சென்னை: மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல் முடிந்து 2-ஆம் கட்ட தேர்தல் பரப்புரை நிறைவுறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கள் சர்ச்சைக்குரியவையாக உருவெடுத்திருக்கின்றன.
இத்தகைய வெறுப்புணர்வு பேச்சுக்களை பிரதமர் மோடி தோல்வி பயத்தில் பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்ச்சித்து பேசியிருக்கிறார்.
உள்ளடக்கம்
பிரதமர் பேசியது என்ன?
அந்த பிரசாரத்தில் “தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு விநியோகம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
“பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
இதில் உங்களுக்கு சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று மோடி பேசியிருக்கிறார்.
அத்துடன் அவர், ” காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினர். அதாவது சொத்துக்களை வசூலித்தப் பிறகு அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்?
அதிக குழந்தை பெற்றவர்களுக்கு நாட்டில் ஊடுருவியர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்கு சம்மதமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு அதைப் பற்றிய தகவல்களை பெற்று பின்னர் மன்மோகன் சிங் அரசு, சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னதைப் போல, பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
சகோதர, சகோதரிகளே இந்த அர்பன் நக்சல் எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்” என்றும் பிரதமர் பேசியிருக்கிறார்.
எதிர்க் கட்சிகள் கண்டனம்
மோடியினுடைய இந்தப் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை மோடிக்கு தெரிவித்திருக்கிறது.
கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உரையை மோடி திரித்து பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்ள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
மோடி அச்சத்தில் பேசுகிறார் – ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு பிறகு நரேந்திர மோடி பேசும் பொய்களின் தன்மை மிக மோசமாகியுள்ளது.
அச்சம் காரணமாக அவர் இப்போது பொதுமக்களுடைய கவனத்தை வேறுபக்கம் திசைத் திருப்புகிறார் என்று பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கைக்கு அபரிமிதமான ஆதரவு வரத் தொடங்கியிருக்கிறது.
நாடு தனது பிரச்னைகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கும். வேலைவாய்ப்பு, குடும்பம் மற்றும் எதிர்காலத்துக்குக வாக்களிக்கும். இந்தியா திசைத் திருப்பாது என்று தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா சமூக வலைதளங்களில் ஒரு விடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில் “நாட்டின் பிரதமர் இன்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற நீங்கள் பொதுமக்களிடம் பொய் சொல்கிறீர்கள். உங்கள் உத்தரவாதங்கள் பொய்.
உங்கள் அறிக்கைகள் பொய், உங்கள் வாக்குறுதிகள் பொய்யானவை” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
“இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துகிறீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்-இந்து வார்த்தைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்.
இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று தெரிவித்திருக்கிறார்.
“உங்களுக்கு முன் உங்கள் இருக்கையில் படித்தவர்கள் பலர் அமர்ந்திருக்கிறார்கல். அவர்கள் யாரும் உங்களைப் போல பொய் சொன்னதில்லை.
உங்களுக்குப் பிறகும் பல நல்லவர்கள் வருவார்கள். ஆனால் யாரும் இப்படி பொய் சொல்ல மாட்டார்கள்”.
“இப்படி பொய் சொல்லி நாட்டை பிளவுப்படுத்துவதற்கு ஒருவர் வெட்கப்பட வேண்டும். உங்கள் பொய்களால் மக்கள் எங்களின் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு அதில் இந்து என்று எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று தேடுகிறார்கள்.
இதுபோன்ற வார்த்தைகள் எங்கள் அறிக்கையிலும் இல்லை. எங்கள் மனதிலும் இல்லை. இந்த சமூகத்திலும் இல்லை” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீதி குறித்த பேச்சுதான் உள்ளது. இளைஞர்களுக்கு நீதி, பெண்களுக்கு நீதி, பழங்குடியினருக்கு நீதி, தொழிலாளர்களுக்கு நீதி என்று பேசப்படுகிறது.
அதில் பிரதமருக்கு ஆட்சேபனை ஏன். எங்கள் தேர்தல் அறிக்கை நீதியை சுட்டிக்காட்டுகிறது.
பிரதமர் வெட்கப்பட வேண்டும்
கடந்த 10 ஆண்டுகளாக இந்து முஸ்லிம் விளையாட்டை மட்டுமே மோடி செய்திருக்கிறார். அதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.
பிரதமர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை மாதமே உள்ள நிலையில், கண்ணியமாக ஓய்வு பெறுங்கள்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
“நாட்டில் ஜனநாயகம், அரசியல் சாசனம் ஆகியவை அழிந்தால் மக்களுக்கு எதுவும் மிச்சம் இருக்காது. அம்பேத்கரும், ஜவஹர்லால் நேருவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாக்குரிமை அளித்தனர்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மரியாதை அளித்தனர். ஆனால் நரேந்திர மோடி ஏழைகளின் உரிமைகளை பறிக்க விரும்புகிறார்” என்று பேசியிருக்கிறார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி., “பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக இருப்பது துரதிர்ஷ்டம், அதைவிட பெரிய சோகமானது இந்திய தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக உயிருடன் இல்லாதது.
பிரதமர் மோடி தோல்வி பயத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன்சிங் பேசியதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்து அதை பொருத்தமற்ற சூழ்நிலையில் பயன்படுத்தியிருக்கிறார்.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பணிந்து செல்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருக்கிறார்.
மன்மோகன் பேசியது என்ன?
மன்மோகன்சிங் 2006-ஆம் ஆண்டில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நிகழ்த்திய ஆங்கில உரையில் குறிப்பிட்டதாவது:
“விவசாயம், நீர்ப்பாசனம், நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளில் முதலீட்டின் தேவை ஆகியன நம் கூட்டு முன்னுரிமைகள்.
பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் முக்கியமானவை.
பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். புதியத் திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் முன்னேற்றம் காணவும், வளர்ச்சியின் பலன்களை பெறவும் பாத்தியதை உண்டு” சொல்லியிருக்கிறார் மன்மோகன்சிங்.
மன்மோகன் சிங் பேசிய மறுநாளே அவரது பேச்சு சர்ச்சையாக்கப்பட்டதை அடுத்து உடனடியாக பிரதமர் அலுவலகம் ஒரு விளக்கம் அளித்தது. தில், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், பிரதமர் பேசியது வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ரதமரின் கருத்துக்கள் சில மின்னணு ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்டதை அடுத்து இந்த ஆதாரமற்ற சர்ச்சை எழுந்திருக்கிறது என்று தெரிவித்து அன்றைய தினத்தில் மன்மோகன் சிங் பேசிய பேச்சின் முக்கியமான பகுதி மீண்டும் வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் மவுனம்
பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த கருத்தும் சொல்ல மறுத்துவிட்டது.
தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த, தலைமை தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளரிடம், பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.