ஒரு நாட்டை ஆண்ட மதிமாறன் என்ற அரசன் எல்லாம் இறையருள் என்கிறார்களே அதை என்னால் மாற்ற முடியும் என்ற இருமாப்பில் இருந்தான். ஆனால் இறையருள் யாராலும் மாற்ற முடியாதது என்பது ஒரு அனுபவத்தில் உணர்ந்த கதைதான் அரசன் சோதித்த இறையருள்.
உள்ளடக்கம்
இறையருள் சோதனையில் அரசன்
அரசன் மதிமாறன் மாறு வேடத்தில் அன்றைக்கு நகரை வலம் வந்தான். அவனுக்கு எப்போதும் தான் ஒரு அரசன் என்பதை விட, தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற இருமாப்பும் இருந்து வந்தது.
ஒரு கோயில் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் பிச்சை எடுத்தார்கள். அதை அவன் பார்த்தான்.
ஒருவன் கடவுளின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் பிச்சை எடுத்தான். மற்றொருவனோ, நான் ஊனமுற்றவன், நடக்க முடியாதவன். எனக்கு பிச்சைப் போடுங்கள் என்றான்.
இவர்களை பார்த்ததும், இன்றைக்கு பிச்சைக்காரர்களாக இருக்கும் இவர்களை நாளைக்கு பணக்காரராக்கி பார்க்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்பினான்.
பூசணிக்காய் தந்த அரசன்
மறுநாளும் மாறுவேடத்தில் அரசன், அதே கோயில் வாசலுக்கு வந்தான். கையில் இரண்டு சிறிய பூசணிக்காய்களை எடுத்து வந்தான்.
அந்த பூசணிக்காய்க்குள் பெரிய தங்கக் கட்டிகளையும், வைரங்களையும் கொட்டி மூடி எடுத்து வந்திருந்தான்.
அவனை பார்த்த இரு பிச்சைக்காரர்களும் பிச்சை தட்டை ஏந்தினார்கள். இருவரிடமும் என்னிடம் காசு இல்லை. இந்தாருங்கள்.
ஆளுக்கு ஒரு பூசணிக்காயை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்துவிட்டு திரும்பினான்.
இரண்டு வாரம் கழித்து நகர் வலம் புறப்பட்ட அரசனுக்கு, முன்பு இரு பிச்சைக்காரர்களுக்கு தங்கமும், வைரமும் நிறைந்த பூசணிக்காய்களை கொடுத்தோம்.
அவர்கள் இந்நேரம் அவற்றை விற்று காசாக்கி பணக்காரர்களாக மாறியிருப்பார்கள். அவர்கள் நம் கண்ணுக்கு படுகிறார்களா என்று பார்ப்போம் என்று நினைத்தபடியே நகர் வலம் வந்தான்.
வழக்கமான பாதையில் வரும் அந்த கோயிலை அரசன் வந்தடைந்தபோது அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.
அதிர்ச்சி அடைந்த அரசன்
அதே பிச்சைக்காரர்கள் கோயில் வாயிலில் பிச்சை எடுப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான்.
உடனே, அரண்மனைக்கு திரும்பிய அரசன், அந்த இரு பிச்சைக்காரர்களையும் காவலர்களை விட்டு அழைத்து வரச் சொன்னான்.
இரண்டு பிச்சைக்காரர்களும் அரண்மனையில் அரசன் முன்பு கைக்கட்டி நின்றார்கள்.
அரசன் பேசத் தொடங்கினேன். இரு வாரம் முன்பு இருவருக்கும் தலா ஒரு பூசணிக்காய் கொடுத்தேனே… அதை என்ன செய்தீர்கள் என்று கோபமாகக் கேட்டான்.
அப்போதுதான், பூசணிக்காயை தந்துவிட்டு போனது அரசன் என்பது தெரிந்தது.
ஊனமுற்ற பிச்சைக்காரன் பதற்றமாக அரசனை பார்த்து, அரசே, நீங்கள் கொடுத்த பூசணிக்காயை நான பிச்சைக்காரன் என்பதால் யாரும் வாங்கவில்லை.
அதனால் அதை அருகில் உள்ள கோயில் குளத்தில் உள்ள நீரில் விட்டெறிந்துவிட்டேன் என்றான்.
மற்றொருவன் ராஜாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டான். அரசே, என்னை மன்னித்து விடுங்கள்.
நீங்கள் தந்த பூசணிக்காயை இறைவனே எனக்கு அளித்ததாக நினைத்து நான் தங்கியிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று இறைவனுக்கு படைத்து அதை உடைத்தேன்.
அதில் வைரக் கற்களும், தங்கக் கட்டிகளும் இருப்பதை பார்த்து நகர் முழுவதும் கொடுத்தவரை தேடினேன். அது நீங்கள் என்பது எனக்குத் தெரியாது.
அதனால் அவை இறைவனுக்கே சொந்தம் என நினைத்து அந்த கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன் என்றான்.
இறைவனிடம் வருந்திய அரசன்
இப்போது அவன் இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்ந்து மனதார இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.
எதற்கும் பயன்படாது என நினைத்து பூசணிக்காயை தூக்கி எறிந்த பிச்சைக்காரனை அந்த கோயில் காவலாளியாக ஆக்கினான்.
கோயில் உண்டியலில் தங்கத்தையும், வைரத்தையும் சேர்த்த பிச்சைக்காருக்கு பொன்னும், பொருளும் வாரித் தந்து அந்த கோயிலின் தர்மகர்ததாவாக்கினான்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.