வர்மக்கலை: தமிழ் மரபின் அற்புதக் கலை

varma kalai - அற்புதக் கலை
85 / 100


சென்னை:
இந்தியன் 1 வந்தபோது ஏற்பட்ட ஆர்வத்தை விட இந்தியன் 2 வந்தப் பிறகு வர்மக்கலை பற்றி அறியும் ஆர்வம் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது.

தற்காப்புக்கு உரிய வர்மக் கலை பற்றி இன்றைக்கு அறிந்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் மருத்துவ ரீதியாக உடல் கோளாறுகளை சீர்செய்வதற்கு வர்மக்கலையின் முக்கிய அம்சங்களை அறிந்தவர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள்.

உள்ளடக்கம்

வர்மக்கலையின் இரு நோக்கங்கள்

வர்மக்கலை இரண்டு நோக்கங்களுக்கானது. முதலில் மருத்துவம் – உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வாக சில நரம்புகளில் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட அழுத்தம் தந்து சிகிச்சை அளிக்கும் முறை.
இரண்டாவது தற்காப்புக்கானது. உடலில் உள்ள முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை வைத்து எதிரியை சமயோஜிதமாக சரியான இடத்தில் தாக்கி, தற்காலிகமாக தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கானதாக இது இருக்கிறது.

இந்தியன் திரைப்படத்தில் எந்த அளவுக்கு உண்மை?

இந்த வர்மக்கலையில் கரமடி, உடல் அசைவுகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தியும் எதிரியை பாதிக்கச் செய்ய முடியும்.
அதைத்தான் கமலின் இந்தியன் 2-ஆம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது இந்த யுக்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு மரக்குழலை காலில் உந்தி எடுத்து பின்னால் விலங்கிடப்பட்ட கைகளுக்கு மாற்றி குறிபார்த்து, எதிரியின் முதுகில் குறிப்பிட்ட இடத்தில் தாக்குதலை கமல்ஹாசன் ஏற்படுத்துகிறார். அதில் அந்த காவல் அதிகாரி நிலைகுலைந்து போகிறார்.
சரி… ஆனால் படத்தில், வருவதுபோல் ஒருவரை குதிரை போல ஓட வைப்பது, பாடிக்கொண்டே இருக்கச் செய்வது போன்றவற்றை வர்மக்கலையால் செய்ய முடியாது. இது அதீத கற்பனை.

வர்மக்கலையால் என்ன செய்ய முடியும்?

வர்மக்கலை மூலம் ஒருவரை பைத்தியம் பிடித்தவர் போல் சுயநினைவு இன்றி சுற்றி வர வைக்கலாம். சித்தம் கலங்கி பித்துப் பிடித்தவரை தெளிய வைக்கலாம்.
ஒருவரை தற்காலிகமாக மயங்கி விழச் செய்ய முடியும். கை, கால்களை செயலிழக்கச் செய்ய முடியும். ஏன் சில வர்மங்களில் நடத்தும் தாக்குதல் மூலம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக்கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.
ஆனால், காலப்போக்கில் இந்த கலையை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்ததால், குருமார்கள் அவற்றை சொல்லித் தருவதை குறைத்துக் கொண்டார்கள்.

வர்மக்கலை - human body eervous system

வர்மம் என்றால் என்ன?

நம் உடலில் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தை தட்டுவது மூலமோ, அழுத்துவது மூலமோ, தடவுவது மூலமோ அவற்றை தூண்ட முடியும் அல்லது அதன் சீரான செயல்பாடுகளை துண்டிக்க முடியும். அந்த குறிப்பிட்ட இடங்களைத் தான் வர்மம் என்கிறார்கள்.

108 உயிர்நிலைகள்

உடல் சீராக இயங்குவதற்கு உடலில் 108 இடங்களில் இந்த உயிர்நிலைகளாக இந்த வர்மங்கள் அமைந்திருக்கின்றன.
மூட்டுகள், தசைப் பகுதிகள், நரம்புகள், உறுப்புகள் ஆகியவற்றில் இந்த உயிர்நிலைகள் அமைந்திருக்கின்றன.
இந்த 108 வர்மங்களில் 12 வர்மங்கள் ஆபத்தானவை. அந்த வர்மங்களின் மீது தாக்குதல் நடத்தும்போது மரணம் சம்பவிக்கிறது. இதனால் இந்த வர்மங்கள் படு வர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மீதமுள்ள 96 வர்மங்களும் தொடு வர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நோய் தீர்க்கும் வர்மங்களாகவும், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வர்மங்களாகவும் பயன்படுத்த முடியும்.
தொடு வர்மங்கள் இயற்கை மருத்துவ சிகிச்சையில் குறிப்பிட அளவில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அந்த நரம்புகள் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு அவை பழைய நிலைக்கு திரும்ப உதவுகின்றன.

வர்மங்கள் எத்தனை, எங்கு?

கழுத்துக்கு மேல் 25, கழுத்தில் இருந்து தொப்புள் வரை 45, தொப்புள் முதல் மூலாதாரம் வரை 9, இரு கைகளிலும் 14, இரு கால்களிலும் 15 ஆக 108 வர்மங்கள் உள்ளன.

வர்மக்கலை ஆசான்கள்

ஒடிமுறிவுசாரி என்ற ஓலைச் சுவடியை முதன்முதலில் அகத்தியர் வர்மக்கலையின் முழு விவரத்தையும் எழுதியிருக்கிறார்.
புராண வரலாறுகளின்படி, வர்மக்கலை முதலில் சிவபெருமானிடம் இருந்து தோன்றியது. அதைத் தொடர்ந்து அவர் தனது மகன் முருகனுக்கு சிவபெருமான் போதிக்கிறார்.
முருகப் பெருமான் வர்மக்கலை மனிதர்களை சென்றடைய வேண்டும் என விரும்பி, வயோதிக வேடம் பூண்டு அகத்தியரிடம் வந்து அவருக்கு 108 வர்மங்களின் அறிவை புகட்டிச் செல்கிறார்.
அகத்தியர் இக்கலை பூலோகத்தில் நிலைத்து நிற்பதற்காக ஒடிமுறிவுசாரி என்ற பெயரில் இதன் ரகசியங்களை பாடல்களாக பதிவு செய்திருக்கிறார். அத்துடன் அவர் தன்னுடைய சீடர்களுக்கும் போதித்திருக்கிறார்.
அகத்தியரைத் தொடர்ந்து போகர் – வர்மசூத்திரம் – என்ற பெயரில் ஓலைச் சுவடியை எழுதியிருக்கிறார். வர்ம களஞ்சியம் என்ற ஓலைச் சுவடியை பதஞ்சலி எழுதியிருக்கிறார்.
வர்ம சஞ்சீவி என்பதை தன்வந்திரி சித்தர் எழுதியிருக்கிறார். வர்ம காண்டம் என்ற சுவடியை போகரின் சீடர் புலிப்பாணி எழுதியிருக்கிறார். இதேபோல் பல சித்தர்களும் வர்மக்கலை நுணுக்கங்களை எழுதியிருக்கிறார்கள்.

மிருகங்களுக்கும் வர்மங்கள் உண்டு

இந்த வர்மப் புள்ளிகள் மனிதனுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. இந்த புள்ளிகளுக்கு நிலா (Nila) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, யானையைக் கட்டுப்படுத்த பயிற்சி பெறும் பாகன்களுக்கு இந்த நிலா புள்ளிகள் பற்றிய அறிவு கற்பிக்கப்படுகிறது.
இந்தக் கலையைக் கற்ற யானைப் பாகன்களால் கட்டுப்பாட்டை இழக்கும் யானையை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கை மட்டுமே ஆயுதமல்ல

வர்மக் கலையில் கரமடி (கைவிரல்கள்) மட்டுமே ஆயுதம் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. வெறுங்கை மட்டுமின்றி, ஒரு குச்சி அல்லது தடி போன்ற முனை மழுங்கிய பொருள்களைக் கூட ஆயுதமாக பயன்படுத்த முடியும்.
பொதுவாக ஆபத்தான மிருகங்களைக் கட்டுப்படுத்த ஒரு குச்சியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட புள்ளி மீது அழுத்தம் தந்து விலங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அல்லது மண்டியிடச் செய்வது உண்டு.

வர்மக் கலையின் பயன்பாடு

வர்மக் கலை ஆதிமுறை, களரிப்பயட்டு, சிலம்பம் போன்றவற்றின் மேம்பட்ட நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மசாஜ், மாற்று மருத்துவம், பாரம்பரிய யோகா, தற்காப்புக் கலைகள் ஆகியவற்றையும் இந்த வர்மக் கலை இணைக்கிறது.

நான்கு வகை வர்மங்கள்

தொடு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம், படு வர்மம் என வர்மக் கலையை நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள்.
தொடு வர்மம் என்பது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவிலான அழுத்தம் ஏற்படுத்தி தாக்குதல் நடத்துவது. இதை எளிதில் குணப்படுத்த முடியும்.
தட்டு வர்மம் என்பது ஒற்றை விரலை மட்டும் பயன்படுத்தி குறிப்பிட்ட வர்மப் பகுதியில் அழுத்தம் தருவது. அல்லது குறிப்பிட்ட அழுத்தத்தில் தட்டுவது.

இதன் மூலம் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் அல்லது பாதிப்பு ஏற்பட்டதை சீர் செய்ய முடியும்,
தட்டு வர்மத்தில் தாக்குதலுக்கு ஆளானவரை அதற்குரிய தனி சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

ஆபத்தான நோக்கு வர்மம்

நோக்கு வர்மம் என்பது பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவது. இந்த வர்மத்தை கற்பது மிகக் கடினம். அப்படி ஒருவேளை இக்கலை கைவந்துவிட்டால், அவருக்கு நிகர் இந்த உலகில் வேறு யாரும் இல்லை என்று அகத்தியரே சொல்லியிருக்கிறார்.
அதேபோல் இந்த நோக்கு வர்மம் ஆபத்தானதும் கூட என்பதையும் அகத்தியர் எச்சரித்திருக்கிறார்.

மரணத்தை ஏற்படுத்தும் வர்மம்

படு வர்மம் என்பது மிகவும் ஆபத்தானது. இந்த படுவர்ம புள்ளிகளில் தாக்குதலுக்கு ஆளானவருக்கு உயிரிழப்பு ஏற்படும்.
ஒருவரை வர்மக் கலையை பயன்படுத்தி வீழ்த்திவிட்டால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அவரை அதே கலையை பயன்படுத்தி எழுப்ப வேண்டும். இல்லையெனில் மரணம் நேரிடும்.

வர்மக் கலை சுலபமா?

புத்தகங்களைப் படித்து வர்மக் கலையைக் கற்றுத் தேற முடியாது. அப்படி புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு வர்ம புள்ளிகளை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தி யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது.
வர்மக் கலையில் நீண்ட கால பயிற்சி பெற்றவர்களை குருவாக ஏற்று, அவர்களின் வர்மங்கள் குறித்த விளக்கங்களை முதலில் கற்றுத் தேற வேண்டும்.
அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வர்மப் புள்ளிகளிலும் எதற்கு எந்த அளவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற துல்லியமான கணக்குகளை கற்றுத் தேர்ந்தால்தான் வர்மக் கலை நமக்கு சாத்தியமாகும்.

பிரணாயாமப் பயிற்சி

வர்மக் கலையை பயில்வதற்கு முக்கியமாக நாம் பிரணாயாமப் பயிற்சியை அறிந்திருக்க வேண்டும்.

உடலில் உயிர் சீராக இயங்குவதற்கு உறுதுணையாக இருப்பவைதான் வர்மங்கள். இதை வர்ம வாயு என்கிறார்கள்.
இந்த ஆற்றல் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் சீர்செய்து உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கிறது.
சுவாசத்தில் உள்ள பிராண வாயு நுரையீரலில் அதிக நேரம் தங்குவதன் மூலம் உடலுக்கு கூடுதலாக பிராண சக்தி கிடைக்கிறது.
இதில் உச்சந்தலை சுவாசம் பற்றி அறியாமல் எந்த ஒரு வர்ம மருத்துவரும் மருத்துவராக முடியாது என்கிறார்கள்.

உச்சந்தலை சுவாசத்தை அறிந்தால் மட்டுமே உடலில் உள்ள வர்மப் புள்ளிகளை பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.

இக்கலையில் உச்சம் தொட்டவர் மட்டுமே நோக்கு வர்மக் கலையில் தேர்ச்சி பெற முடியும்.
காலன், வன்மம், ஏமம், சூட்சுமம், அடக்கம் என்றும் வேறு பெயர்களிலும் வர்மக் கலையை அழைக்கிறார்கள்.

வர்மக் கலை சாதனைகள்

வர்மக் கலையால் ஒருவரை நிலைகுலையச் செய்ய முடியும். உடலில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். மரணத்தைக் கூட ஏற்படுத்த முடியும்.
அதே நேரத்தில் மருத்துவ ரீதியாக, இக்கலை மூலம், வெட்டுக் காயங்களில் இருந்து பீரிட்டு வரும் ரத்தத்தை எந்த கட்டும் போடாமல் வர்ம நரம்புப் பிடி மூலம் கட்டுப்படுத்தி விட முடியும்.

ஒற்றை தலைவலி போன்ற பிரச்னைகளை வர்ம அடங்கல் மூலம் சில நிமிடங்களில் சீர் செய்ய முடியும்.

சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த வர்மக் கலை மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.

நம்முடைய சில செயல்களும் வர்ம தட்டுதல்தான்

நம் வீடுகளில் நாம் சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதோ புரையேறிவிட்டால், உடனே தலையில் லேசாக தட்டுவதை பார்த்திருக்கிறோம். இது ஒரு வர்ம தட்டுதல்தான். இப்படி தட்டுவதால் மூச்சுக் குழல் பாதை சீராகிறது.
ஒரு பிரச்னைக்கு நீண்ட நேரம் தீர்வு காண முடியாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்துவிட்டு, காது மடலுக்கு மேலே தலையில் இருபக்கங்களிலும் சில நேரங்களில் நாம் சொரிந்துகொள்வதுண்டு. இதுவும் வர்ம முறைதான்.
இப்படி செய்வதால் நம் மூளை மீண்டும் சுறுசுறுப்பாகி, பிரச்னைக்கு தீர்வு காண முயலும்.
சிலர் நடுநெற்றிக்கு நேராக உச்சத்தலை வரை விரலால் கோடு போடுவதை பார்த்திருப்போம், இதுவும் மூளைக்கு புத்துணர்ச்சி தரும் செயல்தான்.
அதேபோல், மருத்துவமனைகளில் குழந்தை பிறந்ததும், அக்குழந்தையின் முதுகு தண்டுகளுக்கு இடையில் லேசாக தட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது. இதுவும் ஒரு வர்ம தட்டுதல்தான்.

வயது வந்த பெண்களுக்கு நடுவாகு எடுப்பது ஏன்?

வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு தலையில் சீப்பால் நடுவாகு எடுத்து வாரி விடுவது வழக்கத்தில் உள்ள நடைமுறை. இதை இன்னமும் கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கிறார்கள்.
இதுவும் ஒரு வர்மக் கலைதான். இப்படி தலையில் நடுவே சீப்பால் மெல்லிய அழுத்தத்தோடு சீவுவதன் காரணமாக கர்ப்பப் பை பிரச்னைகளுக்கு பெண்கள் ஆளாவது தவிர்க்கப்படுகிறது.
சுமங்கலி பெண்களுக்கு நெற்றியின் உச்சியில் பொட்டு வைப்பது கூட கர்ப்பப் பை பிரச்னைகள் இருந்தால் நீங்கிவிடும் என்பதால்தான். அப்போது நம்மை அறியாமல் அந்த இடத்தில் உள்ள நரம்புக்கு ஒரு மெல்லிய அழுத்தம் தந்து கர்ப்பப் பையை சீராக்குகிறோம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

பிள்ளையாருக்கு ஏன் காதைப் பிடித்து தோப்புக் கரணம்?

கோயில்களில் பிள்ளையாரை வணங்கும்போது, நம்மை அறியாமல் இரு கைகளையும் எக்ஸ் வடிவில் கொண்டு சென்று இரு காது மடல்களையும் இழுத்தபடியே தோப்புக்கரணம் போடுவதுண்டு.
இதுவும் ஒருவகை வர்மத் தட்டுதல்தான். இதனால் நரம்புகள் தூண்டப்பட்டு அறிவாற்றல் பெறுகிறோம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊமை காயங்கள்

இதேபோல் குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது கை, கால்களில் அடிபட்டு ஊமைக் காயங்கள் ஏற்படுவதுண்டு.
சில நேரங்களில் அந்த காயங்கள் எதிர்பாராதவிதமாக வர்மப் புள்ளிகள் மீதான தாக்குதலாகக் கூட அமைந்துவிடும்.
குழந்தைகள் இத்தகைய ஊமைக் காயங்கள் ஏற்பட்டால் பெற்றோரிடம் சொல்வதில்லை. இதனால் பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.
இந்த சூழலில் அக்குழந்தைகள் வர்மப் புள்ளிகள் மீது ஏற்பட்ட தாக்குதல் காரணமாக பின்னாளில் பாதிப்பை சந்திப்பதுண்டு.
இதைத் தவிர்க்கவே, வாரத்தில் ஒரு நாள் சனி நீராடு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

ஏன் சனி நீராடு?

சனி நீராடு என்பது ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை அன்று எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் சனி நீராடு என்பது உடலில் எண்ணை தேய்த்துக் கொண்டு நீராடுவதன் மூலம் உடல் குளிர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் வைக்கப்பட்டது. இந்த இடத்தில் சனி என்பது கிழமையை குறிப்பது அன்று. குளிர்ச்சியை குறிப்பது.
இப்படி எண்ணை தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்டும்போது, குழந்தைகள் கீழே விழுந்ததால் ஏதேனும் வலி இருந்து அவர்கள் தேய்க்கும்போது கண்டுபிடித்து விடலாம். அத்துடன், அந்த எண்ணை தேய்ப்பு மூலம் குறிப்பிட்ட வர்மப் புள்ளிகள் சீராகும் என்பதும் மற்றொரு சாதகமான விஷயம்.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்படவிருந்த பாதிப்புகளை நாம் எண்ணை தேய்த்து குளிப்பாட்டி ஆரோக்கிய உடல் நலத்துக்கு இட்டுச் செல்கிறோம்.

இத்தகைய அரிய கலையை இளம் தலைமுறையினர் ஆர்வமாக கற்று எதிர்கால சமுதாயத்துக்கு நம்முடைய தமிழ் மரபின் அற்புதக் கலையை கொண்டு சென்றால்தான் அதை வருங்காலங்களில் காப்பாற்ற முடியும்.

85 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *