சென்னை: யக்சால் – இந்த பெயரை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இது பாலைவனங்களாய் இருந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட ஒரு பழங்கால இயற்கை குளிர் கிடங்கு. இதன் மூலம்தான் முந்தைய காலங்களில் உணவு பொருள்களை கெடாமல் சேமித்து வைத்திருந்தார்கள்.
இதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் இன்றைக்கும் ஒருசில யக்சால் கட்டமைப்புகளை இவற்றின் பழமை மாறாமல் புராதன சின்னங்களாக ஈரான் நாட்டில் பாதுகாத்து வருகிறார்கள்.
உள்ளடக்கம்
சகஜ வாழ்க்கையில் மின்சாரம் ஏற்படுத்தும் பாதிப்பு
இன்றைக்கு நவீன யுகத்தில் மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடப்பதில்லை. முக்கியமாக உணவுப் பொருள்களை நீண்டநாள் கெடாமல் பாதுகாக்க குளிர்பதனப் பெட்டி அவசியம்.
அத்தகைய வசதிகள் மின்சாரம் கண்டுபிடிக்கப்படும் வரை கிடையாது. ஆனாலும் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக இந்தியர்களும், தமிழர்களும் தங்கள் தேவைக்கு உணவுப் பொருள்களை கெடாமல் இயற்கை முறையில் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்..
இன்றைக்கு ஒரூ நாள் மின்சாரம் இல்லாவிட்டால் கூட, நாம் புலம்பித் தீர்க்கிறோம். ஃபிரிட்ஜில் வைத்த நேற்றைய மோர் குழம்பு, இரண்டு நாள் முன் வைத்த புளிக்குழம்பு ஆகியவை வீணாகிவிடுமே என கவலைப்படுகிறோம்.
பண்டைய அறிவியல் பயன்பாடு
500, 1000 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள், இன்றைய நவீன வசதிகள் இல்லாத நிலையில், எப்படி உணவுப் பொருள்களை நீண்ட நாள் சேமித்து வைத்திருந்திருந்தார்?
அதுவும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் அந்த காலத்தில் எப்படி வாரக் கணக்கில், மாதக் கணக்கில் உணவை சேமித்து வைத்திருக்கிற முடியும்?
எப்படி அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை பாதுகாப்பாக, அதுவும் ஃபிரஷாக சேமித்து வைத்திருந்தார்கள் என்பது ஒரு அதிசயம்தானே.
உப்பில்லா பண்டம் குப்பையிலே
இதற்கு பின்னால் ஒரு அசத்தலான அறிவியல் தொழில்நுட்பம் அவர்களால் பயன்படுத்தப்பட்டது.
பண்டைய காலத்தில், வேட்டையாடியோ, விவசாயத்தின் மூலமோ கிடைக்கும் பயிர்கள், தானியங்கள், பழங்கள், காய்கள் போன்றவற்றை சேமித்து வைக்காமல் போனால், பருவ காலம் மாறும்போது உணவுப் பஞ்சம் ஏற்படும்.
அவற்றை பதப்படுத்தாமல் வைத்திருந்தால் சில நாள்கள் கூட தாங்காது. இதற்கு அவர்கள் பயன்படுத்திய ரசாயணம் உப்பு. உப்பின் அறிவியல் குணங்கள் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
‘உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம்? உப்பு போடாத உணவு சுவையாக இருக்காது என்று நாம் இப்போது நினைக்கிறோம். அது தவறு. உப்பு இல்லாத உணவு விரைவாக வீணாகிவிடும். இதனால் அதை குப்பையில் கொட்ட வேண்டியதுதான் என்பதைத்தான் அந்த பழமொழி உணர்த்துகிறது.
உப்பு பயன்படுத்தப்பட்ட விதம்
இன்றைய அறிவியலில் எந்த உணவுப் பொருளும் கெடுவதற்கு காரணம் பாக்டீரியா, பூஞ்சைகள் என சொல்கிறது.
ஆனால் பண்டைய காலத்தில் எந்த நவீன கருவிகளும் இன்றியே உணவு கெடுவதற்கு கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அந்த கிருமிகள் வளர முடியாத சூழலில் உணவுப் பொருள் கெட்டுப் போகாது என தெரிந்து வைத்திருந்தார்கள்.
இந்த நுண்ணுயிரிகள் வளர்வதற்கு முக்கியத் தேவை நீர். அதாவது உணவுப் பொருளில் ஈரம். இதை நம் முன்னோர்கள் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.
அதனால் ஒரு உணவுப் பொருளில் இருந்து நீரை முற்றிலும் அகற்றி விட்டால் எந்த உயிரினமும் வளர முடியாது.
இந்த விஷயத்தில்தான் உப்பு ஒரு மிகப் பெரிய வித்தை காட்டுகிறது. அறிவியலில் சவ்வூடு பரவல் அதாவது Osmosis-னு சொல்வார்கள்.

ஒரு மீன் துண்டு மேல் உப்பைப் போடும்போது, அந்த உப்பு, மீனின் செல்களுக்குள் இருக்கும் நீரை அப்படியே ஈர்த்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து அந்த உப்பு காற்றின் வெப்பத்தில் ஈரப்பதத்தை இழந்து விடுகிறது.
நீர்ச்சத்து முற்றிலும் இல்லாத மீன் அல்லது எந்த உணவு பொருளிலும் பாக்டீரியா வாழ முடியாது. இதனால் அந்த பொருள் பல மாதங்கள் கெட்டுக் போகாது. இந்த டெக்னாலஜியின் உச்சம்தான் நம்மில் சிலர் விரும்பி சாப்பிடும் கருவாடு.
பண்டைய காலத்தில், கடலோரத்தில் வாழ்ந்த நம் மக்கள், மீன்கள் அதிகமாக கிடைக்கும் காலத்தில், உப்பைப் போட்டு கருவாடாக்கி, அதை மற்ற ஊர்களுக்கு கொண்டு போய் கொடுத்தார்கள்.
பண்ட மாற்று முறையில் தங்களுக்கு தேவையான பொருள்களை பெற்றார்கள்.
மாங்காய், எலுமிச்சை போன்றவற்றிலும் உப்பு போடப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, ஊறுகாய் தயாரிப்பும் இதே டெக்னாலஜிதான்.
அன்றைக்கு உப்பை ஒரு சுவை கூட்டியாக பயன்படுத்தியதோடு, பாதுகாப்பு அம்சமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான்.
உலர்த்தும் முறையில் உணவு பாதுகாப்பு
குளிர்காலத்தில் உப்பு போட்டு பாதுகாப்பது, வெயில் காலத்தில் சூரிய வெயிலில் உலர்த்தி பாதுகாப்பது என்பதை கடைப்பிடித்திருக்கிறார்கள்.
கத்திரிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய் என பல தரப்பட்ட காய்கறிகளையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பல நாள்கள் வெயிலில் காய வைத்திருக்கிறார்கள்.
அதில் உள்ள ஈரத்தை முற்றிலும் ஆவியாக்கி வைத்துக் கொள்ளும் அந்த பொருள்களை வற்றல் என பெயரிட்டார்கள்.
இந்த வற்றல்களை மாதக் கணக்கிலும், ஆண்டுக்கணக்கிலும் கூட பத்திரமாக சேமித்து வைக்க முடிந்தது.
காய்கறி கிடைக்காத மழைக் காலத்திலோ, பஞ்சம் ஏற்படும் காலத்திலோ, இந்த வற்றலை குழம்பில் போட்டால் போதும், அதுக்கு மீண்டும் உயிர் வந்து ஃபிரஷ்ஷான காய்கறியாக சமையலில் மணமூட்டும் அற்புதத்தை அவர்கள் செய்தார்கள்.
உப்பும், சூரியஒளியும்
அரிசி சோறு, பழைய சோறு ஆகியவை மீதமாகிவிட்டால், அவர்கள் அதை வீணாக்கியதில்லை.
அதையும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி காயவைத்து வற்றலாக்கி வந்திருக்கிறார்கள்.
மிளகாய் வற்றல், மாங்காய் வற்றல் போன்றவற்றில் கீரைகளையும் கூட அவர்கள் இந்த முறையில் பதப்படுத்தத் தவறியதில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இதற்கும் ஒரு படி மேலே, ஒருசில நேரங்களில் உப்பையும், சூரிய சக்தியையும் ஒன்றாக பயன்படுத்தினார்கள். சில காய்கறிகளை உப்பு நீரில் வேக வைத்து, அதை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி நீண்டகாலத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இன்றைக்கும் கிராமப்பகுதிகளில் இந்த டெக்னாலஜி உயிர்ப்போடு இருந்து வருகிறது. வெள்ளைத் துணியில் விதவிதமாக வற்றல்கள் காய வைத்திருப்பதை கிராமங்களில் செல்லும்போது நாம் பார்க்க முடியும்.
இந்த டெக்னாலஜி பல்லாயிரம் ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நமக்கு கிடைத்த உணவு பாதுகாப்பு கவசம்.
யக்சால் – பாலைவனத்து பனிக்கூடம்
அந்தக் காலத்தில் உப்புக்கண்டம் போடுவது, காய வைப்பது போன்றவற்றை நம்முடைய வெப்பமண்டல பகுதிகளில் பயன்படுத்தலாம். ஆனால் ஐஸ் கட்டியை வைத்து குளிரூட்டுவது என்பது இயலாத காரியம் என்று நீங்கள் ஒருவேளை நினைத்தால் அது தவறு.
சுட்டெரிக்கிற பாலைவனத்துக்கு நடுவில், மின்சாரம் இல்லாத அந்த காலத்தில் இயற்கையாக மிகப் பெரிய ஐஸ் கிடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கட்டமைப்பின் பெயர்தான் யக்சால். பண்டைய பெர்சியாவில் அதாவது இன்றைய ஈரானில் இப்படி ஒரு அமைப்பை அந்த காலத்தில் வைத்திருந்தார்கள்.
யக்சால் (yakhchal) என்பதற்கு என்ந பொருள். யக் என்றால் பனி, சால் என்றால் குழி. இதை வார்த்தைகளை இணைத்து யக்சால் என பெயரிட்டிருந்தார்கள்.
யக்சால் கட்டமைப்பு அதிசயம்
இதுதான் மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான மின்சாரம் இல்லாத ஃபிரிட்ஜ் யக்சால் என்கிறார்கள்.
இந்த யக்சால் எப்படி வேலை செய்தது என்பதுதான் மிகுந்த ஆச்சரியமானது. யக்சால் கட்டமைப்பில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருந்தன.
முதலாவது பூமிக்கு மேல் கூம்பு வடிவத்தில் தெரியும் ஒரு கட்டடம். மற்றொன்று பூமிக்கு மிக ஆழத்தில் இருக்கும் ஒரு சேமிப்புக் கிடங்கு.
குளிர்காலத்தில் யக்சாலுக்கு அருகில் சற்று ஆழம் குறைவான பெரிய கால்வாய்களை வெட்டியிருக்கிறார்கள். இரவு நேரத்தில் ஏற்படும் கடும் குளிரில் இந்த கால்வாயில் உள்ள நீர் உறைந்துபோய் மெல்லிய ஐஸ் பாலங்களாக மாறுகின்றன.
அதிகாலையில் அந்த ஐஸ் பாளங்களை எடுத்து பூமிக்கு அடியில் உள்ள கிடங்குகளில் அடுக்குவார்கள். ஒவ்வொரு ஐஸ் பாளத்துக்கும் நடுவில், வைக்கோல் மாதிரி வெப்பத்தைக் கடத்தாத பொருள்களை வைப்பார்கள்.
யக்சால் அறிவியல் தொழில்நுட்ப ரகசியம்
உண்மையில் இப்போதுதான் அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு புலப்படும்.
பூமிக்கு மேல கூம்பு வடிவத்தில் உயரமாக உள்ள கட்டடம் ஒரு புகைபோக்கி மாதிரி வேலை செய்யும். அது உள்ளே இருக்கும் சூடான காற்றை வெளியே தள்ளும்.
அதே நேரம், அதன் பிரம்மாண்ட சுவர்கள் களிமண், மணல், முட்டை வெள்ளைக்கரு, ஆட்டு முடி, சாம்பல் என ஒரு ஸ்பெஷல் கலவையால் பூசப்பட்டிருக்கும்.
இந்த சுவர், கிட்டத்திட்ட ரெண்டு மீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும்.
இது ஒரு நம்ப முடியாத வெப்பக் காப்பான் (Insulator). வெளியில் பாலைவனத்தில் 50 டிகிரி வெயில் அடித்தாலும், அந்த சூடு சிறிதளவு கூட உள்ளே போகாது.
பூமிக்கு அடியில் உள்ள கிடங்கு, நிலத்தடியில் உள்ள இயற்கையான குளிரைப் பயன்படுத்திக் கொண்ட நிலையில், வெளியில் இருந்து வரும் வெப்பத்தை சுவர்கள் தடுப்பதோடு, உள்ளே இருக்கும் வெப்பத்தையும் அந்த கூம்பு வடிவம் வெளியேற்றி விடுகிறது.
இதனால் கீழே இயற்கையில் உருவாக்கி அடுக்கி வைக்கப்பட்ட ஐஸ் கட்டிகள் கரையாமல் இருப்பதோடு, இரவு நேரத்தில் மேலும் அவை இறுக்கமாகி விடுகிறது.
கோடை காலம் கடந்து குளிர்காலம் வந்ததும் அதனுடைய இறுக்கம் மேலும் வலிமையடைகிறது. இதனால் அடுத்த கோடை வந்தாலும், பல மாதங்கள் இந்த ஐஸ்கட்டி கரைவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
இயற்கை குளிர்சாதன கிடங்கு
இத்தகைய பிரம்மாண்ட கட்டமைப்புகளை அந்தக்கால அரசர்கள், பெரும் தனவந்தர்கள் கட்டி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதில் பல்வேறு உணவுகள், குளிர்பானங்கள், இறைச்சி போன்றவற்றை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
இந்த யக்சால் கட்டமைப்பு அந்த காலத்தில் இயற்கையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு குளிர்சாதன கிடங்காக இருந்திருக்கிறது.
மண் பானை அறிவியல் தத்துவம்
பண்டைய தமிழர் நாகரித்திலும் இயற்கையை அழகாக பயன்படுத்தி இருக்கிறார்கள். மண்பானையில் நீரை ஊற்றி குளிர்ச்சியாக வைப்பது, வீட்டுக் கூரை மீது வைக்கோல் வேய்ந்து வெயிலின் தாக்கம் வீட்டுக்குள் வராமல் தடுப்பது போன்றவையும் அன்றைய மக்களின் அறிவியல் அடிப்படையிலான முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன.
கோவில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் புழுக்கத்தாலும், வெப்பத்தாலும் அவதிப்படக் கூடாது என்பதால்தான் அன்றைய காலத்தில் முற்றிலும் கருங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருப்பதும், குளிர்ச்சி தரும் கற்களை கட்டுமானங்களில் பயன்படுத்தியதும் அறிவியல் அறிவுதான்.
அந்த அடிப்படை அறிவுதான் கடந்த கால மனிதனை இயற்கை பேரிடர்களில் இருந்து காப்பாற்றி இன்றைய தலைமுறை சுகமாக வாழ வழி வகுத்திருக்கிறது.
குமரிக்கண்டம் உண்மையா, கற்பனையா?
யக்சால் பற்றிய கூடுதல் விவரங்களை காணொளி மூலம் காண இந்த லிங்கை சொடுக்குங்கள்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.