தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு – பின்னணியும் புரட்டுக் கதைகளும்!

தஞ்சாவூர் பெரிய கோவில்
85 / 100

தஞ்சாவூர் பெரிய கோயில் என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது பிரம்மாண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விமானமும், பரந்தவெளியில் அமைந்த திருக்கோயிலும்தான்.
தஞ்சாவூர் பெரிய கோயில் உள்நாட்டினரை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கூட தினந்தோறும் கவர்ந்து இழுத்து வருகிறது. இதற்கு காரணம் இதனுடைய புராதனமும், அழகிய நேர்த்தியான கட்டுமான அமைப்பும்தான்.

உள்ளடக்கம்

மறைக்கப்பட்ட ராஜராஜன் வரலாறு

தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்று பள்ளிச் சிறுவர்கள் கூட இன்றைக்கு சொல்லும் அளவுக்கு மாறியிருந்தாலும், 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கோயிலை கட்டியது ராஜராஜன் என்பது யாருக்கும் தெரியாது.
18-ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டியது கிருமிகண்ட சோழன், காடுவெட்டி சோழன் என்ற பெயர்களே சொல்லப்பட்டு வந்தன. அதுவரை இக்கோயிலை கட்டியது ராஜராஜன் என்று தெரியாமல் போனதோடு, சில புத்தகங்கள் தவறாகவும் அப்போது ஆவணப்பட்டன.
தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோயிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், ‘பிரகதீஸ்வர மகாத்மியம்’ என்ற நூலில் தகவல் இடம் பெற்றது. ‘கிருமி கண்ட சோழன்’ என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல்.
ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், தனது குறிப்பில் ‘காடுவெட்டிச் சோழன் என்பவனால் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டப்பட்டது’ என்று எழுதியிருந்தார்.

மீண்டெழுந்த ராஜராஜன் வரலாறு

1886-இல் இந்திய தொல்லியல் துறையின் ஒரு பிரிவாக கல்வெட்டியல் துறை தொடங்கப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த யூஜின் ஜூலியஸ் தியோடர் ஹுல்ஸ் (Eugen julius theodor Hultizsch) அதன் தலைமை கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் தென்னிந்தியாவில் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகளில் காணப்பட்ட எழுத்துக்களை படித்து Epigraphia indica என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார்.
எபிகிராஃபியா இன்டிகா நூலின் இரண்டாவது தொகுப்பில் தஞ்சாவூர் பெரிய கோயில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலை கட்டியது ராஜராஜ சோழன் என்பதை கல்வெட்டு ஆதாரங்களுடன் பதிவு செய்தார்.
1892-இல் தென்இந்தியக் கல்வெட்டுகள் என்ற தலைப்பிலான நூலை சென்னை மாகாண தலைமை கல்வெட்டு ஆய்வாளராக இருந்த வலையத்தூர் வெங்கய்யா வெளியிட்டார்.
அதில் தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் குறித்த தெளிவான குறிப்புகள் இடம்பெற்றன. அதன் பிறகுதான் இக்கோயிலை ராஜராஜன் கட்டியதை மக்கள் அறியத் தொடங்கினார்கள்.

நிசும்பசூதனி தேவி கோயில்

கி.பி.850-ஆம் ஆண்டில் விஜயாலயச் சோழன் என்பவன் முத்தரைய மன்னன் ஒருவனை தோற்கடித்து பிற்கால சோழ பேரரசை நிறுவினான். அப்போது தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகராக மாறியது.
சோழ வம்சத்தில், மதுராந்தகன் என்ற உத்தம சோழன் மறைந்த பிறகு, கி.பி.985-ஆம் ஆண்டில் ராஜராஜசோழன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
அப்போது, தஞ்சையில் சோழர் காலத்துக்கு முந்தைய தளிக்குளத்து மகாதேவர் கோயில், பிரம்மகுட்டம் கோயில் ஆகியவையும், விஜயாலயச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட நிசும்பசூனி தேவி கோயில் உள்ளிட்டவையே இருந்தன.
நிசும்பசூதனி தேவி சோழர்களின் வீரதெய்வமாகவும், வெற்றி தெய்வமாகவும் இருந்தாள். அதனால் சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு காலையில் சென்று வணங்கிய பிறகே தங்களுடைய பணிகளைத் தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.
இந்த கோயில் தஞ்சாவூர் எல்லைக்குள் கரந்தைக்கு அருகேயுள்ள பூமால்ராவுத்தன் தெருவில் இன்றைக்கும் இருக்கிறது. இக்கோயில் வடபத்ரகாளியம்மன் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுவதற்கான காரணம்

ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் சோழ ராஜ்ஜியம் அமைதியை தழுவியது. அவன் இறைத் தொண்டில் அதிக நாட்டம் கொள்ளத் தொடங்கினான். அப்போது அவன் காஞ்சிபுரத்தில் உள்ள ராஜசிம்மப் பல்லவன் கட்டிய கைலாசநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறான்.
அதேபோல் வேறு சில சிவன் கோயில்களுக்கும் சென்றிருக்கிறான். அப்போது தானும் ஒரு பிரம்மாண்ட கோயிலை சோழ நாட்டின் தலைநகராக விளங்கும் தஞ்சை கட்டுவது என தீர்மானித்திருக்கிறான்.
அதனால் அவன் தஞ்சையில் ராஜராஜீச்சரம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டும் பணியைத் தொடங்கியிருக்கிறான். இதை குடவாயில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கல் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது?

தஞ்சை பகுதி சமவெளிப் பகுதி. இப்பகுதியில் பாறைகளே இல்லாத நிலையில், அருகில் இருந்து பாறைகளை எடுத்து வர திட்டமிட்டிருக்கிறான்.
தஞ்சையில் இருந்து 75 கி.மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் பகுதியில் காணப்பட்ட குன்றுகளில் இருந்த ஒருவகை கற்களை கோயில் கட்ட தேர்வு செய்திருக்கிறான்.
அதைத் தொடர்ந்து அந்த கற்களை வெட்டி எடுத்து தஞ்சைக்கு கொண்டு வந்திருக்கிறான். இதுவும் கல்வெட்டு ஆய்வாளர்களின் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
குன்னாண்டார் கோயில் என்று அழைக்கப்படும் குன்றாண்டார் கோயில் பகுதியில் உள்ள பாறைகளில் காணப்படும் கற்களும், தஞ்சாவூர் பெரிய கோயில் கட்ட பயன்படுத்தப்பட்ட கற்களும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்திருப்பதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் ராஜராஜனால் கட்டப்பட்டவை எவை?

ராஜராஜன் சுற்றுச்சுவர் எழுப்பி, பெருவுடையார் கோயிலை நடுவிலும், அதன் வடபக்கத்தில் சண்டீசர் கோயிலை மட்டுமே கட்டியிருக்கிறான். அத்துடன் தற்போது சிதைந்து காணப்படக் கூடிய திருச்சுற்று மாளிகை என அழைக்கப்படும் மதிலுடன் கூடிய மண்டபங்கள் அக்காலத்தில் இரண்டு தளங்களாக கட்டப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
உயர்ந்த விமானத்துக்கு கீழே 11 அடி கனமுடைய சுற்றுச் சுவருடன் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் நடுவில் 13 அடி உயர பிரம்மாண்ட ராஜராஜேச்வரமுடையார் எனப்படும் லிங்கத் திருமேனி நிறுவப்பட்டிருக்கிறது.
இது 55 அடி சுற்றளவுள்ள வட்ட பீடமும், 6 அடி நீளமுள்ள கோமுகமும் கொண்ட லிங்க திருமேனியாக காட்சி தருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில் விமானம்

உள்கூடாக அமைந்த விமானம்

தஞ்சாவூர் பெரிய கோயில் விமானம் சதுரவடிவிலான 30.18 மீட்டர் பரப்பில் அமைந்த உயரமான மேடையின் மீது 216 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டிருக்கிறது.
கோயில் கட்டுமானத்தில் ஒரு கல்லுக்கும் மற்றொரு கல்லுக்கும் இடையில் எந்தவிதமான ஒட்டு பொருள்களும் பயன்படுத்தப்படவில்லை. கற்களை மிக நேர்த்தியாக இடைவெளியின்றி அடுக்கி மேலே கற்களின் எடை காரணமாக ஒட்டுமொத்த கட்டுமானமும் நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது.
கருவறையில் இருந்து அமைந்திருக்கும் விமானம் உள்கூடாக அமைக்கப்பட்டிருக்கிறது. லிங்கத்தின் மேற்பகுதியில் இருந்து உச்சி வரை அமைந்திருக்கும் இதை அறிவுப் பெருவெளி என்று அழைக்கிறார்கள்.
ராஜராஜன் இந்த கட்டுமானத்தை சிதாகாச வழிபாடு முறையில் அமைத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஓவியங்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் முதல் பிரகாரமான சாந்தாரச் சுற்றில் இறைவனின் இயக்கத்தை அடையாளப்படுத்தும் நடனத்தின் 108 கரணங்களில் 81 கரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதேபோல் கோயில் விமானத்தில் சாந்தாரச் சுற்றில் இரண்டு தளங்களில் பல வண்ண ஓவியங்களை ராஜராஜன் வரையச் செய்திருக்கிறான்.
பிற்காலத்தில் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சி காலத்தில் இந்த ஓவியங்களை மறைத்து புதிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஆய்வுகளில் இந்த உண்மை தெரியவந்ததை அடுத்து பழைய ஓவியங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

முதலில் மூலவர் பின்னரே கட்டுமானம்

கோயில் கருவறையில் பிரம்மாண்ட மூலவர் லிங்கத்தை முதலில் வைத்த பிறகுதான் விமானம் உள்ளிட்ட கட்டுமானங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பொன்கூரை எங்கே?

ராஜராஜ சோழன் காலத்தில் கோயிலின் பிரம்மாண்ட விமானம் முழுவதும் பொன்தகடுகளால் கவசமிடப்பட்டிருந்தது என்பதும் கல்வெட்டு ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. அதேபோல் கோயிலை பராமரிக்க ராஜராஜன் இன்றைய மதிப்பில் பல பில்லியன் டாலர் மதிப்புக்கு நன்கொடைகளையும் வாரி வழங்கியிருக்கிறான்.
அத்துடன் கோயிலை பராமரிக்கவும், நித்திய பூஜைகள், பாடல்கள், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெறும் வகையில் 700-க்கும் மேற்பட்ட கலைஞர்களையும் அவன் நியமித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
மொத்தத்தில் கோயில், மகுடாகமம் சுட்டிக்காட்டிய விதிகளின்படியே முறையாக கட்டப்பட்டிருக்கிறது என்பதும் தெரிகிறது.
ராஜராஜசோழன் ஆட்சி பொறுப்பேற்று 19 ஆண்டுகள் கழித்து இக்கோயிலை கட்டத் தொடங்கி 6 ஆண்டுகளில் நிறைவேற்றி 1010-ஆம் ஆண்டில் பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்திருக்கிறது.

காணாமல் போன ராஜராஜன் சிலை

ராஜராஜ சோழன், அவனுடைய பட்டத்து அரசி லோகமாதேவி ஆகியோர் உயிருடன் இருக்கும்போதே செப்புச் சிலைகள் உருவாக்கப்பட்டு, அவை கோயிலில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சிலைகள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காணாமல் போய் மீண்டும் அவை மீட்டெடுக்கப்பட்டன.

தலையாட்டி பொம்மையும் தஞ்சாவூர் பெரிய கோயிலும்

தஞ்சாவூரில் மட்டுமே விற்பனை செய்யப்படும் தலையாட்டி பொம்மை என்ற மண் பொம்மை ஒரு தொழில்நுட்பமிக்க பொம்மை. அதை எப்படி சாய்த்தாலும் சிறிது ஆடி தன் நிலையை அடைவதுதான் அதன் சிறப்பு
அதேபோன்ற தொழில்நுட்பமே தஞ்சை பெரிய கோயில் விமானக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதனால் மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள், நில அதிர்வு போன்றவை ஏற்பட்டாலும் நிலைகுலையாது அந்த கட்டுமானம் தன்னை தகவமைத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அரிய கலைப்படப்பாக விளங்கும் தஞ்சை பிரகதீசுவரர் கோவிலை உலகப் பாரம்பரியத் தளமாக 1987-இல் யுனெஸ்கோ அறிவித்தது.
இன்றைக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரை கவரும் ஒரு கலைக் கூடமாக திகழ்கிறது தஞ்சாவூர் பெரிய கோயில்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்

கோயில் விமானத்தில் இருப்பது 80 டன் எடையுள்ள ஒற்றைக் கல் என்று சொல்வது உண்மையா?

இல்லை. அரைவட்ட வடிவமாக காணப்படும் இது 6 கற்களைக் கொண்டது. ஆரஞ்சி பழச் சுளைகள் போல ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கப்பட்டது. இதை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆனால் நீண்டகாலமாக இது ஒற்றை கல் என்று சொல்வதோடு, அது பற்றிய இரண்டு கதைகளும் உலா வருகின்றன.
அழகி என்ற மூதாட்டி வீட்டு வாயிலில் மிகப் பெரிய கல் ஒன்று இருந்ததாகவும், அந்த கல்லின் நிழலில்தான் தான் இருக்க விரும்புவதாக ஈசன், ராஜராஜன் கனவில் வந்து சொன்னதாகவும், அதனால் அந்த மூதாட்டியை ராஜராஜன் சந்தித்து கல்லை பெற்று விமானத்தின் உச்சியில் வைத்தகாவும் சொல்லப்பட்டு வருவது உண்மைக்கு புறம்பான கதை.
அதேபோல் மற்றொரு கதையும் உலா வருகிறது. இடையர்குலத்தைச் சேர்ந்த மூதாட்டி அழகி சிவத்தொண்டு புரிய விரும்பினார். அதனால் அவர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட சிற்பிகளுக்கு தினமும் தயிர், மோர் ஆகியவற்றை வழங்கி சேவை செய்து வந்திருக்கிறார்.
இதை அறிந்த ராஜராஜன் அந்த மூதாட்டியின் இறைத் தொண்டை பாராட்டி, 80 டன் எடைக் கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து அதை விமானத்தின் உச்சியில் ஏற்றி வைத்தார் என்று சொல்லப்படுவதும் கற்பனைக் கதைதான்.


கோயில் கட்ட பல கி.மீட்டருக்கு சாரம் அமைக்கப்பட்டதா?

216 அடி உயரம் உடைய விமானத்தை கட்டுவதற்காக சாரப்பள்ளம் என்ற ஊரில் இருந்து ஒரே நேர்க்கோட்டில் சாரம் போன்று மண்மேடு அமைக்கப்பட்டதாக ஒரு கதை உலா வருகிறது. இதுவும் தவறு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
உயரமான இந்த கட்டுமானத்துக்கு எகிப்தில் பிரமீடுகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சுருள் சாய்வு தளப் பாதையே அமைக்கப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து அந்த சுருள் சாய்வு தளப் பாதை அகற்றப்பட்டிருக்கிறது. இதனுடைய எச்சம் சமீபத்தில்தான் அழிக்கப்பட்டது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கோயில் விமான நிழல் தரையில் விழாது என்று சொல்வது உண்மையா?

இதுவும் உண்மை அல்ல. கோயில் விமானத்தின் கலசம், சிகரம், கீர்த்தி முகம், இடபங்கள், உயர்ந்த கட்டுமானங்கள் ஆகியவற்றின் நிழல் எல்லா காலத்திலும் தெளிவாக நிலத்தில் விழுவதை எல்லோருமே பார்க்கலாம்.

பெருவுடையார் முன் உள்ள நந்தி வளர்ந்து வந்ததா?

பெருவுடையார் முன்பு உள்ள நந்தி தினமும் வளர்ந்து வந்ததாகவும், அதன் தலையில் ஆணி ஒன்றை அடித்து அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதாகவும் சொல்லி வருவதும் தவறாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தற்போது பெருவுடையார் முன்பு இருக்கும் பிரம்மாண்ட நந்தி ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. உண்மையில் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட நந்தி வராகி கோயில் அருகே திருச்சுற்று மாளிகையில் இருக்கிறது.
தற்போதுள் பிரம்மாண்ட நந்தி பிற்கால மன்னர்களால் கட்டப்பட்டது. இது 13 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்ட ஒரே பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. இன்று வரை இந்த நந்தியின் உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
இதேபோல் கோள்களின் கதிர்வீச்சுகள் கோயில் மத்தியில் குவிவதாக சொல்வதும் தவறு என்றும் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

அம்மன் சந்நிதி எப்போது கட்டப்பட்டது?

13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களில் ஒருவர் பெரியநாயகி அம்மன் சந்நிதியையும், தஞ்சை நாயக்க மன்னர் வம்சத்தை தோற்றுவித்த செவ்வப்ப நாயக்கர் என்பவர் சுப்பிரமணியர் சந்நிதியையும் கட்டியிருக்கிறார்கள்.
கோயிலை சுற்றியுள்ள அகழி, கோட்டைச் சுவர்கள், கொத்தளங்கள் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை.



தமிழ்த் தாய் வாழ்த்து கடந்து வந்த கடினமானப் பாதை!

எலுமிச்சை சாறு பற்றிய நம்பமுடியாத அதிர்ச்சித் தகவல்





85 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *