வெ. நாராயணமூர்த்தி
எமதர்மன் மல்லுக்கு நின்ற சிறுவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய கதைதான் இது. இந்த கேள்வி, பலரின் வாழ்க்கை பயணத்தை செம்மை படுத்த உதவி புரியும்.
மனிதகுலத்துக்கே சவாலாக அமைந்த ஒரு கேள்விக்கான பதிலைத் தேடி அலைந்த ஒரு மாணாக்கன் எப்படி ஒரு பெரிய ரஹஸ்யத்தை வெளிக்கொணர முடிந்தது என்பதை விளக்கவே இந்தப் பதிவு.
‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த
கேள்வியைக் கேட்டவன் நச்சிகேது என்கிற சிறுவன்.
இவன் கேட்ட இந்தக் கேள்வி நம் அனைவரின் சார்பாகவும் கேட்கப்பட்டுள்ளதாக நான் பார்க்கிறேன்.
அவன் தெரிந்து கொண்ட தகவல்கள் காலத்தால் அழியாமல் நமக்கெல்லாம் இன்றும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.
எமதர்மன் சந்திக்க நேர்ந்த நச்சிகேது
நச்சிகேது கேட்டது சாதாரண கேள்வி அல்ல. நம் வாழ்க்கைப் பாதையின் முடிவு. எதை
நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான விடை.
தேவ ரஹஸ்யம். நாம் அனைவரும் கேட்க நினைப்பது. தெரிந்துக்கொள்ள நினைப்பதுதான் இந்தக் கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி, அந்த ஞானத்தை நாடி, தங்கள் வாழ்நாளை இழந்த ரிஷிகளும், முனிவர்களும், மன்னர்களும், சாமானியர்களும் ஏராளம்.
ஆனால் தெரிந்து கொண்டவர்களோ, இந்த ஞானத்தை உணர்ந்தவர்களோ ஒரு சிலர்தான்.
நச்சிகேதுவின் தேடல்
நச்சிகேதுவின் இந்தத் தேடல் பற்றிய தகவல் ஒரு கதை வடிவில் வேத ஸாராம்ஸங்களில்
ஒன்றான ‘கடோபநிஷத்’தில் விவரிக்கப்பட்டுள்ளது.
நச்சிகேதுவின் தந்தை வாஜ்ரஸவர் விஸ்வஜித் யாகம் செய்கிறார். விஸ்வஜித் யாகம் என்பது சொர்க்கத்தை அடைய நினைக்கும் நபர் செய்யும் கடினமான யாகம்.
மிகுந்த உயர்நிலை யாகம் என்று அந்தக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த யாகத்தை செய்பவர் தன்னிடத்தில் உள்ள அனைத்து பொருள்களையும், தான் சேர்த்த அனைத்து புண்ணியங்களையும் மற்றவர்களுக்கு முழுமையாக, ஸ்ரத்தையாக தானம் செய்யவேண்டும்.
யாகத்தை வேடிக்கை பார்க்க வந்த அனைவருக்கும் பொருள்கள் எல்லாம் தானமாக கிடைக்கும்.
இந்த யாகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் நச்சிகேதுவிற்கு ஒரு விஷயம்
புலப்படவில்லை.
தந்தையிடம் சந்தேகத்தை கேட்ட சிறுவன்
தானும் தந்தையின் சொத்தல்லவா? தந்தை செய்யும் யாகத்தில் தன்னை யாருக்கு தானமாகத் தரபோகிறார்? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
தந்தையிடமே கேட்டான். ‘தந்தையே உங்களுக்குச் சொந்தமான எல்லா பொருள்களையும் தானமாகத் தந்து வருகிறீர்களே, என்னை யாருக்கு தானம் தரப்போகிறீர்கள்?
சிறிய பாலகனான தன் மகனின் கேள்வியை தந்தை முதலில் பொருட்படுத்தவில்லை. ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பினார்.
மகனோ விடுவதாக இல்லை. தொடர்ந்து நச்சு செய்ய ஆரம்பித்தான். (இவன் செய்த
நச்சைதான் பின்னர் இவன் பெயரிலேயே ‘நச்சு செய்தல்’ என்ற வார்த்தை உருவானாதோ?).
மைந்தனின் தொல்லை தாங்க முடியாத தந்தை தன் கோபத்தை அடக்கமுடியாமல், ‘உன்னை எமனுக்கே தானம் தருகிறேன் போ’ என்று ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுவிட்டார்.
குருகுலத்தில் பயின்ற நச்சிகேது இதையேத் தன் தந்தையின் விருப்பம் என்று கருதி,
எமலோகம் செல்ல கிளம்பி விட்டான்.
உணவை ஏன் மறுத்தான்?
கடும்தவம் இருந்து, தன்னையே தியாகம் செய்து எம பட்டணத்தை அடைந்தான். வாயில் காப்போன் இந்தச் சிறுவனை தடுத்து நிறுத்தினான்.
‘எமதேவன் அனுமதியில்லாமல் உள்ளே வர இயலாது’’ என்று திரும்பிச் செல்லுமாறு
பணித்தான். நடந்த கதையை சொல்லி, தன் தந்தை தன்னை எமனுக்குத் தானமாகத்
தந்துவிட்டபடியால், தான் தற்போது எமனின் சொத்து.
எனவே உள்ளே செல்ல யார் அனுமதியும் தேவை இல்லை’’ என்று வாதித்தான் சிறுவன். அதிர்ந்துபோன காவலாளி சிறுவனை அழைத்துச்சென்று சிறுவனுக்கு உணவளித்தான்.
சிறுவனோ உணவை மறுத்து, தான் எமனிடம் சில விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டபின்தான் உண்ணமுடியும் என்று பிடிவாதம் பிடித்தான்.
தொடர்ந்து மூன்று நாட்கள் கழித்த பின்னரே எமனை நேரில் காண முடிந்தது.
சிறுவனை பார்த்து வியந்த எமன்
தான் அழைக்காமலே வந்த சிறுவனைக் கண்டு எமதேவனே ஆச்சர்யப்பட்டான். ஆனாலும்
அந்தச் சிறுவனின் தைரியத்தையும், ஆர்வத்தையும் மெச்சினான் எமன்.
அச்சிறுவன் வந்த காரணத்தை கேட்டான். ‘என் தந்தை என்னை உங்களுக்குத் தானமாகத் தந்துவிட்டார். நான் தற்போது உங்களுக்குச் சொந்தமாகிவிட்டேன்.
எனக்கு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை. என்னை முதலில் உங்கள் சொத்தாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றான் சிறுவன்.
அசந்து போன எமன், ‘சரி முதலில் ஏதாவது சாப்பிடு. மூன்று நாளாக எதையும் உண்ணாமல்
இருக்கிறாய். சாப்பிட்டவுடன் நீ மீண்டும் உன் தந்தையிடம் அனுப்பிவிடுகிறேன்’ என்றார் எமன்.
‘நான் சாப்பிட வேண்டுமானால் நீங்கள் எனக்கு மூன்று வரங்கள் தரவேண்டும்’ என்றான் நாச்சிகேது பிடிவாதமாக.
சிறுவனின் புத்திக்கூர்மையையும் அவனது விவேகத்தையும் கண்டு மெச்சிய எமன் மூன்று வரங்கள் தருவதாக வாக்களித்தான்.
வேதங்கள் ஒரு சிறுவனின் மன நிலையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது
பாருங்கள்!
எமன் கொடுத்த வரங்கள்
‘எமலோகத்தில் உணவு அருந்துபவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்று நான் சாஸ்த்ரங்களில் படித்திருக்கிறேன். அப்படி நான் மீண்டும் திரும்பி சென்றால் என் தந்தை என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் என் மேல் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும், கோபித்துக் கொள்ளக்கூடாது’ என்று தன் முதல் கோரிக்கையை வைத்தான் நச்சிகேது.
மரணத்தில் இருந்து மீண்டு வரும் நபர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதில் அந்தக்
காலத்திலேயே சிக்கல் இருந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ.
கோபத்தில் இருக்கும் தந்தை மீண்டும் தன்னிடத்தில் அன்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது ஒரு சிறுவனின் சராசரி மனநிலை அல்லவா? ‘அப்படியே ஆகட்டும்’’ என்று எமன் முதல் வரம் தந்தான்.
நச்சிகேது யாக ஸாஸ்திரம்
‘வேதசாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தில் யாகங்கள் செய்வது பற்றிய
விளக்கங்கள், அவைகளின் பலன்கள் பற்றிய போதிய தெளிவு இல்லை.
எனக்கு இவைப் பற்றி நீங்கள் சொல்லித் தரவேண்டும்’ என்று தனது இரண்டாவது கோரிக்கையை வைத்தான் சிறுவன்.
எமன் சொல்லித்தந்த அனைத்து விஷயங்களையும் நச்சிகேது பின்னர் மற்றவர்களுக்கு புரியும் வகையில் அனைத்தையும் வகைப்படுத்தி பதிவிட்டு சென்றுள்ளான்.
இவை ‘நச்சிகேது யாக ஸாஸ்த்ரம்’ என்று இன்றும் நம்மிடையே ஆதிக்ரந்தமாக பயன்பாட்டில் இருக்கிறது.
மரணம் என்றால் என்ன?
நாச்சிகேதுவின் மூன்றாவது கேள்வி எமனுக்கே ஆட்டம் தந்தது. ‘ஸாஸ்த்ரங்கள் இறப்பைப்
பற்றிய சரியாக விளக்கம் அளிக்கவில்லை.
மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது? இறந்தபின் மறு பிறவி உண்டா?’ வயதுக்கு மீறிய இந்த கேள்விக்கு எமதேவன் உடனடியாக பதில் அளிக்க விரும்பவில்லை.
‘இது தேவ ரஹஸ்யம். இதைத் தெரிந்து கொள்ள உனக்கு வயதோ, மனநிலையோ, அறிவோ போதாது. ஆகவே என்னால் உன் கேள்விக்கு பதில் தர முடியாது.
ஆனால் நீ கேட்ட இந்த கேள்விக்காக நான் உனக்கு உன் உலகில் உள்ள மிக உயர்ந்த ஆஸ்தியைத் தருகிறேன், ராஜ்யத்தைத் தருகிறேன். அதை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இரு’ என்றான்.
சிறுவனின் பிடிவாதம்
எமதேவன் சிறுவனின் நம்பிக்கையையும், தெரிந்து கொள்ளும் தீவிரத்தையும் இங்கே
சோதனை செய்கிறான்.
சிறுவனோ ‘உங்கள் ஆஸ்தியோ, ராஜ்யமோ எதுவும் எனக்குத் தேவையில்லை’ என்று மறுத்து விட்டான். எமன் விடவில்லை.
‘சரி சொர்க்க லோகத்தில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் உனக்குப் பரிசாகத் தருகிறேன். இந்தக் கேள்வியை மட்டும் மறந்துவிடு’. சிறுவன் மறுத்தான்.
‘போகட்டும், உன்னுடைய அனைத்து பிறப்புகளுக்கான புண்ணியங்களை இப்போதே உனக்குத் தானம் தருகிறேன். இந்தக் கேள்வியை மறந்துவிடு’.
எமனின் எந்த ஆசை வார்த்தைகளுமே சிறுவனை அசைக்க முடியவில்லை.
இறப்பு என்றால் என்ன?
‘எமதேவரே, நீங்கள் எனக்குத் தருவதாகக் கூறும் அனைத்தும் பொருள்களும் காலத்தால்
அழியக்கூடியவை. நிலையில்லாதவை.
மரணம் இந்த அனைத்து சந்தோஷங்களையும் அழித்துவிடும். இறப்பு என்பது என்ன என்று தெரிந்து கொண்டால்தான் நீங்கள் தருவதாகக் கூறும் அனைத்து செல்வங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும்’ என்று சிறுவன் வாதிட்டான்.
சிறுவனின் விவேகத்தையும், கற்றுக்கொள்ளவேண்டும் என்ற வைராக்கியத்தையும்,
ஆர்வத்தையும், உறுதியையும் கண்டு வியந்தான் எமன்.
தனக்கு ஒரு உண்மையான மாணவன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து, மனிதகுலத்துக்கே முதல் முறையாக இறப்பின் ரகசியத்தை சிறுவனுக்கு போதித்தான்:
‘நீ பார்க்கும், உணரும் உடல் உண்மையில் நீயல்ல. உன் உடலில் உள்ள புலன்களை அடக்கி
ஆளும் மனமும், மனதை ஆளும் புத்தியும், இவை அனைத்தையுமே ஆளும் ‘நான்’ என்கிற
சுயநலமும் நீயல்ல.
இவைகளுக்கெல்லாம் மகுடமாக, இவை அனைத்தையும் சாட்சியாக கவனித்து, ஒளிக்கெல்லாம் ஒளியாக, சதா கோடி சூரிய ப்ரகாசமாக, மனம் என்னும்
கண்ணாடியுள் பிரதிபலித்து உன்னுள்ளே ஸ்வப்ரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கும்
ஆத்மன்தான் உண்மையான நீ’.
எமதேவன் தொடர்ந்தான்.
சரீரம் ரதமேவ ச
ஆத்மானாம் ரதினம் வித்தி,
சரீரம் ரதமேவ ச,
புத்திம் து சாரதீம் வித்தி
மனப் பிரகரஹம் ஏவ ச
இந்திரியாணி ஹயானா ஆஹூர்
விஷயம் தேஸூ கோசரான்
ஆத்ம இந்த்ரிய மனோ யுக்தம்
போக்தேதி ஆயூர் மனீஷிணஹ
‘ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்துள்ள பயணி நீ. தேர்தான் உன் உடல். குதிரைகள்
உன் புலன்கள். உன் மனம் கடிவாளம். தேரை இயக்குவது உன் புத்தி.
பாதைகளை முடிவு செய்வது உன் கர்ம வினைகள். பாதையை மட்டுமே உன்னால் முடிவு செய்ய முடியும்.
விழித்திருக்கும் நிலையில் தேரையும், குதிரைகளையும், தேரோட்டியையும் அடையாளம்
கண்டுகொள்கிறாய். இவை அனைத்தும் நீ என்று தவறாக நினைத்துக்கொள்கிறாய்.
உறக்க நிலையில் புதிய உலகை, புதிய தேரைக் காண்கிறாய். அங்கும் அவை அனைத்தும் நீதான் என்று எண்ணிக் கொள்கிறாய்.
‘நான்’ நீயல்ல! நீ ‘நான்’ அல்ல!
ஆழ்ந்த உறக்க நிலையில் இந்த தேரும், உலகமும், பாதையும் மறைந்துவிடுகின்றன.
ஆனாலும் மறைந்து போகிறது என்பதையும் ’ நீ ‘அல்லவா உணருகிறாய்.
அப்படி இருக்கும்போது, நீயாக நினைத்துக்கொண்டிருக்கும் உடல்-உள்ளம்-புத்தி சேர்ந்த கலவை என்று ‘நீ’ எப்படி முடிவு செய்கிறாய்?
நீ இந்த சூட்சும உடலோ, ஸ்தூல உடலோ அல்லது காரண உடலோ அல்ல என்பதை உணரும்போது ஸம்ஸார தொல்லைகளிலிருந்தும் துக்கங்களிலிருந்தும், ‘நான்’ என்னும் உன்னிடத்திலிருந்தும் விடுதலை பெற்று மோட்சம் அடைகிறாய்’.
‘இந்த உண்மையை உணருபவர்கள் தங்களை மட்டுமல்லாது இந்த உலகத்தையும்,
ப்ரம்மத்தையுமே உணரமுடியும்.
ஆத்மன் ஒன்றே நிதர்சனம்
அதுமட்டுமல்ல இந்த ஆத்மன் ஒன்றே நிதர்சனம் என்ற உண்மையையும் உணரமுடியும். இதைத்தான் உபநிஷத்துக்கள் ‘பிரம்ம சத்யம், ஜகத் மித்ய, ஜீவோ பிரம்மைவ நாபரஹ’ என்று பிரகடனப்படுத்துகின்றன.
பிரம்மன் ஒன்றே நிஜம். அதைத் தவிர வேறு எதுவும் உண்மை இல்லை. நீ பார்க்கும் இந்த உலகம் ஒரு தோற்றம். உண்மை இல்லை. ஜீவன் ப்ரம்மனை உணர்ந்துவிட்டால் அதுவே நிரந்திரம். அழியாதது.
அதுவே ஆனந்தம். சத் சித் ஆனந்தம். இந்த நிலையை உணருபவர்களுக்கு மரணம் இல்லை.
பிறப்பும் இல்லை. இதுவே நீ தெரிந்துகொள்ளவேண்டிய ரகசியம்’. என்று முடித்தான் எமன்.
நாம் காணும் உலகம்
இந்த இடத்தில் ‘தோற்றம்’ என்பதை விளக்கியே ஆகவேண்டும். மரத்திலான ஒரு பொருளைப்
பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக ஒரு மேசை. நாம் மேசையைப் பார்க்கும்போது அந்த மேசை உருவாவதற்குக் காரணமான மரம் மேசையில் மறைந்துள்ளது. காண முடிவதில்லை.
மேசை உண்மையையிலேயே மரம்தான். ஆனால் நமக்கு வேறு உருவத்தில், வடிவத்தில் தெரிகிறது. அதைப் போலவே ஒரு மண்ணினால் உருவான ஒரு
குடத்தைக் காணும்போது மண் நமக்குத் தெரிவதில்லை.
தங்கத்தினால் ஆன ஒரு ஆபரணத்தைப் பார்க்கும்போது தங்கம் தெரிவதில்லை. மரமோ, மண்ணோ, தங்கமோ இந்தப் பொருள்கள் இல்லாமலும் கூட தன்னிச்சையாக இருக்கமுடியும்.
ஆனால் அவைகளினால் உருவான பொருள்கள், அவைகள் உருவாவதற்குக் காரணமான ஆதிகாரணிகளிலிருந்து வேறுபட்டு தன்னிச்சையாக இருக்கமுடியாது.
அதைப் போலத்தான் நம்மைச் சுற்றி நாம் காணும் இந்த உலகம், அதிலுள்ள ஒவ்வொரு
பொருளும், அவைகளின் ஆதிகாரணிகளின் பிரதிபலிப்பாக நமக்குள் தோன்றும் தோற்றமே.
நிலையற்றவை. தொடர்ந்து மாற்றங்களை சந்திப்பவை.
ஏகம் சத்
இங்கே உபநிஷத்துக்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்து, உறைந்து, மறைந்து இருக்கும் ஒரே ஆதிகாரணி ப்ரம்மன் மட்டுமே. ப்ரம்மன் இல்லாவிட்டால் எதுவும் இல்லை.
இது ஒன்றேதான் உண்மை. மற்றவையெல்லாம் (உடல், உள்ளம், எண்ணம் கலவை சேர்த்து)
தோற்றமே! ஏகம் சத்!
இந்த உண்மையை, பிரம்மதீட்சையை உணர்ந்து கொண்டதனால் நச்சிகேது மரணத்திலிருந்து விடுதலையும் பெற்றான்.
ப்ரம்மனை உணர்ந்தவர்களுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்ற ரஹஸ்யம் நச்சிகேதுவால் வெளிவந்தது.
இந்த ரஹஸ்யத்தை உலகறியச் செய்த பெருமை நச்சிகேதுவையே சாரும். இது வேத காலத்தில் நடந்தது. அறிந்துகொள்ள முடியாத பல யுகங்களுக்கு முன்னர் நடந்தது.
நச்சிகேது உணர்ந்த விஷயங்கள் கடோபநிஷத்தில் இன்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது.
மனித குலத்தை எட்டிய ரஹஸ்யம்
பல ரிஷிகளும் மஹான்களும் உபநிஷங்களுக்கு பல வகையில் விளக்கம் அளிக்க
முயன்றார்கள்.
சரியான வகையில், நாமெல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் லகுவாக விளக்கம் அளித்த பெருமை ஸ்ரீஸங்கரரைச் சாரும். எட்டாக்கனியாக இருந்த இந்த ரஹஸ்யம் மனிதகுலத்துக்கே எட்டியது.
எமன் என்கிற மஹாகுருவுக்கு நச்சிகேது என்கிற அபூர்வ மாணாக்கன் கிடைத்தான். அவன்
எடுத்த மிகப் பெரிய முயற்சியால் பிறப்பு-இறப்பு பற்றிய விளக்கம் நமக்கு கிடைத்தது.
இது மிகப் பெரிய மனித சேவை. ஒரு நல்ல மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நச்சிகேது ஒரு நல்ல உதாரணம்.
வாழ்வியல் நெறி
விவேகம் (எது தேவை, தேவை இல்லை என்கிற சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு), வைராக்யம் (இலக்கைத் தவிர மற்றவைகளை ஒதுக்கித் தள்ளுவது), ஷட்ஸம்பத்தி என்று கருதப்படும் ஷம(எண்ணங்களை அடக்குதல்), தம (ஐம்புலங்களை அடக்குதல்), உபரதி (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்), திதிக்க்ஷை (பொறுமை), சிரத்தை (இச்சைகளிலிருந்து விலகி நிற்கும் பயிற்சி) சமாதான ( ஆழ்ந்த முனைப்பு), இவைகளோடு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவுடன் (முமுக்ஷத்துவம்) ஆகிய இந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் எவர் முயன்றாலும் (இதுதான் தவ நிலை).
இந்த உண்மையான, மரணமே இல்லாத பேரானந்த நிலையை (சத்சிதானந்த நிலை) உணர முடியும் என்பதை இந்தச் சிறுவன் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினான்.
இந்த நான்கு ஒழுக்கப் பண்புகளும் (விவேகம், வைராக்யம், ஷட்ஸம்பத்தி, முமுக்ஷத்துவம்) உண்மையை நாடும் ஒரு மாணவனுக்கான அடிப்படைத் தேவை என்பதையும் ஒரு வாழ்வியல் நெறியாக உணர்த்தியுள்ளான்.
உபநிஷத் சொல்வது என்ன?
வைராக்ய நிலை அடைவது சுலபமல்ல. இது பெரிய போராட்டம். தேரையும்
தேரோட்டியையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து சரியான பாதையுள் இலக்கை நோக்கி
பயணிப்பது.
இது நம்மைப் பற்றிய ‘உள்நோக்கிய பயணம்’. இலக்கை அடையும் போது ஆதித்யனைப் (சூரியனை) போல நமக்குள் பிரகாசித்து ப்ரம்மனை உணர வழி கிடைக்கும்.
‘வேதாஹம் புருஷம் மஹாந்தம், ஆதித்யவர்ணம் ஸமசஸ்த்துபாரே’ (இருளைப் போக்கும்
ஸூர்யனைப் போல ஒளிர்ந்துகொண்டிருக்கும் ப்ரம்மன்தான் நீ என்பதை அறிவாயாக’) என்று அழகாக வருணிக்கிறது உபநிஷத்.
நமக்கு தடையாக இருப்பது எது?
இந்த ஞானத்தை உணருவதற்கு தடையாக இருப்பது நம்முடைய அறியாமை.
ப்ரம்மஸூத்ரங்களுக்கு விளக்கம் எழுதியுள்ள ஸ்ரீசங்கராச்சாரியர் அறியாமையை ஒரு
கொடிய வியாதி என்று வருணிக்கிறார்.
சத்சிதானந்த சொரூபமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ப்ரம்மனை, இறைநிலையாய் உணருவதே நம் வாழ்க்கைப் பயணம்.
வெறும் உடல், மனம், புத்தி, சுயநலம் கொண்ட தேரையும், தேரோட்டியையும் உண்மையான ‘நாம்’ என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
இந்தக் ‘கருவிகளால்’ ஏற்படும் துன்பங்கள் ‘நம்முடையது’ என்று தவறாக கருதி ஏற்றுக்கொண்டு அல்லல் படுகிறோம்.
அழியாத ப்ரம்மனை அழியக்கூடிய பொருள்களாக எண்ணுவது மூடத்தனம் என்று வாதிடுகிறார் ஸ்ரீசங்கராச்சாரியார்.
அழியாத ப்ரம்மனுக்கு மரணமேது, ஜனனமேது?
இந்த உண்மையை புரிந்து உணர்ந்துகொள்பவர்களால் மட்டுமே எப்போதும் மரணபயம் கடந்து ஆனந்தமாக பேரானந்தமாக வாழமுடியும். இதுவே வாழும்நிலை முக்தி, மோட்சம்.
எதுவும் எளிதல்ல
நச்சிகேதுவுக்கு எமதேவன் என்கிற மஹாஞானி குருவாகக் கிடைத்தார். நச்சிகேது இந்த
குருவை சாதாரணமாக எந்தக் கஷ்டமும் இல்லாமல் அடைய முடியவில்லை. தன்னையே தியாகம் செய்துக்கொள்ளவேண்டியிருந்தது.
வேத சாஸ்திரங்கள் சொல்லும் அனைத்து ஒழுக்க நியதிகளையும் பின்பற்றி அதன் பலனாகவே, ‘ப்ரம்மன், பிறப்பு, இறப்பு’ பற்றிய ரஹஸ்யங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
மனிதகுலமே அறிந்திராத இந்த மாபெரும் ரஹஸ்யம் இந்த சிறுவன் வழியாக இந்த உலகிற்கு தெரிய வந்தது.
தான் அறிந்த தேவ ரஹஸ்யங்களை, நேரடி அனுபவங்களை, அவைகளின் பலங்களை மாத்திரம் இந்த மாணவன் வெளிஉலகிற்கு சொல்லவில்லை.
குரு-சிஷ்ய பாரம்பரியம்
தன் குருவைப் பற்றிய பெருமைகளையும், அவர் அருளிய ‘ஆத்மபோதத் தத்துவங்களையும்’ நாமெல்லாம் அறிய வழிசெய்தான். இது ஒரு உண்மையான குரு-சிஷ்ய பாரம்பரியம்.
நச்சிகேது மேற்கொண்ட தியாகங்களையோ, தீவிர முயற்சியையோ, பக்தி சிரத்தையையோ
நம்மால் கடைபிடிக்கமுடியுமா என்று தெரியாது.
இந்த உண்மையை புரிந்துகொள்வதோ, உணருவதோ சாமான்ய காரியம் அல்ல. இதற்கு முற்றும் உணர்ந்த ஒரு ப்ரம்மகுருவின் உதவி இல்லாமால் இது சாத்யமில்லை என்கிறது வேத சாஸ்திரங்கள்.