சென்னை: மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை கேரள உயர்நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.
அத்துடன் கேரள அரசின் செயலற்ற தன்மையையும் விமர்சித்திருக்கிறது.
திரைப்படத் துறை
மலையாள திரையுலகை பேசுபொருளாக ஹேமா கமிட்டி தற்போது மாற்றியிருக்கிறது. இந்த விஷயத்தை பார்ப்பதற்கு முன்பு இந்தியாவில் திரைப்படங்கள் வருகை குறித்த ஒரு சிறிய கண்ணோட்டத்தை தெரிந்துகொள்ளலாம்.
19-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் அகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியர் கண்டுபிடித்ததுதான் இன்றைக்கு நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கு முன்னோடியான நகரும் படம்.
அவர்கள் கண்டுபிடித்த நகரும் படம் அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் அதுவும் சென்னையில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் “சினிமாஸ்கோப்” என்ற பெயரில் ஆங்கிலேயரான எட்வர்டு என்பவர் மக்களுக்கு திரையிட்டு காட்டி அதிசயத்தில் ஆழ்த்தினார்.
தென்னிந்தியாவில் திரைப்படங்கள்
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அப்போதைய மவுண்ட் தெருவில் (தற்போதைய அண்ணா சாலை) வார்விக் மேஜர் என்பவர் திரையரங்கை கட்டினார்.
இந்த திரையரங்கு மின்மயமாக ஜொலித்ததை அடுத்து அந்த காலத்தில் இதை எலக்ட்ரிக் திரையங்கு என்று மக்கள் அழைத்து வந்தார்கள்.
சினிமாவை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்த பலர் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார்கள். அதைத் தொடர்ந்து சினிமாத் துறையில் முக்கிய இடத்தை சென்னை வகித்தது.
சென்னை சினிமாத் துறையில் வளர்ந்தபோது, மலையாள சினிமாவும் அதனுடன் கைக்கோர்த்து வளர்ந்து வந்தது.
மலையாளத் திரைப்படங்கள்
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் கூட மலையாளத் திரைப்பட தயாரிப்புகள் சுறுசுறுப்படையவில்லை.
அதன் பிறகே மலையாளத் திரைப்படத் துறை சுறுசுறுப்படைந்தது. எண்ணற்ற தரமான படங்களை கொடுக்கத் தொடங்கியது.
1960-களில் குறிப்பிடத்தக்க அளவில் நல்ல படங்கள் பல உருவாகின. 1965-இல் வெளியான செம்மீன் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.
1970-களில் கேரளாவில் ஃபிலிம் சொசைட்டி இயக்கம் பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டது. அதைத் தொடர்ந்து மலையாள திரைப்பட உலகம் திரைப்பட ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
அது முதல் இன்று வரை எண்ணற்ற சமூகம், காதல், சோசலிச கருத்துக்கள், நகைச் சுவை கலந்த திரைப்படங்களும், சிறந்த நாவல்களை தழுவிய திரைப்படங்களும் உருவாகத் தொடங்கின.
மலையாள திரைப்பட உலகில் கோலோச்சிய பிரபல திரை நட்சத்திரங்கள் பல மொழிகளிலும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
சிக்கலில் சிக்கிய மலையாளத் திரைப்படத் துறை
2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவரை காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு பிரபல நடிகர் ஒருவர் ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், பிரபல நடிகர்களை நிர்வாகிகளாகக் கொண்ட “அம்மா” என்று சுருக்கமாக அழைக்கப்படும் ASSOCIATION OF MALAYALAM MOVIE ARTIST – பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர் திலீப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மலையாள நடிகைகள் பலர் அம்மா சங்கத்தில் இருந்து வெளியேறி 2017 மே மாதத்தில் மலையாள நடிகைகள், பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்ட புதிய சங்கத்தை உருவாக்கினார்கள்.
இந்த சங்கத்துக்கு WOMEN IN CINEMA COLLECTIVE என பெயரிடப்பட்டது. இச்சங்கம் பத்திரிகையாளர்களை சந்தித்து திரைத்துறை பெண்கள் பிரச்னைகளுக்காக அரசு ஒரு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த சங்கத்தினர், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, திரையுலகில் பணிச்சூழல் குறித்த ஆய்வை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்கள்.
ஹேமா கமிட்டி
இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. ஹெமா தலைமையில் நடிகை டி. சாரதா மற்றும் ஓய்வு பெற்ற முதன்மை செயலர் வல்சலகுமாரி ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு திரைத் துறை பணிச்சூழல் குறித்து பல்வேறு திரைப்படத் துறையைச் சேர்ந்த நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டு தகவல்களை திரட்டியது.
நடிகர், நடிகையர் மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என இந்த கமிட்டி திரைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள பலரையும் சந்தித்து உரையாடியது.
பாலியல் அத்துமீறல் தொடர்பான பல ஆதாரங்கள், விடியோக்கள், வாட்ஸ்அப் குறுந்தகவல்கள், ஆடியோக்கள் வடிவத்தில் திரட்டப்பட்டன.
இறுதியாக, ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையை 2019-ஆம் ஆண்டு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை 290 பக்கங்களை உடையதாக இருந்திருக்கிறது. ஆனால் அதன் விவரங்கள் எதுவும் அரசால் வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இதற்கு பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உள்ளிட்ட பலர் மீது புகார்கள் இருப்பதால் அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், 5 பத்திரிகையாளர்களின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தை எடுத்தனர். இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் வெளியிடப்பட்ட அறிக்கை முழுமையானதாக இல்லை. தனிநபர்களின் உரிமை பாதிக்காமல் இருக்கும் வரையில், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக சொல்லப்பட்ட அல்லது சீண்டிய நபர்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பது தொடர்பான பக்கங்கள் நீக்கப்பட்டு மீதமுள்ள 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை மட்டுமே வெளியானது.
சங்கேத வார்த்தைகள்
அந்த அறிக்கையின்படி, adjustment அல்லது compromise என்ற வார்த்தைகள் திரைத்துறையில் நுழைந்த அல்லது இருக்கும் பெண்களிடம் திரைத் துறை தொடர்புடைய ஆண்கள் பலரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் பொருள் மறைமுகமாக, நாங்கள் அழைக்கும்போது, அதுவும் எப்போது வேண்டுமானாலும் பாலியல் உறவுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்திருப்பது அறிக்கை மூலம் தெரியவந்தது.
பணியிடத்தில் வரம்பு மீறுவது, பணியையொட்டி தங்குமிடத்தில் இருக்கும்போது வரம்பு மீறுவது, உடன் பயணத்தின்போது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது, வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்புவது, படங்கள் அனுப்புவது, தங்குமிடங்களில் அத்துமீறி நுழைவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்கள் திரைத் துறையில் நுழையும் பெண்கள் தொடர்ந்து சந்திப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
மாஃபியாக்கள் கையில் திரைத் துறை?
மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாஃபியாக்களின் கையில் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன் நடிக்க பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலை உள்ளது. கிறார்கள். நெருக்கமான, முத்தக் காட்சிகள் பலமுறை காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த மாஃபியா கும்பலின் ஆதிக்கம் பாலியல் புகார் விசாரணை குழுக்களிலும் இருக்கும். அது உண்மையை வெளிப்படுத்துவோரை இயங்கவிடாமல் தடை செய்துவிடும்.
அவர்களை விசாரிக்க புகார் குழு அமைப்பது காரணமாக, பெண்களின் துன்பம் அதிகரிக்குமே தவிர அது தீர்வாக அமையாது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
திரைத்துறை, ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் கடடுப்பாட்டில்தான் உள்ளது. இவர்கள் அதிக செல்வத்தையும், புகழையும் பெற்றவர்களாக இருப்பவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் அறிக்கை சொல்லியிருக்கிறது.
திரைத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் ஆண்கள், சினிமா வாய்ப்பை கோரி நுழையும் பெண்களிடம், சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதும், அதற்கு அவர்கள் உடன்படாவிட்டால் திரைத்துறை வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
தீவிர மனித உரிமை மீறல்
ஹேமா கமிட்டியின் விசாரணையின்போது, பெண்கள் பலரும், படப்பிடிப்பு தளங்களில் துணி மாற்றுவதற்கு தனி அறை இல்லாமலும், கழிவறை கூட இல்லாமல் அவதிப்படுவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதை தீவிரமான மனித உரிமை மீறல் என ஹேமா கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.
அறிக்கையில் இடம்பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை நடந்தவையாக இருக்கின்றன.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதும் மலையாள நடிகர் சங்கத் தலைவராக தற்போது இருந்து வந்த மோகன்லால் பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் பலரும் ராஜினாமா செய்தார்கள்.
பிரபல நடிகர்கள் கருத்து
அதைத் தொடர்ந்து மோகன்லால், நிருபர்களை சந்தித்தபோது, ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு ஒட்டுமொத்த திரைத்துறையும் பதில் கூறவேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் கேரள நடிகர் சங்கமான அம்மா மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக மலையாள சினிமாவில் கோலோச்சி வரும் மம்முட்டியும் ஹேமா கமிட்டி குறித்து கருத்து தெரிவித்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்ற அவர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
அத்துடன் அவர் மலையாள திரைத் துறையில் அதிகாரக் குழு என்று எதுவும் இல்லை என்ற தன்னுடைய கருத்தையும் பதிவிட்டிருக்கிறார்.
நடிகர்கள் மீது வழக்குப் பதிவு
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில், பலரும் பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அத்துடன் நடிகை ஒருவர் இயக்குநரும், நடிகருமான சித்திக் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் சில நடிகர்கள், அரசியல்வாதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தலையிட்ட கேரள உயர்நீதிமன்றம்
ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்க அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசு ஹேமா கமிட்டி அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தது.
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான வழக்குகளை கேரள உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ஏ. முகமது முஸ்டாக் தலைமையிலான புதிய சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ். சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி விசாரணை நடத்தியது.
குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு அமைத்திருக்கிறது என்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இதன்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், அரசு ஏன் மவுனம் காக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
நான்கு ஆண்டுகளாக நீங்கள் ஹேமா கமிட்டி அறிக்கையின் மீது சும்மா இருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
திரையுலகில் மட்டுமின்றி சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் அவசரம் காட்டக் கூடாது. முதல் தகவல் அறிக்கை தேவையா என்பதை அறிக்கையை ஆய்வு செய்த பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது.
பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர, ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவித்துள்ள ஊதிய சமநிலை, பணியிடத்தில் அடிப்படை வசதிகள் இன்மை போன்ற விஷயங்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவை கேட்டுக் கொண்டது.
சிறப்பு புலனாய்வுக் குழு விரிவான பிரமாணப் பத்திரத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணையில் அனைவரின் தனியுரிமையை கவனத்தில் கொள்ள வேண்டும். செய்தியாளர் சந்திப்பு எதையும் சிறப்பு புலனாய்வுக்குழு நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளடக்கம்
.
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரம்
அரசியலில் நடிகர் விஜய் எம்ஜிஆரா? சிவாஜியா?
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.