நல்ல முடிவு – நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு

வரவேற்கத் தக்க முடிவு
85 / 100

சென்னை: தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த முன்வடிவு மீதான செயலாக்கத்தை நிறுத்தும் நல்ல முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

ஒரு சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை எதிர்க் கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் சுட்டிக்காட்டும்போது அதை பெருந்தன்மையுடன் ஏற்று பின்வாங்குவது ஒன்றும் கௌரவத்துக்கு இழுக்கல்ல. அந்த வகையில் இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நல்ல முடிவு மக்களால், குறிப்பாக உழைக்கும் மக்களால் வரவேற்கத்தக்க விஷயமாகவே கருதப்படும்.

அண்மையில், தமிழ்நாடு அரசு அதன் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணிபுரியும் சட்டத் திருத்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

இது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட அதிர்ச்சியாக இருந்தது. தொழிலாளர் சங்கங்கள் அனைத்துமே கொதித்தெழுந்தன.

இந்த புதிய சட்டத் திருத்தம் தொழிலாளர்களின் எதிர்கால சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பலரும் சுட்டிக் காட்டினர்.

இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக நல்ல முடிவு ஒன்றை அறிவித்து தொழிலாளர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார்.

நல்ல முடிவு பாராட்டு

சட்டங்கள் இருந்தும் ஏற்கெனவே உழைப்புச் சுரண்டல்தான்

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்தம் கூட்டணிக் கட்சிகளை மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் புருவங்களையே உயர்த்தச் செய்திருந்தது.

இது திமுகவில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களை ஒரு தொழிலாளி ஸ்தானத்தில் இருந்து இந்த சட்ட மசோதாவை பார்க்கவில்லை என்றே தோன்றியது.

சுரண்டல்

ஏற்கெனவே 8 மணி நேர வேலை என்ற கடுமையான விதிகள் இருந்தபோதே தொழிலாளர் நலத்துறையின் சந்து, பொந்துகளில் முதலாளிகள் நுழைந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக பல இடங்களில் வேலை வாங்கி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் இந்த புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், அதிகாரப்பூர்வமாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதோடு, அவர்களின் குடும்ப சூழலையும் மாற்றிவிடும் அபாயம் இருந்தது.

பல்வேறு தரப்பினராலும், குறிப்பாக ஆளும் கட்சியிடம் பலன்களை எதிர்நோக்கி ஜால்ரா அடிப்பவர்களைத் தவிர மற்ற எல்லோருமே பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இன்றைய வேலை நேரச் சட்டங்கள்

இன்றைக்கு உள்ள தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் கூட முறையாக நடைமுறையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

குறைந்த ஊதியம் தந்துவிட்டு அதிக ஊதியம் தருவதாக சம்பளப் பட்டியல் தயாரிப்பது, வருகை பதிவேட்டில் 8 மணி நேர வேலை, ஓய்வு நேரம், முக்கிய நாள்களில் விடுமுறை என்று வருகைப் பதிவேடுகளில் மட்டுமே பல பெரும் நிறுவனங்களில் கூட கணக்குக் காட்டப்படுகிறது. இது தொழிலாளர் நலத்துறையில் நேர்மையாக பணிபுரிவோருக்கும், மனசாட்சியுடைய தொழிலாளர் நலத் துறை அலுவலர்களுக்கும், அத்துறை அமைச்சருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும். அத்துடன், இன்றைய சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி தெரியாது என்று யாரேனும் சொல்வார்களேயானால், நம் காதில் பூச்சுற்றுகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள்

தொழிலாளர் நலத்துறையின் 12 மணி நேர வேலை சட்டத் திருத்த முன்வடிவு மீதான செயலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ள முதல்வர், தற்போதைய சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை பாரபட்சமின்றி ஆய்வு செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிகை நிறுவனங்களில் நேர்மையான அதிகாரிகளை அனுப்பி வைத்து இந்த ஆய்வு செய்ய முன் வர வேண்டும்.

அப்போது தற்போதைய சட்டங்கள், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத நிறுவனங்களில் எப்படி முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கண்டிப்பாக வெளிவரும்.

கிடைக்கக் கூடிய சொற்ப ஊதியமும் பறிபோய்விடும் என்ற அவல நிலையில் இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள பல நிறுவனங்களில் கொத்தடிமைகளாய் பணிபுரிவோரை அடையாளம் காண முடியும்.

எங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் பலமாக இல்லையோ அங்கெல்லாம் தொழிலாளர்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையும் தெரியவரும்.

எது மக்கள் அரசு

இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்கள் அரசாக தொடர்வதற்கு மக்கள் நலன் சாராத விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது. மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில்தான் அது நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

மக்களுக்கு, குறிப்பாக, ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களில் தெரிந்தோ, தெரியாமலோ கவனச் சிதறல் ஏற்பட்டுவிட்டால், மக்கள் அரசு என்று மார்த்தட்டிக் கொள்ளும் உரிமை பறிபோய்விடும் என்பதை இப்போதாவது இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.

அரசின் நோக்கம்

அதேபோல், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து அகற்ற டெண்டர் பணிகள் உள்ளிட்ட மறைமுகமாக அரசியல்வாதிகள் ஆதாயம் பெறக் கூடிய விஷயங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்கான நல்ல முடிவு ஒன்றையும் எடுக்க வேண்டும்.

மக்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும், கலாசாரத்துக்கும், வாழ்வியலிலும் பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த சட்டத்தையும் கொண்டு வருவதில்லை என்ற தீர்மானத்தை இந்த அரசு எடுக்க வேண்டும்.

தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுச் செல்ல பல்வேறு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகள் இருக்கும்போது, அதை நோக்கி பயணிப்பதுதான் மக்கள் நலன் சார்ந்த அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

திராவிட மாடல்

5 ஆண்டுகளில் அதைக் கொண்டு வந்தோம், இதைக் கொண்டு வந்தோம் என்பதை விட, மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் அளித்துள்ளோம் என்ற பெருமையே ஒரு நல்ல அரசுக்கு போதுமானது.

அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற போக்கு இனிவரும் ஆண்டுகளிலாவது மாற வேண்டும்.

அப்போதுதான் உண்மையான திராவிட மாடல் அரசாக இந்த அரசு கம்பீரமாக மார்த்தட்டி சொல்லிக்கொள்ள முடியும் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.

85 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *