ஆர். ராமலிங்கம்
பொன்முடி கைது சம்பவத்தை (தொடர் 1) அடுத்து நிருபர்களுக்கும் இப்படியும் ஒரு சிக்கல் ஏற்படும் என்பதை உணர வைத்த அரிசி கிடங்கு விவகாரம் குறித்து ஒரு நிருபரின் டைரி பேசுகிறது (தொடர் 2) விவரிக்கிறது.
Table of Contents
முதல் பக்க செய்தி
1998 காலக் கட்டத்திலேயே, நான் வீட்டில் இருந்தே செய்திகளை அனுப்புவதற்காக கணினி, ஸ்கேனர், மோடம், தொலைபேசி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பத்திரிகை நிர்வாகம் செய்து கொடுத்திருந்தது.
நான் பொன்முடி கைதான தகவலை செய்தியாக, புகைப்படத்தோடு சென்னைக்கு கணினி வழியாக அனுப்பினேன்.
மறுநாள் காலை (புதன்கிழமை) தினமணியின் முதல் பக்கத்தில் பாட்டம் ஸ்ப்ரெட்டாக, பொன்முடி அரிசி கிடங்கினுள் சென்றதையும், அங்கு அவர் ஆய்வு செய்யும் படத்துடன் அரிசி கிடங்கு விவகாரம் தொடர்பான விரிவான செய்தி வெளிவந்தது.
இதேபோல் ஓரிரு பிரபல நாளிதழ்களிலும் விழுப்புரம் அரிசிக் கிடங்கு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
பொன்முடி கைதான நிலையில், அவருடன் விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கிற்கு சென்ற சில திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள்.
கருணாநிதி கேள்வியும் ஜெயலலிதா நடவடிக்கையும்
பொன்முடி கைதானதும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மறுநாள் ஒரு கேள்வியை எழுப்பி அறிக்கை வெளியிட்டார்.
“அதிமுக அரசு ஆட்சியேற்றது முதல் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து கைது செய்து வருகிறது. இப்போது பொன்முடியை கைது செய்திருக்கிறார்கள்.
மேலாளரிடம் அனுமதி பெற்றே பொன்முடி விழுப்புரம் அரிசி கிடங்கினுள் சென்றார். பொன்முடியுடன் பத்திரிகையாளர்களும் சென்றார்களே அவர்கள் செய்ததும் அத்துமீறல்தானா?” என்பதுதான் அந்த கேள்வி.
ஒரு வாதத்துக்காக இக்கேள்வியை கருணாநிதி முன்வைத்த நிலையில், உடனடியாக அரிசி கிடங்கினுள் சென்ற நிருபர்களையும் கைது செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக புதன்கிழமை மாலை தகவல் பரவியது.
இது எனக்கு உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நான் எனது சொந்த ஊரை விட்டு மனைவி, 6 வயது பெண் குழந்தையுடன் தனியாக விழுப்புரத்தில் வசித்து வந்தேன்.
அரிசி கிடங்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திடீரென நம்மை கைது செய்துவிட்டால், மனைவியும், குழந்தையும் தனியாக இருப்பார்களே. அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பதா, இங்கேயே இருக்க வைப்பதா போன்ற கேள்விகள் எழுந்தன.
இருந்தாலும், வீட்டின் உரிமையாளர் ஒரு கல்லூரி பேராசிரியர். அவரது மனைவி, அக்கம், பக்கத்தில் வசிக்கும் கல்லூரி பேராசிரியர் குடும்பத்தினர், கிராம நிர்வாக அலுவலர் குடும்பம் என எல்லோரும் எங்களுடன் அப்போது நெருங்கி பழகுபவர்களாக இருந்ததால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை மனதின் ஓரத்தில் கொஞ்சம் இருந்தது.
துணை நின்ற ஆசிரியர்
மாலை 5 மணியளவில், சென்னையில் இருந்து என்னுடைய போற்றுதலுக்குரிய மறைந்த பத்திரிகை ஆசிரியர், ஆர்.எம்.டி. சம்பந்தம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
“யப்பா… அங்க என்னப்பா செய்தி…”
“அரிசி கிடங்குக்குள் போன நிருபர்களையும் அந்த அம்மா கைது செய்யப் போறதா சொல்றாங்களே தெரியுமா”ன்னு கேட்டார்.
அவர் கேட்டு முடிப்பதற்குள், மளமளவென எனக்குத் தெரிந்த விஷயங்களை படபடப்போடு அவரிடம் சொல்லி முடித்தேன்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவர், “நான் பதட்டத்தில் இருப்பதை புரிந்துகொண்டு, நீ ஒரு பத்திரிகை நிறுவனத்தில் நிருபர்பா… தனி ஆள் இல்ல.. தைரியா இரு.. நாங்கள் இருக்கிறோம். சும்மா ஒரு மிரட்டலுக்காகத்தான் நிருபர்களை கைது செய்வாங்க.. நாங்க பார்த்துக் கொள்கிறோம். உன் மனைவியிடமும் சொல்லி வை” என்றார் ஆசிரியர்.
அத்தோடு அவர் விடவில்லை. “எங்கே உன் மனைவிகிட்டே போனை கொடு” என்றார். போனை அவளிடம் கொடுத்தபோது, அவள் பயத்தில்… சார்… என்றாள்.
“பயப்படாதேம்மா… சென்னையில் இருந்து ஒரு நிருபரை விழுப்புரத்துக்கு கிளம்பி வரச் சொல்லியிருக்கேன். அவர் ராமலிங்கத்தை பார்த்துக்குவார்.. தைரியமா இரு..” என்று சொல்லிவிட்டு “போனை அவரிடம் கொடு” என்றார்.
என்னிடமும் திரும்பவும்.. ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி தைரியமூட்டிய அவர், விழுப்புரத்துக்கு சென்னையில் இருந்து ஒரு நிருபரை அனுப்பியிருக்கிறேன். அவர் வரும் வரை அங்கே என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் எனக்கு தகவல் சொல்லு.. ” என்று சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தார்.
அதுவரை கொஞ்சம் பதற்றமாக இருந்த நான் சகஜநிலைக்கு திரும்பி, எனது சக பத்திரிகை நிருபர்களில் ஒருவரான செங்குட்டுவனிடம் செல்போனில் தகவலை பரிமாறினேன் (அப்போது செல்போன் பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் இருந்தாலும் கூட ஒருசில நிருபர்கள் செல்போன்களை பயன்படுத்த தொடங்கியிருந்தோம்.)
அத்துடன் தினத்தந்தியில் அப்போது பணிபுரிந்த மூத்த நிருபர் சாமி விஜயனையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து எனது பணிகளை செய்யத் தொடங்கினேன்.
மாலை 5.30 மணியளவில் சன் டி.வி. நிருபரை போலீஸார் தேடுகிறார்கள் என்ற தகவல் எனக்கும், சக நிருபர்களுக்கும் கிடைத்தது.
உளவுத் துறை தகவல்
உளவுத் துறையை சேர்ந்த ஒருவர் என்னோடு எப்போதும் தொடர்பில் இருப்பது உண்டு. அவரிடமும் நான் உடனடியாக தொடர்புகொண்டு செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
இப்போதைக்கு சன் டிவி சுரேஷ் மட்டும்தான் காவல்துறை இலக்கு. அதனால் நீங்கள் பதட்டமடைய வேண்டாம். மற்ற நிருபர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்று நினைக்கிறேன் என பட்டும் படாமல் பேசினார்.
சன் டிவி நிருபர் சுரேஷ் சில நிமிடங்களில் ஒரு புதிய எண்ணில் இருந்து தொடர்புகொண்டார். அவரும் கைது நடவடிக்கை செய்தியால் அச்சத்தில் இருந்ததை பேச்சில் இருந்து உணர முடிந்தது.
சார்.. என்னை கைது செய்யப்போறதா பேசிக்கிறாங்க… எங்க வீட்டில் பயப்படுறாங்க.. அதனால நான் வீட்டில் இருந்து புறப்பட்டு வேறொரு இடத்தில் இருக்கிறேன். அலுவலகத்திற்கும் நான் தகவல் சொல்லிவிட்டேன். ஏதாவது தகவல் கிடைத்தால் என்னை இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் என்றார்.
நான் சென்னையில் இருந்து எனது ஆசிரியர் தொடர்புகொண்டதையும், இந்த விஷயத்தில் உங்கள் நிர்வாகம் மட்டுமல்ல எல்லா பத்திரிகை நிர்வாகங்களும் ஆதரவாக இருக்கும். அதனால் பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்
சுரேஷைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு இல்லாததால், அவரை எப்படியாவது தேடி பிடித்துவிட தீவிரம் காட்டினார்கள்.
அப்போது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராதாகிருஷ்ணன். பத்திரிகையாளர்களுடன் அவர் நெருங்கி பழகக் கூடியவராக இருந்தார். (அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று இதே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியேற்றவர்).
மாலை 6 மணியளவில் சுரேஷ் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அவரை நேரில் சந்தித்தார். படு கேஷுவலாக வாங்க நாம பேசிக் கொண்டே நடப்போம் என்று சொன்ன அவரின் பேச்சை சுரேஷால் தட்ட முடியவில்லை.
ஜீப்பை முன்னே செல்லவிட்டு, சுரேஷுடன் நடந்தபடியே காவல் துறையின் நிலைமையை விளக்கினார். சுரேஷும் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜீப்பில் ஏறி அமர சில நிமிடங்களில் காவல் நிலையத்துக்கு ஜீப் சென்றடைந்தது.
அடுத்த சில நிமிடங்களில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ராமலிங்கம்… அரிசி குடோனுக்கு போன எல்லா நிருபர்களையுமே ஸ்டேஷனுக்கு 8 மணிக்கு வரச் சொல்லியிருக்கேன். நீங்களும் வந்துடுங்க.. நாம அங்க பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
அதற்குள், சென்னையில் இருந்து எங்கள் பத்திரிகை அலுவலகம் அனுப்பிய மூத்த நிருபர் கோலப்பன் என் வீட்டுக்கு வந்தடைந்தார். அவரிடம் நடந்த விவரங்களை தெரியப்படுத்தினேன்.
இன்ஸ்பெக்டர் சொன்ன தகவல்
இரவு 8 மணிக்கு காவல் நிலையம் சென்றபோது இன்ஸ்பெக்டர் எல்லோரையும் தன்னுடைய மேஜைக்கு முன்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமரச் சொன்னார்.
உடனடியாக இருக்கையில் அமராமல், சன் டிவி நிருபர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொன்னோம்.
இன்ஸ்பெக்டர் முன்பு சென்று நிருபர்களுக்கே உரிய கேள்விகளை அவரிடம் வைத்தபோது, அவர் சிரித்தபடியே.. முதலில் நீங்கள் எல்லோரும் உட்காருங்கள். பேசலாம் என அமைதிப்படுத்தினார்.
“இப்போதைக்கு சுரேஷை மட்டும் விசாரிக்க வேண்டும் என்று டிஎஸ்பி சொல்லியிருக்கிறார். அதனால் சுரேஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறோம்” என்று சொன்னார் ராதாகிருஷ்ணன்.
“அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்கள் தொடர்பான பேச்சு இப்போதைக்கு எழவில்லை. ஒரு வேளை விசாரணை நடத்த வேண்டிய சூழல் வந்தால், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
அதற்காகத்தான் உங்களை வரச் சொன்னேன். இப்போதைக்கு நீங்கள் போகலாம்” என்றார்.
அதற்குள் விழுப்புரத்தில் உள்ள அனைத்து பத்திரிகை தோழர்களும் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.
காவல் நிலையம் முன் போராட்டம்
எல்லோரும் ஒன்றிணைந்து சன் டிவி நிருபரை காவல் நிலையத்தில் வைத்திருப்பதைக் கண்டித்து காவல் நிலைய வாயிலில் நின்று அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினோம்.
மேற்கு காவல் நிலையம் விழுப்புரம் 4 முனை சந்திப்பின் ஒரு பகுதியில் அமைந்திருந்ததால், நிருபர்களின் போராட்டம் 4 வழிகளிலும சென்ற பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும், பேருந்துகளில் சென்றவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.
நிலைமை மோசமடைவதே அறிந்த, டிஎஸ்பி கிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு வந்து சுரேஷை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார்.
இதனால் நாங்கள் எல்லோரும் டிஎஸ்பி ஜீப்பை மறித்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினோம்,. ஒரு கட்டம் வரை சமாதானமாக பேசிய போலீஸார், வலுக்கட்டாயமாக அங்கிருந்து எங்களை அகற்றி ஜீப்புக்கு வழி விட்டார்கள்.
இதை சன் டி.வி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் சில நிமிடங்களில் ஒளிபரப்பவே, மாநிலத்தில் ஒருசில இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் எங்களுக்கு கிடைத்தது.
ஒரு நிருபரின் டைரி பேசுகிறது – தொடர் 1
தேர்தல் பத்திரம் மூலம் எந்தக் கட்சி எவ்வளவு பெற்றது?
எதிர்பார்க்காத மறுநாள் போராட்டம்
இரவு 11 மணியை நெருங்கிவிட்டது. சன் டி.வி. நிருபரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்வதாக தகவல் வந்தது. அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்பது புரியாமல் அவரவர் வீடுகளுக்கு நள்ளிரவில் திரும்பினோம்.
மறுநாள் ஒரு மிகப் பெரிய போராட்டத்தை சென்னையில் பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக எடுப்பார்கள் என்பதை அப்போது நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் மிகப் பெரிதாக உருவெடுத்தது எப்படி?
(தொடரும்)