இந்திய பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது?

Freedom of indian press
84 / 100

சென்னை: சுதந்திர இந்தியா 77 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், இன்னமும் இந்திய பத்திரிகை சுதந்திரம், நாட்டில் முழுமையான அளவுக்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் செயல்பட முடியாத அளவுக்கே இருக்கிறது.

நாட்டில் உள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்தும் நாட்டின் தலைமை பொறுப்பில் யார் அமர்கிறார்களோ, அவர்களின் கட்டுப்பாட்டில் விளம்பரத்துக்காக கைக்கட்டி சேவை செய்யும் நிறுவனங்களாக மாறியிருப்பது வேதனைக்குரிய விஷயமாகவே நீடிக்கிறது. இன்றைய இந்திய பத்திரிகை சுதந்திரம் அந்த அளவில்தான் இருக்கிறது.

ஒரு முடியாட்சி நாடாக விளங்கும் பிரிட்டனில் செயல்படும் பிரிட்டீஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பொரேஷன் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.

ஆனால், ஒரு குடியாட்சி நாட்டில் இந்திய பத்திரிகை சுதந்திரத்தை நிலை நிறுத்த முடியாத நிலை ஏன் என்பதும் கண்ணுக்கு புலப்படாத விஷயமாகவே இருக்கிறது.

பிபிசி

பிபிசியின் வரலாற்றை பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. அறியாதவர்களுக்காக நாம் ஒருமுறை அதை பற்றி சொல்வது அவசியமாகிறது.

பிபிசியின் பெயர் இந்திய அளவில் பெரிய அளவில் அடிக்கடி தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.

சமீபத்தில், இந்தியா – த மோடி குவஸ்டின் என்ற ஆவணப்படத்தை இரு பாகங்களாக பிபிசி வெளியிட்டு மீண்டும் இந்தியாவின் பார்வையை அது ஈர்த்தது. இன்னும் சொல்லப்போனால் உலகையும் கவனிக்க வைத்தது.

ஆவணப் படத்துக்கு எதிர்ப்பு

இந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் வெளியான உடனேயே ஆளும் மத்திய அரசின் எதிர்ப்பை சம்பாதித்தது. உடனடியாக அந்த ஆவணப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதைத் தடுக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் பாஜக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இருப்பினும், இந்தியாவில் பலரும் அந்த ஆவணப் படத்தை பொதுவெளியில் வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து தில்லி, மும்பை ஆகிய இடங்களில், பிபிசியின் உலக சேவைக்கான கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு என்ற பெயரில் 3 நாள் கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முடியாட்சியில் ஊடகச் சுதந்திரம்


இச்சூழலில் பிபிசி தனது நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை பொதுமக்களுக்கு பரிமாறியது. அதாவது பிபிசி எப்படி உருவானது. அதன் நோக்கம் என்ன, எப்படி அதந் செயல்பாட்டுக்கு எப்படி வருவாய் கிடைக்கிறது போன்ற விவரங்கள் சொல்லப்பட்டன.

அந்த விவரங்களில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
பிபிசி என அழைக்கப்படும் பிரிட்டீஷ் பிராட்காஸ்டிங் கார்பொரேஷன் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1922 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில், இது ஒரு தனியார் நிறுவனமாக செயல்பட்டது. 1926-ஆம் ஆண்டில் நடந்த பொது வேலைநிறுத்தம், நெருக்கடி காலத்தில் அதன் பங்களிப்பை உணர்ந்த பிரிட்டீஷ் மக்கள் அதன் செயல்பாடுகளை பாராட்டினர்.

அதைத்தொடர்ந்து, அந்நாட்டு பாராளுமன்றக் குழு பிபிசியை பொது நிறுவனமாக மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது.

சுதந்திரமான பொது நிறுவனம்


இதையடுத்து ராயல் சார்ட்டர்ஸ் எனப்படும் முடியாட்சி சாசனத்தின் விதிகள்படி ஒரு சுயாட்சி நிறுவனமாக சுதந்திரமாக இயங்கக் கூடிய பொது நிறுவனமாக 1927-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

இந்த ராயல் சார்ட்டர்ஸ் எனப்படுவது ஆளும் மன்னரால் வழங்கப்படும் சாசனமாகும். இதன் மூலம் நிறுவனம் அரசால் நிர்வகிக்கப்பட மாட்டாது.
இருப்பினும் முடியாட்சியின் தலைவராக அரசர் அல்லது மகாராணி இவர்களில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு கீழ் இயங்கக் கூடிய நிறுவனமாக இருக்கும்.

ஆனால் அதன் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலான விதிகள் வகுக்கப்பட்டன.

பிபிசி எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும். பிபிசி வாரியத்தின் பங்கு உள்ளிட்ட அனைத்து கொள்கைகளும் முடியாட்சி சாசனத்தின் கீழ் எழுதப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சாசனம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2017-இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாசனம் வரும் 2017 டிசம்பர் இறுதி வரை நீடிக்கும்.
பிரிட்டீஷ் பாராளுமன்றத்துக்கு பிபிசி பதில் அளிக்க கடமைப்பட்டது. ஆனாலும், அரசின் கட்டுப்பாடு பிபிசிக்கு கிடையாது. முழுக்க முழுக்க தன்னாட்சி அதிகாரத்துடன்தான் இயங்குகிறது.

பிபிசி உலக சேவை

யுனைடெட் கிங்டம் மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்ற, உண்மையான செய்திகளை உரிய ஆதாரங்களுடன் வழங்குவதை பிபிசி நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
பிபிசி வாரியத்தை ஒழுங்குபடுத்துவது, நிர்வகிப்பது ஆகிய பொறுப்புகளை பிரிட்டனின் ஆஃப்காம் office of communications எனப்படும் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தலைமை அலுவலகம் பிபிசிக்கு பிரிட்டனில் இயங்குகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிபிசி உலக சேவையையும் வழங்கி வருகிறது.

பிரிட்டனில் மக்கள் தொலைக்காட்சியை பார்க்க உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். இது ஆண்டுக்கு சுமார் 159 பவுண்டுகள் ஆகும்.
பிபிசிக்கு இரு வகைகளில் பணம் கிடைக்கிறது. முதலாவதாக, உரிமக் கட்டணம் வாயிலாக நிதி கிடைக்கிறது.

மற்றொன்று அதன் வணிக நோக்க நிறுவனங்களான பிபிசி ஸ்டியோஸ், பிபிசி ஸ்டுடியோ ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது.
அதே நேரத்தில் பிபிசி உலக சேவைக்கு உரிமக் கட்டணம் வாயிலாகவும் நிதி கிடைக்கிறது.

அத்துடன் எப்.சி.டி.ஓ என அழைக்கப்படும் (Foreign, commonwealth development offie) அயலக பொதுநிதி மேம்பாட்டு அலுவலகம் வாயிலாகவும் நிதி கிடைக்கிறது.

இந்த அலுவலகம் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
பிரிட்டனுக்குள் பிபிசி ஒளிபரப்பு சேவைகளான வானொளி, தொலைக்காட்சி, டிஜிட்டல் சேவை என அனைத்துமே எவ்வித விளம்பரமும் இன்றி ஒளிபரப்பாகிறது.

காரணம், பிபிசி செலவுகளுக்கான உரிமக் கட்டணத்தை பிரிட்டன் மக்கள் செலுத்துகின்றனர்.

விளம்பரம் இல்லை என்ற சூழலில் அரசிடம் இருந்து விளம்பரம் பெற வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.

இதன் வரவு, செலவு கணக்குகள் பிரிட்டனின் தேசிய தணிக்கை அலுவலகத்தால் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பிபிசி பிரிட்டனின் ofcom எனப்படும் office of communications அலுவலகத்தால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. பணிகள் அனைத்துமே பிபிசி வாரியத்தால் கவனிக்கப்படுகிறது.

அதன் வரவு, செலவுகள், பராமரிப்பு, இதழியல் சுதந்திரத்தை பராமரிப்பது உள்ளிட்டவற்றில் பிபிசி வாரியம் சுதந்திரமான செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது.
அந்த வகையில் சுதந்திரமான, யாருக்கும் அச்சமின்றி செய்திகளை வெளியிடும் இதழியல் சுதந்திரத்தை அது கட்டிக்காக்கிறது.

தூர்தர்ஷன் சுதந்திரமாக செயல்பட முடியுமா?

இந்திய பத்திரிகை சுதந்திரம்


இதைப்போன்ற சுதந்திரமான, அரசியல், சர்வாதிகாரம், பணபலம் போன்றவற்றின் கட்டுப்பாடுகளுக்கு ஆள்படாத ஒரு நிறுவனமாக தூர்தர்ஷன் செயல்படுகிறதா என்ற கேள்வி கூட இப்போது எழுகிறது. அந்த அளவில்தான் இந்திய பத்திரிகை சுதந்திரம் காக்கப்படுகிறது..

அது பெரும்பாலும், ஒரு அரசு நிறுவனமாகவே செயல்படுவதன் காரணமாகவே, ஓரளவுக்கு நடுநிலை செய்திகளை மட்டும் அது தந்தாலும் கூட, மக்கள் பார்வையில் இருந்து விலகியிருக்கிறது.
1990 வரை இந்தியாவில் கோலாச்சிய தூர்தர்ஷன் பார்வை மதிப்பு குறைவதற்குக் காரணம் அது மொழிவாரியான சேவைகளில் இந்தியை அதிகம் திணித்ததும் காரணம்.

அத்துடன் ஆளும் அரசின் முக்கிய திட்டங்களை பிரபலப்படுத்துவதை மையமாகக் கொண்டு, ஆளும் அரசின் அதிகார கட்டுப்பாடுகளில் சிக்கித் தவிப்பதால், அதனால் தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஈடாக செயல்பட முடியாத அளவில் அதன் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சிகள் கூட அரசு நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சி தங்களை அடக்கிக் கொள்ளக் கூடிய நிலை இருக்கிறது. இதுதான் இந்திய பத்திரிகை சுதந்திரத்தின் நிலை.

அதிகார வர்க்கத்தின் வசம் நிதி மற்றும் நிர்வாகம்

இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் ஒளிபரப்பாகிறது. ஆனால், அதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும், எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதில் மிகவும் மோசமானது அரசாங்கத்திடம் இருந்து நிதி வருகிறது. ஆனால் அது அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்படக் கூடியதாக அமைந்திருக்கிறது.
அத்துடன் நிர்வாகமும் ஆளும் அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் காகித அளவில் பிரசார் பாரதி ஒரு தன்னாட்சி அமைப்பாக இருக்கிறது.

ஆனால் அதன் நிதி மற்றும் நிர்வாகத்தில் இன்னும் ஒரு அரசு அமைப்பாகவே செயல்படுகிறது. இதனால் இதன் சுதந்திரம் வெளிப்படையாக பறிக்கப்பட்டிருக்கிறது.

தூர்தர்ஷன் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்


தனியார் தொலைக்காட்சிகள் வணிக நோக்கம் கொண்டவையாக இருந்தாலும், அவை மக்கள் மனங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.

நாட்டின் குடியரசுத்தலைவர், நீதிமன்றங்களின் நேரடிப் பார்வையில் மட்டுமே செயல்படக் கூடிய சுதந்திரமான அமைப்பாக மாற்றப்பட வேண்டும்.

மத்திய ஆட்சிப் பொறுப்பில் பாஜக, காங்கிரஸ் அல்லது வேறு எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அவற்றின் தவறுகளையும் சுட்டிக் காட்டும் ஊடகமாக மாற்றப்பட வேண்டும்.

என்றைக்கு இந்திய பத்திரிகை சுதந்திரம் ஒரு குடியரசு நாட்டுக்கு ஏற்ற வகையில் மாறுகிறதோ அன்றைக்குத்தான் நாட்டில் லஞ்சம், அடக்குமுறை அற்ர ஆட்சிகள் மலர வழிவகுக்கும்.

இந்திய பத்திரிகை சுதந்திரம் முழுமை பெற வேண்டும்

தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஈடாக அந்தந்த மாநிலங்களில் மொழிவாரி சேவையை முழுமையாக வழங்கவும், ஆளும் கட்சி செய்யும் தவறுகளைக் கூட சுட்டிக்காட்டும் வகையிலான நேர்மையான முறையில் சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக மாற்றப்பட வேண்டும்.

இப்படி ஒரு சூழல் ஏற்படுமேயானால், தனியார் சேவைகளுக்கு ஈடாக தூர்தர்ஷனும் மாநில மொழி தொலைக்காட்சிகளில் முக்கிய கால்தடம் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால் தூர்தர்சனை மக்கள் நேசிக்கும் வகையிலான, தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான சுதந்திரமான அமைப்பாக நாட்டில் செயல்பட வைக்கும் புதிய சட்டவிதிகளை இந்திய பத்திரிகை சுதந்திரத்தில் எதிர்காலத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு சூழலை இந்திய பத்திரிகை சுதந்திரம் பெறுமானால், சுதந்திர நாடு எதிர்காலத்தில் சர்வாதிகார, பணபலம் மிக்க, சுயநல சக்திகளின் கைகளில் சிக்காமல் தடுக்கப்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

84 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *