தெய்வம் எப்போது துணை நிற்கும்? – திருக்குறள் கதை 35

86 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் ஒருவருக்கு தெய்வம் எப்போது துணை நிற்கும்? என்ற கேள்விக்கு விடைத் தரும் சிறு கதையும், திருக்குறள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 35

காலை நேரம். அன்றைய நாளிதழ்களை படித்துவிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து சாலையில் போவோரையும், தூரத்தில் மரத்தில் அமர்ந்து தனது இனிய குரலை எழுப்பிக் கொண்டிருந்த குயிலின் குரலையும் ரசித்தபடியே அமர்ந்திருந்த தர்ம நாதரைத் தேடி விமலை வந்தார்.

தர்ம நாதர் விமலையைக் கண்டதும், வாம்மா… எப்படி இருக்கிறாய். பார்த்து வெகு நாளாகிவிட்டதே? எங்கே என் நண்பர் வரவில்லையா? என்று கேட்டார்.

காலை நேரத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. அவர் திரும்ப வீட்டுக்கு வெயிலில் போக முடியாது என்பதால் வரவில்லை என்றாள் விமலை.

அண்ணா… ஒரு சந்தேகம். நமக்கு தெய்வம் உதவி செய்யுமா? என்று கேட்டார்.

இதைக் கேட்டதும், தர்ம நாதர் வாய்விட்டு சிரித்தார். நல்ல கேள்வி கேட்டாயம்மா… இதற்கு ஒரு கதையுடன்தான் உனக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

திண்ணையில் உட்கார்… அந்த கதையை கேட்டுவிட்டு போ என்றார் தர்ம நாதர்.

ஏழ்மையில் ஆடு மேய்ப்பவன்

வறுமையில் வாடிய ஒருவனுக்கு தெய்வம் துணை நின்ற கதைதான் இது. அவனுடைய பெயர் கோவிந்தன். சிம்மபுரம் என்ற ஊரில் வசித்து வந்தான்.

ஒரு நாள் அவன் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். அப்போது அவன் சமாதி குப்தர் என்ற முனிவரைக் கண்டான்.

அவரை கண்ட அவனுக்கு அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவர் அருகே சென்று வணங்கினான்.

முனிவரிடம் ஆசிர்வாதம்

முனிவரே… பிறந்தது முதல் ஏழ்மையில் நான் வாடுகிறேன். என்னுடைய ஏழ்மையை போக்க ஏதேனும் ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவனுடைய கேள்வியை கேட்ட அவர் மௌனமாக புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து உனக்கு தர்மலாபம் உண்டாகட்டும். செல்வமும், சொல் வலிமையும், தோள் வலிமையும் உண்டாகட்டும்.

அவற்றால் கொடை உள்ளம் கொண்டு நீ அனைவரையும் காப்பாறுக.

நீ தர்மம் செய்வதை பழகிக் கொள். தர்மம் செய்வதை எக்காரணம் கொண்டும் நிறுத்திக் கொள்ளாதே என்று ஆசிர்வதித்தார்.

நீ சமண ஆகம நூல்களில் ஒன்றாக விளங்கும் பக்தா மர சுலோகங்கள் 31, 32 ஆகியவற்றை தொடர்ந்து படித்து வருக. அதனால் உனக்கு புண்ணிய பலன் கிட்டும் என்று சொல்லி அனுப்பினார்.

அன்னையின் அருள்

முனிவரின் வாக்கை பின்பற்றத் தொடங்கினான் கோபாலன். அவன் தொடர்ந்து ரிஷபநாத பகவானை பூஜித்து வந்தான்.

அவனுடைய விடா முயற்சியையும், சிரத்தையையும் கண்ட சக்ரேஸ்வரி அம்மன், அவன் முன்னே தோன்றினாள்.

கோபாலனே… உன் பக்தியை மெச்சினோம். நீ விரைவில் இந்நாட்டின் அரசனாவாய். தர்ம காரியங்களை செய்து மென்மேலும் நற்பதவிகளை அடைவாய் என்று ஆசிர்வதித்து மறைந்தாள்.

கோபாலன் தன்னுடைய நித்திய கடமைகளை தவறாமல் செய்து வந்தான்.

மாலை சூட்டிய பட்டத்து யானை

ஒரு நாள் அந்த நாட்டின் அரசன் திடீரென இறந்து போனான். அவனுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதை அறிந்து அண்டை நாட்டு மன்னன் போர் புரிய படைகளோடு புறப்பட்டான். இக்கட்டான நிலையில் அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்.

தெய்வத்தின் முன் திருவுளச் சீட்டு குலுக்கி போட்டனர். பட்டத்து யானை மூலம் ஒரு தகுதியானவனை நாட்டு அரசனாக தேர்வு செய்யுமாறு தெய்வக் கட்டளை வந்தது.

அதன்படி, பட்டத்து யானையிடம் மலர் மாலையை கொடுத்து நகரை வலம் வரச் செய்தார்கள்.

அந்த நேரத்தில் கோபாலன் எந்த சிந்தனையும் அற்று ரிஷபர் படிமைக்கு பூஜை செய்துக்கொண்டிருந்தான்.

இதைக் கண்ட பட்டத்து யானை அவனுடைய கழுத்தில் மாலையை போட்டது. அதையடுத்து அமைச்சர்களும், மக்களும் அவனை வரவேற்று அரியாசனத்தில் அமர வைத்தார்கள்.

பக்தி சொற்பொழில் ஒரு தகவல்

படை திரண்டு வந்த அண்டை நாட்டு அரசனை தன்னுடைய விவேகத்தால் சாதுர்யமாக படைகளை நடத்தி வெற்றி கண்டான் கோபாலன்.

எல்லாம் ஏதோ ஒரு மாயாஜாலம் போல் நடந்தது. இது கோபாலனுக்கு மட்டும் நடக்கும் மாயாஜாலம் அல்ல.

இந்த பூமியில் எவன் ஒருவன் பலன்களை எதிர்பாராது, தர்ம காரியங்களில் ஈடுபடுகிறானோ, அவனையே தெய்வம் ராஜ பதவியில் அமர வைக்கும்.

திருக்குறளும், அதன் விளக்கமும்

குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்

(குறள்- 1023)

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்யும் ஒருவனின் செயலுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு (சொல் வழக்கில் – கச்சைக் கொண்டு) உதவ முன்வந்து நிற்கும் என்பதுதான் இதன் பொருள் என்றார் தர்மநாதர்.

அண்ணா, இன்றைக்கு ஒரு நல்ல சிந்தனையைத் தூண்டும் கதையையும், குறளையும் கேட்கும் வாய்ப்பு உங்களை சந்தித்ததால் கிடைத்தது. மகிழ்ச்சி.

நானும் இறைவனின் துணை நாடி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று சொல்லி விடை பெற்றாள் விமலை.

திருக்குறள் கதைகள் 34 – எது வலிமை?

பக்தி சொற்பொழிவில் இடம்பெற்ற தகவல் பலகை (நகைச்சுவை)

கேள்வியும் பதிலும்

திருக்குறள் ஆசிரியரின் சிறப்பு பெயர்கள் எவை?

குந்தக் குந்தர், தேவர், நாயனார், தெய்வப் புலவர், செந்நாப்போதகர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி

திருக்குறள் எத்தனை அதிகாரங்களை உடையது

133 அதிகாரங்களைக் கொண்டது திருக்குறள்

ஒரு அதிகாரத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன?

ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டிருக்கிறது.

எத்தனை குறட்பாக்களைக் கொண்டது?

1330 குறட்பாக்களைக் கொண்டது திருக்குறள்.

எத்தனை மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது?

120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

திருக்குறளை முதலில் அச்சில் பதிப்பித்தவர் யார்?

கி.பி.1812-ஆம் ஆண்டில் தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர், மரத்தால் ஆன அச்சு எழுத்துக்களைக் கொண்டு திருக்குறளையும், நாலடியாரையும் அச்சு நூலாக வெளியிட்டார்.

86 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply