திருக்குறள் கதைகள் 9 – முயற்சி கைக்கொடுக்குமா என்பதற்கான கதையைத் தாங்கியது. எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது.
உள்ளடக்கம்
அரட்டை மன்னன்
தீபன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.
அவனது தந்தையோ அரட்டை அடிப்பதை கைவிட்டு, படிப்பில் கவனம் செலுத்து என்று நாள் தவறாமல் சொல்லி வருவது உண்டு.
ஆனால், அதைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. முதல் பருவத் தேர்வு வந்தது. அவனது நண்பர்கள் படிப்பதில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர்.
தீபனோ நம்ம பக்கம் ஆண்டவன் இருக்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அலட்சிய மனப்பான்மையோடு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
கடவுளை நம்பிய தீபன்
தேர்வு நாள் வந்தது. நேராக முதலில் கோயிலுக்கு போனான். கடவுளை வணங்கினான். கடவுளே எனக்கு அதிக மதிப்பெண் பெற்றுத் தர வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டான்.
இப்போது அவன், தேர்வில் நாம் அதிக மதிப்பெண் பெற்றுவிடும் என்ற திருப்தியோடு தேர்வை எழுதினான்.
தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவனுக்கு தெரிந்ததை எழுதி வைத்தான். முதல் பருவத் தேர்வு ஒரு வழியாக நிறைவடைந்தது.
தேர்வு வினாத் தாள் திருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக அழைத்து விடைத் தாளை வழங்கினார்.
காத்திருந்த அதிர்ச்சி
தீபனும் விடைத் தாளை பெற்றான். அவன் தன்னுடைய நண்பர்களை விட மிக குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்து அதிர்ச்சி அடைந்தான்.
வகுப்பறையிலேயே அழுகை அவன் கண்களில் கண்ணீரை தேக்கத் தொடங்கியது. ஒரு வழியாக சமாளித்து வீட்டுக்கு ஓடி வந்தான்.
தந்தை தினமும் சொல்வாரே படி… படி… என்று. இப்போது மதிப்பெண் குறைவாக வாங்கியிருக்கும் நிலையில் அவர் எப்படி வருந்துவார் என்பதை உணர்ந்து அவனுக்குள அச்சம் ஏற்பட்டது.
நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். ஆனால் நண்பர்களோ, அரடடை அடிக்கும் நேரத்தில் அரட்டை அடித்துவிட்டு, படிக்க வேண்டிய நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதனால் நண்பர்கள் நம்மை கேலி செய்வார்களே என்ற ஆதங்கமும் அவனுக்கு வந்தது. நாம் எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நான் எந்த முயற்சியும் செய்யாமல் போனதை இப்போது உணர முடிகிறது என்று வருந்தினான்.
தந்தையின் அறிவுரை
தந்தையின் முன் தயங்கியபடியே சென்று தேர்வு விடைத் தாள்களைக் கொடுத்தான். அவற்றை வாங்கிப் பார்த்த தந்தை கேட்டார்.
இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை நீ மட்டும் தான் பெற்றாயா… உன் நண்பர்களுமா… என்று கேட்டார்.
அவன் தலை குனிந்தபடியே சொன்னான்… “நான் மட்டும் தான்:.
அவர்கள் ஒருபுறம் அரட்டை அடித்தாலும், மற்றொருபுறம் படிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் நீ அரட்டையில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறாய் என்று கடிந்து கொண்டார்.
நான் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன் அப்பா. இனி அந்த தவறை செய்ய மாட்டேன் என்றான் தீபன்.
தந்தை சொன்னார்.. உன்னை போன்றவர்களுக்காகத்தான் திருவள்ளுவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
(குறள்- 619)
தெய்வம் நமக்கு எல்லாம் தந்துவிடும் என்று நினைப்பதை விட முயற்சி செய்தால் உழைப்பிற்கு ஏற்ற பலன் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.
இதை இனி மறவாதே. கடவுள் முயற்சி செய்வோருக்குத்தான் துணை நிற்பார். சோம்பேறிகளுக்கு அல்ல என்று அழுத்தமாக அவன் மனதில் பதிய வைத்தார்.
நான்தான் டாப்
அரட்டையை விட படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினான் தீபன். சில வாரங்கள் கடந்து சென்ற பிறகு இரண்டாம் பருவத் தேர்வு வந்தது.
அதில் தன்னுடைய சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்ணை பெற்று பெருமிதத்தோடு அவர்களுடன் கைக்கோர்த்தான் தீபன்.