தனிமை தவிர்த்த முதுமை

தனிமை தவிர்த்த முதுமை

85 / 100

தள்ளாடும் வயதிலும் தளர்ச்சி அடையாத மனம் கொண்டு, தனிமை தவிர்த்த முதுமை பற்றிய ஒரு தகவல் அடங்கிய கட்டுரைதான் இது. நீங்கள் தனிமையில் வாடுபவராக, முதுமையை ஒரு பாரமாக நினைப்பவராக இருப்பவராக இருந்தால் கட்டாயமாக இக்கட்டுரையை படித்தாக வேண்டும்.

முதுமை தரும் தனிமை

முதுமை என்றாலே எல்லோருக்கும் பிடிக்காத ஒன்று. முதலில் இதற்கு இயலாமையை காரணமாகச் சொல்லலாம்.

அடுத்து இந்த சமுதாயத்தில் இதுவரை கிடைத்த அங்கீகாரம் குறைந்து வருவது, பிறரை சார்ந்து இருக்க வேண்டிய, பிறரால் பராமரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது.

குடும்ப விஷயங்களில் சுயமாக ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் பறிபோவது, அறிவுரை என்ற பெயரில் பேசி வீட்டில் இருப்பவர்களின் வெறுப்புணர்வுக்கு ஆளாவது போன்ற பல்வேறு காரணங்களால் தனிமை தவிர்க்க முடியாததாகி விட்டது.

தனிமையை விரட்டும் நட்பு

ஆனால் இதில் விதிவிலக்கானவர்கள் உண்டு. ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட, இந்த சமுதாயத்தால் என்றைக்கும் மதிக்கப்படுபவர்களாக மாற்றிக் கொண்டவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

யார் நம்மை உதாசீனப்படுத்தினாலும், புறக்கணித்தாலும், தனிமைப்படுத்தினாலும் கவலைப்படாமல், தன்னுடைய வயதை ஒத்தவர்களுடன் நட்பு பாராட்டி என்றும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவது. இப்படி சில விதிவிலக்கானவர்களும் உண்டு.

இத்தகையை நிலையை எந்த இடத்திலும் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பலரும் இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள தவறிவிடுகிறார்கள்.

அப்படிப்படடவர்கள்தான், மகனோ, மகளோ தன்னை புறக்கணிக்கிறார்கள், இந்த சமுதாயம் நம்மை மதிக்கவில்லை. பூமிக்கு பாரமாக இருக்கிறோம் என்றெல்லாம் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு மூலையில் முடங்கிப்போகிறார்கள்.

இச்செய்தி தரும் நற்செய்தி

அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இந்த செய்தி. எப்போதுமே தன்னை உற்சாகமாக வைத்திருப்பவர்களை தள்ளாமையோ, இல்லாமையோ, தனிமையோ, சுற்றுச்சூழலோ, கால மாற்றமோ ஒன்றும் செய்துவிட முடியாது.

அவர்களுக்காக உதிக்கும் ஒவ்வொரு நாளும் இளமைப் பருவத்தில் சந்தித்த அதே மாதிரியான புத்தம் புது காலையாகவே இருக்கும்.

ஆனால் மனச்சோர்வும், தனிமையும் ஒருவரை தொற்றிக் கொண்டால், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களின் தள்ளாத பருவம் ஒரு நரக வேதனையாக மாறிவிடும்.

எப்போது என்னை காலதேவன் கொண்டுச் செல்வான் என்று வெளிப்படையாக புலம்பும் மனப்பான்மை கொண்டவர்களாக மாற்றிவிடும்.

இந்த மனச்சோர்வையும், தனிமையையும் எப்படி அகற்றுவது என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. அது மிகவும் எளிய வழிதான் என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.

முதுமையில் உறவுகள் சுருங்குவது ஏன்?

நம்முடைய முன்னோர்கள், கடந்த 3 தலைமுறைகளுக்கு முன்பு வரை சொந்த ஊரில் பரம்பரையாக வசித்து வந்தவர்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை அனுபவித்தவர்கள். உறவினர்களுக்குள் ஆயிரம் சண்டை வந்தாலும் விட்டுக் கொடுக்காத மனமும் அதிகம்.

கடந்த 3 தலைமுறைகளாக, சுயமுன்னேற்றக்காக வெளியிடங்களுக்கு நகர்வது, வேலைவாய்ப்பு தேடி செல்வது, கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்களின் ஆக்கிரமிப்பை, அதிகாரத்தை விட்டு விலக வேண்டும் என்ற உந்துதல் போன்ற காரணங்களால் திருமணம் ஆனதும், மனைவி, மக்கள் என்ற ஒரு சிறிய குடும்பமாக சுருங்கிப் போகத் தொடங்கிவிட்டது.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மூத்தோருக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது. உறவுகளிடத்தில் பராமரிப்பு உணர்வும் இருந்தது. தனிக்குடும்ப வாழ்க்கையாக மாறிப்போனப் பிறகு நம் வழி பிள்ளைகள் வழியாக மாறிப் போகத் தொடங்கிவிட்டது.

இந்த மாற்றம் மூத்தோருக்கு பாதுகாப்பில்லாமல் போனது. ஆயிரம் பெரிய பதவிகளில் இருந்திருந்தாலும், சொத்தும், சுகமும் சேர்த்து வைத்திருந்தாலும், முதுமை சுயபாதுகாப்பை செய்துகொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இந்த சுயபாதுகாப்பை செய்துகொள்ள முடியாதவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் பாதுகாப்பு இல்லங்களிலும் தங்களின் இறுதிக் காலத்தை கழிக்கும் நிலை ஏற்படுகிறது.

முதுமையில் நட்புகள் மறைவது ஏன்?

இளவயதில் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தாலும், படிப்பு, பணி, தொழில் என மாறும் காலச் சூழலில் இந்த நட்பு வட்டம் சிதைந்து ஒன்று அல்லது இரண்டு நண்பர்கள் மட்டுமே மிச்சம் இருப்பார்கள்.

பொதுவாகவே அரசு, தனியார் பணிகளில் இருப்பவர்களின் நட்பு வட்டம் ஒரு ரயில் பயணமாகவே அமைந்து விடும்.

ஒரு அரசுப் பணியிலோ அல்லது தனியார் பணியிலோ இருக்கும்போது, சக அலுவலக நண்பர்கள் வட்டம் மிகப் பெரிதாக இருக்கும்.

ஓய்வு பெற்றதும், அந்த நண்பர்கள் வட்டம் மறைந்துபோகும். ஒருசில ஆண்டுகள் கழித்து அந்த நண்பரை சந்தித்தால் கூட நாம் நம்மை அவரிடம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

தொழில் துறையில், வணிகத்தில் இருக்கும் பலருக்கும் ஆயிரம் தொடர்புகள் இருக்கும். ஆனால் அவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விலகியதும், தனிமை தவிர்க்க முடியாததாகிவிடும். தொழில் ரீதியாக பழகியவர்கள் தொடர்பு அறுந்து போகும்.

இதனால், மூத்த குடிமகன் அந்தஸ்துக்கான வயதை எட்டும பலருக்கும் நண்பர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அந்த நட்புகளிடம் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்புகளும் கூட குறைவாக அமைந்துவிடும்.

நட்பு வட்டத்துக்கு தடையாக இருப்பது எது?

கடமைகளை முடித்துக் கொண்டு ஓய்வு பெற்ற நிலையில், நம்மோடு பேசுவதற்கு நமக்கு இணையானவர்களைத் தேடுவதில்தான் பெரும்பாலும் கவனம் செலுத்துவது உண்டு. இது புதிய நட்புக்கு தடையாக இருந்து விடுகிறது.

கடந்த காலத்தில் மிகப் பெரிய பதவி வகித்ததன் காரணமாக நம்மை அறியாமல் ஒரு உயர்ந்த இடத்தில் நம்முடைய தகுதியை உட்கார வைத்துவிட்டு, கீழே இறங்க மறுப்பதும் கூட சிலருக்கு காரணமாக அமைகிறது.

இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்ட ஒரு பணக்கார அந்தஸ்து பலரையும் நட்பு வட்டத்தில் இருந்து விலக்கி வைத்து விடுகிறது.. இவர்கள் எந்த நட்பு வட்டத்தையும் தானாக நாட மாட்டார்கள்.

ஒருவேளை தன்னை விட உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஒருவர் இருந்தால் மட்டுமே நெருக்கம் காட்டுவார்கள். இல்லையெனில் அவர்கள் அந்த நட்பை சகநட்புக்குரியவர்களாக கருத மாட்டார்கள்.

ஒருசிலர் தங்களுடைய பிறப்பால், இனத்தால், மதத்தால் உயர்ந்த சமூகமாக கருதுவதும் உண்டு. இவர்களும் யாரையும் எளிதில் தன்னுடைய நட்பு வட்டத்தில் இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டுவார்கள்.

ஒருசிலர் நட்பு வட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டாலும் கூட, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என பேசி, சண்டையிட்டு பிரிந்து செல்வார்கள்.

இப்படி பல்வேறு காரணங்களால் முதுமையில் நட்பு வட்டம் வளர்வதற்கு தடையாக இருந்து விடுகிறது.

எங்கே நட்பு வட்டம் வளரும்?

நல்ல நட்பு முதுமையில் தொடர வேண்டும் என்றால், இன்றைய சூழலில் ஆரோக்கியமான விஷயங்களை பேசுவது, விவாதமற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது, கொடுக்கல், வாங்கல், விஷயங்களில் நேர்மையை கடைப்பிடிப்பது, பிறர் மனதை புண்படுத்தும் வகையில் அநாகரீகமாக பேசுவதைத் தவிர்ப்பது, அரசியல், மதம் போன்ற விஷயங்களை தொடாமல் இருப்பது, மற்றவர்களின் குடும்ப விவகாரங்களை பொதுவெளியில் பேசாமல் தவிர்ப்பது ஆரோக்கியமான நட்புகளை வளர்க்கும்.

ஒரு நண்பரிடம் குறைபாடு இருந்தால், பிறர் அறியாமல் தனித்து அழைத்து சுட்டிக் காட்டுவது, தன்னால் ஒருசில விஷயங்களை, ஒருசில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் தகுதி உள்ள சூழலில் பிறர் உதவியை பணமாகவோ, பொருளாகவோ, உடல் ஒத்துழைப்பாகவோ பெற மறுப்பது, நம்முடைய எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நட்புகளை வளர்க்கும்.

இரண்டு, மூன்று பேர் இணைந்து ஒரு சமூக சேவை அல்லது பொதுநலத்தில் அக்கறை காட்டும்போது முடிந்தால் நம்மால் முடிந்த உதவி புரிவது, முடியாவிட்டால் ஒரு பாராட்டு தெரிவிப்பதும் நல்ல நட்புக்கு அடையாளமாக மாறும்.

இத்தகைய அடிப்படை அம்சங்களில் பெரும்பாலானவற்றை கொண்டவர்களால் ஒரு நட்பு வட்டம் உருவாகும்போது அது நீண்டு நிலைத்து நிற்கும் என்பதற்கு உதாரணம்தான் “பார்க் பால்ஸ்” முதியோர் குழு.

எங்கே இருக்கிறது இந்த முதியோர் வட்டம்?

தனிமை தவிர்த்த முதுமை

பல்வேறு நிலைகளில், வயது வித்தியாசம் பாராமல், பேசி, பழகி, சிரித்து மகிழ்ந்து தனிமையை விரட்டிய இக்குழு இருப்பது சென்னையில்!

நம்ப முடிகிறதா? உங்களால்!

சென்னை என்றதுமே எல்லோருக்குமே நினைவுக்கு வருவது. பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் வசிக்கும் நகரம்.
கேட்டட் கம்யூனிட்டி ஃபிளாட்ஸ் என்ற சொல்லக்கூடிய பாதுகாப்பான அடுக்குமாடி வீடுகளில் வசித்துக் கொண்டு, எதிரே வருபவர் ஆணா, பெண்ணா என்று கூட நிமிர்ந்து பார்க்காமல் வேகமாக நடை பயணம் செல்லக் கூடிய அதிமேதாவிகள் வாழும் நகரம் என்றுதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்.

விஜிபி புஷ்பா நகர் பூங்கா

மேடவாக்கம், தென்சென்னை மக்களவைத் தொகுதியிலும், சோழிங்கநல்லூர் சட்டப் பேரவை தொகுதியிலும் அடங்கிய ஒரு பகுதியாக மேடவாக்கம் அமைந்திருக்கிறது. இன்னமும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதிகள் முழுமை பெறாத ஒரு பகுதி.

இங்குள்ள விஜிபி புஷ்பா நகரில் உள்ள பொது பூங்காவில்தான் 9 ஆண்டுகளுக்கு முன் பார்க் பால்ஸ் முதியோர் வட்டம் உருவாகியிருக்கிறது.

40-க்கும் மேற்பட்டோர் அடங்கிய “பார்க் பால்ஸ்” என்ற பெயரில் குழுவாக இணைந்தவர்கள் மாலை நேரங்களில் இந்த பூங்காவில்தான் சந்திக்கிறார்கள்.

முதலில் நடைபயிற்சிக்காக வந்த இவர்களில் சிலரின் முயற்சியில் இன்றைக்கு இக்குழு எண்ணிக்கையில் அதிகமுடைய வட்டமாக மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி, சில நேரங்களில் பூங்காவில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுவது, சுகாதார சீர்கேடாக இருந்தால், யார் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள முடியுமோ, அணுக முடியுமோ அவர்களை நாடி சுகாதாரத்தை பேண வைப்பது, சில நேரங்களில் தாங்களே அப்பணியைச் செய்வது என்ற தன்னார்வத் தொண்டர்களாக இவர்கள் மாறி விடுவதும் உண்டு.

எல்லாவற்றையும் கடந்த நட்பு

மாலை நேரத்தில் கலந்துரையாடி, மனமகிழ்ச்சியோடு வீடு திரும்புவது இவர்களின் அன்றாட வாடிக்கை. இவர்களின் இந்த நடவடிக்கையை கடுமையான மழை அல்லது புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் மட்டுமே தடுக்க முடியும் அந்த அளவுக்கு நட்பு வட்டம் உறுதியடைந்திருக்கிறது.
இந்த மூத்த குடிமக்கள் அடங்கிய நண்பர்கள் குழுவில் இடம்பெற்றவர்கள் தங்களுடைய வயது, தனி அந்தஸ்து, தகுதி, சாதி, மதம் போன்ற நிலைகளைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்.

அதனால்தான் தீபாவளி பலகாரமும், ரமலான் நோன்பு கஞ்சியும், ஆங்கில புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடும் மகிழ்ச்சியும் இவர்களை எட்டிப் பார்க்கிறது.

மகிழ்ச்சியிலும், துயரத்திலும் பங்கெடுப்பு

இந்த குழுவைச் சேர்ந்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, யாருக்காவது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனைக்கோ, இல்லத்துக்கோ சென்று நலம் விசாரிப்பதோடு, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

குழுவைச் சேர்ந்த நண்பரின் பிறந்த நாளில், அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது. அவரை பூங்காவுக்கு வரவழைத்து கதராடை அணிவித்து உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது.

குழுவில் உள்ளவர்கள் தங்கள் பிறந்த நாளின்போது இந்த நட்பு வட்டத்தை ஒரு நல்ல சைவ சிற்றூண்டி சாலைக்கோ அல்லது மாலையில் பூங்கா வளாகத்திற்கோ வரவழைத்து, வசதிக்கேற்ப விருந்தளித்து மகிழ்வது.

பூங்காவில் நடைபெறும் சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல் விழாக்களில் பங்கெடுப்பது என இவர்கள் வயோதிகத்தை மறந்து வாலிப முடுக்கோடு செயல்படுகிறார்கள் நட்பு வட்டத்துடன்.

நீங்களும் முயற்சிக்கலாமே!

இதை படிப்பவர்களில், தனிமையில், விரக்தியோடு முதுமையை கழித்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நட்புக்கு தடையாக இருக்கும் விஷயங்களில் இருந்து விடுபட்டு, உங்கள் ஊரில் இத்தகைய நட்பு வட்டம் இல்லாமல் இருந்தால், அத்தகைய நட்பு வட்டத்தை இப்போதே உருவாக்க முயற்சி செய்யலாம்.

அது உங்களுடைய தனிமையையும், மனச்சோர்வையும் விரட்டுவதோடு, உங்கள் வயதை ஒத்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு உதவி புரியும் நல்வாய்ப்பாகவும் அமையும்.

ஒருவேளை, நீங்கள் உயிரோடு இருக்கும் வரை உங்களின் மதிப்பை அறிந்துகொள்ளாத சொந்த, பந்தங்கள் நீங்கள் மறைந்த பிறகு வருத்தப்படும் அளவுக்கு அந்த நட்பு வட்டத்தின் உள்ளார்ந்த நட்பின் பங்களிப்பு இருக்கும்.

விலை உயர்ந்த கைக்கடிகாரம் எது தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் வரலாறு – விடியோ வடிவில்

85 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply