மனிதனை அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். மருத்துவத் துறை பல அரிய கண்டுபிடிப்புகள் மூலம் கடந்த பல பத்தாண்டுகளாக அச்சுறுத்தி வந்த ஆபத்தான நோய்களுக்கு தீர்வு கண்டிருக்கிறது.இந்த நிலையில் புற்றுநோய் விழிப்புணர்வு பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை தேவைப்படுகிறது.
ஆனால் பல பத்தாண்டுகளாக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டும் புற்று நோய்க்கான சரியான காரணங்களை இதுவரை மருத்துவத் துறை கண்டறியவில்லை.
ஆனாலும் மேலோட்டமான சில முக்கிய காரணங்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்.
உள்ளடக்கம்
அதிர்ச்சித் தகவல்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.61 லட்சமாக உள்ளது.
இது 2025-ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக உயரும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கணித்திருக்கிறது.
நாட்டில் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. ஆண்களில் பலருக்கு நுரையீரல், வாய் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இந்நோய் பாதிக்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
பெண்களுக்கு அதிகமாக மார்பகம், கருப்பை ஆகிய பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதையும் அந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.
குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய்ப்புற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சத்துக்கும் அதிகம் என ஏற்கெனவே மத்திய அரசு அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது.
வைரஸ் தாக்குதல்
நாட்டில் உயிர்கொல்லி நோய்களில் இதய நோய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை புற்று நோய் இடம் பிடித்திருக்கிறது.
உணவுப் பழக்கத்தால் வருவதோடு, வைரஸ் பாதிப்பு மூலமாகவும் இந்நோய் வரலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
கர்ப்பப்பை வாய், ஆண்குறி, குதப் பகுதி போன்றவற்றில் இந்நோய் வைரஸ் தாக்குதல் காரணமாக உருவாகின்றன. இந்த வகை வைரஸ்களுக்கு இப்போது தடுப்பூசிகளும் வந்துவிட்டன.
போலியோ தடுப்பூசிகள் போன்று வயது 9 முதல் 13 வயது வரையிலானவர்களை வரும் முன் காப்போம் என்ற நடவடிக்கையாக இத்தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள இப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் மக்களிடம் இல்லை.
உடல் எடை குறைக்க பாதுகாப்பான வழி
ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை
எந்த புற்று நோயாக இருந்தாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் உள்ளது.
இதனால்தான் 40 வயதைக் கடந்தவர்கள் கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
புற்றுநோய் விழிப்புணர்வு
புற்றுநோய் விழிப்புணர்வு இன்னமும் பாமர மக்களை முழு அளவில் சென்றடையவில்லை. படித்தவர்கள் மத்தியிலும் கூட இந்த நோய் ஆபத்தானது என்ற அளவுக்கு தெரிந்த அளவில் வராமல் தடுப்பதற்கான புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படவில்லை.