பதஞ்சலி யோகம் தந்த மஹரிஷி

பதஞ்சலி முனிவர் மந்திரம் – 3-ஆவது கண்ணை திறக்கும் பயிற்சி!

86 / 100

வெ நாராயணமூர்த்தி

நித்தமும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி. அவர் அருளிய ஆழ்நிலை யோகப் பயிற்சியைத் தான் பதஞ்சலி யோகா அல்லது பதஞ்சலி முனிவர் மந்திரம் என்கிறோம். அது நம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தருகிறது.

ஆர்வத்தோடு பதஞ்சலி முனிவர் மந்திரம் அறியத் தொடங்கிய நீங்கள், ஏன் இந்த பயிற்சி நமக்குத் தேவை? இதனால் என்ன பயன்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

நம் மனமும் ஆறும்

நிலைக் கொள்ளாமல் நம் மனம் சதா அலைந்து கொண்டேயிருக்கிறது. நீருக்கே
உரிய குணங்கள் மாறி மழைக் காலத்தில் காணும் வெள்ளப் பெருக்கு போல, நம்
மனமும் வேகமாக, கழிவுகளைச் சுமந்து, ஆரவாரத்துடன் பாய்ந்தோடிக்
கொண்டேயிருக்கிறது.

அந்த நேரத்தில் ஆற்றைக் கடப்பது ஆபத்தானது. சுலபமும்
இல்லை. ஆனால், பருவங்கள் மாறியதும், வெள்ளம் குறைந்ததும், அளவோடு, நிதானமாக, ஜொலித்து ஓடும் தெளிந்த நீரோடையாகிறது ஆறு.

நம்மால் அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் ஆற்றை எளிதாகவும், வேகமாகவும் கடப்பது எளிது. நம் மனமும் எண்ணமும் அதுபோலத்தான்.

உலகில் நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம், நம்
உண்மையான இயல்பை நாம் புரிந்துகொள்ளாமல் அறியாமையில்
செயல்படுவதுதான்.

வெளி உலகத்தோடு மட்டுமே உறவாடும் நாம், நமக்குள்ளே இன்னொரு உலகம் இருப்பதை யோசிப்பதே இல்லை. இதற்குக் காரணம், தெளிவில்லாத, சதா அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் நம் எண்ணங்கள். வெள்ளப்பெருக்கைப் போல.

மனதை தெளிந்த நீரோடையாக்கலாம்

இதனால் பிரச்சனைகளை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது நமக்கு
பயத்தைக் கிளப்புகிறது. இதனால் தவறான முடிவுகளை எடுக்கிறோம். மீண்டும் பெரிய சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோம்.

ஆக மனதை பக்குவப்படுத்தி, எண்ணங்களைத் தெளிவு படுத்தி, அமைதிப் படுத்தி, தெளிந்த நீரோடை போல ஒருநிலைப் படுத்தினால் நம்மால் எதையும் சீர்தூக்கிப் பார்த்து சரியான முடிவை எடுக்க முடியும்.

இதன் மூலம் நமக்கு தற்காலிகமாக ஏற்படும் பிரச்னைகளிலிருந்து தப்ப வாய்ப்பு கிட்டும். ஆனால் இது உள்உலகத்துள் பயணிப்பது சாதாரண காரியம் இல்லை. இதற்கு
நமக்கு கடும் பயிற்சி தேவை.

எட்டு அங்கங்களையும் கட்டுப்படுத்தி, எண்ணங்களை ஒருநிலைப் படுத்தி, தெளிந்த நீரோடையாகும் மனதால் நம் நிலைகளைக் கடக்கும் பயிற்சியே த்யானம்.

இது ஒரு நிலை. யோக நிலை. இந்த நிலையில் மனதை எண்ணங்களிலிருந்து தனிமைப் படுத்தும்போது நம் உண்மை சொரூபத்தையும் உணர முடியும் என்கிறது யோக சாஸ்திரம்.

இது உயர்நிலை ஆழ்நிலைப் பயிற்சி. முனைப்புடன் செய்தால் இதுவே சமாதி நிலை (அனைத்தையும் கடந்த நிலை).

பதஞ்சலி முனிவர் மந்திரம் – யோகம்

இங்கேதான் பதஞ்சலி மஹரிஷி நமக்கு அளித்துச் சென்றுள்ள யோக சூத்ரங்கள்
உதவி செய்கின்றன. மனதையாளும் அருமையான வழிமுறைகள் 195 சூத்ரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளில் பல ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள் பதஞ்சலி யோகம் தொடர்பான சூத்ரங்களுக்கு விளக்க உரைகளை அளித்துச் சென்றுள்ளனர்.

குறிப்பாக வியாச ரிஷி எழுதிய ‘வியாச பாஷ்யம்’, ஸ்ரீ சங்கரர் எழுதிய ‘சங்கர
பாஷ்யம்’ போன்றவை பதஞ்சலி யோகா பற்றி எழுதிய பழமையான நூல்களாக இருக்கின்றன.

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வாசஸ்பதி மிஸ்ரா, போஜராஜ, விக்ஞானபிக்ஷு, ஹரிஹரானந்த ஆரண்ய, ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரும் பதஞ்சலி யோகம் குறித்த விளக்க உரைகளை எழுதியுள்ளனர்.

யோக ஸூத்ரம்

‘யோக’ என்கிற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘யூஜ் சாமாதௌ
யுஜிர் யோகே’. ஒன்று சமாதி நிலை (உலக பந்தங்களிலிருந்து நம்மைப் பிரித்தல்).

இன்னொன்று யோக (ஒரே நிலையில் ஒன்றுதல்) என்பது விளக்கம். மனதை நம்
உண்மை சொரூபமான ஜோதியோடு (ஆத்மனோடு) இணைப்பதுதான் யோக என்று
யோக ஸூத்ரம் மேலும் விளக்கம் சொல்கிறது.

நம் இயல்பையும் மீறி, அன்றாட வாழ்க்கையில் நம் கண் முன் காணும்
உலகத்தோடும், உடல் உள்ளம், எண்ணம், புத்தி, அஹம்காரம் கொண்ட
கலவையோடும் நாம் எப்போதும் இணைந்திருக்கிறோம்.

இது அஹங்காரத்தால் ஆளப்படும் ஒரு தனித்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும். நம் உண்மை இயல்பை இந்தக் கலவைகளிலிருந்து பிரிக்கும் பயிற்சியே யோக.

‘யோக சித்த விருத்தி நிரோதஹ’ என்கிறது பதஞ்சலி ஸூத்ரம். மனதுக்குள்
தோன்றும் எண்ணச் சலசலப்புகளை அமைதிப்படுத்தி ஒரு நிலைப் படுத்துவதே யோக
என்பது இந்த சூத்ரத்தின் இதன் பொருள்.

ஆன்மிக சிந்தனை

இந்த சூத்ரத்துக்கு விளக்கம் அளிப்பதற்கு முன், பாரத தேசத்தில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிலவிய ஒரு ஆன்மிக சிந்தனையைப் பற்றி
சொல்ல வேண்டும்.

இந்த சிந்தனை கபில ரிஷியால் உருவானது. அது சாங்க்ய தத்வம். உலகில் தோன்றிய முதல் தத்வ சிந்தனை இதுவே.

நம் முன்னோர்கள் இயற்கையையும் (இந்த உலகம்- பிரக்ருதி), மனிதனையும்
(புருஷ) புரிந்துகொண்ட விதம். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு,
உறவாடும் விதம், சாதக, பாதகங்கள் இவைகளை விளக்க முயல்கிறது சாங்க்யம்.
இதிலிருந்து உருவானதே யோக சாஸ்த்ரம்.

தெய்வீக உணர்வு

‘சாங்க்ய’ என்பது எண்ணிக்கை. என்ன எண்ணிக்கை? அந்தக் காலத்தில்
மனிதனை புருஷ-பிரக்ருத்தி சேர்ந்த கலவை என்று வர்ணித்தனர்.

புருஷ என்பது தெய்வீக உணர்வு (ஸ்வயப்ரகாசமாக, சதா ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் உள்ளுணர்வு, மனித உடல் அல்ல).

பிரக்ருதி என்பது இயற்கை. இயற்கையால் உருவானது உடல், மனம், எண்ணம். சதா மாற்றத்தை சந்திக்கும் நிலை கொண்டவை இவை.

இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப மூன்று குணங்களை (சாத்வீகம், ரஜஸ்,
தமஸ்) எண்ணங்கள் வழியாக மனம் சதா பிரதிபலிக்கிறது. 

அஹங்காரம்

நாம் தெரிந்துகொள்ள பல விஷயங்களை (அறிவு) இயற்கை தருகிறது. புத்தி (‘நிஸ்சய ஆத்மிக புத்தி’) விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது.

இவைகளை மனம் தெரிந்துகொள்ளும்போது அஹங்காரம் உருவாகிறது (‘எனக்குத் தெரியும்’, ‘நான்தான் செய்தேன்’, ‘இந்த உடல், உள்ளம் எண்ணம் புத்தி கலவையே நான்தான்’ என்பதுதான் இந்த அஹங்காரம்).

மேலும் உடலில் உள்ள ஐந்து புலன்களும் இயற்கையோடு சதா உறவாடுகின்றன.

இதன் விளைவாக ஐந்து புலன்களுக்குப் பின் மறைந்திருக்கும் ஐந்து
ஞானேந்த்ரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்ரங்கள்
(பிராண சக்திகள்) வழியாகத் மனம் (மனஸ்) பலவிதமான அனுபவத் தகவல்களைத்
தொடர்ந்து பெறுகிறது.

இப்படியாக மொத்தம் 25 அம்ஸங்கள் சேர்ந்ததே சூட்சும சரீரம். வெளியில் காண்பது ஸ்தூல சரீரம். இவைகளின் கலவையே மனிதன் என்கிறது சாங்க்ய தத்வம்.

யோக சாஸ்திரம்

பின்னொரு காலகட்டத்தில், சாங்க்யத்திலிருந்து  பலவிஷயங்களை
எடுத்துக் கொண்டது யோக சாஸ்த்ரம்,. புத்தி, அஹங்காரம், மனஸ் (இந்த்ரியங்கள்,
பூதங்கள், தன்மாத்ரங்கள் இதனால் உருவாகும் உணர்வுகள்)  ஆகியவற்றை ஒன்றாகச்சேர்த்து ‘சித்த’ என்று யோக சாஸ்த்ரம் வகை செய்தது.

யோக தத்வம் உருவான சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து, சாங்க்யமும், யோக சாஸ்த்ரம் விட்டுவிட்ட ‘நினைவுகளை’ இந்த எண்ணிக்கைகளோடு சேர்த்துக் கொண்டார் ஸ்ரீ சங்கரர்.

ஆனால் அவர் நினைவுகளையே ‘சித்த’ என்றார். ‘மனம், புத்தி, அஹங்காரம், சித்த
(நினைவுகள்) அல்ல நான். இயற்கையின் பிரதிபலிப்பால் உருவான மனிதன் அல்ல.

அதையும் தாண்டி நிற்கும் புருஷ (உண்மை சொரூபம்)’ என்று தன் பாடல் (நிர்வாண
ஷடகம்) ஒன்றில் பாடியுள்ளார் அவர்.

த்யான நிலை

பல்வேறு அனுபவங்களின் தாக்கங்களால் தடுமாறும் மனம் மேற்கொள்ளும்
செயல்பாடுகளால் உருவாவதே எண்ணச் சலசலப்புகள்.

மனதை ஒரு கடலாகக் கற்பனை செய்தால், அதில் உருவாகும் அலைகளே வ்ருத்தி (எண்ணங்கள்).

இந்த வ்ருத்திகளை பெரும்பாலும் ‘மலங்கள்’ என்கிறது யோக சாஸ்த்ரம். மலங்களைச்
சுத்தப்படுத்தி, அமைதிப்படுத்தி, ஒருநிலைப் படுத்துவதற்கான பயிற்சியே யோக.

சுத்தமான மனதை ஒருநிலைப் படுத்தி த்யான நிலையில் இருக்கும்போதுதான்
மனம் புருஷனை (தெய்வீக உள்ளுணர்வை) உணர முடியும்.

பதஞ்சலி முனிவர் மந்திரம்

ஏன் உணர வேண்டும்?

உடலும், மனமும் பெறும் அத்துணை அனுபவங்களையும் உணரச் செய்வது,
ஒளிரவைப்பது இந்த தெய்வீக உள்ளுணர்வே.

சரீரங்களைக் கடந்து சதா ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் தெய்வீகம் இது. மனிதனின் உண்மை சொரூபம் இது. இந்த மஹா சக்தியை உணரும்போது, உடலும், மனமும் தனிமைப்பட்டு விலகுகின்றன.

உண்மையான இயல்பு புலப்படுகிறது. இந்த அனுபவத்தை உணருபவனே தன்
உண்மை சொரூபத்தை உணருகிறான்.

இதை ‘ததா த்ர்ஷ்டே ஸ்வரூப அவஸ்தானாம்’ என்கிறது யோக ஸூத்ரம்.
அலைகளே இல்லாத அமைதியான பரமானந்த நிலை இது.

அனைத்தையும் கடந்த சாந்த நிலை. சத்சித் ஆனந்த நிலை. ஸாஸ்த்ரங்கள் என்னவோ எளிமையாக சொல்லிவிட்டன. ஆனால் இது சுலபமல்ல.

கடும் பயிற்சி தேவை

பதஞ்சலி யோகம் செய்வதற்கு கடுமையான பயிற்சி தேவை. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்த நிலையை உணர பலவகையான உத்திகள், செய்முறைகள்,  பயிற்சி முறைகள் உருவாக்கபட்டுள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் இந்தப் பயிற்சியை ராஜ யோகம் என்று அடையாளம் கண்டார்.

எளிய வழி உண்டா?

இந்தப் பயிற்சியை எளிய முறையில் செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதுதானே மனதின் இயல்பு.

எனக்குத் தோன்றிய சில வழிகளைச் சொல்கிறேன். முதலில் நமக்குப் பிடித்த இஷ்ட
கடவுளையோ, குருவையோ, ஒரு மந்த்ரத்தையோ நினைத்து அதிலேயே மனத்தை
லயித்திருக்க முயலவேண்டும்.

இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை (சந்தி நேரம் மிகவும் ஏற்றது) தேர்வு செய்வது உகந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தையும் (வீடு பூஜை அறை,
கோவில் மண்டபம் அது போல) தேர்வு செய்யலாம்.

தினமும் அதே நேரத்தில் அதே இடத்தில் தொடர்ந்து அமைதி நிலையில் அமர வேண்டும். இதை ஒரு திடமான பழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.

இதில் தொடர்ச்சி இருக்க வேண்டும். இடமும், நேரமும் த்யான நிலையும் தடைபடக் கூடாது. இதுதான் முதல் பயிற்சி. இது எளிய விஷயம் தானே இப்போது!

ஏன் பழக்கப்படுத்த வேண்டும்?

பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலுக்கு பயிற்சி மட்டுமே புரியும். அறிவு, புத்தி சம்பந்தப்பட்டவை எதுவும் தெரியாது.

மனம் அதிகாலையில் எழுந்து த்யானத்தில் அமரச் சொல்லும். உடல்
ஏற்றுக் கொண்டாலொழிய இது எப்படி சாத்தியம்? இதற்கு இந்த பயிற்சி மட்டுமே சாத்தியமானது. இதை செய்துவிட்டாலே நீங்கள் யோகத்தின் முதல் நிலையை வென்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். இதுதான் பதஞ்சலி முனிவர் அளிக்கும் முதல் பாடம்.

எண்ணங்களை கட்டுப்படுத்த

அடுத்தது எண்ணங்களைப் பக்குவப்படுத்த வேண்டும். இதற்கும் ஒரு எளிய
முறை உள்ளது.

மனதில் பலவகையான, ஆயிரக்கணக்கான எண்ணங்கள் வந்து
போகின்றன. அவைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அவைகளில் சாத்வீக எண்ணங்களையே அடிக்கடி நினைக்கத் தொடங்க வேண்டும். வெள்ளை மற்றும் வேறு நிறம் கொண்ட சிறிய கூழாங்கற்களை வைத்துக்கொண்டு, சாத்வீக எண்ணங்கள் தோன்றும்போது ஒரு வெள்ளை கல்லை ஒரு பாத்திரத்தில் போடலாம்.

மற்ற எண்ணங்களுக்கு வேறு நிற கற்களை போடலாம். சில நாள்களில் நீங்கள்
வெள்ளை கற்களை மட்டுமே பாத்திரத்தில் போடும் அளவுக்கு பக்குவப்பட்டிருப்பீர்கள். இது பதஞ்சலி முனிவர் மந்திரம் தரும் இரண்டாவது பாடம்.

சாத்வீக சிந்தனைகளை எப்படி அடைவது?

இதற்கும் ஒரு எளிய வழி இருக்கிறது. சாத்வீக புத்தகங்களைப் படிப்பது, நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, கேட்பது, பார்ப்பது.

நல்லவற்றையே சதா நினைப்பது, பிறருக்கு நல்லதையே செய்வது, தானா தர்ம
கார்யங்களில் ஈடுபடுவது.

அமைதியுடன் புன்னகையுடன் பேசுவது, எல்லோரிடமும் நட்புடன் பழகுவது, குறிப்பாக ஆன்மிக சிந்தனையாளர்களோடு நட்புகொள்வது, அவர்களிடம் சிந்தனைகளைப் பகிர்வது.

பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவது, ஆன்மிக க்ஷேத்ரங்களுக்கு செல்வது, சாத்விக உணவு உண்பது, தேவை இல்லாதபோது உணவைத் தவிர்ப்பது.

சுயநலத்தை விட்டு பிறர் நலம் பற்றி யோசிப்பது, உதவி செய்வது, சதா சுகத்தை தேடும் நிலையிலிருந்து விடுபட்டு எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வது போன்றவை நம் மனதில் எப்போதும் சாத்வீக எண்ணங்களை மட்டுமே தோற்றுவிக்கத் தொடங்கும். இதைத் தான் பதஞ்சலி முனிவர் மந்திரம் சொல்லித் தருகிறது.

அமைதி அடையும் மனம்

இது பயிற்சியின் ஆரம்ப நிலை. பழக்கம் ஏற்பட்டபின், சாத்வீக
சிந்தனைகளோடு த்யானத்தை தொடங்கி, சிறிது சிறிதாக ஏதாவது ஒரு நல்ல
எண்ணத்திலேயே மனதை லயிக்கச் செய்ய வேண்டும்.

இது தொடக்கத்தில் வேண்டுமானால் கடினமாகத் தோன்றலாம். ஆனால் விடாது முயற்சித்தால் இதை மிக எளிதில் நமக்கு கைக்கூடும்.

ஒரே சிந்தனையை மட்டுமே சுற்றி வட்டமிடும் மனம், சிறிது நேரத்தில் அடங்கி அமைதியாகி விடும். அப்போது வேறு சிந்தனைகளை வரவிடாமல் தடுப்பதும் மிக அவசியம். இதுவே பதஞ்சலி முனிவர் மந்திரம்.

ஆனந்தம்

இதற்கு உடல் கட்டுப்பாடு (ஐம்புலன்களையும் அடக்குவது) மிக அவசியம்.
சிந்தனையற்ற  நிலையிலேயே சிறிது நேரம் தொடர வேண்டும். பயிற்சி
தீவிரமாகும்போது, இந்த நிலையை வெகு விரைவிலேயே அடையமுடியும்.

அந்த நிலையிலேயே நீண்ட நேரம் லயிக்கவும் முடியும். இப்போது நாம் மெல்ல அதையும் விட்டு விலக வேண்டும். அப்போது எந்த எண்ணமும் இல்லாமல் ஒரு வெறுமை மட்டுமே மிஞ்சும்.

இப்போது அதுவும் சிறிது நேரத்தில் மறைந்துவிடும். இதுவே தெய்வீக உள்ளுணர்வை உணர சரியானத் தருணம். இப்போதுதான் நீங்கள் பதஞ்சலி முனிவர் மந்திரம் என்ந என்பதை உணர்வீர்கள்.

உண்மையை உணரும்போது, ஆதி ஜோதி வெள்ளத்தில் திளைக்கும் போது உண்மையான ஆனந்தத்தை தவிர வேறு எதுவுமே நம்மால் உணரமுடியாது என்கிறது பதஞ்சலி யோக ஸூத்ரம். இதுதான் பதஞ்சலி முனிவர் சொல்லித் தரும் மந்திரம்.

பேரானந்தம்

பதஞ்சலி முனிவர் மந்திரம் பற்றி சொல்வதற்கும், கேட்பதற்குமே மிக ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே. இதை அனுபவிக்கும்புோது எப்படி இருக்கும்? அதுதான் பேரானந்தம். யாருக்கும் எளிதில் கிடைக்காத பரமானந்தம்.

பதஞ்சலி முனிவர் மந்திரம் என்பது படித்து விட்டாலே கிடைப்பதும், பார்த்துவிட்டாலே கிடைப்பதும் அல்ல பயிற்சி. பதஞ்சலி முனிவர் மந்திரம் என்ன என்பதை அனுபவிப்பதே பயிற்சி.

கைக்கு எட்டிய உயரத்தில் இருக்கும் கனியை பறிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நம் கைக்கு எட்டாத இந்த யோகக் கனியை உழைப்பு, நம்பிக்கை, முனைப்பு, சுக, துக்கங்களை கடந்து போராடி பெறுவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

முயன்றாலும் முடியாதது எதுவுமல்ல. இதற்கு ஒரு ப்ரம்மகுருவின் வழிகாட்டுதலும் ஆசியும், படைத்தவனின் அருளும் இருந்தால் மிக எளிதாக இந்த வெற்றிக் கனியை பறித்து விடலாம்.

பதஞ்சலி முனிவர் மந்திரம் என்ற அறிய கலையை நீங்கள் கற்க தயாராகி விட்டீர்களா. பதஞ்சலி முனிவர் மந்திரம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.

யோகம் குறித்து அறிந்துகொண்ட நீங்கள், பேரானந்தத்தை அடைய இன்றைக்கே நீங்கள் முதல் அடி எடுத்து வைக்கலாமே!

கிருஷ்ண ஜெயந்தி எப்படி வந்தது?

பூமி சுற்றுவது நின்றால் என்ன ஆகும்?

86 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply