தமிழ்த் தாய் வாழ்த்து கடந்து வந்த கடினமானப் பாதை!

தமிழ் அன்னைக்கு தமிழ்த் தாய் வாழ்த்து
84 / 100

சென்னை: தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் “தெக்கணமும் அதற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடுபட்டு போனது மிகப் பெரிய சர்ச்சையையும், தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்திருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்த் தாய் வாழ்த்து தமிழ் நாடு அரசின் அதிகாரப்பூர்வ பாடலாக மலர்ந்தது எப்படி? அது யாரால், எப்போது எழுதப்பட்டது? அந்த பாடலில் இடம்பெற்ற வரிகளில் சில வரிகள் ஏன் நீக்கப்பட்டன?

இந்த வரிகளை நீக்கியது யார்? போன்ற விஷயங்களை அறிந்துகொள்வது நல்லது. அது பற்றித்தான் விரிவாக இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது.

இப்போதைய சம்பவம்

சென்னையில் தூர்தர்ஷன் டிடி தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்தி மாத நிறைவு விழா நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (18.10.24) நடைபெற்றது.

அப்போது வாய்ப்பாட்டாக பாடப்பட்டபோது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரி விடுபட்டது.
இது தற்செயலாக விடுபட்டதாக தோன்றினாலும், அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பேசிய உரையால் இந்த தமிழ்த் தாய் வாழ்த்து வரிகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.
இதனால் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விஷயம் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில், நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் ஆளுநர் இழிவுபடுத்துகிறார்.
தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.
திமுக ஆதரவு கட்சிகளும், எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கூட இந்த விவகாரம் தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

மன்னிப்பு கோரிய தூர்தர்ஷன்

இந்த நிலையில், தூர்தர்ஷன் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார்.

தமிழையோ தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை,
இதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக எக்ஸ் தளப் பக்கத்தில் அந்த அறிக்கை இடம்பெற்றது.
இந்த அறிக்கை யாருடைய கையெழுத்தும் இல்லாததோடு, தேதியும் குறிப்பிடப்படாமல் இருந்தது.

கடந்த காலத்தில்

2018-இல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் போனதும்கூட தமிழகத்தில் மிகப் பெரிய பேசுபொருளானது.
2018 ஜனவரி 24-ஆம் தேதி தமிழ் சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை.
இதனால் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை எழுப்பினார்கள். காஞ்சி மட சங்கராச்சாரியாரை கண்டித்து நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான ஒரு வழக்கு கடந்த 2021 டிசம்பர் 10-ஆம் தேதி உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவில், “தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ்ld தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியீடு

இந்நிலையில் தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு அதிரடி அரசாணையை வெளியிட்டது.
அந்த அரசாணைப்படி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்பதுதான் இந்த அரசாணை. மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்பதற்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டது.
அத்துடன், பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைத் தட்டுகளை இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் பாட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியது.
இந்த பாடல் மோகன ராகத்தில் மூன்றன் நடையில் 55 வினாடிகளில் பாடப்படவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த அரசாணையால், அனைத்து அரசு தொடர்பான நிகழ்வுகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை

சிறப்புமிக்க தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அவர், 1891-ஆம் ஆண்டில் மனோன்மணியம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.


அந்த நூலில் தமிழ் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் 12 வரிப் பாடலாக இடம்பெற்றிருந்த பாடலின் ஒரு பகுதிதான் இன்றைய தமிழ்த் தாய் வாழ்த்தாக இருக்கிறது.

தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

அண்ணா, கருணாநிதி காலத்தில்

1913-ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து அடுத்த ஆண்டே அந்த தமிழ் சங்கக் கூட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ் தெய்வ வணக்கம் தலைப்பில் இடம்பெற்ற 12 வரிகளைக் கொண்ட பாடல் பாடப்பட்டது. அந்த பாடல் இதுதான்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

1967-ஆம் ஆண்டு வரை இந்த பாடல் எந்த மாற்றமும் இன்றி தமிழ்ச் சங்க கூட்டங்களில் பாடப்பட்டு வந்தது.
இந்த பாடலை தமிழக அரசின் பாடலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன.
இந்த நிலையில், 1967-இல் ஆட்சி பொறுப்பேற்ற சி.என். அண்ணாதுரை, தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் பாடப்படும் இப்பாடலை பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடுவதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவரது மறைவுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற மு.கருணாநிதி, அப்பாடலில் ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளாக கருதப்பட்ட ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையா என்ற வார்த்தைகளை நீக்கினார்.
அத்துடன், தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழின் பெருமையை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இப்பாடல் அதிகாரப்பூர்வ தமிழ்த் தாய் வாழ்த்து பாடலாக அரசு நிகழ்ச்சிகளில் இனி பாடப்படும் என்று 1970 மார்ச் 11-ஆம் தேதி அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.

நீக்கப்பட்ட வரிகள் எவை, ஏன்?

கவிஞர் மணோன்மணியம் சுந்தரனார் பாடல் வரிகளில் முதல் 6 வரிகளும், கடைசி வரியும் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தப் பாடல்தான் இன்றளவும் அனைத்து அரசு விழாக்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் பாடப்படுகிறது.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையா

என்ற வரிகள்தான் கவிஞரின் பாடல் வரிகளில் இருந்து நீக்கப்பட்டவை.

தமிழ்த் தாயை வாழ்த்தும் நேரத்தில், மற்றொரு மொழியான ஆரியம் அழிந்ததை சொல்வது பொருத்தமாக இருக்காது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டதுதான் இப்போதைய தமிழ்த் தாய் வாழ்த்து.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

தங்க மழை பொழிய வைக்கும் துர்கா தேவி கோயில் மகிமை

திருப்பதி லட்டை பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?

84 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *