நாட்டுக்குத் தேவையான அம்சம்
சென்னை: செயற்கைக் கோள் மூலம் டோல்கேட் கட்டணம் (toll charges) வசூலிக்கும் முறையை கொண்டு வரப்போவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
உள்ளடக்கம்
வெளிப்படைத் தன்மைக்கு வாய்ப்பு
இது இந்தியாவுக்கு தேவையான முக்கியமான அம்சம். சாலைகளில் எலக்ட்ரானிக் முறையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் அமைப்புகளைப் பொருத்தி, ஒரு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் தொலைவைக் கணக்கிட்டு சுங்கக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் சேவை மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். அரசின் நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத் தன்மை ஏற்படும்.
மிக விரைவான டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் சேவையை அளிக்க முடியும் என்ற காரணங்களையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டிருக்கிறார்.
தில்லியில் நடந்த சர்வதேச பயிலங்கு ஒன்றில் பேசிய அமைச்சரின் இப்பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பல லட்சம் பேர் சந்திக்கும் பிரச்னைகளை சார்ந்தது.
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், சுங்கக் கட்டண வசூல் மென்பொருள் குறைபாடுகளை சீரமைக்கும் அமைப்பு, அடிப்படை சாலை கட்டமைப்பு, பல்வேறு வழித்தடங்களில் சாலைகளை உருவாக்கி மேம்படுத்துதல் போன்றவை இந்த செயற்கைக் கோள் மூலம் டோல்கேட் கட்டணம் வசூல் முறைக்கு தேவை என்பதை மறுப்பதிற்கில்லை.
முதல்கட்டமாக நடப்பு நிதியாண்டில் 5 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு செயற்கைக்கோள் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மோசமான சாலைகளுக்கு சுங்கவரிக் கூடாது
சாலைகள் சிறப்பாக இருக்கும் இடங்களில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். முறையாக பராமரிக்கப்படாத சாலைகளுக்கும், மோசமான சாலைகளுக்கும் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பது கூடாது.
சேவை சரிவர இல்லாவிட்டால் அதற்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது தவறு என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் கூட, தேசிய நாற்கர சாலைகளில் வாகனங்களில் பயணிப்போர் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு பல இடங்களில் பராமரிப்பற்ற சாலைகளில் பயணிக்க வேண்டியுள்ளது.
பராமரிப்பு, மேம்படுத்துதல் என்ற பெயரில் நீண்ட தூரம் கரடுமுரடாண சாலைகளிலும், ஆபத்தான குறுகிய பாதைகளிலும், எதிரெதிரில் வாகனங்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இடங்களிலும் பயணிக்க வேண்டியிருக்கிறது.
மழைக்காலம் என்றால் எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பதைக் கூட அறிய முடியாத அளவுக்கு பல இடங்களில் சேதமடைந்த சாலைகளில் பயணிக்கும் நிலையும் நீடிக்கிறது.
இனியாவது இந்த விஷயத்தில் வாகன ஓட்டிகள் புலம்புவதைத் தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை.
இதுபோன்று சாலைகளில் சாலையை மேம்படுத்தும் வரை சுங்கக் கட்டணத்தை நிறுத்த வேண்டும். மழைக் காலங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசு நடவடிக்கை தேவை
இது தொடர்பான புகார்கள் வரும்போது அதைப் பற்றிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் அரசுக்கு அவசியம்.
இதற்காக வாகன ஓட்டிகளின் பார்வைக்கு கண்ணில்படும்படி ஒரு சில இடங்களில் நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரிகளின் புகார் எண்களைக் கொண்ட பலகைகளை வைப்பதும் கட்டாயம்.
தமிழகத்தில் 6,805 கி.மீ்ட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது.
மீதமுள்ள சாலைகள் மத்திய அரசின் நிதியில் இருந்தது, மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க 63 இடங்களில் சுங்கக் சாவடிகள் இயங்கி வருகின்றன.
கட்டணக் கொள்ளை
இந்த சாலைகளை அமைத்த தனியார் நிறுவனங்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகையை லாபம் மற்றும் வட்டியோடு திரும்பப் பெறுவதாகச் சொல்லியும், சாலையை தொடர்ந்து பராமரிப்பதாகச் சொல்லியும் கட்டணத் தொகையை வசூலிக்கின்றன.
ஆனால் பல இடங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் அபரிமிதமாகவும், வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் விதமாகவும் மாறியிருக்கிறது.
ஒரு சுங்கச் சாவடிக்கும், மற்றொரு சுங்கச் சாவடிக்கும் இடையே 60 கி.மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மீறி குறுகிய தூர இடைவெளியில் கூட சில சுங்கச் சாவடிகள் இருப்பதாக பாதிக்கப்படுவோரும், அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்கின்றன.
சாலை மேம்பாடு வளர்ந்து வரும் இந்தியாவுக்கு தேவையான ஒன்றுதான். ஆனால் அதுவே அதை பயன்படுத்தும் மக்களுக்கு சுமையாக மாறிவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்துவது அவசியம்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.