மக்களவை சபாநாயகர் தேர்தல் புதிதல்ல!


சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 தடவை மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடந்திருக்கின்றன. தற்போது நடைபெறும் சபாநாயகர் தேர்தல் 4-ஆவது முறையாகும்.
கடந்த காலங்களில், மக்களவை சபாநாயகர் தேர்தல்கள் 1952, 1967 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்கிறது. இதனால் இந்த வித்தியாசமான தேர்தல்கள் பற்றி நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

1952 தேர்தல்

1952-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேரு சபாநாயகர் பதவிக்கு மாவலங்கரை முன்மொழிந்தார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரும், இடதுசாரித் தலைவருமான ஏ.கே.கோபாலன், சந்தர் சந்தானத்தை முன்மொழிந்தார்.
அதனால் அப்போது மக்களவை சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. இதன்மூலம் அத்தேர்தலில் மவ்லாங்கர் 394 வாக்குகளைப் பெற்றார். சங்கர் சந்தானம் 55 வாக்குகளைப் பெற்றார்.

1967 தேர்தல்

1967-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை அடுத்து சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. அத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டியும், தென்னேதி விஸ்வநாதனும் போட்டியிட்டார்கள்.
இந்த தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி 278 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக 207 வாக்குகளை தென்னேதி விஸ்வநாதன் பெற்றார். இதையடுத்து நீலம் சஞ்சீவ ரெட்டி சபாநாயகர் ஆனார்.

1976 தேர்தல்

1976-ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் திரும்பப்பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பாலான இடங்களை வென்றன.

எனவே, மக்களவை சபாநாயகர் பதவிக்கு பலிராம் பகத், ஜன்னாத் ராவ் ஆகியோர் போட்டியிட்டார்கள்.
இத்தேர்தலில் பலிராம் பகத் 344 வாக்குகளைப் பெற்றார். ஜகன்னாத் ராவ் 58 வாக்குகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பலி ராம் பகத் சபாநாயகர் ஆனார்.

1990-ஆம் ஆண்டுக்கு பிறகு கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் தொடங்கியது. இதனால் சபாநாயகர் பதவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
1989-இல் தேசிய முன்னணி ஆட்சியில் அமர்ந்தது. அப்போது ஜனதாளத்தின் ரபி ராய் சபாநாயகர் ஆனார்.
1991-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது சிவராஜ் பட்டீல் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
1998-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகி சபாநாயகர் ஆனார்.
1999-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதன் பிறகு பாலயோகி சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பாலயோகி மரணம் அடைந்ததை அடுத்து சிவசேனாவின் மனோகர் ஜோஷி சபாநாயகர் ஆனார்.
2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. அப்போது இடதுசாரிகளின் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகர் ஆக்கப்பட்டார்.
2009-ஆம் ஆண்டு மீரா குமாரும், 2014-ஆம் ஆண்டில் சுமித்ரா மகாஜனும், 2019-ஆம் ஆண்டு ஓம் பிர்லாவும் சபாநாயகர் பதவிக்கு வந்தனர்.
நாடு விடுதலை அடைந்தப் பிறகு தற்போது 4-ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு போட்டி நடைபெறுகிறது.


இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகிறார்கள்.
இந்த சபாநாயகர் தேர்தல் மக்களவையில் 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 48 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது.

ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?

வெ நாராயணமூர்த்தி

இன்றைக்கு பணத்துக்காகவும், பதவிக்காகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் ஆன்மீக சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வை இப்போதாவது பெறுவது அவசியமாகிறது.

ம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான
எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள்
அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும்.

ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய உயர்நிலை சிந்தனை
(இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்).

இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்).

இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

ஆன்மீக சிந்தனைகள்

பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மீக சிந்தனைகள் அல்லது தெய்வீகத்தைப் பற்றிய சிந்தனைத்தான்.

இது கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள்,
தானம், தியானம், நல்லோர் நட்பு போன்றவையாக இருக்கலாம்.

பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்க்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக ஆன்மீக சிந்தனைகள் இருக்கலாம்.

இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.

இவையே நம்மை இயக்குகின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்கைப் பயணமும் அமைகிறது.

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் நாம், நம் குடும்பம், உறவுகள், நம்மைச் சுற்றியுள்ள உலகம், ஆசைகள், வேட்கைகள், நல்லவை, கெட்டவை, தேவை, தேவையில்லாதவை, பயன்படக்கூடியவை, பயனில்லாதவை. போன்ற உலக பொருள்களில் மோகம் கொண்டு ஒரு சிறிய, ஸம்ஸார வட்டத்துக்குள் சிக்குகிறோம்.

இத்தகைய சிந்தனைகளால், இந்த குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறோம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

நம்மை இப்படி தடுத்து சீர்குலைக்க வைக்கும் எட்டு நாசக் காரணிகளைப் பற்றி ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.


த்யாயதோ விஷயா புன்ஸ சங்க தேஷுபஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமாத் க்ரோத அபிஜாயதே

க்ரோதாத் பவதி சம்மோஹ சம்மோஹாத் ஸ்மிருதி விப்ரமஹ
ஸ்மிருதி ப்ரன்ஷாத் புத்தி நாஷஹ, புத்தி நாஷாத் ப்ரநாஷ்யதி

(ஸ்ரீமத் பகவத் கீதை, அத்யாயம் 2, ஸ்லோகம் 62,63)

“புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது
(த்யாயதே), நம் சிந்தனை அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது (சங்கமமாகிறது).

சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது. ‘அது எனக்குக் கிடைத்தால்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத்
(காமம்) தூண்டுகிறது.

இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப் போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது.

ஆசை பேராசையாக மாறுகிறது. அது தடைபடும்போதோ, கிடைக்காமல்
போகும்போதோ ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத் (க்ரோதம்)
தூண்டுகிறது.

கோபம்

கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது. முதலில் தெளிவாக யோசிக்கும்
திறமையை மூடி மறைக்கிறது (சம்மோஹத்-மறைத்தல்). பின் குழப்பத்தை ஏற்படுகிறது. (விப்ரமஹ-குழப்பம்).

இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிக சிந்தனை
உட்பட) மறந்துபோகின்றன (ப்ரன்ஷாத்-மறப்பு). இதனால் புத்தி தடுமாறுகிறது (புத்தி
நாசம்). சரியான முடிவு எடுக்கமுடியாமல் நாசவாலையில் சிக்கிக் கொள்கிறோம்.

ஆன்மீக சிந்தனைகள் தடைபடுகின்றன. தவறான பாதையில் சிக்கிக் கொண்டபிறகு நாம் சந்திக்கும் பிரச்னைகள் பெரிதாகும்போது சீரழிவை நோக்கி நகர்கிறோம்.

இந்நிலையிலிருந்து மீள்வதே முக்கியமாகி இதற்கான விடைதேடுவதே நம் முதல்
பணியாகிறது.

ஆன்மீக சிந்தனைகளை அடையும் முயற்சி

இந்த முயற்சியில் அவ்வப்போது ஆறுதல் கிடைக்க முதலில் எளிய வகையில் உடனடி
நிவாரணம் தரும் ஆன்மிக வழிகளைத் தேடுகிறோம்.

எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காதபோது ஆன்மீக சிந்தனைகள் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது.

இதனால்தான் நம்மில் பெரும்பாலோர் ஆன்மீக சிந்தனைகளில் முழு ஈடுபாடு கொள்ளமுடிவதில்லை.

நாம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவோ, உணரவோ முடிவதில்லை.

ஏன் இத்தகைய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்? இதை எப்படி சரி செய்வது
என்பதை பார்ப்போம்.

வேத சாஸ்த்ரங்கள் விடை

வேத சாஸ்த்ரங்கள் இதற்கு விடை அளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான ஸக்தி உயிரோட்டங்கள் உள்ளன. இவை அவனுக்குள் சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன.

அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே அவன் உள், வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், உணர்ந்துகொள்ளுதல்
போன்ற இவை அனைத்தும் ஞான உயிரோட்டத்தால் ஏற்படுவது.

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் விதம் பற்றிய வரையறைகளை தேர்வு செய்வது கர்ம உயிரோட்டம். நாம் பிறக்கும்போதே நமக்குள் பிரத்யேகமாக உருவான உள்நிலை
பரிவர்தனைகளை (பாவனைகளை) வெளிக்காட்டுவது ஸ்வபாவ உயிரோட்டம்.

ஸ்வபாவ உயிரோட்டம்

இங்கே ஸ்வபாவ உயிரோட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்வது அவசியம். இதை
‘ஸம்ஸ்க்காரம்’ என்று குறிப்பிட்டு சொல்கின்றன வேதங்கள்.

இது ஒரு வகையான எண்ணச் சுமைகள் (நினைவுச் சுவடுகள்) கொண்டவை. நல்லவை, தொல்லை தருபவை சேர்ந்த ஒரு கலவை.

பிறந்ததிலிருந்து நாம் பார்த்த அனுபவங்கள், சில நிகழ்வுகள், ஆறாத வடுக்கள், சோகம் அல்லது சுகம் தரும் நினைவுகள் (சென்ற பல பிறப்புகளிலிருந்தும் கூட இருக்கலாம்) ஆகியவை நம்முள் ஆழப் பதிந்து கிடக்கின்றன.
இவை ஆழ்மனதில் சேமிப்பாக, பத்திரமாக பாதுகாக்கப் படுகிறது. இந்த எண்ணச்
சுவடுகளின் தாக்கங்கள்தான் செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன.

இது ஒரு ஸ்திர நிலை. சாதாரணமாக மாற்றிக்கொள்ளவோ அழிக்கவோ முடிவதில்லை.
தேவைப்படும்போது இவை ஆழ்சேமிப்பிலிருந்து எண்ணங்களாக அவ்வப்போது
கொப்பளித்து வெளிவருகிறது. இது ஸ்வபாவ சக்ரம்.

புத்தியின் முடிவு

சிலர் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவது, சந்தேகப்படுவது, ஆதங்கப்
படுவதைப் பார்க்கிறோம்.

சிலர் எதற்கும் அசராமல், மிகப் பெரிய இன்னல்களையெல்லாம் கூட சர்வ சாதாரணமாக கையாள்வதையும் பார்க்கிறோம்.
கூச்சம், குறும்பு, கிண்டல், அமைதி, உரக்கப் பேசுவது, மென்மையாகப் பேசுவது,
கூர்ந்து கவனிப்பது, மரியாதையான நடத்தை, பக்திமார்கத்தில் நாட்டம், சிரித்துப்
பேசுவது,

இப்படி ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனிப்பட்ட பாவனை (ஸ்வபாவம்)
இருக்கிறது. இதை சாதாரணமாக அழிக்கவோ அல்லது அதன் பிரதிபலிப்பிலிருந்து
விடுபடுவதோ சுலபமான காரியம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் ஸம்ஸ்க்காரங்களின் உந்துதல்படியேதான் புத்தி முடிவு
எடுக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே நாம் பல காரியங்களை தெரிந்தோ தெரியாமலோச் செய்கிறோம், பின்னர் அவைகளின் (நல்ல அல்லது தீய) விளைவுகளையும், பலன்களையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம்.

செம்மைபடாத நம் எண்ணங்களே நமக்கு எதிராகத் திரும்பி, எப்படி நம்மை
அழிக்கின்றன பார்த்தீர்களா?

இவைகளை பிராரர்த கர்மவினைகள் என்கிறது வேதங்கள். ஆக நமக்குள்ளே சேர்த்து வைத்திருக்கும் இந்த ஸ்வபாவங்களை எப்படி சீர்ப்படுத்துவது? செம்மைப்படுத்துவது?

ஸ்ரீமத் மஹாபாரத புராணம்

செம்மை படாத ஸ்வபாவம் எப்படி ஆபத்தானது என்பதை துரியோதனின் மனப்
போக்கை உதாரணமாக வைத்து விளக்குகிறது ஸ்ரீமத் மஹாபாரத புராணம். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும்.

மஹாபாரத புராணத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாகக் கேள்விப்பட்ட ஒரு நாத்திக நண்பர் ஒரு கேள்வி கேட்டார். மிகப் பெரிய ஞான தத்துவங்களை ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் போதிக்கவேண்டும்?

சாதுவான, சாத்வீகமான அர்ஜுனனுக்கு இது பெரிதாகப் பயன்படப் போவதில்லை. இவ்வளவு தத்துவக் குவியல்களையும் நியாய தர்மங்களையும் இந்தக் கதையின் முக்கிய வில்லனான துரியோதனனுக்கு சொல்லியிருந்தால் ஒரு வேளை அவன் மனம் மாறி, யுத்தமும் அழிவும் இல்லாமல் தவிர்த்திருக்கலாமே?

இது உங்களுக்கு நியாயமான கேள்வியாகப் படுகிறது அல்லவா?

இது பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தெரியாதா?

ஏற்க மறுத்த துரியோதனன்

யுத்தத்துக்கு முன்னரே துரியோதனனைச் சந்தித்து அவனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் துரியோதனின் ஸ்வபாவம் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதது.

‘நீ சொல்லும் தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கேட்டது எல்லாம் எனக்கும் தெரியும் கண்ணா! நானும் குருகுலத்தில் கற்றவனே.

ஆனால் தர்மத்தையும், நியாயத்தையும், நல்லவைகளையும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறதே! என் மனம் சொல்லும் அதர்ம, அநியாய, கெட்ட விஷயங்களை, அவைகளின் உந்துதல்களை என்னால் எதிர்க்க முடியவில்லையே!

என் மனம் எடுக்கும் முடிவுதான் என்னுடையது’ என்று ஆணித்தரமாக அத்துணை போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

ஸாட்ஷாத் பரம்பொருளே வந்து நல்லவைகளை போதித்தாலும், அவன் ஸ்வபாவம்
அவனை எப்படி தடுக்கிறது பாருங்கள்!

இந்த பாவனைதான் அவன் அழிவுக்குக் காரணமானது. அதனால்தான் எண்ணங்களையும், புத்தியையும், பாவனைகளையும் கட்டுப்படுத்தும் திறமைகொண்ட அர்ஜுனனுக்கு ஞானபோதனை செய்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த போதனைகள் அர்ஜுனனுக்கு மாத்திரம் அல்ல, நம் எல்லோருக்கும் சேர்த்துதான்.

மனதைக் கட்டுப்படுத்த 8 வழிகள்

நல்ல வாழ்க்கையை கடைப்பிடிக்க கௌதம புத்தன் எட்டு வழிகளை (அஷ்டாங்க
மார்க்கம்) சொல்லிச் சென்றுள்ளார். மனதை கட்டுப்படுத்த எட்டு யோக (அஷ்டாங்க யோக) முறைகளை பதஞ்சலி முனிவர் சொல்லிச் சென்றுள்ளார்.

அதுபோல நம்மை ஆன்மீக சிந்தனைகள் கொண்டு செல்லும் பாதையில் முனைப்போடு செல்லத் தடையாக இருக்கும் இந்த எட்டு நாச காரணிகளிலிருந்து விடுபட வேண்டிய முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் வாயிலாகப் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அன்று துரியோதனன் பேசியது நிதர்சனமாக உண்மை. இது அவன் பிரச்சனை
மட்டுமல்ல. இன்று இதுவே நம் பெரும்பாலோரின் மிகப் பெரிய பிரச்சனை.

நாளடைவில் இது பழக்கமாகிவிடுகிறது. அதனால் பலவிதமான சிக்கல்களில் தொடர்ந்து சிக்கி அல்லல்படுகிறோம் என்பதையும் கண்கூடாக அனுபவிக்கிறோம்.

அப்படியென்றால் சதா இந்த ஸம்ஸ்க்கார மாயத்தில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்க
வேண்டியதுதானா? இதற்குத் தீர்வே இல்லையா?

ஆன்மீக சிந்தனைகள் தரும் நிவாரணம்

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வபாவம் என்பது நம்
உண்மையான இயல்பு அல்ல.

சில எண்ணங்களின் உந்துதலால் கட்டுப்படுத்தப்பட்டு மனதால் பிரதிபலிக்கபடும் ஒரு நிலை.

ஆனால் இது நம் உண்மையான இயல்பு அல்ல என்று உணர்ந்து இந்த நிலையிலிருந்து விடுபட நாம் முயல்வதே இல்லை. இது நம் உண்மையான இயல்பை நாம் உணரவே முடியாமல் தடுக்கும் மிகப் பெரிய தடை.

இதிலிருந்து மீள என்ன வழி? நம் உண்மை இயல்பை உணர்வது என்பது நம்
உண்மையான ஸ்வரூபமே தெய்வீகம் என்பதை உணருவது! இது எப்படி சாத்தியம்?

ஒரே ஸ்வரூபம்

நம் அறியாமையால் இந்த உடல், உள்ளம், எண்ணங்கள், நினைவு, புத்தி கொண்ட
கலவையே ‘நாம்’ என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ,

இதுவே நம் இயற்கையான இயல்பு என்றும் தவறாக நம்புகிறோம். இந்தப் புலன்களின்
கலவைகளால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நம்முடையது என்று
ஏற்றுக்கொண்டு மேலும் அல்லல்படுகிறோம்.

அதனால் தொடர்ந்து தவறு செய்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறோம் என்று சுட்டிக்காட்டுகின்றன வேதங்கள்.

நம் அனைவருக்கும் ஒரே ஸ்வரூபம்- தெய்வீகம். இது சத்சித்ஆனந்த நிலை. ஆத்ம
நிலை. ப்ரம்ம நிலை. ஆன்மீக சிந்தனைகள் தரும் உணர்வு.

ஆனால் இதை உணர முடியாமல் ஸ்வபாவத்தால் கட்டுண்டு மாறுபடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள எட்டு (நினைப்பு, இணைப்பு, காமம், க்ரோதம், மறைப்பு, குழப்பம், மறப்பு, புத்திநாசம்) காரணிகளுக்கும் அடிமையானவர்கள் இவைகளின் வெளிப்பாடான ஸ்வபாவங்களுக்கும் அடிமையாகிறார்கள்.

செம்மைபடாத ஸ்வபாவங்களிலிருந்து விடுபட வேதங்கள் பல வழிகளைக்
காட்டியுள்ளது.

அந்தக் காலத்தில் குருகுலங்கள் இதற்கான முறையான பயிற்சிகளை கற்றுத் தந்து வந்தன. இன்றைக்கு இவைகளைப் பற்றி படித்து தெரிந்துகொண்டாலும், விளக்கம் சொல்லவோ, ஆழமான பயிற்சி தரவோ தகுந்த குருகுலங்களோ, குருமார்களோ இல்லை.

கற்றுக்கொள்ள நமக்கு நேரமோ, ஆர்வமோ, முனைப்போ, வழிமுறைகளோ இல்லை. பிறகு என்னதான் வழி?

ஒன்று, நாமே போராடி முயன்று கற்றுக்கொள்வது. சாஸ்த்ரங்களைக் கற்றுக் கொள்ளலாம். வ்யாக்கானங்களை படிக்கலாம்.

வேதத்தைக் கற்றவர்களுடன் நட்பு கொண்டு பல விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு நம் வாழ்நாள் முழுதும் தேவைப்படலாம். இரண்டாவது, நம்மைப் படைத்தவன்
மட்டுமே செய்யக்கூடியது! இது இமைப் பொழுதிலும் நடக்கலாம்.

பயிற்சியும் முயற்சியும் தேவை

‘அவித்ய-காம-கர்ம’ என்பது ஒரு ஆபத்தான வாழ்வியல் வட்டம். அவித்ய (அறியாமை)
தேவை இல்லாத இச்சைகளை (காம) உருவாக்கும்.

இச்சைகளின் எதிர்மறை விளைவே கர்ம வினைப்பலன்கள். நாம் புலன்களால் பார்ப்பது, உணர்வது அனைத்தும் நம் உண்மை இயல்பு நிலை பற்றிய அறியாமையால் ஏற்படும் தோற்றங்கள்.

‘உண்மை நிலையை’ அறிந்து பிரித்து எடுக்க கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை.

எண்ணங்களை ஒருநிலைப் படுத்தும் தியானம், மந்த்ர ஸ்மரணை பக்தி வழிபாடு, ஸாத்வீக சிந்தனைகள், ஆன்மிக ஆன்றோர்களுடன் நட்பு, தர்மகாரியங்கள் செய்வது போன்ற பயிற்சிகள் ஆன்மீக சிந்தனைகள் மீதான பலனை தரும். ஆனால் இது போதாது. ஆரம்பம் மட்டுமே.

அவித்ய-காம-கர்ம வட்டத்திலிருந்து விடுதலை பெற அனைத்தும் உணர்ந்த ஒரு
பிரம்மகுருவின் உதவியும், ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் அவசியம்.

ஸ்ரீசங்கராச்சாரியார் சுட்டிக்காட்டும் விவேகம், வைராக்யம், உபரதி, திதிக்ஷை, ஷ்ரத்தை, சமாதான, முமுக்ஷத்வ (ஒரே சிந்தை) கொண்ட ஒழுக்கக் கட்டுப்பாடு நியதிகளுடன், முனைப்போடு கடும் முயற்சி செய்தால், அந்த குருவே அவரை அடையாளம் காணும் வழியைக் காட்டுவார்.

மேலும் அத்தகைய குருவருள் பெற இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியம், என்கிறது சாஸ்த்ரங்கள்.

ஆன்மீக சிந்தனைகள் மட்டுமே இந்த பிறப்பின் காரணத்தை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவி. ஆன்மீக சிந்தனைகள் இன்றி ஈடுபடும் எந்த செயலும் முழுமை அடைவதில்லை. ஆன்மீக சிந்தனைகள் என்பது இப்பிறவியில் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு பாதை.

மகாபாரதம் சொல்லும் மணி முடி, சிகை முடி

குடந்தை ப. சரவணன்

மகாபாரதம் மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் ஒரு புராண காவியமாக விளங்குகிறது.

“தேர் ஓட்டி மகன் என்பதாலும், மணிமுடி இல்லை என்பதாலும் உனக்கு வில் போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை”. இப்படிச் சொல்லி மாவீர புருஷர்களான பாண்டவர்கள், கௌரவர்களின் குருநாதர்கள் கொண்ட சபையினர் ஒருவனை
அவமானம் செய்தார்கள்.

அவன்தான் கொடுத்துக் கொடுத்து கை சிவந்த கர்ணன் என்ற புகழின் உச்சியை பின்னாளில் பெற்றவன்.

மாவீரன் கர்ணன்


கர்ணன் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட மாமன்னன் துரியோதனன் தனது அதிகாரத்தில் உள்ள ஒரு நாட்டின் மன்னனாக பதவி தந்து மாவீரன் கர்ணனை அச்சபையினர் முன்னே மணிமுடி சூட்டி மகிழ்ந்தான்.

மகாபாரதம் திரௌபதி சபதம்


திரௌபதி தன் சபதம் நிறைவேறும் வரை தன் சிகையை முடிய மாட்டேன் என்று சொல்கிறாள். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனான மன்னன் ஜயத்ரதன், திரௌபதி மீது ஆசைக் கொண்டு அவளை கடத்தி செல்ல முயற்சி செய்கிறான்.

அதனால், பாண்டவர்கள் அவனைப் பிடித்து இழுத்து வந்து அவனின் தலையில் உள்ள சிகையை ஐந்து சிறு சிறு குடுமிகளாக பிரிக்கிறார்கள்.

பிறகு வெட்டப்பட்டு மற்ற முடிகளை மழித்து அதையே தண்டனையாக வழங்கினார்கள். இது மகாபாரத இதிகாசத்தில் வரும் மணிமுடி, முடி தொடர்பான சில நிகழ்வுகள். இதுதான் மகாபாரதம் போருக்கு வழி வகுக்கிறது.

சிரஞ்சீவிகள்

அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் ஆகிய ஏழு பேரும் சிரஞ்சிவிகள் ஆவர்.
மகாபாரத காவியத்தில் உலா வரும் ஒருவன் தான் இந்த சிகை இழந்த சிரஞ்சீவி அஸ்வத்தாமன். இவனே மாவீரர் துரோணரின் மகன்.
கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. அந்த போரின் 17-ஆம் நாள் போர்க் களத்திலுள்ள பாசறையில் துரியோதனன் பீமனால் தாக்கப்படுகிறான்.
கால்கள் உடைந்துபோனதால், உடல் வலியும், மனவலியும் அவனை துன்பத்தில் துடிக்க வைத்தது. அப்போது அவனை துரோணர் மகன் அஸ்வத்தாமன் சந்திக்கிறான்.
அப்போது அவன், தங்களை இந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை, எனது தந்தையை கொன்றவர்களை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று சொல்லிச் செல்கிறான்.
அன்றைய நள்ளிவு நேரத்தில், பாண்டவர்களின் பாசறைக்குள் ஒரு கள்வனைப் போல் நுழைகிறான். அங்கு பாண்டவர்கள் போல் தோற்றம் கொண்ட உபபாண்டவர்கள் ஐவரும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
அவர்களை பாண்டவர்கள் என நினைத்து அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினான் அஸ்வத்தாமன்.

வெட்டியத் தலைகளை எடுத்து வந்து துரியோதனின் காலடியில் வைத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகச் சொல்கிறான்.
இதைக் கண்ட துரியோதனன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். நேர்மையான முறையில் நீ போரில் இதை செய்திருந்தால் நன்று.
ஆனால் நீ அவர்களை தூங்கும் போது வஞ்சகமாக வெட்டி வீழ்த்தியது யுத்த தர்மத்துக்கு எதிரானது. அதற்கான தண்டனையை நீ அடைவாய் என்று நிந்தித்து திருப்பி அனுப்பினான்.
உபபாண்டவர்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. இதைக் கண்ட அர்ஜுனன் அஸ்வத்தாமானின் ஈனச் செயலுக்காக அவனது சிரசைக் கொய்து உங்களின் காலடியில் வைக்கிறேன் என சூளுரைக்கிறான்.
அதைத் தொடர்ந்து அவன் ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட்டு சிறைப்பிடித்து வந்து திரௌபதி முன் நிறுத்துகிறான்.

மன்னிப்பும், தண்டனையும்


தலைக்குனிந்து நின்ற அஸ்வத்தாமனின் அவல நிலையைப் பார்த்த திரௌபதி மனம் இறங்கி இவன் தங்களின் குருவின் புதல்வர். புதல்வர்களை இழந்து தவிக்கும் என் மனவேதனை இவனின் தாயாருக்கு வர வேண்டாம். அதனால் இவனை மன்னித்து விடலாம் என்கிறாள் திரௌபதி.
அவளுடைய கருத்தை தருமர் உள்பட அனைவருமே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், பீமசேனன் மட்டும் இதை ஏற்கவில்லை.
பல உயிர்களை வஞ்சகமாக கொன்றவனின் உயிரை எடுத்தாக வேண்டும் என உறுதியாக சொல்கிறான். இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணர் ஒரு கருத்தை இப்படி சொல்கிறார்.

“ஒருவனின் மானத்திற்கு சமமாக கருதப்படுவது உயிர், அந்த உயிருக்கு சமமாக கருதப்படுவது தலையில் உள்ள சிகை (முடி). அதனால் அஸ்வத்தாமனின் உயிரை எடுப்பதற்கு பதில் அவனுடைய சிகையை எடுப்பது உயிரை பறிப்பதற்கு சமம்”
என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதன்படி, மரணமே இல்லாத சிரஞ்சீவியான அஸ்வத்தாமனின் உயிருக்கும், மானத்திற்கும் சமமான சிகை முடியையும், அதனுடன் சேரத்து ரத்தினத்தையும் வாளால் வெட்டி திரௌபதி காலடியில் சமர்ப்பிக்கிறான் அர்ஜுனன்.

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் காணப்படும், மகாபாரத காவிய நிகழ்ச்சியை நம் கண் முன்னே நிறுத்தும் மிக அரிதான முப்பரிமாண சிற்பம் (படம் குடந்தை ப. சரவணன்)


சிரஞ்சீவி என்றாலும் தவறு செய்தால் இறைவன் சபையில் மரணத்திற்கு நிகரான தண்டனை உண்டு. இதை உலகுக்கு உணர்த்தவே, கிருஷ்ண பகவான் நடத்திய லீலையே இது.
இதனால்தான் இன்றைக்கும், ஒருசில ஊர்களில் மன்னிக்கக் கூடிய குற்றங்களுக்காக, தவறு செய்தவர்களைத் தண்டிக்க, மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தும் வழக்கம் இருக்கிறது. அத்துடன் கழுதை மீது ஏற்றி ஊரை சுற்றி வரச் செய்வதை மிகப்பெரும் தண்டனையாகக் கருதி செய்கிறார்கள்.

அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆயுள் விருத்தி தலம்

செந்தூர் திருமாலன்

உலகில் பிறப்பு ஒன்று உண்டு என்றால் இறப்பு வருவது நிச்சயம். மனிதனாகப் பிறந்தவர்கள் மரணத்திலிருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தை. பயத்தைத் தராமல் இருக்க இறையருள் அவசியம். அந்த அருளை அமிர்தகடேஸ்வரர் கோயில் தருகிறது.

மரண பயம்

மனிதன் மரணத்தை நினைத்து பயந்து அதனால் அடையும் மன சஞ்சலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

மரண பயம் நீங்க அதற்கென்று அமையப் பெற்ற ஆலயங்களைத் தேடிச் சென்று இறைவனை பயபக்தியுடன் வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் மன அமைதி கிடைக்கும்.

புராண இதிகாசங்களில் திருக்கடையூர் , திருவீழிமிழலை ,திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகிய திருத்தலங்கள் மரண பயம் போக்கும் தலங்களாக கூறப்பட்டுள்ளன.

திருக்கடையூர் – அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று

இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்திப் பெற்றது. சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்று.

நாகை மாவட்டம், பொறையார் அருகே திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது.

மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார். எமனை உதைத்த காலசம்கார மூர்த்திக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

அம்பாளின் திருநாமம் அபிராமி. திருஞானசம்பந்தர். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் பதிகங்கள் பாடியுள்ளனர்.

பிரம்மன் வழிப்பட்ட தலம்

பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான் பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றை கொடுத்தார். இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்துக்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார்.

சிவபெருமான் கட்டளைப்படி, பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டு வைத்தார். திருக்கடவூரில்தான் வில்வ விதையிலிருந்து முளை வந்தது.

இதனால் இப்பகுதிக்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது. சாகா வரம் தரும் அமிர்தத்தை பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர்.

அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்குக் கொடுக்க விரும்பாத தேவர்கள் அதைக் குடத்தில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியில் நீராடுவதற்காக ஒரு இடத்தில் அதை வைத்தனர் .நீராடிவிட்டு குடத்தை எடுக்க முயன்றபோது அதை எடுக்க முடியவில்லை.

அந்த குடம் பாதாளம் வரை ஊடுருவி சென்று சிவலிங்கமாக மாறி இருப்பதைக் கண்டார்கள். அமிர்தம் இருந்த இடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் என்பதால் இப்பகுதி திருக்கடையூர் என பெயர் பெற்றது.

உற்சவர் அமிர்தகடேஸ்வரர்

தல வரலாறு

மிருகண்டு முனிவர் தம்பதியர் குழந்தை பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களின் பக்தியை மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றினார்.

“ஆயிரம் ஆண்டுகள் வாழும் கெட்ட குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டுமே வாழும் அறிவில் சிறந்த மகன் வேண்டுமா? ” எனக் கேட்டார்.

அவர்கள் 16 வயது வரை மட்டுமே வாழக் கூடிய தலைச் சிறந்த மகனே எங்களுக்கு போதும் என்றனர்.

இறைவன் அவர்கள் விருப்பப்படியே வரம் அளித்தார். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் மார்க்கண்டேயன் என்ற மகன் பிறந்தான்.

மார்க்கண்டேயன் அறிவில் சிறந்தவராகவும் சிறந்த சிவபக்தர் ஆகவும் விளங்கினார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் பதினாறு வயதுதான் என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினர்.

எனக்கு நீண்ட ஆயுளை சிவபெருமாள் மட்டுமே வழங்க முடியும். அதனால்தான் ஒவ்வொரு ஆலயமாக சென்று வழிபடுகிறேன் என பெற்றோரிடம் கூறிவிட்டு மார்க்கண்டேயன் ஒவ்வொரு ஆலயமாக தரிசித்து வந்தார்.

அவ்வாறு அவர் திருக்கடையூர் வந்தபோது அவருடைய ஆயுள் முடிவுக்கு வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினார்.

எமனைக் கண்டு அச்சம் அடைந்த மார்க்கண்டேயன் தான் வழிபட்டுக் கொண்டு இருந்த லிங்கத்தை ஆறத்தழுவிக் கொண்டான்.

எமனும் தனது பாசக் கயிற்றை லிங்கத்தின் மீது சேர்த்து வீசினான். சிவபெருமான் பக்தனை காக்கும் பொருட்டு லிங்கத்தில் இருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனை காலால் எட்டி உதைத்தார்.

காலனை சூலாயுதத்தால் கொன்று காலனுக்கு காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார்.

மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயதுடைய சிரஞ்சீவியாக வாழும் வரத்தை வழங்கி அருள்புரிந்தார்.

பின்னர் பூமாதேவி, பிரம்மா, மகா விஷ்ணு ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்கி எமன் உயிர் பெற்றதாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு


ஆலயத்தின் மேற்கில் ஏழுநிலை ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமாஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வர ர், பைரவர், பஞ்சபூதங்கள், சூரியன், அகத்தியர், சப்தகன்னியர்கள், 64 நாயன்மார்களின் சந்நிதிகள் உள்ளன.

இந்த கோவிலில் நவகிரகங்கள் இல்லை. கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் காலசம்கார மூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காட்சி தருகிறார்.

அருகில் மார்க்கண்டேயன் கூப்பிய கரத்துடன் காட்சி தருகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பிய நிலையில் நிற்கும் எமனுக்கு தனி சந்நிதியும் உண்டு.

எமனின் பாசக் கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் ஒரு தழும்பும் உள்ளது.

கோவில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பகுதியில், அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. முருகப் பெருமாள் ஒரு முகத்துடன் நான்கு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்

அமாவாசை அன்று வானில் தோன்றிய முழுநிலவு

திருக்கடையூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ஒரு அமாவாசை தினத்தன்று திருக்கடையூர் வந்தார். மன்னரின் வருகையின்போது அவரை கவனிக்காமல், பட்டர் அன்னை அபிராமி நினைவில் மூழ்கியிருந்தார்.

இதனால் பட்டரை நோக்கி இன்று என்ன திதி தெரியுமா என்று கேட்டார். ஆழந்த தியானத்தில் இருந்த பட்டர் இன்று பௌர்ணமி திதி என்று தவறுதலாக சொன்னார்.

.இதனால் கோபம் அடைந்த மன்னர் இன்று இரவு வானில் பௌர்ணமி நிலவு காணப்படாவிட்டால், பட்டருக்கு தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மன்னரிடம் தவறாக சொன்னதை அறிந்த பட்டர், அபிராமி சந்நிதி முன்பு குழி வெட்டி, அதில் தீ மூட்டி, அதற்கு மேல் ஒரு விட்டமும், 100 கயிறுகள் கொண்ட உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்தார்.

அன்னை மீது கொண்ட பக்தி உண்மையானால், இந்த பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தீக்குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பேன் என சபதம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அந்தாதி பாடல்களை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலுக்கும் உறியைத் தாங்கி நிற்கும் கயிறு ஒன்றை அறுத்து வந்தார்.

79-ஆவது பாடலை பாடும்போது, அன்னை காட்சி தந்து, தனது காதனியை விண்ணில் வீசி முழு நிலவு தோன்றச் செய்த அபிராமி, பாடலை தொடர்ந்து பாடக் கேட்டுக் கொண்டார்.

அன்னையின் கருணையைக் கண்டு வியந்து, தொடர்ந்து பாடல்களை பாடி 100-வது பாட்டுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.

மன்னர் தான் செய்த தவறுக்கு பட்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்

இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவிழாக்கள்


சித்திரை மாதம் பிரமோற்சவம்,

ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம்,

தை அமாவாசை உற்சவம்,

கார்த்திகை மாதம் 1008 சங்காபிஷேகம்.

இருப்பிடம்


நாகை மாவட்டம், மயிலாடுதுறை தரங்கம்பாடி செல்லும் வழியில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது.

சீர்காழியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை ,சீர்காழியில் இறங்கி அங்கிருந்து திருக்கடையூர் செல்லலாம்.

சஷ்டியப்த பூர்த்தி பூஜைகளை செய்யும் இடம்

மரண பயத்தை போக்கும் இடம் என்பதால் இந்த திருக்கோயிலில் நீண்ட ஆயுள் பெற தம்பதியர் பூஜை செய்ய வருகின்றனர்.

60 வயது நிரம்பியவர்கள் கோவிலுக்கு மனைவியுடன் வந்து ஆயுள் வேள்வி செய்கின்றனர்.

60 வயது தொடங்கும்போது உக்ரரத சாந்தியும், 61 வயது தொடக்கத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் செய்கிறார்கள்.

71 வயதில் தொடக்கத்தில் பீமராத சாந்தியும், 80 வயது தொடக்கத்தில் சதாபிஷேகமும் இங்கு செய்துகொள்கிறார்கள்.

என்றும் இளமையுடன் வாழ சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் இங்கு செய்யப்படுகிறது. இந்த பூஜைகளை அவரவர் பிறந்த தமிழ் மாதம், பிறந்த நட்சத்திரம், திதி, வாரம் கூடி வரும் நாளில் செய்துகொள்வது நல்லது.

திருக்கடையூர் கோவிலில் அறுபதாவது திருமண வழிபாடு நடத்தினால் ஒரு கோடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்

காமெடி டயலாக் – கணவனுடன் சமரசம் செய்துகொண்ட மனைவி

சிரிக்கவும் சிந்திக்கவும்


இது ஒரு சிரிப்பை தரும் காமெடி டயலாக்.
ஒரு பெண்ணின் கணவன் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருபவர். ஒரு நாள் இரவு அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டார்கள்.

தொலைக்காட்சியில் செய்தி

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது என்று தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாவதை பார்க்கிறார் அந்தப் பெண்.

பரவாயில்லையே… தினமும் வீட்டுக்கு குடித்துவிட்டு வரும் நம்ம வீட்டுக்காரர்கிட்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியதுதான் என்று முடிவு செய்கிறார் அந்தப் பெண்.

சிறிது நேரத்தில் அவரது கணவர் வீட்டுக்குள் நுழைகிறார்.

கணவன்-மனைவி காமெடி டயலாக்


மனைவி: என்னய்யா, குடிச்சிருக்கியா…. தள்ளாடி வர….


கணவன்: கோவிச்சுக்காத… கொஞ்சம் இன்னைக்கு வேலை அதிகம். அதனால் லைட்டா சாப்பிட்டேன்.


மனைவி: குடிக்கிறதுதான் குடிக்கிற அது என்ன லைட்டா… இனிமே ஸ்ட்ராங்கா குடிச்சுட்டு வா… சரியா…


கணவன்: நிஜமாத்தான் சொல்றியாடி… எங்க இன்னொரு தடவ சொல்லு…


மனைவி: வீட்டுக்கு வரப்போ, ஸ்ட்ராங்கா குடிச்சுட்டு வா…. அப்பதான் இனிமே சோறு போடுவேன்..

கணவன்:கடவுளே… இப்படி ஒரு பொண்டாட்டிய எனக்கு கொடுத்திருக்கியே… ரொம்ப ரொம்ப நன்றி.

அடியேய்… நீ எனக்கு பொண்டாட்டியா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்டி.

நாளைலேயிருந்து ஃபுல் சரக்குதான்… சரியா… ஆனால் கொஞ்சம் அதிகம் செலவாகுமே… உனக்கு பரவாயில்லையா…


மனைவி: தோ பாரு… டாஸ்மாக்குல போய் குடிக்காதே.. அதனால் எனக்கு ஒண்ணும் பிரயோஜம் இருக்காது.

பணமும் அதிகம் செலவாகும். பேசாம, அக்கம்பக்கத்துல 50 ரூபாய்க்கு கிடைக்கிற கள்ளச் சாராயத்தை வாங்கி குடி… அதுதான் இனிமே சரிப்பட்டு வரும்.

நீ போய்ட்டா கூட.. எனக்கு அரசாங்கம் 10 லட்ச ரூபாய் கொடுக்கும். அதை வாங்கிகிட்டு நிம்மதியா வாழ்வேன். அதனால கள்ளச் சாராயத்தை குடிச்சுட்டு வா.. சரியா….


கணவன்: என்னடி சொல்றே… எனக்கு இப்ப போதையே இறங்கியே போய்டுச்சு… பேசாம நான் போய் படுக்கிறேன்… காலையில நிதானமா பேசிக்கலாம். ஓ.கே.. குட் நைட்.


கள்ளச் சாராயம் இருக்கும் வரை, மதுபானக் கடைகளை அரசு நடத்தும் வரை இனி இப்படிக் கூட கணவன் மனைவிக்குள் ஒரு சமரசம் செய்துக்கொள்ள தமிழ்நாடு அரசு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கு.

அஷ்டாவக்ர கீதை சொல்லும் தத்துவ போதனை

நம்மில் பெரும்பாலோர் அமைதியையும் ஆனந்தத்தையும், ஒரு சிலர் உண்மையையும் தேடி அலைபவர்கள், ஆனால் அந்த ரகஸியம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்! அந்த ரகஸியத்தைத்தான் அஷ்டாவக்ர கீதை (Astavakra gita) சொல்கிறது.

ஆன்மீக பாதை காட்டும் அஷ்டாவக்ர கீதை

ஒரு சிலரே ரகஸியத்தைத் தேடும் தானே அந்த ரகஸியம் என்பதையும் உணர
முயல்கிறார்கள். இந்த அடிப்படை ரகஸியத்தை அறிந்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் நம் வாழ்க்கைப் பாதை அமைகிறது. இதைத்தான் அஷ்டாவக்ர கீதை நமக்கு சொல்லித் தருகிறது.

ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர வழிகாட்டும்
பாதை.

இந்த முயற்சியில் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ள வேதங்களின்
சாராம்ஸங்களை, பிரம்ம தத்துவங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது
தேவையில்லை, உணர்ந்து ஏற்றுக்கொள்வது சிறந்த வழி.

உபநிஷத்துக்கள் இந்தக் கருத்தைதான் பல யுகங்களாக வலியுறுத்தி வருகின்றன.

அரிய தத்வ போதனை

தன் உண்மை நிலையை உணரத் துடித்த ஒரு மன்னனுக்கு அவரது இளம் குரு ஒரு
அற்புத அரிய தத்வ போதனையைத் தந்தார்.

இதற்காக அந்த மன்னன் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, தன்னை வறுத்திக்கொண்டு, காத்திருந்து பெற வேண்டியிருந்தது. யார் அந்த மன்னன்? யார் அந்த குரு? என்ன தத்வம் அது?

ஜனகன் (ராமாயண நாயகி சீதாதேவியின் தந்தை) ஒரு நேர்மை தவறாத மன்னன்.
மிதிலையின் சக்கரவர்த்தி. ராஜரிஷி. சகல சாஸ்த்ரங்களைக் கற்ற பண்டிதன்.

சனாதன தர்மங்களை கடைப்பிடித்து ராஜபரிபாலனை செய்துவந்தான். மக்கள் ஆனந்தமாக
வாழ்ந்தனர். இந்த மன்னன் வாயிலாக ஒரு அபாரமான தத்துவத்தை உலகத்துக்கு
அளித்தார் இவரின் குரு அஷ்டாவக்ர மாமுனி.

இது ரிக் வேதத்தின் சாரமான மாண்டூக்கிய உபநிஷத்தில் வெகு அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்றால் என்ன என்பதன் நிதர்சன தத்வத்தை மனித குலத்துக்கே விளக்கும் முதல் காவியம் இது.

காட்டில் சிக்கிய மன்னன்

ஜனகன் ஒரு நாள் தன்னை மறந்து கற்பனை உலகில் சஞ்சரித்துக்
கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடி வந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச்
சொன்னான்.

மிதிலை நாட்டை கைப்பற்ற அண்டை நாட்டு அரசன் ஒருவன் படையோடு வந்து விட்டான் என்பதுதான் அது. ‘மன்னா, போருக்காக நம் படைகள்
தயார் நிலையில் உள்ளது.

நீங்கள் வந்து தலைமை ஏற்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றான் சேவகன். குழம்பிப் போன ஜனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘போரா? இது எப்படி சாத்தியம்? எனக்குத்தான் எதிரிகளே இல்லையே, வந்திருக்கும் எதிரி யார்?’

இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு போருக்குத் தயாரானான். கடும் போர் நிகழ்ந்தது.
எதிரி மிக பலசாலி, திறமைசாலி. போரில் ஜனகன் தோற்றான்.

வென்ற மன்னன் ‘இந்த நாடு இப்போது எனக்குச் சொந்தம். ஜனகா நீ நல்லவன் அதனால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஆனால் நாடு கடத்துகிறேன். எல்லாவற்றையும் விட்டு வெளியேறு’ என்று ஆணையிட்டான்.

தரும நெறி தவறாத ஜனகன் தோல்வியை ஏற்று நாட்டை விட்டு வெளியேறினான். தனக்கு நேர்ந்த அநீதியை எண்ணிப் பொருமினான். செல்லும் இடம் தெரியாது அலைந்தான்.

ஒரு காட்டில் தஞ்சம் புகுந்தான். மனச்சோர்வில் புத்தி தடுமாறியது. உண்ண உணவின்றி அலைந்து மயங்கி விழுந்தான்.

மயக்கம் தெளிந்தபோது, ஒரு காட்டுவாசி கும்பலிடம் தான் சிக்கிக் கொண்டுள்ளதை
உணர்ந்தான். அவர்களுக்கு ஜனக மன்னனை அடையாளம் தெரியவில்லை.

வேறு மொழி பேசினார்கள். புரியவில்லை. வயிறு நிறைய உணவு தந்து மன்னனை ஒரு
பலிபீடத்தில் கட்டி நரபலி இடுவதற்கு தயாரானார்கள்.

ஜனகன் எவ்வளவு மன்றாடியும் அவர்கள் மசிவதாகத் தெரியவில்லை. கொடூரமான முகத்தைக் கொண்ட ஒருவன் ஒரு பெரிய கத்தியைக் கொண்டுவந்து ஜனகன் தலைமேல் நிறுத்தி வெட்டுவதற்கு ஓங்கினான்.

மரண பயத்தில் ஜனகன் கண்களை மூடிக்கொண்டு உரக்க ‘ஐயோ, காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று ஓலமிட்டான்.

கண்டது கனவா? நினைவா?

அடுத்த க்ஷணம் விழித்துப் பார்த்தால் தான் தன் அரண்மனையில் கட்டிலில் இருந்து
கீழே விழுந்து கிடப்பதையும், தன்னைச் சுற்றி தன் சேவகர்கள் கவலையுடன்
நிற்பதையும் கண்டான்.

முதலில் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டான். அட, இவ்வளவு நேரம் தான் கண்டது கனவா? அல்லது நிஜமா?

அப்படியென்றால் எது நிஜம்? இப்போது எதிரே பார்ப்பது என்ன, சற்று முன் கனவில்
பார்த்தது என்ன? எது உண்மை?’ என்று தன் மனதுக்குள் குழம்பிப் போனான்.

தன் மந்திரிகளை அழைத்துத் தன் அனுபவங்களை விவரித்தான். ‘எது உண்மை?’ என்று
அனைவரையும் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை.

‘மன்னனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் எவருக்கும் பரிசு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. பலர் வந்தனர்.

ஜனகனை திருப்தி படுத்தக்கூடிய வகையில் சரியாக பதில் அளிக்க
முடியவில்லை. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஹோத முனி

மிதிலையின் அருகில் உள்ள ஒரு காட்டில் வாழ்ந்து வந்தார் கஹோத முனி. வேத
சாஸ்திரங்கள் கற்றவர்.

எளிய குருகுல ஆசிரமம் நடத்தி வந்தார். மகப்பேறு வேண்டி தவம் இருந்து புத்ரவரம் பெற்றார். மனைவி சுஜாதா கருவுற்றாள்.

கஹோத முனி தன் சீடர்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது சுஜாதாவும் அருகில் இருப்பாள். அவள் கருவில் இருக்கும் சிசுவும் இந்தப் பாடங்களை உன்னிப்பாகக் கேட்டு வந்தது.

பரமேஸ்வரன் அருளால் உருவான தெய்வீகக் கருவல்லவா அது, ஞானத்தில்
ஜொலித்தது.

தன் தந்தை சொல்லித்தரும் பாடத்திலேயே தவறுகளைச் சுட்டிக்காட்ட
ஆரம்பித்தது.

அஷ்டாவக்ர கீதை எப்படி வந்தது

ஒருநாள் வெகுண்டு போன தந்தை, தனக்கு பிறக்கபோகும் மகவு என்றுகூட பாராமல், ‘அஷ்ட வக்ரங்களோடு’ பிறக்க சாபமிட்டார்.

அஷ்ட வக்ரங்களோடு (உடலில் எட்டு கோணங்கள்) பிறந்த குழந்தைக்கு
‘அஷ்டாவக்ரன்’ என்ற காரணப் பெயரே நிலைத்தது.

மனிதர்களில் உள்ள அஷ்ட வக்ரங்களை களைவதற்கு உதவி செய்து வந்ததால் தெய்வப் பிறவியான இவருக்கு அஷ்டாவக்ரர் என்ற புனைப்பெயர் வந்தாகவும் சில புராணங்களில் கூறப்படுகிறது.

பெயர் இதுவானாலும் தந்தையை விட சிறந்த புத்திமானாக விளங்கினான் சிறுவன்
அஷ்டாவக்ரன்.

இந்த நிலையில் ஏழ்மையில் வாடிய கஹோத முனி ஜனக மன்னனின்
சந்தேகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைத் தீர்த்து அவன் தரும் பரிசை பெற
எண்ணி மிதிலை சென்றார்.

அங்கே அவரும் தோற்றுப்போய் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்கள் பல சென்றன.

சென்ற கணவன் நெடுநாளாகியும் திரும்பவில்லையே எனக் கவலையுற்ற சுஜாதா தன் மகன் அஷ்டாவக்ரனை தன் தந்தையைத் தேட அனுப்பினாள்.

தன் தந்தையின் நிலையை ஞானத்துள் உணர்ந்த அஷ்டாவக்ரன் மிதிலைக்குச் சென்று ஜனகனின் சந்தேகத்தை தான் தீர்ப்பதாக அறிவித்தான், இதற்கு
இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான்.

மன்னன் தன்னை குருவாக ஏற்றுக் கொள்ளவேண்டும். சிறையில் வாடும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பவைத்தான் இந்த நிபந்தனைகள்.

சிறுவனை குருவாக ஏற்ற ஜனகன்

வயது குறைவாக இருந்தாலும் இவ்வளவு திறமையுடன் பேசும் சிறுவனைக் கண்டு
அசந்து போன ஜனகன் அஷ்டாவக்ரனை தன் குருவாக மனதார ஏற்றுக்கொண்டான்.

கடும் நிஷ்டைகளோடும், நிபந்தனைகளோடும் இந்தப் புதிய குரு-சிஷ்ய பாரம்பரியம்
தொடங்கியது. உண்மையை உணரத் துடித்த மன்னன் பல இன்னல்களை ஏற்று,
தன்னை வருத்திக் கொண்டு தன் இளம் குருவிடம் பாடம் கற்றான்.

அஷ்டாவக்ரனும் ஜனகனும் பரிமாறிக்கொண்ட கேள்வி பதில்கள்தாம், காலத்தால்
அழியாது இன்றும் நம்மிடையே ஆன்மிக பாரம்பரியத்தின் மகுடமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நமக்கு பாடம் சொல்லித் தரும் அஷ்டாவக்ர கீதை.

இளம் குரு மாண்டூக்ய உபநிஷதத்தை போதித்தான். தற்போது நம்மிடையே இருப்பதாகக் கருதப்படும் 108 உபநிஷத்துக்களிலேயே மாண்டூக்ய உபநிஷத்துதான் சிறியது.

பன்னிரெண்டு ஸ்லோகங்களை மட்டுமே கொண்டது. ஆனால் மனிதனின் அனுபவ நிலைகள் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை மிகத் தெளிவாக இந்த உலகிற்கு அளித்துள்ளது இந்த உபநிஷத்து.

முதல் முறையாக, இந்த உபநிஷத்துவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த ப்ரபஞ்சத்தையே
ஆட்டிப்படைக்கும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்த்ரத்துக்கும் மனித உயிர்களுக்கும் இருக்கும்
நெருங்கிய பந்தம் பற்றிய விளக்கம் அளித்தார் குரு அஷ்டாவக்ரர்.

ஜனகனின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமன்றி இந்த மனித குலமே பயன்பெற அவர் ஒரு கீதையையே படைத்தார். அதுதான் இன்றைக்கு அஷ்டாவக்ர கீதையாக இருக்கிறது.

அஷ்டாவக்ர கீதை சாராம்சம்

ஜனகனின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அஷ்டாவக்ரர் சொல்லித்தந்த பதில்கள்
இதோ:

மனிதன் மூன்று நிலைகளில் ஏற்படும் அனுபவங்கள் வழியாக தன்னை
சுற்றியுள்ள உலகை தெரிந்துகொள்கிறான்.

முதல் நிலை விழித்திருப்பது. இது ‘விஸ்னவார’ நிலை. நாம் விழித்திருக்கும்போது நம் ஐம்புலன்கள் மற்றும் மனம் வழியாக நாம் உணரும் அனுபவங்கள். (இதற்கு பிரதிக்க்ஷை அனுபவம் என்று பெயர்).

அடுத்தது கனவு நிலை (இது ‘தேஜச’ நிலை). இந்த நிலையில் ஐம்புலன்கள்
வழியாகத் தோன்றும் அனுபவங்கள் அடங்கி விடுகின்றன.

மனம் மட்டும் செயல் படுகிறது. மனத்திரையில் பிரதிபலிக்கும் கனவிலும் நமக்கு ஒரு புதிய உலகம் தெரிகிறது. பல விஷயங்களை உணர்ந்து அனுபவிக்க முடிகிறது.

ஆனால் கனவு தெளிந்தபின், நாம் விழித்தெழும்போது கனவில் கண்டவை அனைத்தும் மறைந்து விடுகின்றன.

மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலை. (இது ‘பிரக்ஞ’ நிலை). இங்கே ஐம்புலன்களும் மனமும், எண்ணங்களும், புத்தியும் அடங்கிவிடுகின்றன. இந்த நிலையில் நமக்கு என்ன நடந்தாலும் தெரிவதில்லை.

நம் உடலையும் கனவுலகையும் விட்டு விலகி நிற்கிறோம். இந்த நிலையிலிருந்து நம்மை தட்டி எழுப்பி மீண்டும் முதல் நிலைக்கு கொண்டுவருவது தெய்வீக சக்தி. முதல் மூன்று நிலைகளையும் கவனித்து வரும்,

இந்த மூன்று நிலைகளையும் அனுபவத் தோற்றங்களை ஒளிர்வித்து உணர்த்தும் ‘சாட்சி’ இது. இதுவே ஆத்மன்.

எப்பொழுதும் ஆழ்ந்த அமைதி நிலையில், ஸூர்யனாக, ஸ்வயப் பிரகாச ஜோதியாக ஒளிர்ந்து, உடல், மனம், எண்ணம், புத்தி ஆகியவைகளை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் ஆத்ம ஜோதி.

பரப்பிரம்மம். இதைத்தான் உண்மையான ‘நீ’ என்று புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜனகனுக்கு விளக்கம் அளித்தார். இந்த அஷ்டாவக்ர கீதை நமக்கு பல உண்மைகளை போதிக்கிறது.

ஆத்மனுக்குள் உடல், மனம், எண்ணம்

அஷ்டாவக்ர முனி தொடர்ந்தார். ‘ஜனகா, உண்மை சொரூபமான ஆத்மனாகத்தான்
இந்த மூன்று நிலைகளிலும் ஒளிர்விக்கப்படும் அனுபங்களை உணர்கிறாய்.

உனக்குள் ஆத்மன் இல்லை. ஆத்மனுக்குள்தான் உடல், மனம், எண்ணம், புத்தி சேர்ந்த கலவை ஒளிர்ந்து உலக அனுபவங்களை உணர்கிறது.

ஆகவே ஐம்புலன்கள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ அல்லது உன் மனம், எண்ணங்கள், கற்பனைகள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ, அதைபற்றிய ஞாபகமோ அல்லது கனவுலகில் நீ உணரும் அனுபவங்களோ எதுவும் நிலையானது அல்ல.

இவை அனைத்தும் அனுபவங்களின் அடிப்படையில் தோன்றும் தோற்றங்கள். தோன்றி மறைபவை. அவை உண்மை அல்ல.

ஆத்மன் ஒன்றுதான் உண்மை. நீ பார்க்கும் இந்த உலகையே ஒளிர்விக்கும் பிரம்மன். ஆத்மனை உணரும்போது உன் உண்மை சொரூபத்தை உணருகிறாய். உன்னைப் படைத்தவனை உணருகிறாய்’.

ஓம் என்ற சொல்

இந்த உண்மையை உணர இன்னுமொரு ஒரு ரகஸ்யத்தை சொல்கிறேன். நான்
விளக்கிய அனுபவ நிலைகளைக் குறிக்கும் ஒரு சொல்லை தவ நிலையில் த்யானிக்கும்
போது நீ ஆத்மனை உணரத் தொடங்கலாம்.

அதுதான் ‘ஓம்’. இந்தச் சொல்லில் நான்கு சப்தங்கள் உள்ளன. அ, உ, ம், அஹ. கடைசி சப்தம் (சப்தமே அல்ல, ஆழ்ந்த அமைதி).

பரிசுத்தமான, பூர்ண நிலையை குறிக்கிறது. அனைத்து சப்தங்களையும் தன்னுள்
அடக்கியது. இது ஆதி, அந்தம் இல்லா நிலை. அதுதான் ஆத்மன்,

உண்மையான ‘நீ’. முதல் சப்தம் விழித்திருக்கும் நிலையையும், இரண்டாவது கனவு நிலையையும் குறிக்கிறது. மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலையையும், நான்காம் நிலை ஆழ்ந்த அமைதியில் ஜோதியாக ஜொலிக்கும் ‘ஆத்ம சொரூபமான உண்மையான உன்னையும்’ குறிக்கிறது.

விடை இதுதான்

நீ கேட்ட கேள்விக்கு விடை இதோ. நீ நேரடியாக உன் புலன்களின் வழியாக உணரும்
அனுபவங்களும் உண்மை இல்லை,

கனவில் நீ உணரும் அனுபவங்களும் உண்மை இல்லை. இந்த அனுபவங்களை உணர்விக்கும், ஆத்மஜோதியான ‘நீ’ ஒன்றே உண்மை.

ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப்
படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி ஜனக
சக்ரவர்த்திக்குப் போதித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் மனித சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.

இந்த ‘தன்னிலை உணரும்’ தத்துவத்தை அருளிய அஷ்டாவக்ர மாமுனியையும் அவரது
சீடன் ஜனகனையும் இந்த உலகம் என்றென்றும் மறக்க முடியாது.

அஷ்டாவக்ர மஹாகுருவின் உதவியால் ஜனகராஜன் தன்னை, தன் உண்மை
சொரூபத்தை உணரமுடிந்தது.

அதனால் அவரை இந்த உலகம் அறிந்துகொள்ள முடிந்தது. இதைப்போல பின்னர் வந்த குருமார்கள் ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமத்வர் போன்றோர் தங்கள் குருமார்களின் உதவியால் தங்களை உணர்ந்ததால் இந்த உலகிற்கு வேத சாராம்ஸங்களைத் தர முடிந்தது.

பல தத்துவ போதனைகளைத் தர முடிந்தது. பல பாரம்பரியங்களை உருவாக்க முடிந்தது. அவர்களை இந்த உலகம் மறக்கவே முடியாது. மனிதகுல சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற இவர்கள் நம் வழிகாட்டிகள்.

இந்த உண்மை நிலையை, ‘தன்னை’ தானே அறிவது சுலபமான காரியம் அல்ல.
உணர்வுகளையும், உள்ளத்தையும், எண்ணத்தையும் பிராணத்தையும் அடக்கி, வேத
சாஸ்திரங்களில் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை கலந்த முனைப்புடன்
முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் அஷ்டாவக்ர கீதை போதிக்கிறது.

முன்காலத்தில் இருந்த குரு பாரம்பரியத்தில் குருமார்கள் தத்துவ போதனைகளை மட்டுமே அளிப்பர். அவைகளை உணர வழிமுறைகளை சொல்லித் தருவர். ஆனால் சீடர்கள் இவைகளை உள்வாங்கி, தாமாகவே முயற்சி செய்து இந்த மெய்ஞான போதனைகளை உணரவேண்டும்.

அஷ்டாவக்ர கீதை சொல்லித் தருவது பல. அஷ்டாவக்ர கீதை நமக்கு வழி காட்டுகிறது.

மெய்ஞான போதனைகளை உணர கடும் தவம் இருக்க நேரிடும். இது சாதாரணமான காரியம் அல்ல. இதற்கு அவர்களின் பயிற்சி, முயற்சி, முனைப்பு, திறமைகளைப் பொறுத்தே பலன் கிட்டும்.

இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். முயற்சி பலன் தராமலும் போகலாம். வாழ்நாளும் முடிந்து போகலாம். அது அந்தக் கால நடைமுறை.

ஒரு பிரம்மகுருவின் அருளாசி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் மாண்டூக்கிய உபநிஷத்துக்கு பின் காலத்தில் விளக்கம் அளித்த ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார்.

ஜனகனைப் போல உண்மைநிலையை உணரத் துடிக்கும் பக்தர்களுக்கு, கிடைக்கரிய
இந்த தெய்வீக அருளாசி வழங்கவே காத்திருக்கிறார் பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா
ஸ்வாமிகள்.

சொத்துப் பத்திரங்கள் காணவில்லையா? கவலை வேண்டாம்!

சொத்துப் பத்திரங்கள் (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்து விட்டால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.,

முதல் தகவல் அறிக்கை

.முதலில் நாம் சொத்துப் பத்திரங்கள் தொலைந்து விட்டது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதியச் செய்ய வேண்டும்.

அவர்கள் தரும் ஒப்புகை ரசீதை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து அசல் பத்திரங்கள் எப்படி, எங்கே, எப்போது தொலைந்து போனது என்ற விவரங்களுடன் ஒரு தமிழ் நாளிதழ், ஒரு ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.


விளம்பரத்தில் தொலைந்து போன ஆவணங்கள் யார் கையிலாவது கிடைத்தால், தகவல் மற்றும் அனுப்புவது தொடர்பான விவரங்களும் அந்த விளம்பரத்தில் இடம்பெற வேண்டும்.


குறிப்பிட்ட நாள்கள் கழித்து காணாமல் போன பத்திரம் குறித்து யாரும தகவல் தராத நிலையில், காவல் நிலையத்தை அணுகி நாளிதழ் விளம்பரங்கள் அளித்து not traceable கடிதத்தை பெற வேண்டும்.

அதைத் தொடர்ந்து தொலைந்த பத்திரம் தொடர்பான ஆட்சேபனை இல்லை என்ற notary public ஒருவரின் சான்றிதழ் பெற வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகத்தை நாட வேண்டும்

பத்திரிகை விளம்பரம், காவல்துறை கடிதம், நோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆகியவற்றுடன் காணாமல் போன பத்திரத்தின் சர்வே எண் விவரங்கள் அடங்கிய தகவல்களை உங்கள் ஆவணங்கள் காணாமல் போன தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த சில நாட்களில் நகர் பத்திரங்கள் நமக்கு கிடைக்கும்.

தமிழ் நாட்டில் மதுவிலக்கு காலத்தின் கட்டாயம்

ஆர்.ராமலிங்கம்


சென்னை: தமிழ்நாட்டில் மதுவிலக்கு காலத்தின் கட்டாயம் என்பதையும், இதுவே அதை அமல்படுத்துவதற்கான சரியான தருணம் என்பதையும் தமிழ்நாடு அரசு நிர்வாகம் இப்போதாவது உணர வேண்டும்.

கள்ளக்குறிச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி நகராட்சியின் 7-ஆவது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த திங்கள்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவத்துக்கு காரணம் கள்ளச் சாராயம் அருந்தியதுதான் என்பதை உறவினர்கள் பொதுவெளியில் பேசியிருக்கின்றனர்.


இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் கருணாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பலரும் கள்ளச் சாராயம் அருந்தியதால் அதிக வயிற்றுப் போக்கு, கை, கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒவ்வொருவராக உயிரிழப்பை சந்திக்கத் தொடங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வரை சாவு எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?


கள்ளக்குறிச்சியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் தங்கு தடையின்றி நீண்ட காலமாக கிடைத்து வருகிறது.

காவல் துறையினரிடத்தில் புகார் தெரிவித்தால், அடுத்த சில மணி நேரங்களில் யார் மீது புகார் தெரிவித்தோமோ அவர்களே வந்து மிரட்டும் நிலை ஏற்படுகிறது.

இதுதான் எங்கள் நிலை என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் காவல்துறையை குற்றம் சாட்டுகிறார்கள்.

கள்ளச் சாராயத்தை நாடுவது ஏன்?


விஷச் சாராயமாக மாறிய கள்ளச் சாராயத்தை குடித்த பெரும்பாலோர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களே.
இவர்கள் அனைவரும் கூலித் தொழிலில் ஈடுபடுவோராக இருக்கிறார்கள். இவர்கள் சில ஆண்டுகளாக காலையில் பணிக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் அருகில் விலை மலிவாகக் கிடைக்கும் கள்ளச் சாராய பாக்கெட்டுகளை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அரசு மதுபானக் கடைகளில் வாங்கும் சரக்குகளுக்கு குறைந்தபட்சம் ரூ.150 தேவைப்படுகிறது. ஆனால், அதை விட அதிக போதைத் தரும் கள்ளச் சாராயம் 50 ரூபாய்க்கே கிடைக்கிறது.
இதனால்தான் நாள்தோறும் ரூ.200 முதல் 300 வரை சம்பாதிக்கும் ஏழைத் தொழிலாளர்கள் இந்த கள்ளச்சாராயத்தை அருந்தி வந்திருக்கிறார்கள்.

அரசு நடவடிக்கை என்ன?


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவு போலீஸார் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பலர் மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரசு உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?


இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க முயலவில்லை என்று தெரிவித்தார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. விஷச் சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்த்தது என்று குற்றம் சாட்டினார்.
அத்துடன் பல்வேறு அரசியல் கட்சியினரும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தவும் வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

தொடரும் விஷச் சாராய சாவுகள்


கள்ளச் சாராயத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் வேதிப் பொருள் போதைக்காக அதிக அளவில் கலக்கப்பட்டதால் அது விஷமாக மாறி பலரின் உயிரை பறித்திருக்கிறது.
இந்த மெத்தனால் லிட்டர் 20 ரூபாய்க்கு கிடைப்பதால், அதை மது தயாரிக்கவும், போதையை அதிகரிக்கவும் கள்ளச்சாராய வியாபாரிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை காவல்துறையினர் சொல்கிறார்கள்.
இதுபோன்ற விஷச்சாராய சாவுகள் தமிழ்நாட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்திருக்கிறது.

குறிப்பாக 2001-இல் கடலூர் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்தவர்கள் 53 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டு காலத்தில் காலத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விஷச்சாராய சாவுகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. இதில் 341 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மரக்காணம் அருகேயும், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரிலும் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழப்பை சந்தித்திருக்கிறார்கள்.
இப்போது நடந்துள்ள விஷச் சாராய சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அரசுக்கு இது அழகல்ல


போதைப் பொருள் நடமாட்டம், டாஸ்மாக் கடைகள் மூலம் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் சீர்குலைவு, மதுபான விற்பனையால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள், சட்டம், ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் தொடர்வதை சகித்துக்கொண்டு இனியும் ஒரு ஆளும் அரசு இருப்பது அழகல்ல.
அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது மட்டும் அதிரடியாக அனைத்து மாவட்டங்களிலும் சாராய வேட்டை நடத்தப்படுகிறது.

அதன் பிறகு இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் காவல்துறையின் கடந்த கால சம்பவங்களாக இருந்து வந்திருக்கின்றன.
இந்த விஷயத்தில் காவல்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதை அதை கட்டுப்பாட்டில் வைத்துள்ள உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி ஒரு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு அரசு தயாராக வேண்டும்.

மாமூல் வாழ்க்கை


“மாமூல்” என்ற வார்த்தை ஒரு காலத்தில் ரௌடிகளோடு இணைத்துப் பேசும் வார்த்தையாக இருந்தது. ஆனால் மெல்ல இது காவல்துறையையும் அடையாளப்படுத்தும் வார்த்தையாக மாறியிருக்கிறது.
இதற்கு காரணம், விரைவாக மற்றவர்களைப் போல் வசதிப்படைத்தவராக மாறுவதற்கு, மாத ஊதியம் போதாதென்று கூடுதல் வருவாய் ஈட்டும் மனப்போக்கு உடைய சிலர் ஆங்காங்கே காவல்துறையில் இருப்பதால்தான்.

அவர்களைப் பார்த்து புண்ணில் சீழ் பிடித்ததுபோல் மற்றவர்களை நோக்கி மாமூல் மெல்ல பரவத் தொடங்கி இருப்பதால் காவல்துறையில் கடமை உணர்வு மிக்கவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அவர்களை சரியாக அடையாளம் கண்டு அவர்களை பணிநீக்கம் செய்யும் அளவுக்கு கடுமையான சட்டங்களையும், விதிமுறைகளையும் அரசு கொண்டு வர வேண்டும். இதற்கு உரிய ஆலோசனையை உயர் அதிகாரிகளும் வழங்க வேண்டும்.

காவல் நிலையங்களின் நிலை


அரசு நிர்வாகம் எவ்வளவோ மாற்றங்களை காவல்துறையில் செய்தாலும், இன்றைக்கும் ஏழைகளுக்கு காவல் நிலையத்தில் நீதி கிடைப்பது அரிதான நிகழ்வாக இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், காவல்துறையை சரியாக கையாளத் தெரிந்தவர்களுக்குமே இன்றைக்கும் மதிப்பும், மரியாதையும் காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்து பாதிக்கப்படுவோர் வேதனைப்படுவது சிறிதளவுக் கூட குறையவில்லை.

தவறுகளை களைய …


பொதுவாக ஒரு துறையின் தலைமை பதவியை வகிப்பவர், அவருக்கு கீழே பணிபுரியக் கூடியவர்களுக்குத்தான் அதிகாரி.

ஆனால் பொதுமக்களுக்கு அவர் ஒரு சேவகன். இந்த அடிப்படை தமிழகத்தில் காமராஜர் காலத்தோடு மறைந்து போய்விட்டது.
இன்றைக்கு பாதிக்கப்படுபவர்கள் பலரும் செல்போன்களை ஆயுதமாகப் பயன்படுத்தி விடியோக்களாக படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் நிலையில் இன்றைய உயர்மட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு மக்களுடைய தொடர்பில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

பொதுவாக, கீழ்மட்டத்தில் பணியாற்றுவோரை பற்றி ஒரு அதிகாரியிடத்தில் பாதிக்கப்பட்டவர் நேரடியாக சந்தித்து அச்சமின்றி புகார் தெரிவிக்கும் நிலை தமிழகத்தில் நீண்டகாலமாக இல்லை. இந்த நிலை காவல்துறையில் ஒருபடி அதிகம்.
ஒரு சராசரி மனிதன் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளரைக் கூட நேரடியாக சந்திக்க முடியாது. அந்த அளவுக்கு அதிகாரம் மிக்கதாக காவல்துறை இருப்பதாக சாதாரண மக்கள் நினைக்கிறார்கள். இந்த இடைவெளி முதலில் குறைக்கப்பட வேண்டும்.
இதற்கு சைரன் வைத்த காரில் செல்வதை மட்டுமே கௌரவமாகக் கருதும் அதிகாரிகள், மக்களை நேரடியாக திடீரென சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய பழக வேண்டும். அத்துடன் அந்த மக்கள் அச்சமின்றி அந்த அதிகாரியிடம், தவறு செய்வோரை பற்றி தகவல் தரும் உரிமையை தருவதோடு, அதை கேட்டுக்கொள்ளும் மனநிலையையும் பெற வேண்டும்.

இத்தகைய சூழல் இனி வருங்காலங்களில் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. அத்தகையை நடைமுறையை அமல்படுத்த இன்றைய ஆட்சியாளர்களால் செய்ய முடியுமா அல்லது அதிகாரிகள் ஒத்துழைப்புத் தருவார்களா என்பதும் தெரியவில்லை.


திமுக ஆட்சியில் அண்ணா காலத்தில் மதுவிலக்கு இருந்தது. ஆனால் நிதி நிலையைக் காரணம் காட்டி 1971 ஆகஸ்ட் 30-ஆம் தேதி மதுவிலக்கை கைவிட்டவர்தான் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.
அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எம்ஜிஆரும் மதுவிலக்கை அமல்படுத்த துணியவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் பல்வேறு முன்னேற்றங்களை டாஸ்மாக் அடைந்தது.
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் விஷயத்தை மறந்துவிட்டார்.
ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு மறுபக்கம் மனமகிழ் மன்றங்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின்போது மதுபானம் பரிமாறலாம் போன்ற அடுத்தக்கட்ட முன்னெடுப்பு பணிகளில்தான் இன்றைய அரசு கவனம் செலுத்துகிறது.


தமிழகத்தில் அரசு விற்பனை செய்யும் மதுபானங்களால் ஏராளமான குடும்பங்கள் சீரழிவது ஒருபுறம், கட்டுப்படுத்த முடியாத கள்ளச்சாராய விற்பனையில் பெருகி வரும் விஷச்சாராய சாவுகள் மற்றொருபுறம் என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

அரசு யோசிக்க வேண்டும்


இந்த சீரழிவு தொடராமல் இருப்பதற்கு தங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் மீது ஆளும் கட்சி உண்மையான அக்கறை செலுத்த வேண்டும்.

இப்போதாவது காலம் தாழ்த்தாமல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் வருவாய் இழப்பை சமாளிக்க மாற்று வழிகளுக்கான யோசனைகளை பொருளாதார நிபுணர்களிடம் கேட்டறிந்து அவற்றை அமல்படுத்த வேண்டும்.

ஆளும் கட்சியினர் உள்பட அரசியல்வாதிகள் யாரும் காவல்துறையின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


கள்ளச்சாராய உற்பத்தி, விற்பனை போன்றவற்றைத் தடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும், தண்டனைகளும் கிடைக்க வழி காண வேண்டும்.

காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் அதிகாரிகளில் இருந்து கீழ்மட்ட காவலர்கள் வரை கடமை உணர்வோடு செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க பொதுமக்கள் அடங்கிய ரகசியக் குழுக்கள் அமைக்க வேண்டும்.


இதைத்தான் இன்றைக்கு ஆளும் அரசாங்கத்திடம் பாமர மக்கள் எதிர்பார்ப்பது.

கூகுள் நிறுவனத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன!

இணைய உலகின் ஜாம்பவானாக வலம் வரும் கூகுள் நிறுவனத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் Google அல்ல. அந்த சுவாரஸ்யமான விஷயத்தைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

1997-இல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழக மாணவர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் இணைந்து ஒரு தேடுபொறியை கண்டறிந்தார்கள்.

அந்த தேடு பொறிக்கு முதலி backrup (பேக்ரப்) என பெயரிடப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு டொமைன் பதிவு செய்யப்பட்டது.

யாகூவிடம் விற்பனை செய்ய முயற்சி

Google நிறுவனத்தை 2002-இல் யாகூவிடம் விற்பனை செய்ய அதன் இணை இயக்குநர்கள் முயன்றார்கள்.

அப்போது அவர்கள் கோரியது 5 பில்லியன் டாலர்கள். ஆனால் .யாகூ 3 பில்லியன் டாலர் மட்டுமே தருவதாக சொன்னதால் விற்பனை முடிவு கைவிடப்பட்டது.

GOOGLE பெயர் எப்படி வந்தது?

Backrup பெயரை மாற்றி அமைக்க பல பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியாக googol என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. அந்த ஆங்கிலப் பெயரை தட்டச்சு செய்யும்போது தவறாக GOOGLE என செய்யப்பட்டதாம்.

இந்த பெயர் நிறுவனத்துக்கு பிடித்துப்போனதால், BACKRUP பெயர் மாற்றப்பட்டு கூகுள் என்ற பெயர் வைக்கப்பட்டது.

இன்றைக்கு கூகுள் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் மதிப்பாக உயர்ந்திருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு சரியா?

சென்னை: அதிமுக விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது சரியா? என்ற கேள்விக்கு கட்சி தொண்டர்கள் பலரும் அதிருப்தியான பதிலையே தருகிறார்கள்.
அதிமுக எந்த நேரத்தில் எந்த இடத்தில் அரசியல் களத்தில் உத்வேகமாக இருக்க வேண்டுமோ அந்த நேரத்தில் இதுபோன்ற தவறான முடிவை எடுப்பது அக்கட்சிக்கு மேலும் சரிவையே ஏற்படுத்தும். இதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

தொண்டர்கள் தோல்விகளால் துவண்டார்களா?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தாலும், தொண்டர்களிடத்தில் எந்தவித பாதிப்பையும் இந்த தோல்விகள் ஏற்படுத்தவில்லை.

ஆனால் தற்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக கட்சித் தலைமை அறிவித்திருப்பதை மேல்மட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், அடிமட்ட தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் டீக்கடை பேச்சுக்களில் இருந்து தெரிகிறது.

பாஜக அல்லாத கூட்டணியை அமைத்து கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த அதிமுக தோல்வியை தழுவியது.

இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிமுக மூன்றாவது இடத்துக்கும், 4-ஆவது இடத்துக்கும் கூட தள்ளப்பட்டது.

பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் அக்கட்சி 2-ஆவது இடத்தை பெற்றிருக்கிறது.

எடப்பாடியின் நோக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பல பிரிவுகளாக பிரிந்து போனது. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா ஆதரவாளர்கள் தனித்து நின்றார்கள்.

டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் தனிக் கட்சியை தொடங்கினார்.

இருந்தாலும் பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து வந்தபோது நடைபெற்ற இடைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தலின்போது கட்சி தோல்வியை தழுவும் நிலைதான் ஏற்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வெற்றிவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய கணிசமான வாக்குகளை அதிமுக இழந்திருந்ததுதான்.

2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப் பேரவை தேர்தல்களில் அமமுக அணி பெற்ற வாக்குகளை அதிமுக பெற்ற வாக்குகளோடு இணைத்தால் பல இடங்களில் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் வருவதே இதற்கு சான்று..

2019-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

அக்கட்சி 18.48 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. அத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டு 22 லட்சம் வாக்குகளை பெற்றது.

இந்த வாக்குகள்தான் அதிமுகவை தோல்விப் பாதைக்கு தள்ளியன என்பதை இன்னமும் அதிமுக உணரவில்லை.

ஓபிஎஸ் – இபிஎஸ்

2021 சட்டப் பேரவை தேர்தலின்போது அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழச்சாமிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதனால் கட்சித் தலைமையை கைப்பற்றுவது, இரட்டை இலையை யார் கைப்பற்றுவது என்ற போட்டிகளில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் கவனம் செலுத்தினார்கள்.

இறுதியில் பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலர் பதவி மற்றும் இரட்டை இலையை கைப்பற்றினார்.

அதன் பிறகு கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் எடப்பாடி பழனிச்சாமி கவனம் செலுத்தி வருவது ஒரு பலவீனம்தான்.

அத்துடன் சில சமாதானங்களையும், சமரசங்களையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் தவறு செய்தால் கண்டுகொள்வதில்லை.

கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக சில நிர்வாகிகள் இருப்பதை கண்டிப்பதில்லை. கட்சித் தொண்டர்கள் சொல்லும் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை.

இது அவருடைய தலைமையின் மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் தவறான முடிவு

edapadi palanisamy

ஓ. பன்னீர்செல்வம் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதிலும், இரட்டை இலையை தன்வசம் வைத்துக்கொள்ளவும் தவறிய நிலையில் அவர் தனித்து விடப்பட்டிருக்கிறார்.

அவருக்கான ஆதரவாளர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதை தற்போதைய நிலையில் கணிக்க முடியவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜவுடன் போட்டிப்போட்டு கூட்டணி அமைப்பதில் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை விட்டார்.

இதனால் வடமாவட்டங்கள் சிலவற்றில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருந்த பாமக, பல கணக்குகளுடன் பாஜக அணியில் சேர்ந்தது.

போதாக்குறைக்கு பாஜக பல இடங்களில் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கிய நிலையில், அத்தொகுதிகளில் அதிமுக பலம் பொருந்திய வேட்பாளர்களை நிறுத்தவும் தவறிவிட்டது.

இதனால்தான் இந்த இடங்களில் 3-ஆவது, 4-ஆவது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.

தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்

இதை பெரிய சரிவாக இரட்டை இலையை தன்வசம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் தொண்டர்கள் கருதவில்லை. அதிமுகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை.

வலிமையான கூட்டணியை ஏற்படுத்துவதில் தவறியது ஒன்றுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்பதுதான் அதிமுக விசுவாசிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்த சூழலில் விக்கரவாண்டி சட்டப் பேரவைக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாது என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது தொண்டர்களை வெகுவாக பாதித்திருக்கிறது.

அவர்களில் பெரும்பாலோர் அதிருப்தி அடைந்திருப்பது நண்பர்களோடு டீக்கடைகளிலும், பொழுதுபோக்கு பொது இடங்களிலும் பேசிக்கொள்வதில் இருந்து இதை உணர முடிகிறது.

பாஜக தமிழகத்தில் வளர்ந்தால், அது கிராவிடக் கட்சிகளுக்கு ஆபத்தாக அமையும். அதிலும் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழலில் பாஜக அணியில் இடம்பெற்றிருக்கிற பாமக வேட்பாளர் விக்கிரவாண்டியில் வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்கு வங்கியை பெறும் சூழலில் அதை பாஜக தனது சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

ஒருவேளை பாமக வெற்றி பெற்றுவிட்டால், மிக சுலபமாக ஆளும் கட்சிக்கு எதிரான வலிமையான நிலையில் பாஜக தலைமையிலான அணி இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கப்படும்.

அத்தகைய வாய்ப்புக்காகவே பல ஆஸ்தான வித்தகர்களும், ராஜதந்திரிகளும், வாட் ரூம் பிரசாரகர்களும் காத்துக் கிடக்கிறார்கள் என்பதை ஏனோ எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பழனிச்சாமி ஏன் இந்த முடிவை எடுத்தார்?

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக அணி மீண்டும் போட்டியிட்டாலும், ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தையும், முழு பலத்தையும் பிரயோகித்து வெற்றி பெறும். அந்த தொகுதியில் பாமகக்கு கணிசமான நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது.

போதாக்குறைக்கு திண்டிவனம் அருகிலேயே இத்தொகுதி அமைந்திருப்பதால் பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ், அன்புமணி, பாஜக சார்பில் முக்கியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் சூழலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தை நிச்சயமாக பிடிக்கும்.

இப்படிப்பட்ட நிலையில், அதிமுக கடந்த மக்களவைத் தேர்தலின்போது, அத்தொகுதியில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் மேலும் சரிவை சந்திக்கும்.

இதை ஊடகங்களும், தங்களின் எதிரிகளாக இருக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஊதி பெரிதாக்குவார்கள்.

தொடர்ந்து தன்னுடைய தலைமையிலான அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்து வருவதை ஊடகங்களும் பெரிதுபடுத்தும் என்பதை மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது அனுதாபிகள் கூறுகிறார்கள்.

இதனால்தான், “மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்க விடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

இப்போது தமிழகத்தில் புதிய அரசியல் கட்சிகளும் தோன்றுவதற்கு தயாராகிவிட்டன. இந்த சூழலில் தோல்வியை தழுவினாலும் அது வெற்றியின் படிக்கட்டாக நினைத்தே தொண்டர்கள் பயணிப்பார்கள்.

கருணாநிதியே உதாரணம்

இதற்கு முன்னுதாரணம் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுக தலையெடுக்க முடியாமல், 13 ஆண்டுகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

ஆனால் அந்த காலக்கட்டத்தில் மறைந்த மு. கருணாநிதி அரசியலில் எந்த இடத்திலும் அதிமுகவுக்கு சவால் விடுவதில் பின்வாங்கவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒரு எம்ஜிஆர், ஜெயலலிதா அளவுக்கு தன்னை நினைத்துக் கொண்டோ அல்லது உயர்த்திக்கொண்டோ இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்திருக்கிறார் என்பதுதான் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்ட பலரின் வருத்தமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பலவும் அதிமுகவின் முடிவு, பாஜகவின் மேலிடத் தலைமையின் அழுத்தம் காரணமாகக் கூட இருக்கலாம் என விமர்சிக்கின்றன. அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி இப்போது இடம் கொடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக முடிவு, தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரான பாமகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்க மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதற்கான தெளிவான சான்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சசிகலா விமர்சனம்

வி.கே. சசிகலா செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர், விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பது சரியல்ல. தவறான முடிவு என்றும் விமர்சித்திருக்கிறார்.

அதிமுக தொடர்ந்து தோல்வியை தழுவினாலும், அதன் தொண்டர்களிடத்தில் காணப்படும் உற்சாகத்தை குலைக்காமல் இருக்கவாவது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுவதாக அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், சரியான நேரத்தில் தவறான முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

விக்கிரவாண்டியை பொறுத்தவரை அத்தொகுதியில் பாமகவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகம். விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கெனவே திமுகவை சேர்ந்தவர் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் இத்தேர்தலில் மீண்டும் அத்தொகுதியை திமுக தக்க வைப்பதற்காக தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து ஆளும் கட்சிக்கு எதிராக சவால் விடக் கூடியவராக இருக்க வேண்டிய சூழலில் இருந்து பின்வாங்குவது அவரது தலைமை மீது தொண்டர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி ஏற்படவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழ் இலக்கியங்கள் சொல்வது என்ன?

ஒரு வீரனுக்கான அழகாக இலக்கியங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? எதிரி பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், அவனோடு மோதினால் தோற்போம் என்று தெரிந்தும் மோதி, மார்பில் விழுப்புண்ணோடு உயிர் துறப்பதுதான் வீரமாக கருதப்படுகிறது.

எதிரியைக் கண்டு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடுபவனை இலக்கியங்கள் வீரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் கோழையாக வர்ணிக்கப்படுகிறான்.

இன்றைய அரசியலிலும் தமிழ் மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன் – அண்ணாமலை பஞ்சாயத்து முடிந்தது!

சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்துக்கு ஸ்வீட் பாக்ஸுடன் சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்று சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பாஜகவில் சலசலப்பு

தமிழக பாஜகவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் சலசலப்பு ஏற்பட்டது. இது வழக்கமாக எல்லா கட்சிகளிலும் காணப்படும் பலவீனம்தான். அது பாஜகவிலும் தோன்றியது.

தேர்தலில் தமிழிசை சௌந்திரராஜன் தோல்வியை சந்தித்தப் பிறகு ஊடகங்களிடம் அவர் பேசும்போது ஒருசில கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினார்.

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு சரியான கூட்டணி அமைக்காமல் போனதுதான். ஒருவேளை பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் பல இடங்களை தமிழகத்தில் கைப்பற்றியிருக்கும் என்று கூறினார்.

இது மறைமுகமாக அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்பதாக சூசகமாக அவர் தெரிவித்தது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அத்துடன், தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பேட்டியில், எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தபோது சிலரை கட்சிக்குள் அனுமதிக்கவில்லை.

அதாவது சமூக விரோத ரௌடிகள் போல் இருப்பவர்களை கட்சிக்குள் விடவில்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. கட்சியில் இப்போது ரௌடிகள் சேர்ந்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
இதனால் அண்ணாமலை தரப்புக்கும், தமிழிசை சௌந்தரராஜன் தரப்புக்கும் சமூகவலைதளங்களில் மோதல் போக்கு நீடித்தது.

இனி கண்ட இடத்தில் பேட்டி இல்லை-அண்ணாமலை

இந்த நிலையில் திடீரென தில்லிக்கு சென்ற அண்ணாமலை திரும்பி கோவைக்கு வந்தார். அப்போது நி்ருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, நான் இனி செய்தியாளர்களை கோவை அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன். கட்சியில் எல்லாவற்றையும் முறைப்படுத்தவுள்ளோம்.
இனி தலைவர்கள் யாரும் பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதுமெல்லாம் பேட்டி கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்.

அமித் ஷா என்ன சொன்னார்?

இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்பாராத ஷாக்கை அமித் ஷா கொடுத்தார்.
அங்கே மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை அழைத்த அமித் ஷா, அவரிடம் ஏதோ கைகளை அசைத்து காரசாரமாக பேசினார். இது அனைத்து ஊடகங்களிலும் பல யூகங்களுடன் செய்திகளாக வெளி வந்தன.
அந்த அளவுக்கு, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமித்ஷா சைகைகள், முகபாவங்கள் எல்லோருக்குமே புரிய வைத்தது.
தமிழிசை சௌந்தரராஜனை அருகில் அழைத்த அமித் ஷா, கட்சி விவகாரங்களை வெளிப்படையாக பேசக் கூடாது. தற்போதைய தலைமையை ஏன் விமர்சித்தீர்கள் என அவர் கேட்டிருக்கலாம்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தோல்விக்கான பொதுவான காரணங்களையே தான் பேசியதாகவும், இதில் யாரையும் தவறாக பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கலாம்.

யூகச் செய்திகள் என்ன சொல்கின்றன

அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த அமித்ஷா, முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் பேசாதீர்கள். கட்சித் தலைமை இருக்கும்போது நீங்கள் ஏன் பேட்டி அளிக்கிறீர்கள். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும்.
இனி நீங்கள் உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக் கூடாது என்று அவர் கண்டித்திருக்கலாம். அதற்கு சரி என்று தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துவிட்டு நகர்ந்திருக்கலாம் என்ற யூக செய்திகள் பரவின.
அத்துடன், பதவி ஏற்பு விழாவை அடுத்து சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை பத்திரிகையாளர்கள் அணுகியபோது, பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றதும் இந்த தகவலை ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தியது.
இந்த நிலையில், அமித்ஷா கட்சி ரீதியாக சில அறிவுறுத்தல்களைத்தான் தன்னிடம் கூறியதாக தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து ஊடகங்களின் யூகங்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு ஆசிர்வாதம்

அண்ணாமலை மேலிடத்தின் ஆசிர்வாதத்துடன் தமிழக பாஜக தலைவராக வந்தவர். அவர் மீது கடந்த காலங்களில் அவர் மீது புகார் தெரிவிக்கப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர்.

கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்களும் ஏராளம். பொதுவாக அண்ணாமலையைப் பற்றி யார் புகார் தெரிவித்தாலும், அதை மேலிடத்தில் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

யார் புகார் தெரிவித்தார்களோ அவர்களே அதிக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது தமிழிசை சௌந்தரராஜன் சேர்ந்திருக்கிறார்.
ஊடகங்கள் பல்வேறு யூகங்களை அடுக்கி வந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலை சென்று பார்த்து வந்தார்.

அத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமித் ஷா எல்லோரையும் குடும்ப உறுப்பினர்களாக நினைப்பவர்.

அவர் அன்பாகத்தான் கட்சியினரிடம் பேசுபவர். அவர் அன்போடும், அரவணைப்போடும்தான் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசியிருக்கிறார். இதில் மற்றவர்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை.
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உழைப்பு பாஜகவுக்கு என்றைக்கும் தேவைப்படுகிறது என்று சொல்லி கட்சியின் உள்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை.

மோடி ஆட்சி மாறிப் போச்சு! தேர்தல் முடிவு மாறிப்போச்சு!


சென்னை: இரண்டு முறை மக்களவையில் பலம் மிக்க பிரதமராக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி

பிரதமரோடு 71 அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கிறார்கள். அவர்களில் 11 பேர் 9 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இம்முறை பாஜக தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகள், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகள் பெற்றுள்ளன.

இதுதவிர 4 சுயேட்சைகள் அல்லது சிறு கட்சிகளின் ஆதரவு என்ற நிலையோடு அறுதிப் பெரும்பான்மை கூட்டணியாக ஆட்சியில் பாஜக அமர்ந்திருக்கிறது.

பாஜக பாணியில் சொல்ல வேண்டுமானால் இது ஒரு நெல்லிக்காய் மூட்டை ஆட்சியாக உருவெடுத்திருக்கிறது.
ஆனால் முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலோர் அதே துறைகளுடன் பொறுப்பேற்றிருப்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய பாஜக அரசு தன்னிச்சையாக இதுவரை எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தனித்து எடுத்து வந்தது. இனிமேல் கூட்டணி கட்சிகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பாஜகவுக்கு ஒரு பின்னடைவுதான்.
முந்தைய இரு தேர்தல்களிலும் என்டிஏ கூட்டணியில் தோழமை கட்சிகள் இருந்தாலும் கூட, தனி மெஜாரிட்டியில் பாஜக ஆட்சி அமைந்ததால், அவர்களை எதற்காகவும் கலந்து ஆலோசிக்கவில்லை.

பலம் மிக்க பிரதமராக ஒரு சர்வாதிகார போக்கில் தனக்கு தோன்றியதையெல்லாம் செய்து வந்த மோடிக்கு இத்தேர்தல் நல்ல பாடம் கற்பித்திருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டங்களைக் கூட நாம் நினைத்தால் திருத்தலாம் என்ற மனப்போக்கை அவர் கொண்டிருந்ததற்கு கிடைத்த அடியாக இத்தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

காஷ்மீர் பிரச்னை

உதாரணமாக, காஷ்மீர் மாநிலப் பிரச்னையை பாஜக அரசு கையாண்ட விதத்தை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காஷ்மீர் பிரச்னையில் எந்த முடிவை எடுத்தாலும், அந்த மாநில சட்டப் பேரவையின் முடிவை தெரிந்துகொண்டே மத்திய அரசு முடிவு எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

இதனால் அந்த மாநில சட்டப் பேரவையை பாஜக அரசு கலைக்க வைத்தது.
அடுத்து தேர்தல் நடத்த வாய்ப்பு இருந்தும் அது நடத்தப்படவில்லை.

ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்த ஆளுநர் மூலம் ஒரு கடிதம் பெற்று அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதை ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடு என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தார்கள்.
இதுபோன்ற அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை திருத்த தயங்காது என்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மாநில உரிமைகள்

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல மாநிலங்களின் நலன்கள் பறிக்கப்பட்டன. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டன. நிதிப் பகிர்வில் சர்வாதிகார மனப்பான்மை பின்பற்றப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் புல்டோசர் ஆட்சி என்ற அளவுக்கு 4 ஆயிரம் இந்துக்களின் கட்டடங்கள் புல்டோசர்கள் மூலம் வேட்டையாடப்பட்டன.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த மோடி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்று பிரசாரம் செய்தது அவருக்கு எதிராகவே திசைத் திரும்பியதையும் உணர முடிகிறது.
உத்தரபிரதேசத்தில் மக்கள் பாஜகவை தோற்கடித்திருக்கிறார்கள்.

ராமர் கோயில் அமைந்த தொகுதி

குறிப்பாக ராமர் கோயில் அமைந்திருக்கும் தொகுதியைச் சேர்ந்த மக்களே பாஜகவுக்கு தோல்வியை அளித்திருக்கிறார்கள்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.
மோடியை பார்த்து பாஜகவின் மூத்த தலைவர்களே அச்சப்பட்டு வந்த நிலை இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.

இதனால் கட்சிக்குள் மோடியின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் பழிவாங்குவதற்கு சரியான தருணத்துக்காக காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

தேர்தல் பத்திரம் போன்ற திரைமறைவு ஊழல்கள்

பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் திரைமறைவில் நடந்த பல ஊழல்கள் நிச்சயமாக என்டிஏ சர்க்கார் ஆட்சி காலத்திலேயே வெளியாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதில் நீதிமன்றங்களும் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசியலில் பாஜகவுக்கு எதிரான மாற்றம், உத்தரபிரதேசத்தில் யோகி அதித்யாநாத் மற்றும் பாஜகவுக்கு எதிரான அரசியல் மாற்றம் நிகழும் வாய்ப்புகளும் இப்போது அதிகரித்திருக்கிறது.

அதிகார துஷ்பிரயோகமா?

மோடியை பொறுத்தவரை, வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் சூழல் நிலவுகிறது. காரணம் வாரணாசி வாக்கு எண்ணிக்கையில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதுதான்.
அதேபோல் மதத்தை தேர்தல் பிரசாரத்திற்கு மோடி பயன்படுத்திய விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறிய நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மோடிக்கு எதிராக அமைந்தால், இந்திராகாந்தி எமர்ஜென்சிக்கு முன்பு சந்தித்த பாதிப்பைக் கூட ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள்.
பதவி பிரமாணத்தின்போதே, ஒரு மக்களவை உறுப்பினரை வைத்துக்கொண்டிருக்கிற அஜித்பவார் கட்சி ஆரம்பத்திலேயே கேபினட் அந்தஸ்தில் பதவி கொடுங்க.. இல்லாவிட்டால் வேண்டாம் என்று அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எந்தக் கட்சி வாக்குறுதிகள் டாப்

கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்பி சுரேஷ்கோபி அமைச்சராக மத்திய அமைச்சரவையில் பதவியேற்ற 12 மணி நேரத்துக்குள் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். நான் தொடர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.
இந்த தேர்தல் முக்கியமான ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளது. பல பிரபல ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் போலியானவை என்பதையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

அவை இப்போது மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி மோடி நேருவின் சாதனையை சமன் செய்துள்ளதாக மீண்டும் வால் பிடிக்க தொடங்கியிருக்கின்றன.
மூன்றாவது முறையாவது ஒரு ஜனநாயக ரீதியான மக்கள் ஆட்சியாக அமைவதற்கு மோடி செயல்படுவாரேயானால் அதுதான் அவருக்கு பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் அவர் மீதான பழிகளை இந்த பூமி சுமந்து சென்று வரலாற்று பக்கத்தில் எழுதி வைக்கும்.

இந்தியாவில் டிராம் வண்டிகள்: ஒரு வரலாற்று படைப்பு

சென்னை: இந்தியாவில் டிராம் வண்டிகள் வரலாறு மிகவும் பழைமையானது. நாட்டில் இவை இன்னமும் புழக்கத்தில் இருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா.

ஆசியாவில் டிராம்கள்

இந்த வாகனங்கள் இயக்கம் ஆசியாவிலேயே பழமையானதாகும். 1873-ஆம் ஆண்டில் முதன்முதலில் கொல்கத்தாவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

இந்தியாவில் டிராம்கள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் இவை ஓடத் தொடங்கின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.

டிராம்கள் சரக்குகளை துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

சென்னையில் அறிமுகம்

சென்னையில் 1877-இல் டிராம்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது இவற்றை குதிரைகள் இழுத்துச் சென்றன. தற்போதைய சென்னையின் பரபரப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாக விளங்கும் பூக்கடை பகுதியில் தற்போதைய காவல் நிலையத்தின் அருகே இன்னமும் ஒரு கம்பம் சென்னையில் டிராம் வாகனங்கள் பயணித்ததன் எச்சமாக நின்று கொண்டிருக்கிறது.

அதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் வாகன நிறுத்தத்துக்காக அமைத்த கொட்டகை மட்டும் இன்றைக்கும் காட்சிப் பொருளாய் இருக்கிறது.

1892-ஆம் ஆண்டில் மெட்ராஸ் டிராம்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன.

1895-ஆம் ஆண்டில் முதன்முறையாக சென்னை நகர வீதிகளில் மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த நேரத்தில் லண்டன் போன்ற பெருநகரங்களில் கூட இத்தகைய டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்படவில்லை.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்ன?

விடியோவை காணுங்கள்

மக்கள் ஆர்வம்

1877-ஆம் ஆண்டில் சிறிய தண்டவாளத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையிலான வாகனங்களில் பயணிக்க சென்னை மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.

இதற்காக மெட்ராஸ் டிராம் வேல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1895-ஆம் ஆண்டில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின.

இந்த டிராம்கள் சாலைகளில் பதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சென்றாலும், நமக்கு அவற்றால் டிராபிக் ஏற்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக இருந்தன.

இதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் மவுண்ட் ரோடு, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களிலும் டிராம்கள் ஓடத் தொடங்கின.

அந்த காலக்கட்டத்தில் ஒரு மைல் தூரத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாகனங்களை இயக்குவதற்கான மின்சாரம் டிராம் பாதையின் நடுவில் பூமியின் அடியில் கொண்டு செல்லப்பட்டது. அதில் அடிக்கடி பழுது ஏற்படவே, எலக்ட்ரிக் லைன்கள் அமைக்கப்பட்டு டிராம்கள் இயக்கப்பட்டிருக்கின்றன.

டிராம் வண்டிகளில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டினாலும் இதற்கு அதிக பொருட்செலவு ஆனது. இதனால் 1953-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் டிராம்கள் இயங்கவில்லை.

பறக்கும் கார் தயாரிப்பில் சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி பறக்கும் கார் தயாரிப்பில் மும்முரம்

சென்னை: சென்னை ஐஐடி (Chennai IIT) வானில் பறந்து செல்லும் ட்ரோன் மாதிரியான பறக்கும் கார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி

இந்தியாவில் பறக்கும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதால், இந்தியாவில் வானில் பறக்கும் கார்களை நாம் பார்க்கக் கூடிய வாய்ப்பும், அதில் பறக்கக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

சீனா முன்னேற்றம்

உலக அளவில் முக்கியமான நகர்புறங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் நேரம் அதிகரிக்கிறது.

இதனால் பல்வேறு நாடுகளும் பறக்கும் கார்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனா இதில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

துபாயில் பறக்கும் டாக்சி

சமீபத்தில் கூட சீனாவை சேர்ந்த நிறுவனம் துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தியா உள்பட சில உலக நாடுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடர்ச்சியான புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அதேபோல் புதிய தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐஐடி நிறுவனம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பறக்கும் டாக்சியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த பறக்கும் டாக்சி முழுமையாக மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றால், உலகிலேயே முதல் பறக்கும் டாக்சியாக இதுதான் இருக்கும் என்கிறார்கள் இந்திய தொழில் வல்லுநர்கள்.

ராட்வெய்லர் நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

சென்னை: தடை செய்யப்பட்ட நாய் இனங்களில் ஒன்றான ராட்வைலர் கடித்ததால் சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பெற்றோருக்கு அதிர்ச்சி

அவரது உடல்நிலை தற்போது தேறி வருவது ஒரு ஆறுதலான விஷயம். இருந்தாலும், இந்த சம்பவம் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை வைத்திருப்போருக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

இந்த அச்சம், தற்போது, தெருக்களில் சாதாரணமாக நடமாடும் தெரு நாய்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதனால் 5 வயது சிறுமி விஷயத்தில் ராட்வைலர் வளர்ப்பாளர் செய்த தவறையும், ராட்வைலர் குணங்களையும் எல்லோரும் அறிந்துகொள்வது நல்லது.


அத்துடன் வீடுகளில் தற்போது வெளிநாட்டு இனங்களை வளர்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும். எந்த வகையானவற்றை தேர்வு செய்து வளர்க்கலாம். பராமரிப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்.

சென்னை சம்பவம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி 4வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மே 5-ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – இரவு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்திருந்தார்.

அந்த மாநகராட்சி பூங்காவின் காவலாளியாக பணிபுரிந்தவரின் மகள் ஆவார். குழந்தையின் பெற்றோர் பூங்காவில் ஒரு பகுதியில் உள்ள சிறிய அறையில்தான் வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்த பூங்காவுக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிப்பவர் புகழேந்தி. இவர் இரு ராட்வைலர் வகையை வளர்த்து வருகிறார்.
இவை இந்திய அரசால் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டவை.

அதேபோல் இனப்பெருக்கம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை இனங்கள் வெளிநாடுகளில் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கால்நடைகளை மேய்ப்பவர்களும், வேட்டைக்கு செல்பவர்களும் பழக்கப்படுத்தி பயன்படுத்தக் கூடிய வகையைச் சேர்ந்தது இது.

ஆபத்தானவை

பார்ப்பதற்கு அச்சமூட்டும் விழிகளையும், குரலையும் கொண்டது இது. இதை வெளிநாடுகள் பலவற்றி் தடை செய்திருக்கிறார்கள்.

இவற்றை சிலர் சண்டைக்காக பயன்படுத்தி வருவதும் உண்டு. இவை சாதாரணமாக கட்டி வைத்து வளர்க்கக் கூடியவை. சுதந்திரமாக வீடுகளில் வளர்க்கக் கூடியவை அல்ல.

இந்த வகை குட்டிகள் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் வரை விலைப் போகிறது. அதனால் சிலர் திருட்டுத்தனமாக இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.

இத்தகைய ஆபத்தான இனங்களை வீட்டில் வளர்ப்பவர்கள் சில நேரங்களில் அவற்றிடம் கடிப்படுவதும் உண்டு.
ஜெர்மனி நாட்டில் உள்ள ராட்வைல் பகுதியை தாயகமாகக் கொண்டதால் இவற்றை ராட்வைலர் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வெளியில் இவற்றை அழைத்துச் செல்லும்போது உறுதியான இரும்பு சங்கிலி அல்லது கயிற்றால் கட்டியே அழைத்துச் செல்ல வேண்டும்.

காரணம் இவை கோழி, ஆடு போன்றவற்றை கண்டால் அவற்றை அடித்து சாப்பிட்டுவிடும். அந்த அளவுக்கு ஆபத்தானவை.

அவமானம் ஏற்பட்டதா? அப்போ வாழ்க்கையில் முன்னேறிவிடுவீர்கள்

குழந்தை பாதிப்பு

அத்தகைய ஆபத்தான இரு ராட்வெய்லர்களை வளர்த்து வந்த வீட்டு உரிமையாளர் புகழேந்தி சம்பவத்தன்று எந்தவித பாதுகாப்பு சங்கிலியும் இன்றி சுதந்திரமாக தன்னுடன் வாக்கிங் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போதுதான் இவை குழந்தையை கடித்து குதறியிருக்கின்றன..
உலகின் ஆபத்தான வேட்டை இனங்களாக கருதப்படும் 20 இனங்களில் மிகவும் மூர்க்கத்தனம் கொண்ட இந்த ராட்வைய்லர் கல், குச்சிகளைக் கண்டு பயந்து ஓடாமல் எதிரியை தாக்கக் கூடியவை.

தற்போது இதன் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

வெளிநாட்டு நாய் மோகம்

பொதுவாக வீடுகளில் பாதுகாப்புக்காக நாய் வளர்ப்பது பணக்காரர்கள் வீடுகளில் சகஜம். ஆனால் அதற்கு விலையுயர்ந்த வெளிநாட்டு இனங்களை வளர்ப்பதில் பலருக்கும் அதீத ஆர்வம் உண்டு.
பணக்கார குடும்பங்களில் அவர்களின் ஸ்டேட்டஸை நிலைநிறுத்திக்கொள்ளவும் இத்தகையவற்றை வளர்ப்பது தற்போது ஒரு நாகரிகமாக மாறியிருக்கிறது.
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய வெளிநாட்டு இனங்களை வளர்ப்பது என்பது மிகவும் கடினம்.
இந்தியாவை பொறுத்தவரை, நாட்டுப்புறத்தை சேர்ந்தவற்றை வளர்ப்பதே நல்லது. ஆனால் இன்றைக்கு இவற்றை வளர்ப்பதை ஒரு கௌரவ குறைச்சலாக கருதும் மனப்பான்மை மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.
வெளிநாட்டு வகையைச் சேர்ந்தவைகளுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை வெறிநாய்த் தடுப்பூசி போடுவதும், 3 மாதத்துக்கு ஒரு முறை தோல் மற்றும் உரோமங்களில் ஏற்படும் நோய் தொற்றுக்களை தடுப்பதற்கான மருந்துகளையும் தருவது அவசியம்.

துர்நாற்றம் வீசும்

இப்படி பராமரிக்காமல் போவதால்தான், வெளிநாட்டு இனங்களை வளர்ப்பவர்கள் வீடுகளில் ஒருவகை துர்நாற்றம் வீசுவதை நாம் பார்த்திருக்க முடியும். ஆனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அந்த நாற்றம் தெரியாது.
அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தோல் நோய்கள், குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சுகாதரமின்மை அமைந்துவிடுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்திய அரசு ஒருசில இனங்களை இறக்குமதி செய்வதையும், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இனங்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதித்திருக்கிறது.

தடை செய்யப்பட்ட இனங்களின் விவரம்

பிட்புல் டெரியர் (Pitbull Terrier), டோசா இனு (Tosa Inu),

அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் (American Staffordshire Terrier),

ஃபிலா பிரசிலிரோ (Fila Brasileiro),

டோகோ அர்ஜெண்டினோ (Dogo Argentino),

அமெரிக்கன் புல்டாக் (American Bulldog), போயஸ்போல் (Boesboel),

காங்கல் (Kangal),

மத்திய ஆசிய ஷெப்பர்ட் (Central Asian Shepherd Dog),

காக்கேசிய ஷெப்பர்ட் (Caucasian Shepherd Dog),
தென் ரஷ்ய ஷெப்பர்ட் (South Russian Shepherd Dog),

டோர்னஜாக், சார்ப்ளானினாக் (Tornjak, Sarplaninac), ஜப்பானிய டோசா அகிதா (Japanese Tosa and Akita),

மாஸ்டிஃப் (Mastiffs), ராட்வெய்லர் (Rottweiler),
டெரியர்கள் (Terriers), ரோடேஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback),

ஓநாய் வகை (Wolf Dogs),

கனாரியோ (Canario),

அக்பாஷ் (Akbash),

மாஸ்கோ காவல் நாய் (Moscow Guard Dog),

கேன் கோர்சோ (Cane Corso), பேன்நாய்(Bandog) ஆகியவை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் தமிழ்நாடு அரசும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு இனங்களில் 9 வகைகளை இனப்பெருக்கத்துக்கு தடை விதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

பாசெட் ஹவுண்ட் (Basset Hound),

பிரெஞ்ச் புல்டாக் (French Bulldog),

அலாஸ்கன் மாலமியூட் (Alaskan Malamute),

கேஷோண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாண்ட் (Newfoundland),

நோர்வே எல்க்ஹவுண்ட் (Norwegian Elkhound),

திபேத்திய மஸ்திஃப் (Tibetan Mastiff),

சைபீரியன் ஹஸ்கி (Siberian husky),

செயிண்ட் பெர்னார்ட் (Saint Bernard)

பதிவு அவசியம்

இந்த இனங்களை முன்பே வீடுகளில் வளர்த்து வந்தால், அவர்கள் கண்டிப்பாக கென்னல் கிளப் ஆப் இந்தியா மற்றும் தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகத்தில் பதிவு செய்து உரிமை பெறுவது அவசியமாகிறது.
பூனைகள், பறவைகளை வளர்ப்பவர்களும் உரிய அனுமதியை உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற வேண்டும். தவறினால் அவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அரசு அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

தெரு நாய்களை தத்தெடுங்கள்

வீட்டில் நாய்கள் வளர்க்க விரும்புவோர் நாட்டு இனங்களை வளர்க்க முன் வர வேண்டும். இவை வெளிநாட்டு இனங்களைக் காட்டிலும் எளிதில் மனிதர்களோடு பழகக் கூடியவை. அவற்றின் கீழ்படிதல் தன்மையும், அச்சப்படும் சுபாவமும் அதிகம்.


ஒரு நாயை ஆரோக்கியமான முறையில் வளர்த்தாலும் கூட, அதன் உமிழ்நீர் ஆபத்தானது. சலைவா என அழைக்கப்படும் உமிழ்நீரில்தான் ரேப்பிஸ் நோய் தொற்று கிருமிகள் உருவாகின்றன.
உமிழ்நீர் மூலமே மனிதனை கடிக்கும்போதும் அல்லது காயங்கள் மீது அதன் உமிழ்நீர் படும்போதும் அல்லது வேறு உணவுப் பொருள்கள் வழியாகவும் மனித உடலுக்கு எளிதில் செல்லும் தன்மை கொண்டது ரேப்பிஸ் நோய் கிருமிகள்.
அதனால் நாய்களை மிக நெருக்கமாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் தேவை. ஆண்டுதோறும் ரேப்பிஸ் தடுப்பூசி போடுவதையும், நோய்த் தடுப்பு மருந்துகள், முறையான பராமரிப்பு போன்றவற்றில் அக்கறை செலுத்த முடியுமானால் மட்டுமே வீட்டில் நாய்களை வளர்க்கலாம்.
சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நாய்களை வளர்ப்பது நல்லதல்ல. அப்படி வளர்ப்பதால் அவற்றை ஒரு பகுதியில் கட்டிப்போட்டே வளர்க்க வேண்டும்.