திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?

திருப்பதி லட்டு விவகாரம்
85 / 100


சென்னை: திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் பிரசாதம் லட்டு. இதை திருப்பதி லட்டு என்று எல்லோரும் பக்தியோடு அழைப்பது வழக்கம்.

அந்த லட்டை இனி பக்தர்கள் நம்பிக்கையுடன் வாங்கி சாப்பிடலாமா? என்ற கேள்வி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களிடம் எழுவது இயற்கை.

இதற்கு காரணம், திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்த தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.

தேவஸ்தானம் சொல்வதென்ன?

பக்தர்களின் சந்தேகத்திற்கான பதிலை தற்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலராக பொறுப்பேற்றிருக்கும் செயல் அலுவலர் ஜே. சியாமள ராவ் தெரிவித்திருக்கிறார்.

அவர் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது இதுதான்.

வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுதி செய்யும்.

புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

தேவஸ்தானத்துக்கு 5 ஒப்பந்ததாரர்கள் நெய் விநியோகம் செய்து வந்தனர். அவர்கள் கிலோ நெய் விலையை மிகவும் குறைத்து தருவதை பார்க்கும்போது அவை தூய நெய்யை வழங்குவதற்கான சாத்தியமானதாக தெரியவில்லை.

அதனால் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதும் நெய் மாதிரிகள் எடுக்கப்பட்டு வெளி ஆய்வகங்களுக்கு தர பரிசோதனைக்கு அனுப்பியது.

அதில் ஒரு விநியோகஸ்தர் அனுப்பிய 4 டேங்கர்கள் நெய் தரமற்றவை என்பது ஆய்வில் தெரியவந்தது.

அந்த ஆய்வின்படி, சோயா பீன்ஸ், சூரியகாந்தி, பனை கர்னல் கொழுப்பு அல்லது பன்றிக்கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது..

தரமற்ற நெய் விநியோகம் செய்த தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர தீர்வாக நவீன தர பரிசோதனை கருவிகள் விரைவில் இங்கேயே நிறுவப்படும்.

லட்டு தயாரிக்கும் மூலப் பொருள்களின் தரத்தை உறுதி செய்து, லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை காக்க தேவஸ்தானம் முழு கவனம் செலுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அவரது வாக்குறுதியின்படி, தற்போதைய நிலையில், கலப்படமற்ற தரமான நெய்யினால் தற்போது திருப்பதி லட்டு தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதனால், திருப்பதி சென்று லட்டு பிரசாதம் வாங்கும் பக்தர்கள் எந்த தயக்கமும் இன்றி சாப்பிடலாம்.

திருப்பதி கோயில் பிரசாத வரலாறு

13-14-ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பல்வேறு உணவு வகைகள் வழங்கி வந்திருக்கிறார்கள்.

இரண்டாம் தேவராயர் காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கான மூல உணவுப் பொருள்கள் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

அதையடுத்து அப்பம், வடை, உள்ளிட்ட பல உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எந்த போக்குவரத்து வசதியும் இல்லாத அந்த காலத்தில் பக்தர்களுக்கு இந்த உணவுதான் அவர்களை பசியாற வைத்தது.

கி.பி.1445-ஆம் ஆண்டு வாக்கில் வழங்கப்பட்டு வந்த உணவு வகைகள் விரைவில் கெட்டு விடுவதை அறிந்த கோயில் நிர்வாகம், அப்பத்துடன், கய்யம் என்ற நீண்டநேரம் கெடாத இனிப்பு வகையை வழங்கத் தொடங்கியது.

அடுத்து வடை, அதிரசம், மனோகரம் என்ற இனிப்பு போன்றவையும் பிரசாதமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பிரசாதங்களை அக்காலத்தில் திருப்பொங்கம் என்று அழைத்தார்கள்.

1715-ஆம் ஆண்டில் ஏழுமலையான் பக்தர் ஒருவர் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து பெருமாளுக்கு கொண்டந்தா என்ற 1000 பெரிய லட்டுகளை படைத்தார்.

இவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதை எல்லோரும் விரும்பி சாப்பிட்டதை கோயில் நிர்வாகம் அறிந்து, 1803-ஆம் ஆண்டு முதல் இனிப்பு பூந்தியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கத் தொடங்கியது.

அத்துடன் பிரசாதங்களை விற்பனை செய்யும் முடிவும் எடுக்கப்பட்டு ஸ்ரீவாரி பிரசாத விற்பனைக் கூடம் திருமலையில் தொடங்கப்பட்டது.

1932-இல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் என்ற பெயரில் ஒரு தனி நிர்வாகம் நிறுவப்பட்டு, அதன் பராமரிப்பில் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது.

சுவையான திருப்பதி லட்டு பிரசாதம்

காஞ்சிபுரம் பூதேரி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணம் அய்யங்கார் ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டி தன் குடும்பத்துடன் திருமலைக்கு சென்றார்.

அவர் அங்கேயே தங்கி, பெருமாளுக்குத் தேவையான அன்றாட பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

1940-இல் அவர் தயாரித்த சிறிய லட்டு பிரசாதம் தேவஸ்தானம் கல்யாண உற்சவத்தின்போது, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அந்த லட்டின் அலாதி சுவை பக்தர்களை ஈர்த்தது.

இதையடுத்து 1943-ஆம் ஆண்டு முதல் சனிக்கிழமைதோறும் ஏழுமலையான் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு சிறிய அளவிலான லட்டு பிரசாதமாக வழங்குவது வழக்கமானது.

லட்டு தயாரிப்பு திட்டமும், குழுவும்

கல்யாண அய்யங்கார் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழு லட்டு தயாரிப்புக்காக அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பெயர் மிராசி.

பக்தர்களுக்கு நாள்தோறும் பெருமளவில் லட்டு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இந்த லட்டு தயாரிப்புக்கு விகிதாச்சார அடிப்படையில் பொருள்களை சேர்க்கும் திட்டத்தை கல்யாணம் அய்யங்கார் உருவாக்கினார்.

விகிதாசாரப்படி லட்டு மூலப்பொருள்கள்

இந்த லட்டுவை தயாரிக்க 51 பொருள்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 5100 லட்டுகள் பிடிப்பதற்கு படி என்ற முறையை கொண்டு வந்தார்கள்.

அதன்படி, 185 கிலோ பசும் நெய், 200 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரிப் பருப்பு, 17.5 கிலோ உலர்ந்த திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் என இந்த விகிதாசாரம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மூலப் பொருள்களின் எடை 852.50 கிலோ. இதையே படி என்கிறார்கள்

லட்டு தயாரிப்பு கூடம்

இந்த லட்டு பிரசாதம் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னை வகுளா தேவியின் நேரடி பார்வையில் பொட்டு என அழைக்கப்படும் மடப்பள்ளி அறையில் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டார்கள்.

இங்கு தன் மகனுக்கு தயாரிக்கப்படும் பிரசாதங்களை தாயார் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம்.

நாளடைவில் லட்டு விற்பனை லட்சக்கணக்கை எட்டியதால், ஆலயத்தின் உள்ளே மட்டுமின்றி வெளியிலும் லட்டு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1995-ஆம் ஆண்டு இறுதி வரையிலும் லட்டு தயாரிப்பு மிராசிகள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1996-ஆம் ஆண்டில் இந்த நடைமுறை மாற்றப்பட்டது. திருப்பதி தேவஸ்தானமே லட்டு தயாரிப்புப் பணியை மேற்கொள்ளத் தொடங்கியது.

இப்போது லட்டு தயாரிப்பு கூடம் ஒரு நாளைக்கு 8 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. 200 சமையலர்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை பொட்டு கார்மீகலு என்று அழைக்கிறார்கள்.

பிரசாதமாக 3 வகை லட்டுகள் தயாரிப்பு

இப்போது திருமலையில் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்த லட்டு என 3 விதமாக லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது பக்தர்களுக்கு இலவசமாகவும், விற்பனை வழியாகவும் வழங்கப்படுவதுதான் புரோக்தம் லட்டு அல்லது புரோகிதம் லட்டு என்கிறார்கள். இதன் எடை 175 கிராம்.

திருப்பதி லட்டு பிரசாதம்

ஆஸ்தான லட்டு முக்கிய விழாக் காலங்களில் மட்டும் தயாரிக்கப்படும். இது முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த லட்டின் எடை 750 கிராம். இதில் அதிகமாக முந்திரி, பாதாம், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்க்கிறார்கள்.

கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக தயாரிக்கப்படுவதுதான் கல்யாண உற்சவ லட்டு. இதன் எடை 750 கிராம்.

புவிசார் குறியீடு

திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் திருப்பதி லட்டு பெயரில் வேறு யாரும் தயாரிக்க முடியாது.

கோயிலுக்கு தற்போது வழக்கமான நாள்களில் 75 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள். விசேஷ காலங்களில் இதன் எண்ணிக்கை இரு மடங்காக உயர்கிறது.

இதனால் நாள்தோறும் ஸ்ரீவாரி பிரசாத கூடத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையாகின்றன.

திருப்பதி லட்டு பிரசாதத்தை இடைத் தரகர்கள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது திருப்பதி தேவஸ்தானத்துக்கு தெரியவந்தது.

அதையடுத்து ஆதார் அட்டையை காண்பித்த பிறகே லட்டு பிரசாதத்தை பெறக் கூடிய நிபந்தனை சமீபகாலமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வில் தரமற்ற நெய்

இப்படி பாரம்பரியமான வரலாற்றைக் கொண்ட லட்டு தயாரிப்பில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரால் ஆந்திர மாநில அரசியலில் புயல் வீசுகிறது.

லட்டு தயாரிப்பு பொருள்கள் அனைத்தும் ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுகின்றன. இது தேவஸ்தானத்துக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள்.

ந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தரமற்றது என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து கோயில் அதிகாரிகள், பொட்டு பணியாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, நந்தினி நெய் வழங்குவதற்காக கர்நாடக பால் கூட்டமைப்புடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது..

இதன்படி இவ்வாண்டில் மட்டும் அது 350 டன் நெய்யை ரூ.470 விலைக்கு கொள்முதல் செய்யவுள்ளது.

முதல்வர் பேச்சால் ஏற்பட்ட பரபரப்பு

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது சுத்தமான நெய் மூலம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் அதன் தரம் மேம்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தரமற்ற நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் சோதனை செய்ததற்கான ஆவணத்தை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்னம் வெங்கட ரமணா ரெ்டி செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.

அந்த ஆவணத்தின்படி, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணை உள்ளிட்டவை திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகள் கருத்து

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அரசியல் ஆதாயத்துக்கான முயற்சியாக திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை கேள்விக்குறியாக்கியிருப்பதாக அக்கட்சி கூறியுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, இது மிகவும் தீவிரமாக பிரச்னை. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியது.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் கோயிலை வைத்து மோசமான அரசியல் செய்வதாகவும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

திருப்பதி லட்டு தரத்தில் கவனம்

இதைத் தொடர்ந்து அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் சியாமள ராவ், புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையை திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுதி செய்யும். தரமற்ற நெய்யை விநியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

சிக்கலில் சிக்கிய தமிழ்நாட்டு நிறுவனம்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு தரமற்ற நெய் விநியோகம் செய்ததாக ஆய்வு மூலம் சுட்டிக் காட்டப்பட்டு, கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது தமிழ்நாடு, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. “கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே நாங்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை நெய் அனுப்பினோம். தற்போது நெய் அனுப்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

தேவஸ்தானத்துக்கு நெய் அனுப்பும் முன் தரக்கட்டுப்பாட்டுத் துறை மூலம் ஆய்வு செய்திருக்கிறோம்.

இந்த பிரச்னை குறித்து தேவஸ்தானத்தில் இருந்து கேள்வி எழுப்பியபோதே, எங்கள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளையும் அனுப்பியிருக்கிறோம்.
இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தரத்தை நிரூபிக்க சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

ஹேமா கமிட்டி அறிக்கையும் உயர்நீதிமன்றத்தின் கேள்வியும்

திருமலை லட்டு பிரசாதமும் அதன் வரலாறும் – விடியோ தகவல்

85 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *