மகாவிஷ்ணு விவகாரத்தின் பின்னணி என்ன?

mahavishnu vivakaram - மகாவிஷ்ணு விவகாரம்
84 / 100

சென்னை: பள்ளிக் கல்வித் துறை “மகாவிஷ்ணு விவகாரம்” “விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி” சர்ச்சைகளால் இப்போது சிக்கித் தவிக்கிறது.

சமீபகாலமாக பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?

அந்த அமைச்சருக்கு தெரியாமல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு என்ன காரணம்?

இதுபோன்ற சந்தேகத்தை பொதுவெளியில் மக்கள் பேசும் அளவுக்கு இன்றைய “திராவிட மாடல்” அரசு மாறியிருக்கிறது.

விநாயகரை வம்புக்கிழுத்த சுற்றறிக்கை

அண்மையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில் விநாயகர் சதுர்த்தியின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல் திருச்சி,புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்பியதாக சொல்லப்பட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது தொடர்பாக, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாம்.

ஆனால், இது மறைமுகமாக, அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக பலரும் கருத்துக் கூறி களத்தில் இறங்கினார்கள்.

இதனால் இது சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதப் பொருளாக மாறிப்போனது.

இதையடுத்து தமிழக அரசு விழித்துக் கொண்டு, விநாயகர் சதுர்த்தி தொடர்பான உறுதிமொழி ஏற்கும் சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தது.

அத்துடன் அரசுத் தரப்பில் ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டது. இது அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால் சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்து இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சித்தது.

மகாவிஷ்ணு விவகாரம்

கொழுந்து விட்டு எரிந்த விநாயகர் சதுர்த்தி பிரச்னை கொஞ்சம் தணிந்தது. ஆனால், ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பிரச்னையால் மீண்டும் சிக்கியது பள்ளிக் கல்வித் துறை.

கடந்த மாதம் 28-ஆம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மகாவிஷ்ணு என்பவர் உரையாற்றியிருக்கிறார்.

மகாவிஷ்ணு விவகாரம்

அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி ஒன்றிலும் மகாவிஷ்ணு பேச அழைக்கப்பட்டிருக்கிறார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு ஆளானது.

என்ன பேசினார்? ஏன் எதிர்ப்பு?

இந்த இரு பள்ளிகளிலும் மகாவிஷ்ணு பேசிய பேச்சு விடியோக்களாக சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு கட்டத்தில் வைரலாக பரவிய இந்த விடியோவை பகிர்ந்து, அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதித்தது யார்? என்ற கேள்வியை பலரும் எழுப்பினார்கள்.

சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளியில் அவர் பேசும்போது, மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ, புண்ணியங்களால் இப்பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது பேச்சுக்கு அதே பள்ளியைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளி கே. ஷங்கர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அப்படி கேள்வி எழுப்பிய அந்த ஆசிரியரைப் பார்த்து, “உங்களுடைய பெயர் என்ன? அரசுப் பள்ளியில் ஆன்மிகம் பேசக் கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது? உங்களுடைய முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் பெரிய அறிவு பெற்றவரா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாவ புண்ணியங்களைப் பற்றி பேசாமல் ஒருவனுக்கு எப்படி வாழ்வியலை போதிக்க முடியும். நீங்கள் (ஆசிரியர்கள்) சொல்லித் தந்தீர்களா? பாவம், புண்ணியத்தைப் பற்றி புருஷன் சொல்லிக் கொடுக்க முடியுமா? பொண்ணாட்டி சொல்லிக் கொடுக்க முடியுமா? யார் சொல்லிக் கொடுக்க முடியும்?

ஆசிரியர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என்னை அழைத்துவிட்டு உங்களுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்றால் என்னை ஏன் அழைத்தீர்கள்?. இவ்வளவு நாள் உங்களால் போதிக்க முடியாத கல்வியை போதிப்பதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றெல்லாம் மாணவர்கள் மத்தியில் அந்த ஆசிரியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அமைச்சரின் சமாதானம்

சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதுவும் வாய்த் திறக்கவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அசோக் நகர் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்ப, பல்வேறு ஊடகங்களுக்கும் காத்திருந்தன. அப்போது மாணவர் அமைப்பினர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 2, 3 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு உறுதி உறுதி அளித்து சமாதானம் செய்தார்.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா. தமிழரசி வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே. சண்முகசுந்தரமும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால், மகாவிஷ்ணுவை அரசுப் பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து பேச வைக்கும் முடிவை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக எடுத்துவிட முடியுமா? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழும்பியது.

புரியாத புதிர்!

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்றி எதையும் ஆசிரியர்கள் செய்ய முடியாது.

ஒருவேளை, மாணவர்களிடையே ஒருவர் பேசுவதற்கு தகுதியானவர் என சில நேரங்களில் பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்தால், அதற்கான முழு பொறுப்பை தலைமை ஆசிரியர்தான் ஏற்க வேண்டும்.

அந்த வகையில்தான் இந்த தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்களா? என்று தெரியவில்லை.

ஆனால், மகாவிஷ்ணு பார்வை குறைபாடுடைய ஆசிரியரிடம் குரலை உயர்த்திப் பேசும்போது, “என்னை பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியை விட நீங்கள் பெரியவரா?” என்று வெளிப்படையாக சொன்னதற்கு விடை இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஒருவேளை இது அந்த மகாவிஷ்ணுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்குமோ என்னமோ!

கைது செய்யப்பட்ட மகா

மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, சைதாப்பேட்டை, அசோக் நகர் காவல் நிலையங்களில் புகாரும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் தன்னுடைய புகார் மனுவில், மகாவிஷ்ணு மீது வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப் பிரிவு 72 (அ) படியின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா சென்றிருப்பது தெரியவந்தது. அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

யார் இந்த மகாவிஷ்ணு

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு, மாணவப் பருவத்திலேயே மேடைப் பேச்சில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த அவர் சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அதில் அவரது முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் யோகா, சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்.

மக்களிடம் விழிப்புணர்வு இருக்கு… ஆனால்…

அரசுப் பள்ளியில் சொற்பொழிவு ஆற்றுபவர்கள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய கருத்துக்களைத்தான் போதிக்க வேண்டுமே தவிர, மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

இந்த நிலையில், இப்படிப்பட்டவர்களை கண்டிப்பதும், தண்டிப்பதும் அவசியமானதுதான்.

மாணவர்களிடம் எதை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்களை பேச அழைத்தவர்கள் அதைவிட அதிக தண்டனைக்குரியவர்கள்.

திராவிட மாடல் அரசு என்று பொது மேடைகளில் பேசி கைத் தட்டு பெற்றால் மட்டும் போதாது. மக்கள் எவ்வளவு விழிப்போடு இருக்கிறார்களோ, அதைவிட அதிக விழிப்போடு ஒரு அரசு செயல்பட வேண்டும் என்பதில் தான் திராவிட மாடல் அரசின் வெற்றி் அடங்கியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மதரீதியான சொற்பொழிவு நடத்தலாமா?

இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 28-ஆவது பிரிவு – கல்வி நிறுவனங்களில் மத பிரசாரம் தொடர்பான சில வரையறைகளை வகுத்திருக்கிறது.
முழுமையாக அரசு நிதியால் பராமரிக்கப்படும் எந்த கல்வி நிறுவனத்திலும் மத போதனைகளை வழங்க முடியாது. அதனால் அரசுப் பள்ளிகளில் மதரீதியான ஆன்மிக சொற்பொழிவு, மத பிரசாரம் செய்ய முடியாது.

தனியார் பள்ளிகள் சிலவற்றில் மதரீதியான சொற்பொழிவு நடத்துகிறார்களே அது எப்படி?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 28-ஆவது பிரிவின்படி, முழுவதும் அரசு நிதியால் பராமரிக்கப்படாத தனியார் அல்லது அரசு உதவி பெறும் மதநிறுவனம் சார்ந்த கல்விக் கூடங்களில், மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே நடத்த முடியும்.
ஒருவேளை பெற்றோர், பாதுகாவலர் சம்மதம் இன்றி நடத்தப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு சட்டரீதியான பிரச்னைகள் எழலாம்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்:தமிழக ஆசிரியர்கள் நிலைப்பாடு என்ன?

ஹேமா கமிட்டி அறிக்கையால் சிக்கித் தவிக்கும் கேரள திரையுலகம்

84 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mithiran News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading