மனிதனும் மிருகமும்! – ஒரு குட்டிக் கதை

சிறுகதை 5
84 / 100

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அப்படிப்பட்ட மனிதர்களை விட ஆபத்தான மிருகம் மேலானது என்பதை உணர்த்தும் கதையாக இந்த மனிதனும் மிருகமும் சிறுகதை அமைகிறது.

மன்னிக்க தெரியாத அரசன்

ஜெயபாதம் என்ற நாட்டை வித்யாதரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் யார் சிறு தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டான். அதேபோல் அவனுக்கு பிடிக்காத எதை செய்தாலும் தண்டனை தருவதையும் வழக்கத்தில் வைத்திருந்தான்.

தவறுக்கான தண்டனையாக அவன் பாதாள அறையில் வளர்த்து வந்த சிங்கத்துக்கு இரையாக்குவதை வழக்கமாக வைத்திருந்தான். இதனால் அந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் தவித்தார்கள்.

இதனால் வித்யாதரனின் அமைச்சரவையில் இருந்தவர்களும் அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று சொல்வார்களே ஒழிய தவறாக இருந்தால் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

அவனுடைய உறவினர்கள் யார் தவறு செய்தாலும் கூட சிங்கத்துக்கு இரையாக வேண்டியதுதான்.

சமையல் கலைஞர்

அந்த அரசன் சிறு வயதாக இருந்தபோதே அரண்மனையில் தவசு என்ற சமையல்காரன் பணியில் இருந்தான். அவனுடைய உணவு அரசன் வீட்டைச் சேர்ந்த அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

அதனால் அவன் வயதான காலத்திலும் வித்யாதரன் அரண்மனையில் சமையல் வேலையை தொடர்ந்து செய்து வந்தான்.

தவசுக்கு வயது மூப்பு காரணமாக ஞாபக மறதி ஏற்படத் தொடங்கியது. அதனால், சில நேரங்களில் உணவை சரிவர சமைக்க முடியாமல் தடுமாறினான். அதனால் அரசன் வித்யாதரனை சந்தித்து தன்னுடைய இயலாமையை தெரிவித்தான்.

இருந்தாலும், வித்யாதரன் அவனுக்கு ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. அதனால் வேறு வழியின்றி வித்யாதரனுக்கு சமையல் கலைஞனாக தவசு தொடர்ந்து இருந்து வந்தான்.

தவசுக்கு தண்டனை

ஒரு நாள் அரசனுக்கு சமைத்த உணவில் உப்பு போட சமையல்காரன் தவசு மறந்துவிட்டான். அதை சாப்பிடத் தொடங்கிய அரசன் உணவில் உப்பு இல்லாததை அறிந்து ஆத்திரமடைந்தான்.

தவசு உடனடியாக, உணவில் உப்பை சேர்த்து மீண்டும் பரிமாறியும் அரசனுக்கு அந்த உணவு பிடிக்கவில்லை. இதனால் தவசு செய்த தவறுக்கு எல்லோருக்கும் வழங்கும் தண்டனையை வழங்க முடிவு செய்தான்.

வழக்கம்போல அரச சபையை அரசன் கூட்டினான். சமையல் கலைஞன் தவசுவை குற்றவாளி கூண்டில் ஏற்றினான்.

அப்போது தவசு, அரசே எனக்கு வயதாகிவிட்டது. ஞாபக மறதியால் உணவில் உப்பு போட மறந்துவிட்டேன். அது தவறுதான். மன்னித்து விடுங்கள்.

மனிதனும் மிருகமும்

40 ஆண்டுகளாக உங்கள் இல்லத்தில் சமையல் கலைஞனாக இருந்து வந்திருக்கிறேன். அதனால் எனக்கு குறைந்த தண்டனை தாருங்கள். சிங்கத்திடம் என்னை இரையாக்க வேண்டாம் என்று கெஞ்சினான்.

அரசன், தவசுவின் குற்றத்துக்கு குறைவான தண்டனை தர தயாராக இல்லை. தவசுவை சிங்கத்துக்கு இரையாக்க உத்தரவிட்டான்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் மிகவும் வருந்தினார்கள். அரசனுக்கு பல ஆண்டுகளாக ருசியான உணவு சமைத்து கொடுத்தவனுக்கே இந்த தண்டனையை தருகிறானே. இவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லையா என்று பேசிக் கொண்டார்கள்.

மனிதனும் மிருகமும்

தவசு எவ்வளவோ மன்றாடி கேட்டும் பலனில்லை. காவலர்கள் தவசுவை பாதாள அறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் இருந்த கூண்டுக்குள் தள்ளிவிட்டு பாதாள அறையை சாத்தினார்கள்.

தினமும் சிங்கத்துக்கு பாதாள அறையின் மேலே இருந்த சன்னல் வழியாக மாமிச துண்டுகளை வீசும் காவலன் வழக்கம்போல் மாமிசத் துண்டுகளை வீசி வந்தான்.

ஒரு காலம் கடந்த நிலையில், பாதாள அறையில் வழக்கமாக சிங்கம் கர்ஜித்துக் கொண்டிருப்பது ஒரு வாரமாகவே குறைந்து போயிருந்தது. இதனால் காவலனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது.

அதனால் அவன் அந்த பாதாள அறை சன்னல் வழியாக உள்ளே குனிந்து பார்த்தபோது அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மனிதனும் மிருகமும் ஒரு மேடையில் அமர்ந்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான். ஆமாம்..

அங்கே ஒரு மேடையில் சமையல் கலைஞர் தவசு அமர்ந்திருந்தார். அவரது மடியில் சிங்கம் தலையை வைத்து படுத்திருந்தது. அதன் தலையை அவர் தடவிக்கொடுத்தபடி ஏதோ அதனிடம் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த காவலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வேகமாக பாதாள அறையை விட்டு வெளியேறி அரசனிடம் ஓடோடி வந்த காவலன், அரசே… என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. அந்த சமையல் கலைஞர் தவசு உயிருடன் பாதாள அறையில் இருக்கிறார். அந்த மனிதனும் மிருகமும் ஒன்றாக இருப்பதை நம்ப முடியவில்லை.

சிங்கம் அவரது மடியில் படுத்திருந்ததை என் கண்களால் பார்த்தேன் என்றான் படபடப்போடு.

இதைக் கேட்ட அரசன் சிரித்தான். உனக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா… சமையல்காரன் எப்போதோ சிங்கத்துக்கு இரையாகியிருப்பான். அவனுடைய எலும்புகள் மட்டும்தான் பாதாள அறையில் மிச்சம் இருக்கும்.

நீ எதையோ பார்த்துவிட்டு உளறுகிறாய் என்று சொன்னான். ஆனால் காவலனோ… அதை மறுத்து இல்லை அரசே நீங்களே அந்த அதிசயத்தை நேரில் பாருங்கள் என்று அழைத்தான்.

அதிர்ந்து போன அரசன்

சிங்கம் எப்படி தவசுவை விட்டு வைத்தது என்ற ஆச்சரியம் மேலிட, அரசன் பாதாள அறைக்கு சென்றான்.

அங்கு கம்பிகளுக்கு அப்பால் சமையல் கலைஞர் தவசு சிங்கத்தோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிசயித்தார்.

சமையல் கலைஞரை அருகே அழைத்த அவர், எப்படி சிங்கம் உன்னோடு உறவாடுகிறது என்று கேட்டார்.

நான் உங்கள் தந்தை உயிரோடு இருக்கும்போது இந்த பாதாள அறைக்கு வந்திருக்கிறேன். அப்போது இது மிகச் சிறிய குட்டியாக இருந்தது.

அதை சில நாள்களுக்கு நான் பராமரித்து வந்தேன். அதன் பிறகு அதனுடைய மூர்க்க குணத்தைக் கண்டு இந்த பாதாள அறைக்குள் அடைத்தார்கள். அதன் பிறகு நான் இதை பார்க்கவில்லை.

மனிதனும் மிருகமும்

என்னை காவலர்கள் பாதாள அறைக்குள் தள்ளியபோது, அருகில் வந்த சிங்கம், பழைய நினைவுகளுடன் என்னை கொஞ்சி விளையாடியது.

ஒரு வாரமாக அதற்காக மேலிருந்து வீசப்படும் இறைச்சியை பக்குவப்படுத்தி கொடுத்து வருவதை அமைதியாக சாப்பிடுகிறது.

அது மிருகமாக இருந்தாலும், மனிதனைப் போல் நன்றி கெட்டு நடந்துகொள்ளவில்லை என்று சொன்னான் தவசு.

அரசன் தன்னுடைய தவறை உணர்ந்து அவனை விடுதலை செய்தான். அத்துடன் இனி எனக்கு சமையல்காரனாக இருக்க வேண்டியதில்லை.

இந்த சிங்கத்தை வெளியில் கொண்டு வருகிறேன். அதை பராமரிப்பவனாக இரு போதும் என்று சொல்லி பொன்னும், பொருளும் வாரிக் கொடுத்தான் அரசன்.

சிறுவனுக்கு ஓவியம் தந்த பரிசு

கிரிக்கெட் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் இவர்

84 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *