சென்னை பத்திரிகையாளர் மன்றம் சந்தித்த சோதனைகளும், நம் எதிர்பார்ப்புகளும்!

85 / 100

சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) 52 ஆண்டுகளைக் கடந்தது. செயலிழந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.

சட்ட விதிகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மன்றத்துக்கு தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் பல்வேறு இடையூறுகள் காரணமாக இதற்கு 1999-க்கு பிறகு முறைப்படி தேர்தல் நடைபெறாமல் போனது.

இப்போது பல மூத்த பத்திரிகையாளர்களின் தொடர் முயற்சிகளின் விளைவாக புத்துயிர் பெற்றுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் டிசம்பர் 15-ஆம் தேதி தேர்தலை சந்தித்து புதிய நிர்வாகிகளை காணப் போகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்

இந்த மன்றம் நீண்ட வரலாறு கொண்டது. 1967-இல் திமுக ஆட்சி அமைத்தது. 1970-ஆம் ஆண்டில் அப்போதைய முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்து வந்த முரசொலி மாறன், ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் முன்னணி பத்திரிகையாளர் சாம் ராஜப்பா ஆகியோர் முயற்சியில் உதித்ததுதான் மெட்ராஸ் பிரஸ் கிளப்.
1972-இல் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி மெட்ராஸ் பிரஸ் கிளப்பை தொடங்கி வைத்திருக்கிறார்.
1978-ஆம் ஆண்டில் முரசொலி மாறன் மன்றத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கிறார். இதுதான் அவர் வகித்த முதல் பதவியும் கூட.
1996-ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றம் பெற்றது. அதைத் தொடர்ந்து மெட்ராஸ் பிரஸ் கிளப் பெயரும் “சென்னை பத்திரிகையாளர் மன்றம்” என மாற்றம் பெற்றது.

அத்துடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அதிகாரப்பூர்வ மறுப்பதிவும் 1997 ஆகஸ்ட் 27-இல் செய்யப்பட்டது.

தேர்தலை மறந்து போன மன்றம்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் (மெட்ராஸ் பிரஸ் கிளப்) துணை விதிப்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வர வேண்டும்.
அதன்படி, 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதியே சென்னை பத்திரிகையாளர் மன்றம் சந்தித்த கடைசித் தேர்தலாக அமைந்தது.
இத்தேர்தல் தொடர்பாக சிலர் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முறையான செயல்பாடுகள் முடங்கிப் போயின. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு 2005-இல் முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கான கட்டடம் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து 2005 ஆகஸ்ட் மாதத்தில் மூத்த பத்திரிகையாளர் என். ராம் தலைமையில் 13 பேர் கொண்ட பத்திரிகையாளர்கள் குழு உருவாக்கப்பட்டது.

மன்றத்துக்கு புதிய கட்டடம்

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய கட்டடத்துக்கான கோரிக்கையும் வைக்கப்பட்டது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தருவதற்கு எஸ்.ஆர்.எம் குழுமம் முன்வந்தது.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தினுள் சென்னை பத்திரிகையாளர் மன்ற அலுவலகக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
பல்வேறு இடையூறுகளைக் கடந்து 2009 ஏப்ரல் 14-ஆம் தேதி மூத்த பத்திரிகையாளர் என். ராம் தலைமையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கரங்களால் தற்போதைய சென்னை பத்திரிகையாளர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது.

தடைகளைத் தாண்டி சிறப்புக் குழு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கான புதிய கட்டடம் திறக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மீண்டும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதனால் திரும்பவும் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் தடைப்பட்டது.

இறுதியாக கடந்த ஆண்டு இறுதியில் பல தடைகளைத் தாண்டி, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் புத்துயிர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டது. குழுவில் மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், பகவான் சிங், நக்கீரன் கோபால், டி. சுரேஷ்குமார், சாவித்திரி கண்ணன், நூருல்லா, சிகாமணி, குபேந்திரன், கவிதா முரளீதரன், முருகேசன், சண்முகப்பிரியன், லட்சுமி சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றனர்.

உறுப்பினர்கள் புதுப்பிப்பு மற்றும் சேர்க்கை

அதைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் முதல் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்களில் தற்போது உயிருடன் இருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கக் கூடிய தகுதி உடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தொடர் அழைப்புகள் விடுக்கப்பட்டு புதுப்பித்தல் பணி தொடங்கியது.

இப்பணிகளில் தீவிரமாக மூத்த பத்திரிகையாளர்கள் எம். ராம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், நக்கீரன் கோபால், சாவித்திரி கண்ணன்,, பகவான் சிங் உள்ளிட்டோர் இறங்கினர்.

புதுப்பித்தல் பணியை அடுத்து தகுதியுடைய புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடத்தப்பட்டது. இறுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை 1502 என்ற இறுதி வடிவத்தை பெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம்

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி வீ. பாரதிதாசன் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

அவர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி தேர்தல் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலர், ஒரு இணைச் செயலர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளும், 5 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை பல பத்திரிகையாளர்களும் ஆர்வத்தோடு அளித்து தேர்தல் களத்தை சந்திக்கிறார்கள்.

இந்த பத்திரிகையாளர்களில் 11 பேர் தான் நிர்வாகப் பொறுப்புக்கு வரவிருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனாலும் புதிதாக பொறுப்புக்கு வரக் கூடியவர்கள் கடந்த காலங்களில் இருந்த நிர்வாகிகளைப் போன்று எளிதாக காலத்தை கழித்துவிட முடியாது என்பதோடு, கழித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை முதலில் கொள்வது அவசியமாகிறது.

ஆலோசனை யாருக்கு?

தேர்தல் நடந்து பொறுப்புக்கு வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆலோசனையா?. அதிகபிரசங்கித்தனமாகத் தோன்றவில்லை? என்று கூட சிலர் மனத்துக்குள் நினைக்கலாம். ஆனால் அந்த எண்ணம் இல்லாதவர்களிடம்தான், பத்திரிகையாளர்களுக்கான கீழ்க்கண்ட கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

பத்திரிகையாளர் நலன்

பத்திரிகையாளர்களுக்கு பொதுவாக எண்ணற்ற கோரிக்கைகள் உண்டு. அவற்றில் தற்போது சில மட்டுமே புதிய பொறுப்பாளர்களாக வருவோரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு நாளிதழ்கள், ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை (ஒருசில நாளிதழ்கள், ஊடகங்கள் இதில் விலக்காக இருக்கலாம்).

சுரண்டப்படும் உழைப்பு

சில பத்திரிகை நிறுவனங்கள் தொழிலாளர் நலத்துறையை ஏமாற்றி பத்திரிகையாளர்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் செய்து வருகின்றன.

இனி வருங்காலங்களில் இத்தகைய பாதிப்பு பத்திரிகையாளர்களுக்கு வருவதைத் தடுக்க ஒரு அடிப்படை முயற்சியை எடுக்க வேண்டும்.

நலிவடைந்த ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒருசில பத்திரிக்கை நிர்வாகங்களின் ஒப்பந்த அடிப்படையிலான பணியால் பலரும் இந்த ஓய்வூதியத் திட்ட பலனை அனுபவிக்க முடியவில்லை.
இதில் ஓய்வு காலத்தில் எந்தவித பணப் பலனும் அல்லது பி.எப். இ.பி.எப் போன்ற திட்டங்களின் மூலம் குறைந்த வாழ்வாதார நன்மைகளும் கூட கிடைக்காத பல பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் பலரும் பணி ஓய்வுக்குப் பிறகு வாரிசுகளை நம்பித்தான் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களின் வாரிசுகள் பணி ஓய்வு காலத்தில் பள்ளி, கல்லூரி பருவத்தை எட்டியவர்களாக இருந்தால், வேறு வழியின்றி சொற்பத் தொகைக்கு வேறு எங்காவது உடல்நிலை இயலாத நிலையிலும் பணிபுரிய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டவர்களும் உண்டு.

ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் தேவை

இத்தகைய சூழலை கருத்தில்கொண்டு நலிவுற்ற பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் அரசு விதித்திருக்கும் தற்போதைய கடுமையான விதிகளை தளர்த்துவதற்கு உரிய முயற்சியை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் வாரிசுகள் அற்ற பத்திரிகையாளர்கள், உடல்நலம் நலிவடைந்தவர்கள், பிறர் ஆதரவுடன் பிற்கால வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு உதவி புரிய முடியும்.

புத்தாக்க பயிற்சி

அச்சு ஊடகங்களுக்கான எதிர்காலம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது. அதே நேரத்தில் காட்சி ஊடகங்கள், செய்தி இணையதளங்கள் ஆகியவை ஆண்டுக்காண்டு வளரத் தொடங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் அச்சு ஊடகங்களில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு செய்தி இணையதளங்கள், காட்சி ஊடகங்களில் பணிபுரிவதற்கான புத்தாக்க பயிற்சி அளிக்கலாம்.

கல்வியில் இடஒதுக்கீடு

இன்றைக்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. உயர்படிப்பு இடஒதுக்கீடு வரையிலான சலுகைகளும் அதில் அடங்கும். அப்படிப்பட்ட சலுகைகளை பத்திரிகையாளர்களுக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அறக்கட்டளை அவசியம்

நலிவுற்ற பத்திரிகையாளர்களின் வாரிசுகளுக்கு உதவும் வகையில், ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட வேண்டும். அந்த அறக்கட்டளை யாருடைய கைப்பாவையாகவும் இல்லாத வகையில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தன்னமற்ற பொதுத் தொண்டில் ஈடுபடக் கூடியவர்களின் மேற்பார்வையில் செயல்படும் வகையில் நிறுவப்பட வேண்டும்.

இந்த அறக்கட்டளைக்கு நிச்சயமாக தமிழகம் முழுவதும் இருந்து வரி விலக்கு தேவைப்படும் பெரிய தொழில் நிறுவனங்கள், சமூக செயல்பாட்டாளர்களிடம் இருந்து நன்கொடை பெறும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

இதன் மூலம் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு உதவ முடியும்.

குறிப்பாக, ஆண்டுதோறும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகைகள், பத்திரிகையாளர் இறப்புக்கு பிறகு வறுமையில் வாடும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது எதிர்கால வாழ்வாதார பிரச்னைகளுக்கு உதவ முடியும்.

பத்திரிகை சுதந்திரம்

பத்திரிகை சுதந்திரத்தை பொறுத்தவரை, நியாயமான முறையில் அரசு நிர்வாகத்தை விமர்சிப்பவர்கள் பாதிக்கப்படும்போது வெற்று அறிக்கை வெளியிடுவதைத் தவிர்த்து, களத்தில் இறங்கி போராடுவது அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தற்போதைய நிலையில் அவசியம்.
அதே நேரத்தில், பத்திரிகை சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி சிலர் ஆதாயம் அடைவதும், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் தலைக்குனிவு ஏற்படுத்துவோரை அடையாளம் கண்டு அவர்கள் பாதிக்கப்படும்போது துணை போகாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற அமைப்புக்கு உண்டு.

பத்திரிகையாளர் உதவித் தொகை

ஏழை பத்திரிகையாளர்கள் யார் இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை பெற்றுத் தருவது அவசியம்.
ஒரு பத்திரிகையிலோ, நாளிதழிலோ, ஊடகத்திலோ, பணிபுரியும் காலத்தில் உயிரிழக்க நேரிட்டால், தொடர்புடைய நிறுவனத்திடம் கருணைத் தொகை பெற்றுத் தருவதும். அது முடியாத நிலையில், அரசின் நிதியுதவியை பெற்றுத் தருவதையும் முயற்சிக்க வேண்டும்.

சலுகை விலையில் வீட்டு மனைகள்

பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒருசில பத்திரிகை நிர்வாகங்களோ அல்லது உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோ, இப்படி பத்திரிகையாளர்களுக்கு அரசு தரக்கூடிய சலுகைகளை பெறுவதற்கு உதவுவதில்லை.
இத்தகைய சூழலில் பத்திரிகை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் எவரேனும் இத்தகைய வீட்டுமனை சலுகைகளை பெறாதவர்களாக இருக்கும்போது, அவர்களுக்கு அரசின் சலுகை வீட்டுமனைகளை பெற்றுத் தர முன்வரவேண்டும்.
இவை அனைத்தும் பொதுவாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள்தான். இவை தொடர்பான நடவடிக்கைகளை புதிய பொறுப்பாளர்கள் இப்போது பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தால், படிப்படியாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்.

நம் கையில் வலிமையான ஆயுதம்

பதவிக்கு ஆசைப்படுவதற்கு பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள் அல்ல. எந்தத் தவறையும் சுட்டிக்காட்டும் வல்லமைப் படைத்த பேனாவை ஆயுதமாகக் கொண்டவர்கள்.

அரசியல்வாதிகளின் தலையெழுத்தையே இந்த பேனாவால் மாற்றி எழுத முடிகிறபோது, பத்திரிகையாளர் மன்றம் மூலம் குறைந்தபட்சம் இந்த சாதனைகளை செய்ய முடியாதா என்ன?

தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடி, பத்திரிகையாளர் நலன் காக்க களத்தில் இறங்கத் தயாராகும் பத்திரிகையாளர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

அவமானம் சந்திக்கும்போது கொதித்தெழ வேண்டாமா?

ஒரு நிருபரின் டைரி பகுதி 1 – விழுப்புரம் அரிசி கிடங்கு விவகாரம்

UNIFIED PENSION SCHEME – தமிழ்நாடு ஊழியர்கள் நிலை என்ன?

85 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply