தன் குறை நீக்கு: திருக்குறள் கதைகள் 14

Thirukkural kathai 14
81 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் திருக்குறள் கதைகள் 14, மாற்றாரிடம் குறை காண்பதை விட தன் குறையை நீக்குவதே சிறந்தது என்ற கருத்தை மையப்படுத்தி அமைந்திருக்கிறது.

குறை காணும் மனிதன்

பெரும்பாலும் மனிதன் தன் குறைகளைக் காண்கிறானோ? இல்லையோ? மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடித்து பட்டியல் போடுவதில் அதிக கவனம் செலுத்துவான்.

செல்வம் மிகுந்தவன் அடுத்தவன் செல்வம் சேர்க்க முனைந்தால், அவனிடம் அதிகம் செல்வம் சேர்க்காதே.. தவறு என்று சொல்வான். ஆனால் தான் அதிக செல்வம் சேர்ப்பதை தவறு என்பதை உணர மாட்டான்.

எஜமானனும், வேலைக்காரனும்

ஒரு எஜமானன் தன்னுடைய வீட்டை விதவிதமான பொருள்களால் அழகுபடுத்தி வைத்திருந்தான். அவன் நடந்து செல்லும் பாதையில் ஒரு அழகிய கண்ணாடி ஜாடியை அழகுக்காக வைத்திருந்தான்.

ஒரு நாள் அவன் நடந்து செல்லும்போது அந்த கண்ணாடி ஜாடி மீது கால் பட்டு கீழே விழுந்து அதன் அடிபாகம் சேதமடைந்தது.

இதைக் கண்ட அவன், ஆத்திரத்தால் கூச்சல் இட்டான். வேலைக்காரனை கூப்பிட்டான். கண்ணாடி ஜாடி எப்போதும் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து இருந்திருக்கிறது.

அதனால்தான் என் கால் பட்டு கீழே விழுந்துவிட்டது. நீ துடைக்கும்போது அதை நகர்த்தி வைத்திருக்கிறாய். ஒரு வேளையையும் ஒழுங்காக நீ செய்வதே இல்லை என்று கடிந்து கொண்டான்.

தான் பார்த்து நடந்திருந்தால் அந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து சேதம் அடைந்திருக்காது என்பதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

பிடிவாதமாக அடுத்தவர் மீது பழிபோடும் எண்ணமே அவனிடம் மேலோங்கி இருந்தது.

மீண்டும் சேதமடைந்த ஜாடி

ஒரு நாள் வேலைக்காரனை எஜமானன் கூப்பிட்டான். ஏதோ வேலை செய்துகொண்டிருந்த அவன், அப்படியே போட்டுவிட்டு எஜமானனை நோக்கி ஓடி வந்தான்.

ஏற்கெனவே அடிபாகம் சேதமடைந்திருந்ததால், அந்த ஜாடி லேசான அதிர்வு ஏற்பட்டாலே கீழே விழும் நிலையில் இருந்தது.

வேலைக்காரன் ஓடி வந்ததால் ஏற்பட்ட அதிர்வில் மீண்டும் அது கீழே விழுந்து மேலும் சேதமடைந்தது.

இப்போது எஜமானன் என்ன சொன்னான் தெரியுமா?

தன் குறை நீக்கு - திருக்குறள் கதை 14

ஏண்டா நாயே… கண்ணை புறடியிலா வைத்திருக்கிறாய். ஆகாயத்தில் பறந்து வருவதுபோல் வருகிறாய். கீழே பார்த்து நடந்து வரக் கூடாது?

இப்போது அந்த விலை உயர்ந்த ஜாடியின் மூலை உடைந்து அதன் அழகே கெட்டுவிட்டது. இந்த மாத சம்பளத்தில் அந்த ஜாடிக்குரிய தொகையை பிடித்துக் கொண்டுதான் மீதித் தொகையைத் தருவேன் என கண்டிப்புடன் சொன்னான் எஜமானன்.

இப்படிப்பட்டவர்கள், எப்போதுமே பிறர் குற்றங்களை கண்டுபிடித்து குறை கூறுபவர்களாகவே இருப்பர். தன்னுடைய குறைகளை எண்ணிப் பார்க்க மாட்டார்கள்.

Annapoorani film issue

தன் குறையை உணர்ந்த அலெக்சாண்டர்

ஒரு முறை மாவீரன் அலெக்ஸாண்டரின் முன் கொள்ளைக்காரன் ஒருவனை அவனது காவலர்கள் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அவன் செய்த குற்றங்களைக் கேட்டான் அலெக்ஸாண்டர். அந்த கொள்ளைக்காரன் செய்த குற்றங்களை கணக்கில் கொண்டு தூக்குத் தண்டனை அளிக்கலாம் என அவனுடைய மந்திரி ஆலோசனை தெரிவித்தான்.

அப்போது, குற்றவாளியை நோக்கிய அலெக்ஸாண்டர், “நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? என்று கேட்டான்.

குடிமக்களை பாதிக்கும் குற்றங்களை செய்த நான் தண்டனைக்குரியவனே. நீங்கள் கொடுக்கும் தண்டனை எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதை சொல்லலாமா என்று அனுமதி கேட்டான்.

அலெக்சாண்டரும் அவனை சொல்ல அனுமதித்தான்.

உண்மையில், நீங்கள் செய்யும் வேலையை வேறு விதமாக நான் செய்தேன். நான் சிறிய அளவில் 4 அல்லது 5 வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பேன். நீங்களோ வேறொரு நாட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பீர்கள். இரண்டிலும் பாதிக்கப்படுவது மக்களே.

என்னை கொள்ளைக்காரன் என முத்திரையிட்டு தண்டனை வழங்கும் நிலையில், உங்களை பெரிய கொள்ளைக்காரன் என்று தானே மக்கள் நினைப்பார்கள்? என்று கேள்வியை எழுப்பினான்.

இதைக் கேட்ட அலெக்சாண்டருக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் சற்று யோசனையில் ஆழ்ந்தான். தன்னுடைய குற்றங்களை எண்ணிப் பார்த்து தான் செய்ததும் தவறு என்பதை அலெக்சாண்டர் உணர்ந்தான்.

திருக்குறள் சொல்லும் கருத்து

மந்திரி சொன்னது போல், அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதை கைவிட்ட மன்னன், சில மாதகாலம் சிறைத் தண்டனை அளித்து அவன் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தரலாம் என்று சபையில் அறிவித்தான்.

நாம் பிறர் குற்றங்களை பெரிதுபடுத்தி பார்ப்பதை கைவிட்டு, தன் குற்றங்களைக் களைவதே சிறப்பு என்பதைத்தான் இக்கதை உணர்த்துகிறது.

இதைத்தான் திருவள்ளுவர்,

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு

(குறள்- 436)

பாடல் மூலம் சொல்கிறார்.

அதாவது – தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கிக் கொண்டு, அதன் பின் பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டி, அவற்றை நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதுதான் அதன் பொருள்.

திருக்குறள் கதை மகாபாரதம் அர்ஜுனன் திறமை

81 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *