அமைகிறது.

துறவியான இளவரசன்

இராசக் கிருகம் என்னும் நாட்டை சிரேணிகன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்து அரசி சேலினி என்பவள் ஆவாள்.

இவர்களுக்கு பாரீசன் என்பவன் மகனாய்ப் பிறந்தான். அவன் நல்லொழுக்கங்களில் சிறந்து விளங்கினான். பாரீசன் உலக வாழ்வை வெறுத்து துறவியானான்.

ஒரு சதுர்த்தசி நாளில் பாரீசன் உண்ணாவிரதம் இருந்தான். அவன் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

பழி சுமந்த இளவரசன்

அப்போது தான் திருடிய முத்து மாலையுடன் ஓடி வந்த வித்தியத்தன் என்பவன், காவலர்கள் துரத்தி வருவதை அறிந்து அதை தியானத்தில் இருந்த பாரீசன் கழுத்தை நோக்கி வீசிவிட்டு மறைந்தான்.

காவலர்கள் முத்து மாலையுடன் பாரீசன் கண்களை மூடி அமர்ந்திருப்பதை பார்க்கிறார்கள். அவன்தான் முத்துமாலையை திருடி வந்தவன். நம்மை ஏமாற்றுவதற்காக தியானத்தில் இருப்பதுபோல் நடிக்கிறான் என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அதனால் பாரீசனை பிடித்து வந்து அரசன் முன்பு குற்றவாளியாக நிறுத்தினார்கள்.

கடமை தவறாத மன்னன், குற்றவாளியாக நிற்பது தனது மகன் என்பதை அறிந்தும், அவனை கொன்றுவிடும்படி உத்தரவு பிறப்பிக்கிறான்.

மாலையாக மாறிய வாள்

அதனால், பாரீசனை காவலர்கள் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தண்டனையை நிறைவேற்ற கொலைக் களத்தில் பாரீசன் கழுத்தின் மீது வாளை வீசியபோது, அது மாலையாக மாறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் பாரீசனை அரசன் முன்பு கொண்டு நிறுத்தினார்கள்.

தனது மகன் தவறு செய்யவில்லை என்பதை உணர்ந்த அரசன், தன்னுடைய தவறை பொறுத்தருளுமாறு பாரீசனிடம் கேட்டுக் கொண்டான்.

குற்றப் பழியை தனக்காக சுமந்த பாரீசன் மீது விழுந்த வாள் மாலையாக மாறியதை நாட்டு மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

திருக்குறள் கதை நேர்மையே சிறந்த கொள்கை

பூலோக சாமியார்கள்-ஒரு நிமிட விடியோ

தவறை உணர்ந்த திருடன்

தலைமறைவாக இருந்த முத்து மாலை திருடிய வித்தியத்தன், இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தான்.

தவறை உணர்ந்த அவன், அரசன் முன்பு ஆஜராகி, தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டான்.

பொய் பேசுதல் திருக்குறள் கதை சொல்வதென்ன?

பொய் பேசுதல் திருக்குறள் கதை மாதிரி, ஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை எனப் பொய்மையாய் வாழ்தல் தவறு. அவ்வாறு வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்திற்கு சாட்சியாய் இருந்து வருத்தும் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.

அக்குறள்தான்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

(குறள் – 293)

புளுகு மூட்டை: ஒரு நிருபரின் டைரி பேசுகிறது பகுதி 1

ஆர். ராமலிங்கம்

நிருபராக பணிபுரிவது ஒன்றும் எளிதானது அல்ல. அத்துடன் ஒரு ஆளும் கட்சியை எதிர்த்து செய்திகளை வெளியிடுவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமும் அல்ல என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தவன். அந்த வகையில், நான் ஒரு நிருபராக பணியாற்றிய காலத்தில் புழுத்த அரிசி புளுகு மூட்டை உள்ளிட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களை ஒரு நிருபரின் டைரி பேசுகிறது தலைப்பில் தொடராக வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.

பகுதி 1 – புழுத்த அரிசி புளுகு மூட்டை

இடம்: விழுப்புரம்

நாள்: 26 ஜூன் 2001

நான் விழுப்புரத்தில் தினமணி நாளிதழின் மாவட்ட நிருபராக பணியாற்றிய நேரம்.

2001-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆளும் கட்சியாக அதிமுக அமர்ந்திருந்தது.

இன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அன்றைக்கு விழுப்புரம் சட்டப் பேரவை உறுப்பினர். முன்னாள் அமைச்சர். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதம் கடந்திருந்தது.

விழுப்புரம் பொன்முடியின் திமுக அலுவலகத்தில் இருந்து நிருபர்களுக்கு பிற்பகலில் அழைப்பு வந்தது.

திமுக விழுப்புரம் அரிசி சேமிப்பு கிடங்கில், புழுத்த அரிசி கொண்டு வந்து திமுக ஆட்சியில் அடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டை ஆளும் கட்சி வைத்துள்ளது.

உண்மை என்னவென்று அறிவதற்காக எம்எல்ஏ என்ற முறையில் பொன்முடி அரசு கிடங்குக்கு சென்று சோதனையிடப் போகிறார். உடனடியாக வாருங்கள் என அழைப்பு வந்தது.

பொன்முடியின் திமுக அலுவலகம்

பொன்முடியின் திமுக அலுவலகத்துக்கு நான் உடனடியாக புறப்பட்டுச் சென்றேன். அப்போது சன் டி.வி நிருபராக இருந்து வந்த சுரேஷ், தினமலர் சார்பில் நிருபர் சுந்தரராஜன், புகைப்படக்காரர் வெங்கட், மாலை முரசு நிருபர் ஜெயதேவன், தினகரன் நிருபர் பொயயாது மற்றும் தனியார் நிருபர் ஒருவரும் இருந்தனர்.

பொன்முடியும், அவரது கட்சி நிர்வாகிகள் சிலரும், நகராட்சி கவுன்சிலர்களும் என இருபத்துக்கும் மேற்பட்டோர் அரிசி கிடங்கை நோக்கை புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் நான் உள்பட சிலரும் சென்றோம்.

அரசுக் கிடங்கில் பொன்முடியுடன் சென்ற நிருபர்கள்

பொன்முடி அன்றைய தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் காசிநாதனை சந்தித்தார். காசிநாதன் எதற்காக கூட்டமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்க, எம்எல்ஏ என்ற முறையில் கிடங்கை சோதனையிட வந்திருக்கிறேன் என்றார்.

தன்னுடைய வட்டார மேலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பின்னர் உள்ளே சென்று ஆய்வு செய்யுங்கள். ஆனால் அரிசி மாதிரியை வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று நிபந்தனை விதித்தார்.

காட்சிகளை பதிவு செய்தோம்

இவர்களின் பேச்சை அப்படியே சன் டிவி நிருபர் விடியோவில் பதிவு செய்தார். நான் நிருபராக இருந்தாலும், அவ்வப்போது எனக்குத் தேவையான புகைப்படங்களை நானே எடுத்துக் கொள்வது வழக்கம்.

அதனால் கிடங்கில் எனக்குத் தேவையான காட்சிகளை புகைப்படங்களாக நான் பதிவு செய்துகொண்டேன்.

காசிநாதன் பொன்முடி உள்ளிட்ட சிலரையும், செய்தி சேகரிக்கச் சென்ற எங்களையும் கிடங்குக்குள் அழைத்துச் சென்றார்.

கிடங்கில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளில் மாதிரிக்காக அரிசியை ஊழியர் இருவர் குத்தூசி கரண்டி மூலம் எடுத்து காட்டினர்.

அவை அனைத்தும் தரமான அரிசியாக இருப்பதைப் பார்த்த பொன்முடி, காசிநாதனை பார்த்து இதுவரை பார்த்ததில் புழுத்த அரிசியே கிடைக்கவில்லையே. வேறு ஏதாவது மூட்டைகள் இருக்கிறதா? என்று கேட்டார்.

தவித்த அரசு சேமிப்புக் கிடங்கு அதிகாரி

அவருடைய கேள்விக்கு காசிநாதன் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். இருந்தாலும் அவர் இங்கு 2 ஆயிரம் டன்னுக்கு மேல் அரிசி இருக்கு. இதில் புழுத்த அரிசி எதுவும் இல்லை.

3 நாள்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளை மட்டும் தரமற்ற அரிசி என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள் என்றார் காசிநாதன் அப்பாவித்தனமாக.

நாங்களும் எங்கள் பங்குக்கு அரிசியை சோதித்து பார்த்தோம். அரிசியில் துர்நாற்றம் ஏதும் வரவில்லை. புழுக்கள், வண்டுகள் இருக்கிறதா என்றும் பார்த்தோம். அதுவும் இல்லை. ஆனால் திரட்டப்பட்ட அரிசியில் உமி தென்பட்டது.

பொன்முடி நிருபர்களிடம் உங்களுக்கு புழுத்த அரிசி இருப்பதுபோல் தெரிகிறதா என்று கேள்வியை சிரித்தப்படியே கேட்டுவிட்டு, மாதிரியில் இருந்து சிறிது எடுத்து சுவைத்து பார்த்துவிட்டு, எங்களிடமும் கொடுத்தார்.

கிடங்கை சோதனையிட்ட கையோடு, நிருபர்களிடம் அங்கேயே பேட்டியும் அளித்தார். அப்போது அவர், புழுத்த அரிசி மூட்டைகள் விழுப்புரம் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆளும் கட்சி சொல்கிறது.

ஆனால் சோதனையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று சொன்னதை குறிப்பெடுத்துக் கொண்டோம்.

புழுத்த அரிசி இல்லை என்ற தெம்போடு தன்னுடைய வாகனத்தை நோக்கி சென்ற பொன்முடி, கிடங்கின் வளாகத்தில் சில மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகத்தோடு அங்கு சென்றார்.

நன்றி விகடன் – 4.7.2001

ஆனால் அப்போது அந்த அதிகாரி, ரேஷன் கடைகளுக்காக இவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று பதில் அளித்தார்.

சிக்கிய அதிகாரி – சிக்க வைக்கப்பட்ட பொன்முடி

அந்த நேரத்தில் காசிநாதனுக்கு அவரது அறையில் உள்ள தொலைபேசிக்கு அழைப்பு வந்திருப்பதாக ஊழியர்கள் வந்து சொல்லவே அவர் புறப்பட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார்.

அப்போது ஒரு புகைப்படக்காரர், ஊழியர் கையில் வைத்திருந்த குத்தூசியை வாங்கி பொன்முடியிடம் கொடுத்து நீங்கள் அரிசி மூட்டையை சோதிப்பதுபோல் போஸ் கொடுங்கள் என்றார்.

பொன்முடியும் அப்படியே செய்தார். புகைப்படங்களை எடுத்து முடிந்த நிலையில், காசிநாதனை சந்திக்க அவரது அறையை நோக்கி புறப்படவே, அவரே பதட்டத்தோடு எதிர்கொண்டு வந்தார்.

சார் உங்களை அரிசி கிடங்குக்குள் விடக் கூடாது என்று தொலைபேசியில் உயர் அதிகாரி சொல்கிறார். உங்களால் நான் பிரச்னையில் மாட்டிக் கொண்டேன் என்று அவர் சொன்னார்.

உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன நடவடிக்கை தேவையோ அதை செய்துகொள்ளுங்கள்.

நாங்கள் இப்போது கிடங்கில் புழுத்த அரிசி இல்லை சோதித்து தெரிந்துகொண்டு விட்டோம். அது போதும் என்று சிரித்தபடியே அவரிடம் விடை பெற்றார் பொன்முடி.

நாங்கள் அரிசி கிடங்கு சோதனைப் பற்றிய செய்தியை அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்ப புறப்பட்டுச் சென்றுவிட்டோம்.

கைது செய்யப்பட்ட பொன்முடி

அன்றிரவு இரவு 7 மணி அளவில் காமராஜர் சாலை அருகே திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொன்முடி பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அரிசி கிடங்கு விவகாரத்தை கையில் எடுத்திருந்தார்.

வழக்கமாக கட்சிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாரின் எண்ணிக்கை அந்த கூட்டத்தின்போது சற்று அதிகமாக இருந்தது.

நிருபர்கள் சிலர் அந்த கூட்டத்தில் பொன்முடி பேசுவதை குறிப்பெடுக்க சென்றிருந்த நிலையில், இரு திமுக நிர்வாகிகள் அரிசி கிடங்கினுள் சென்ற விவகாரத்தில் கைதானதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

திமுக கொள்கை இணைச் செயலர் எஸ்.எஸ். பன்னீர்செல்வம் (இவர் ஏற்கெனவே அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்தவர்), விழுப்புரம் நகரச் செயலர் பஞ்சநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டிருந்தனர்.

கூட்டம் நடைபெறும்போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பேச்சை வேகமாக நிறைவு செய்த பொன்முடி கீழே இறங்கும்போது காவல்துறை அதிகாரிகள் அவரை சுறறி வளைத்து உங்களை கைது செய்கிறோம் என்றார்கள்.

ஏன் என பொன்முடி கேள்வி கேட்க, அரிசி கிடங்கினுள் நீங்கள் அத்துமீறி நுழைந்திருக்கிறீர்கள் என காவல் நிலையத்துக்கு புகார் வந்திருக்கிறது என்றதும் அவர் ஜீப்பில் ஏறவில்லை. நானே காவல் நிலையத்துக்கு உங்களுடன் நடந்து வருகிறேன் என்று சொல்லி காவல் நிலையத்தை அடைந்தார்.

(தொடரும்)

நிதி அயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது சரியா?

அடுத்து வருவது – ஏன் சன் டிவி செய்தியாளர் கைது செய்யப்பட்டார்?

நேர்மையே சிறந்த கொள்கை: திருக்குறள் கதை 11

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 11) கள்வருக்குத் தள்ளும் என்று தொடங்கும் திருக்குறளுக்கான விளக்க கதையாக நேர்மையே சிறந்த கொள்கை கதை இடம்பெறுகிறது.

தாத்தாவிடம் எப்போதும் கதை கேட்டு பழக்கப்பட்ட ஆனந்தன், அவரிடம் ஓடி வந்து இன்னைக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்றான்.

அவரும், அவனுடைய ஆர்வத்துக்கு தடை விதிக்காமல் நேர்மை என்ற பண்பை கடைப்பிடிப்பதால் வரும் நன்மை பற்றிய நேர்மையே சிறந்த கொள்கை கதை ஒன்றை சொல்கிறேன் கேள் என்றார்.

சிம்மசேனன் ஆட்சியில்

சிம்மபுரம் என்ற நாட்டை சிம்மசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய அமைச்சரின் பெயர் சத்திய கோடன்.

ஒரு நாள் சத்திய கோடனை ஒரு வணிகன் சந்தித்தான்.

அந்த வணிகனின் பெயர் பத்திரமித்திரன். அவன் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் பதியப்பட்ட ரத்தினச் சொப்பு ஒன்றை வைத்திருந்தான்.

அவர் கடல் வாணிபத்துக்காக செல்ல வேண்டியிருந்தது. வருவதற்கு பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என்பதால், அந்த ரத்தின சொப்பை பாதுகாப்பான இடத்தில் வைக்க விரும்பினான்.

விலை உயர்ந்த பொருள்களை அக்காலத்தில் அரசாங்க கஜானாவில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம்.

அந்த வகையில் அரசாங்க கஜாவில் தன்னுடைய ரத்தின சொப்பை ஒப்படைத்துவிட்டு கடல் வாணிபத்துக்கு புறப்படலாம் என முடிவு செய்தான்.

அமைச்சரை சந்தித்த வணிகன்

அரண்மனைக்கு சென்ற அவன், அமைச்சர் சத்திய கோடனை சந்தித்து அனைத்து விவரங்களையும் சொல்லி பத்திரமாக கஜானாவில் இருக்கட்டும்.

நான் திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றான்.

சில மாதங்கள் கழித்து நாடு திரும்பிய அவன் அரண்மனைக்கு சென்று அமைச்சரை சந்தித்தான்.

அமைச்சரோ, நீ யார்? என்று பத்திரமித்திரனை அடையாளம் தெரியாதவன் போல் கேட்டான்.

நான்தான் ரத்தின சொப்பை உங்களிடம் கொடுத்து அரசாங்க கஜானாவில் பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு கடல் கடந்து சென்று திரும்பிய வணிகன் என்றான் பத்திர மித்திரன்.

இதைக் கேட்ட அமைச்சர், நீ யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கையில், நீ எப்படி ரத்தின சொப்பை என்னிடம் தந்திருக்க முடியும். மரியாதையாக இங்கிருந்து போய் விடு.

இல்லையெனில் என் அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் தள்ள வேண்டியிருக்கும் என மிரட்டினான்.

பெரும் மதிப்புடைய ரத்தினங்களை இழந்த வருத்தத்தில் அவன் பிரம்மை பிடித்தவனாக தெருக்களில் அலையத் தொடங்கினான்.

உதவி புரிந்த அரசி

ஒரு நாள் அரசி, யார் இந்த சித்த சுவாதீனம் இல்லாதவர் என அருகில் இருப்பவர்களை அவர் விசாரித்தார்.

அப்போது, அவன் ஒரு வணிகன், ரத்தின சொப்பையை அமைச்சரிடம் கொடுத்துவிட்டு கடல் வாணிகத்துக்கு சென்றிருக்கிறார்.

திரும்பி வந்து கேட்டபோது அமைச்சர் அப்படி எதுவும் என்னிடம் தரவில்லை என்று சொல்லி மிரட்டி அனுப்பியது முதல் இப்படி சித்தசுவாதீனம் இன்றி தெருக்களில் அலைகிறார் என்றார்கள் ஒருசிலர்.

பத்திர மித்திரன் நிலையை எண்ணி வருந்திய அரசி ராமதத்தை, அரசனிடம் சென்று தான் கண்ட, கேட்ட விஷயத்தை சொல்கிறாள்.

சத்திய கோடனை நாம் சோதித்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நான் சூதாட்டத்தில் வல்லவள் என்பது நீங்கள் அறிந்ததே.

அதனால் மன்னர் அனுமதியோடு சத்திய கோடனை சூதாட்டத்துக்கு அழைக்கிறேன் என்றாள் அரசி.

மன்னரும் ஒப்புக்கொண்டார். அரசி ஒரு நாள் விளையாட்டாக, அமைச்சர் சத்திய கோடனை சூதாட்டத்துக்கு அழைத்தாள்.

அரசியை தன்னை சூதாட்டத்துக்கு அழைக்கிறாள் என்ற பெருமிதத்தோடு கலந்துகொண்டான்.

சூதாட்டத்தில் சத்திய கோடன் அனைத்தையும் இழக்கிறான். இறுதியாக அவனிடம் இருந்த அமைச்சருக்கான முத்திரை மோதிரத்தை வைத்து விளையாட அழைக்கிறாள்.

அந்த ஆட்டத்திலும் அவன் தோல்வியை தழுவுகிறான். அந்த மோதிரத்தை தன்னுடைய பணிப்பெண்ணிடம் கொடுத்து இதை கருவூலத் தலைவரிடம் காட்டி, கஜானாவில் உள்ள ரத்தின சொப்பை பெற்றுவரக் கூறுகிறாள்.

கஜானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ரத்தின சொப்பை அரசனிடம் ஒப்படைத்தாள் அரசி ராமதத்தை.

கடவுள் தந்த வரம் – ஒரு நிமிட விடியோ

அரசன் அந்த ரத்தின சொப்புக்குள் தன்னுடைய விலை உயர்ந்த ரத்தினக் கற்களையும் போட்டு வணிகனை அழைத்து கொடுத்தான்.

அதை வாங்கி பார்த்த வணிகன், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சொப்பு என்னுடையதுதான். ஆனால் அதற்குள் இருக்கும் ரத்தினக் கற்கள் என்னுடையவை அல்ல என்று சொல்லி வாங்க மறுத்தான். அவனுடைய நேர்மை அரசனுக்கு வியப்பை அளித்தது.

நேர்மையே சிறந்த கொள்கை கதை கருத்து

பத்திரமித்திரனின் நேர்மையை உணர்ந்த அரசனும், அரசியும் அவனை பாராட்டினர். அமைச்சனாக இருந்த சத்தியகோடன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டான். நேர்மையே சிறந்த கொள்கை என்பதன் உதாரணமாக திகழ்ந்த பத்திர மித்திரன் கௌரவிக்கப்பட்டான். நாடு கடத்தப்பட்ட சத்தியகோடன் தன் தவறை உணர்ந்து வருந்தினான்.

சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே நேர்மையே சிறந்த கொள்கை கதையின் சுருக்கம்.

இதைத்தான் திருவள்ளுவர் இப்படி சொல்கிறார்

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

(குறள் 290)

திருட்டுத் தொழிலை செய்பவர்களுக்கு உயிர் நிற்பதற்கு இடமாகிய உடல் தண்டனையால் துன்புறும்போது, உயிரும் துன்புற்று நலிவடையும்.

ஆனால், திருட்டில் இருந்து விலகி நிற்பர்வர்க்கு தேவருலகம் தவறாது கிடைக்கும் என்கிறது வள்ளுவரின் பாடல்.

நான் சொன்ன நேர்மையே சிறந்த கொள்கை கதை எப்படியிருந்தது என்று கேட்டார் தாத்தா.

எணணித்துணிக கருமம் -திருக்குறள் கதை

எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10

குறளமுதக் கதைகள் வரிசையில் இடம்பெறும் திருக்குறள் கதைகள் 10-இல் எண்ணித் துணிக கருமம் என்ற திருக்குறளுக்கான கதையும், குறளுக்கான விளக்கமும் இடம்பெறுகிறது.

எண்ணித் துணிக கருமம்

தர்ம நாதரை அவரது நண்பர்களான விமலரும் ,பார்சுவரும் சந்திக்கச் சென்றார்கள்.

தர்மர் அவர்களை வரவேற்றார்.

மூவருமாக உரையாடத் தொடங்கினார்கள்.

பார்சுவர், தர்மரே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு ஆராய்ந்து அந்தச் செயலைச் செய்ய வேண்டும் அல்லவா? என்றார்.

ஆமாம், அதில் என்ன தங்களுக்கு சந்தேகம்? எனக் கேட்டவர், “எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் அச்செயலை நன்கு ஆராய வேண்டும். .அவ்வாறு தொடங்கியச் செயலைப் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பது கூட குற்றமாகும்”.

இதைத்தான் தெய்வப் புலவரான திருவள்ளுவர் அழகாக ஒரு குறட்பாவில் எடுத்துரைத்துள்ளார் .

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

(குறள் – 467)

பத்ம புராணம்

பத்ம புராணத்தில் ஒரு காட்சி வருகிறது. அனு மஹானின் தந்தை பவணஞ் சயன். அவன் போருக்குப் புறப்பட்டுப் போகிறான். செல்லும்போது மானஸரோவர் ஏரியின் அருகே தங்குகிறான்.

அன்று அந்த நீர் நிலையின் கரையில் சக்ரவாகப் பெண் பறவை தன் இணையான ஆண் பறவையை நினைத்து வருந்துவதைப் பார்க்கிறான்.

அதனால் தன் மனைவியின் நினைவு அவனுக்கு வந்துவிட்டது. திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தமையால் அவளைக் காணவும் விழைந்தான்.

தன் நண்பனிடம், “போருக்குச் செல்லும்போது மனைவியின் நினைவு வருதல் தவறே. மேலும் போருக்குச் செல்லாமல் திரும்புவதும் தவறு என்பதையும் உணர்ந்துள்ளேன்” என்றான்.

என்ன செய்வது? இன்றிரவே அவளைக் கண்டு திரும்பி விடுவேன் என்று கூறுகிறான் .

அவன் நண்பனும் பவணஞ்சயனின் மனைவியான அஞ்சனாதேவி இருக்கும் மாளிகை வரை அழைத்துச் செல்கிறான். பணிப் பெண் மூலமாக சந்திக்க வைக்கின்றான்.

பவணஞ்சயனும் அஞ்சனாவின் அறையில் தங்குகிறான்.

இப்போது புரிகிறதா? போருக்குச் செல்ல நினைத்தவனுக்கு சம்சாரத்தின் நினைவு வரலாமா?

குறட்பா விளக்கம்

இதனைத் தான் ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றமாகும் என்கிறார். இதனையே இக் குறட்பா தெளிவுபடுத்துகிறது என்றார்.

தர்மரே! அருமையான குறள் கூறி விளங்க வைத்தீர்கள் என்று சொல்லி நண்பர்கள் விடை பெற்று சென்றார்கள்.

நிதி ஆயோக் கூட்டத்தை புறப்பணிப்பது சரியா?

சென்னை: மத்திய பட்ஜெட்டில் முழுமையாக ஒருசில மாநிலங்களுக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், தமிழ்நாடு முதல்வர் உள்பட ஒருசில மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

வழக்கத்துக்கு மாறான பட்ஜெட்

ஒன்றிய பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக ஆண்டுதோறும் மக்களவையில் வாசிப்பது வழக்கம்.

மாநிலங்கள்தோறும் ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பாரபட்சமின்றி பல்வேறு வகையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் மத்திய பட்ஜெட் போடப்படுகிறது.

இதனால், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களையும், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
இதனால் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு சிறப்பு திட்டத்தின் பலனையாவது பெறுவது வாடிக்கை.
ஆனால் இந்த முறை ஒரு சில மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளன.

பாஜக கூட்டணி ஆட்சி அல்லாத பிற மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாகவும், சில மாநிலங்களுக்கு முழுமையாக சிறப்பு திட்டங்கள் புறக்கணிப்பு என்ற ரீதியில்தான் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள்

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்துமே பாஜக கூட்டணிகள் ஆட்சியி்ல் இல்லாத மாநிலங்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, வழக்கமாக தமிழில் ஓரிரு வார்த்தைகளையாவது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இடம்பெறச் செய்வதுண்டு. ஆனால் இந்த முறை அந்த ஒரு வார்த்தையும் கூட இடம்பெறவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த ஆதரவை மக்கள் தரவில்லை என்ற கோபத்தை பட்ஜெட் மூலம் பாஜக வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தோல்வியில் முடிந்த பாஜக முயற்சி

போதாக்குறைக்கு காங்கிரஸ் கட்சியை அடுத்து திமுகவை மத்திய அரசு பரம எதிரியாக கருதுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் வேரூன்றும் முயற்சியில் பாஜக இறக்கி விடப்பட்டிருக்கிறது.

மற்றொரு புறம் மாநில அரசுக்கு எவ்வகையிலும் ஒத்துழைப்பு தர மாட்டேன் என அடம் பிடிக்கும் ஆளுநரின் நடவடிக்கையால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலில், பாஜக தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.
இந்த நிலையில் தமிழ்நாட்டை ஆளும் திமுகவை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழ் மக்களின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திடும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றே அரசியல் விமர்சகர்கள் குறை கூறுகிறார்கள்.
ஆனால் இதையும் ஆதரித்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களே மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவதும், தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் திமுகவுக்கு மக்கள் அளித்த வாக்குதான் என்றும் கூட பேசுவதையும் பார்க்க முடிகிறது.

வெறுப்பின் உச்சம்

மக்களவையில் பட்ஜெட் உரையை 84 நிமிடங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.

அதில் மிக கவனமாக தமிழ் இலக்கிய வரிகள் இடம் பெறாமலும், தமிழ்நாடு என்ற வார்த்தைக் கூட இடம்பெறாமலும் பார்த்துக் கொண்டால் என்பதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு எப்போது பிரதமர் வந்தாலும், பிற மத்திய அமைச்சர்கள் வந்தாலும், தமிழில் ஓரிரு வார்த்தைகளை பேசி மக்களை மயக்குவது உண்டு.

தொடக்கத்தில் வணக்கம் தமிழ்நாடு என்பார்கள். முடிக்கும்போது நன்றி என்பார்கள். இது கடந்த தேர்தல் வரை நீடித்த ஒரு போக்கு.
இப்போது தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற முடியாது என்ற நிலையை மக்கள் உணர்த்தியுள்ளதால் ஏற்பட்ட வெறுப்புணர்வு பட்ஜெட்டில் பிரதிபலித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள்.

கசந்துபோன தமிழ் மேற்கோள்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019-20-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையின்போது, புறநானூற்று பாடல் வரிகளை படித்தார்.

“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே” என்று தொடங்கும் புறநானூற்று பாடல் வரிகளை வாசித்தார். அந்த பாடல், சங்க காலப் புலவர் பிசிராந்தையார் பாடியதாகும்.
அதேபோல் 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், “பூமி திருத்தி உண்” என்ற ஆத்திச்சூடி பாடலை குறிப்பிட்டார்.
2021-22-ஆம் ஆண்டு பட்ஜெட் உரை வாசிப்பின்போது, “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப” என்ற திருக்குறள் வரிகளை படித்தார்.
இம்முறை தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் மட்டுமல்ல. தமிழ் வார்த்தைகளைக் கூட உச்சரிக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு பட்ஜெட்டை வாசித்து முடித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

மறைமுக மிரட்டல்

நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால்தான் இனி உங்களுக்கு திட்டங்களை ஒதுக்குவோம். இல்லாவிட்டால், யார் எங்களுக்கு ஓட்டு போடுகிறார்களோ, அவர்களுக்கு திட்டங்களை அறிவிப்போம் என்ற மறைமுக மிரட்டலாகவே இதை அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.
பாஜக கூட்டணி ஆட்சி யார் தயவால் நீடிக்கிறதோ அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை இந்த பட்ஜெட்டில் செய்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
இதன் மூலம் பிகார் மாநிலத்துக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் பெரும் பலன் கிடைத்திருக்கிறது.

இந்த மாநிலங்கள் ஏன் அதிக நிதி ஒதுக்கீடு செய்தீர்கள் என்று யாரும் எதிர்க்கவில்லை. எங்கள் மாநில வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை என்றுதான் புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலுவை திட்டங்கள்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழ்நாட்டுக்கு புதிய விரைவுச் சாலை திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விரைவு சாலைகளுக்கான நிதி பகிர்வும் அறிவிக்கப்படவில்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைகளில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலும் ஒன்று.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவித்திருககும் ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பதற்காக நிதி ஒதுக்கீடு, தாம்பரம்-செங்கல்பட்டு மேம்பால சாலைக்கான திட்ட ஒப்புதல் போன்றவையும் இந்த பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆக, நாட்டின் ஒட்டுமொத்த மாநிலங்களை உள்ளடக்கிய பட்ஜெட் என்ற நிலையில் இருந்து தற்போதைய பட்ஜெட் மாறியிருக்கிறது. அரசியல் நோக்கத்துடன் கூடிய பட்ஜெட்டாக மாறியிருக்கிறது.

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

இந்த நிலையில்தான், தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள்.

இவர்கள் தவிர கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

நிதி ஆயோக் புறப்பணிப்பு சரியானதுதானா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுந்திருக்கிறது.

வெண்சாமரம் வீசுவது நகைப்புக்குரியது

ஆனால் ஒருசில எதிர்க்கட்சியினர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க வேண்டும். தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தால்தான் நிதியை பெற முடியும் என்று யோசனை சொல்கிறார்களே தவிர, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்தது சரியா என்பதற்கான கேள்விக்கு பதில் சொல்ல தயாராக இல்லை.

கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தின் சார்பாக பிரதமரையும், அமைச்சர்களையும் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் எல்லாம் என்னவாயிற்று என்பதற்கான பதிலையும் கூட குறை கூறுபவர்கள் சொல்ல மாட்டார்கள்.

யார் நாட்டை ஆள்வது, அதிகாரத்தை யார் கைப்பற்றுவது, நமக்கு அதில் என்ன பலன் கிடைக்கும் என்கிற போட்டியில், நாம் வசிக்கும் மண்ணின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஒரு அரசு புறக்கணிப்பதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு ஆதரவாக பேசி, வெண்சாமரம் வீசுபவர்களின் செயல்கள் நகைப்புக்குரியதாகவே தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் அரசியல் எல்லைகளைக் கடந்து தமிழ் மண்ணில் வாழும் மக்களுக்கான நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வோடு ஒட்டுமொத்த தமிழகமும் விழித்தெழுந்து குரல் கொடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும்.

தற்போதைய நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு சரியானதுதான் என்பதே பலருடைய கருத்தாக அமைந்திருக்கிறது.

ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9

திருக்குறள் கதைகள் 9 – முயற்சி கைக்கொடுக்குமா என்பதற்கான கதையைத் தாங்கியது. எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது.

அரட்டை மன்னன்

தீபன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.
அவனது தந்தையோ அரட்டை அடிப்பதை கைவிட்டு, படிப்பில் கவனம் செலுத்து என்று நாள் தவறாமல் சொல்லி வருவது உண்டு.

ஆனால், அதைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. முதல் பருவத் தேர்வு வந்தது. அவனது நண்பர்கள் படிப்பதில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர்.

தீபனோ நம்ம பக்கம் ஆண்டவன் இருக்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அலட்சிய மனப்பான்மையோடு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

கடவுளை நம்பிய தீபன்

தேர்வு நாள் வந்தது. நேராக முதலில் கோயிலுக்கு போனான். கடவுளை வணங்கினான். கடவுளே எனக்கு அதிக மதிப்பெண் பெற்றுத் தர வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டான்.

இப்போது அவன், தேர்வில் நாம் அதிக மதிப்பெண் பெற்றுவிடும் என்ற திருப்தியோடு தேர்வை எழுதினான்.

தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவனுக்கு தெரிந்ததை எழுதி வைத்தான். முதல் பருவத் தேர்வு ஒரு வழியாக நிறைவடைந்தது.

தேர்வு வினாத் தாள் திருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக அழைத்து விடைத் தாளை வழங்கினார்.

காத்திருந்த அதிர்ச்சி

தீபனும் விடைத் தாளை பெற்றான். அவன் தன்னுடைய நண்பர்களை விட மிக குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்து அதிர்ச்சி அடைந்தான்.

வகுப்பறையிலேயே அழுகை அவன் கண்களில் கண்ணீரை தேக்கத் தொடங்கியது. ஒரு வழியாக சமாளித்து வீட்டுக்கு ஓடி வந்தான்.

தந்தை தினமும் சொல்வாரே படி… படி… என்று. இப்போது மதிப்பெண் குறைவாக வாங்கியிருக்கும் நிலையில் அவர் எப்படி வருந்துவார் என்பதை உணர்ந்து அவனுக்குள அச்சம் ஏற்பட்டது.

நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். ஆனால் நண்பர்களோ, அரடடை அடிக்கும் நேரத்தில் அரட்டை அடித்துவிட்டு, படிக்க வேண்டிய நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதனால் நண்பர்கள் நம்மை கேலி செய்வார்களே என்ற ஆதங்கமும் அவனுக்கு வந்தது. நாம் எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நான் எந்த முயற்சியும் செய்யாமல் போனதை இப்போது உணர முடிகிறது என்று வருந்தினான்.

தந்தையின் அறிவுரை

தந்தையின் முன் தயங்கியபடியே சென்று தேர்வு விடைத் தாள்களைக் கொடுத்தான். அவற்றை வாங்கிப் பார்த்த தந்தை கேட்டார்.

இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை நீ மட்டும் தான் பெற்றாயா… உன் நண்பர்களுமா… என்று கேட்டார்.

அவன் தலை குனிந்தபடியே சொன்னான்… “நான் மட்டும் தான்:.

அவர்கள் ஒருபுறம் அரட்டை அடித்தாலும், மற்றொருபுறம் படிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் நீ அரட்டையில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறாய் என்று கடிந்து கொண்டார்.

நான் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன் அப்பா. இனி அந்த தவறை செய்ய மாட்டேன் என்றான் தீபன்.

தந்தை சொன்னார்.. உன்னை போன்றவர்களுக்காகத்தான் திருவள்ளுவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

(குறள்- 619)

தெய்வம் நமக்கு எல்லாம் தந்துவிடும் என்று நினைப்பதை விட முயற்சி செய்தால் உழைப்பிற்கு ஏற்ற பலன் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.

இதை இனி மறவாதே. கடவுள் முயற்சி செய்வோருக்குத்தான் துணை நிற்பார். சோம்பேறிகளுக்கு அல்ல என்று அழுத்தமாக அவன் மனதில் பதிய வைத்தார்.

நான்தான் டாப்

அரட்டையை விட படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினான் தீபன். சில வாரங்கள் கடந்து சென்ற பிறகு இரண்டாம் பருவத் தேர்வு வந்தது.

அதில் தன்னுடைய சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்ணை பெற்று பெருமிதத்தோடு அவர்களுடன் கைக்கோர்த்தான் தீபன்.

வியாத கீதை சொல்வதென்ன?

வெ நாராயணமூர்த்தி

மார்க்கண்டேய முனிவர் மூத்த பாண்டவ இளவரசனான தர்மராஜனுக்கு வியாத கீதையை (vyadha gita) சொன்னதாக ஸ்ரீமத் மஹாபாரத புராணம் கூறுகிறது. வியாத கீதை நமக்கு சொல்லும் கருத்துக்கள் மிக ஆழமானவை என்பதோடு மிக மிக அழுத்தமானவையும் கூட.

வியாத கீதை நமக்கு கதை வடிவில் அமைந்திருந்தாலும், அதை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நமக்கு ஒரு நம் கடமையை உணர்த்துகிறது.

கௌசிகன் தவம்

குருகுலத்தில் வேதசாஸ்த்ரங்களைப் பயின்ற இளைஞன் கௌசிகன் உயர்நிலை ஞானத்தைத் தேடுவதில் நாட்டம் கொண்டான்.

துறவறம் மேற்கொள்வது என்று முடிவு செய்தான். தன் வயதான பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர்களின் ஏக்கத்தையும், துக்கத்தையும் அறிவுரைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை.

பெற்றோர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய கடமை, பொறுப்புகளையும்
பொருட்படுத்தாது வீட்டை விட்டு அவன் வெளியேறினான்.

நீண்ட பயணத்துக்குப் பின் ஒரு காட்டிற்குச் சென்று கடும் தவம் மேற்கொண்டான். நாட்கள் கடந்தன. தன்னை மறந்தான், இந்த உலகை மறந்தான். எண்ணங்கள் ஒருநிலை
கொள்வதையும் தவத்தின் பயனையும் உணர்ந்தான். மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பினான்.

தவத்தின் வலிமையை அறிந்த கௌசிகன்

ஒரு நாள் ஒரு பெரிய மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த ஒரு கிளையில் ஒரு கொக்கு பறந்து வந்து அமர்ந்தது.

சிறிது நேரத்தில் அந்தப் பறவை எச்சமிட்டது. அது கீழே அமர்ந்திருந்த கௌசிகன் மேல் விழுந்தது. தியானம் கலைந்தது. அண்ணாந்து பார்த்த கௌசிகனுக்கு கோபம் கொப்பளித்தது.

தான் எவ்வளவு பெரிய தவ வலிமைகளைப் பெற்று வருகிறேன்? இந்தப் பறவை என் மீது எச்சமிடுகிறதே என்று எண்ணி அதை உற்றுநோக்கினான் கௌசிகன்.

ஒன்றும் அறியாத அந்தக் கொக்கு எரிந்து சாம்பலானாது. இதைக் கண்ட கௌசிகனுக்கு ஒருபுறம் ஆச்சர்யம், மறுபுறம் பெருமிதம்.

தனக்கு இவ்வளவு பெரிய சக்தி கிடைத்துவிட்டதா? தன் தவ வலிமையால் அந்தப் பறவைக்கு
நல்ல புத்தி புகட்டி விட்டோம் என்ற கர்வம் அவன் தலைக்கேறியது.

பசியால் காத்திருந்த சோகம்

அந்தக் காலத்தில் தவசிகள் தங்கள் அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று பிக்க்ஷை எடுத்து, கிடைக்கும் உணவை உண்டு தவத்தைத் தொடர்வது வழக்கம்.

இந்த நிலையில், பசியை உணர்ந்த கௌசிகனும் அருகிலுள்ள கிராமத்துக்கு புறப்பட்டான். ஒரு வீட்டிற்கு எதிரில் நின்று, ‘பவதி, பிக்க்ஷாந்தேஹி’ என்று குரல் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டுப் பெண்மணி ஒரு பாத்திரத்தில் அன்னம் கொண்டு வருவதைக் கண்டான்.

அந்த நேரம் பார்த்து, அந்தப் பெண்மணியின் கணவனும் களைப்புடன் வீடு திரும்பினான்.

உடனே பெண்மணி கௌசிகனைப் பார்த்து, ‘ஸ்வாமி சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ வருகிறேன்’ என்று சொல்லி விட்டு, தான் கொண்டுவந்த அன்னத்தோடு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

நேரம் கடந்தது. காத்திருந்த கௌசிகனுக்கோ பசி. பசியால் கோபம். அதோடு சேர்ந்து அந்தப் பெண்ணினால் ஏற்பட்ட அவமானம்.

கோபத்தின் உச்சியில் கௌசிகன்

மீண்டும் குரல் கொடுத்தான் கௌசிகன். பதில் இல்லை. ‘இது என்ன விசித்திரம், இந்தப் பெண் என் தவ வலிமை தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாளே, இப்படி காக்க வைக்கிறாளே’ என்று பொருமினான். ஆத்திரம் தலைக்கேறியது.

பொறுமை இழந்து, ‘பெண்ணே அன்னம் தரப்போகிறாயா இல்லையா?’ என்று உரக்க கத்தினான். இன்னும் கால தாமதம் ஆனது.

சிறிது நேரம் கழித்து, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பெண், ‘ஸ்வாமி, இதோ வந்துவிட்டேன்’, என்று அன்னம் கொண்டு வந்தாள்.

அவளை பார்த்ததும் கண்கள் சிவக்க கௌசிகன் – ‘பெண்ணே, கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இப்படி தவமுனிகளைக் காக்க வைக்கலாமா? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று கண்களை அகல விரித்து அவளை உற்று நோக்கினான்.

கௌசிகனுக்கு விழுந்த அடி

அந்தப் பெண்ணோ சிறிதும் கலக்கமின்றி, கௌசிகனை பார்த்து ‘என்னை என்ன அந்தக் கொக்கு என்று நினைத்துக் கொண்டீரா முனிவரே, நீங்கள் பார்த்ததும் நான் சாம்பலாக?’ என்றாள் சிரித்துக்கொண்டே.

துணுக்குற்று ஆத்திரத்தில் இருந்து விடுபட்டான் கௌசிகன். காட்டில் நடந்தது இந்தப் பெண்ணுக்கு எப்படி தெரிந்தது? என்று ஆச்சர்யத்துடன் வாயடைத்துப் போய் அந்த பெண்ணை பார்த்தான்.

முதலில் கடமை அதன் பிறகே தர்மம்

‘ஸ்வாமி, களைப்புடன் வீடு திருப்பிய என் கணவனுக்கு ஸ்ரமபரிகாரம் செய்வித்து அவருக்கு உணவளித்து கவனித்துக் கொள்வது என் கடமை. குடும்பமே என் கடவுள்.

பக்தியுடன் நான் செய்யும் பணிவிடையே பத்தினி தர்மம். முதலில் என் கடமை, பொறுப்பு, பிறகுதான் தான தர்மம் எல்லாம்.

என் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. ஞான மார்க்கத்தில் இருக்கும் நீர், இது கூட தெரியாமல் கோபப்படுவது எந்த வகையில் நியாயம் என்று நினைத்து பார்த்தாயா?’ என்று அவள் கேட்ட கேள்வி கௌசிகனை உறைந்துபோகச் செய்தது.

தர்மவ்யாதனிடம் சென்று கேள்

தன்னிலை திரும்பிய கௌசிகன், சுதாரித்துக் கொண்டு, ‘சரி பெண்ணே, நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குப் பசியும் தணிந்துவிட்டது. முதலில் இதைச் சொல். நான் பறவையை பஸ்மமாக்கிய சம்பவம் உனக்கு எப்படி தெரிந்தது? என்று பவ்வியமாகக் கேட்டான் கௌசிகன்.

‘அது தெரிய வேண்டுமானால், அருகில் உள்ள மிதிலா நகரத்தில் வசிக்கும் தர்மவ்யாதனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்’, என்று சொல்லியனுப்பினாள்.

மிதிலை நோக்கி பயணம்

கௌசிகனுக்கு பசி மறந்தது. கோபம் பறந்து போனது. தன்னிலையை உணர்ந்தான். கர்வம் கரைந்தது. யார் இந்த தர்மவ்யாதன்? என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் மேலிட்டது. மிதிலையை நோக்கி பயணமானான்.

சில நாட்கள் பயணித்து, அந்த நகரைச் சென்றடைந்து, தர்மவ்யாதனைப் பற்றி வினவினான். என்ன ஆச்சர்யம், அனைவருக்கும் தெரிந்த நபராக இருந்தார் தர்மவ்யாதன்.

‘இந்த நகரின் ஒதுக்குப் புறமான பகுதியில் அவரின் கடை இருக்கிறது’ என்று மிகுந்த மரியாதையுடன் அடையாளம் சொன்னார்கள். ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கே சென்றபோது, அது கசாய் கடைகள் நிறைந்த பகுதி என்பதை கண்டு துணுக்குற்றான்.

எங்கு பார்த்தாலும் மாமிசங்கள் குவிந்து கிடந்தது. குமட்டிக்கொண்டு வந்தது கௌசிகனுக்கு.

தர்மவ்யாதன் கடையிலோ கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனாலும் முனியைப் பார்த்ததும்
நமஸ்கரித்து, ‘ஸ்வாமி, அந்தப் பத்தினி தங்களை இங்கு அனுப்பினாளா?’ என்று
சாதாரணமாக வினவ, கௌசிகன் மலைத்துப் போனான்.

இது எப்படி சாத்தியம்?

‘ஆண்டவா, இது என்ன விந்தை? இது எப்படி சாத்தியம்? ஒரு சாதாரண சாய்க்காரனுக்கு
தன் கதை எப்படி தெரிகிறது?’ என்று குழம்பிப் போனான் கௌசிகன்.

‘முதலில் என் வாடிக்கையாளர்களை கவனித்துவிட்டு பிறகு உங்களிடம் பேசுகிறேன். மாலை வரை காத்திருக்க முடியுமா? என்றான் தர்மவ்யாதன் பவ்யமாக.

உண்மையை தெரிந்துகொள்ளும் வரை எக்காரணம் கொண்டும் கோபப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்த கௌசிகன், சரி என்றான்.

இது என்ன புதுவகையான, தான் கற்றிராத, கேள்விப்படாத ஞானம்? ஒரு சாதாரண பெண் காட்டில் நடந்ததைச் சொல்கிறாள். இந்த கசாய்க்காரான் அவளைப் பற்றி சொல்கிறான். இதில் புதைந்துள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று மனதில் உறுதியோடு காத்திருக்கத் தொடங்கினான்.

தெய்வீக மகிழ்ச்சி எப்படி?

மாலை வந்தது. தன் பணிகளை முடித்துக் கொண்ட தர்மவ்யாதனுடன் அவன் வீட்டிற்குச் சென்றான கௌசிகன். அங்கேயும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

தர்மவ்யாதன் குளித்துவிட்டு, பூஜைக்காரியங்களை செய்து முடித்தான். அடுத்து தன் பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்தான். மனைவிக்கு சமையல் உதவிகளை செய்தான்.

கடைசியில், தன் குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே வெளியே வந்து கௌசிகனை சந்தித்தான்.

தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இளம் முனியை அறிமுகம் செய்தான். அழகான மனைவி, மக்கள், தாய், தந்தை. மகிழ்ச்சியான குடும்பம்.

அன்பும், பண்பும், அமைதியும் ததும்பும் குடும்பம். சமுதாயத்தில் மிகத் தாழ்ந்த குலமாகக் கருதப்பபடும் கசாய்தொழில் செய்யும் ஒருவன் குடும்பத்தில் இப்படி ஒரு தெய்வீக மகிழ்ச்சியா?

இதை கௌசிகன் தன் கண்களால் நம்பமுடியவில்லை!

கர்ம வினை

உணவு உண்ட பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள். ‘என்னைப் பற்றி முன்பின் தெரியாத உங்களுக்கு என் கதை எப்படி தெரிந்தது? அந்தப் பெண்ணைக் கேட்டால் உங்களைக் கேட்கச் சொல்கிறாள் என்றான் அப்பாவியாக.

இப்போது தர்மவ்யாதன் பேசத் தொடங்கினான்.

முன்னொரு பிறவியில் நீங்கள் ஒரு பழுத்த முனியாக இருந்தீர்கள். எனக்கும், அப்போது என் மனைவியாய் இருந்த, நீங்கள் சந்தித்த அந்தப் பெண்ணிற்கும் நீங்கள் சாபமிட்டீர்கள்.

அதனால் நான் இந்தப் பிறவியில் இந்த குலத்தில் பிறந்தேன். அவள் இன்னொரு குடும்பத்தில் பிறந்தாள். இது என் கர்ம வினை. ஆனாலும் நான் முற்பிறவியில் செய்த புண்ய பலனால் நல்ல பெற்றோர்களையும், மனைவி மக்களையும் அடைந்திருக்கிறேன்.

கடமைகள் முக்கியம்

இந்தப் பிறவியில் மாமிச வியாபாரம் என் குலத் தொழில். நானாக விலங்குகளை
அழிப்பதில்லை, நானும் என் குடும்பத்தாரும் மாமிசம் உண்ணுவதும் இல்லை.

இதில் நான் தொழில் தர்மத்தை கடைப்பிடிக்கிறேன். யாரையும் ஏமாற்றுவதில்லை. அதிக லாபத்தையும் நாடுவதில்லை.

சம்பாதிப்பதில் நிறைய தானம் செய்கிறேன். எப்போதும் உண்மையையே பேசுகிறேன். சதா நல்லவைகளையே நினைக்கிறேன், செய்கிறேன்.

பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் ஒரு போதும் நான் தவறுவதில்லை.

செய்யும் தொழிலே எனக்கு தர்மம். என் வாடிக்கையாளர்களையும், மற்றவர்களையும் நான் கடவுளாகவேப் பார்க்கிறேன், வணங்குகிறேன்.

ஸ்வதர்மம்

அவர்களுக்குச் சேவை செய்கிறேன். இது ஷிவக்யான ஜீவ சேவை. அனைத்து ஜீவன்களையும் நானாகவும், என்னுள் இருக்கும் கடவுளாகவே ஆராதிக்கிறேன். இது என் தர்மம். என் தவம்.

இந்த நிலையிலேயே ஒன்றிப்போனதனால் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிய முடிகிறது. எனக்குக் கிடைத்த வரப்ரசாதம்.

என்னைப் போலவே, நீங்கள் ஏற்கெனவே பார்த்த அந்தப் பத்தினியும் இந்தப் பிறவியில் தன் குடும்பத்தில் தர்ம நெறி தவறாது வாழ்க்கை நியதிகளைக் கடைப்பிடிக்கிறாள்.

அதனால் அவளால் எல்லாவற்றையும் உணர முடிகிறது. நீங்கள் இட்ட சாபத்துக்கு பரிகாரமாக, எங்கள் இருவரிடமும் நீங்கள் இந்தப் பிறவியில் இப்போது தீட்க்ஷை பெறவேண்டியுள்ளது. இதுவே ஸ்வதர்மம். இது எழுதப்பட்ட விதி.

தர்மமே தானம்

எந்தக் குலமும், எந்தப் பிறப்பும், எந்தத் தொழிலும் கேவலமுமில்லை, கொடூரமுமில்லை,
அசிங்கமுமில்லை. நாம் அணுகும் விதத்தைப் பொறுத்து அது பவித்ரமடைகிறது.

நீங்கள் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே உமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். ஞானமே இறைநிலையை உணரும் தூண்டுகோல். இதை உணர்ந்தால் அனைத்தையும் உணரலாம்.
உலகத்தை துறக்கத் தேவையில்லை. காட்டுக்கும் போகத் தேவை இல்லை. தவமும் தேவை இல்லை.

உலகைவிட்டு விலகி தேடிப் போவதல்ல ஞானம், உலகத்தையே சத்யமாக, ஞானமாக,
தர்மமாக, இறையருளாக உணருவது, என்று அமைதியாக போதித்தான் தர்மவ்யாதன்.

பெற்றோரிடம் திரும்பிச் சென்ற கௌசிகன்

தெளிவடைந்த கௌசிகன் தன் வீட்டிற்குத் திரும்பி, தன் பெற்றோர்களை கண்ணும்
கருத்துமாய் பேணத் தொடங்கினான்.

கடமையையும், பொறுப்பையும் ஸ்ரத்தையோடு செய்வதே தர்மம், ஸ்வதர்மமே மெய்ப்பொருள், இதுவே தான் தேடிய ஞானம் என்பதை உணர்ந்தான்.

வியாத கீதை

வியாத கீதை என இந்த உபதேசத்திற்கு பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம். வியாதன் என்றால் கசாய்கடைக்காரன் என்று அர்த்தம். அதனால்தான் வியாத கீதை என்று பெயர் பெற்றது.

தான் ஒரு கசாய்கடைக்காரனிடம் பெற்ற ஞானத்தை, வியாத கீதை என்ற பெயரில் ஒரா காவியமாக கௌசிகன் படைத்தான்.

வியாத கீதையை வ்யாத கீதை என்றும் அழைப்பதுண்டு. வியாத கீதை நல்லுபதேசங்கள் நம்முடைய கடமையும், பொறுப்பையும் செய்தால் தானாகவே ஞானம் வந்தடையும் என்பதை வலியுறுத்துகின்றன.

திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8

குறளமுதக் கதைகள் வரிசையில் திருடன் துறவியானான் என்ற கதை திருக்குறள் கதைகள் 8-இல் இடம்பெறுகிறது.

ஒரு நாட்டில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு துறவி இருந்தார். அவர் அனைத்தையும் துறந்து பற்றற்ற வாழ்க்கை நிலையை கடைப்பிடித்தார்.

அரசன் தந்த தங்க திருவோடு

அந்த நாட்டின் அரசன் நாள்தோறும் அவரை சந்தித்து நல்லறங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்தது.

ஒரு நாள் அரசன், அந்த துறவி ஏதேனும் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவர் உபயோகப்படுத்துவதற்காக தங்கத்தால் ஆன திருவோட்டை அவரிடம் கொடுத்தான்.

துறவி முதலில் அதை ஏற்கவில்லை. அரசன் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், அந்த திருவோட்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

அன்றிரவு அவர் அயர்ந்து தூங்கியபோது, ஏதோ அருகில் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார்.

அந்த திருடன், நம்மிடம் ஏதோ விலை மதிப்பு மிக்க பொருள் இருக்கிறது என்பதால்தான் வந்திருக்கிறான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

திருடன் பெற்ற திருவோடு

அருகில் வா என அந்த திருடனை அன்பாக அழைத்தார். அவன் தயங்கியபடியே அருகில் சென்றான்.

தான் படுத்திருக்கும இடத்தின் அருகே வைத்திருந்த தங்கத் திருவோட்டை எடுத்து இதுதான் என்னிடம் இருக்கிறது. எடுத்துக் கொள் என்று அவனது கையைப் பிடித்து கொடுத்தார்.

அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு அதை எடுத்துச் சென்றான்.

மறுநாள் இரவும் அவர் தூங்கும்போதும் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார்.

மீண்டும் முதல் நாள் வந்த திருடனை வந்து நிற்பதைப் பார்த்தார்.

அவனை பார்த்த அவர், என்னிடம் உனக்கு பயன்படும் படியான விலை உயர்ந்த பொருள் வேறு எதுவும் இல்லையே எனச் சொன்னார்.

இதைக் கேட்ட அந்த திருடன், அவரது காலில் விழுந்து வணங்கினான்.

அய்யா… உங்களிடம் இருக்கும் பற்றற்ற குணம் என்னிடம் இல்லை.யே.. என வருந்தினான்.

அந்த குணம் உனக்கும் வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா என்று கேட்டார்.

ஆமாம்… என கண்ணீர் மல்க வேண்டினான்.

யாதனின் – திருக்குறள் சொல்வது என்ன?

மகனே கேள். எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுகிறாயோ… அந்தந்தப் பொருள்களால் ஏற்படும் துன்பம் உன்னை அண்டாது. இதை நீ கடைப்பிடித்தால் போதும். நீயும் என்னை போன்ற பற்றற்றவன் ஆகலாம்.

இதைத்தான் திருவள்ளுவர்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்

(குறள் – 341)

என்று கூறி நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

அதாவது, நீ எந்தெந்தப் பொருள்களிலிருந்து பற்றை விடுகிறாயோ ? அவற்றால் துன்பம் வருவதில்லை என்பதுதான் இதன் அர்த்தம். புரிந்துகொண்டாயா? என்றார் துறவி.

அவரது உபதேசத்தை கேட்ட திருடன், பொருள்களின் மேல் வைத்த பற்றைத் துறந்தான். துறவியிடம் மீண்டும் வந்து துறவியாக மாறினான்.

எல்லாம் கடந்து போகும் நிலை எது தெரியுமா?

எல்லாம் கடந்து போகும் நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவன் ஒருவனுக்கும் வந்தது. அதைப் பற்றித்தான் இந்தக் கதை சொல்கிறது.

குருகுல மாணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்

முன்னொரு காலத்தில் குருகுலத்தில் பயின்ற மாணவன் ஒரு கிராமத்தின் வழியே நடந்து சென்றான்.

அப்போது ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்கேயோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த மாணவன், அருகில் நின்றவரிடம் ஏன் இந்த பெரியவர் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அவனுக்கு சித்த பிரமை பிடித்திருக்கிறதா என்று கேட்டான்.

எல்லாம் கடந்து போகும் நிலை

அதற்கு அருகில் சென்றவர் சொன்னார். அந்த மனிதர் எல்லாம் கடந்து போகும் நிலையில் இருக்கிறார் என்று சொல்லி விட்டு சென்றார்.

இதற்கான அர்த்தம் புரியாமல் குழம்பிய அவன், குருகுலம் சென்றடைந்ததும், குருவை பார்த்து, எல்லாம் கடந்து போகும் நிலை என்கிறார்களே அது என்ன என்று கேட்டான்.

சிவ-பார்வதி குட்டிக் கதை

குரு இப்போது அந்த மாணவனின் எல்லாம் கடந்து போகும் நிலைக்கான சந்தேகத்தைப் போக்க ஒரு குட்டிக் கதையை சொன்னார்.

ஒரு சிவபக்தர் குடிசை வாயிலில் அமர்ந்து தன்னுடைய கிழிந்த வேட்டியை ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தார்.

வானத்தில் சிவபெருமானுடன் சஞ்சாரம் செய்துகொண்டிருந்த பார்வதி தேவி இக்காட்சிக் கண்டு வேதனைப்பட்டார். உடனடியாக சிவனிடம் அவருக்கு நாம் உதவலாமே என்றாள்.

சிவபெருமான் சிரித்தபடியே சரி என்றார். உடனே இருவரும் சிவபக்தர் முன்பு மனித ரூபத்தில் தோன்றினார்கள்.

“சிவபக்தரே, நாங்கள் இருவரும் அம்மை-அப்பன். உனக்கு உதவ வந்திருக்கிறோம்” என்றார் பார்வதி.

மோர் தந்து உபசரித்த சிவபக்தர்

இதைக் கேட்டதும் அந்த சிவபக்தர் ஆனந்த கூத்தாடுவார் என்று பார்வதி எதிர்பார்த்தார். ஆனால், அந்த சிவ பக்தரோ, அப்படியா.. சந்தோஷம். இந்த திண்ணையில் அமருங்கள். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த ஓலைக் குடிசைக்குள் சென்றார்.

சிறிது நேரத்தில், இருவரும் அருந்துவதற்கு மோர் எடுத்து வந்து தந்தார். பார்வதி பரந்தாமனை பார்த்தார். பரந்தாமன் சிரித்தபடியே, பக்தன் தருவதை அன்போடு பருகு என்று சொல்லி அந்த மோரை பருகினார்.

இதைக் கண்ட பார்வதியும் அந்த மோரை பருகினார். பிறகு சிவபக்தரை பார்த்து நாங்கள் உண்மையிலேயே அம்மை-அப்பன்தான்.

சிவபக்தரான உங்களை மகிழ்விக்கவே நாங்கள் வந்தோம். வேண்டும் வரத்தை கேளுங்கள். நாங்கள் தருகிறோம் என்றாள் பார்வதி.

அந்த சிவபக்தர் சிரித்தபடியே, அவர்கள் இருவரையும் உற்று நோக்கினார். பார்வதியோ இந்த சிவபக்தர் நம்மை நம்பவில்லை. நாம் இருவரும் அம்மை-அப்பனாகவே காட்சி தருவோம் என்றான் பரந்தாமனிடம்.

அதற்கும் பரந்தாமன் சிரித்தபடியே, சரி என்றார்.

இறைவனும், மனிதனும் எனக்கு ஒன்றே

இருவரும் அம்மை-அப்பனாக விஸ்வரூப தரிசனம் தந்தார்கள். அவர்களை எந்த சலனமும் இல்லாமல் பார்த்த அந்த சிவபக்தர் மீண்டும் உள்ளே சென்று பருகுவதற்கு மோர் எடுத்துக் கொண்டு வந்து தந்தார்.

மீண்டும் பரந்தாமன் அந்த மோரை வாங்கிக் குடிக்க. பார்வதிக்கு கோபம் வந்து, “சிவபக்தரே உமக்காக நாங்கள் கீழே இறங்கி வந்து வரம் தருகிறோம் என்றால் அலட்சியம் செய்கிறீர்களே” என்றாள்.

அப்போது அந்த சிவபக்தர் சொன்னார். நீங்கள் மனித ரூபத்தில் வந்தாலும், இறைவனாக வந்தாலும் எனக்கு நீங்கள் ஒரு விருந்தினர்தான். என்னுள் சதாசர்வ காலமும் நான் வணங்கும் சிவன் சஞ்சரித்து கொண்டிருப்பதால் எனக்கு தேவை எதுவும் ஏற்படவில்லை.

தேவை இருந்தால் தானே வரம் கேட்பதற்கு. சந்தோஷமாக போய் வாருங்கள் என்றார் அந்த சிவபக்தன்.

இந்த கதையில் இருந்து என்ன தெரிந்துகொண்டாய் என்று மாணவனை நோக்கி குரு கேள்வியை எழுப்பினார்.

சந்தேகம் தெளிந்த மாணவன்

குருவே… இப்போது எனக்கு “எல்லாம் கடந்த நிலை என்பது என்ன” என்பது தெளிவாகி விட்டது.

நான் வரும் வழியில் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தன்னை மறந்து அண்ணாந்து பார்த்து ஆனந்த சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது ஏன் என்பதை தெரிந்து கொண்டேன் என்றான் அந்த குருகுல மாணவன்.

மன்னாதி மன்னன்: நேர்மைக்கு கிடைத்த பரிசு

ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு நேர்மையான ஒரு அமைச்சரை தேர்வு செய்தார். அவருடைய பரிட்சையில் வெற்றிபெற்ற நேர்மையின் மன்னாதி மன்னன் என்ற பட்டப் பெயரோடு ஒரு இளைஞன் எப்படி தேர்வு செய்யப்பட்டான் என்பதுதான் இக்கதை.

மன்னரின் ஆசை

ஒரு நாட்டை பிரதாபன் என்ற ராஜா ஆண்டு வந்தார். அந்த மன்னரின் அமைச்சர் தேர்வு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

அவர் தன்னுடைய தலைமை அமைச்சராக நேர்மையும், திறமையும் வாய்ந்த ஒருவரை நியமிக்க ஆசைப்பட்டார்.

இதற்காக நாட்டு மக்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களில் ஒருவருக்கு மன்னாதி மன்னன் பட்டம் வழங்குவதோடு, அவர் தலைமை அமைச்சராகவும் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் அறிவித்தார்.

போட்டியில் ஆர்வம் காட்டிய மக்கள்

மந்திரி பதவி என்றால் கசக்குமா என்ன? அத்துடன் மன்னாதி மன்னன் பட்டம் வேறு. நாட்டில் உள்ள அனைவருமே இப்போட்டியில் பங்கேற்க தயாரானார்கள்.

ஒரு நாள் அரண்மனை வளாகத்துக்கு நாட்டு மக்களை அழைத்தார். அப்பகுதியில் தயாராக இருந்த மண் நிரப்பப்பட்ட பானைகளில் ஒன்றை ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் அருகில் குவித்து வைத்திருக்கிற நெல் மணிகளில் 5 நெல்மணிகள் மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.

நீங்கள் எடுத்துச் செல்லும் பானையில் அந்த நெற்கதைகளை விதைத்து பராமரித்து அவற்றை நெற்கதிர்களாக வளர்க்க வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் அந்த வளர்ந்த நெற்பயிர்களுடன் கூடிய பானையை எடுத்து வர வேண்டும. அவற்றில் எவை சிறந்தவையாக தேர்வு செய்யப்படுகிறதோ அவரே என் நாட்டின் தலைமை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறினார்.

காட்சிப்படுத்தப்பட்ட நெற் பயிர்கள்

இதைக் கேட்ட மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பானையையும், 5 நெல்மணிகளையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அரண்மனை வளாகத்தில் மக்கள் திரண்டார்கள். எல்லோரும் அவரவர்கள் நன்கு வளர்த்த பயிர்களை அங்கு காட்சிப்படுத்தினார்கள்.

பல நெற்பயிர்கள் மிகுந்த செழிமையாக வளர்க்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பினார்.

மக்கள் எல்லோரும் யாரை தேர்வு செய்யப்படுகிறார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.

அப்போது ராஜா சொன்னார். நீங்கள் வளர்த்திருக்கும் நெற்பயிர்களில் பலவும் செழிப்பாக வளர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த பயிர்களை வளர்ப்பதில் நீங்கள் காட்டிய அக்கறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் இங்கிருந்து பானைகளையும், நெற்பயிர்களையும் எடுத்துச் சென்று இந்த போட்டியில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.

அப்படி என் முன் ஆஜராகாவிட்டால், அவர்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மன்னர் ஏன் வராதவர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. ஆளுக்கு ஒரு கதையை பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள்.

மன்னர் முன் ஆஜரான இளைஞன்

மறுநாள் காலையில், மக்கள் எல்லோரும் மீண்டும் அரண்மனை முன்பு திரண்டிருந்தார்கள். மண் பானையுடன் முதல் நாள் வராத ஒரு இளைஞன் மட்டும் மண் நிறைந்த அந்த மண் பானையையும், 5 நெல்மணிகளையும் அப்படி எடுத்து வந்திருந்தான்.

மக்கள் எல்லோரும் அந்த இளைஞனுக்கு நிச்சயமாக மன்னர் தண்டனை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.

அந்த இளைஞனிடம் இருந்து மண் பானையையும், நெல் மணிகளையும் காவலர்களை விட்டு பெற்று வரச் சொல்லி அந்த பானையை சோதித்தார். நெல்மணிகளையும் சோதித்தார்.

பிறகு அவனைப் பார்த்து, நாட்டு மக்கள் எல்லோரும் என் கட்டளைக்கு பணிந்து பானைளில் நெற்பயிர்களை போட்டிப்போட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் நீ சோம்பேறியாக இருந்துவிட்டு, என்னுடைய கடுமையான உத்தரவுக்கு பிறகு இங்கு வந்திருக்கிறாய். என்ன காரணத்தால் நீ மட்டும் இந்த நெல்மணிகளை பானையில் இட்டு வளர்க்காமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறாய் என்று மன்னர் கோபமாக கர்ஜித்தார்.

அந்த இளைஞன் நடுங்கியபடியே, மன்னரை பார்தது சொன்னான்.

மன்னரே என்னை மன்னிக்கவும். நானும் தாங்கள் வைத்த போட்டியில் பங்கேற்க ஆசைப்பட்டு பானையையும் 5 நெல்மணிகளையும் எடுத்துச் சென்றேன். வீட்டுக்கு சென்றபோது என்னுடைய பாட்டி அந்த நெல்மணிகளை பார்த்துவிட்டு அவை வேகவைக்கப்பட்ட நெல்மணிகள்.

இதை விதைத்தால் பயிராக முளைக்காது. வேண்டுமானால் வேறு நெல்மணிகளை பானையில் இட்டு முளைக்க வை என்று கூறினாள்.

நான் எனக்கு கிடைக்கும் மந்திரி பதவிக்காக, அந்த தவறை செய்ய விரும்பவில்லை. அதனால்தான் நான் நெல்மணிகளை பானையில் இட்டு வளர்க்கவில்லை என்று அச்சத்தோடு விளக்கம் தந்தான்.

மன்னாதி மன்னன் பட்டம்

இதைக் கேட்ட மன்னர், சபாஷ் இளைஞனே… நீ தான் நாட்டில் உள்ள பிரஜைகளில் நேர்மையானவனாக இருந்திருக்கிறாய். காரணம் நான் போட்டிக்காக கொடுத்த நெல்மணிகள் அனைத்துமே வேகவைக்கப்பட்டவை. அவை முளைக்காது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், மக்கள் எல்லோரும் தாங்கள் எடுத்துச் சென்ற நெல்மணிகள் வளரவில்லை என்றதும், வேறு நெல்மணிகளை பானையில் இட்டு வளர்த்து அதை நேற்று கொண்டு வந்து காட்சிப் படுத்தினார்கள். அதனால்தான் நேற்று எந்த முடிவையும் எடுக்காமல் சென்றுவிட்டேன்.

நான் ஒரு நேர்மையானவனைத்தான் அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று விரும்பி இந்த போட்டியை வைத்தேன். அதில் என் பரிட்சையில் நீ மட்டும் தேர்வாகியிருக்கிறாய்.

மன்னாதி மன்னன் என்ற பட்டத்தை உனக்கு தருவதோடு, நீ தான் இன்று முதல் என்னுடைய தலைமை அமைச்சர் என்று பாராட்டு தெரிவித்து மக்களிடையே அவனை அமைச்சராக அறிவித்தார் மன்னர்.

களவு திருக்குறள் கதையும், விளக்கமும்

களவு திருக்குறள் கதையும், அந்த கதைக்கு தொடர்புடைய திருக்குறள் விளக்கமும் இதில் இடம்பெறுகிறது.

தாத்தாவும் பேரனும்

ஆனந்தா ! வா, வா.

தாத்தா நேற்று நான் ஒரு கதை சொன்னேன். அதற்கு நீங்கள் ஒரு குறளைச் சொல்லி விளக்கமும் தந்தீர்கள்.

இன்றைக்கு நீங்களே ஒரு கதையைச் சொல்லி, அதற்கேற்ற குறட்பாவையும் சொல்லுங்களேன் தாத்தா.

சரி… சொல்கிறேன் கேள்.

உழவனும் தங்கத் தட்டும்

உழவன் ஒருவன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அப்போது அவன் பூமிக்கு அடியில் புதைந்திருந்த பொன்னாலான உணவுத் தட்டு ஒன்றைக் கண்டெடுத்தான்.
அப்பாத்திரம் பொன்னால் ஆனது என்பதை அவன் அறியவில்லை . வணிகன் ஒருவனிடம் அந்தத் தட்டைக் கொடுத்து இதற்குரியப் பணத்தைத் தர வேண்டினான்.

வணிகனோ, உழவனை ஏமாற்ற எண்ணினான். காரணம் அந்த தட்டு தங்கத்தால் ஆனது என்பதை உழவன் அறியவில்லை என்பதால்தான்.

இதனால் அவன் அதன் விலையை குறைத்து சொன்னான். உழவன் எதிர்பார்த்த அளவுக்கு காசு கிடைக்காததால், அதற்கு மறுப்பு தெரிவித்தான்.

வணிகனோ பேரம் பேசினான். முதலில் ஆழாக்குத் தருகிறேன் என்றான். அடுத்து உரி தருகிறேன் என்றான்.

இதனால் உழவன் அந்த தட்டை வணிகனிடம் இருந்து பெற்றுக் கொண்டு மற்றொரு வணிகனிடம் சென்றான்.

ஏமாற்றிய மற்றொரு வணிகன்

அந்த வணிகன் அது தங்கத் தட்டு என்பதை உணர்ந்து, அதற்கு ஈடான எடைக்கு மிளகு தருவதாகக் கூறி அதை கொடுத்து தங்கத் தட்டை பெற்றான்.

அந்த தட்டை பெற்ற வணிகன், அதில் இருந்த சேற்றை கழுவி சுத்தம் செய்ய எண்ணி கிணற்றடிக்கு சென்றான்.

அவன் சுத்தம் செய்யும்போது தவறி ஆழமான அந்த கிணற்றுள் தங்கத் தட்டு விழுந்து விட்டது.

இதைக் கண்ட அவன் பதறிப்போனான். தங்கத் தட்டை கோட்டை விட்டு விட்டோமே என மனம் உடைந்து இறந்து போனான்.

தானாக வந்த தங்கத் தட்டை குறைந்த விலைக்கு வாங்க ஆசைப்பட்டு கோட்டை விட்டு விட்டோமே என்று முதல் வணிகனும் வருந்தியே உயிரை விட்டான் என்று கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

களவு திருக்குறள் சொல்லும் விளக்கம்

தாத்தா! வணிகத்தில் இப்படி பொருளை குறைவாக மதிப்பிட்டு கைவசப்படுத்துவது களவு ஆகாதா , பெரிய தவறு அல்லவா?

இதில் என்ன சந்தேகம் ஆனந்தா… ஒரு பொருளை குறைவாக மதிப்பிட்டு உரியவரை ஏமாற்றுவது களவுதான்.

அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும் என்பதை புரிந்து கொண்டாயா..

இப்போது களவு திருக்குறள் விளக்கத்தை கேட்போம்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

(குறள் – 283)

தாத்தா, இந்தக் கதைக்கேற்ற இன்னொரு குறளும் உள்ளது சொல்லட்டுமா?

எங்கே சொல்லு…

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

(குறள் – 282)

சபாஷ்.. ஆனந்தா

அதற்கான பொருளைச் சொல் பார்ப்போம்.

குற்றமான செயல்களை மனதால் கூட நினைக்கக் கூடாது. அதுவும் ஒரு பாவமே. ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது.

ஆனந்தா நன்றாகச் சொன்னாய்.

ஒன்றிய பட்ஜெட்: பிகார், ஆந்திரா சிறப்பு நிதி

சென்னை: ஒன்றிய பட்ஜெட் 2024-25-இல் பிகார், ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதன் முக்கிய அம்சங்கள்:

ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு

  • மாநில தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்
  • மாநிலத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • ஆந்திர மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும்.
  • சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும்.

பிகார் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு

  • பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
  • பிகார் மாநிலம் கயா முதல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.
  • பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பிகாரில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க திட்டம் கொண்டு வரப்படும்.
  • பிகாரில் உள்ள புராதன கோயில்களை மேம்படுத்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
  • பிகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காசி விஸ்வநாதர் கோயில் மேம்பாடு

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயி்ல், பிகார் கயா, புத்த கயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.
நாளந்தா பல்கலைக் கழக மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

பழங்குடியின மக்களுக்கு புதியத் திட்டம்

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் அதிகரிக்கவும் நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 5 கோடி பழங்குடியின மக்களுக்காக ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான் என்ற புதியத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.

சூரிய சக்தி திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார்.

மத்திய பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள் எவை?

சென்னை: மக்களவையில் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான – மத்திய பட்ஜெட் 2024 – முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (23.7.24) தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் 2024-இல் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:

மத்திய பட்ஜெட் 2024 – வருமான வரியில் மாற்றம் என்ன?

  • புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
  • புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி கிடையாது.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் உடையவர்களுக்கு 5 சதவீதம் வரி, ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
  • 10 முதல் 12 லட்சம் வரையிலும் 15 சதவீதம் வரி, 12 முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி.
  • 15 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
  • பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

  • வரும் 5 ஆண்டுகளில் 1000 ஐடிஐக்கள் உருவாக்கப்படும்.
  • உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
  • 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.
  • நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
  • பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும்.
  • வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முதன் முறையாக பணிக்கு செல்வோரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ரூ.15 ஆயிரம் வரை செலுத்தப்படும்.
  • வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகைகள்

  • உற்பத்தித் துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு உத்தரவாதம் இன்றி இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
  • முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. முத்ரா திட்டத்தில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்திய தொழில் முனைவோருக்கு இக்கடனுதவி கிடைக்கும்.
  • குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்

  • பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
  • தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியரர் கூட்டமைப்பில் உருவாக்கப்படும்.
  • தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

மாணவர்களின் உயர்கல்விக்கு கடனுதவி

  • நடப்பாண்டு பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவியை அரசு அளிக்கும். இந்த உதவி இ-வவுச்சர்கள் மூலம் வழங்கப்படும்.
  • இது ஆண்டுதோறும் நேரடியாக ஒரு லட்சம் மாணவர்களுககு வழங்கப்படும். கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.

டிஜிட்டல் மயமாகிறது வேளாண் துறை

  • வேளாண் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • டிஜிட்டல் முறையில் காரீஃப் வேளாண் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
  • விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான நிதியுதவிகள் நபார்டு மூலம் வழங்குவது எளிதாக்கப்படும்.
  • அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தத் திட்டம்.
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு

  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
  • நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுககீடு செய்யப்படும்.
  • தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின்நிலையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை.
  • புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கபபடும்.
  • மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும்.
  • தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும்.
  • பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படும்.
  • அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது.
  • அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படும்.
  • வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதமாக இருந்த வரி 34 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
  • 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
    லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.