குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 25) ஒருவன் சொல்லாற்றல் மிக்கவனாய் இருந்தால் அவனை வெல்வது கடினம் என்பதை சொல்லும் சொல்லாற்றல் வலிது கதையும், குறளும் இடம் பெற்றிருக்கிறது.
உள்ளடக்கம்
முல்லா நசுருதீன்
வேகமாக ஓடி வந்த ஆனந்தன் தாத்தாவிடம் முல்லா நசுருதீன் என்பவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டான்.
ஏன் அவரைப் பற்றி கேட்கிறாய் என்றார் தாத்தா.
தாத்தா.. அவர் பேச்சாற்றலில் வல்லவர் என்று ஒருவர் என்னிடம் சொன்னார். அதனால்தான் கேட்டேன் என்றான் ஆனந்தன்.
உண்மைதான். முல்லா நசுருதீன் பேச்சாற்றலில் வல்லவராக இருந்தார். அவரைப் பற்றிய ஒரு நகைச்சுவை சம்பவத்தை சொல்கிறேன் கேள் என்றார் தாத்தா.
நகைச்சுவையா… உடனே சொல்லுங்கள் என்று ஆர்வத்தோடு தாத்தா அருகில் அமர்ந்தான் ஆனந்தன்.
முல்லாவை வம்புக்கு இழுத்தவர்கள்
முல்லா நசுருதீன் அறிவாற்றல் மிக்கவராக இருந்தார். பேச்சுத் திறமையும் அவரிடம் இருந்தது. இதனால் அவர் மீது பொறாமை கொண்டவர்களும் இருந்தார்கள்.
முல்லா அறிவாற்றல் மிக்கவரா என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. அவரை சோதிக்க சில கேள்விகள் கேட்க வேண்டும். அதனால் அவரை மேடை ஏற்றுங்கள் என்று முல்லாவுக்கு ஆதரவாக பேசியவர்களிடம் சொன்னார்கள்.
முல்லாவின் ஆதரவாளர்கள் அவரிடம் போய் உங்களுக்கு பிடிக்காதவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு முல்லா எதற்கு அவர்களோடு நாம் போராட வேண்டும். நான் அறிவற்றவன் என்று அவர்கள் நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே என்று அவர்களை சமாதானம் செய்தார்.
மேடை ஏறிய முல்லா
ஆனால் அவர்கள் யாரும் முல்லாவின் சமாதானத்தை ஏற்கத் தயாராக இல்லை. இதனால் முல்லா மேடை ஏறுவதற்கு ஒப்புக்கொண்டார். அப்போது அவருடைய எதிரிகள் சில தவறான கேள்விகளை கேட்பதற்காக ஒரு குழுவை அமைத்து தயாராக இருந்தார்கள்.
முல்லா அவர்களின் சூழ்ச்சியை புரிந்துகொண்டார். முல்லாவின் மேடையில் ஏறி பேசப் போகிறார் என்று கேள்விப்பட்ட மக்கள் அப்பகுதியில் ஒன்று திரள ஆரம்பித்தார்கள்.
முல்லா மேடை ஏறி எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தார். எதிரே காத்திருந்த மக்களைப் பார்த்து நான் என்ன பேசப் போகிறேன், எதைப் பற்றி பேசப் போகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.
வந்தவர்களோ தெரியும் என்றார்கள். உடனே முல்லா, தெரிந்தவர்களிடம் பேசுவது அழகல்ல. அது நல்லது அல்ல என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார்.
இதனால் எதிரிகள் கேள்வி கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்கள்.
மீண்டும் மேடை ஏறிய முல்லா
மறுநாளும் அவரை மேடைக்கு அழைத்தார்கள். சரி என்று மேடை ஏறினார். முல்லா மேடைக்கு வருவதற்குள், நேற்று கேட்ட அதே கேள்வியை முல்லா கேட்டால், தெரியாது என்று சொல்லுங்கள் என்று சொல்வதற்கு சிலரை தயார்படுத்தி வைத்திருந்தார்கள்.
மேடையேறிய முல்லா கூட்டத்தினரை பார்த்து, இன்று நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று தெரியுமா? என கேட்டார். பார்வையாளர்கள் தரப்பில் இருந்து தெரியாது சொன்னார்கள்.
உடனே அவர் தெரியாதவர்களிடம் பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும் என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார் . மீண்டும் கேள்வி கேட்க தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
விடாபிடியாக மூன்றாவது முறையாக அவரை மேடை ஏற்றினார்கள். இப்போதும் அவர், நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் எனத் தெரியுமா என்று கேட்டார்.
இப்போது கூட்டத்தினரிடையே குழப்பம். ஒருசிலர் தெரியும் என்றார்கள். ஒருசிலர் தெரியாது என்றார்கள்.
உடனே முல்லா, சற்றும் தாமதிக்காமல் தெரிந்தவர்கள் எல்லோரும் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாதவர்கள் எல்லோரும், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.
மூன்று முறை அவரை மேடை ஏற்றி வம்புக்கு இழுக்க தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து போனார்கள்.
சொல்லாற்றல் வலிது
சொல்லாற்றல் வலிது என்ற திருவள்ளுவர் சொல்லும் கருத்துடைய பாடலும் உண்டு.
சொலல்வல்லன் , சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
(குறள் – 647)
அதாவது சொல்வன்மை உடையவனாகவும், சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறார் திருவள்ளுவர் என்றார் தாத்தா.
வாசகர்கள் இந்த திருக்குறள் கதைகள் 25 பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவிடுவது எங்களுக்கு உதவியாக இருக்கும்.